அத்தியாயம் 2.11-2.20 | அத்தியாயம் 2.21-2.30 | அத்தியாயம் 2.31-2.39
2.21. பணமேதான் ஜீவநாடி
பல மாதங்களுக்கு முன்பு ஸ்ரீதரன் பவானியிடம் உங்களிடம் சில விஷயங்கள் தனியாகப் பேச வேண்டும் என்று தெரிவித்திருந்தார் அல்லவா? அதன் பிறகுதான் ராதாவுக்குக் கல்யாணம் நடந்தது. புது மாப்பிள்ளை வந்த மகிழ்ச்சியில் கொஞ்சம் திளைத்தார் ஸ்ரீதரன் . இரண்டு மாதங்கள் ஜெயஸ்ரீயுடன் வெளியூர்களுக்குச் சென்றிருந்தார் அவர்.
திரும்பி வந்ததும் ஓய்ச்சல் ஒழிவில்லாமல் வேலைகளில் ஈடுபட்டார். அப்பொழு-தெல்லாம் ஒன்றிரண்டு தடவைகள் தான் பவானியை அவர் பார்க்க நேர்ந்தது. அப்பொழுதெல்லாம் அவருக்கு அவளிடம் நிதானமாகப் பேசச் சந்தர்ப்பம் வாய்க்கவில்லை.
அன்று என்னவோ அவருக்கு ஒழிவாக இருந்தது. மாடியில் ராதாவும் மூர்த்தியும் ‘செஸ்’ விளையாடிக் கொண்டிருந்தார்கள். ஜெயஸ்ரீ தோட்டக்காரன் ராமய்யாவுடன் செடிகளைப் பார்த்துக் கொண்டிருந்தாள். சுவாமிநாதனுக்கு உடம்பு முன்னைப் போல் இல்லை. வேலைகள் முடிந்து விட்டால் படுத்துத் தூங்கப் போய் விடுவார் அவர்.
ஸ்ரீதரன் தெரு வராந்தாவில் சோபாவில் உட்கார்ந்து யோசனையில் மூழ்கியிருந்தார். கல்யாணத்துக்கு முன்பே ராதா அவரிடம் நெருங்கிப் பழகுவதில்லை. இப்போது அவள் தன் அண்ணாவுடன் அதிகமாகப் பேசி எத்தனையோ மாதங்கள் ஆகிவிட்டன.
ஜெயஸ்ரீ வளர வளர தகப்பனாரிடம் பிரத்தியேக மரியாதை காண்பித்தாள். ஏதாவது கேட்டால் பாத்திரம் பதில் கூறுவது. இல்லாவிட்டால் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருந்தாள்.
டாக்டர் காமாட்சியைப் பார்த்து சிறிது நேரம் பேசிவரலாம் என்று நினைத்தார். அவர் அன்று கிராம் சேவிகா சங்கத்தில் பேசப்போவதாகக் கூறியது நினைவுக்கு வந்தது. எங்கே போகலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தபோது பவானியின் வீட்டு கோபாலன் தன் குழந்தையை எடுத்துக் கொண்டு ராமய்யாவைப் பார்க்க வந்தான். டாக்டரை அங்கு பார்த்து விட்டு வணக்கம் செலுத்தினான்.
”ஏனப்பா! உன் குழந்தையா? என்ன பெயர் வைத்திருக்கிறாய்?” என்று கேட்டார் ஸ்ரீதரன்.
“நடராஜன் என்று பெயர். பவானி அம்மாதான் வெச்சாங்க. அந்த அம்மாவுக்கு அந்தப் பெயரிலே ஒரு பைத்தியம்.”
”நல்ல பெயர்தான் அப்பா” என்று கூறிவிட்டு டாக்டர் பவானியின் வீட்டுக்குக் கிளம்பினார் பல மாதங்களுக்கு முன்பு தான் சொன்னதை நினைத்துக் கொண்டு,
நாகராஜனின் வீடு நிசப்தமாக இருந்தது. அன்று தம்பதி இருவரும் ஏதோ சினிமாவுக்குப் போயிருந்தார்கள். அதற்கு முன்பாக ஏகப்பட்ட தகராறுகள் சில்லறைச் சண்டைகள்.
“மன்னியை அழைத்துக் கொண்டு சினிமாவுக்குப் போய் விட்டு வாயேன் அண்ணா ?” என்று பவானி கோமதிக்காகப் பரிந்து பேசினாள்.
”நீதான் போயேன் மன்னியை அழைத்துக் கொண்டு. நான் ’பிஸினஸ்’ விஷயமாக ஒருத்தரைப் பார்க்க வேண்டும்” என்றான் அவன்.
பவானி பக் கென்று சிரித்தாள்.
”நல்ல பிஸினஸ்! பணம் எதற்கண்ணா சம்பாதிப் பது? வாழ்க்கையை அனுபவிக்கத்-தானே?”
நாகராஜன் தன் ஈழல் நாற்காலியில் இப்படியும் அப்படியுமாக மூன்று முறைகள் சுழன்றான்.
“இப்போது நாம் என்ன பணத்தை சம்பாதித்து அனுபவிக்காமல் தான் இருக்கிறோமா! மேலே மின்சார விசிறி சுழல்கிறது. கூடத்தில் ரேடியோ பாடுகிறது. ப்ரிஜி டேடர் வாங்கிப் போட்டிருக்கிறேன். வைர நெக்லெஸ் வாங்கி இருக்கிறேன்.”
“ஆமாம் இத்தனையும் வைத்துக் கொண்டு சிறை வாசம் பண்ணச் சொல்கிறீர்-களாக்கும்! நாலு இடங்களுக்குப் போய் வந்தால் தான் மனசுக்குத் தெம்பு. எங்கே, என்னைப் பார்த்துச் சொல்லுங்கள். பக்கத்தில் இருக்கிறதே வடபழனி ஆண்டவன் கோயில், ஒரு நாளாவது எதற்காவது போனதுண்டா? நீங்கள் திருவல்லிக்கேணியில் மெரினாவுக்கு ஒருநாள் போயிருக்கிறீர்களா? ப்ரிஜிடேரும், சிரிஜிடேரும் யாருக்கு வேண்டும் இங்கே?” என்று பேசினாள் கோமதி.
நாகராஜன் சிரித்தான்.
“அடேடே! வக்கீல் வேதாந்தம் தம் ப்ராக்டினை விட்டு விட்டாராம். அவருக்குப் பதிலாக நீ போகிறாயா கோர்ட்டுக்கு? எல்லா வேலைகளுக்கும் தான் நீங்கள் போகலாமே இந்தக் காலத்தில் !” என்று கேட்டான்.
மறுபடியும் மனைவியிடம் அவன் பிடிவாதம் தோற்றது. அன்று அவர்கள் சுமதி, பாலு இருவரையும் அழைத்துக் கொண்டு சினிமாவுக்குப் போனார்கள்.
தெருவில் கார் வந்து நின்றது. ஸ்ரீதரன் இறங்கி உள்ளே வந்தார். கூடத்தில் பவானி மட்டும் உட்கார்ந்திருந்தாள். டாக்டரைப் பார்த்ததும் எழுந்து நின்று உள்ளே வரும்படி அழைத்தாள்.
ஸ்ரீதரன் உள்ளே வந்து சோபாவில் உட்கார்ந்து கொண்டார். சிறிது நேரம் வரையில் பேசாமல் இருந்து விட்டு “எங்கே ஒருத்தரையும் வீட்டில் காணோம்?” என்று கேட்டார்.
“அண்ணாவும் மன்னியும் குழந்தைகளை அழைத்துக் கொண்டு சினிமாவுக்குப் போயிருக்கிறார்கள்.”
”பாலு எப்படி இருக்கிறான்? முன்னைப் போல அவன் எங்கள் வீட்டுக்குக் கூட அடிக்கடி வருவதில்லை. பெரியவனாகி விட்டான் இல்லையா?” என்று விசாரித்தார் அவர்.
”ஆமாம், அவன் பசுமலையில் இருந்த போது என்னை என்ன பாடுபடுத்தி வைத்தான்! சதா சண்டை தான். இப்பத்தான் ஒரு வருஷமாக ரொம்பவும் சாதுவாகப் போய் விட்டான். படிப்பில் அக்கறை ஏற்பட்டிருக்கிறது.”
“வயசாகிக் கொண்டு வருகிறது பாருங்கள். இனிமேல் புத்திசாலியாக மாறவேண்டியது தானே” பவானிக்கு டாக்டர் ஸ்ரீதரன் தன் மகனைப் புத்திசாலி என்று கூறியதில் ஆனந்தம் ஏற்பட்டது. பெயரும் புகழும் பெற்றுள்ள அவர் ஒரு குணவான். நலல வருமானமும், இஷ்டப்படி வாழ சுதந்திரமும் இருக்கும் போதும் டாக்டர் ஸ்ரீதரன் கட்டுப்பாடுடனே வாழ்ந்து வந்தார். எந்தப் பெண்ணையும் தாயாகவும் சகோதரியாகவும் காணும் பக்குவமான மனநிலை அவருக்கு ஏற்பட்டிருந் தது. அப்படிப்பட்டவரின் வாயால் பாலுவைப் புத்திசாலி என்று அழைப்பது ஓர் ஆசி மாதிரி இருந்தது அவளுக்கு.
கூடத்தில் மாட்டியிருந்த கடிகாரம் ‘டிக்’ ‘டிக்’ என்று சப்தித்துக் கொண்டிருந்தது. பவானி கையில் இருந்த புத்தகத்தைப் புரட்டிக் கொண்டே இருந்தாள்.
“என்ன படித்துக் கொண்டிருந்தீர்கள்?”
”காரைக்கால் அம்மையாரின் சரிதம். பக்தியால் பரமனுடன் பேசி மாங்கனி பெற்றவளின் மனசைப் பற்றி, பண்பைப் பற்றி வியந்து கொண்டே இருந்தேன். எனக்கு இந்தப் பையன் இராமல் இருந்தால் நான் எங்காவது புண்ணிய ஸ்தலங்களுக்குப் போயிருப்பேன்…”
அவளுடைய நீல நிற விழிகள் ஹாலில் இருந்த புத்தர் சிலை மீது பதிந்து இருந்தன.
”அம்மா பவானி!” என்று அழைத்தார் டாக்டர் ஸ்ரீதரன் .
”உங்களுடைய உயர்ந்த நோக்கங்களும் உன்னத லட்சியங்களும் போற்றப்ப – வேண்டியவையே. இருந்தாலும், ஆண்டவனிடம் காரைக்கால் அம்மையாரைப் போல் பக்தி செலுத்தி அதற்கேற்ற முறையில் வாழ்க்கை முறையை வகுத்துக் கொள்வது இந்தக் காலத்தில் முடியாது. ஓர் இளம் பெண் – அழகானவள் – துணையற்றவள்-ஒவ்வொரு ஊராகச் சென்று கொண்டிருந்தால் ஆபத்துக்கள் வருவது நிச்சயம். ’துணையில்லாதவள்’ என்னும் போதே சமூகம் அவளைச் சாதாரணமாகப் பார்ப்பதில்லை. அனுதாபத்துடன் பார்க்கிறது. சுய நலத்துடன் பார்க்கிறது என்று கூடச் சொல்லலாம். ஆண்டவனிடம் செலுத்தும் பக்திக்குச் சமமாக ஒன்று இருக்கிறது. நம்மால் முடிந்தவரை பிறருக்கு உதவிகள் புரிவது. பிறர் இன்னல்களை நம்முடைய-தாகப் பாவித்து அவர்களுக்குச் சேவை புரிவது. இதிலே மனசுக்கு மகத்தான ஆறுதல் கிடைக்கும். அதற்கு உதாரணமாக நான் இருக்கிறேன். மனைவியை இழந்து பதினைந்து வருஷங்கள் ஆயின. இருந்தும் எனக்கு மனசிலே ஆறுதல் இருக்கிறது. வாழ்க்கையில் இன்பம் இருக்கிறது. காரணம் பிறருக்குச் சேவை செய்வது என் வாழ்க்கையின் லட்சியமாக இருப்பதால் தான்…”
பவானி பணிவுடன் எழுந்து நின்றாள். “டாக்டர்! அன்றொரு நான் என்னிடம் ஏதோ பேச ஆசைப் படுவதாகக் கூறினீர்கள் …..”
”அதைத் தான் கேட்க வந்தேன் அம்மா. நாகராஜனிடமே இதைப் பற்றிக் கேட்க இருந்தேன். அவர் ஊரிலேயே இருப்பதில்லை. ராதாவின் கல்யாணத் தன்று அவரைப் பார்த்தேன். மறுபடி பார்க்க முடியவில்லை. சுமதிக்கு ஜுரம் வந்த போது நீங்கள் நர்ஸாகப் பணி புரிந்தது என் மனத்தை விட்டு நீங்கவில்லை. தமையன் குழந்தையைக் காப்பாற்றி விட்டீர்கள். ஆனால் இம் மாதிரியான சேவையைப்பெற எத்தனையோ குழந்தைகள், பெரியவர்கள், தாய்மார்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் ஏன் ’நர்ஸ்’ தொழிலுக்குப் படிக்கக் கூடாது?”
ஸ்ரீதரன் தாம் சொல்ல வந்ததைச் சொல்லி விட்டார் பவானி கொஞ்ச நேரம் மெளனத்தில் ஆழ்ந்திருந்தாள்.
தமையனின் குலவிளக்கு அணையாமல் இருக்க வேண்டும் என்று அன்று நினைத்தாள் அவள். அம்மாதிரி எத்தனை குலவிளக்குகள், தாய்மார்கள். குடும்பத் தலைவர்கள் ஆஸ்பத்திரிகளில் வியாதியுடன் போராடிக் கொண்டிருக்கிறார்கள்? ஒவ்வொருவரும் உயிர் வாழ வேண்டும் என்ற ஆசையிலே நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். அவர்களுக்குச் சேவை செய்வது எவ்வளவு மகத்தானது என்று சிந்தித்துப் பார்த்தாள் பவானி.
“டாக்டர்! அண்ணாவிடம் கேட்டுச் சொல்கிறேன் . அதற்கும் நீங்கள் தான் உதவி செய்ய வேண்டும்” என்று கேட்டுக் கொண்டாள் அவள்.
டாக்டர் ஸ்ரீதரன் காரில் வீட்டுக்குத் திரும்பும் போது மன நிறைவுடன் திரும்பினார். பவானியைப்பற்றி ஓர் உயர்ந்த எண்ணம் அவர் மனத்தில் ஏற்பட்டது.
2.22. ஆண்டவனின் குரல்
டாக்டர் ஸ்ரீதரனின் யோசனையைப் பவானி தன் தமையனிடத்திலும் மன்னி-யிடத்திலும் தெரிவித்தாள். தனக்கும் அதில் ஆவல் இருப்பதாகச் சொன்னாள். இந்த விஷயத்தைப் பற்றி விசாரிக்க நாகராஜன் ஸ்ரீதரனின் வீட்டுக்குச் சென்றான்.
”அவளுடைய பணம் ஐந்தாயிரம் என்னிடம் இருந்தது. அது இப்பொழுது பத்தாயிரமாக வளர்ந்திருக்கிறது. அதில் கிடைக்கும் வட்டியைக் கூட நான் அவளுக்காகச் செலவழிப்பதில்லை. ‘எல்லாச் செலவு களையும் நானே பார்த்துக் கொள்கிறேன். பாலுவின் படிப்பின் பொறுப்பை நான் ஏற்றுக்கொண்டிருக்கிறேன். அவள் வேலைக்குப் போய்த் தான் ஆகவேண்டும் என்பதில்லை. எவ்வளவோ வசதிகளுடன் சந்தோஷமாக இருக்கலாம்” என்றான் நாகராஜன்.
தமையனுடன் பவானியும் சென்றிருந்தாள்.
“அண்ணா ! உன்னுடன் இருப்பதில் எனக்கு எந்த விதமான குறையும் இல்லை. மற்றப் பெண்களுக்கு குடும்பம் குழந்தைகள் என்றெல்லாம் கடமைகள் இன்பங்கள் இருக்கின்றன. என்னுடைய மனசிலே சூன்யம் நிறைந்து போகாமல் இருக்கவே இப்படி என் பொழுதைக் கழிக்க விரும்புகிறேன் அண்ணா ” என்றாள் பவானி.
நாகராஜன் எந்த விஷயத்தையுமே ஆழ்ந்து நோக்குபவன் அல்ல. ஆகவே தங்கையின் அபிப்பிராயத்தை ஆமோதித்தான்.
அடுத்த சில நாட்களில் பவானி நர்ஸ்கள் கல்லூரியில் சேர்ந்தாள். முதல் நாள் அவள் கல்லூரியிலிருந்து திரும்பியதும் சுமதி, அத்தையின் வரவை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் என்னென்ன புத்தகங்கள் படிக்கிறாள், நோட்டுப் புத்தகங்கள் எத்தனை வாங்கி இருக்கிறாள் என்று அறியும் ஆவலுடன் கூடத்தில் உட்கார்ந்து இருந்தாள் அந்தப் பெண்.
அவள் எதிர்பார்த்தபடி பவானி ஒரு சுமைப் புஸ்தகங்களைத் தூக்கிக்கொண்டு வரவில்லை. “அத்தை பெரிய வகுப்பிலே படித்தால் புத்தகச் சுமை குறைந்து போகுமா?” என்று விசாரித்தாள்.
”ஏனம்மா அப்படி கேட்கிறாய்? தினம் இரண்டு மூன்று புத்தகங்கள் கொண்டு போனால் போதும். அவசியமானவற்றை நோட்டுப் புத்தகம் ஒன்றில் குறித்துக் கொண்டு வருவேன்” என்றாள் பவானி சிரித்துக் கொண்டு.
”எனக்கு இருக்கும் புத்தகங்களைச் சுமந்து கொண்டு போயே என் முதுகு வளைந்து விட்டது அத்தை” என்று கூறி முதுகை வளைத்து அவள் எதிரில் நடந்து காண்பித் தாள் சுமதி.
கூடத்தில் இருந்தவர்கள் எல்லோரும் சிரித்தார்கள். கோமதி உள்ளேயிருந்து பவானிக்குச் சிற்றுண்டியும் காப்பியும் கொண்டு வந்து கொடுத்தாள். பவானி அந்த வீட்டுக்கு வந்த பிறகு கோமதியின் குணத்தில் பல மாறுதல்கள் ஏற்பட்டு விட்டன. படிப்படியாக அவளிடமிருந்த சோம்பல் நீங்கிவிட்டது. ‘தான் ஒரு நோயாளி’ என்று சதா டாக்டரைக் கூப்பிட்டுக் கொண்டிருந்தவள், இப்போது தெம்புடன் இருந்தாள். வீட்டில் ஓடி ஆடி வேலைகளை செய்வதால் உடலுக்குத் தெம்பும் உள்ளத்துக்கு மகிழ்ச்சியும் ஏற்படுவதை உணர்ந்தாள். பவானிக்கு மன்னியின் திறமையைப் பார்க்கும் போது சந்தோஷமாகவும் திருப்தியாகவும் இருந்தது.
சிற்றுண்டி சாப்பிட்டு முடித்த பிறகு உடை மாற்றிக் கொண்டு கொல்லையில் மலர்ந்திருந்த மலர்களை மாலையாகத் தொடுத்து படங்களுக்குப் போட்டாள் பவானி. அவள் உள்ளத்திலே உவகையும், களிப்பும் நிரம்பி இருந்தன.
கண்ணை மூடிக்கொண்டு தன் இஷ்ட தெய்வமாகிய நடராஜப் பெருமானின் படத்தின் முன்பு கரங்குவித்து நின்றிருந்தாள் பவானி. அமைதி நிலவும் அப்பெரு மானின் முகத்தில் இருக்கும் புன்னகையைக் கவனித்தாள் ஒரு விநாடி. கண்களைத் திறந்து, டாக்டர் ஸ்ரீதரனுக்கு அந்த அமைதியும், கருணையும் இருப்பதாக அவள் மனத்துக்குத் தோன்றியது.
“அம்மா பவானி!” என்று அவர் அழைத்த குரலில் ஆண்டவனின் குரலும் கேட்டது அன்று. தான் நம்பி இருக்கும் நடராஜன் தான் தன்னை இந்தத் தொழில் செய்யும்படிப் பணித்திருக்கிறான் என்று பவானிச்குத் தோன்றியது.
டாக்டர் ஸ்ரீதரனைப்பற்றி அவள் மனத்திலே ஓர் உயர் தரமான எண்ணம் எழுந்தது. அவ்வெண்ணம் தன்னை ஈன்ற அன்னையிடத்திலும் தந்தையிடத்திலும் காட்ட வேண்டிய பக்தியை விட ஒரு படி உயர்வாகத் தாற்றமளித்தது. அந்தப் புனிதமான எண்ணம் எழுப்பும் இன்பத்தில் லயித்திருந்தாள் பவானி.
2.23. பெண்மையின் பலஹீனம்
ஸ்ரீதரனின் மனசில் கெட்டவை நிற்பதில்லை. நல்லவைகள் நிலைத்து நின்று. உருவாகிப் பயன் பெற்று நிலவும். மூர்த்தியைப்பற்றி அவர் மனசிலே ஒன்றுமே இல்லை. தங்கையின் கணவன் நல்லவனா அல்லது கெட்டவனா என்பது ஒன்றும் அவருக்கு விளங்கவில்லை. அதைப்பற்றி அவர் அக்கறை காட்டும்படி ராதாவும் நடந்து கொள்ள வில்லை. ‘கணவனும் மனைவியும் ஒற்றுமையாக இருக்கிறார்கள். அவ்வளவு தான் நமக்கு வேண்டியது என்று இருந்து விட்டார். மூர்த்திக்கு என்ன சம்பளம் வருகிறது? அதை அவன் எப்படி செலவழிக் கிறான்? என்றெல்லாம் அவர் ஏன் ஆராயப் போகிறார்? தங்கைக்கு வேண்டிய புடவைகள், இதர சாமான்களை ஜெயஸ்ரீக்கு வாங்கும்போது வாங்கித் தந்து விடுவார். சில சமயங்களில் அவர்களே வாங்கி வந்து ‘பில்’லை மட்டும் அவர் மேஜைக்கு அனுப்பி விடுவதும் உண்டு.
டாக்டர் காமாட்சியிடமும் அவர் இதைப்பற்றிப் பெருமையாகச் சொல்லிக் கொண்டார். “என் எதிரில் ராதா அவள் கணவனுடன் பேசியே பார்த்ததில்லை. இருவரும் வெட்கப்பட்டுக் கொண்டு என்னைக்கண்டதும் விலகிப் போய் விடுகிறார்கள்” என்றார்.
“அப்படியா? கல்யாணத்துக்கு முன்பு ரொம்பவும் நெருங்கிப் பழகியவர்கள் ஆயிற்றே! இப்படி இருப்பது அதிசயம் தான்” என்றாள் காமாட்சி.
இந்த விஷயத்தை அவள் தன் தகப்பனாரிடம் கூறிய போது அவர் ஆச்சரியம் அடையவில்லை. என்னவோ, அந்தப் பிள்ளையிடம் எனக்கு நம்பிக்கை இல்லை” என்று அசுவாரசியமாகப் பதிலளித்தார்.
சுவாமிநாதனுக்கு மட்டும் மனசிலே ஏதோ ஒரு சந்தேகம் சூழ்ந்து கொண்டிருந்தது. பல இரவுகள் மாடியில் ராதா மெதுவாக விசும்பும் குரலை அவர் கேட்டிருக்கிறார். அவளுடைய கண்கள் சிவந்து முகம் வீங்கி இருந்ததையும் அவர் பார்த்தார்.
“ஏனம்மா! உடம்பு சரியில்லையா?” என்று கூட விசாரித்தார்.
”ஆமாம். நேற்றிலிருந்து ஜலதோஷம்” என்றாள் ராதா.
”ஏதாவது மருந்து சாப்பிடேன்!”
“சாப்பிட்டேன். அண்ணாவின் அலமாரியைத் திறந்து எடுத்துக் காலையிலேயே சாப்பிட்டேனே.”
அவள் எதுவும் சாப்பிடவில்லை என்பதும் அவருக்குத் தெரியும். தினம் மூன்று வேளைகள் தலைவாரிப் பின்னிக் கொள்கிறவள் சேர்ந்தாற் போல் இரண்டு நாட்கள் தலைவாரிக் கொள்ளவே இல்லை.
“இன்று வெள்ளிக்கிழமை, தலையைப் பின்னி பூ வைத்துக் கொள் அம்மா” என்று சுவாமிநாதன் புஷ்பச் சரத்தை எடுத்து வந்து அவளிடம் கொடுத்தார். அதை மேஜை மீது வைத்து விட்டுக் கவனியாதவள் போல் இருந்தாள் ராதா.
தன்னை அலங்கரித்துக் கொள்வதிலும், விதம் வித மாக உடுத்துவதிலும் விருப்பமுடைய ராதா, இப்படி எதிலும் பற்றில்லாமல் இருப்பது வேதனையாக இருந்தது.
குறுகிய காலத்தில் ராதாவின் போக்கில் பெருத்த மாறுதல் ஏற்பட்டிருந்தது. வெளியில் எதையும் சொல்லாமல் உள்ளுக்குள்ளேயே குமைந்து கொண்டிருந்தாள் அவள். ஒரு தினம் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் மூர்த்தியிடம் அவள், ”நீங்கள் இப்படியே இருந்தால் எப்படி?” என்று கேட்டேவிட்டாள்.
“நான் எப்படி இருக்கிறேன்?” என்று அலட்சிய மாகக் கேட்டான் மூர்த்தி.
”நமக்குக் கல்யாணம் ஆகி இரண்டு வருஷங்கள் ஆகின்றன. ஒரு நாளாவது உங்கள் சம்பாத்தியத்திலிருந்து எனக்கு ஒரு புடவை வாங்கித் தந்திருக்கிறீர்களா ?”
“பூ! இதற்கென்ன பிரமாதம்! வாங்கினால் போச்சு! நீ என்னைக் கேட்கவில்லை. நானும் வாங்கித் தரவில்லை.
’அப்படியானால், எங்கெங்கோ இருப்பவர்களுக் கெல்லாம் பணம் அனுப்புகிறாரே, அவர்கள் கேட்டு வாங்கிக் கொள்வார்கள் போல் இருக்கிறது’ என்று ராதா நினைத்துக் கொண்டாள். பேசாமல் நிற்கும் மனைவியைப் பார்த்தான் மூர்த்தி. பரிவோடு அவள் அருகில் வந்து நின்று, ‘ராதா! எனக்கு ஆபீசில் ஒரு தொல்லை ஏற்பட்டிருக்கிறது. வெளியூர் போய் வரும் போது பீஸ் கணக்குகளில் பிசகு நேர்ந்து விட்டது. அதைச் சரிக்கட்டுவதற்குப் பணம் வேண்டும்…” என்று கேட்டான்.
”அண்ணாவைக் கேட்கச் சொல்கிறீர்களா? அது மட்டும் என்னால் முடியாது. தேவையானால் என் நகைகளில் ஏதாவது கொடுக்கிறேன்…”
“உன்னுடைய நகையா?” மூர்த்தி சிறிது நேரம் யோசிப்பவன் போல் தயங்கினான். வேதனை படர்ந்திருக்கும் அவன் முகத்தைப் பார்த்த ராதா தன்னுடைய பீரோவைத் திறந்து முத்தும் செம்பும் பதித்த மாலை ஒன்றை எடுத்து வந்து அவன் கையில் கொடுத்தாள்.
”தயவு செய்து இதைச் சென்னையில் விற்காதீர்கள்! அடுத்த தடவை நீங்கள் வெளியூர் போகும்போது விற்று விடுங்கள்” என்றாள்.
மூர்த்தி மகிழ்ச்சியோடு அதைப் பெற்றுக் கொண்டான். பெண்களுக்கே உரித்தான பலஹீனம் – அதாவது கணவன் ஆபத்தில் இருக்கிறான் என்பதை அறிந்ததும் ஏற்படும் தாராளம் படித்த பெண்ணாகிய ராதாவுக்கும் உண்டாயிற்று . நாலு பேர்களுக்கு வெளியில் தெரியாமல் தன்னுடைய குற்றங்களை மறைத்து விட வேண்டும் என்கிற ஆவலால் உந்தப்பட்டு குற்றங்களை மேலும் செய்யத் தூண்டுவதும் ஒரு பலஹீனம் தான்.
கணவன் உண்மையிலேயே ஆபத்தில் சிக்கிக் கொண்டிருக்கிறானா? அந்தத் தவறு ஏதேச்சையாசு ஏற்பட்டதா? வேண்டுமென்று செய்ததா? இவ்வாறெல்லாம் பெண்கள் யோசிக்க மாட்டார்கள். உன் கணவன் ’அயோக்கியன்’ என்று யாராவது சொன்னாலும் பொறுக்க மாட்டார்கள், ஏதோ ஒரு பத்தி, உயர்ந்த பண்பு அவர்களை ஆட்கொண்டி-ருப்பதால்தான் அவர்கள் இவ்வளவு தியாகிகளாக இருக்க வேண்டும்.
ஒரு தடவை நகையைக் கொடுத்துப் பழக்கம் ஏற்படுத்திய பிறகு அதே வாடிக்கையாகப் போய்விட்டது. அவளைக் கேட்காமலேயே நகைகளை எடுத்துப் போனான் மூர்த்தி. பண்டிகை பருவங்களில் எங்கே போனாலும் அவள் முன்பே அதிகமாக நகை போட்டுக் கொள்ள மாட்டாள். ஆகவே அதைப் பற்றி யாருமே கவனிக்கவில்லை. கணவனுடைய நடத்தை தெரிந்த பிறகு. அந்த உள்ளத்தில் அபரிமிதமான கசப்பு அவளிடத்தில் வளர்ந்து வந்தது. இருவரும் பேசுவதுகூட நின்று போயிற்று.
ஒரு தினம் ராதா வெளியில் செல்லுவதற்காக ஆடை அணிகள் அணிந்து கொள்ளத் தன் பீரோவைத் திறந்தாள். நகைப் பெட்டியைத் திறந்தபோது அதனுள்ளிருந்த ஒரு ஜோடி வைர வளையல்களைக் காண வில்லை. அந்த வளையல்கள் அவளுடையவை அல்ல. கல்யாணத்தன்று ஸ்ரீதரன் அவளுக்குக் கொடுத்தார். “ராதா! இவை நம் தாயினுடையவை. அவள் முகம் உனக்குத் தெரியாது. ஆகவே அவள் ஞாபகமாக வைத்துக் கொள்” என்றார். முகூர்த்தத்தன்று மாலை அவள் ‘ரிஸப்ஷனு’க்குக் கிளம்பும்போது, அவள் கையில் வளையல் பெட்டியைக் கொடுத்துக் கொண்டே.
அந்தப் புராதன சொத்துதான் இப்போது மாயமாக மறைந்து விட்டது.
ராதாவின் உடல் வியர்த்தது. பரபரக்க பீரோ பூராவும் தேடினாள். அங்கிருந்த மேஜை பூராவும் குடைந்தாள். கணவனின் நிஜார் பைகளில் பார்த்தாள். அவனுடைய கோட்டுப் பைகளில் தேடினாள். ஆனால் அவள் தேடிய வஸ்து அகப்படாமல் வேறொரு வஸ்து அகப்பட்டது. அது ஒரு கடிதம்.
ஆங்கிலத்தில் முத்து முத்தான கையெழுத்துக்களில் ஒரு பெண் மூர்த்திக்குக் கடிதம் எழுதியிருந்தாள். அதில் மூர்த்தி நான்கைந்து மாதங்களுக்கு முன்பு வந்து போனவன் அவளை வந்து மணப்பதாகக் கூறிச் சென்றதாகவும் இதுவரையில் தகவல் தெரியாமல் போகவே, காரியாலயவிலாசத்துக்கு அவள் கடிதம் எழுதுவதாகவும் விரைவில் பம்பாய் வரும்படியும் அந்தப் பெண் எழுதி இருந்தாள். இல்லாவிடில், சீக்கிரமே தான் சென்னை வருவதாகக் குறிப்பிட்டு இருந்தாள். பெண்ணின் பெயர் தமயந்தி என்றிருந்தது.
இக்கடிதத்தை ராதா பார்ப்பதற்கு முதல் நாள் அவன் அணிந்து சென்றிருந்த கோட்டுப் பையில் ஒரு இன்ஷர் ரசீது காணப்பட்டது. தமயந்தி பெயருக்கு ஐந்நூறு ரூபாய்கள் அனுப்பியிருந்தான் மூர்த்தி. கடிதம் அதற்குப் பத்து தினங்கள் முந்திய தேதியுடன் வந்திருந்தது.
ராதாவின் கண்கள் கண்ணீரைப் பெருக்கவில்லை. காய்ப்புக் காய்த்துப் போன தசை மாதிரி அவள் நெஞ்சம் காய்த்துவிட்டது. யோசித்தபடியே வெகு நேரம் உட்கார்ந்தி-ருந்தாள் அவள். எவனை உயர்ந்தவன், அன்பு நிறைந்தவன் என்று நம்பி ஏமாந்து தன் உள்ளத்தை அர்ப்பணித்து மணந்தாளோ அவன்– அவள் கணவன் –கயவன் , ஸ்திரீலோலன், அதற்காக இழிவான செயலில் இறங்குபவன் என்பதை அவள் உணர்ந்தபோது ராதா விவரிக்க முடியாத துக்கத்தில் ஆழ்ந்து போனாள். சற்று முன் கல்லாக உட்கார்ந்திருந்தவளின் கண்களி லிருந்து அருவியைப் போல் கண்ணீர் பெருகிக்கொண்டே இருந்தது.
2.24. உண்மைச் சொரூபம்
தெரு விளக்குகள் எல்லாம் ’பளிச்’ சென்று எரிந்தன. மாடியில் இருந்த வராந்தாக்களின் விளக்குகளைப் போட்டு விட்டு ராமையா ராதாவின் அறைக்குள் எட்டிப் பார்த்தான். பித்துப் பிடித்தவள் போல உட்கார்ந்திருக்கும் அவளைப் பார்த்துவிட்டு. * அம்மா! இருட்டிலே உட்கார்ந்து இருக்கீங்களே. விளக்குப் போடலீங்களா? நான் போடட்டுமா?” என்று கேட் டான்.
”வேண்டாம் ராமையா எனக்குத் தலைவலி. வேண்டும் பொழுது நான் விளக்கைப் போட்டுக் கொள்கிறேன். நீ போ” என்றாள் ராதா. தன்னை ஒருவாறு சுதாரித்துக் கொண்டு, அவன் சென்றதும் அவசரமாக ஸ்நான அறைக்குள் சென்று முகம் கழுவித் தலை வாரிப் பின்னிக் கொண்டாள். மனசில் புதைந்து கிடந்த துக்கங்களை வெளிக்குக் காட்டிக் கொள்ளாமல் மாடியிலிருந்து கீழே இறங்கி வந்தாள். ராதாவைச் சற்று நேரம் காணவில்லை யென்றால் தேடிக் கொண்டு வரும் சுவாமிநாதன் அன்று மத்தியானத்தி-லிருந்து மாடிப் பக்கமே வரவில்லை.
நேராகச் சமையற்கட்டுக்குச் சென்று பார்த்தாள் ராதா. அங்கே சாப்பிடும் கூடத்தில் இருந்த பெஞ்சியில் அந்தக் கிழவர் படுத்திருந்தார்.
சாயங்கால வேளைகளில் திருநீறு அணிந்து கடவுளைத் துதிக்கும் அவர். அன்று படுத்துக் கிடந்தது ராதாவுக்கு ஆச்சரியமாக இருந்தது. அருகில் சென்று குனிந்து பார்த்து விட்டு, ”மாமா” என்று அழைத்தவாறு அவர் நெற்றியில் கை வைத்துப் பார்த்தாள், ஜுரம் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை . நினைவே இல்லாமல் படுத்திருந்தார் அவர். திடீர் திடீர் என்று அவர் படுத்துக் கொள்வதும், சரிவரச் சாப்பிடாமல் இருந்ததும் ராதாவுக்கு நினைவுக்கு வந்தது . அவசரமாகப் போனை எடுத்து ஸ்ரீதரனின் மருத்துவ சாலைக்குப் ’போன்’ செய்தாள். சிறிய நேரத்துக்
கெல்லாம் டாக்டர் வந்து சேர்ந்தார்.
சுவாமிநாதனைப் பரிசோதித்து விட்டு, அவருக்கு ரத்த அழுத்த வியாதி ஏற்பட்டிருக்-கிறதென்றும், நல்ல ஒய்வு கொடுக்க வேண்டும் என்றும் அபிப்பிராயப் பட்டார்.
அன்று தான் ராதாவுக்குக் குடும்பம் என்றால் என்ன என்பது புரிந்தது. அடுப்பங்கரையில் பாதிச்சமையல் அப்படியே கிடந்தது. உள்ளே சென்ற ராதா பிரமித்து நின்றாள். ஒருவழியாகச் சமையலை முடித்துப் பாலைக் காய்ச்சி வைப்பதற்குள் அவளுக்குத் திணறி விட்டது.
சூடான பாலை டம்ளரில் எடுத்து வந்து சுவாமிநாதன் அருகில் வந்தாள். அவர் அப்போது தான் கண் விழித்திருந்தார். அருகில் வந்து நிற்கும் ராதாவைப் பார்த்தார் அவர்.
“என்னம்மா இது?” என்று கேட்டுக் கொண்டே மெள்ள எழுந்தார். ராதா அவர் அருகில் உட்கார்ந்தாள்.
“ஒன்றுமில்லை. இந்தப் பாலைச் சாப்பிடுங்கள். நீங்கள் எழுந்திருந்து ஒன்றும் செய்ய வேண்டாம்.”
”நீயாகவே எல்லா வேலைகளையும் செய்தாயா? உனக்கு வழக்கமில்லையே அம்மா…”
”வழக்கப்படுத்திக் கொண்டால் வருகிறது ….”
‘ராதாவா இப்படிப் பேசுகிறாள்!’ என்று வியந்தார் அவர்.
இதற்குள் டாக்டர் ஸ்ரீதரன் அங்கு வந்தார். அடுத்த நாளிலிருந்து வேறு ஒருவர் வீட்டுக்கு வருவதாகவும், எல்லா வேலைகளையும் அவரே செய்து விடுவார் என்றும், சுவாமிநாதன் மேற்பார்வை பார்த்துக் கொண்டிருந்தால் போதும் என்றும் தெரிவித்தார்.
சுவாமிநாதன் அந்தக் குடும்பத்தினரின் அன்பைக் கண்டு வியந்தார். தம்மிடம் அவர்கள் கொண்டிருந்த அன்பின் ஆழத்தைப் பற்றி நினைத்துக் கொண்டே மெய்ம்மறந்திருந்தார் அவர்.
அன்றிரவு எட்டு மணிக்கு மூர்த்தி காரியாலயத்திலிருந்து வீடு திரும்பினான், மாடிக்குச் சென்று அவசரமாகத் தன் பெட்டியில் துணிகளை எடுத்து வைத்துக் கொண்டான். முகம் கழுவி, தலையை வாரி. மறுபடியும் உடுத்திக் கொண்டிருக்கும் போது ராதா மாடிக்கு வந்தாள். கணவன் எங்கோ போபதற்குத் தயார் செய்து கொண்டிருப்பதைப் பார்த்ததும் ”எங்கே புறப்படு கிறீர்கள்?” என்று கேட்டாள்.
“கல்கத்தாவுக்குப் போகிறேன்” என்றான் மூர்த்தி.
”என்ன விஷயம்? காலையில் என்னிடம் சொல்லவே இல்லையே…”
”உன்னிடம் சொல்லி விட்டுத்தான் நான் எதையும் செய்யவேண்டுமா?”
“அப்படிச் சொல்லவில்லையே. எனக்குத் தெரிந்தும் சில காரியங்களை நீங்கள் செய்யலாமே…”
”அப்படி உனக்குத் தெரியாமல் என்ன செய்துட்டேனாம்…?”
ராதாவுக்கு ஆத்திரம் பொங்கிக் கொண்டு வந்தது. ”’நீங்கள்..” என்று தடுமாறினாள் சிறிது நேரம்.
”சொல்லேன். நீ படித்தவள்! என் தயவு உனக்கெதற்கு…? உன்னை வைத்துக் காப்பாற்ற நிறையச் சம்பாதிக்கும் தமையன் இருக்கிறார். உன்னிடம் அன்பு செலுத்த அந்தச் சுவாமிநாதன் வேறு இருக்கிறார்”.
”யார் இருந்தால் எனக்கு என்ன பிரயோசனம்? ஒழுங்காக இருக்க வேண்டியவர் சரியாக இருப்பது தான் எனக்கு முக்கியம்……”
”சுற்றி வளைத்துப் பேசுகிறாய் ராதா? சொல்ல வந்ததைச் சொல்லி விடு…” என்று சொல்லியவாறு மூர்த்தி அங்கிருந்த சோபாவில் உட்கார்ந்தான்.
ராதாவுக்கு துணிச்சல் ஏற்பட்டது.
“என்னுடைய வைர வளையல்களைக் காணோம்! மத்தியானம் பூராவும் தேடினேன்! அந்த நகை குடும்பச் சொத்து. அண்ணா அதை எனக்குக் கொடுக்க இஷ்டமில்லை யென்றால் ஜெயஸ்ரீக்கு கொடுத்திருக்கலாம். அவர் அப்படிச் செய்யாமல், எனக்குக் கொடுத்தார். அதை இழக்க நான் சம்மதப்பட வில்லை.”
மூர்த்தி திகைத்து நின்றான். சட்டென்று தன் பெட்டியைத் திறந்து கத்தை கத்தையாகக் கட்டி வைக்கப்பட்டிருந்த ரூபாய் நோட்டுகளை எடுத்து வெளியே எறிந்தான்.
”உன் வைர வளையல்களை விற்ற பணம் தான் இது. இந்தா! இதை எடுத்துப் போய் மறுபடியும் நீ வைர வளையல் வாங்கிக் கொள்ளலாம்” என்று கூறியவாறு கையில் ஒரு சிறு பெட்டியுடன் வீட்டை விட்டுப் புறப் பட்டான் மூர்த்தி. மாடியின் பின்புறமாக இறங்கி அவன் வேகமாகச் சென்று மற்றொரு ’கேட்’ வழியாக வெளியில் செல்வதைக் கவனித்தாள் ராதா. கீழே கிடந்த ரூபாய் நோட்டுக்களை எடுத்து அவசரமாக எண்ணிப் பார்த்தாள் அவள். மூவாயிரத்து ஐந்நூறு ரூபாய்கள் இருந்தன; அந்த நகை குறைந்தது ஐயாயிரம் பெறுமே.
புதிதாக வாங்கப் போனால் மேலேயே ஆகலாம். மூர்த்தி தன் கைச் செலவுக்குச் சில நூறுகளை வைத்துக் கொண்டு தான் பாக்கியை வீசி எறிந்து விட்டுப் போயிருக்க வேண்டும் என்று ஊகித்தாள் அவள். மிச்சப் பணமாவது மிகுந்ததே என்று தான் அவள் நினைத்தாள். ’எந்தத் தமயந்தியோ, ரோகிணியோ அடைந்துவிட்டுப் போகட்டும்’ என்று தியாகம் புரிய அவள் சித்தமாக இல்லை. நோட்டுக்களை எடுத்து, பீரோவில் வைத்துப் பூட்டினாள். சுவாமிநாதன் எப்படி இருக்கிறார் என்று பார்த்து வர அவள் கீழே வந்தபோது அவர் நிம்மதியாக அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார்.
ஜெயஸ்ரீக்கும் ஸ்ரீதரனுக்கும் உணவு பரிமாறி விட்டு ராதா தான் சாப்பிடாமலேயே மாடிக்குச் சென்றாள். மாடி வராந்தாவில் ஸ்ரீதரன் அவளைப் பார்த்து “ராதா! உன் புருஷன் இன்னும் வீட்டுக்கு வரவில்லையா? சற்று முன் உன் அறையில் பேச்சுக் குரல் கேட்டதே. வந்து விட்டான் என்றல்லவா நினைத்தேன்?” என்று கேட்டார்.
”வந்திருந்தார் அண்ணா, அவசரமாக வெளி யூருக்குப் போக வேண்டும் என்று சொல்லிக் கொண்டு உடனே புறப்பட்டுப் போய்விட்டார்…”
“சாப்பிட்டானா?”
“இல்லை, பசிக்கவில்லை என்று சொன்னார்….”
ராதா வெகு சாமர்த்தியமாக நடந்தவற்றை மறைத்துக் கூறினாள். அதற்கு மேல் ஸ்ரீதரன் பேச்சை வளர்த்தவில்லை.
தன் அறைக்குள் சென்ற ராதா சிறிது நேரம் மேஜை அருகில் உட்கார்ந்து ஏதோ புத்தகங்களைப் புரட்டிக் கொண்டிருந்தாள். அவளுக்கு எதுவுமே செய்யத் தோன்ற-வில்லை. கணவன் வெளியே கோபமாகச் சென்ற போது அவள் அதைப் பொருட் படுத்தவில்லை. அவன் சென்ற பிறகுதான், தான் செய்த தவறை உணர்ந்தாள். கோபத்தினால் அவன் ஏதாவது இசைகேடாக நடந்து கொண்டானானால் என்ன பண்ணுவது என்று பயந்தாள் ராதா, அங்கிருந்து எழுந்து சென்று பீரோவைத் திறந்து பார்த்தாள், அவள் வைத்த இடத்திலேயே அந்த ரூபாய் நோட்டுக்கள் காணப்பட்டன. பெரியவர்கள் எவ்வளவோ ஆசையுடன், சிரமப்பட்டுச் செய்த வளையல்களை ஒரு நொடியில் விற்றது மல்லாடல், வேண்டுமானால் வளையல்களைத் திரும்பவும் வாங்கிக் கொள்’ என்று வீராப்புப் பேச்சு வேறே அவருக்கு வேண்டியிருக்கிறதா என்று அவள் யோசித்தாள்.
இப்படிப் பலவாறாக எண்ணமிட்டுக் கொண்டே அன்றிரவைக் கழித்தாள்.
2.25. பொம்மைக் குதிரை
மனிதனை விருத்தாப்பியம் அணுகும்போது அவன் பால்யத்தில் எப்படியெல்லாம் இருந்தான் என்பதைச் சிந்தித்துப் பார்த்துக் கொள்கிறான். சிறு பிராயத்தில் அவன் விளையாடிய விளையாட்டுக்கள். பிறகு அவன் கல்வி பயின்று, மணம் புரிந்து கொண்டு இல்லறம் நடத்தியது, மக்களைப் பெற்று வளர்த்தது. யாவும் ஒன்றன் பின் ஒன்றாக அவன் நினைவுக்கு வருகின்றன. தன் மனசில் இருப்பதை யாரிடமாவது கூறி ஆறுதல் பெற விரும்புகிறான்.
வக்கீல் வேதாந்தம் எழுபது வயசை எட்டிப் பிடித்துக் கொண்டிருந்தார். அதிகமாக வெளியே போவதில்லை. சட்டப் புஸ்தகங்களும் அந்தத் தொழிலும் அவருக்கு அலுத்துப் போய் நாலைந்து வருஷங்கள் ஆயின. எதிலும் ஒரு சலிப்பு. உலகத்தில் வாழ்ந்தும், அந்த வாழ்க்கையில் தாம் செய்ய வேண்டிய முக்கியமான கடமை ஒன்றைத் தவற விட்டு விட்ட மனப்பான்மை யாவும் அவரிடம் காணப்பட்டன.
டாக்டர் காமாட்சி உற்சாகமாகத்தான் இருந்தாள். தொழில் முறையில் அவள் பெயர் மிகவும் பிரபலமாக இருந்தது. ஏற்கெனவே தகப்பனாரின் சொத்து ஏகப் பட்டது இருந்தது. அத்துடன் அவளுக்கே வருமானம் அதிகமாக வர ஆரம்பித்தது. ஏழைகளுக்கு இலவசமாக னைத்தியம் செய்தாள்.
அந்தச் சேவையிலேயே அவள் மனம் இன்பத்தையும். அமைதியையும் அடைந்திருந்தது. ஆனால் ஒன்றே ஒன்று அவள் மனத்தை வருத்திக் கொண்டிருந்தது . தள்ளாத கிழவரான தன் தகப்பனார் இப்படி ஒண்டிக் கட்டையாக அவ்வளவு பெரிய வீட்டில் உட்கார்ந்து பொழுதைக் கழிக்கும்படி ஆகிவிட்டதே என்கிற வருத்தம் அவளுக்கு ஏற்பட்டது. அந்த வயசிலே பேரன்களும். பேத்திகளும் . அந்த வீட்டில் விளையாடி, அவர்களுடன் இன்பமாகப் பொழுகைக் கழிக்க வேண்டியவர். இப்படி நடமாடும் பொம்மையாக அவர் வாழ்க்கை அமைந்து விட்டதே என்று அவள் வருந்துவாள். தனக்கு ஒழிவு ஏற்படும் (போதெல்லாம் தகப்பனாரின் அருகிலேயே இருந்து வேடிக்கையாகப் பேசி அவருக்கு ஆனந்த மூட்டுவாள்.
ஒரு தினம் காமாட்சி வெளியிலிருந்து வரும்போது ஒரு குதிரைப் பொம்மையை வாங்கி வந்தாள். காரை விட்டு மகள் இநங்குவதை வேதாந்தம் தாழ்வாரத்தில் நின்று கவனித்தார். ஒரு கையில் குதிரைப் பொம்மையை எடுத்து வந்து கூடத்தில் வைத்து, ”அப்பா! இங்கே பாருங்கள்? இது எப்படியெல்லாம் ஆடுகிறது?” என்று அவரை அழைத்துக் காண்பித்தாள்.
வேதாந்தம் அவளையும் குதிரையையும் மாறி மாறிப் பார்த்தார். அவர் மனத்தை வேதனை பிழிந்தெடுத்தது. இப்படியெல்லாம் நாலு குழந்தைகளைப் பெற்றெடுத்து விளையாட்டுச் சாமான்கள் வாங்கிக் கொடுத்து மகிழ வேண்டிய பெண் அல்லவா இவள்? பாவி! அவள் வாழ்க்கையை நான் எப்படிப் பாழாக்கி விட்டேன்!’ என்று இடிந்து போய் கூடத்தில் இருந்த நாற்காலியில் உட்கார்ந்து கொண்டார் அவர்.
”ஏனப்பா பேச மாட்டேன் என்கிறீர்கள்?” என்று ஒரு குழந்தையைப் போலக் கேட்டாள் காமாட்சி குதிரையை இப்படியும் அப்படியும் ஆட்டிக்கொண்டே.
”யாருக்காக அம்மா இதை வாங்கி இருக்கிறாய்?”
”நமக்குத் தான் இருக்கட்டுமே! நாலு நாளைக்கு வைத்துக்கொண்டிருப்பது. அப்புறம் எங்கள் ஆஸ்பத்திரியில் குழந்தைகள் விடுதிக்குக் கொடுத்து விடுகிறேன்…”
தகப்பனாரை இப்படி யெல்லாம் மகிழ்விக்க வேண்டும் என்று மகள் ஆசைப்பட்டாள். பெண்ணின் மனசிலே இப்படியெல்லாம் ஆசைகள் எழுகின்றனவே அந்த ஆசைகளை அவள் எப்படி நிறைவேற்றிக்கொள்ள முடியும்?’ என்று தகப்பனார் மனத்துக்குள் குமைந்தார்.
அந்தக் குதிரை கூடத்திலேயே ஐந்தாறு நாள் கிடந்தது. ஒரு தினம் காமாட்சி அதை எடுத்துத் தன் கார் டிரைவரின் குழந்தையிடம் கொடுத்து விட்டாள்.
“என்னம்மா இது? பொம்மையை வாங்கி வந்தாய்? ஏன் திரும்பக் கொடுத்து விட்டாய்” என்று கேட்டார் வேதாந்தம்.
”எந்தெந்தப் பொருள் எங்கே இருக்க வேண்டுமோ அங்கே இருந்தால் தான் அதன் தரம் உயரும் அப்பா. நான் என்ன விளையாட்டுக் குழந்தையா?”
“எனக்கென்ன குழந்தைகள் இருந்து பாழாய்ப் போகிறது!’ என்கிற வருத்தம் அவள் குரலில் தொனித்த மாதிரி இருந்தது அவருக்கு.
“மகா பாவி நான்!” என்று தமக்குள்ளேயே மறுகினார் அந்தக் கிழவர்.
தகப்பனாரின் மனத்தில் தன்னைப் பற்றி ஏதோ போராட்டம் நடக்கிறது என்பதைக் காமாட்சி அறியவே இல்லை. எப்பொழுதும் போலவே அவள் தன் அலுவல் களில் ஈடுபட்டிருந்தாள்.
ஒரு தினம் பிற்பகல் சுமார் மூன்று மணிக்கு மேல் டாக்டர் ஸ்ரீதரன் அவர்கள் வீட்டுக்கு வந்தார். அவருடன் ஜெயஸ்ரீயும் வந்திருந்தாள். கூடத்தில் உட்கார்ந்திருந்த வேதாந்தம் சிறிது நேரம் ஜெயஸ்ரீயை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார்.
”உங்கள் பெண்ணா?” என்று கேட்டார் அவர் டாக்டரைப் பார்த்து.
“ஆமாம். ஜெயஸ்ரீ தான். உங்களுக்கு அடையாளம் தெரியவில்லையா! நன்றாக வளர்ந்திருக்கிறாள்” என்று சொல்லிக் கொண்டே ”ஏனம்மா! இந்தத் தாத்தாவை உனக்கு தெரியுமா!” என்று கேட்டார்.
”தெரியாமல் என்ன அப்பா? வக்கீல் தாத்தா தானே? நாலைந்து வருஷத்துக்கு முன்னே எனக்கு இவர் ’லேடி’ பொம்மை வாங்கித் தரவில்லையா? அதை இன்னமும் வைத்திருக்கிறேனே!” என்றாள் ஜெயஸ்ரீ. காமாட்சி இவர்களின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தவள் எழுந்திருந்து உள்ளே போனாள். அழகிய குழந்தைப் பொம்மை ஒன்றை எடுத்து வந்தாள்.
“இந்தா அம்மா! இதையும் வைத்துக்கொள்” என்று கூறி ஜெயஸ்ரீயிடம் கொடுத்தாள் அதை.
ஜெயஸ்ரீக்குத் தயக்கமாக இருந்தது. ’பொம்மை வைத்துக் கொண்டு விளையாடும் வயசெல்லாம் தாண்டி விட்டதே இது நமக்கெதற்கு’ என்று அவள் யோசித்துக் கொண்டு சற்றுத் தயக்கத்துடன் கையை நீட்டினாள் பொம்மையை வாங்க.
வேதாந்தம் இதை பார்த்துக் கொண்டே உட்கார்ந் திருந்தார். பிறகு டாக்டரின் பக்கம் திரும்பி, ”டாக்டர்! காமாட்சிக்கு ஆறு மாசங்களாக ஒரு பைத்தியம். விளையாட்டுப் பொம்மைகள், சிறு கார்கள். குழந்தை சைக்கிள் . என்று இப்படி வாங்கி வருகிறாள். இரண்டு மூன்று நாட்கள் வீட்டில் வைத்துக் கொண்டிருந்து விட்டு பிறகு தனக்குத் தோன்றியவர்களுக்கு அவற்றைக் கொடுத்து விடுகிறாள். அவளுடைய இந்தப் போக்கு எனக்குப் புரியவே இல்லை ….”
காமாட்சி தகப்பனார் கூறியதைக் கேட்டபடி முறுவலித்துக் கொண்டே நின்றாள்.
டாக்டர் ஸ்ரீதரன் இதற்குப் பதில் அளித்தார் :
”மனிதனுடைய மனம், சிந்தனையெல்லாம் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. அவ்வப்போது மாறிக் கொண்டே இருக்கும். எனக்கு தெரிந்த நண்பர் ஒருவர் இருந்தார். பல ரகச் சீட்டுக் கட்டுகளை வாங்கி மேஜை மீது வைத்திருப்பார். அப்படி அவருக்குச் சீட்டாட்டம் நன்றாகத் தெரியும் என்றோ அதில் விருப்பம் கொண்டவர் என்றோ கூற முடியாது. யாராவது குழந்தைசள் வந்து கேட்டாலும் கொடுத்து விடுவார். எதற்கு வாங்குகிறார். எதற்காகக் கொடுக்கிறார் என்பது பலருக்குப் புரியாது. இப்படி ஒரு போக்கு” என்றார்.
வேதாந்தம் தலையை ஆட்டிக்கொண்டு உட்கார்ந் திருந்தார்.
2.26. அவசர முடிவு
சுவாமிநாதனின் உடல் நிலையில் மாறுதல் எதுவும் அதிகமாக ஏற்பட வில்லை. நாடி நடந்தால் ஆயாசமும் கிறுகிறுப்பும் அவருக்கு ஏற்பட்டது. வீட்டில் சமையலைக் கவனித்துக் கொள்ள வேறொருவர் வந்திருந்தார்.
மனைவியிடம் கோபித்துக் கொண்டு போன மூர்த்தியிடமிருந்து மூன்று நான்கு மாதங்கள் வரையில் தகவலே தெரியாமல் இருந்தது. முதலில் சில நாட்கள் வரையில் ராதா அதிகம் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. “அவர் தான் முதலில் கடிதம் எழுதட்டுமே. தவறு அவர் பேரில்தானே இருக்கிறது?’ என்று வீராப்புடன் மௌனம் சாதித்து வந்தாள். பால்யத்திலிருந்து கூடப் பிறந்த தமையனிடம் கூட மனம் விட்டுப் பழகாமல் போகவே தன் மனசில் இருக்கும் குறைகளை யாரிடம் வெளி யிடுவது என்பது புரியாமல் அவள் திகைத்து. தன் துயரத்தைத் தானே விழுங்கிக் கொள்ள நேர்ந்தது.
அவள் வேளா வேளைக்குச் சாப்பிடாமல் எதிலும் பற்றில்லாமல் இருப்பதை சுவாமிநாதன் தான் கவனித்தார். வாழைக் குருத்துப் போல் மழமழவென்று வாளிப் பாக வளர்ந்திருந்த அந்தப் பெண் நிறம் மாறி இளைத்துப் போய் இருப்பது அவர் மனத்தைப் பிழிந் தெடுத்தது. ராதா குழந்தையாக வளர்ந்து பெரியவள் ஆனது. வீட்டில் சர்வ சுதந்திரத்துடன் அவள் இருந்தது ஸ்ரீதரன் தன் சகோதரியிடம் வைத்திருக்கும் அலாதி அன்பு. இவை யாவும் அவர் சிந்தனையைத் தூண்டி விட்டன.
கூடத்தில் ஒரு பெஞ்சியில் படுத்துக்கொண்டே சுவாமி நாதன் சிந்தனையில் மூழ்கி இருந்தார். மாடியில் ராதாவும் யோசனையில் மூழ்கி, தன்னைச் சுற்றி நடப்பவை எல்லாவற்றையுமே மறந்திருந்தாள்.
கல்யாணம் ஆவதற்கு முன்பு அந்த வீட்டில் அவளுக்கு இருந்த சுதந்திரம், உரிமை யாவும் இப்பொழுது பறிபோய் விட்ட மாதிரி ஒருவித உணர்ச்சி அவளைப் பிடித்து வாட்டியது. அந்த வீட்டிலே வெட்டியாக உட்கார்ந்து தண்டச் சாப்பாடு சாப்பிடு-வதாகவே ராதா நினனத்தாள். மற்றப் பெண்களைப் போல அவள் மனதிலும் பல ஆசைகள் தளிர் விட்டன. கணவன் சம்பாதித்து வருவதை வைத்துக் கொண்டு அழகாக செட்டாக, இன்பமாகக் குடித்தனம் நடத்த வேண்டும். வேளா வேளைக்குச் சமைத்துக் கணவனுக்குப் போட்டு அவனைக் காரியாலயம் அனுப்ப வாசலில் வந்து வழி அனுப்பி, மாலையில் அவன் வீடு திரும்புவதை வழிமேல் விழி வைத்துக் காத்திருக்க வேண்டும் என்று விரும்பினாள் ராதா.
கணவனுடன் கடற்கரை செல்ல வேண்டும்; நாடகம் பார்க்க வேண்டும்; கோவிலுக்குப் போக வேண்டும்; எல்லாவற்றிற்கும் மேலாக ‘காதல் இருவர் கருத்தொருமித்து’ இல்லறம் நடத்த வேண்டும் என்கிற ஆவள் அவல் மனதை சூழ்ந்து கொண்டு வாட்டியது.
தனக்கும் மூர்த்திக்கும் இடையில் பல மைல்கள் தூரம் இருப்பதையும் மறந்து ராதா சிந்தனையின் வசப்பட்டவளாகச் சட்டென்று பீரோவைத் திறந்து தன் துணிமணிகளை எடுத்துப் பெட்டியில் வைத்தாள். இனிமேல் அந்த வீட்டில் இருக்க விருப்பமில்லாதவள் போல் அவளுடைய முக்கியமான வஸ்துக்கள் யாவையும் பெட்டியில் வைத்துப் பூட்டினாள். அந்த வினாடி அவள் மனத்தில் அந்த வீட்டுக்கும். அவளுக்கும் சம்பந்த மில்லாத ஓர் உணர்ச்சி தோன்றியது. உடனே எப்படி யாவது மூர்த்தியின் இருப்பிடத்துக்குச் சென்று விட வேண்டும் என்கிற ஆசை அவள் மனதில் எழுந்தது.
கடைசியாகப் பணப் பையில் ரூபாயை எடுத்து அவள் வைத்துக் கொண்டிருக்கும் போது அறையின் வாசற்படியில் சுவாமிநாதன் தள்ளாடிக் கொண்டே வந்து நின்றார்.
“என்னம்மா ! எங்கே கிளம்புகிறாய். பெட்டி எல்லாம் எடுத்துத் தயாராக வைத்திருக்கிறாயே? உன் புருஷனிடமிருந்து ஏதாவது கடிதம் வந்ததா?” என்று விசாரித்தார்.
ராதா சிறிது நேரம் சிலை மாதிரி நின்றாள். கண்களில் கண்ணீர் தேங்கி நின்றது. நெஞ்சிலே துயரச் சுமை பாரமாக அழுத்தியது. விவரிக்க முடியாத ஒரு கலக்கம் அவள் உள்ளத்தைச் சூழ்ந்து கொண்டிருந்தது.
சுவாமிநாதன் தள்ளாடிக் கொண்டே உள்ளே வந்தார்.
“ராதா! உன்னைப் பார்த்தால் என் வயிற்றைச் சங்கடம் செய்கிறது. எவ்வளவோ விஷயங்களை நீ என்னிடமிருந்து மறைத்து வைத்திருக்கிறாய். துயரங்களை மனசில் வைத்துப் பூட்டி வைத்தால் மட்டும் அவை வெளியே தெரியாமல் போய் விடுமா? உன் மனம் துயரத்தில் ஆழ்ந்திருக்கிறது என்பதை உன் முகமே காட்டி விடுகிறதே! வயசிலும் அனுபவத்திலும் பெரியவனாகிய என்னை நீ ஏமாற்றிக் கொண்டே இருக்கிறாய்….”
மேல் மூச்சு வாங்க சுவாமிநாதன் பேசி முடிப்பதற்குள் ராதா தேம்பித் தேம்பி அழுதாள். பிறகு ஒருவாறு சமாளித்துக் கொண்டு, ”அவரிடமிருந்து கடிதமே வரவில்லை. அவர் எங்கே இருக்கிறார் என்பதும் தெரியவில்லை ” என்றாள்.
கணவனின் நன்மையில் அவன் செய்யும் ஒவ்வொரு தொழிலிலும் காண்பிக்க வேண்டிய அக்கறையில் ராதா தவறி விட்டாள் என்பது சுவாமிநாதனுக்கு விளங்கியது. ‘இந்தப் பெண் எதற்காக அவசரப்பட்டு விவாகம் செய்து கொண்டாள்?’ என்னும் அளவுக்கு அவர் மனம் வருந்தியது.தன் துயரை எல்லாம் அவள் கண்ணீராக வடிக்கும் வரையில் சுவாமிநாதன் ஒன்றும் பேசவில்லை. ராதா ஒருவழியாகக் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு சமாதானம் அடைந்தவுடன், “ஏனம்மா! மூர்த்தியின் விலாசம் தெரியாமல் நீ எங்கே கிளம்புவதாக இருந் தாய்?” என்று கேட்டார்.
ராதா தன் எதிரில் மேஜை மீது வைக்கப்பட்டிருந்த பெட்டியைப் பார்த்தாள். அவள் எங்கே போகிறாள்? அப்படித்தான் மூர்த்தியின் காரியாலயம் மூலமாக அவள் இருப்பிடத்தை அறிந்து கொண்டாலும், ”நீ ஏன் வந்தாய்? உன்னை யார் வரச் சொன்னது?” என்று அவன் கேட்டால், மறுபடியும் ராதா இந்த இடத்துக்குத் தானே வர வேண்டும்? ஒன்றையும் யோசியாமல் அவசரத்தில் செய்த முடிவைப் போல அவள் பெட்டியில் துணிமணிகளை எடுத்து வைத்துக் கொண்டது அவளுக்கே வியப்பை அளித்தது.
அவள் ஒன்றும் கூறாமல் இருக்கவே, சுவாமிநாதனுக்கு அவளுடைய மன நிலை புரிந்தது. பிறந்த வீட்டிலும் பெண்களுக்கு ஒரு குறிப்பிட்ட காலம் வரை யில் தான் சுதந்திரம் உண்டு. அங்கே எவ்வளவு இன்ப மாகவும், சுதந்திரமாகவும், அவர்களுடைய பொழுது கழிந்தாலும், அதை அவர்கள் விரும்புவதில்லை. கணவனின் ஆதரவில், அவன் அன்பில் தங்ளை அர்ப்பணிக்கவே பெண்களின் உள்ளங்கள் ஆசைப்படுகின்றன என்பதை உணர்ந்து கொண்டார்.
ராதா பெட்டியைத் திறந்து மறுபடியும் ஒவ்வொரு துணியாக எடுத்துப் பீரோவுக்குள் வைத்தாள். படிப்படியாக அவள் மனம் நிதானமடைய ஆரம்பித்தது. கீழே டாக்டர் ஸ்ரீதரன், வெளியே போயிருந்தவர் வீடு திரும்பி விட்டார் என்பதற்கு அடையாளமாக அவருடைய காரின் ஒலி கேட்டது.
2.27. முக்கியமான விஷயம்
டாக்டர் ஸ்ரீதரன் காமாட்சியின் வீட்டுக்குத் தன் மகளுடன் சென்று வந்த பிறகு, வக்கீல் வேதாந்தத்தின் மனம் அமைதியாக இல்லை. ஸ்ரீதரனின் மிடுக்கான தோற்றம், அன்பு நிறைந்த பேச்சு, திறமையாவும் அவர் மனத்தைக் கவர்ந்தன. இவ்வளவு நற்குணங்கள் பொருந்திய ஆண்பிள்ளை, மறுமணம் செய்து கொள்ளாமல் இருப்பது அவருக்கு விந்தையாக இருந்தது. தொழில் முலாயில் பல வருஷங்களாக தம்முடைய மகளும், ஸ்ரீதரனும் பாதி வருவதை அவர் அறிவார். ஆகவே அவர் மனதில் ஒரு விசித்திர எண்ணம் வேர் விட்டு ஊன்றி முளைக்கத் தோண்றியது. எப்படியாவது ஸ்ரீதரனை தனிமையில் சந்தித்து, தாது மகளை மறுமணம் செய்து கொள்ளும்படி கேட்க வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டார். தம்முடைய தீர்மானம் சரியா, தவறா. அதன்படி காமாட்சியும், ஸ்ரீதரனும் நடந்து கொள்வார்களா என்பதையெல்லாம் அவர்
யோசித்துப் பார்க்கவில்லை.
ஒரு தினம் பிற்பகல் சுமார் ஒரு மணிக்கு வேதாந்தம் ஸ்ரீதரனின் வீட்டுக்குப் போனார். பகல் சாப்பாட்டை முடித்துக்கொண்டு ஸ்ரீதரன் முன் கூடத்தில் சாய்வு நாற்காலியில் சாய்ந்து ஏதோ ஒரு வைத்தியப் புஸ்தகத்தைப் படித்துக் கொணடிருந்தார். புதிதாக வந்த சமையற்காரர் பகல் பொழுதை கழிப்பதற்காக வெளியே போய் விட்டார். சுவாமிநாதனுக்கு வீட்டில் வேலை ஒன்றும் கிடையாது. அதிகமாக நடமாட்டம் வைத்துக் கொள்ளக் கூடாது என்பது டாக்டரின் உத்தரவு. பொழுது தேய்கிறதோ அல்லது வளர்கிறதோ அவர் மட்டும் அந்த இரண்டாங்கட்டு பெஞ்சியில் படுத்துக் கிடக்க வேண்டும். எதிரே திறந்தவெளி. அங்கே வாழைப் புதர்கள் மண்டிக் கிடந்தன. சற்றுத் தள்ளி ஒரு பெரிய வேப்பமரம் குளிர்ந்த காற்றை வீசிக் கொண்டு நின்றது. தோட்டக்கார ராமையா, மண்வெட்டியால் பாத்திகள் வெட்டும் ஓசை மட்டும் கேட்டுக் கொண்டிருந்தது.
மாடியில் ராதா தன் அறைக்குள் அரைத் தூக்கத்தில் ஆழ்ந்திருந்தாள். அவள் மனத்துள் பிருமாண்ட மான கல்கத்தா நகரம் தோன்றியது. அதன் தெருக்களில் மூர்த்தி அலைவது தெரிந்தது. அவன் பக்கத்தில் ஒரு வங்காளிப் பெண் விசுக் விசுக் கென்று நடை போட்டுக் கொண்டு வந்தாள். மூக்கும் விழியுமாக கொடியைப் போலத் துவண்டு அவள் நடந்து வருவது தனி அழகாக இருந்தது. ராதாவின் உள்ளும் புறமும் அனலாகத் தகித்தது . மறுபடியும் ஒரு காட்சி! கல்கத்தாவின் இரவு ’விடுதி’ களில் மூர்த்தி மயங்கிக் கிடக்கும் காட்சி அது. ராதா தனக்குள் பேசிக் கொண்டான். பஞ்சமா பாதகங்களில் இரண்டைத் தன் கணவன் செய்து விட்டதாக அவள் மனம் புலம்ப ஆரம் பிக்கிறது. எப்படியும் அவனைக் கண்டு பிடித்து நல்வழிப் படுத்த வேண்டும் என்று மனம் துடிக்கிறது. அதற்கு வேண்டிய ஆற்றலும், துணிவும் தன்னிடம் இருக்கின்ற னவா என்று ராதா யோசிக்கிறாள். தூக்கத்தில்கூட ராதாவின் கண் இமை ஓரங்களிலிருந்து கண்ணீர் கசிகிறது.
ஸ்ரீதரன் கையிலிருந்த புஸ்தகத்தை மார்பின் மீது வைத்துக் கொண்டு அப்படியே அரைத் தூக்கத்தில் ஆழ்ந்து கிடந்தார். வேதாந்தம், காரை விட்டு இறங்கி உள்ளே சென்று டாக்டரின் எதிரில் கிடந்த நாற்காலியில் அமர்ந்தார். சட்டென்று விழித்துக் கொண்ட ஸ்ரீதரன். வேதாந்தத்தை வரவேற்று விட்டு, ”என்ன ஸார்! இப்படி நடு மத்தியான வேளையில் வந்திருக்கிறீர்கள்? வெயில் நேரத்தில் நீங்கள் வீட்டை விட்டு வெளியே வர மாட்டீர்களே?” என்று கேட்டார்.
வேதாந்தம் அசட்டுச் சிரிப்பு சிரித்தார். அவர் ஒன்றும் கூறாமல் இருக்கவே மறுபடியும் ஸ்ரீதரன் “என்ன ஸார்! பேசமாட்டேன் என்கிறீர்கள்? வந்த விஷயம் என்ன? சொல்லுங்கள்” என்று வற்புறுத்தினார்.
வேதாந்தம் தம் வழுக்கைத் தலையைத் தடவிக் கொண்டார். ”ஒன்றுமில்லை டாக்டர்… மிகவும் முக்கியமான விஷயமாக உங்களைப் பார்த்துப் பேச வேண்டும் என்று நினைத்துக் கொண்டு வந்தேன்….” என்று இழுத்தார். ஸ்ரீதரன் தம் இருக்கையில் எழுந்து உட்கார்ந்தார். ”சரி சொல்லுங்கள். இங்கே என்னையும், உங்களையும் தவிர வேறு யாரும் இல்லை” என்று கூறினார். வேதாந்தம் வீட்டை விட்டுக் கிளம்பும்போது
ஏதோ ஓர் அசட்டுத் தைரியத்துடன் கிளம்பினார். தனக்குப் பிறகு காமாட்சியின் தனி வாழ்க்கை. எப்படி யெல்லாமோ வாழ வேண்டிய பெண் மணமிழந்து தனி மரமாக நிற்கும் அவலக்கோலம் யாவும் அவர் மனத்தை நெகிழச் செய்து அவரை ஓர் அவசர முடிவுக்கு அழைத்துச் சென்றது. ஸ்ரீதரனின் வீட்டினுள் நுழைந்தவுடன் அவருக்குத் தாம் தீர்மானித்துக் கொண்டு வந்த விஷயத்திலேயே சந்தேகம் ஏற்பட்டது. ”காமாட்சிக்குக் கிட்டத்தட்ட முப்பது வயது ஆகிறதே அவள் என்ன சின்னக் குழந்தையா, அவளைக் கேட்காமல் நாம் எந்த விஷயத்திலும் இறங்க முடியுமா?” என்கிற சந்தேகம் தான் அது.
’ஸ்ரீதரன் மட்டும் என்ன? வயசில் சிறியவரா? நாற்பது வயசுக்கு மேல், அதுவும் மனைவி இறந்து பல வருஷங்கள் கழித்து அவருக்கு மறு மணத்தில் ஆவல் ஏற்படப் போகிறதா? அந்த ஆவல் பால்யத்திலேயே – எழுந்திருக்க வேண்டியதல்லவா?’
’சரி வந்தது வந்தாகி விட்டது. ஏதாவது பொய்யைச் சொல்லி விட்டுப் போய் விடுவோம். இதற்குத் தான் அதிகமாக வயசானவர்களை பாவம்! வயசாகி விட்டது . இனிமேல் அவர் சற்று முன்னே பின்னே தான் இருப்பார் என்று சொல்கிறார்கள் போல் இருக்கிறது’ என்று பலவாறு எண்ணமிட்டுக் கொண்டே வேதாந்தம் உட்கார்ந்திருந்தார். ஆனால், ஸ்ரீதரன் விழித்துக்கொண்டு, “என்ன! எங்கே வந்தீர்கள்?” என்றெல்லாம் கேட்க ஆரம்பித்தவுடன் வேதாந்தம் தாம் சொல்ல வந்ததை மறைக்க முடியாமல் சிறிது நேரம் திண்டாடிப் போனார்.
எடுத்ததற்கெல்லாம் பொய் சொல்லிப் பழக்க மடையாதவர்கள் யாவருக்குமே இந்தத் திண்டாட்டம் ஏற்படுவதுண்டு. விஷயத்தை மறைக்கப் போய் எக்கச் சக்கமாக அகப்பட்டுக் கொள்வார்கள். வேதாந்தத்துக்கு. பொய் சொல்லிப் பழக்கமே இல்லை. கட்சிக்காரர்களுக்காக நீதி ஸ்தலத்தில் வாதாடும் போது கூட கூடுமான வரையில் நியாயத்தையும் உண்மையையும் பின் பற்றியே சென்றவர் – அப்படிப்பட்டவர் அற்ப சொற்பத்துக்காக எதற்குப் பொய் சொல்லப் போகிறார்? அவர் மனசிலே ஓர் எண்ணம் எழுந்து விட்டது. அது சரியா தவறா என் றெல்லாம் அவர் சிந்தித்துப் பார்க்கவில்லை. இப்பொழுது அதை மறைத்துப் பேசுவானேன் என்ற தீர்மானத்துடன் வேதாந்தம் தம் அச்சங்களை உதறிவிட்டு விஷயத்தைக் கூறினார் ஸ்ரீதரனிடம்.
”எல்லாவற்றிற்கும் மேலாகக் குழந்தையின் அபிப்பிராயமும் உங்கள் அபிப்பிராயமும் எப்படி இருக்கிறதோ? காமாட்சி என் மகள் தான் இருந்தாலும் ஒரு பெண்ணின் மனத்தை அறிவது மிகவும் கஷ்டமான விஷயம். தகப்பனாக இருந்தாலும், உடன் பிறப்பாக இருந்தாலும் ஒரு பெண்ணின் மனசை லேசில் புரிந்து கொள்ள முடிவதில்லை. ஒரு வேளை அவள் தாய்? உயிருடன் இருந்தால் அவளைப் புரிந்து கொண்டிருக்கலாம்” என்றார்.
ஸ்ரீதரன் சிறிது நேரம் ஒன்றுமே பேசவில்லை. அவருடைய மௌனம் வேதாந்தத்துக்கு அச்சத்தைக் கொடுத்தது. ’சொல்லத் தகாததைச் சொல்லிக் கேட்கத் தகாததைக் கேட்டு விட்டோமோ என்னவோ’ என்று பயந்தார். பிறகு ஏதாவது ஒன்றைப் பேசித்தான் ஆக வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தின் பேரில், “டாக்டர்! நான் கூறியதில் தவறு இருக்கலாம். எனக்குப் பிறகு காமாட்சியின் தனிமையைப் பற்றி நினைத்துத் தான் நான் இந்த முடிவுக்கு வந்தேன். அவள் தனியாக இந்த உலகத்தில் தன் வாழ்க்கையை எப்படி நடத்துவாள் என்கிற வேதனை தாங்காமல் உங்களை வந்து இப்படிக் கேட்கிறேன். அந்த வேதனை என்னை அல்லும் பகலும் நிம்மதியை இழக்கச் செய்து அவதிக்கு ஆளாக்கி விட்டிருக்கிறது. அதிலிருந்து மீண்டு. சாகும் நாடகளிலாவது நிம்மதியுடன் போக வேண்டும் என்ற ஆவலினால் உங்களைத் தேடி வந்தேன்” என்றார் வேதாந்தம் படபடக்கும் குரலில்.
வயோதிகத்தினால் ஆட்டம் கண்டிருந்த அவர் உடல் மேலும் நடுங்கியது. நிலை கொள்ளாமல் தவித்தார்.
ஸ்ரீதரன் புன்முறுவலுடன் வேதாந்தத்தின் கரங்களைப் பற்றிக் கொண்டார். பிறகு நிதானமாக, ”பதட்டமடையாதீர்கள். நீங்கள் கூறியதில் எதுவுமே தவறில்லை. காமாட்சி தனியாக இந்த உலகத்தில் இருக்கிறாள் என்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன். படித்துப் பட்டம் பெற்று அறிவும் திறமையும் ஒருங்கே அமைந்தவள் உங்கள் மகள். அவளுடைய தொழில் ஒன்றே அவளுக்குத் துணையாக இருக்கிறது. அப்படி அவள் ஒன்றும் சிறு பிராயத்தவள் இல்லை. காமாட்சிக்கு வயது முப்பது இருக்காதா?” என்று கேட் டார்.
”ஆமாம்” என்கிற பாவனையில் தலையை அசைத்தார் வேதாந்தம்.
“தன்னுடைய மறுமணத்தைப் பற்றி அவள் ஏற்கெனவே ஒரு முடிவுக்கு வந்திருப்பாளே, இவ்வளவு நாட்கள் அதில் விருப்பம் செலுத்தாமல் இருக்கும் போதே அவளுடைய மனம் உங்களுக்கு விளங்கி இருக்க வேண்டுமே….”
வேதாந்தத்துக்கு அவர் மகளின் குணச்சிறப்புகளைப் பற்றி பிறத்தியார் கூற வேண்டி இருந்தது. வரும்போது அவருடன் கூட இருந்த அதைரியம், அவநம்பிக்கை . பலஹீனம் யாவும் பறந்து போய்விட்டன. ஒருவிதமான அசட்டுச் சிரிப்புடன் அவர் ஸ்ரீதரனிடமிருந்து விடை பெற்றுக்கொண்டு காரில் போய் உட்கார்ந்தார்.
2.28. சலனம்
யோசனை கேட்க வந்தவரின் மனசில் தெளிவை ஏற்படுத்தினார் ஸ்ரீதரன். வேதாந்தத்தின் கார் சென்றவுடன் சிறிது சிறிதாக அவர் மனம் இருள ஆரம்பித்தது. மனம் பல விதமான எண்ணங்களை அசை போட ஆரம்பித்தது.
காமாட்சியின் வருங்காலத்தைப் பற்றி வேதாந்தம் கவலைப் பட்டுக் கொண்டு வந்து போனதை நினைத்தவுடன் அவர் மனக்கண் முன் பவானி வந்து நின்றாள். சலனமற்ற அவள் முகபாவத்திலிருந்து அவரால் எதுவுமே கண்டு பிடிக்க முடியவில்லை. மலையிலிருந்து குதித்துப் பெருகும் ஆறு, சமவெளியில் வெகு நிதானமாக மென்னடை பழகிச் செல்வதைப் போல் ஒருவித நிதானம் அவளிடம் குடி கொண்டிருந்தது. அடக்கமும், பண்பும் உருவான பவானியைப் பற்றி ஒரே ஒரு சமயம் அவர் மனத்தில் சஞ்சலம் எழுந்ததுண்டு. நாகராஜன் வீட்டில் முதன் முதலாக அவளைப் பார்த்த அன்று அவர் மனத்திலே ஏதோ ஓர் ஆசை முளைத்து எழுந்தது. அன்று அவளைப் பற்றி. பூராவும் அறிந்து கொள்ளாத நிலையில் ஸ்ரீதரன் இருந்தார். பிறகு படிப்படியாகப் பவானியைப் பற்றிப் புரிந்து கொண்டார். பெண்களுக்கு இருக்கவேண்டிய குணச் சிறப்புகள் யாவும் அவளிடத்தில் இருப்பதைக் கண்டார். அன்று அவர் மனத்துள் எழுந்த ஆசைக்கு அவர் முக்கியத்துவம் கொடுக்கவில்லை. கொடுத்திருந்தால் அதன் விளைவுகள் என்னவாகியிருக்கும் என்றும் சொல்ல முடியவில்லை. ஸ்ரீதரன் உள்ளத் திண்மை வாய்ந்தவர். சட்டென்று எழுந்த ஓர் ஆசைக்குப் பிரதானம் கொடுக்காமல் அதை அடக்கிக் கொண்டு விட்டார். எல்ல வற்றிற்கும் மேலாக பாலுவைப் பார்த்ததும் பவானியிடம் அவருக்கு அலாதி அனுதாபமே ஏற்பட்டது. அந்தக் குழந்தையின் நலனுக்காக அவள் தன் சுகத்தையெல்லாம் உதறி விட்டுப் பிறருக்கு வேலை செய்வதைக் கவனித்தார். பிறருடைய சேவையில் அவள் இன்பம் காணுவது ஒன்று தான் அவருடைய மனத்தை வெகுவாகக் கவர்ந்து விட்டது.
காமாட்சியைப் பற்றி அவர் அன்றும், இன்றும் ஒரே எண்ணத்தை வளர்த்துக் கொண்டவர். ஆகவே வேதாந்தம் அப்படிக் கேட்டவுடன் அவருக்குக் கோபமோ, மனத்தாங்கலோ எழவிலலை. பாவம்! வயசான மனிதர்! அதனால் தான். அவர் இப்படிக் கேட்க நேரிட்டது என்று ஸ்ரீதரனுக்குத் தோன்றியது.
சற்று முன் இருண்டிருந்த அவர் மனத்தில் ஒளி பிறந்தது. வேதாந்தம் வந்தது. புதுச் செய்தி ஒன்றைப் பிரஸ்தாபித்தது. பவானியைப் பற்றிய எண்ணங்கள் காமாட்சியைப் பற்றிய முடிவு, எதுவுமே அவர் மனதில் நிலைக்கவில்லை. இவ்வளவு காலம் தாம் ஆற்றி வரும் பணியை. அந்த மகத்தான கடமையைத் தொடர்ந்து ஆற்றவே ஸ்ரீதரன் விரும்பினார். அந்த விருப்பம் அவர் மனத்தில் பலமாக எழுந்ததும், அவர் உள்ளம் தெளிவு பெற்றது. நிம்மதியுடன் அப்படியே உறங்கிப்போனார்.
அங்கிருந்து கிளம்பிய வேதாந்தம் நேராக வீட்டுக்குச் செல்லவில்லை. தமது நண்பர்களுடைய வீட்டுக்குப் போனார். அங்கு அவர்களுடன் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார். பேச்சு பலதரப்பட்டதாக இருந்தாலும் அவர் மனம் திரும்பத் திரும்ப அன்று பகல் ஸ்ரீதரனிடம் அவர் கேட்ட விஷயத்துக்கே தாவிக் கொண்டிருந்தது. சுமார் நான்கு மணிக்கு கடற் கரைக்குச் சென்று. அப்படியே காரில் சாய்ந்து கடற் காற்றை அனுபவித்தார். தேகத்தில் வெப்பம் ஏற்பட் டிருந்ததால் அதைத் தணிக்கக் குளிர்ந்த காற்றும், சுக சாதனங்களும் பயன் படலாம். உள்ளத்திலே வெம்மை சுழன்று மோதிக் கொண்டிருக்கும்போது அதைத் தணிக்கும் வல்லமை குளிர்காற்றுக்குக் கூட இருக்காது. “என்றுமில்லாமல் நல்ல பகல் வேளையில் வீட்டைவிட்டு கிளம்பி இப்படிச் சுற்றுகிறாரே ஐயா’ என்று கவலைப் பட்டான் டிரைவர்.
”ஏன் ஸார்! உங்களுக்கு உடம்புக்கு ஒன்றும் இல்லையே. என்னவோ போல இருக்கீங்களே” என்று விசாரித்தான்.
”அதெல்லாம் ஒன்றும் இல்லை அப்பா? நீ பயந்து விடாதே” என்றார் வேதாந்தம்.
ஏறக்குறைய இருபது வருஷங்களாக அவரிடம் வேலை செய்து வரும் அந்த ஆசாமிக்கு அவர்கள் குடும்பத்தைப் பற்றித் தெரிந்து தான் இருந்தது. ‘ஐயாவுக்குத் தம் மகளைப் பற்றிக் கவலை இருக்காதா?’ என்று நினைத்துக் கொண்டான்.
மனத்தில் ஏற்பட்டிருக்கும் அந்த உளைச்சல் முழுவதும் நீங்கப் பெறாதவராக வேதாந்தம் மாலை ஆறு மணிக்கு மேல் தம் வீட்டுக்குக் கிளம்பினார் .
2.29. குழந்தையின் குரல்
காரில் வந்து இறங்கிய வேதாந்தம் வாசல் வராந்தாவில் இருந்த மாடிப்படிகள் வழியாக ஏறி மாடியை அடைந்தார். அங்கு கிடந்த சோபா ஒன்றில் சாய்ந்து மின் விசிறியைச் சுழல விட்டுப் பெரு மூச்சு விட்டார் அவர். கடந்த சில வருஷங்களாக மனதில் சிறைப்படுத்தி வைத்திருந்த எண்ணங்களுக்கு விடுதலை அளித்த நிம்மதி அவர் நெஞ்சில் நிறைந்திருந்தாலும், கூடவே ஒரு காரணமற்ற பயம் சூழ்ந்து கொண்டிருந்தது. மாலையோ, நாளையோ காமாட்சி, டாக்டர் ஸ்ரீதரனைச் சந்தித்தால் அவர் தன்னைப் பற்றிக் காமாட்சியிடம் ஏதும் கூறிவிடுவாரோ என்று அஞ்சினார். இந்தச் செய்தியை முன்னாடியே காமாட்சியிடம் கூறி விடுவது நல்லது என்று அவருக்குத் தோன்றவே அவசரமாக மாடியிலிருந்து கீழே வருவதற்குக் கிளம்பினார்.
அப்போது. கீழேயிருந்து ஒரு குழந்தையின் அழுகுரல் கேட்டது. பிறந்து சில நாட்கள் ஆகியிருக்க வேண்டும். ’குவா குவா’ என்ற அந்த ஒலி இன்பமாக அவர் செவிகளில் வந்து விழுந்தது . ‘யாரேனும் உறவினர்கள் குழந்தையுடன் வீட்டுக்கு வந்திருக்கிறார்-களோ?’ என்று நினைத்தார்.
இதற்குள் கீழே இருந்து அவர் மகளின் குரல் தெளிவாகக் கேட்டது.
”சொக்கம்மா! குழந்தை அழுகிறது பார். கொஞ்சம் தொட்டிலை ஆட்டு. இதோ பாலைப் புட்டியில் ஊற்றிக் கொண்டு வருகிறேன்” என்றாள்.
வேதாந்தம் வியப்பும் திகைப்பும் அடைந்தவராக மாடிப்படிகளில் சற்று வேகமாகவே இறங்கிக் கீழே வந்தார். கூடத்துக்கு அடுத்தாற் போல் இருக்கும் காமாட்சியின் அறையில் ஒரு ‘ஸ்டாண்டு’ தொட்டில் இருந்தது. அதைச் சுற்றிக் கொசுவலை கட்டியிருந்தது. தொட்டிலின் அருகில் காமாட்சி ஒரு சிறு பெஞ்சியின் மீது உட்கார்ந்து குழந்தைக்கு புட்டிப்பால் கொடுத்துக் கொண்டிருந்தாள்.
வேதாந்தம் தம் மகளின் அருகே வந்தார். மிகவும் அதிசயத்துடன் ஒரு நூதனப் பொருளைப் பார்ப்பதைப் போல் தொட்டிலுக்குள் குனிந்து குழந்தையைப் பார்த்துக் கொண்டே, “ என்ன அம்மா இது?” என்று தம் மகளைப் பார்த்துக் கேட்டார்.
”குழந்தை அப்பா ……” என்றாள் காமாட்சி. “அது தெரிகிறது. இது யார் குழந்தை அம்மா?” என்று கேட்டார் ஆச்சரியத்தால் தம் கண்கள் மலர.
”நம் வீட்டுக் குழந்தை அப்பா. இனிமேல் இவளுக்கு இந்த வீட்டிலே சொந்தம் உண்டு” என்றாள் காமாட்சி.
வேதாந்தம் அருகில் கிடந்த நாற்காலியில் உட்கார்ந்து கொண்டார்.
“அம்மா, காமாட்சி. கொஞ்சம் எனக்குப் புரியும் படியாகத்தான் சொல்லேன். மூக்கும் விழியுமாக சந்திர பிம்பம் போல இருக்கும் இந்தக் குழந்தை பிறந்தவுடனேயே பெற்றவர்களை இழந்த துர்பாக்கியசாலியா? எனக்கு ஒன்றும் புரியவில்லையே!”
தொட்டிலில் இருந்த குழந்தைப் பாலை பருகிய வுடன் அப்படியே அயர்ந்து தூங்கி விட்டது. அதன் வாய் அருகே கசிந்திருந்த பாலை மெதுவாகத் துடைத்து விட்டு, மேலே கட்டி இருந்த கொசுவலையை அவிழ்த்துத் தொங்க விட்டாள் காமாட்சி. பிறகு தன் தகப்பனாரின் எதிரில் வந்து உட்கார்ந்து கொண்டாள்.
“அப்பா! இந்தக் குழந்தை பிறந்து இன்று பதினோரு நாட்கள் ஆகின்றன. இன்று பகல் பன்னிரண்டு மணி வரைக்கும் இதற்கும் இதன் தாய்க்கும் சம்பந்தம் இருந்தது. பிறகு அந்த சம்பந்தம் நீங்கி விட்டது. இனி மேல் நான்தான் இந்தக் குழந்தைக்குத் தாய்” என்றாள். இதைக் கேட்ட வேதாந்தத்தின் உள்ளம் பரபரப் படைந்தது.
“ஏனம்மா ! குழந்தையின் தாய் இறந்து விட்டாளா? தகப்பன் குழந்தையைக் கவனிக்கவில்லையா? வேறு உற்றார் உறவினர் இந்தக் குழந்தைக்கு யாரும்
இல்லையா?”
காமாட்சியின் கண்கள் கலங்கி இருந்தன. அன்று காலை ஆஸ்பத்திரியில் நிகழ்ந்த சம்பவங்கள் வரிசையாக அவள் மனக் கண் முன்பு தோன்றின. அந்த வார்டு’க்கு அவள் தான் டாக்டராக இருந்தாள். அவள் மேற் பார்வையில், பொறுப்பில் தான் நோயாளிகள், பிரசவித்தவர்கள் உள்ளே தங்கியிருக்கவும். வெளியே செல்லவும் முடியும்.
காலையில் ஒவ்வொரு படுக்கையாகச் சென்று, பிரசவித்தவர்களில் வீடு செல்ல வேண்டிய பெண்களைச் சீட்டு எழுதி அனுப்பிக் கொண்டிருந்தாள். அன்று அந்த விடுதியில் சுமார் பத்து பெண்கள் தங்கள் குழந்தை களுடன் வீட்டுக்குச் செல்ல வேண்டியிருந்தது. ஒவ்வொரு பெண்ணாக அவளுக்கு நன்றி தெரிவித்து விட்டு வெளியே சென்றனர். அன்புடனும், ஆசையுடனும் பெருமிதத் துடனும் அந்தத் தாய்மார்கள் தாங்கள் பெற்ற செல்வங்களை அள்ளி அணைத்துச் செல்வதைக் காமாட்சி கவனித்து மகிழ்ந்து கொண்டிருந்தாள்.
கடைசியாக ஒரு பெண் தயங்கித் தயங்கிக் குழந்தையுடன் அவள் அருகில் வந்தாள்.
”ஏனம்மா! உன்னைச் சேர்ந்தவர்கள் யாரும் வரவில்லையா? உன் புருஷனின் பெயரென்ன?” என்று விசாரித்தாள் காமாட்சி. அவள் பதில் கூறு முன் தானே மேஜை மீது கிடந்த விவரங்கள் அடங்கிய புஸ்தகத்தை கவனித்தாள். அதில் அவளுடைய புருஷனின் பெயரைக் காணவில்லை. வேலப்பன் – சகோதரன் என்கிற விவரம் மட்டுமே காணப்பட்டது.
“உன் அண்ணன் கூடவா வரவில்லை?” என்று திரும்பவும் அந்தப் பெண்ணைப் பார்த்துக் கேட்டாள்.
”அவர் என் அண்ணன் இல்லை அம்மா. அந்த சமயத்தில் நாதியற்றுக் கிடந்த என்னை மனமிரங்கி இந்த ஆஸ்பத்திரியில் கொண்டு வந்து சேர்த்தார். தகவல் கேட்டவர்களுக்கு தன்னை என்னுடைய அண்ணன் என்று கூறி இருக்க வேண்டும். எனக்கு யாருமே இல்லை டாக்டர் அம்மா ….”
சமூகத்தில் எந்த வெறியனுடைய ஆசைக்கோ பலியான புத்தியற்ற பெண் அவள் என்பதை ஒரு நொடியில் புரிந்து கொண்டாள் காமாட்சி. சமூகத்திலே பரவி இருக்கும் இந்தக் கொடுமைகளை நினைத்து அவள் மனம் சொல்லொணாத் துயரை அடைந்தது. தன் உணர்ச்சிகளை அடக்கிக்கொண்டு. “சரி, நீ என்ன செய்யப் போகிறாய்? எங்கே போகப் போகிறாய்?” என்று அவளை விசாரித்தாள்.
அந்தப் பெண் கண்ணீரை மாலை மாலையாக உகுத்தாள். கருவிலே அந்தக் குழந்தையை ஏற்ற விநாடியிலிருந்து அவள் உள்ளத்தில் தேக்கி வைத்திருந்த துயர மனைத்தும் கரைந்து கரைந்து கண்ணீராக பெருகியது.
”இந்தக் குழந்தை உனக்கு வேண்டுமா? அதை நீ சரியாக வளர்ப்பாயா?”
அந்தப் பெண் தலைகுனிந்து மௌனமாக நின்றிருந்தாள். காமாட்சியின் முன்பு நடைபாதைகளிலே, மதகுகளின் ஓரங்களிலே, கடற்கரையின் மணலிலே பால் மணம் மாறாத மதலைகள் எறியப்பட்டும், கிடத்தப் பட்டும் இருக்கும் கோரங்கள் நர்த்தனம் புரிந்தன. காமாட்சி சட்டென்று அவள் பக்கம் திரும்பி ”இந்தக் குழந்தை எனக்கு வேண்டும். தருகிறாயா” என்று கேட்டாள்.
குழந்தையின் தாய் நன்றி நிறைந்த கண்களுடன் காமாட்சியை ஏறிட்டுப் பார்த்தாள். பிறகு மெதுவாக அருகில் இருந்த மேஜை மீது குழந்தையைக் கிடத்தினாள். பத்து மாதங்களாக அது அவள் வயிற்றில் பெரிய சுமையாக இருந்தது. அது அவள் கைக்கு வந்த பிறகு அதன் பாரத்தை அவளால் தாங்க முடியவில்லை. தாய்ப்பாசம் தாயன்புகூட அந்த இடத்திலே காய்ந்து விட்டது. எல்லாமே ஒழுங்கான முறையிலும், நேர்மையிலும் இருந்தால் தான் பாசம், அன்பு, கடமை யாவும் தளிர் விடும். இல்லாவிடில் காய்ந்து சருகாக வேண்டியது தான்.
”நான் போய் வருகிறேன் அம்மா” என்று அந்தப் பெண் அவளிடம் வாயால் கூறி விடைபெறவில்லை. அவளுடைய கலங்கிய கண்களிலிருந்தும், பார்க்கும் பார்வையிலிருந்தும் காமாட்சி அவள் தன்னிடம் விடை பெற்றுக் கொள்ள விரும்புகிறாள் என்பதை உணர்ந்தாள்.
மேஜை மீது படுத்திருந்த குழந்தையின் பூப்போன்ற கன்னங்களில் அந்தப் பெண் ஒரு முத்தம் அளித்தாள். ரகசியமாக, தகாத முறையில் தாய்மைப் பதவியை ஏற்று கொண்ட அவளுடைய முதல்-கடைசி-முத்தமாக அது அமைந்தது.
”போய் வா அம்மா…. இனிமேலாவது ஒழுங்காக இரு” என்றெல்லாம் காமாட்சி அவளுக்கு உபதேசிக்க வில்லை. சுட்ட மண்ணை ஒட்ட வைக்கும் முயற்சியாக அது முடிந்தாலும் முடியக்கூடும். ஆகவே, அவள் அந்த பெண்ணின் கைச்செலவுக்கென்று ஏதோ கொஞ்சம் பணத்தைக் கொடுத்தாள். குழந்தைக்கு விலை என்று காமாட்சி நினைத்துத் தரவில்லை. ஒருவேளை அந்தப் பெண் அப்படி நினைத்திருக்கலாம்.
அப்படியே சிந்தனையில் ஆழ்ந்து போய் இருந்த தம் மகளை வேதாந்தம் கண் கொட்டாமல் கவனித்தார். அவளாகவே பேசட்டும் என்று அவர் அவளை ஒன்றும் கேட்கவில்லை.
சிந்தனையிலிருந்து விடுபட்டு காமாட்சி மேற் கூறிய சம்பவங்களை ஒன்று விடாமல் தகப்பனாரிடம் கூறவும், அவர் வியப்பு மேலிட, தம் மகளின் உதார குணத்தையும், சேவை மனப்பான்மையையும் நினைத்து மகிழ்ந்தார்.
பகல் பொழுது தாம் பட்ட அவஸ்தையும், அதை மறக்கப் பற்பல இடங்களுக்கு அலைந்து திரிந்ததையும் நினைத்துத் தன் மனதுக்குள் சிரித்துக்கொண்டார்.
தகப்பனார் பதில் ஒன்றும் கூறாமல் இருப்பதைப் பார்த்த காமாட்சி “ஏனப்பா! ஒன்றுமே பேசவில்லை! அதோடு நீங்கள் மத்தியானம் வீட்டை விட்டு கிளம்பி இப்பொழுது தான் வருகிறீர்கள் போல இருக்கிறதே” என்று விசாரித்தாள்.
“ஆமாம். அம்மா! என்னவோ ஒரு பைத்தியம் -மாதிரி எதையோ நினைத்துக் கொண்டு அலைந்துவிட்டு வந்தேன். “
“எங்கே போய் இருந்தீர்கள்?”
வேதாந்தம் மத்தியானம் நடந்தவற்றை ஒன்று விடாமல் கூறி, ஸ்ரீதரன் கூறிய பதிலையும் சொன்னார்.
“என்ன அப்பா இது? உண்மையிலேயே பைத்தியக் காரத்தனம் தான் செய்திருக்கிறீர்கள். எனக்கு அந்த மாதிரி ஆசையெல்லாம் கிடையாது. என் மனசைப் புரிந்து கொள்ளாமல் நீங்கள் அவசரப்பட்டு விட்டீர்களே ….”
“இல்லை அம்மா. சில மாதங்களாக நீ விளையாட்டுச் சாமான்களை வாங்கி வருவதும், பிறர் குழந்தைகளுக்குக் கொடுப்பதும் என்னை என்னவெல்லாமோ யோசிக்கச் செய்து விட்டது…?”
”அதனால் எனக்கு மறுமணம் செய்து வைத்துக் குழந்தை குட்டிகளுடன் பார்க்க ஆசைப்பட்டீர்கள். அப்படித்தானே?” என்றாள் காமாட்சி.
வேதாந்தம் வெட்கத்துடன் தலையைக் குனிந்து கொண்டார்.
“அப்பா!” என்று ஆசையுடன் அழைத்த அவள் அவர் அருகில் வந்து வற்றி உலர்ந்து போன அவர் கரங்கள் இரண்டையும் பற்றிக் கொண்டாள்.
“இங்கே பாருங்கள்! அன்று உங்கள் மருமகன் என்னிடம், ”காமாட்சி! உன்னை நான் ஏமாற்றி விட்டேன்’ என்று அரற்றினார். அந்த ஏமாற்றம் என் உள்ளத்தைக் கல்லாக மாற்றி விட்டது. இனிமேல் நான் எதையும் எதிர்பார்க்கப் போவதுமில்லை. ஏமாறப் போவதுமில்லை. குடும்ப வாழ்க்கையில் ஒரு பெண் காண வேண்டிய இன்ப துன்பங்கள் அனைத்தையும் என் தொழிலில் பார்க்கிறேன். கட்டிய கணவனால் கைவிடப் பட்டவளின் துயரைப் பார்த்திருக்கிறேன். மகப்பேறு இல்லை என்று வருந்தும் தாயைப் பார்க்கிறேன் , பெற்ற மகவை இழந்து துடிக்கும் அன்னையைப் பார்க் கிறேன். இவர்களின் துயரங்களில் ஓர் அணுவையாவது துடைக்கும் மகத்தான பேற்றை நான் அடைந்தால் போதும் ..”
வேதாந்தம் உபதேசம் கேட்கும் சிஷ்யனின் நிலையில் தம் மகளின் முகத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார். உபதேசிப்பது தந்தையாக இருந்தால் என்ன? மகனாகவோ அல்லது மகளாகவோ தான் இருந்தால் என்ன ?
”இன்று நீங்களும் நானும் சேர்ந்தே சாப்பிடலாம். தினம் தான் அப்படி முடிகிறதில்லை. அதோடு உங்கள் பேத்தி இனிமேல் விழித்துக் கொண்டு அழுவாள். வாருங்கள்” என்று அழைத்தாள் காமாட்சி. வேதாந்தம் சிரித்தார். அந்தச் சிரிப்பில் உள்ளத்து நிறைவைக் காண முடிந்தது.
2.30. காதல் அரும்பியது
குழந்தை பாலுவுக்காகப் பவானி சென்னை வந்தாள். பசுமலையில் ஊரார் அவளைக் கண்ட விதமாகப் பேசி ஏசுவதைப் பொறுக்க முடியாமல் அவன் நற் பெயரெடுத்து, நல்வாழ்வு வாழவேண்டும் என்கிற எண்ணம் அவள் மனத்துள் எழுந்தது. பாலு சென்னை வந்த பிறகு படிப்படியாக அவன் குணத்தில் மாறுதல் ஏற்பட்டது. ‘பசுமலையில் இருந்த பாலுவா இவன்!’ என்று பெற்ற தாயே வியந்து போற்றும்படியாக அவன் நடந்து கொள்ள ஆரம்பித்தான். முன்னைப் போல அவன் இப்பொழுது சுமதியுடன் காரணமின்றிச் சண்டை பிடிக்க முடியாது. ஏனெனில், அவளும் இவன் வம்புக்கு வருவதில்லை. ஆனால், அவனால் மட்டும் அந்தச் சிறு சம்பவத்தை மறக்க முடியவில்லை . சுமதியின் பேரில் கோபித்துக் கொண்டு ஜெயஸ்ரீயின் புஸ்தகத்தைக் கிழித்தவன் அல்லவா!?
அதன் பிறகு எத்தனையோ முறைகள் அவன் ஜெயஸ்ரீயைப் பல இடங்களில் சந்தித்திருக்கிறான். அவளுடன் ஒன்றிரண்டு வார்த்தைகள் பேசியும் இருக்கிறான். ஆனால், அந்த சம்பவத்தைப்பற்றி பிரஸ்தாபித்து ..இப்படிச் செய்தது என் தவறு தான்” என்று அவளிடம் கூறிவிட வேண்டும் என்கிற ஆசை அவன் உள்ளத்தில் மேலோங்கி இருந்தது. ஆனால், அதற்குப் போதிய துணிச்சலோ வயதோஏற்படவில்லை. அத்துடன் ஜெயஸ்ரீ ராதாவைப்போல எல்லோருடனும் சகஜமாகப் பழகும் நிலையில் இல்லை. அதாவது எப்பொழுதும் ஒருவித சங்கோஜம் அவளிடம் நிலைத் திருந்தது. சுமதியைத் தேடிக் கொண்டு அவள் அங்கு வரும்போதெல்லாம் பாலு இருப்பதைப் பார்த்திருக்கிறாள். நீண்ட அவள் கருவிழிகள் இரண்டும் சஞ்சலத்தால் சுற்றிச் சுழன்று அவனைச் சரியாகப் பார்க்க விடாமல் அடித்து விடும். ஏதோ ஒரு வெட்கம். கூடவே ஒரு பயம் எல்லாமாகச் சேர்ந்து கொள்ளும். அவள் அந்த இடத்தில் நிற்காமல் விறுவிறு என்று சுமதியைத் தேடிக் கொண்டு போய் விடுவாள்.
‘என்ன இப்படி விழுந்தடித்துக் கொண்டு வருகிறாய். கூடத்தில் எதைப் பார்த்துவிட்டு இப்படிப் பயப்படு கிறாயாம்!’ என்று உரத்த குரலில் கேட்டுக் கொண்டே சுமதி கூடத்தை எட்டிப் பார்த்து விட்டு. ’ஹே! ஹோ பாலுவைப் பார்த்துவிட்டா இப்படிப் பயப்படுகிறாய்?’ என்று அவளைக் கேலி செய்வாள்.
ஜெயஸ்ரீக்கு மேலும் வெட்கமாகப் போய் விடும்.
“ஐயே! சும்மா இருடி அம்மா. நீ போடுகிற கூச்சல் எட்டுத் தெருவுகளுக்குக் கேட்கும் போல் இருக்கிறதே. இதற்குத்தான் இங்கே நான் வருகிறதில்லை…” என்பாள். சுமதிக்கு இவளுடைய நாணத்தைப் பார்த்து மேலும் இவளை நையாண்டி செய்யத் தோன்றும்.
”வந்தால் என்னவாம்! எங்கள் பாலு என்ன, நீ பயப்படும்படியாக அவ்வளவு மோசமாகவா இருக்கிறான்? செக்கச் செவேல் என்று ராஜா மாதிரி அவனும் அவன் கிராப்பும்! போடி பைத்தியக்காரி. வீண் வேஷம் போடுகிறாய்”
இவர்கள் பேச்சை ஒன்றுவிடாமல் ரசிப்பான் பாலு. மெதுவாக பூமி அதிராமல் மென்னடை போட்டுக் கொண்டே சற்று முன் வந்த சுந்தரியின் முக லாவண்யத் தில் அவன் தன்னையே மறந்திருப்பான். உலகத்தில் எவ்வளவோ பெண்கள் இருக்கிறார்கள். அவனுடன் எத்தனையோ பெண்கள் படிக்கிறார்கள் இப்படி ஒரு மென்மை, இம்மாதிரி ஓர் அடக்கம், இம்மாதிரி ஓர் அழகு அவர்களிடத்தில் அவன் காணவில்லை . காதல் கொண்டு கல்யாணம் செய்து கொள்ளும் வயதை அவன் பூராவாக அடைந்திராவிடிலும் அவன் மனத்தே அரும்பி இருக்கும் அந்தக் காதல் நாளடைவில் மலர்ந்து மணம் வீசினால் போதும் என்று தான் அவன் நினைத்தான். அதை அந்த புனிதமான காதலை அவன் அம்பலப்படுத்த விரும்பவில்லை. தன் இதயத்துள் வைத்துப் பூட்டிப் பாதுகாக்கவே விரும்பினான்.
ஜெயஸ்ரீக்குத் தன் பாட விஷயமாகப் பல சந்தேகங்கள் எழும். பாலுவைக் கேட்டால் விளக்கித் தருவான் என்பதும் தெரியும். இருந்தாலும் கேட்பதற்குத் துணிச்சல் இருக்காது.
”சுமதி! இதைப்பற்றி நீயே கேட்டுச் சொல்லி விடேன்” என்று சுமதியைத்தான் தொந்தரவு செய்வாள் அவள். ”ஏனோ அம்மா! உங்கள் இருவருக்கும் நடுவில் நான் வக்காலத்து வாங்க வேண்டு மாக்கும் ஊஹும்! முடியாது நீதான் கேட்க வேண்டும்?” என்று கூறி இருந்த இடத்தை விட்டு அசைய மாட்டாள் சுமதி.
இதற்குள் பவானி வீட்டில் இருந்தால்… “எங்கே அம்மா வந்தாய் ஜெயஸ்ரீ?” என்று விசாரிப்பாள்.
”நீங்கள் சும்மா இருங்கள் அத்தை. அவளுக்குப் பாலுவிடம் ஏதோ பாடம் கேட்க வேண்டுமாம்!”
”கேளேன் அம்மா. அங்கே கூடத்தில் தானே இருக் கிறான்?”
தன் உள்ளத்தில் அரும்பியிருக்கும் காதல் அரும்பின் தேவதை இப்படித் திக்கித் திணறி அவதிப்படுவதைப் பார்க்க அவன் உள்ளம் சகிப்பதில்லை.
”என்ன அம்மா அது?” என்று கேட்டுக் கொண்டே வந்து மேஜை அருகில் உட்கார்ந்து அவள் சந்தேகங்களை விளக்குவான் பாலு. அப்பொழுது அந்தப் பெண்ணின் கண்களை அவன் எவ்வளவு தான் சந்திக்க முயன்றாலும் அந்த நயனத் தாமரைகள் பூமியை விட்டுப் பெயராமல் நிலைத்து நின்றுவிடும்.
”புரிகிறதா?” என்று கேட்பான்.
”உம்….”
“எங்கே, திரும்பவும் நான் சொன்னதைச் சொல் பார்க்கலாம்?” என்று கூறி மேஜை மீது கிடந்த புஸ்தகத்தை மூடி விடுவான் பாலு. அப்பொழுதாவது அவள் தலை நிமிர்ந்து தன்னைப் பார்க்கக் கூடும் என்கிற ஆசை அவனுக்கு.
ஜெயஸ்ரீயின் முகத் தாமரையில் முத்து முத்தாக வேர்வைத் துளிகள் அரும்பி கன்னங்கள் சிவப்பேற கிடுகிடு என்று அந்தப் பதிலை ஒப்பித்து விட்டுத் தலையைக் குனிந்து கொள்வாள்.
”அப்பாடா! இதற்கா இவ்வளவு பயம்?’ பாலு மேலும் அவளைப் பயப்பட வைக்காமல் அங்கிருந்து சென்று விடுவான்.
இவர்கள் உள்ளத்தில் அரும்பி இருக்கும் காதலைப் பற்றிச் சுமதிக்கு நன்றாகத் தெரிந்திருந்தது.
– தொடரும்…
– முத்துச் சிப்பி (நாவல்), முதற் பதிப்பு: அக்டோபர் 1986, சமுதாயம் பப்ளிகேஷன்ஸ், சென்னை.