முத்துச் சிப்பி

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 30, 2024
பார்வையிட்டோர்: 693 
 
 

2.1-2.10 | 2.11-2.20 | 2.21-2.30

2.11.கண்ணீர் சுரந்தது

அவன் ஹாஸ்டலை அடையும் போது பிற்பகல் சுமார் மூன்று மணி இருக்கலாம். அங்கும் நிசப்தமாகத் தான் இருந்தது. இடைவேளைச் சிற்றுண்டி சாப்பிடுவதற்கு மாணவர்கள் இன்னும் யாரும் வரவில்லை. நேராகக் கோபியின் அறைக்குச் சென்று கதவைத் திறந்து உள்ளே சென்றான் மூர்த்தி. ஜன்னல் ஓரமாகச் சாய்வு நாற்காலியை எடுத்துப் போட்டுக் கொண்டு படுத்தான். அப்படியே தூங்கியும் போனான். அவன் கண் விழித்துப் பார்த்தபோது, மாலை சுமார் ஐந்தரை மணிக்கு மேல் ஆகியிருந்தது. கோபி காலேஜிலிருந்து வந்து உடை மாற்றிக்கொண்டு கையில் ’டென்னிஸ்’ மட்டையுடன் வெளியே புறப்படத் தயாராக நின்றான்.

“என்னடா அப்பா பட்டப்பகலிலே இப்படித் தூக்கம்? உன் ஆபீசிலே உனக்குத் தண்டச் சம்பளம் கொடுக்கிறார்களாடா? இந்த மாசத்தில் நாலு நாள் இதோட மட்டம் போட்டிருக்கிறாய்? கொடுத்து வைத்த மகராசன் நீ” என்று சிரித்துக் கொண்டே கூறி விட்டு கோபி, ”எங்கேயாவது வெளியே போகிறாயா? இல்லை. தூக்கத்தைத் தொடர்ந்து ஆரம்பிக்கப் போகிறாயா?” என்று கேட்டான்.

சோம்பல் முறித்துக் கொண்டே எழுந்த மூர்த்தி ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்துக் கொண்டே “கோபி! எனக்கு ஓர் அறை வாடகைக்குக் கிடைத்து விட்டது. ரெயில்வே லயனுக்கு ஓரமாக ஒரு ரோடு போகிறதே, அங்கே நாற்பந்தைந்தாம் எண் உள்ள வீட்டில் மாடியில் இருக்கிறது அறை. தெற்குப் பக்கம் இரண்டு ஜன்னல்கள் இருக்கின்றன. சுகமாகக் காற்று வரும். ஏழு மணிக்கு மேல் அங்கே போய் விடுகிறேன் . உனக்கு ரொம்ப ’தாங்க்ஸ்’ அப்பா. பத்து நாட்களாய் என்னை வைத்துக் கொண்டு சமாளித்தாய்!” என்று! கூறினான்.

“அடேடோ அப்படியா? என் பரீட்சை பிழைத்தது போ! நீயானால் அங்கே நாடகத்துக்கு வா, இங்க கச்சேரிக்கு வா என்று என்னையும் இழுத்துக் கொண்டு கிளம்புகிறாய். போய்விட்டு வந்த பிறகு அதைப் பற்றிப் பேசியே மண்டையைத் துளைத்து விடுகிறாய். சரி. அடிக்கடி வந்து போய்க் கொண்டிரு” என்று கூறியவாறு கோபி வெளியே கிளம்பினான். அவன் திரும்பி வருவதற்குள் மூர்த்தி போவதனால் அறையைப் பூட்டிச் சாவியை அடுத்த அறையில் கொடுத்து விட்டுப் போகும்படி கூறிவிட்டுச் சென்றான் கோபி.

அவன் அறையை விட்டுச் சென்றதும், மூர்த்தி எழுந்திருந்து கீழே சென்று ஹாஸ்டலில் சிற்றுண்டியும். காப்பியும் சாப்பிட்டு விட்டு வந்தான். பிறகு . சோப்புத் தேய்த்து முகம் கழுவி, வாசனை வீசும் பவுடர் பூசிக் கொண்டான், தலைக்கு வாசனைத் தைலம் தடவி தலைவாரிக் கொண்டு, உடை அணிந்து கொண்டான். பெட்டியையும் படுக்கையையும் எடுத்துக்கொண்டு அவன் புறப்படும்போது மணி சரியாக ஏழு அடித்து விட்டது. கோடம்பாக்கம் ரோட்டில் அவன் பார்த்திருந்த அறைக்குச் சென்று சாமான்களை வைத்து விட்டு இரவுச் சாப்பாட்டுக்காக மாம்பலம் பாண்டிபஜாரை நோக்கிப் போனான் மூர்த்தி.

கல கலவென்று இரவு ஒன்பது மணி வரையிலும் கூடச் சந்தடியாக இருக்கும் அந்தக் கடைத் தெருவில் இருந்த ஒரு வளையல் கடையின் முன்பாக ஒரு ரிக்ஷா வந்து நின்றது. அதிலிருந்து ராதா இறங்கினாள். கை யிலிருந்த வெல்வெட் பையைச் சுழற்றிக் கொண்டே அவள் கடைக்குள் நுழைவதை பார்த்தி கவனித்தான். நடைபாதையில் பின்கள், பித்தான்கள் ‘கிளிப்’புகள் விற்கும் ஒரு கடை அருகில் நின்று ஏதோ வியாபாரம் செய்பவனைப் போல் வளையல் கடையைக் கவனித்துக் கொண்டு நின்றான் மூர்த்தி. ராதா உதட்டுச் சாய புட்டி ஒன்று வாங்கினாள். ஜிலு ஜிலு வென்ற சுடர் விடும் போலிக் கற்களால் செய்த மாலை ஒன்றை எடுத்துப் பார்த்தாள்.

நட்சத்திரங்கள் போல் செய்த மாலையின் நடுவில் சிவப்பு ஒற்றைக் கல் வைத்து பதக்கம் காணப்பட்டது. மாலையைத் தன் கழுத்தில் பதி வைத்துப் பார்த்துக் கொண்டாள் ராதா. எதிரே கண்ணாடியில் அவள் உருவம் தெரிந்தது. சங்கு போன்ற வெண்ணிறமான அவள் கழுத்துக்கு அது எடுப்பாகவே இருந்தது. மற்றும் சில கண்ணாடி வளையல்களும் ரிப்பன்களும் வாங்கிக் கொண்டு, பில் பதினைந்து ரூபாயையும் மேஜை மீது வைத்து விட்டு ரசீது பெற்றுக் கொண்டாள் ராதா.

அவள் கடையைவிட்டு இறங்கி வரும் போது மூர்த்தி அருகில் இருந்த சோடா கடைப் பக்கம் சென்று நின்றான். கலர் ஒன்று வாங்கிச் சாப்பிட்டவாறு தன் முதுகுப் புறத்தை அவள் பக்கமாகத் திருப்பிக்கொண்டு நின்றான். அவள் மறுபடியும் ரிக்ஷாவில் ஏறி ‘பனகல் பார்க்’ வழியாகச் செல்லுவதைக் கவனித்தான்.

அன்று அதற்கு மேல் அவன் அவளைத் தொடர்ந்து செல்ல விரும்பாமல். அருகில் இருந்த ஹோட்டல் ஒன்றில் இரவுச் சாப்பாட்டை முடித்துக் கொண்டு தன் அறைக்குத் திரும்பினான் மூர்த்தி.

‘பனகல் பார்க்கைக் கடந்து சென்ற ரிக்ஷா உஸ்மான் ரோடு பக்கமாகக் கோடம்பாக்கத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அப்பொழுது மணி சுமார் எட்டுக்கு மேல் ஆகியிருக்கலாம். தெருவிலே பெண்களின் கூட்டம் குறைந்து விட்டது. காரியாலயங் களிலிருந்து நேரம் சென்று வீடு திரும்பும் ஆடவர் சிலரேதான் அந்த வழியாகப் போய்க்கொண்டிருந்தனர். இருபுறமும் மரங்கள் கவிந்திருந்த அந்தச் சாலையில் போகப் போக ஜனக்கூட்டம் அதிகமாக இல்லை. தன்னைச் சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்ட ராதாவுக்குச் சற்று பயமாகத் தான் இருந்தது. தெரியாத்தனமாக அவள் அன்று கைகளில் நாலைந்து தங்க வளையல்களையும் கழுத்தில் முத்து ’நெக்லெஸை’ யும் அணிந்து கொண்டு கிளம்பி வந்து விட்டாள்,

இரவு வேளையில் தனியாக ரிஷாவில் போவதை விட நடந்து செல்லலாமே என்று கூட அவளுக்குத் தோன்றியது. உள்ளத்தில் பரபரப்பும், பயமும் அதிகம் ஆக ஆக. அவள் உடல் பூராவும் வேர்த்துக் கொட்டியது . எதிரே கொஞ்ச தூரத்தில் யாரோ ஒருவர் வந்து கொண்டிருந்தார். கையில் ஒரு பிரம்பு வைத்திருந்தார் அவர். வழியில் போகிறவர் வருகிறவர்களை வெகு கூர்மையாகப் பார்த்துக்கொண்டே வந்தார் அவர். ராதா தன் இதயத் துடிப்பு நின்று விடுமோ என்று அஞ்சினாள். அவள் மனம் அப்படி வேகமாக அடித்துக் கொண்டது. பிரம்பு மனிதர் பக்கத்தில் வந்து விட்டார். வண்டிக்குள் உற்றுப் பார்த்துவிட்டு, ”என்ன அம்மா இது? வேளை சமயம் இல்லாமல் கடைக்குக் கிளம்பி விடுகிறாய் நீ!” என்று அதட்டிக்கொண்டே ரிக்ஷாவை மேலே போக விடாமல் நிறுத்தினார் சுவாமிநாதன்.

“நீங்களா?” என்றாள் ராதா, பெருமூச்சு விட்டபடி.

“நான் தான்! அம்மா எங்கேடா காணோம். இப்போ இருந்தாங்களே என்று ராமையாவைக் கேட்டால். ‘பாண்டி பஜாருக்குப் போச்சு வளையல் வாங்கியாற’ என்கிறான். இந்தக் காலத்துப் பெண்களுக்கு எதை நினைத்துக் கொண்டாலும் உடனே ஆக வேண்டும் என்கிற சுபாவம்தான் அதிகமாக இருக்கிறது. இப்படி எட்டு மணிக்குமேல் வளையல் வாங்க ஒண்டியாகக் கடைத் தெருவுக்குப் போவது அவசியமா என்று நினத்துப் பார்க்கிறதில்லை. வீட்டிலே யாருக்காவது ஆபத்தா? ஏதாவது மருந்து தேவையா? சமயம் பார்க்காமல் போக வேண்டியதுதான். இப்படி வளையலும் ரிப்பனும் வாங்க…” சுவாமிநாத சற்றுக் கடிந்தவாறு இவ்விதம் கூறிவிட்டு, நீ ரிக்ஷாவில் வருகிறாயா? நான் கூடவே நடந்து வாறேன்” என்று கேட்டார்.

“வேண்டாம், வேண்டாம்! இந்தா அப்பா உன் கூலி” என்று ரிக்ஷாக்காரனுக்குப் பணத்தை கொடுத்து அனுப்பி விட்டு, சுவாமிநாதனுடன் ராதா நடந்தே வீடு சென்றாள்.

வீட்டுக்குள் செல்லும் வரையில் பேசாமல் இருந்த ராதா, சற்று பயத்துடன், ”அண்ணா வந்து விட்டாரா?” என்று கேட்டாள்.

“இல்லை அம்மா. வக்கீல் வேதாந்தத்தின் மனைவிக்கு உடம்பு அதிகமாக இருக்கிறதாம். அவருடைய பெண் டாக்டர் காமாட்சி இவரை வந்து பார்த்து விட்டுப் போகும்படி போன் செய்தாள். போயிருக்கிறார்” என்றார் சுவாமி நாதன்.

ராதா அங்கே இருந்த சோபாவில் உட்கார்ந்தாள். கைப் பையைத் திறந்து அன்று வாங்கிய மாலையை எடுத்து அருகில் இருந்த மேஜைமீது வைத்தாள். ‘ இதைப் பாருங்கள்! பத்தாயிரம் இருபதினாயிரம் கொடுத்து வாங்கும் வைர மாலை இதனிடம் தோற்றுப் போக வேண்டியதுதான். எப்படி ஜ்வலிக்கிறது பாருங்கள்!” என்று சுவாமி நாதனிடம் காட்டினாள்.

சுவாமி நாதன் சிரித்தார். கையில் இருந்த பிரம்பை ஆணியில் மாட்டினார். ராதாவின் அருகில் வந்து உட்கார்ந்தார்.

“இது ஜ்வலித்து விட்டால் மட்டும் நிஜ வைரத்தோடு இதை ஒப்பிட்டு விட முடியுமா ராதா? நான்கு நாளைக்குத் தண்ணீர் பட்டால் மங்கிக் கறுத்துப் போகுமே. வைரம் மாதிரி என்றைக்கும் நிரந்தரமான ஒளியோடு இது இருக்குமா என்ன? போயும் போயும் இதன் மேல் உனக்கு ஆசை போயிற்றே! வீட்டிலே வேறு மாலையே இல்லையா என்ன? அதையெல்லாம் பெட்டி யில் வைத்துப் பூட்டிவிட்டு. இதைப் போய் வாங்கி யிருக்கிறாயே அம்மா, உனக்கு ஒன்றுமே தெரியவில்லை போ …”

சுவாமி நாதனின் சுபாவத்தை ராதா நன்றாக அறிவாள். “அசடு அசடு” என்பார். அவருக்குக் கோடம் வந்திருக்கிறது என்று அதற்குப் பொருள்.

அவர் கூறியதைக் கேட்ட ராதா கல கலவென்று சிரித்தாள். கழுத்தில் ஏற்கெனவே அணிந்திருந்த முத்து மாலையைக் கழற்றிவிட்டு, புதிதாக வாங்கி வந்த மாலையை அணிந்து கொண்டு அவர் எதிரில் வந்து நின்றாள் அவள்.

வசந்த காலத்துப் பௌர்ணமி இரவில் மலர்ந்த மல்லிகையைப் போல் அவள் அழகு பிரதிபலித்தது. ’இப்படி அழகும், அறியாமையும், வெகுளித்தனமும் நிறைந்த இந்தப் பெண்ணுக்குத் தகுந்த கணவன் வாய்க்க வேண்டுமோ’ என்று சுவாமிநாதன் கவலைப்பட்டார்.

அவரையறியாமல் அவர் கண்களில் நீர் சுரந்தது.

2.12.வக்கீல் வேதாந்தம்

வக்கீல் வேதாந்தத்தின் வீடு மயிலாப்பூரில் இருந்தது. சென்ற இருபத்தைந்து முப்பது வருடங்களில் சென்னை நகரில் பிரபலம் அடைந்திருந்த வக்கீல்களில் வேதாந்தமும் ஒருவர்.

தொழில் முறையில் அவர் எவ்வளவு பிரபலம் அடைந்திருந்தாலும், வாழ்க்கையில் நம்முடைய பழைய வழக்கங்களை விட மனமில்லாதவர். அவருடைய மனைவி சுப்புலட்சுமி, கணவன் எதிரில் நின்றுகூடப் பேசமாட்டாள். வேளைக்கொரு உடையும், நாளைக் கொரு நகையுமாக மாறி வரும் இந்தக் காலத்தில் அந்த அம்மாள் பழைய கெட்டிக் கொலுசும், கடியாரச் சங்கிலியும் செயின் அட்டிகையும் இருபத்தைந்து வருஷங்களாக அழித்துப் பண்ணிப் போட்டுக் கொள்ளாமல் இருப்பதே. அவர்கள் பழைமைக்கு மரியாதை தருபவர்கள் என்பதற்கு அடையாளம், அவர்கள் வீட்டில் செல்வம் கொழித்த அளவு சந்தான பாக்கியம் ஏற்படவில்லை. ஒரு பெண் குழந்தைக்கு அப்புரம் அவர்கள் செய்த தவங்களும் நோன்புகளும் ஒன்றும் பலிக்கவில்லை . காமாட்சி அவர்களின் ஒரே மகள். சங்கீதம். வடமொழி, நாட்டியம். பத்திரிகைத் தொழில் யாவும் வளர்ந்து வரும் மயிலாப் பூரில் காமாட்சியின் படிப்பை அவர்கள் மூன்றாவது படிவத்தோடு நிறுத்தி விட்டு. பதினான்கு வயசு பூர்த்தி யடைந்தவுடன், கல்யாணமும் பண்ணிக் கொடுத்து விட்டார்கள்.

எவ்வளவோ ஆடம்பரமாக, பெருமையாக நடந்தது அந்தக் கல்யாணம். மருமகன் செக்கச் செவேலென்று ராஜா போல இருப்பதாகத் தம்பதி இருவரும் மனம் பூரித்துப் போனார்கள். மருமகன் தங்களுடனேயே இருக்க வேண்டும் என்று வேதாந்தம் சம்பந்தி விட்டாரைக் கேட்டார். அவர்களும் அனுமதி கொடுத்து அனுப்பினார்கள்.

அன்று, அதாவது சுமார் பன்னிரண்டு வருஷங்களுக்கு முன்பு காமாட்சிக்கு வாழ்க்கையின் முதல் நாள். பதினாறு வயதுப் பெண் அந்த நாளை எவ்வளவோ ஆவல்களுடனும், கனவுகளுடனும் எதிர்பார்த்திருப்பாள். அவளுடைய கணவன் வீட்டிலேயே இருந்தாலும் நாள், நட்சத்திரம் முதலியவற்றில் பற்று மிகுந்த பெரியவர்கள் அவர்களைப் பிரித்தே வைத்திருந்தார்கள். கணவனிடம் மனைவி நெருங்கிப் பழக அவர்கள் சந்தர்ப்பம் அளிக்கவில்லை. கணவனுக்குத் தரும் காப்பியைக் காமாட்சி தலையைக் குனிந்து கொண்டே எடுத்துச் சென்று மேஜை மீது வைத்து விட்டுத் திரும்பி வருவாள். அவனும் மனைவியுடன் பேச வேண்டும் பழக வேண்டும் என்கிற ஆவலைக் காண்பித்து கொள்ள வேயில்லை. இப்படி இருக்கையில் பெரியவர்களாகவே அந்தச் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தினார்கள். காமாட்சிக்கு அன்று விசேஷமாக அலங்காரம் செய்திருந்தார்கள், பூக்கடையிலிருந்து வாங்கி வந்த ஜாதி அரும்பு களைப் பின்னலில் வைத்துத் தைத்திருந்தார்கள். காதுகளில் வைரக் கம்மல்களும், புல்லாக்கும், ஒட்டியாணமும் கழுத்தில் ஐந்தாறு வடங்கள் சங்கிலியும், காஞ்சிபுரம் பட்டுப் புடவையும் அணிந்து காமாட்சி தன் கணவனை நேருக்கு நேர் சந்திக்கப் புறப்பட்டாள்.

மாடியில் இருந்த அந்த அறையில் அவள் நுழைந்த போது, அவள் கணவன் உள்ளே சாய்வு நாற்காலியில் படுத்து அரைத் தூக்கத்தில் இருந்தான். காமாட்சி மெல்ல மெல்ல அடி வைத்து உள்ளே சென்றாள்; கணவன் பேசாமல் இருக்கவே, தலை நிமிர்ந்து அவனைப் பார்த்தாள். பிறகு மெதுவான குரலில் ”எழுந்திருங்கள். முதுகை வலிக்கப் போகிறது. படுக்கையில் போய்ப் படுத்துக் கொள்ளுங்கள்” என்று அவனை எழுப்பினாள்.

அவன் கண் விழித்தான். எதிரில் அழகே உருவமாக நிற்கும் காமாட்சியைக் கண்டான். அவன் கண்களில் கண்ணீர் சுரந்தது. ”காமாட்சி” என்று ஆதுரத்துடன் அழைத்து. அவள் கைகளைப் பற்றிக் கொண்டான்.

‘உன்னை ஏமாற்றி விட்டேன்! உன்னுடன் நான் வாழ்வதற்கு அருகதை இல்லாதவன். நிரந்தர நோயாளி. உளுத்துப்போன இந்த உடல் அதிக நாள் இருக்கப் போவதில்லை. வெளிப்பார்வைக்கு நான் நன்றாகத்தான் இருக்கிறேன். இருந்தாலும். காச நோய் என்னுடைய உடலை அரித்துக்கொண்டே வருகிறது. சீக்கிரத்தில் எல்லோரும் அதைப் புரிந்து கொள்வீர்கள்” என்றான்.

காமாட்சி கல்லாக உணர்வற்று நின்றாள். பதி னைந்து வருஷங்களுக்கு முன்பு காச நோயிலிருந்து மனித சமுதாயத்துக்கு விடுதலை கிடையாது என்று தான் எல்லோரும் நினைத்திருந்தார்கள். அந்த எண்ணமே அநேகம் பேரை- ஆரம்ப நோயாளிகளைக் கூட பலிவாங்கிவிட்டது.

அவன் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்து கொண்டே இருந்தது .

“பணத்துக்காக வியாதியை மறைத்து வைத்து விட்டார்கள் என்னைப் பெற்றவர்கள்” என்றான் வேதனையுடன்.

”அழாதீர்கள்” என்றாள் காமாட்சி, “இதற்காக அழுவார்களா? நல்ல வைத்தியமாகப் பார்த்தால் போயிற்று. நாளைக்கே அப்பாவிடம் சொல்லி நல்ல வைத்தியரை வரவழைக்கிறேன். இந்தப் பாலைச் சாப்பிட்டு விட்டுத் தூங்குங்கள்.” ஆதரவுடன் அவன் கரங்களைப் பற்றிக் கட்டிலுக்கு அழைத்துப் போய்ப் படுக்க வைத்தாள். சிறிது நேரத்திற்கெல்லாம் அவன் தூங்கிப் போனான்.

திறந்த மாடியிலே வந்து நின்றாள் அவள். வெளியே கபாலியின் கோபுரமும் குளமும் தெரிந்தன. பிறந்து புத்தி தெரிந்த நாட்களாய் யாருக்குமே தீங்கு எண்ணாதவள் அவள். அவள் வாழ்க்கை ஒரு சோக கீதமாக மாறப் போகிறது என்பதை நினைத்துப் பார்க்கையில் அவள் உள்ளமெல்லாம் எரிந்தது.

பொழுது விடிந்ததும் கீழே இறங்கி வந்த மகளை நோக்கினாள் சுப்புலட்சுமி. பின்னலில் தைத்திருந்த மலர்கள் வாடாமல், நலுங்காமல் இருந்தன, கண்களின் ஓரத்தில் மட்டும் சிறிது மை கரைந்திருந்தது. தலை குனிந்தவாறு கொல்லைப் பக்கம் சென்ற காமாட்சி திரும்பி வந்து…. ”அம்மா! அப்பா எங்கே?” என்று கேட்டாள்.

“ஏனம்மா! இங்கே தானே இருந்தார்” என்றாள் சுப்புலட்சுமி.

வேதாந்தம் காப்பி சாப்பிட உள்ளே வந்தார்.

”குழந்தை உங்களைத் தேடினாளே!” என்று சொல்லிக்கொண்டே சுப்புலட்சுமி இரண்டு தம்ளர்களில் காப்பி கொண்டு வந்து வைத்தாள். இந்தாம்மா! நீ சாப்பிட்டு விட்டு உன் புருஷனுக்கும் கொண்டுபோய்க் கொடு” என்றாள்.

தகப்பனார் காப்பி அருந்துகிற வரைக்கும் மகள் ஒன்றும் பேசவில்லை. அவர் அருகில் சென்று நின்று ‘அப்பா! அவருக்கு உடம்பு சரியில்லையாம், நம்ப டாக்டரை அழைத்து வந்து காண்பியுங்கள்.” இதைச் சொல்லி முடிப்பதற்குள் அவளுக்கு அழுகை வந்து விட்டது.

“என்னம்மா உடம்புக்கு? தலை வலியா? ஜுரமா?” என்று பதறியவாறு கேட்டுக் கொண்டே சமையல் அறையை விட்டு வெளியே நடந்தார் வேதாந்தம். அவசரமாக மாடிப் படிகளில் ஏறி அவர் உள்ளே போவதற்குள் காமாட்சி அவர் முன்னால் வந்து நின்றாள்.

“அதெல்லாம் ஒன்றுமில்லை அப்பா. அவருக்கு காசமாம். கல்யாணத்துக்கு முந்தியே இருந்ததாம்…..”

வேதாந்தம் முகத்தைச் சுளித்துக் கொண்டார். தலையில் பெரிய கல் ஒன்று விழுந்து விட்டது என்பது அவருக்குத் தெரிந்து போயிற்று. பெற்றோருக்கு ஒரே பிள்ளை . பணங்காசு அதிகம் கிடையாது. நமக்கு அடங்கிய மருமகனாக வீட்டோடு இருப்பான். தள்ளாத வயசில் அவனும், மகளும் ஆதரவாக நம்மைப் பார்த்துக் கொள்வார்கள் என்று எண்ணியிருந்த எண்ணமெல்லாம் ஒரு விநாடியில் மறைந்து போயின.

பாதிப்படி ஏறியவர் திரும்பி விட்டார். டாக்டர் ஸ்ரீதரனுக்கு போன்’ செய்தார். அப்பொழுது டாக்டர் ஸ்ரீதரன் இளைஞன். வைத்தியக் கல்லூரியிலிருந்து பட்டம் பெற்று வெளியே வந்து ஆறு மாதங்கள் ஆகி யிருந்தன. இவர்கள் குடும்பத்தில் சில்லறை வியாதிகளுக்கு வைத்தியம் பார்த்து வந்தான்.

அவனுக்குத் தெரிந்த பிரபல வைத்தியர்களை அழைத்துவந்து நல்ல முறையில் வைத்தியம் செய்து பார்த்தான் ஸ்ரீதரன்.

பலன் பூஜ்யமாகி விட்டது. காமாட்சி விதவை யானாள். அவர்கள் கல்யாணத்தை ஆமோதித்து நடத்திய அதே சமூகம், இந்தச் சம்பவத்தையும் பார்த்துக் கொண்டு சும்மா இருந்தது.

”அதிர்ச்சி வைத்தியம்’ என்று வைத்திய முறையிலே ஒன்று இருப்பதாகப் படிக்கிறோம். வேதாந்தம் அடியோடு மாறிப் போனார். அவரிடம் இருந்த பழைமை எண்ணங்கள், அசட்டுத் தனங்கள். அதைரியம் யாவும் மறைந்து போயின. காமாட்சியை மேலும் ‘இண்டர் மீடியட்’ வரை படிக்க வைத்து. வைத்தியக் கல்லூரியில் சேர்த்தார். மருமகனின் மறைவு. மகள் நிற்கும் நிலைமை, சமூகத்தின் சுயநலம் யாவும் சேர்ந்து அவருக்கு அதிர்ச்சி வைத்தியம் செய்தன.

இப்பொழுது டாக்டர் காமாட்சி, ஸ்ரீதரனின் சக டாக்டர். வேதாந்தம் மாறினாரே தவிர, சுப்புலட்சுமி மாறவில்லை. மனம் இடிந்தவள் இடிந்தவள் தான்.

சுவாமிநாதன் ராதாவிடம் கூறியபடி அன்று சுப்புலெட்சுமியின் உடல் நிலைமை கவலைக்கிடமாக இருந்தது. அதற்காகத் தன் நண்பரை டாக்டர் காமாட்சி அழைத்திருந்தாள்.

2.13.ராதாவுக்குத் தெரிந்தவர்

அன்றிரவு டாக்டர் ஸ்ரீதரன் வீட்டுக்கு வரும் போது இரவு ஒரு மணி ஆகிவிட்டது. அவரால் முடிந்த வரையில் சுப்புலட்சுமிக்கு வைத்தியம் செய்து பார்த்தார். தான் பிழைத்து எழ வேண்டும் என்கிற ஆசை அவள் மனத்தை விட்டுப் போய் பலகாலம் ஆயிற்று. ஊசிகளுக்கும் மருந்துகளுக்கும் அந்த மனத்தின் அபிப்பிராயத்தை எதிர்த்து நிற்கும் சக்தி இல்லை. ’குழந்தை குழந்தை!’ என்று வீட்டைச் சுற்றி வளைய வந்த ஒரு ஜீவன் மறைந்து போவதில் டாக்டர் காமாட்சிக்குத் தான் வருத்தம். தன் அம்மா இனிமேல் பிழைக்க மாட்டாள் என்பது தெரிந்திருந்தும் அவளைப் பிழைக்க வைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டாள். அந்த அறியாமையை நினைத்து அவள் மனத்துள் சிரித்துக் கொண்டாள்.

இரவு மூன்று மணிக்கு டாக்டர் காமாட்சி ஸ்ரீதரனுடன் ‘போனில்’ பேசினாள். “விளக்கு அணையும் தறுவாயில் இருக்கிறது. அம்மா ரொம்பவும் சிரமப்படுகிறாள். ஊசிகளையும், மருந்துகளையும் நிறுத்தி விட்டேன். அவள் இது வரையில் ஆராதித்து வந்த கற்பகாம்பிகை ஸ்தோத்திரங்களை மாத்திரம் சொல்லி வருகிறேன் …….” ’போனில்’ பேசிய குரலில் தெளிவு இல்லை. துக்கமும் துயரமும் இழையோடின. அவள் டாக்டர் ஆனதால் சமாளிக்க முடிந்தது.

பொழுது விடிவதற்குள் சுப்புலட்சுமி போய் விட்டாள். நான் இனிமேல் ’தனி’ என்று ‘போன்’ மூலம் வேதாந்தம் அறிவித்தார். அதிகாலையில் எழுந்து குளித்துக் காலைச் சிற்றுண்டிக்காக வரும் டாக்டர் ஸ்ரீதரன் தம் அறையிலேயே சிந்தனையில் மூழ்கி உட்கார்ந்திருந்தார்.

சுவாமிநாதன் வியப்புடன் மாடிப் படியேறி மேலே சென்று உள்ளே எட்டிப் பார்த்தார்.
“டாக்டர் உடம்பு சரியில்லையா என்ன?” என்று விசாரித்தார்.

“உடம்புக்கு ஒன்றுமில்லை. மனசுதான் சரியாக இல்லை” என்று சொல்லிக் கொண்டே, தம் கடமைகளில் நினைவு வந்தவராக அவர் கீழே இறங்கி வந்து தம் அலுவல்களில் ஈடுபட ஆரம்பித்தார்.

ராதா விழித்தெழுந்து உள்ளே வந்ததும் சுவாமி நாதன் “ஏனம்மா! அண்ணா ஒரு மாதிரியாக இருக்கிறார்? டாக்டர் காமாட்சியின் தாய் போய் விட்டாளாம். பாவம் அந்தப்பெண்ணுக்கு இனிமேல் யார் ஆதரவு? தகப்பனாருக்கும் வயசு ஆயிற்று. பாவம், அவளுக்கும் சிறு வயசு. தனியாக இருக்க வேண்டும்………”

ராதாவுக்கு இந்த விஷயங்களெல்லாம் ஒன்றும் சுவாரசியப்படவில்லை. ’தனியாக வாழ்வது என்றால் இவருக்கு ஏன் பிடிக்கவில்லை?’ என்றுதான் அவளுக்குத் தெரியவில்லை . சலிப்புடன் எழுந்து அவள் தோட்டத்துக்குப் போய் விட்டாள். ஸ்ரீதரன் தம் காலை அலுவல்களை முடித்துக் கொண்டு ’டிஸ்பென் ஸரி’க்குப் போய் விட்டார்.

அதற்கப்புறம் பல நாட்கள் வரையில் அந்த வீட்டில் எதுவுமே நடக்கவில்லை. பதினைந்து தினங்களுக்கு அப்புறம் ஒரு நாள் மாலை. ராதா கோகலே ஹாலில் நடக்கவிருந்த சங்கீதக் கச்சேரி ஒன்றுக்கு புறப்பட்டாள்.

“உன்னோடு யார் வருகிறார்கள்?” என்று விசாரித்தார் சுவாமிநாதன்.

”ஏன்?” என்று புருவத்தை சுளித்துக் கொண்டே கேட்டாள் ராதா.

”தனியாகவா நீ திரும்பி வருவாய் என்று கேட்கிறேன்?”

’இதென்ன அசட்டுக் கேள்வி? தனியாகத் திரும்பி வந்தால் என்னவாம்’ என்று கேட்டு விட ராதா துடித்தாள் . ஆனால் அவளை அப்படிக் கேட்க விடாமல் ஏதோ ஒன்று தடுத்து விட்டது.

“எனக்குத் தெரிந்தவர்கள் யாராவது வருவார்கள். அவர்கள் கூட வந்து விவேன்” என்று கூறிவிட்டு அவர் பதிலை எதிர்பாராமல் ராதா வெளியே சென்று விட்டாள்.

தெரு வழியே நடந்து சென்று கோடம்பாக்கம் ரயில் நிலையத்தை அடைந்தாள். ரயில் வந்ததும் அதில் ஏறி உட்கார்ந்து கோட்டை நிலையத்தில் இறங்கி ஒரு ரிக்ஷா வைத்துக் கொண்டாள். அப்பொழுது மாலை சுமார் நாலரை மணி இருக்கலாம். ஹைக்கோர்ட்டுக்கு எதிரில் இருந்த ஹோட்டல் ஒன்றிலிருந்து மூர்த்தியும், கோபியும் வெளியே வந்து கொண்டிருந்தார்கள்.

சென்னை நகரின் ஜனத்திரளில் அரண்மனைக்காரத் தெரு வழியே செல்லும் ரிக்ஷாவில் ராதா உட்கார்ந்திருப்பது மூர்த்தியின் தீட்சண்யயான கண்களுக்குத் தெரிந்தது.

”கோபி ஒரு நிமிஷம். நான் தம்புச் செட்டித் தெருவில் ஒருவரைப் பார்க்கவேண்டும். இப்படியே பீச் ஸ்டேஷனுக்கு நடந்து போய்க்கொண்டிரு, வந்து விடுகிறேன்” என்று சொல்லிக் கொண்டே அவசரமாகச் சென்று அந்தக் கூட்டத்தில் மறைந்து போனான்
மூர்த்தி.

கச்சேரி ஆரம்பமாகிவிட்டது. அன்று ஏனோ அதிகக் கூட்டம் இல்லை. ராதாவுக்கு வெகு சமீபமாக மூர்த்தி ஒரு டிக்கெட் வாங்கிக் கொண்டுபோய் உட்கார்ந் தான். சங்கீதத்திலேயே கவனமாக இருந்த ராதா அவனைக் கவனிக்கவில்லை. அத்துடன் அங்கே அவளுக்குத் தெரிந்தவர்கள் அநேகம் பேர் இருந்தார்கள். பாகவதர் பாடும் ஒவ்வொரு ராகத்தைப் பற்றியும் கீர்த்தனங்களின் அர்த்த விசேஷத்தைப் பற்றியும் அருகில் இருந்தவர்களுடன் பேசிக் கொண்டே சங்கீதத்தை அனுபவித்தாள் ராதா.

அன்று, ராகம், தானம் பல்லவியை ஒன்றரை மணி நேரம் பாடினார் வித்வான், அதற்கப்புறம் சில்லறை உருப் படிகள் பாடப்பட்டன. ‘மாயம் வல்லவன் கண்ணனென்று என் தாயும் வந்து சொன்ன துண்டு’ என்கிற உருப்படியைப் பாடிய போது ராதா கல கல வென்று சிரித்து விட்டாள். அவள் மனத்திலே சிரிப்பை மூட்டிச் சிரிக்கச் செய்தவன் கண்ணன். ஆனால் மூர்த்தி அதை வேறுவிதமாகப் புரிந்து கொண்டான். ‘ உணர்ச்சிகளுக்கு சீக்கிரமாக அடிமையாகி விடுகிறவள் இந்தப் பெண், பாட்டைக் கேட்டுச் சிரிக்கிறாள்; பேசும் போது சிரிக்கிறாள். தெருவில் நடந்து செல்லும்போதும் சிரிக்கிறாள். இவளிடம் உறுதியும் கண்டிப்பும் இருக்காது. பவானியைப்போல் இவள் நெஞ்சழுத்தம் வாய்ந்தவள் இல்லை’ என்பதை மூர்த்தி சுலபமாகப் புரிந்து கொண்டான்.

வித்வான் மங்களம் பாடி முடிக்கும் போது மணி சரியாக ஒன்பதே முக்கால்; கூட்டம் திமுதிமுவென்று வெளியே வந்தது. காரில் வந்தவர்கள் போய் விட்டார்கள்.
கோடம்பாக்கம் செல்லும் பஸ் போய் விட்டது என்று ரிக்ஷாக்காரன் ஒருவன் தெரிவித்தான். “இரண்டு ரூபாய் கொடுங்க அம்மா. வீட்டிலேயே கொண்டு போய் இறக்கிடறேன்” என்று வேறு அவன் யோசனை கூறினான்.

இந்த அகாலத்தில் ரிக்ஷாவில் போனால் சுவாமிநாதன் கோபிப்பார் என்பது ராதாவுக்குத் தெரியும். அவளுக்குப் போவதற்கு தைரியம் உண்டு. நடுவில் ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் ‘ஓ’ வென்று கத்தலாம். ’உதவி- உதவி’ என்று கூக்குரல் போடலாம். முடிந்தால் அருகில் சாலை ஓரத்தில் இருக்கும் வீட்டில் போய் உதவி கேட்கலாம் – என்றெல்லாம் அசட்டுத் தைரியம் அவள் மனதில் நிறைந் திருந்தது. பட்டப் பகலைப்போல் விளக்குகள் எரியும் போது என்னதான் நேர்ந்து விடுமென்று வேறு தோன்றி யது. ஆனால் சுவாமிநாதன் அன்றே சொன்னார்: அகாலத்தில் அப்படி எல்லாம் தனியாக வரக்கூடாதும்மா என்று. அந்தக் கிழவருக்கு யார் பதில் சொல்ல முடியும்?

தயங்கியபடி நின்ற ராதாவின் அருகில் மூர்த்தி வந்து நின்றான். கைகளைக் குவித்து வணக்கம் செலுத்தினான்.

“என்னை நினைவிருக்கிறதா?” என்று கேட்டான். ராதா தன் பெரிய விழிகளைச் சுழற்றியவாறு ஒருகணம் யோசனை செய்தாள்.

“அன்று நீங்கள் மியூஸியம் தியேட்டரில் போட்ட நாடகத்துக்கு நான் வந்திருந்தேனே……..”

“எஸ்… எஸ்” என்றாள் ராதா. பிறகு . “நீங்கள் எதுவரைக்கும் போகிறீர்கள்!” என்று விசாரித்தாள்.

”நானா? கோடம்பாக்கத்தில் இருக்கிறேன். ஆமாம். நீங்கள் டாக்டர் ஸ்ரீதரனின் தங்கைதானே? உங்கள் வீட்டுக்கு அருகிலேயே இருக்கிறேனே. ஏன் கேட்கிறீர்கள்? உங்களோடு யாரும் வரவில்லையா?……”

ராதா தலையைக் குனிந்து கொண்டு நின்றாள். பிறகு மெதுவாக. ”எனக்கு பாட்டுப் பைத்தியம் அதிகம் உண்டு, என்னவோ இந்தக் கலைகளில் ஒரு அலாதி ஆசை எனக்கு. திரும்பி எப்படி வருவது என்று யோசிக்காமல் வந்து விட்டேன்.”

அருகில் சென்று கொண்டிருந்த ‘டாக்ஸி’யைக் கை தட்டி அழைத்தான் மூர்த்தி.

”அதனால் என்ன? நான் துணைக்கு வருகிறேன். வீட்டிலே கார் இருக்குமே…..”

“அண்ணாவுக்கு வெளியே போக வேண்டியிருந்திருக்கும். திரும்பி வந்திருக்க மாட்டார். இல்லா விட்டால் கார் வந்திருக்கும்…..”

காரின் பின் ஸீட்டில் ராதா உட்கார்ந்திருந்தாள். இரவ வேளையில் இப்படித் தனியாகப் பிற ஆடவனுடன் செல்கிறோமே என்பதை அந்தப் பேதைப் பெண் உணரவில்லை . இம்மாதிரி ஒரு தைரியம் நம் நாட்டுப் பெண்களுக்குத் தேவைதானா? தாய்க்குலத்தில் கற்பு, பண்பு. அடக்கம், பொறுமை இவற்றைப் பக்க பலமாகக் கொண்டு நம் சமுதாயம் சீரிய முறையில் இயங்க வேண்டு மென்றால் இத்தகைய நாகரிகம்’ தேவையா? என்பதை நாம் சிந்தித்துப் பார்க்கத்தான் வேண்டும்.

எத்தனையோ இரவுகளைப் போல் சுவாமிநாதன் ராதா இன்னும் வரவில்லையே என்று வாயிற்படியில் காத்துக் கொண்டிருந்தார். தெருவில் கார் வந்து நின்றது அதிலிருந்து ராதா இறங்கினாள். ’வணக்கம். தாங்க்ஸ்’ என்று சொல்லிக் கொண்டே உள்ளே சென்றாள். மூர்த்தியும் அங்கே இறங்கிக் கொண்டு ‘டாக்ஸி’ காரருக்குப் பணத்தைக் கொடுத்து அனுப்பினான்.

சுவாமி நாதன் தெரு வெளிச்சத்தில் மூர்த்தியின் முகத்தைக் கவனித்தார். ‘அகத்தின் அழகு முகத்தில் தெரியும்’ என்றார்கள் பெரியவர்கள்.

அந்த முகத்திலே தெளிவு இல்லை; அந்தக் கண்களில் உண்மையும், நேர்மையும் இல்லை. ஒரு வேளை அவ ருடைய ஊகம் தவறாகக்கூட இருக்கலாம். என்னவோ அவருக்கு அவனை அவ்வளவாகப் பிடிக்கவில்லை.

உள்ளே சென்றவர், “யாரம்மா அந்தப் பிள்ளை?” என்று கேட்டார். அவள் பெண்கள் கல்லூரியில் படித்துத் தேறிய மாணவி ஆதலால், ஓர் ஆடவன் அவளுக்கு நண்பனாக இருக்கமுடியாது என்பது அவர் தீர்மானம். இதுவரையில் இப்படி யாரும் அவளுடன் வந்த தில்லையே .

”தெரிந்தவர்” என்று பதில் கூறினாள் ராதா.

“என்ன அம்மா சொல்லுகிறாய்? நமக்கு ஏதாவது உறவா? அப்படி யாரும் இதுவரையில் இங்கு வந்ததே யில்லையே?….”

”உறவு என்று சொன்னேனா. தெரிந்தவர் என்று தானே சொல்கிறேன்!”

ராதாவுக்கு அவர் ஏதோ சந்தேகமாகக் கேட்கிறார் என்பது விளங்கிவிட்டது. கோபம் வர, அவள் பெரு மூச்சு விட்டுக் கொண்டே சாப்பிட்டு முடித்தாள்.

சுவாமிநாதனுக்கோ சரிவரப் பேசத் தெரியாமல் ’இருந்த பொழுதிலிருந்து வளர்த்த குழந்தை என்னிடமே மறைத்துப் பேசுகிறாளே’ என்று கோபம் வந்தது. ‘இருக்கட்டும். அவளும் வயசு வந்த பெண், படித்தவள். நல்லது கெட்டதை ஆராயும் திறமை படைத்தவள் நாமும் அவசரப்படக்கூடாது’ என்று நினைத்து அவர் அத்துடன் அன்று விட்டு விட்டார்.

ஸ்ரீதரனுடைய போக்கே அலாதியாக இருந்தது. வீட்டிலே அவர் மனத்தைக் கவர மனைவி இல்லை. ஒரே பெண் குழந்தை. ஸ்ரீதரன் வீட்டில் இருக்கும் சமயங்களில் ஜெயஸ்ரீ பள்ளிக்கூடம் போய் விடுவாள்.

இரவில் ஸ்ரீதரன் வீட்டுக்கு வரு முன்னே படுத்துத் தூங்கிப் போவாள் ஜெயஸ்ரீ.

ராதா பெரிய பெண்ணாக வளர்ந்து விட்டாள். அவளை நன்றாகப் படிக்க வைத்து விட்டார் அவர். தகுந்த இடமாகப் பார்த்துக் கலியாணம் பண்ணிக் கொடுத்து விட்டால் அவள் புருஷன் வீட்டுக்குப் போய் விடுவாள்; வீட்டைச் சுற்றிச் சுற்றி வரும் பொறுப்புகள் அதிகம் இல்லை. ஆகவே தன் சகோதரியைப் பற்றித் தெரிந்து கொள்ளவோ அவள் சுதந்திரத்தில் தலையிடவோ ஸ்ரீதரனுக்கு அவகாசம் இல்லை. ஆசையும் இல்லை .

தாமரை இலைத் தண்ணீரைப் போல இருந்தது அவர் வாழ்க்கை . அத்துடன் இந்த விஷயங்களிலெல்லாம் பெண்களுக்கு இருக்கிற அனுபவம் ஆண்களுக்குப் போதாது. சுவாமிநாதன் நாலும் தெரிந்தவர். உலசு விவகாரங்களில் அடிபட்டவர். ஆகவே, அவர் தான் ராதாவைப் பற்றி அதிகமாகக் கவலைப்பட்டார். *சமயம் வாய்க்கும்போது ஸ்ரீதரனிடம் சொல்லி விரைவிலேயே அவளுக்குக் கலியாணத்தைப் பண்ணி வைத்து விடவேண்டும்’ என்று தீர்மானித்துக் கொண்டார்.

2.14.டாக்டர் வீட்டில் பவானி

அப்பொழுது புரட்டாசி மாதம். எல்லோர் வீட்டிலும் கொலு வைத்திருந்தார்கள். சுமதியின் வீட்டிலும் பொம்மைக் கொலு வைக்கப்பட்டிருந்தது. பவானி இந்தப் பண்டிடையை வெகு உற்சாகத்துடன் கொண்டாட வேண்டும் என்று நினைத்து, தினமும் வித விதமாகச் சுமதியை அலங்கரித்தாள். தினுசு தினுசாகப் பலகாரங்கள் செய்தாள். இரவு பத்து மணி வரையில் குழந்தைகள் வீடு வீடாகச் சென்று சுண்டலும், பழங் களும் வாங்கி வந்தனர். கோவிலுக்குப் போகும் ஸ்திரீகளின் கூட்டம் தெருக்களில் நிறைந்திருந்தது. அங்கங்கே சங்கீதக் கச்சேரிகள் நடந்தன. எல்லோர் வீட்டிலிருந்தும் கணீரென்று பாட்டுக்கள் ஒலித்துக் கொண்டிருந்தன. சுமதியுடன். பாலுவும், ஊர் அழைக்கச் சென்றான். கொஞ்சம் பெரியவனாக பாலு இப்போது வளர்ந்திருந்தாலும், பழைய துடுக்குத் தனங்கள் அவனை விட்டுப் போகவில்லை.

“இங்கே பார் சுமதி! கொட்டை கொட்டையாகக் கண்களை வைத்துக் கொண்டு நிற்கிறதே இந்த வெள்ளைக்கார பொம்மை, அது உன்னைப் போலவே இருக்கிறது” என்றான் பாலு சிரித்துக் கொண்டே.

“என் மூஞ்சி இப்படித்தானாடா யிருக்கிறது?” என்று சுமதி கோபித்துக் கொண்டு கேட்டாள்.

”இல்லை சுமதி! உன் கண்கள் அப்படித்தானே இருக்கு?” சுமதிக்கு பாலுவுடன் பிறத்தியார் வீட்டில் சண்டை போட்டுக் கொள்ளப் பிடிக்கவில்லை, ”சரி, வாடா பாலு!” என்று சொல்லிக் கொண்டே சுமதி தெருவில் இறங்கி நடக்க ஆரம்பித்தாள். அன்று வானம் மப்பும் மந்தாரமுமாக இருந்தது. கறுத்த மேகங்கள் வானவெளி எங்கும் திரண்டு இருந்தன. ‘ பளீர் பளீர்!’ என்று மின்னல்கள் கீற்றுக் கீற்றாக வானத்தில் ஒரு கோடியிலிருந்து மற்றொரு கோடி வரை பளிச்சிட்டன. பேய்க் காற்று ஒன்று சுழன்று சுழன்று அடித்தது . சட சடவென்று மழைத் துளிகள் விழ ஆரம்பித்தன.

பாலு பின்னால் வருகிறானா என்பதைக் கூடக் கவனியாமல் சுமதி விடு விடுவென்று நடந்து வீட்டுக்குப் போய் விட்டாள். பாலு, மழை பெய்வதைச் சிறிது நேரம் நின்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டு ஒரு மரத்தடியில் நின்றான். பிறகு, மழை பலத்து விடவே அவசரமாக வீட்டை நோக்கி ஓட ஆரம்பித்தான். அவர்கள் வீட்டு வாசலில் வாழைப்பழத் தோல்கள் மழை நீரில் நனைந்து கொண்டே இருந்தன. ஓடுகிற வேகத்தில் பாலு அவற்றில் சறுக்கிக் கீழே விழுந்தான். கீழே மண்ணில் புதைந்து கிடந்த சிறு கூழாங்கல்-கூர்மையானது-அவன் நெற்றியில் குத்தி விட்டது. ரத்தம் குபுகுபுவென்று வடித்தது.

தெருவில் பாலு வருகிறானா என்று பார்க்க வந்த பவானி, இதைப் பார்த்ததும் திகைத்து விட்டாள். அப்படியே அவனை அணைத்துப் பிடித்துக் கொண்டு உள்ளே வந்தாள். வீட்டில் கோமதி இல்லை, மஞ்சள் குங்குமத்துக்காக யார் வீட்டுக்கோ போயிருந்தாள். நெற்றியில் வடியும் ரத்தத்தை அலம்பி, ஒரு ஈரத் துணியால் சுற்றிக் கட்டினாள். வெளியே மழை மிகவும் குறைந்திருந்தது ; சிறு தூறல்கள் மட்டுமே விழுந்து கொண்டு இருந்தன.

”சுமதி! பாலுவை நான் டாக்டர் வீட்டுக்கு அழைத்துப் போகிறேன். வீட்டைப் பார்த்துக் கொள்’, என்று கூறிவிட்டுப் பவானி, அவனை அழைத்துக் கொண்டு டாக்டர் ஸ்ரீதரனின் வீட்டை அடைந்தாள்.

ஸ்ரீதரனின் வீட்டில் ஜெயஸ்ரீ, பாலுவைப் பார்த்ததும் .. ”என்னடா பாலு! நெற்றியிலே என்ன?” என்று கேட்டாள்.

”மழையிலே ஓடி வந்தேன். விழுந்து விட்டேன்”’, என்றான் பாலு.

அவனுக்குத் தலையை ‘விண் விண்’ என்று வலித்தது. ஜெயஸ்ரீ ஓடிப் போய் உள்ளே இருந்த தன் தகப்பனாரை அழைத்து வந்தாள். நெற்றிக் காயத்துக்கு மருந்து வைத்துக் கட்டினார் டாக்டர் ஸ்ரீதரன். பிறகு கைகளை அலம்பிக் கொண்டே, “இந்த ஊருக்கு நீங்கள் வந்து ஒரு வருஷமாகிறது. நம் வீட்டுப் பக்கமே வருவதில்லை. பாலு அடிபட்டுக் கொண்டதால் இன்று வந்திருக்கிறார்கள்? வெளியிலேயே அதிகமாக எங்கேயும் போக மாட்டீர்களோ?” என்று கேட்டார்.

”போவதில்லை. வீட்டிலேயே வேலை சரியாகப் போய் விடுகிறது. ஒழிந்த வேளைகளில் எதையாவது படித்துக் கொண்டே இருப்பேன்” என்றாள் பவானி.

பவானி வீட்டைச் சுற்று முற்றும் கவனித்தாள். அந்தச் சுவரில் பெரிய அளவில் ஒரு பெண்மணியின் படம் மாட்டப்பட்டிருந்தது. சாந்தமும், புன்னகையும் தவழும் அவள் முகம் பார்ப்பதற்கு அழகாக இருந்தது. ஸ்ரீதரனின் மனைவியின் படம் என்று பவானி ஊகித்துக் கொண்டாள்.

தயக்கத்துடன் பாலுவின் பக்கத்தில் நிற்கும் பவானியைப் பார்த்து ஸ்ரீதரன். ”வாருங்கள். உள்ளே போகலாம். இந்த வீட்டில் ஒரு பெரியவர் இருக்கிறார். அவரும் உங்களைப் பார்க்க வேண்டும் என்று ஆசைப் படுகிறார்” என்று கூறியவாறு முன்னே சென்றார். ஆஜானுபாஹுவான அவர் தோற்றத்தைப் பார்த்து வியந்தாள் பவானி. நல்ல சிவந்த நிறம். உயரத்துக் கேற்ற பருமன்; நீண்ட கூர்மையான நாசி, ஆழ்ந்து சிந்திக்கும் அமைதியான கண்கள். குழந்தையைப் போன்ற களங்கமில்லாத மனம்.

சாப்பிடும் கூடத்தை மூவரும் அடைந்தார்கள். இதற்குள்ளாகவே ஜெயஸ்ரீ, பவானி வந்திருப்பதைச் சுவாமிநாதனுக்குத் தெரிவித்து விட்டாள். அவள் வருவதைக் கவனித்த சுவாமிநாதன் ’வாம்மா ! நீ இந்தப் பக்கமே வருவதில்லையே’ என்று அழைத்துப் பேசினார். கொஞ்சம் ஓவல்டின் கரைத்து மேஜை மீது தயாராக இரண்டு தம்ளர்களில் வைத்திருந்தார். ”சாப்பிடு குழந்தை” என்று பாலுவிடமும் பவானி யிடமும் கொடுத்தார்.

”எதற்கு? அதுவும் மணி எட்டடிக்கப் போகிறது. வேளை சமயம் இல்லாமல் சாப்பிடுவதா?” என்று சிரித்துக் கொண்டே கூறினாள் பவானி.

சுவாமிநாதன் அதற்குப் பதில் சொன்னார் : ”இல்லாவிட்டால் நீ சாவகாசமாய் எங்கே எங்கள் வீட்டுக்கு வரப் போகிறாய்? நீ தான் வெளியில் அதிகம் வருவதே இல்லையே….. அதுவும் நல்லது தான் அம்மா. கண்ட வேளைகளில் பெண்கள் வெளியில் திரியாமல் இருந்தால் தான் அவர்களுக்கு மதிப்பும், கௌரவமும் அதிகம் ஏற்படும்…”

பவானி ஒன்றும் பேசாமல் சுவாமிநாதன் பேசுவதைக் கவனித்துக் கொண்டிருந்தாள். பிறகு. ”நான் வருகிறேன். ராதா எங்கே காணோம்? நம் வீட்டுப் பக்கமே வருவதில்லை. அவளைப் பார்த்து மூன்று நான்கு மாசங்களுக்கு மேல் ஆகிவிட்டது. மன்னிகூட அவள் வருவதில்லை என்று குறைப்படுகிறாள்” என்று கூறியவாறு கிளம்பினாள்.

சுவாமி நாதனின் முகம் வாட்டமடைந்தது. ”ராதாவா? அவளுக்கு ஏகப்பட்ட அலுவல்! அவள் இல்லாமல் ஊரில் ஒரு நாடகம், சங்கீதக் கச்சேரி, சினிமா சங்கங்கள், கடற்கரை ஒன்றும் வளராதாம். எங்கே யாவது எதற்காவது போயிருப்பாள். அவளை இப்படியே விடக் கூடாதம்மா. சீக்கிரத்திலேயே ஒரு கல்யாணத்தை பண்ணி ஆக வேண்டும்” என்றார் சுவாமிநாதன்.

“அதுவும் சாமானியமாக நடந்து விடுகிற காரியமா சுவாமி? ராதாவுக்கு ஒரு புருஷனைத் தேடிப் பிடித்து நீங்களும், நானும் கல்யாணம் பண்ணி வைத்துவிட முடியுமா? அவளே தேர்ந்தெடுத்துச் சொல்லப் போகிற வனைத்தான் நாம் அவளுக்குக் கல்யாணம் பண்ணி வைக்கும்படி இருக்கும்” என்றார் ஸ்ரீதரன்.

”அவ்வளவு தூரம் அந்தப் பெண்ணுக்கு என்ன தெரியும்? நீங்கள் இதுவரைக்கும் கொடுத்திருக்கிற செல்லம் போதும். அந்த அளவுக்கு வேறு இடம் கொடுத்து விடாதீர்கள்” என்று கேட்டுக்கொண்டார் சுவாமிநாதன்.

பவானி வீடு திரும்பும் போது ராதாவைப் பற்றிப் பலவிதமாக எண்ணமிட்டாள். பாவம், அந்தப் பெண்ணைச் சரியான முறையில் வளர்க்கத் தாயும் தந்தையும் இல்லை. உடன் பிறந்தவர் தம் தொழில் ஒன்றையே பிரதானமாகக் கொண்டவர். அத்துடன் குடும்ப வாழ்க்கையில் அவ்வளவு அனுபவம் அடையாதவர். நல்ல இடத்தில் ராதா வாழ்க்கைப்பட்டுச் சந்தோஷமாக இருக்க வேண்டும்’ என்று நினைத்துக் கொண்டே வீட்டுக்கு வந்தாள்.

2.15.காதல் வேகம் …!

இங்கே வீட்டில், சுவாமிநாதன் ராதாவைப் பற்றிக் கவலையுடன் பேசிக் கொண்டிருக்கும்போது சென்னை நகரின் பிரபலமான ஹோட்டல் அறை ஒன்றில் ராதாவும் மூர்த்தியும் உட்கார்ந்து சிற்றுண்டி சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள் . அடையாறு பக்கம் நாட்டிய நிகழ்ச்சியைப் பார்க்கக் கிளம்பியவர்கள், மழை பிடித்துக் கொள்ளவே நேராக டவுனுக்குச் சென்று, ஹோட்டல் ஒன்றில் நுழைந்தார்கள். அங்கே விதம் விதமாகத் திரியும் ’நாகரிகம்’ மிகுந்த ஆடவர்களும், பெண்களும் கூட்டங் கூட்டமாக வளைய வந்தனர். பீங்கான் கோப் பைகளின் சத்தமும், கலீரென்று எழும் சிரிப்பும், ‘கம்’ மென்று எழும் வாசனையும் அதை சுவர்க்க லோகமாக மாற்றி இருந்தது . அண்மையில் சாக்கடை ஓரங்களில், மழைத் தண்ணீர் சொட்ட வாடும் மக்களும் இருக்கிறார் கள் என்பதை ஹோட்டலுக்குள் இருந்த ஒரு சிறு கூட்டம் அறவே மறந்து இருந்தது என்று கூடச் சொல்லலாம்.

மூர்த்தியும் ராதாவும் அறையை விட்டு வெளியே வந்தார்கள். சற்றுத் தொலைவில் நாகராஜன் தன் வியாபார நண்பருடன் பேசிக்கொண்டே ஒரு மேஜை அருகில் உட்கார்ந்திருந்தான். ராதா இரண்டடி பின் வாங்கினான்.

“இப்படி வாருங்கள். அவர் என் அண்ணாவுக்குத் தெரிந்தவர். நாம் இப்படி வெளியில் சுற்றுவதைப் பார்த்தால் ஏதாவது…” என்று மெதுவாகச் சொல்லிக் கொண்டே அறைக்குள் சென்றாள் ராதா மறுபடியும்.

“ஓகோ! யார் அவர்?” என்று கேட்டான் மூர்த்தி.

‘கோடம்பாக்கத்தில் தான் இருக்கிறார். ரொம்பவும் தெரிந்தவர்: அவர் மனைவி ஒரு நிரந்தர நோயாளி. அவருக்கு ஒரு தங்கை இருக்கிறாள். விதவை. பார்ப்ப தற்கு ரொம்பவும் நன்றாக இருக்கிறாள்….பாவம்…”

“அப்படியா? இவ்வளவு ‘சோஷியலாக’ இருக்கிற மனுஷர், தங்கைக்கு ஏன் மறுமணம் செய்து வைக்கக் கூடாது?” |

“அவர் செய்து வைத்தாலும், தங்கை சம்மதிக்க பாட்டாளே. அவள் என்னவோ இப்பொழுதே அறுபது வயசு பாட்டி மாதிரி பூஜையும், பக்தியும் பிரமாதப் படுத்துகிறாள். எனக்கு அதெல்லாம் கட்டோடு பிடிப்பதில்லை .. “

“பிடிக்காவிட்டால் போகிறது.”

”உனக்கு இன்னும் கல்யாணமே ஆகவில்லையே…. இனிமேல் தானே ஆகப்போகிறது. பிறகு தான் பக்தி, அது இது என்று ஏற்படும்.”

ராதா. வாசல் திரையைத் தள்ளிக் கொண்டே வெளியே எட்டிப் பார்த்தாள். நாகராஜன் அங்குமில்லை.

“வாருங்கள் போகலாம்…” என்று கூறியதும் மூர்த்தியும், அவளும் வெளியே வந்தார்கள். மழை பெய்து தரையில் ஒரு ஓரமாக ஜலம் தேங்கிக் கொண் டிருந்தது . தவறிப் போய் ராதா தண்ணீரில் காலை வைத்துவிட்டாள். ‘ஐயையோ!” என்று சொல்லிக் கொண்டே அவள் தண்ணீரைத் தாண்டப் போக மூர்த்தி அவள் கீழே விழுந்து விடப் போகிறாளே என்று கைகளைப் பலமாகப் பிடித்துக் கொண்டான்.

வெகு சமீபத்தில், வக்கீல் வேதாந்தத்தின் கார் நின்று கொண்டிருந்தது. பழக்கமான குரல் அருகில் கேட்கவே. டாக்டர் காமாட்சி வெளியே எட்டிப் பார்த்தாள். ராதாவை அவளுக்குத் தெரியும். ‘என்ன அப்பா இது? டாக்டர் ஸ்ரீதரனின் தங்கை தானே, அந்தப் பெண்? கூட இருக்கிற பையன் யார் என்று தெரியவில்லையே? உம்… ”

வேதாந்தம் வெளியே பார்த்தார். மூர்த்தியும் ராதாவும் தொலைவில் சென்று விட்டார்கள்.

“அவள் தான் அம்மா! அந்தப் பையன் யார் என்று தெரியவில்லையே! அறியாத பெண் இப்படி இந்த ஊரில் தெருவில் … டாக்டர் ஸ்ரீதரனுக்கு ஒன்றுமே தெரியவில்லை. வயசு வந்த பெண்ணை எதற்கு வீட்டில் வைத்துக் கொண்டிருக்க வேண்டும்? பணமா இல்லை? காலாகாலத்தில் கல்யாணத்தைப் பண்ணி விடுவது தானே… அவன் யாராக இருக்கும்?…” என்று திருப்பித் திருப்பிக் கேட்டார் வேதாந்தம்.

“யாரோ” என்று சற்று கோபத்துடன் சொன்னாள்.

விஷயம் விபரீதமாக வளர்ந்து கொண்டே போயிற்று. வீட்டாருக்குத் தெரியாமல் ராதாவும், மூர்த்தியும் கடற்கரையில் சந்தித்தார்கள். சினிமாவுக்குப் போனார்கள். நாடகம் பார்த்தார்கள். ஹோட்டலுக்குப் போனார்கள். இவர்களின் காதல் – நாடகம் ரகசியமாக நடக்கிறது என்றே அவர்கள் நினைத்துக் கொண்டிருந்தார்கள்.

சென்னையில் தன் தமையனைத் தெரிந்தவர்கள் அநேகர் என்பதை ராதா அறவே மறந்து போனாள். காதலின் வேகம் எல்லாவற்றையும் மறக்கச் செய்து விடுமோ என்னவோ ! மூர்த்திக்குக் கவலை இல்லை. அவனை அந்த ஊரில் தெரிந்தவர்கள் கோபியும் அவன் காரியாலயத்தைச் சேர்ந்த ஒரிருவரும்தான்.

டாக்ஸியில் போய்க் கொண்டிருக்கும் போது மூர்த்தியை ராதா கேட்டாள்: ”நீங்கள் எங்கள் வீட்டுக்கு ஒரு நாள் வாருங்களேன். அண்ணாவுக்கு அறிமுகப் படுத்துகிறேன்” என்றாள்.

”எதற்கு?” என்றான் மூர்த்தி.

“எதற்கா? நாம் இப்படியே இருந்து விட முடியுமா? நாலு பேர் அறியக் கல்யாணம் பண்ணிக் கொள்ள வேண்டாமா? இப்படி ஒளிந்து ஒளிந்து நடப்பது எனக்குப் பிடிக்கவே இல்லை …”

”கல்யாணமா? அதற்கு இப்போது என்ன அவசரம்?” ராதா கலீரென்று சிரித்தாள். பின்னே அறுபது வயசிலா கல்யாணம் பண்ணிக் கொள்வார்கள்?”

“வருகிறேன் ராதா! உன் வீட்டில் இருக்கிறாரே அந்தக் கிழவர், அவரைக் கண்டாலே எனக்குப் பிடிக்க வில்லை !”

”உங்களுக்கு. என்னைத்தானே பிடிக்க வேண்டும்! அந்தக் கிழவரை இல்லையே? அவர் பாட்டுக்கு இருந்து விட்டுப் போகிறார்” என்றாள் ராதா சிரிப்புக்கிடையே.

முன்னைப் போல கார் அவர்கள் வீட்டு வாசலில் வந்து நிற்கவில்லை. வீட்டுக்குச் சற்றுத் தொலை விலேயே நின்றது ராதா இறங்கினாள். பிறகு . ‘டாடா’ ’பை பை’ என்று கைக் குட்டையை ஆட்டிக் கொண்டே வீட்டை நோக்கி நடந்தாள்.

இதைக் ‘ காம்பவுண்ட்’ சுவர் ஓரமாக மறைந்திருந்து கவனித்த சுவாமிநாதன், ராதா உள்ளே சென்றதும் பின்னால் சன்றார்.

”எங்கேயம்மா போய்விட்டு வருகிறாய்?” என்று கேட்டார்.

”கொலுவுக்கு. வருகிற வழியிலேயே சுண்டலை எல்லாம் தின்று விட்டேன்!” என்று பச்சையாகப் புளுகினாள் ராதா.

காதலின் வேகம் அப்படிப் பட்டது போலும்!

2.16.செல்வப்பெண் ராதா

வக்கீல் வேதாந்தம் தம் வீட்டு அறையில் மேலும் கீழுமாக உலாவிக் கொண்டிருந்தார். பத்து தினங்களுக்கு முன்பு ஹோட்டல் வாசலில் ராதாவையும், மூர்த்தியையும் பார்த்த அவர். அதன் பிறகு ஒரு சினிமாவிலும் மெரினா கடற்கரையிலும், வேறொரு ஹோட்டலிலும் பார்த்து விட்டார். அந்தப் பிள்ளை யார்?” என்று எப்படியாவது விசாரித்துத் தகவல் சேகரிக்க முயன்றார். இதற்குள் ஊரில் ராதாவைப் பற்றிப் பல தினுசாகப் பேச்சுக்கள் அடிப்பட்டன. அதனால் மேலும் அவர் இதைப்பற்றி யாரிடமும் விசாரிக்கக் கூடாது என்று தீர்மானித்து. தாமே டாக்டர் ஸ்ரீதரனிடம் இதைப் பற்றிப் பேசி ஒரு ஏற்பாடு செய்யவேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டார். இதை அவர் தம் மகளிடம் கூறியதும், ”அப்படித்தான் செய்ய வேண்டும் அப்பா ! நீங்களே இதைப் பற்றி அவரிடம் சொல்லுங்கள். நான் கூறினால் அவ்வளவு நன்றாக இருக்காது. நீங்கள் வயதிலும், அனுபவத்திலும் பெரியவர். நீங்கள் சொல்வது தான் நல்லது” என்றாள் காமாட்சி.

வேதாந்தத்துக்கு அவள் கூறுவது சரியென்று தோன் றியது. ஆகவே காரில் டாக்டர் ஸ்ரீதரனின் வீட்டை நோக்கிக் கிளம்பினார் அவர், அங்கு அவர் போய்ச் சேர்ந்தபோது டாக்டர் வீட்டில் இல்லை. சுவாமி நாதன் மட்டுமே உட்கார்ந்திருந்தார். சில மாதங்களுக்கு முன் பார்த்தபோது அவர் தெம்பாகவும் திடமாகவும் காணப்பட்டார். திடீரென்று வயசு அதிகமாகி விட்டவர் போல் அவர் தோற்றத்தில் ஒரு மாறுதல் ஏற்பட் டிருந்தது. வேதாந்தத்தைப் பார்த்ததும் அவர் வாருங்கள். ரொம்ப நாளாயிற்று உங்களைப் பார்த்து” என்று வரவேற்று. அவரை உட்காரும்படி கூறினார்.

“எங்கே இப்படி? டாக்டரைப் பார்க்க வந்தீர்களா? வீட்டில் மகள் சௌக்கியந்தானே?” என்று விசாரித்தார் சுவாமிநாதன்.

” எல்லோரும் சௌக்கியமாகத்தான் இருக்கிறோம். டாக்டரைப் பார்க்க வேண்டும் என்றுதான் வந்தேன். சில விஷயங்கள் பேச வேண்டும்…”

”அவர் எங்கே வீட்டிலிருக்கிறார்? குடும்பப் பொறுப்பு ஒன்றையுமே அவர் வகிக்கிறதில்லை. ’நீ என்ன செய்கிறாய்? குடும்பத்துக்கு எவ்வளவு செலவாகிறது’ என்றெல்லாம் கேட்பதில்லை. நானாகவே வரவு செலவை அவரிடம் ஒப்பித்தால் இருக்கட்டும் பார்த்துக் கொள்ளலாம் என்ன அவசரம் இப்போது என்கிறார்.”

வேதாந்தம் யோசனையில் மூழ்கி உட்கார்ந்திருந்தார். பிறகு. ஆமாம். வயசு தங்கை ஒருத்தி வீட்டில் இருக்கிறாளே இதையெல்லாம் அவளைக் கவனிக்கச் சொல்லக் கூடாதா?” என்று கேட்டார்.

“ராதாவா? அந்தப் பெண், தான் ஒரு குடும்பத்தில் பிறந்தவள் என்றோ , அதைப் பற்றிய பொறுப்பு தனக்கு உண்டு என்றோ நடந்து கொள்ளவில்லை. இஷ்டப்படி வெளியில் போகிறதும், வருகிறதும்.” சுவாமிநாதன் இவ்விதம் ராதாவைப் பற்றித்தானே அன்னியரிடம் கூறியதை நினைத்து மனதுக்குள் வருந்தினார்.

“அதைத்தான் கேட்க வந்தேன் ஐயா! வயசு வந்த பெண்ணை ஒரு இடத்தில் கல்யாணம் பண்ணிக் கொடுத்து விடவேண்டும் – வீட்டிலே அதைப் போற்றி வளர்க்க- அதாவது நாலும் தெரியும்படி வளர்க்க- எப்பொழுது ஒரு பெண் துணை இல்லையோ நாம் ஏன் அதைக் கன்னியாக வைத்துக் கொண்டிருக்க வேண்டும்?” வேதாந்தம், சிறிது உணர்ச்சி வசப்பட்டே பேசினார்.

“டாக்டருக்கு அந்த எண்ணமே இன்னும் ஏற்பட வில்லை. தம் மகள் ஜெயஸ்ரீயைப் போல் ராதாவும் ஒரு குழந்தை என்கிற நினைவு அவருக்கு.”

வேதாந்தம் விஷயத்தைப் பச்சையாகக் கூறவில்லை. யாரோ ஒரு பிள்ளையுடன் அந்தக் குழந்தையைப் பார்த்தேன். ஒரு இடத்தில் மட்டும் இல்லை. பல இடங்களிலும் பார்த்தேன். என் மனசுக்கு ஒன்றும் சரி யாகத் தோன்றவில்லை.

சுவாமிநாதன் மௌனமாகவே உட்கார்ந்திருந்தார். அவர் மனத்தில் வேதனை நிறைந்திருக்கிறது. பேச முடியாமல் உணர்ச்சிகளை மனத்தில் புதைத்துக் கொண்டு அவர் உட்கார்ந்திருக்கிறார் என்பது வேதாந்தத்துக்குப் புரிந்தது.

“நான் இப்படிச் சொல்கிறேனே என்று வருத்தப் படாதீர்கள். டாக்டருடைய குடும்ப நண்பன் நான். அவரைச் சிறு பிராயத்திலிருந்து அறிந்தவன். இந்தக் குழந்தை ராதாவுக்கு காப்பிட்ட அன்று என் மனைவி வந்திருக்கிறாள் இந்த வீட்டுக்கு!”

“அப்படியெல்லாம் உங்களை நான் தவறாகப் புரிந்து கொள்ளவில்லை. மனசைச் சங்கடப்படுத்தும் விஷயமாக இருக்கவே எனக்கு வருத்தமாக இருக்கிறது. டாக்டர் வந்ததும் அவரிடம் கூறி ஏதாவது ஏற்பாடு செய்கிறேன்” என்றார் சுவாமிநாதன். வேதாந்தம் மனத்தில் இருந்த பாரம் நீங்கப்பட்டவராகக் கிளம்பிச் சென்றார்.

சுவாமிநாதன் அந்த வீட்டுச் சமையற்காரர் மட்டும் அல்ல. அந்தக் குடும்பத்தினரின் நம்பிக்கைக்குப் பாத்தரமான ஒரு நண்பர் அவர். வீட்டிலே பெண் துணை இல்லாமல் இருக்கையில் தாயும் தந்தையுமாக இருந்து. இரண்டு பெண் குழந்தைகளை வளர்த்து வருகிறவர். ‘கல்லூரியில் சிறு சம்பவம் நடந்தாலும். தன்னிடம் ஒன்றுவிடாமல் கூறும் ராதாதான் எப்படி மாறிவிட் டாள். ஒவ்வொன்றையும் மறைக்க அவளுக்குச் சாமர்த் தியம் வந்து விட்டது. இப்படி மறைத்து வைத்துப் பாழும் பெண் ஏதாவது ஆபத்தில், மானக்கேட்டில் சிக்கிக் கொண்டுவிட்டால் என்ன பண்ணுவது? டாக்டர் பூதானின் நற்பெயரும், அவன் புகழும் என்னாவது? ராதாவின் வாழ்க்கை தான் என்ன ஆகும்?” என்று (வேதனை துடிக்க நினைத்துக் கொண்டே உட்கார்ந்திருந்தார் அவர்.

வெளியே சென்றிருந்த டாக்டர் வீட்டுக்கு வந்ததும் சுவாமி நாதன் உற்சாகம் இல்லாமலேயே அவருக்கு உணவு பரிமாறினார். தினம் டிஸ் பென்ஸரி’க்கு வரும் நோயாளிகளைப் பற்றியும் மற்ற விஷயங்களையும் விசாரித்து உற்சாகத்துடன் பேசும் சுவாமிநாதன், மௌனமாக எதிலுமே அக்கறை இல்லாதவரைப்போல இருப்பதைப் பார்த்து ஸ்ரீதரன், “ஏன் ஒரு மாதிரியாக இருக்கிறீர்கள்?” என்று விசாரித்தார்.

சுவாமிநாதன் வேதாந்தம் வந்து போனதை அறிவித்தார். பிறகு அவர் ராதாவைப் பற்றிச் சொல்லியதையும் நாசூக்காகக் குறிப்பிட்டார். ”இப்படியே நாம் இருந்து விட்டால் ராதாவின் கதி எப்படி ஆதமோ” என்று வருத்தம் தொனிக்க அவர் கூறியபோது ஸ்ரீதரனே சுவாமிநாதன் ராதாவிடம் கொண்டிருந்த அன்பின் ஆழத்தை நினைத்து ஆச்சரியம் அடைந்தார். அந்த ஆச்சரியம் சடுதியில் மறைந்து விட்டது. தான் இவ்வளவு காலம் வரையில் ராதாவின் கல்யாண விஷயத்தில் அக்கறை செலுத்தாது இருந்த தவறை உணர்த்து ராதாவையே அவள் விரும்பும் பிள்ளையைப் பற்றிக் கேட்டுத் தெரிந்து கொள்ள அவளைத் தேடிச் சென்றார்.

மாடி அறையில் ராதா சோபா ஒன்றில் ஒய்யாரமாகச் சாய்ந்திருந்தாள். தலை நிறையச் சூடி இருந்த மல்லிகை மலர்களின் மனம் ‘கம்’ மென்று எழுந்தது. வெள்ளையில் சரிகைக்கரை போட்டிருந்த படவை உடுத்தி, இளம் சிவப்பு வர்ணச் ‘சோளி’ அணிந்திருந்தாள் அவள். முதுகில் புரளும் பின்னலை எடுத்து முன்புறம் போட்டு, அதில் கட்டியிருந்த ரிப்பனை முறுக்கிய படி மெல்லிய குரலில் பாட்டு ஒன்றைப் பாடிக் கொண்டிருந்தாள் அவள்.

காதலெனும் தீவினிலே ராதே ! ராதே – அன்று
கண்டெடுத்த பெண்மணியே ராதே ! ராதே!
காதலெனும் சோலையிலே ராதே ! ராதே – நின்ற
கற்பகமாம் பூந்தருவே ராதே ! ராதே!

என்னும் பாட்டு மெதுவாக இனிமையாகக் கேட்டுக் கொண்டிருந்தது .

ஸ்ரீதரன் சிறிது நேரம் பாட்டில் லயித்து அங்கேயே நின்றிருந்தார். பாட்டு முடிந்ததும் அறைக்குள் சென்று, அவள் எதிரில் இருந்த சோபாவில் உட்கார்ந்தார்.

திடீரென்று அண்ணா வந்ததை அறிந்ததும் ராதா திடுக்கிட்டு நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டாள். அவள் சற்று முன் பாடிய பாட்டை நினைத்தபோது அவளுக்கே வெட்கமாக இருந்தது.

ஸ்ரீதரன் தன் சகோதரியைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே ”என்ன அம்மா! என்னைக் கண்டதும் பாட்டை நிறுத்தி விட்டாய்?” என்று கேட்டார்.

”பாட்டா?… என்னவோ அந்தப் பாட்டு எனக்கு மிகவும் பிடித்திருந்தது.”

”என்ன பாட்டு அது? ‘காதலெனுந் தீவினிலே ராதே ராதே!’ என்ற பாட்டல்லவா? காதலைப் பற்றிக் கூட உனக்குத் தெரிந்து விட்டது!”

”போங்கள் அண்ணா! என்னைக் கேலி செய்யாதீர்கள்!” என்றாள் ராதா. அவள் முகம் வெட்கத்தால் சிவந்து காணப்பட்டது.

“எனம்மா சீக்கிரம் உனக்கு கல்யாணம் பண்ணி விடலாம் என்று நினைக்கிறேன். உன்னைப் பற்றி ஒரு விஷயமும் கேள்விப் பட்டேன் ..”

“என்ன?” என்பது போல் ராதா அவரைப் பார்த்தாள்.

”நீ யாருடனோ சிநேகிதமாக இருக்கிறாயாம். அடிக்கடி அவனுடன் வெளியில் போவதாகக் கேள்விப் பட்டேன்…”

ஸ்ரீதரன் விஷயத்தை மறைக்காமல், சுற்றி வளைத்துப் பேசாமல், நேராகவே கேட்டுவிட்டார்.

ராதா முதலில் பதில் கூறவே தயங்கினாள். பிறகு வெட்கத்தோடு தலையைக் குனிந்து கொண்டு. ”வாஸ்தவம் தான் அண்ணா ! அவரை எனக்குப் பிடித்திருக்கிறது…” என்றாள்.

“சரிதான் அம்மா ! அந்த ‘ அவர்’ யார் என்ன வென்பதை நான் தெரிந்து கொள்ள வேண்டும். நம் வீட்டுக்கு வரச் சொல்லி அழைப்பது தானே?”

ராதா தனக்குள் மெதுவாகக் சிரித்துக்கொண்டாள். ”ஆகட்டும் அண்ணா , சீக்கிரமே அழைத்து வருகிறேன்.” ஸ்ரீதரன் அறையை விட்டு வெளியே போனதும் ராதாவின் உற்சாகம் கரை புரண்டு ஓட ஆரம்பித்தது.

”மாதரசே செல்வப் பெண்ணே ராதே! ராதோ…”

என்று தொடர்ந்து பாட ஆரம்பித்தாள். அவள் செல்வப் பெண் என்பதை நினைத்தபோது அவள் மனம் இறுமாப்பு அடைந்தது. தன்னைத் தேடி. தன் மனத்தில் வரித்திருப்பவனைப் பற்றிய விவரங்களை அறிய வந்த ஸ்ரீதரனுக்குத் தான் செல்வத் தங்கைதான் என்று நினைத்து ஆனந்தமடைந்தாள்.

2.17.கபடச் சிரிப்பு

சுமதி அன்று பள்ளிக்கூடத்திலிருந்து வரும்போதே சோர்வுடன் வந்தாள். நேராக மாடிக்குச் சென்று கட்டிலில் படுத்து விட்டாள் அவள். மணி ஐந்தரைக்கு மேல் ஆகியும் சுமதி பள்ளிக்கூடத்திலிருந்து வரவில்லையே என்ற கவலையினால் பவானி தோட்டக்காரன் கோபாலனை விசாரித்தாள். மாலை நாலரை மணிக்கே சுமதி வந்து விட்டதாகக் தெரிவித்தான் அவன். கோமதி துணிமணிகள் வாங்க கடைத்தெருவுக்குச் சென்றிருந்தாள். பவானி. உள்ளம் வாட மாடியில் சென்று பார்த்தாள் அங்கே கட்டிலில் படுத்திருந்தாள் சுமதி. மெதுவாக அவள் நெற்றியில் கை வைத்துப் பார்த்தாள் பவானி. உடம்பு நெருப்பாகச் சுட்டது. லேசான முனகலுடன் சுமதி கண்ணை மூடிப் படுத்திருந்தாள். ‘நாலைந்து நாட்களாகச் சரிவரச் சாப்பிடாமல். எதிலும் உற்சாகம் இல்லாமல் அவள் இருந்தது பவானிக்கு அப்பொழுதுதான் நினைவுக்கு வந்தது. இதைப்பற்றி கோமதியிடம் அவள் இரண்டு மூன்று தடவைகள் சொன்னாள். “எல்லாம் சாப்பிடுவாள் இதற்கெல்லாம் ஒரு வைத்தியமா?” என்று கூறிவிட்டு கோமதி அலட்சியமாக இருந்து விட்டாள்.

பவானி, கட்டிலில் கிடந்த போர்வையை எடுத்து உதறிச் சுமதிக்குப் போர்த்தி விட்டாள்.

கீழே சென்று சிறிது காப்பியைச் சுட வைத்து எடுத்து வந்தாள். மெதுவாக, “சுமதி! சுமதி! இதைச் சாப்படு அம்மா. உனக்கு உடம்புக்கு என்ன?” என்று கேட்டாள்.

யாரோ கிணற்றுக்குள்ளிருந்து பேசுவது போல் இருந்தது சுமதி பேசிய வார்த்தைகள். “அத்தை! எனக்குத் தலையை வலிக்கிறது. எங்கோ போகிற மாதிரி இருக்கிறது அத்தை. டாக்டரை வர வழையேன்….”

பவானி அவசரமாக டாக்டர் ஸ்ரீதரனைப் போனில் கூப்பிட்டாள். ”குழந்தைக்கு ஜுரம் அடிக்கிறது. நூற்று மூன்றுக்கு மேலே இருக்கலாம். உடனே வர வேண்டும்” என்று கேட்டுக் கொண்டாள்.

காலையில் டாக்டரிடம் சுவாமி நாதன் ராதாவின் விஷயத்தைக் கூறினார். அன்று மாலையே அவர்கள் வீட்டுக்கு ராதா. மூர்த்தியை யாரும் எதிர்பாராத விதமாக அழைத்து வந்தாள்.

“அண்ணா ! இவர் தான் மூர்த்தி என்கிறவர்” என்று கூறி, அவன் வேலை பார்க்கும் அலுவலகத்தைப் பற்றியும் தெரிவித்தாள். டாக்டர் ஸ்ரீதரன் மூர்த்தியை ஒரு கணம் நிதானித்து நிமிர்ந்து பார்த்தார்.

‘உட்காருங்கள். நீங்கள் இருப்பது சென்னையிலா? பெற்றோர் எங்கே இருக்கிறார்கள்?” என்றும் விசாரித்தார்.

இதற்குள் சுவாமிநாதன் ஆவலே உருவாக அவசரத்துடன் ஹாலுக்கு வந்தார். ஆசையுடனும், ஆர்வத்துட னும் தான் வளர்த்த ராதாவின் கரம்பிடிக்கப் போகும் புருஷனைப் பார்த்தார். டாக்டர் ஸ்ரீதரனைப் பார்த்துப் புன்முறுவல் பூத்த மூர்த்தி, சுவாமிநாதனைப் பார்த்த தும் முகத்தைச் சுளித்துக் கொண்டான்.

“ஆமாம், உங்கள் குடும்பத்தில் பெரியவர்கள் இருக்கிறார்களா? கல்யாண விஷயமாக யாரைக் கலந்து பேச வேண்டும்? விலாசம் கொடுங்கள். எழுதுகிறேன்” என்று கேட்டார் ஸ்ரீதரன்.

மூர்த்தி ஒரு மாதிரியாகச் சிரித்தான்.

“எனக்குத் தாய் தந்தை இல்லை. மாமாவும் மாமியும் பசுமலையில் இருக்கிறார்கள். அவர்கள் தான் நெருங்கிய உறவினர்கள்.”

“சரி, அவருக்கே எழுதுகிறேன்.”

“அதுவும் அவசியமில்லை. மாமா அநேகமாக என் விவகாரங்களில் தலையிட மாட்டார். உனக்குப் பிடித்த பெண்ணாக வந்தால் சொல். கல்யாணம் பண்ணி வைக்கிறேன் என்று தான் சொல்லுவார்.”

“அப்போ உங்கள் மனசுக்கு எங்கள் ராதாவைப் பிடித்திருக்கிறது என்று சொல்லுங்கள்” என்றார் டாக்டர் ஸ்ரீதரன். சிரித்துக் கொண்டு எதிரில் உட்கார்ந்திருந்த ராதாவின் முகம் வெட்கத்தால் சிவந்தது. மேஜை மீது சிற்றுண்டி வைக்கப்பட்டிருந்தது.

நல்ல இடமாகப் பார்த்துக் கல்யாணம் பண்ண வேண்டும். தகுந்த இடத்தில் அவளை ஒப்புவித்து விட வேண்டும் என்றெல்லாம் சுவாமிநாதன் மனத்தில் ஓயாமல் நினைத்துக் கொண்டிருந்தவர். வாயைத் திறந்தும் பல முறைகள் சொல்லி இருக்கிறார். கண் இமைப்பதற்குள் ராதாவுக்குக் கல்யாணம் நிச்சயமாகி விட்டது. அடுத்த பத்து தினங்களுக்குள் அவளுக்குக் கல்யாணமாகி விடும். ஆனால் ராதா, மாமியார் வீடு என்று போகத் தேவை இல்லை. மூர்த்தி அவர்களுட னேயே இருந்து விடுவான் என்றெல்லாம் சுவாமிநாதன் நினைத்துக் கொண்டார். ராதாவும் அவர் கணவனும் தன்னுடனேயே இருப்பார்கள் என்பதில் அவருக்கு பரம திருப்தி.

“பலகாரத்தைச் சாப்பிடுங்கள்” என்று உபசரித்தார் சுவாமிநாதன்.

ஹாலில் அவர்கள் சிற்றுண்டி சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது தான் பவானி, டாக்டர் ஸ்ரீதரனைப் ‘போனில்’ அழைத்தாள் அவர் அவசரமாக எழுந்து உள்ளே சென்று தம் கைப்பெட்டியை எடுத்துக் கொண்டு வெளியே புறப்பட்டார்.

நாகராஜன் வீட்டிலிருந்து ‘ போன்’ வந்திருக்கிறது. சுமதிக்கு ஜுரமாம். பவானிதான் ‘போன்’ பண்ணியிருக்கிறாள். நான் அப்படியே இன்னும் சில நோயாளிகளைப் பார்த்துவிட்டு வருகிறேன்” என்று கூறி, மூர்த்தியிடம் விடை பெற்றுக்கொண்டு கிளம்பினார் டாக்டர்.

‘பவானி’ என்கிற பெயர் மூர்த்தியின் மனத்தில் ஒரு வித அதிர்ச்சியைத் தந்தது. சாப்பிட்டுக் கொண்டிருந்த காப்பியை பாதி அப்படியே வைத்துவிட்டுச் சிறிது யோசித்தான். சென்னை நகரிலே எத்தனையோ பவானிகள் இருப்பார்கள். இதென்ன பைத்தியக்காரத் தனம் என்றுகூட அவன் நினைத்தான். இருந்தாலும் அந்தப் பெயர் அவன் மனத்தில் ஒருவித அச்சத்தையும் சலனத்தையும் உண்டாக்கியது.

செல்வமும் சீரும் நிரம்பிய இந்தப் பெண்ணைக் கல்யாணம் செய்து கொள்வதற்கு முன்பாக ஏதாவது தடங்கல் நேர்ந்து விடுமோ என்று அஞ்சினான் மூர்த்தி.

“என்ன, யோசனை பலமாக இருக்கிறது?” என்று கேட்டுக் கொண்டே ராதா அவன் அருகில் வந்து நின்றாள். சுவாமிநாதன் ஏதோ அலுவலாக எழுந்து உள்ளே சென்று விட்டார்.

மூர்த்தியின் கம்பீரமான உருவத்தைப் பார்த்துப் பரவசமெய்தினாள் அந்தப் பேதைப் பெண். அவனுடைய ஆழ்ந்த பார்வையும், கபடச் சிரிப்பும் அவள் மனதுக்குப் பிடித்துப் போயிற்று. அவன் மேல் உண்மையான அன்பு – அதாவது காதல் – ஏற்பட்டது
அவளுக்கு.

காதலர்கள் இருவரும் அந்த வீட்டுத் தோட்டத்து ஊஞ்சலில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள் வெகு நேரம்.

நாகராஜனின் வீட்டில் சுமதிக்கு டாக்டர் ஸ்ரீதரன் வந்து பார்த்தபோது ஜுரம் அதிகமாகத்தான் இருந்தது. மருந்து கொடுத்துவிட்டு. ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்ளும்படி பவானியிடம் கூறினார் அவர்.

முதலில் சாதாரண ஜுரம் என்று தான் எல்லோரும் நினைத்திருந்தார்கள். நாலைந்து நாட்களுக்கு அப்புறம் ஜுரத்தின் வேகம் அதிகமாயிற்று. தன் நினைவை இழந்து படுக்கையில் கிழித்த நார் போல் கிடந்த சுமதியைப் பவானியும், கோமதியும் நாகராஜனும் கவலையுடன் பார்த்தார்கள்.

ஸ்ரீதரன் ‘டைபாய்ட்’ ஜூரமாக இருக்கலாம் என்று அபிப்பிராயப் பட்டார். கோமதி வெல வெலத்துப் போய்விட்டாள். அவளுக்குத் தலையைச் சுற்றி மயக்கம் வரும் போல் ஆகி விட்டது.

“அதனால் ஒன்றும் பயமில்லை. மூன்றாவது வாரம் இறங்கிவிடும். பயப்படாதீர்கள்” என்று தைரியம் கூறினார் டாக்டர்.

பவானியின் மனத்தில் சொல்ல முடியாத வேதனை நிரம்பியிருந்தது. வியாதிக்-காரர்களைப் படுக்கையில் படுக்கவைத்துச் சிசுருஷை செய்யவே அவள் பிறந்தவள் போலும்! கணவன் வாசுவைப் பல மாதங்கள் படுக்கையில் வைத்துப் பணிவிடை செய்தாள். அதன் பிறகு கோமதியை மூன்று மாதங்கள் வரையில் கவனித்துக் கொண்டாள். இப்பொழுது சுமதி கிடக்கிறாள். “இந்தப் பாழும் கையினால் யாருக்கும் ஒன்றும் நேரக் கூடாதே!” என்று பவானி மனதுக்குள் குமைந்து போனாள்.

அப்பொழுது இரண்டாவது வாரம் ஆரம்பம். ஜூரம் மும்முரமாக இருந்தது. நோயாளியின் அருகில் அருந்து அல்லும் பகலும் பணி புரிய ஒருவர் தேவை என்பது டாக்டர் ஸ்ரீதரனின் அபிப்பிராயம். இதை அவர் கூறிய போது நாகராஜனும் கோமதியும் ஒரு ‘நர்ஸை’ ஏற்பாடு செய்யும்படி அவரிடம் கேட்டுக் கொண்டார்கள். ஆனால், ஜுரவேகத்தில் பிதற்றும் போது கூட அந்தப் பெண், ”அத்தை அத்தை” என்று அழைப்பதைக் கவனித்த டாக்டர். அருகில் நிற்கும் பவானியைப் பார்த்தார். “ஏனம்மா குழந்தை உங்களிடம் அதிகப் பிரியம் போல் தோன்றுகிறதே, உங்களால் அவளைக் கவனித்துக்கொள்ள முடியுமா? இல்லை. ஆஸ்பத்திரியில் சேர்த்து விடலாமா?” என்று கேட்டார்.

பவானி நீர் நிறைந்த கண்களுடன் அவரை ஏறிட்டுப் பார்த்தாள். “நான் பார்த்துக் கொள்கிறேன். நீங்கள் என்னவெல்லாம் செய்யச் சொல்கிறீர்களோ, அதன் படியே நடந்து கொள்கிறேன். குழந்தையை ஆஸ்பத்திரியில் சேர்க்க வேண்டாம்…” என்றாள்.

தன் தமையனின் குலவிளக்கு அணையாமல் இருக்க வேண்டும் ; அந்த வீட்டிலே இன்பம் நிறைய வேண்டும் என்கிற எண்ணம் ஒன்றே பவானியை நர்ஸாக மாற்றி யது. படித்து அவள் அந்தத் தொழிலுக்கு வரா விட்டா லும், மனத்தில் இருந்த ஆவப் அவளை அத் தொழிலைச் சீக்கிரம் கற்றுக் கொள்ளும்படிச் செய்தது.

பவானி நோயாளியின் அறைக்கு அடுத்த தாழ்வாரத்தில் தனக்கென்று படுக்கை அமைத்துக் கொண்டாள். மாடியை விட்டு அவள் கீழே போவதில்லை. பாலுவைக் கூடப் பாராமல் சுமதியின் அருகிலேயே இருந்து கவனித்து வந்தாள்.

2.18.ராதாவின் கல்யாணம்

ராதாவின் கல்யாண வைபவங்கள் அமர்க்களமாக நடைபெற்றன. பசுமலையிலிருந்து கல்யாணராமன். டாக்டர் ஸ்ரீதரனுக்கு கடிதம் எழுதியிருந்தார். ‘பெண்ணும் பிள்ளையும் மனம் ஒப்பிக் கல்யாணம் செய்து கொள்கிறபடியால், பெரியவர்களாகிய நாம் அதை உடன் இருந்து நடத்த வேண்டியது ஒன்று தான் செய்யக் கூடியது. மிகவும் சந்தோஷம். நாங்கள் அவசியம் வருகிறோம்’- என்று கடிதம் வந்தது. பிள்ளையைச் சேர்ந்தவர்களில் பெரியவர்களாகச் சிலர் இருக்கிறார்கள். பரவாயில்லை என்று சுவாமிநாதனுக்கு ஒரு மகிழ்ச்சி .

இந்தக் கல்யாண ஏற்பாட்டில் நாகராஜன் வீட்டார் கலந்து கொண்டிருப்பார்கள். ஆனால், எத்தனையோ இரவுகள் பவானி, டாக்டர் ஸ்ரீதரனுடன் போனில் பேசினாள்.

‘குழந்தை தூங்காமல் ரொம்பவும் சிரமப்படுகிறாள். என்ன செய்வது?’ என்று யோசனை’ கேட்டிருக்கிறாள். அவர் கூறியபடியே செய்ததாகவும் பதில் கூறுவாள் பவானி. இந்நிலையில் கோமதியும் நாகராஜனும் மனமிடிந்து உட்கார்ந்திருந்தார்கள். யார் வீட்டில் என்ன நடக்கிறது என்பதே இவர்கள் வீட்டுக்குத் தெரிய வில்லை.

மூன்றாவது வாரம் ஆரம்பித்த பிறகு சுமதியின் நிலையில் மாறுதல் ஏற்பட்டது. ஜுரம் தணிந்து கொண்டே வந்தது. கண்ணை விழித்துத் தன் அருகில் நிற்பவர்களைப் பார்த்தாள் அந்தப் பெண். ஜன்னல் ஓரமாக நின்று கவனித்த பாலுவை அவள் கண்கள் கவனித்தன.

“அத்தை, அத்தை !” என்று பலஹீனமான குரலில் கூப்பிட்டாள் அவள்.

“பாலுவை நான் இனிமேல் ஒன்றும் சொல்ல மாட்டேன் அத்தை. அவன் மனசை நோக வைத்தேன், அதற்கு அனுபவித்து விட்டேன்” என்றாள். பெரிய பாட்டி மாதிரி. அந்தப் பன்னிரண்டு வயசுப் பெண்.

பாலுவிற்கு அறைக்குள் ஓடிப் போய்ச் சுமதியின் முகத்தைப் பரிவுடன் தடவிக் கொடுத்து ஆறுதல் கூற வேண்டும் என்று ஆசை. இரண்டடி வைத்து முன்னால் வந்தவனைப் பவானி தடுத்தாள். பாலு! இந்த அறைக்குள் யாரும் வரக்கூடாது அப்பா! ஒருத்திக்கு வந்து படுகிற பாடு போதும்” என்றாள்.

நோயாளியைக் கவனிக்க வந்த டாக்டர். பவானி சொல்வதைக்கேட்டுச் சிறிது அப்படியே நின்றார். மூன்று வாரங்கள் வரையில் கருமமே கண்ணாக இருந்த பவானியைக் கவனித்தார் ஸ்ரீதரன். கொழுகொழுவென்றிருந்த அவள் கன்னங்களின் திரட்சியில் சிறு வாட்டம் கண்டு சுருங்கியிருந்தது. அவளுடைய கருநீல விழிகள்
தூக்கமின்மையால் சிவந்திருந்தன.

“பவானி! இனிமேல் நீங்கள் உங்கள் உடம்பைக் கவனித்துக் கொள்ள வேண்டும். நோயாளி தூங்கும் போது நீங்கள் விழித்துக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. நன்றாகத் தூங்கி ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள்” என்றார்.

“குழந்தை இனிமேல் பிழைத்து விடுவாள் இல்லையா டாக்டர்?” என்று கேட்டாள் பவானி.

“பிழைத்து விடுவாள் அம்மா. உங்கள் கைராசி ரொம்பவும் நல்லது.”

புன்முறுவலுடன் இப்படிக் கூறிய டாக்டரின் முகத்தைப் பார்த்தாள் பவானி. தெளிவான அந்த முகம் ஏதோ யோசனையில் ஆழ்ந்து இருக்கிற மாதிரி தோன்றியது.

அங்கிருந்த ’பேஸினி’ல் கை அலம்பிக் கொண்டே பவானி கொடுத்த துண்டை வாங்கி கைகளை துடைத்து கொண்டார் அவர்.

பொறுமையும் அன்பும் அழகும் உருவான அந்தப் பெண்ணினுடைய சோகச் சித்திரத்தை அவர் மலர் ஆராய்வதில் சிறிது நேரம் சென்றது. இந்தப் பெண்ணின் வாழ்க்கை இப்படியே கழிய வேண்டியது தானா? தமையன் வீட்டுக்கு உழைக்கிறாள். தனக்காக இல்லா பிறருக்காக உழைக்கும் உழைப்பில் இன்பம் காணுகிறாள். பவானியின் உள்ளம் எவ்வளவு விசாலமானது? மாசு மருவற்று இருக்கும் இந்த உள்ளத்தில் ‘தனக்கு’ என்கிற எண்ணமே இருக்காதா? எத்தனை பெண்கள் இந்தப் பவானியைப்போல நம் நாட்டில் இருக்கிறார்கள்? பெண் என்றால் தியாகம் என்பது தான் பொருளோ?’

கையை மறுபடி மறுபடி அழுத்தித் துடைத்துக் கொண்டே நிற்கும் ஸ்ரீதரனின் முகத்தைப் பார்த்த பவானி, “டாக்டர்!” என்று அழைத்தாள்.

“பவானி உங்களுடன் நான் சாவகாசமாகச் சில! விஷயங்கள் பேசவேண்டும். ஒன்று சொல்ல மறந்து விட்டேன், அடுத்த திங்கட்கிழமை ராதாவுக்கு கல்யாணம். பத்திரிகை வரும். நீங்கள் எல்லோரும் வரவேண்டும். அதற்குள் சுமதிக்கு உடம்பு சரியாகிவிடும். ஆனால் படுக்கையை விட்டு எழுந்திருக்கக்கூடாது”, என்றார் ஸ்ரீதரன்.

அதன் பிறகு இரண்டு மூன்று நாட்கள் வரையில் அவர் வரவில்லை. கல்யாணப் பத்திரிகை மட்டும் வந்தது. மேஜைமீது கிடந்த அந்தப் பத்திரிகையை எடுத்துப் பார்த்தாள் பவானி.

“சௌ. ராதாவை…. சி. சாம்பமூர்த்திக்கு”

விவாகம் செய்து வைப்பதாக இருந்தது. பிள்ளையின் காலஞ் சென்ற தகப்பனாரின் பெயர் மட்டும் காணப் பட்டது. இன்னொரு முக்கியமான விஷயத்தைப்பற்றிக் குறிப்பிட வேண்டும். மூர்த்தி வேலை பார்த்து வந்த ஸ்தாபனத்தைப் பற்றிப் பவானிக்கு ஒன்றும் தெரியாது. ஆகவே சாம்பமூர்த்தியும் மூர்த்தியும் ஒருவர் தான் என்கிற சந்தேகம் பவானிக்கு ஏற்படவே இல்லை.

அன்று மாப்பிள்ளை அழைப்பு . வீட்டிலே எதுவாக இருந்தாலும் ஸ்ரீதரன் டிஸ்பென்சரிக்குப் போகாமல் இருக்க மாட்டார். அன்று காலையிலும் அவர் டிஸ்பென்சரிக்குப் போகும் போது நாகராஜன் வீட்டுக்கு வந்தார். அவசரமாகக் கூடத்தில் நின்று கொண்டே. “வீட்டில் யாரும் பெண்கள் பெரியவர்களாக இல்லை. இருந்தால் வந்து அழைத்திருப்பார்கள். நீங்கள் எல்லோரும் அவசியம் கல்யாணத்துக்கு வர வேண்டும்” என்று கூறிவிட்டுச் சென்றார்.

இரவு ஏழு மணிக்கு மேல் மாப்பிள்ளையை ஊர்வலமாகக் காரில் அழைத்து வந்தார்கள். நாகராஜன் வீட்டு வழியாக ஊர்வலம் வருவது தெரிந்ததும், பவானி கோமதி இருவரும் மாடியிலிருந்து ஊர்வலத்தைப் பார்த்தார்கள். ஊர்வலம் நெருங்கி வந்து கொண்டிருந்தது. அருகில் வரவர பவானி மணமகனைக் கூர்ந்து கவனித்தாள். பசுமலையில் சுமார் இரண்டு வருஷங்களுக்கு முன்பு பார்த்த மூர்த்தியேதான் இவன்!

”ஆஹா! மனித வாழ்க்கையில் தான் எத்தகைய அதிசயங்கள் நடைபெறுகின்றன. இதில் மூர்த்திக்கு ஏற்பட்ட அதிர்ஷ்டம் தான் என்ன? பணக்கார இடத்தில் படித்த- அழகிய- யுவதியைக் கைப்பிடிக்கும் பாக்கியம் இவனுக்கு ஏற்பட்டிருக்கிறது. எவ்வளவு அதிசயமான விஷயம்? டாக்டர் ஸ்ரீதரன் இந்த மாப்பிள்ளையை எங்கே தேடிப் பிடித்தார்?” என்றெல்லாம் எண்ணை வியந்தாள் பவானி.

“பவானி. மாப்பிள்ளை நன்றாகத்தான் இருக்கிறான்” என்று கோமதி தன் அபிப்பிராயத்தை தெரிவித்தாள்.

ஊர்வலம் மெல்ல நகர்ந்து போய்க் கொண்டிருந்தது. கூட்டத்தில் பார்வதி அம்மாளின் தலை தெரிந்தது . பசுமலையில் தன்னிடம் தாயை விட அன்பாக இருந்த அந்த அம்மாளைப் பார்த்துப் பேசவேண்டும் என்று பவானி ஆசைப்பட்டாள்.

கல்யாணராமன் ஸ்ரீதரனுடன் பேசிச் சிரித்தவாறு சென்றார். இடையில் ஜெயஸ்ரீ பட்டுப் பாவாடையும் தாவணியும் அணிந்து இவர்கள் வீட்டுக்கு வந்தாள். நேராக மாடிக்கு வந்து “மாமி , சுமதி எப்படி இருக்கிறாள்?” என்று விசாரித்தாள். அறைக்குள் எட்டிப் பார்த்து விட்டு, அடுத்த அறையில் உட்கார்ந்து பாடம் படித்துக் கொண்டிருந்த பாலுவைப் பார்த்தாள். பாலு முன்னைவிட இப்போது உயர்ந்து இருந்தான்.

“பாலு. எங்கள் வீட்டுக் கல்யாணத்துக்கு வாயேன்” என்று அழைத்த ஜெயஸ்ரீயை ஏறிட்டுப் பார்த்தான் அவன் . ஜெயஸ்ரீயும் வளர்ந்து தான் இருந்தாள்.

“உங்கள் வீட்டுக் கல்யாணத்திற்கு வந்தால் என்ன தருவாய் ஜெயஸ்ரீ?”

”ஆமாம்.குறும்பைப் பார். கல்யாணத்துக்கு வந்தால் என்ன கிடைக்கும்? லட்டும் பாயசமும் கிடைக்கும் …… நாளைக்கு உனக்கும் சுமதிக்கும் கல்யாணம் ஆகும்போது எனக்கு என்ன தருவாய்?” பின்னலில் வைத்துப் பின்னப்பட்டிருந்த பட்டுக் குஞ்சலங்களை முறுக்கியபடி சிரித்துக் கொண்டே கேட்டாள் ஜெயஸ்ரீ.

குழந்தைகளின் பேச்சுக்கு அர்த்தம் கிடையாதுதான். இருந்தாலும் அறைக்குள் இவற்றைக் கேட்டுக் கொண் டிருந்த பவானிக்கு. ஜெயஸ்ரீ கூறியதைக் கேட்டதும் ஆனந்தம் பொங்கியது.

இதற்குள்ளாக ஜெயஸ்ரீயைக் காணவில்லை என்று ஊர்வலத்தில் யாரோ தேடினார்கள். சிறகடித்துப் பறந்து செல்லும் பட்டாம்பூச்சியைப் போல் துள்ளி ஓடும் ஜெயஸ்ரீயை ஜன்னல் வழியாகப் பாலு கவனித்தான். ஜெயஸ்ரீயை அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. ’நல்ல பெண்’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டான் அவன்.

2.19.கல்யாணம் முடிந்தது

கல்யாண வீட்டில் சாப்பிடும் கூடத்தில் ஒரு அறையில் பவானி. கல்யாணராமன், பார்வதியுடன் பேசிக் கொண்டிருந்தாள்.

”உங்கள் மருமகன் அதிர்ஷ்டக்காரர். நல்ல இடத்தில் பெண் கிடைத்தது. டாக்டர் ஸ்ரீதரனைப் போல் நல்ல மனிதர்கள் அநேகர் இருக்க மாட்டார்கள்” என்றாள் பவானி.
”கிடைத்ததை வைத்துக் கொண்டு நன்றாக வாழ்ந்தானானால் அவனுக்குச் சுகம் உண்டு” என்றார் கல்யாணராமன்.

”படித்த பெண்ணாயிற்றே! புருஷனைத் திருத்திக் கொண்டு போகிறாள் ‘ என்றாள் பார்வதி. எல்லோரும் மிகவும் தணிந்த குரலில் பேசினார்கள். பவானி மூர்த்தியைப் பற்றிப் பசுமலையிலேயே அவர்களிடம் ஒன்றும் சொல்லியதில்லை. அவர்களும் பேசியதில்லை. இத்தனை நாட்களைப் போல் மூர்த்தி ஒண்டிக் கட்டை அல்ல. இல்வாழ்க்கைக்குத் திரும்பியிருக்கும் அவன் வாழ்க்கையில் ஒரு திருப்பம் கண்டுதான் ஆகவேண்டும் என்று எர்லோரும் தீர்மானித்தார்கள்.

கல்யாணம் இனிதாக நடந்து முடிந்தது.

கல்யாண வீட்டில் பவானி, பார்வதியுடன் பேசிக் கொண்டிருந்ததைக் கவனித்த சுவாமிநாதன் அவளைத் தனியாக அழைத்துக் கேட்டார். “ஏனம்மா இவர்கள் உனக்கு ஏற்கெனவே தெரிந்தவர்களா? நம் வீட்டு மாப்பிள்ளையையும் உனக்குத் தெரியுமா?” என்று விசாரித்தார் பிள்ளையாண்டான் எப்படி?” என்றும் கேட்டார்.

பவானி தயக்கத்துடன் பதில் கூறினாள். “ஏற்கெனவே பசுமலையில் எனக்குத் தெரிந்தவர்கள் தான். மூர்த்தியைப் பற்றி நான் என்ன சொல்ல இருக்கிறது? மனிதன் புனிதமே உருவானவன் என்றோ குற்றங்களையே செய்ய மாட்டான் என்றோ நாம் நினைப்பது தவறு, பல்வேறு சந்தர்ப்பங்கள் அவனைக் குற்றவாளி ஆக்குகின்றன. அவன் திருந்தி வாழவும் சந்தர்ப்பம் இருக்கிறது. ராதா படித்த பெண். கணவனை ஒழுங்கான பாதைக்கு அவள் திருப்பலாம். இல்லாவிடில் மூர்த்தியே இதற்குள் திருந்தி இருக்கலாம். நடந்த நடந்து விட்டது. குற்றச் சாட்டுக்களையும் குழப்பங்களையும் அதிகப்படுத்தாமல் மூடிக்கொண்டு போவதுதான் நல்லது” என்றாள்.

சுவாமிநாதன் பரந்த நோக்கம் கொண்ட அந்தப் பெண்ணைப் பற்றி வியப்பும் திகைப்பும் கொண்டார். பவானியிடத்தில் அவருக்கு அலாதி விசுவாசமும் மரியாதையும் ஏற்பட்டன.

கல்யாணம் நடந்து முடிந்ததும் மூர்த்தி, ராதாவை அழைத்துக் கொண்டு பல ஊர்களுக்கும் சென்று வந்தான். நாடகத்தில் பார்த்த பெண்ணை மணந்து கொண்ட அவன் சாமர்த்தியத்தை கோபி மெச்சிக் கொள்ளாமல் இல்லை .

ராதாவுக்குக் கல்யாணம் நடந்ததில் வக்கீல் வேதாந்தமும், டாக்டர் காமாட்சியும் சந்தோஷப் பட்டார்கள். சுவாமிநாதன் வேதாந்தத்தினிடம், சமயத்தில் நீங்கள் எச்சரிக்காமல் இருந்திருந்தால் ராதாவின் வாழ்க்கை எப்படி எல்காம் மாறி இருக்குமோ!” என்று கூறினார். நல்லதொன்றைச் செய்ய நாலு பேர்களுடைய தயவு எப்படி பயன்படுகிறது என்பதைக் கண்டு கொண்டார் அவர்.

2.20.மாமரமும் மாங்கனியும்

ஒரு தோட்டம் இருக்கிறது. அதில் உயர்ந்த ஜாதி மாமரம் ஒன்று உண்டு. அம்மரத்தில் அபூர்வமாக அந்த வருஷம் நாலைந்து பழங்கள் தான் பழுத்தன. காய்கள் சிறியவையாக இருந்த முதற்கொண்டே மரத்தின் சொந்தக்காரர் அந்தப் பழத்தின் சுவையை அனுபவிக்க ஆவலுடன் இருக்கிறார். அணிற் பிள்ளைகள் கடித்துப் போடாமல் பார்த்துக் கொள்கிறார். காய்கள் மஞ்சள் நிறம் காணும் போது கட்டும் காவலும் அதிகமாகிறது. கடைசியாகப் பழம் சாப்பிடுவதற்குத் தயாராக இருப்ப தாகத் தோட்டக்காரன் கூறுகிறான் , அவன் பறித்து வந்து கொடுத்த பழங்களைக் கடவுளுக்குப் படைத்து விட்டுத் தான் அவர் உண்கிறார். அதன் சுவையைப் பூராவும் அவரால் அனுபவிக்க முடிகிறது.

இதைப் போலத்தான் இல்லற வாழ்வும் இருக்கிறது. மகனோ, மகளோ , தகுந்த வயதை அடைந்ததும் பெற்றோர் மணமுடித்து வைக்கிறார்கள். காதலனும் காதலியும் மனம் விட்டு ஒருவரோடொருவர் பேசுவதற்குச் சட்டென்று பெரியவர்கள் சந்தர்ப்பம் அளிப்பதில்லை. கல்யாணம் முடிந்தவு டன் ஆடிக்கு மருமகனை அழைக்கிறார்கள். பிறகு தீபாவளி வருகிறது. பின்னர் தைப்பொங்கல் வருகிறது. கணவனும் மனைவி யும் படிப்படியாக மனம் விட்டுப் பழகுகிறார்கள். அன்பு நிதானமாக மாம்பழத்தின் சுவையைப் போல வளருகிறது.

ராதாவும் மூர்த்தியும் கல்யாணம் பண்ணிக்கொண்ட விதமே அலாதியானது. பத்துப் பன்னிரண்டு வருஷங்கள் தம்பதிகள் பழக வேண்டிய முறையில் ஆறே மாதங்களில் அவர்கள் பழகினார்கள்; பேசினார்கள். ‘சீ! வாழ்க்கை என்பது இதுதானோ? இதற்குத்தான் கல்யாணம் என்கிற கால்கட்டைக் கட்டிக் கொண்டோமா?’ என்று மூர்த்தி பல தடவைகள் நினைத்தான்.

ராதாவுக்கும் அவனுக்கும் கல்யாணமாகி ஏழெட்டு மாதங்களுக்குள் மூர்த்தியின் நடத்தையில் பல மாறுதல்களைக் கண்டாள் ராதா. மாதம் அவன் சம்பளத்துக்கு அந்த வீட்டில் செலவு இல்லை. அவனுடைய தேவைகள் அனைத்தையும் ராதா கவனித்துக் கொண்டாள். அவனுக்கென்று பிரத்யேகமான அறை. அந்த அறைக்கு அடுத்தாற் போல் ஸ்நானம் செய்ய அறை இருந்தது. மாடியிலேயே சகல வசதிகளும் நிரம்பி இருந்தன. சாப்பிடும் போது சில நாட்களில் மூர்த்தி கீழே வருவான். அவன் அதிகமாகத் தன் மைத்துனர் ஸ்ரீதரனுடன் பேசுவதில்லை. இருவரும் வெளியே செல்லும்போது தோட்டத்தில் சந்தித்துக் கொள்வார்கள்.

”ஆபீசுக்குக் கிளம்பியாயிற்றா?” என்று சிரித்த வாறு ஸ்ரீதரன் கேட்பார். மூர்த்தி புன்னகையுடன் தலையை ஆட்டிவிட்டுப் போய்விடுவான் .

இப்படியே ஒரு வருஷம் ஆயிற்று.

மூர்த்தியின் நடத்தையில் அவ்வப்போது சில மாறுதல்கள் தெரிய ஆரம்பித்தன. அடிக்கடி பம்பாய்க்கும், கல்கத்தாவுக்கும் அவன் பணம் அனுப்பி வருவது ராதாவுக்குத் தெரிந்தது. ‘அங்கே உறவினர் யாருமே இல்லையே, இவர் யாருக்குப் பணம் அனுப்புகிறார்?’ என்று யோசித்துப் பார்த்தாள் அவள். மூர்த்தி குளிப்பதற்குப் போயிருந்த போது அவன் சொக்காய் ஜேபியில் இருந்த சில முக்கியமான காகிதங்களை எடுத்துப் பார்த்தாள். நாலைந்து மணியார்டர் ரசீதுகள் இருந்தன. பம்பாய்க்கு இரண்டும் கல்கத்தாவுக்கு மூன்றும் அனுப்பப் பட்டிருந்தன. பம்பாயிலிருந்து வந்த ரசீதுகளில் தமயந்தி என்றும் ரோகிணி என்றும் கையெழுத்துக்கள் காணப்பட்டன. கல்கத்தாவில் ஒரு புடவைக் கடையின் பெயர் மற்றொரு ரசீதில் காணப்பட்டது. இன்னொன்றில் நகைக் கடையின் பெயர்.

ராதா பிரமை பிடித்தவள் போல் நின்றாள். தன்னுடைய படிப்பு. அழகு. சாதுர்யம் யாவும் ஒரு சூதாடியிடம் பணயம் வைக்கப்பட்டது போல இருந்தது. வெளியூர்களிலும் இவருக்குப் பெண்களிடம் சிநேகமா?

ராதா தன்னைச் சுதாரித்துக்கொண்டாள். அவசரப் பட்டு வெளியே சொன்னால் விஷயம் ஆபாசமாகிவிடும். அவர் போக்கில் விட்டுத் திருப்ப வேண்டும் என்று தீர்மானித்தாள்.

அன்று இரவு மூர்த்தி வீடு திரும்பும் போது மணி பதினொன்றுக்கு மேல் ஆகிவிட்டது. சுவாமிநாதன் ”உன் புருஷனை இன்னும் காணவில்லையே? எங்கே போயிருக்கிறான்?” என்று ராதாவை விசாரித்தார்.

“எங்கே போனாரோ, எனக்கு அதெல்லாம் ஒன்றும் தெரியாது. உங்களுக்குத் தூக்கம் வந்தால் போய்த் தூங்குங்கள்.”

ராதாவுக்குத் திரும்பத் திரும்ப காலையில் பார்த்த ரசீதுகளின் நினைவே வந்தது. சபலம் நிறைந்த ஓர் ஆணின் மனத்தைப் பற்றிப் பெண்ணால் என்ன புரிந்து கொள்ள முடியும்? வண்டின் குணத்தை மலர்கள் புரிந்து கொண்டிருந்தால், மறுநாள் அந்த வண்டைத் தங்களிடம் அணுக விடுமா என்ன?

கடைசியாக மூர்த்தி வீடு திரும்பினான். நேராகத் தன் அறைக்குள் சென்று சோபாவில் உட்கார்ந்தான் அவன்.

வாசற்படியில் நின்று அவனைப் பார்த்து. ”என்ன. சாப்பிட வருகிறீர்களா?” என்று மட்டுமே கேட்டாள் ராதா.

அவன் தன் இரு கைகளால் தலையைத் தாங்கிப் பிடித்துக்கொண்டு உட்கார்ந்தி-ருந்தான். பதில் ஒன்றும் பேசவில்லை .

ராதா உள்ளே வந்தாள்.

“என்ன இது? இரவு பன்னிரண்டு மணி வரையில் விளக்கு எரிந்து கொண்டிருந்தால் என் அண்ணா என்ன நினைத்துக் கொள்ள மாட்டார்? நாம் இருக்கிறது அவர் வீட்டில் ஞாபகமிருக்கிறதா?” என்று கேட்டாள்.

“நீ சொன்ன பிறகுதான் தெரிகிறது. யார் வீட்டில் இருக்கிறோமென்று, ஏதேது பேச்சு ஜோராக வருகின்ற து?”

கணவனுக்குக் கோபம் வந்திருக்கிறதென்று புரிந்து கொண்டாள் ராதா. சட்டென்று தணிந்து போனாள். “ஆமாம் உங்களுக்கு என்ன கஷ்டம்? ஏன் இப்படியெல்லாம் நடந்து கொள்கிறீர்கள்?” என்று கேட்டுச் கொண்டே சோபாவின் பிடியில் உட்கார்ந்து கொண்டாள் அவள்.

“எப்படி?” என்று ஒன்றும் புரியாதவனைப் போலக் கேட்டான் அவன்.

”முதலில் சாப்பிட வாருங்கள். அப்புறம் பேசலாம்.”

சாப்பிட்ட பிறகு, இருவருமே முன்பு பேசியவற்றை அடியோடு மறந்து போனார்கள். தமயந்தியும் ரோகிணியும் யார்? என்று அவனைக் கேட்டுவிடப் பல முலைகள் முயன்றாள் ராதா. கேட்டிருக்கலாம்; கேட்பதில் தவறில்லை. ஆனால் வீட்டிலே சுவாமி நாதன் இருந்தார். மாடியின் இன்னொரு பக்கத்தில் ஸ்ரீதரன் படுத்திருந்தார். தோட்டத்தில் குடிசையில் ராமய்யா படுத்திருந்தான். இவர்கள் எல்லோருக்கும் இந்த விஷயங்கள் தெரிந்து விட்டால் என்ன செய்வது?

ஒன்றுக்குப் பத்தாகக் கற்பனை கலந்து அவை கோடம்பாக்கம் முழுவதும் பரவுமே! கௌரவமும் கண்ணியமும் வாய்ந்த டாக்டர் ஸ்ரீதரனின் தங்கை புருஷன் ஸ்திரீலோலன் என்று எல்லோரும் ஏசுவார்களே என்றுதான் ராதாவின் வாய் அடைத்துக் கிடந்தது. உள்ளம் குமுற ஆரம்பித்தது. மூர்த்தி தூங்கிய பிறகு கூட அவளுக்குத் தூக்கம் வரவில்லை. வெகு நேரம் வரையில் விழித்திருந்து விட்டு தூங்கப் போனாள் ராதா.

அதிகாலையில் படுக்கையை விட்டு எழுந்து கீழே இறங்கி வந்த ஸ்ரீதரன், சுவாமி நாதனைப் பார்த்து ”இரவு மூர்த்தி எத்தனை மணிக்கு வந்தான்? விளக்கு வெகு நேரம் வரையில் எரிந்து கொண்டிருந்ததே?”, என்று விசாரித்தார்.

சுவாமிநாதன் தயக்கத்துடன் பேசாமல் இருந்தார். பிறகு மெதுவாக “நான் தூங்கி விட்டேன். பதினொன் றரை மணிக்குமேல் இருக்கும். நாலைந்து மாசங்களாக அந்தப்பிள்ளை இப்படித்தான் கண்ட வேளைகளில் வருகிறான்” என்றார்.

ஸ்ரீதரன் சிறிது நேரம் யோசித்தபடி நின்றார். ”இதையெல்லாம் நாம் காதில் போட்டுக் கொண்டால் நன்றாக இராது. பார்க்கலாம்…” என்று கூறியவாறு தம் அலுவல்களைக் கவனிக்கச் சென்றார்.

– தொடரும்…

– முத்துச் சிப்பி (நாவல்), முதற் பதிப்பு: அக்டோபர் 1986, சமுதாயம் பப்ளிகேஷன்ஸ், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *