முத்துச் சிப்பி

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 30, 2024
பார்வையிட்டோர்: 1,059 
 
 

அத்தியாயம் 11-15 | அத்தியாயம் 16-20 | அத்தியாயம் 2.1-2.10

16. டவுன் பஸ்

அடுத்த நாள் காலையில் படுக்கையை விட்டு எழுந்தவுடன் பலானிக்குப் பாலுவை அழைத்துப் போய் வேறு பள்ளிக்கூடத்தில் சேர்த்து விட்டு வரவேண்டும் என்கிற விஷயம் நினைவுக்கு வந்தது. ஆனால் பாலு படுக்கையை விட்டு எழும் போதே கேரம் பலகையைப் பற்றி நினைத்துக் கொண்டே எழுந்தான். அம்மாக்குத் தெரியாமல் மூர்த்தி மாமாவைப் பார்த்து அந்தப் பலகையை வாங்கி வந்து விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டான். எழுந்திருந்து பல் தேய்த்து முடிப்பதற்குள் பாவனி அவனைப் பல தடவைகள் ‘எத்தனை மணிக்குப் பள்ளிக்கூடம் போகவேண்டும்’ என்று கேட்டு விட்டாள்.

பாலு நிதானமாகப் பற் பொடியை இடது கையில் வைத்துக் கொண்டு மதில் சுவர் ஓரமாகப் போய் அடுத்த வீட்டில் எட்டிப் பார்த்தான். மூர்த்தியும், பற்பசையும் ’பிரஷ்’ ஷையும் கையில் எடுத்துக்கொண்டு “என்னடா விஷயம்?” என்று கேட்டுக் கொண்டு பவழ மல்லிகை மரத்தடியில் வந்து நின்றான். பாலு பயத்துடன் உள்புறம் பார்த்து விட்டு, “மூர்த்தி மாமா! கேரம் பல கையை மச்சிலிருந்து எடுத்துத் தருகிறீர்களா?” என்று கேட்டான்.

“ஓ! எடுத்துத் தரேன்.”

“..என்னோடு யார் ஆடுவார்கள்?’ ‘

*பூ! பிரமாதம்! நான் ஆடிவிட்டுப் போகிறேன். இதற்காகக் கவலைப்படுவாயோ?” என்று கேலியாகக் கூறிவிட்டுச் சிரித்தாள் மூர்த்தி.

அதற்குள் சமையலடையிலிருந்து பவானி பாலுவை அழைத்தாள்.

”இன்றைக்கு என்ன… அழுது வடிகிறாய்? பள்ளிக் கூடம் போக வேண்டுமென்றால் உனக்கு அழுகை தான் போ” என்று கூறியதைக் கேட்டதும் மூர்த்தி, ‘ ஏண்டா இன்று பள்ளிக்கூடத்துக்குப் போகிறாயா என்ன?” என்று விசாடத்தான்.

“போகவேண்டும் மாமா. அம்மாவும் தானும் போய் வரவேண்டும். அதுக்காகத்தான் அம்மா ஓடுர அடர்க்களப் படுத்துகிறான்”

அதற்கு மேல் மூர்த்திக்கு அங்கே இருப்புக் கொள்ள வில்லை. அவசரமாகப் பல் தேய்த்து விட்டு உள்ளே சென்று காப்பி அருந்தினான். முதல் வேலையாகப் பரணில் கிடந்த ‘கேரம்’ பலகையை எடுத்துக் கீழே வைத்து விட்டுச் சமையலறைக்குள் சென்று பார்வதியிடம்,

“மாமி! இன்றைக்கு நான் டவுன் வரைக்கும் போக வேண்டிய வேலை இருக்கிறது. சாட்டாட்டுக்கு வரமாட்டேன். எனக்காகக் காத்துக் கொண்டிருக்க வேண்டாம்” என்றான். அதைக் கேட்ட பார்வதி, ”ஏண்டா அட்டா! திருச்சி வரைக்கும். ‘காம்ப்’ போகவேண்டியிருக்கும் என்று நேற்று ராத்திரி சொன்னாயே?” என்று கேட்டாள்.

“நாளைக்குப் போகலாம் என்று இருக்கிறேன் மாமி” என்று சுருக்கமாகக் கூறிவிட்டு, அவன் குளித்து உடை அணிந்து கொண்டு கிளம்பும்போது காலை ஒன்பது மணி ஆகிவிட்டது.

பவானியும் பாலுவும் சாப்பிட்டு விட்டுக் கதவைப் பூட்டிக் கொண்டு கல்யாணராமன் வீட்டுக்குள் வந்தார்கள். அப்பொழுது தான் ஸ்நானம் செய்து விட்டுப் பூஜையில் ஈடுபட்டிருந்த கல்யாணம் ”என்னம்மா வெயில் ஏறி விட்டதே! காலையில் சீக்கிரமே கிளம்பி இருக்க வேண்டும்” என்றார்.

பிறகு பள்ளிக்கூடத்தில் சீக்கிரமே வேலைகளை முடித்துக் கொண்டு வந்து விடும்படியாகக் கூறினார். இருவரும் அவரிடம் விடை பெற்றுக் கொண்டு பஸ் ஸ்டாண்டை நோக்கி நடந்தார்கள்.

பசுமலை பஸ் ஸ்டாண்ட் குளத்தங்கரையின் சமீபத்தில் இருந்தது. குளத்தைச் சுற்றிப் பெரிதும் சிறிதுமாக வளர்ந்திருந்த மரங்களின் நிழலில் கல்பெஞ்சுகள் போட்டிருந்தார்கள். சுமை தாங்கிகளும் இருந்தன. தாக சாந்திக்காக அங்கே இரண்டு மூன்று இள நீர்க் கடைகளும், ஒரு சோடாக் கடையும் இருந்தன. அதைத் தவிர கிழவி ஒருத்தி விற்கும் பனஞ்சாறுக்கு அங்கே ஏகப் பட்ட கிராக்கி.

பவானியும் பாலுவும் அங்கே வந்து சேர்ந்தபோது மணி பதினொன்றாகி விட்டது. ஒன்பதரை மணி பஸ் கிளம்பி டவுனுக்குப் போய்விட்டது. அடுத்த பஸ் பதினான்றே காலுக்கு வரும் என்று சோடாக் கடைக்காரர் அறிவித்தார். மரத்தடியில் கிடந்த பெஞ்சில் இருவரும் உட்கார்ந்தார்கள் .

மினு மினு வென்று பசுமையாக இருக்கும் இள நீர்க் காய்களைச் ‘சதக் சதக்’ கென்று சீவி இள நீரைக் கண்ணாடி ட்ம்ளரில் கவிழ்த்து நிரப்பி அவன் கொடுத்துக் கொண்டிருந்ததைப் பாலு கவனித்துக் கொண்டே உட்கார்ந்திருந்தான். இளநீர்க் காய்களில் இருக்கும் இளந் தேங்காயைத் தின்று, இனிப்பான அந்த நீரைச் சாப்பிடும் அவர்களை அவன் மாறி மாறிக் கவனித்துக் கொண்டிருந்தான். தானும் அந்த மாதிரிச் சாப்பிட வேண்டும் என்று அவனுக்கு சையாக இருந்தது . பவானியும் பாலு அந்தப் பக்கமே பார்த்துக் கொண்டிருப்பதைக் கவனித்தாள்.

”உனக்கு வேணுமாடா? சாப்பிடுகிறாயா?” என்று கேட்டாள்,

“நீயும் சாப்பிடு அம்மா !” என்றான் அவன்.

“நான் என்ன குழந்தையா. வழியில் பார்க்கிறதை யெல்லாம் வாங்கிச் சாப்பிட?” என்றாள் பவானி.

இவர்களின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த கடைக்காரன் மடமட வென்று இரண்டு இள நீரைச் சீவிக் கண்ணாடி டம்ளர்களில் நிரப்பினான்.

“சாப்பிடுங்க அம்மா, குழந்தை சொல்லுது’* என்று சொல்லிக் கொண்டே அவர்களிடம் கொடுத்தான்.

இருவரும் சாப்பிட்டனர். சில்லறை கொடுப்பதற்காகப் பவானி தன் கைப் பையைத் திறந்தபோது, ”வேண்டாம் நான் கொடுத்து விட்டேன்” என்று சொல்லிக் கொண்டு மூர்த்தி அவள் எதிரில் வந்து நின்றான். பவானியின் திகைப்பு அடங்குவதற்கு முன்பு *மூர்த்தி மாமா, மூர்த்தி மாமா ‘கேரம்’ பலகையை படுத்தாச்சா?’ என்று கேட்டுக் கொண்டே பாலு அவன் கைகளைப் பிடித்துக் கொண்டான்.

பஸ் வரும் சத்தம் கேட்டு அங்கிருந்த பிரயாணிகள் எல்லோரும் சுறுசுறுப்படைந்தனர்.

பாலுவின் கையைப் பற்றி அழைத்துக் கொண்டு மூர்த்தி பஸ்ஸில் ஏறி உட்கார்ந்தான். திகைத்த உள்ளத்துடன் பவானி பேச முடியாடல் பஸ்ஸில் ஏறினாள். பள்ளிக்-கூடத்துக்குப் போகிறோமே என்று அவள் அன்று சற்று நாகரிகமாக உடுத்திக் கொண்டிருந்தாள். தினம் தலையை வாரி முடிந்து கொள்கறவள் இன்று ‘பிச்சோடா’ போட்டுக் கொண்டிருந்தாள். கறுப்புக் கரை போட்ட வெள்ளை மில் புடவை கட்டி இருந்தாள். சாதாரணமாக பார்க்கும் போதே எடுப்பாகத் தோற்றமளிக்கும் பவானிக்கு அவை விசேஷ அலங்காரங்களாக அமைந்த மாதிரி இருந்தன, கட்டுக்குள் அடங்காமல் அவள் முன் நெற்றியில் கூந்தல் சுருள்கள் சுருண்டு விழுந்து கொண்டிருந்தன. அவைகளை அவள் எத்தனை முறைகள் கோதிவிட்டுக் கொண்டாலும், மீண்டும் நெற்றியில் விழுந்து அவள் அழகை அதிகப்படுத்தின.

பஸ் புறப்பட்டது. டிக்கட் கொடுக்கிறவரிடம் மூர்த்தி ரூபாயைக் கொடுத்து மூன்று டிக்கெட்டுகள் வாங்கினான். பஸ்ஸில் கூட்டமாக இருந்ததால் பவானி, பாலு. மூவரும் ஒரு பக்கத்தில் உட்கார வேண்டியிருந்தது. பாலுவுக்கு ஒரு பக்கத்தில் பவானி உட்கார்ந்தாள். இன்னொரு பக்கத்தில் மூர்த்தி உட்கார்ந்தான். பவானிக்கு இவையெல்லாம் சற்றும் எதிர்பாராத சம்பவங்கள்.

மூர்த்தி தடவியிருந்த மருக்கொழுந்து செண்ட்டின் மணம் ’கம்’ மென்று நாசியைத் துளைத்தது. பவானி கழுத்து வலியெடுக்கிறமாதிரி ஜன்னல் பக்கமே பார்த்துக் கொண்டிருந்தாள். பாலு மட்டும் தொணதொண வென்று ஏதோ மூர்த்தியுடன் பேசிக்கொண்டிருந்தான்.

பஸ் அடுத்த கிராமத்தின் ‘ஸ்டாண்டில்’ வந்து நின்றது. அங்கேயும் சிற்றுண்டிக் கடைகளும், இளநீர்க் கடைகளும் இருந்தன. அந்த இளநீர்க் கடைக்காரன் கொஞ்சம் வியாபார தந்திரம் தெரிந்தவன். நல்ல வெயிலுக்கு இளநீரில் ஐஸைப் போட்டுக் கொடுத்தான் எல்லோரும் விரும்பிச் சாப்பிட்டார்கள். மூர்த்தி பாலுவுக்கு ஒரு டம்ளர் வாங்கிக் கொடுத்துத் தானும் அருந்தினான்.

“உங்க தங்கச்சிக்கும் வாங்கித் தாங்க சார்!’ என்றான் கடைக்காரன் மூர்த்தியிடம் பவானியை பார்த்து.

“நோ. நோ! தங்கச்சியா?” என்று அசடு வழியச் சொல்லிவிட்டு, “நீங்கள் சாப்பிடு-கிறீர்களா?” என்று கேட்டான் பவானியிடம்.

பவானி, ‘வேண்டாம்’ என்கிற பாவனையாகத் தலையை அசைத்தாள்.

வண்டியில் உட்கார்ந்திருந்த ஒரு ஸ்திரீ பவானியைக் கவனித்தாள்.

“ஏனம்மா! அவர் உன் அண்ணா தானே?” என்று கேட்டாள்.

பவானிக்கு என்ன பதில் கூறுவது என்றே தெரியவில்லை. ‘ஆமாம்’ என்று சொல்லி வைப்பதில் என்ன தவறு என்று நினைத்தாள். ஆகவே அவள். ‘ஆமாம் அம்மா. அவர் என் அண்ணன் தான்” என்றாள் அவளிடம்.

“அது தானே பார்த்தேன். பின்னே ஏனம்மா நீர் சாப்பிடலே நீ” என்று கேட்டாள் அந்தப் பெண்.

“வரும்போது தான் சாப்பிட்டு வந்தேன்” என்று நருக்கமாகவே பதிலளித்தாள் பவானி.

வயது வந்த ஒரு வாலிபனும் பெண்ணும் பழகுவைத பலகம் எப்படியெல்லாம் வேவு பார்க்கிறது? அவன் உன் அண்ணனா, மாமனா, தம்பியா என்று கேட்டுச் சமாதானம் அடைகிறது. அண்ணன், தம்பி என்று சொல்லி விட்டால் திருப்தியுடன் தலையை ஆட்டி அத்தச் சகோதர அன்பை ஆமோதிக்கிறது. மாமன் அத்தை மகன் என்று சொல்லி விட்டால் ’உன் புருஷன் எங்கே? ஓகோ, வேறு ஊரில் இருக்கிறாரோ? ஏதோ அலுவலாக இவர்களுடன் போகிறாயோ’ என்றெல்லாம் திருப்தியடையப் பார்க்கிறது. யாரோ அன்னியனுடன் ஒரு பெண் பழகுகிறாள் என்றால் அதைப்பற்றி இல்லா ததும் பொல்லாதததும் புனைந்து பேசவோ தயங்குவ இல்லை .

பஸ் கிளம்புவதற்கு அறிகுறியாக டிக்கெட் கொடுப்பவர் பஸ்ஸுக்குள் ஏறிச் சில்லறை கேட்க ஆரம்பித்தார். வெளியே நின்றிருந்த மூர்த்தி உள்ளே வந்து உட்கார்ந்தான். பஸ் டவுனை அடையும் வரை அவன் எவ்வளவோ முயன்றும் பவானி அவனுடன் முகம் கொடுத்துப் பேசவில்லை.

17. பஸ் நகர்ந்தது

டவுனில் முனிசிபல் ஹைஸ்கூலில் பாலுவைச் சேர்க்க வேண்டிய விவரங்களை விசாரித்துக் கொண்டு. பவானியும் பாலுவும் பசுமலை திரும்பும்போது மாலை ஆறு மணி ஆகி விட்டது. அன்று பகல் டவுனில் பஸ்ஸை விட்டுக் கீழே இறங்கிச் சற்று தூரம் நடந்து சென்றதும் பவானி ஒரு மரத்தடியில் தயங்கி நின்றாள். பிறகு தைரியத்துடன் மூர்த்தியைப் பார்த்து “நீங்கள் எங்களுக்காக வருகிறீர்களா? இல்லை, உங்களுக்கு ஏதாவது சொந்த வேலை இருக்கிறதா?” என்று கேட்டாள்.

மூர்த்தி உதட்டைப் பற்களால் அழுத்திக் கடித்துக் கொண்டே பவானியைப் பார்த்து ஒரு மாதிரியாகச் சிரித்தான். கபடமும் வஞ்சமும் நிறைந்த அந்த சிரிப்பைப் பார்த்ததும், பவானி மனம் வெறுத்து தரையைப் பார்த்துக் கொண்டு நின்றாள். விதவை பவானி யாருக்காக வாழ்கிறாள்? பாலுவுக்காக. அந்தக் குழந்தை படித்து முன்னுக்கு வந்தால் தான் தனக்கு இன்பம் உ.ண்டு என்று கருதுகிறவள். அவனுக்காகவே உற்றார் உறவினரை விட்டு ஒதுங்கி வாழ முயன்றவள். பின்னால் மூர்த்தி தொடர்ந்து வந்தால் அவள் வாழ்க்கை என்ன ஆவது?

அருகில் நின்றிருந்த பாலுவின் கையைக் கெட்டி யாகப் பற்றிக்கொண்டு பவானி குமுறும் மனத்துடன், ”நான் வருகிறேன். எனக்காக நீங்கள் இவ்வளவு சிரமப் பட வேண்டாம். எனக்குத் துணை அவசியமாக இருந்தால் கல்யாண மாமாவை அழைத்து வந்திருப்பேனே! என் தகப்பனாருக்குச் சமானமாக இருக்கும் அவர் எனக்கு உதவி புரிவதையே பசுமலையில் உள்ளவர்கள் வம்பு பேசுகிறார்கள். அதனால் தான் நான் அவரையும் இன்று வரும்படி அழைக்கவில்லை” என்று சொல்லி விட்டு இரண்டடி முன்னால் நடந்தான்.

மரத்தடியில் வாயில் சிகரெட்டைப் புகைத்தபடி நின்றிருந்த மூர்த்தி சிகரெட் துண்டை கீழே எறிந்து காலினால் அழுத்தித் தேய்த்தான். நெற்றியில் முத்து முத்தாக அரும்பி இருந்த வியர்வைத் துளிகளைக் கைக்குட்டையால் துடைத்துக் கொண்டே பவானியும், பாலுவும் செல்லும் திசையைப் பார்த்துக்கொண்டு நின்றான் அவன்.

அவனிடம் இதுவரையில் யாரும் இவ்வளவு அலட்சியமாக நடந்து கொண்டதில்லை. பம்பாயிலே பல வருஷங்கள் இருந்திருக்கிறான். பல குடும்பங்களுடன் பழக இருக்கிறான். அங்கே யெல்லாம் பலதரப்பட்ட பெண்களுடன் அவனுக்குப் பழக்கம் உண்டு. ஊரிலே நல்ல சினிமாவாக வந்தால் அவன் தனக்குத் தெரிந்த குடும்பப் பெண்களை அழைத்துப் போகத் தவற மாட்டான். முதல் வகுப்பு டிக்கட வாங்கி சினிமா பார்த்த பிறகு டாக்சியில் அவர்களை வீட்டுக்கு அழைத்து வருவான். சிரிப்பும் வேடிக்கையுமாக அவர்களுடன் பொழுது போக்குவது ஒரு நாகரிகம் என்று அவன் கருதினானோ என்னவோ!

மூர்த்திக்கு மங்கள தாஸ் என்கிற குஜராத்தி வியாபாரியின் மகள் தமயந்தி நினைவுக்கு வந்தாள். செக்கச் செவேல் என்று செவ்வாழைத் தண்டு மாதிரி வாளிப்பான கைகளும், உருண்டை முகமும் உடைய அவளோடு எத்தனை இடங்களுக்குப் போயிருக்கிறான்? ‘மரீன’ கடற்கரையிலே அந்த நீண்ட பாலத்தில் அவனும் அவளும் எத்தனை பெளர்ணமி இரவுகள் கை கோத்து உலாவி இருக்கிறார்கள்!

பெண்களை விளையாட்டுப் பொம்மைகளாகவும் அலங்காரப் பொருள்களாகவும் தன் உல்லாச வாழ்க்கைக்கு ஒரு கருவியாகவும் நினைத்து இறுமாந்திருந்த மூர்த்தியின் மனம், பவானியின் உதாசீனத்தை நினைத்துப் பொருமியது.

ஏக்கத்துடன் பெருமூச்சு விட்டுவிட்டு மூர்த்தி மறுபடியும் பஸ் ஸ்டாண்டை நோக்கி நடந்தான். அங்கிருந்து பஸ் ஒன்று புறப்பட்டுக் கொண்டிருந்தது. அடுத்த ஊர் வரையில் அவன் ஓர் அலுவலாகச் செல்ல வேண்டியிருந்ததால் பஸ்ஸில் ஏறி உட்கார்ந்தான். பஸ் முனிசியல் கட்டிடத்தின் மணிக் கூண்டைச் சுற்றிக் கொண்டு, முனிசிபல் ஹைஸ்கூலுக்கு வந்து சேர்ந்தது. பள்ளிக்கூடத்தின் தாழ்வாரத்தில் போட்டிருந்த பெஞ்சில் பவானியும் பாலுவும் உட்கார்ந்திருந்தனர். மூர்த்தி ஜன்னலுக்கு வெளியே எட்டிப் பார்த்தான். அங்கே கூடியிருந்த பல பேரை விட்டு அவன் பார்வை பவானியின் மேல் சென்றது. அடக்கமே உருவாக அமர்ந்திருந்த அவளது கவர்ச்சி-கரமான தோற்றம், அவன் மனத்தில் பல எண்ணங்களை எழுப்பிவிட்டது.

“அந்த உருண்டை மூஞ்சி தமயந்தியும், பள்ளக் கண்களையுடைய ரோகிணியும் இந்தப் பவானியின் முன்பு எம்மாத்திரம்?” என்று மூர்த்தி நினைத்தான்.

இவள் விதவையானால்தான் என்ன? விதவைக்கு வாழ்வே இல்லையா? அவர்கள் மறுமணம் செய்து கொண்டு வாழத்தான் சட்டமும், சமூகமும் இடங் கொடுக்கிறதே! ஆனால் பவானியின் உள்ளத்திலே என்ன இருக்கிறது? மென்மையான உடலையும் கவர்ச்சி கரமான தோற்றத்தையும் உடைய அவள் உள்ளம் கற்பாறையைவிடக் கடினம் வாய்ந்தது. அங்கே கருணைக்கும், அன்புக்கும் தான் இடம் உண்டு. ஆனால் சுய கௌரவத்துக்கு இழுக்கோ அவமானமோ ஏற்பட அந்த மனம் இடங் கொடுக்காது என்பதை மூர்த்தி அறிய வில்லை.

சற்றும் எதிர்பாராத விதமாகப் பவானி, பள்ளிக் நடத்துக்கு வெளியே நின்றிருந்த பஸ்ஸைப் பார்த்தாள். தற்செயலாக அவள் பார்வை மூர்த்தியின் மேல் சென்றது. சோகமும் கருணையும் ததும்பும் அவள் கண்கள் ஒரு வினாடி நெருப்புத் துண்டங்களாக ஜ்வலித்தன. அலட்சியமும் வெறுப்பும் நிறைந்த பார்வை ஒன்றை அவன் மீது வீசிவிட்டுப் பவானி முகத்தை வேறுபுறம் இருப்பிக் கொண்டாள்.

மூர்த்தி புன்முறுவல் பூத்தான். அவளுடைய அலட்சியத்தையும் வெறுப்பையும் பார்த்துத் தனக்குள் நகைத்துக் கொண்டான்.

கண்டக்டர் விசில் கொடுக்கவும் பஸ் இடத்தை விட்டு நகர்ந்தது.

18. சீர்திருத்தவாதி..!

‘கேரம்’ பலகையை வெளியே எடுத்து வைத்துவிட்டு மூர்த்தி வெளியூர் போனது பாலுவுக்குப் பிடிக்கவில்லை. இன்னும் பத்து நாட்களில் பள்ளிக்கூடம் திறந்து விடுவார்கள். பிறகு பள்ளிக்கூடம் போகவும் பாடங்களைப் படிக்கவுமே பொழுது சரியாகிவிடும். மூர்த்தியுடன் விளையாடலாம் என்று நினைத்திருந்தான் பாலு. அவனும் ஊரில் இல்லாமல் போகவே அவனுக்கு எதுவுமே பிடிக்கவில்லை .

உள்ளே பவானி ரவா தோசை வார்த்துக் கொண்டிருந்தாள். ‘கமகம’ வென்று வாசனை வீசியது. மாலை சுமார் மூன்று மணி இருக்கலாம். பாலு கால்களைச் சப்பணம் கட்டிக்கொண்டு, வெறிச்சோடிக் கிடந்த தெருவைப் பார்த்துக் கொண்டிருந்தான், கல்யாணமும் பார்வதியும், யாரோ உறவினர் வீட்டுக் கல்யாணத்திற்காகப் போயிருந்தனர். அவர்கள் போய் நான்கு தினங்கள் ஆயின. கதவைப் பூட்டிச் சாவியை மூர்த்தி வந்தால் கொடுத்து விடும்படி பார்வதி பவானியிடம் கொடுத்து விட்டுப் போயிருந்தாள்.

“அவன் என்றைக்கு வருகிறானோ” என்று கூறி விட்டு. .. நான் வந்த பிறகு பாலுவைப் பள்ளிக்கூடத்தில் சேர்க்கலாம் அம்மா. ஜாக்கிரதையாக இரு” என்று கூறிவிட்டுக் கல்யாணம் புறப்பட்டார்.

“சே! சே! இதென்ன ஊர்? பகல் நேரங்களிலேயே பாழ் அடைந்து கிடக்கிறதே” என்று மனத்துள் அலுத்துக் கொண்டான் பாலு.
அடுப்பங்கரையில் அடுப்பு அணைக்கப்படும் சத்தம் கேட்டது . தட்டில் தோசைகளை எடுத்துக்கொண்டு பவானி பாலுவைத் தேடிக் கொண்டு கூடத்துக்கு வந்தாள். பின்னர், தெருப்பக்கம் சென்று பார்த்தாள். திண்ணையில் உட்கார்ந்திருக்கும் பாலுவைப் பார்த்து. ”பாலு எழுந்திருந்து உள்ளே வந்து தோசை சாப்பிடு” என்று அழைத்தாள்.

கூடத்தில் தோசைத்தட்டின் எதிரில் வந்து உட்கார்ந்து கொண்டான் பாலு. பவானி கடைந் தெடுத்த வெண்ணெயை உருட்டி எடுத்து வந்து அவன் தட்டில் போட்டாள். அவன் தோசைகளை விரும்பிச் சாப்பிட்ட… தாகம் பவானிக்குத் தோன்றவில்லை.

“என்னடா உனக்கு? உடம்பு ஏதாவது சரியில்லையா என்ன?” என்று கேட்டுக் கொண்டே. பவானி அவன் நெற்றியிலும் மார்பிலும் கை வைத்துப் பார்த்தாள். தாயின் முகத்தில் வேதசை வருவதைக் கவனித்த பாலு. கண்களில் நீர் ததும்ப, ”எனக்கு இந்த ஊரில் பொழுதே போகவில்லை அம்மா. நாள் பூராவும் இப்படிக் கொட்டு கொட்டென்று எப்படி உட்கார்ந்திருக்க முடியும்?” என்று கேட்டான்.

பவானிக்கு வருத்தமாக இருந்தது. பாலுவின் அப்பா இருந்தால் அவனை அழைத்துக் கொண்டு நாலு இடங்களுக்குப் போய் வருவார். அத்தை என்றும் சித்தப்பா பெரியப்பா என்றும் சீராட்டப் பலர் வருவார்கள். விடுமுறைக்காக அவர்கள் வீட்டுக்குப் போய் வருவான். தகப்பனைச் சேர்ந்த குடும்பத்தினருடன் தொடர்பு அறுந்து போன மாதிரிதான். வாசு இறந்தபோது வந்துபோனவர்கள், பிறகு பாலுவைப் பற்றி விசாரிக்கவே இல்லை .

எதிரிலே உட்கார்ந்திருக்கும் மகனின் முகவாயை ஆதுரத்துடன் தடவிக் கொடுத்தாள் பவானி. அவன் கன்னங்கள் இரண்டையும் கையால் வருடிக் கொண்டே ”எண்டா லீவுக்கு உன் மாமா வீட்டுக்குப் போய்விட்டு வாயேன். அங்கே சுமதி கூட இருக்கிறாள் உன்னுடன் விளையாட என்று சொன்னேனே! நீதான் நானும் வர வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தாய்” என்றாள்.

பாலு பதிலளிப்பதற்கு முன் கொல்லைப் பக்கம் ஏதோ சத்தம் கேட்டது. கல்யாணராமன் வீட்டில் மாடு கறப்பதற்காக ஆள் வந்திருக்கிறான் என்பது தெரிந்ததும், பவானி கூடத்தை விட்டு எழுந்து கொல்லைப் பக்கம் சென்றாள்.

அதே சமயம் வாசற் கதவைத் திறந்து கொண்டு மூர்த்தி உள்ளே வந்தான். சோர்ந்து கிடந்த பாலுவின் உள்ளம் துள்ளி எழுந்தது. ”மூர்த்தி மாமா! வந்து விட்டீர்களா? எனக்கு நீங்கள் இல்லாமல் பொழுதே போகவில்லை. இந்தாருங்கள் சாவி. மாமாவும், மாமியும் கல்யாணத்துக்குப்போய் இருக்கிறார்கள். நாளைக்கு வாருவார்கள்” என்று பொரிந்து தள்ளிக் கொண்டே, கூடத்தில் ஆணியில் மாட்டியிருந்த சாவியை எடுத்து அவனிடம் கொடுத்தான்.

கையில் பால் செம்புடன் உள்ளே வந்த பவானி ஒரு கணம் அவனைப் பார்த்துத் தயங்கி நின்றாள்.

“போய்க் குளித்து விட்டு வாருங்கள் மாமா, தோசை தின்னலாம்” என்றான் பாலு. குழந்தைப் பருவத்தைப் போலும், குழந்தை உள்ளங்களைப் போலும் களங்கமற்றவை வேறு எதுவுமே இருக்க முடியாது. தாயின் மனத்திலே கொந்தளிக்கும் எண்ணங் களையோ மூர்த்தியின் மனத்தில் இருக்கும் நஞ்சுகலந்த அன்பைப் பற்றியோ பாலு அறிய மாட்டான்.

மூர்த்தி சாவியைச் சுழற்றிக் கொண்டே கல்யாணத்தின் வீட்டை அடைந்தான். கதவைத் திறந்து நேராகக் கிணற்றடிக்குச் சென்று ஸ்நானம் செய்து விட்டு, வாசனைத் தைலம் தடவி தலை வாரி, ஊரிலிருந்து வரும் போது வாங்கி வந்த பழங்களை எடுத்துக் கொண்டு பவானியின் வீட்டுக்கு வந்தான்.

கூடத்துப் பெஞ்சில் தட்டில் தோசைகளும், சுடச் சுடக் காப்பியும் வைக்கப் பட்டிருந்தன. பழங்களைப் பாலுவிடம் கொடுத்துவிட்டு மூர்த்தி சிற்றுண்டி அருந்தினான் .

பவானி சமயலறையை விட்டு வெளியே வந்தாள். வெறுமனே சாத்தியிருந்த தெருக் கதவை நன்றாகத் திறந்தவாறு சேஷாத்திரி உள்ளே வந்தார். பெஞ்சியிலே உட்கார்ந்து பல்லை இளிக்கும் மூர்த்தியையும், கையில் தோசையுடன் மிரண்டு பார்க்கும் பவானியையும் பார்த்தார். ஊஞ்சலில் இருந்த பழங்களைப் பார்த்தார்.

“ஹும்…” என்று தொண்டையைக் கனைத்துக் கொண்டார்.

பவானிக்குத் தைரியம் ஏற்பட்டது. ”வாருங்கள், எங்கே, இவ்வளவு தூரம்?” என்று கேட்டுக் கொண்டே மூர்த்தியின் தட்டில் தோசையை வைத்து விட்டு அவரை உட்காரும்படி கூறினாள்.

“ஒன்றுமில்லை. உன் பிள்ளையைப் பத்து நாட்களாக அந்தப் பக்கம் காணோம். உடம்பு ஏதாவது சரியில்லையோ என்று பார்த்துப் போக வந்தேன். ஹைஸ் கூலில் தானே சேர்க்கப் போகிறாய்?” என்று கேட்டார் சேஷாத்ரி.

“உடம்பு ஒன்றுமில்லையே! நான் தான் வெயிலில் அலைய வேண்டாம் என்று சொன்னேன். ஹைஸ்கூலில் தான் சேர்க்க வேண்டும்” என்றாள் பவானி.

சேஷாத்திரி மூர்த்தியைக் கவனித்தார்.

“ஏண்டா ! நீ கல்யாணத்தின் மருமகன் தானே? உனக்கு கல்யாணம் ஆயிற்றோ ?” என்று விசாரித்தார்.

“இல்லை சார்” என்றான் மூர்த்தி.

“என்னடா இல்லை? என் பெரிய பிள்ளை ராமுவின் ஈடுடா நீ. அவனுக்கு நாலு குழந்தைகள் இருக்கிறார்கள். நீ பிரம்மச்சாரியாய் ஊரைச் சுற்றிக் கொண்டு, வரட்டும் அந்தக் கல்யாணம்! ‘உன் மருமகன் என்னடா பச்சைக் குழந்தையா?’ என்று கேட்கிறேன்.”

”கேளுங்கள் சார்” என்றான் மூர்த்தி கைக்குட்டையினால் வாயைத் துடைத்துக் கொண்டு.

*கேட்கிறேண்டா! கேட்கிறதோடு விட மாட்டேன் என் பேத்தி ஒருத்தி இருக்கிறாள். பத்தாவது படித்திருக்கிறாள். வீட்டு வேலைகளும் செய்யத் தெரியும். அவளை உனக்கு முடிச்சுப் போட்டு விட்டுத்தான் மறு வேலை. ஆமாம்…” என்றார் அவர். பிறகு ”ஜாதகம் கீதகம் இருக்கிறதா! இல்லை கிழித் தெறிந்து விட்டாயா!” என்று கேட்டார்.

மூர்த்தி ஊஞ்சல் பலகையிலே இருந்த ஆப்பிள் ஒன்றை எடுத்துச் சாவிக் கொத்தில் இருந்த பேனாக் கத்தியால் சீவித் துண்டங்களாக நறுக்கிக் கொண்டிருந்தான். சிறிது நேரம் பதில் கூறாமல் இருந்தால் எதிரே இருப்பவர் தானாகவே எழுந்து போய் விடுவார் என்று எதிர்பார்த்துத் தான் அவன் மௌனமாக இருந்தான். சேஷாத்திரி இவனுடைய அலட்சியத்தை மதிப்பவராக இல்லை.

“என்னடா. பதில் பேச மாட்டேன் என்கிறாய்? பம்பாய், கல்கத்தா எல்லாம் போயிருந்தாயே, அங்கே யாரையாவது ரிஜிஸ்தர் கலியாணம் செய்து கொண்டு விட்டாயா என்ன?”

மூர்த்தி தலை நிமிர்த்தி அவரைப் பார்த்தான். “அப்படித்தான் வைத்துக் கொள்ளுங்களேன். சார்! சீர்திருத்தம் என்று வாயால் பேசி விட்டால் போதுமா! செய்கையாலும் காட்டித் தானே ஆக வேண்டும்?”

“ஓ! அப்படியா? நீ பெரிய சீர்திருத்த வாதியோ? சீர்திருத்தம் பண்ணுவதிலும் நேர்மையும் உண்மையும் இருக்க வேண்டும் அப்பா. அதிலே சுயநலம் கலந்து விட்டால் அப்புறம் உருப்பட்டாற் போலத்தான்!” என்றார் அவர் சற்று காரமாகவே. மூர்த்தியின் முகம் கோபத்தால் சிவந்தது.

”சார்! எதையோ பேச வந்து சம்பந்தமில்லாமல் பேசுகிறீர்கள். நீங்கள் இங்கே வந்ததே வேறு விஷயம். அநாவசியமாக என்னை வம்புக்கு இழுக்காதீர்கள்…”

சேஷாத்திரி துள்ளி எழுந்தார்.

“என்னடா பிரமாதமாக அவசியத்தையும் அநாவசியத்தையும் கண்டு விட்டாய்? உன்னைப்பற்றி எனக்குத் தெரியுமடா! மேட்டுத் தெருவில் இருந்தாளே பாலம்பாள். அவள் பெண்ணிடம் நீ எப்படி நடந்து கொண்டாய்? அந்தப் பெண்ணின் கல்யாணத்தின் போது என்ன வெல்லாம் கடிதமாக எழுதினாய் என்றெல்லாம் எனக்குத் தெரியும்! எனக்குத் தெரிந்து பிறந்த பையன் நீ! சீர்திருத்தத்தைப் பற்றிப் பேச வந்து விட்டான்!”

பவானி அப்படியே நின்றவள் நின்றவள் தான்!

மேட்டுத்தெரு பாலம்மாளின் பெண்ணிடம் மூர்த்தி நடந்து கொண்ட விதம் என்ன என்கிற விவரம் பூராவும் பவானி அறிந்து கொள்ள ஆசைப்படவில்லை. மாங்காயை ஒரு ஓரத்தில் கடித்தவுடன் புளிப்போ இனிப்போ உடனே தெரிந்து போகிறது.

சே! இவன் இவ்வளவு தானா? என்று அவள் தீர்மானித்து மூர்த்தியைப்பற்றி எடை போட்டுத்தான் வைத்திருந்தாள். அந்தத் தீர்மானம் ஏகமனதாக அவள் இதயத்திலே நிறைவேறிற்று.

பாலு வந்து இடையில் கல்யாணமும் பார்வதியும் வந்து விட்ட செய்தியைச் சொல்லாமல் இருந்திருந்தால் அந்தக் கிழவர் சேஷாத்திரியும், இளைஞன் மூர்த்தியும்
கை கலந்திருப்பார்கள்.

மூர்த்தி அவசரமாக எழுந்து வெளியே போனான். ”அம்மா பவானி!” என்றார் சேஷாத்திரி.

“நீ இப்படி இந்த அறியாப் பிள்ளையை வைத்துக் கொண்டு தனியாக வாழ்வேன் என்று பிடிவாதம் பிடிப்பது சரியில்லை. நாகராஜனிடம் போய் இழப்பது தான் சிறந்தது” என்று கூறிவிட்டு வெளியே போய் விட்டார் அவர்.

சேஷாத்திரி ஏன் திடீரென்று வந்தார்? பாலுவைப் பற்றி விசாரித்துப் போக வந்தாரா? மூர்த்தி தன் வீட்டினுள் நுழைந்ததைப் பார்த்து விட்டுத்தான் தன்னை எச்சரிக்க வந்திருக்கிறார் என்பது பவானிக்குப் புரிந்து விட்டது.

சிலையைப் போல அவள் கூடத்தில் மாட்டி இருந்த நடராஜப் பெருமானின் படத்தின் முன்பு சென்று உட் கார்ந்து விட்டாள்.

19. தந்தி வந்தது

அடுத்த நாள் பொழுது விடிந்தது. வழக்கம்போல் அப்பொழுது நகர்ந்து அதற்கு அடுத்த நாளும் உதயமாகியது. பார்வதி மட்டும் கல்யாண வீட்டிலிருந்து கொண்டுவந்த பலகாரங்களை எடுத்து வந்து பாலுவுக்குக் கொடுத்தாள். கல்யாணம் நடந்த விமரிசைகளைப் பற்றிப் பவானியிடம் கூறினாள். எல்லாவற்றையும் கூறிவிட்டு, ”கல்யாணம் பண்ணிக் கொண்ட பெண்ணும், பிள்ளையும் காதலித்துக் கல்யாணம் செய்து கொண்டார்கள். அவர்களின் காதலின் உறுதியைது. ஆழத்தை, பண்பைக் கண்டு இரு தரப்பினரும் உடன்பட்டுக் கல்யாணம் நடந்ததாம்” என்று முடித்தாள் பார்வதி.

நேற்றைக்கு முந்திய நாள் சேஷாத்திரியும், மூர்த்தியும் வாதித்துச் சண்டையிட்ட சீர்திருத்தத்தைப் பற்றிப் பவானி நினைத்துப் பார்த்தாள். ’சீர்திருத்தம் என்கிற பெயரிலே எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் கல்யாணம் பண்ணிக் கொள்கிறேன் என்று சொல்லி, அந்தப் பெண்களுடன் ஒருவரைப் பற்றி ஒருவருக்குத் தெரியாமல் அழைத்துக் கொண்டு, ஊரில் கண்ட இடங்களில் திரிந்து வரும் ஜோடிகள் செய்வது சீர்திருத்தமா?’ என்று பவானி உள்ளம் குமுறினாள்.

“பவானி! ஏன் என்னவோ போல இருக்கிறாய்?” என்று பார்வதி அவளை அன்புடன் விசாரித்தாள்.

பவானி மூர்த்தியைப் பற்றி மறுபடியும் பேச விரும்ப வில்லை. ஆகவே அவள் வெகு ‘சாமர்த்தியமாக’ “எனக்கு மூன்று நாட்களாகவே உடம்பு சரியில்லை!” என்று கூறினாள்.

”அப்படியா? அதுதானே பார்த்தேன். உடம்பு சரியில்லை என்று என்னிடம் சொல்ல மாட்டாயோ? நீ என்றும் அலைந்து வேலை செய்யவேண்டும்? ராத்திரி நீ ஒன்றும் சமைக்க வேண்டாம். பாலுவும். நீயும் நம் வீட்டிலேயே சாப்பிட்டு விடலாம்” என்று அன்புடன் கூறினாள் பார்வதி.

தெருவில் அவர் வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்திருந்த கல்யாணம் பவானியை இரைந்து கூப்பிட்டார். இருவரும் எழுந்து வாசலுக்கு வந்தனர். கல்யாணத்தின் கையில் இருந்த தந்திக் காகிதத்தையும், கவர் ஒன்றையும் பார்த்துத் திடுக்கிட்டார்கள் இருவரும்.

”பவானி! இந்தா! உன் தமையன் தந்தி அடித்துக் கடிதமும் போட்டிருக்கிறான். உன் மன்னிக்கு உடம்பு சரியில்லையாம். உடனே உன்னைச் சென்னைக்குப் புறப்படச் சொல்லி இருக்கிறது. மற்ற விவரங்கள் கடிதத்தில் இருக்கும். படித்துப் பாரம்மா!” என்று
அவளிடம் கடிதத்தையும் தந்தியையும் கொடுத்தார்.

பவானி கைகள் நடுங்க கடிதத்தைப் பிரித்துப் படிக்க ஆரம்பித்தாள். அதில் கோமதிக்குக் கருச்சிதைவு ஏற்பட்டு ரொம்பவும் அபாயகரமான நிலையில் ஆஸ்பத்திரியில் கிடப்பதாகவும், வீட்டையும் குழந்தை சுமதியையும் கவனித்துக் கொள்ள யாரும் இல்லை யென்றும் பவானியை உடனே புறப்பட்டு வரச் சொல்லியும் எழுதி இருந்தான் நாகராஜன்,

பவானியின் உள்ளத்தில் இருந்த பழைய சோர்வெல்லாம் எங்கேயோ போய்விட்டது. புதிய கவலை பரபரப்பு. அவள் உள்ளத்தில் குடி கொண்டது.

“என்ன மாமா செய்வது?” என்று கேட்டாள் கல்யாணத்தைப் பார்த்து.

”என்னம்மா இப்படிக் கேட்கிறாய்? உடன் பிறந்தவன் உன் உதவியை நாடி எழுதி இருக்கிறான். நீ போய்த் தான் ஆக வேண்டும்.”

”பாவுலுக்குப் பள்ளிக்கூடம் திறக்க இன்னும் ஆறு தினங்கள் தானே இருக்கின்றன?”

”அதைப்பற்றிப் பிறகு யோசித்துக் கொள்ளலாம். நீ நாளைக்கே புறப்பட்டு விடு” என்றார் கண்டிப்பாக.

வெளியே போயிருந்த பாலு வீட்டுக்கு வந்ததும் பவானி விஷயத்தைச் சொன்னாள். ’பாவம் சுமதி’ என்றான் அவன்.

பவானியும் ஆசையுடன் அவன் தலையைக் கோதி விட்டு, ”பாலு! நீ எங்கேயும் வெளியே போய் விடாதேடா. சாமான்களை யெல்லாம் கட்டி ஓர் அறையில் போட்டுவிட வேண்டும் வருவதற்கு நாள் ஆனாலும் ஆகலாம். கூடமாட எனக்கு ஒத்தாசை பண்ணுகிறாயா?” என்று கேட்டாள்.

தாயும் மகனுமாக வீட்டை ஒழித்துத்துப்புரவு செய் தார்கள். பாத்திரம். பண்டங்களைப் பெட்டியில் போட்டுப் பூட்டி ஒரு சிறு அறையில் வைத்தார்கள். கூடத்திலே இருந்த படங்களை யெல்லாம் கழற்றித் துடைத்து வைத்தான் பாலு.

பவானி கூடத்துப் பக்கம் வந்தவள் சுவரை அண்ணாந்து பார்த்தாள். பார்த்தவள் திடுக்கிட்டு ”எங்கேயடா நடராஜரின் படம்?” என்று கேட்டாள். சுருட்டி வைத்திருந்த சாக்குப் பையிலிருந்து படத்தை எடுத்துக் கொடுத்தான் பாலு. பவானி அதை வாங்கி மார்புடன் அணைத்துக் கொண்டாள். ”இதை மட்டும் நாம் எடுத்துப் போகலாம் பாலு” என்று கூறிவிட்டுப் படத்தைப் பத்திரமாகத் தன் பெட்டியில் வைத்துப் பூட்டினாள்.

இதற்குள் மாலையும் நெருங்கி வந்தது. பவானியும் பாலுவும் ஊருக்குப் போவதால் அன்றும் மறு நாளும் தங்கள் வீட்டிலேயே சாப்பாடு என்று பார்வதி சொல்லி விட்டாள். சாமான்களைக் கட்டி வைத்த பிறகு பவானிக்கும் பொழுது போகவில்லை. தெருவிலே நின்று தூரத்தில் தெரியும் பசுபதி கோவிலைப் பார்த்துக் கொண்டிருந்தாள். மாலைக் கதிரவன் ஒளியில் குளித்துக் கொண்டிருந்தது கோபுரம்.

‘நாளை இந்நேரம் சென்னையில் இருப்பேன்’ என்கிற எண்ணம் அவள் மனத்தை வேதனையில் ஆழ்த்தியது. ஐந்தாறு வருஷங்களுக்கு மேலாகப் பழகிப் போயிருந்த அவ்வூரை விட்டுச் செல்ல அவளுக்கு வருத்தமாக இருந்தது.

முன்பு ஒருதரம் அவள் சென்னை போயிருந்தபோது எழும்பூரில் ரயிலை விட்டு இறங்கியதும் ஒரு பரிதாபமான காட்சியைக் கண்டாள். பரிதாபம் மட்டும் அல்ல. வெட்கப்படவும், அருவருப்படையவும் வேண்டிய காட்சி அது.

கர்ப்ப ஸ்திரீ ஒருத்தி தனக்குப் பிரசவ வேதனை கண்டிருப்பதாக முக்கி முனகிக் கொண்டிருந்தாள். அவளோடு இன்னும் இரண்டு குழந்தைகள் இருந்தார்கள். அவள் உண்மையான கர்ப்பஸ்திரீதான்! வயிற்றில் துணிகளைச் சுற்றிக் கொண்டிருக்க-வில்லை. ஆனால் அவளைப் பாசாங்குக்காரி என்று ஏசி பலர் உதாசீனம் செய்தனர். கேலியாகப் பேசினர். சிலர் இரக்கப்பட்டுப் பொருள் உதவியும் புரிந்தார்கள்.

அப்பொழுது அவளையும் அவள் கணவன் வாசுவை யும் அழைத்துப் போக நாகராஜன் ரயிலடிக்கு வந்திருந்தான்.

“அண்ணா ! அவளைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது” என்று தயங்கினாள் பவானி.

”நீ ஒரு பைத்தியம்!” என்றான் நாகராஜன்.

”இந்த நகரத்திலே இம் மாதிரிக் காட்சிகள் சர்வ சகஜமானவை. உனக்குப் புதிதாக இருப்பதால் நீ இதை எல்லாம் பார்த்துப் பரிதாபப்படுகிறாய். எங்களுக்குக் கவனிக்கவே பொழுதில்லை” என்று கூறி நகைத்தான் நாகராஜன்.

”அண்ணா ! சமுதாயத்தின் வளர்ச்சியிலேதான் தேசத்தின் பெருமை அடங்கியிருக்கிறது. அழகு மிகுத்த இந்த சென்னையிலே அவதியுறும் பல காட்சிகளைப் பார்க்க வேண்டி இருக்கிறதே. சமூகம் வளர்ந்து வருகிறதா? செடிகளின் வேரிலே புழு வைத்தால் செடி வதங்கச் சில காலம் ஆகுமாமே. அப்படிச் சமூகத்தின் வேரிலே, வேர்ச் செல் தோன்றி அரித்து வருவதற்கு இவை யாவும் அத்தாட்சியோ என்னவோ” என்றாள் பவானி, டாக்சியில் உட்கார்ந்து அந்த கர்ப்ப ஸ்திரீயைப் பார்த்துக் கொண்டே.

நாகராஜன், பதில் ஒன்றும் கூறவில்லை. பவானி கணவனைக் கேட்டு எட்டணாக் காசை வாங்கிக் கொடுத்தாள் அந்தப் பெண்ணிடம். அவள் உள்ளம் சோர்ந்து விட்டது. எந்த விதத்திலாவது இம்மாதிரி அபலைப் பெண்களுக்கு உதவி புரிய மாட்டோமா என்று ஏங்கினாள்.

அப்புறம் அவள் சென்னைப் பக்கமே போகவில்லை. இப்பெழுது அந்த நகரத்திலே பெரிய மாறுதல்கள் ஏற்பட்டிருக்கலாம். பஞ்சமும் பிணியும் கொஞ்சமாவது குமைந்திருக்கும். பெண்கள் இன்பமாக வாழ்வார்கள் என்றெல்லாம் நினைத்தாள். தெருவிலே விளக்கேற்றி விட்டார்கள். கோவிலிலிருந்து மணியின் நாதம் கேட்டது.

”பவானி கால் கடுக்க அரை மணியாய் நிற்கிறாயே? நாளைக்குத் தான் நீ ஊருக்குப் போகிறாய், திரும்பி வர இன்னும் எத்தனை மாசங்கள் ஆகுமோ? உள்ளே வந்து “ட்கா ரேன்” என்று பார்வதி அவளை அழைத்தாள்.

20. மூர்த்தியின் ஏமாற்றம்

பசுமலை ரயில் நிலையத்துக்குப் பாசஞ்சர் வண்டி காலை பத்தரை மனிக்கு வருவது வழக்கம். சாதாரணமாகவே பத்தரை மணி வண்டி. பன்னிரண்டு மணிக்குத் தான் வரும். பத்தரை மணி வண்டியைப் பிடிக்க ரயிலடிக்குப் பதினொன்றரை மணிக்குப் போய்ச் சேர்ந்தால் போதும் என்று ஊரில் பேசிக் கொண்டார்கள்,

பார்வதி, பவானி- பாலுவிற்காகச் சிறந்த விருந்து ஒன்று தயாரித்தாள். பரிந்து பரிந்து உபசரித்தாள். பவானியின் மனநிலை விருந்துண்ணும் நிலையில் இல்லை. ‘கோமதியின் உடல் நிலை எப்படி இருக்கிறதோ’ என்று கவலைப் பட்டுக் கொண்டேயிருந்தாள்.

“அதெல்லாம் ஒன்றும் இருக்காது. அவ்வளவு பெரிய நகரத்தில் வைத்தியர்களுக்கும் அவர்கள் திறமைக்கும் பஞ்சமா என்ன? நிதானமாகச் சாப்பிடு” என்று உபசரித்தாள் பார்வதி.

பாலு ஊரில் ஒரு பையன் பாக்கியில்லாமல் தான் சென்னைக்குப் போவதைப் பற்றிச் சொல்லிக் கொண்டான்.

”ஒரு வேலை அங்கேயே சேர்ந்து படிக்க ஆரம்பித்து விடுவேன். மாமாவுக்குக் கார் இருக்கிறது. எங்கள் சுமதி ரிக்ஷாவில் பள்ளிக்கூடம் போவாள் ” என்றெல்லாம் அவர்களிடம் பெருமைப் பட்டுக் கொண்டான். ஒவ்வொருவரும் அவனுக்குத் தத்தம் நினைவாக ஒருபொருளைப் பரிசாகக் கொடுத்தனர். கோலிகளும், பம்பரங்களும், கதைப் புத்தகங்களும் ஏகப்பட்டவை பாலுவுக்கு கிடைத்தன.

பவானி ஊருக்குக் கிளம்பும் விஷயம் சேஷாத்ரிக்கு எட்டியது. அந்தக் கிழவர் இரண்டு சீப்பு வாழைப் பழங்களுடன் பாலுவைப் பார்க்க வந்தார்.

”ஏனம்மா! நாலு தினங்களுக்கு முன்பு உன்னிடம் சொன்ன வார்த்தை இவ்வளவு சீக்கிரம் பலித்து விட்டது பார். நல்ல பெண் நீ. அடக்கத்துக்கும் பண்புக்கும் உதாரணமாக இருந்தாய். ஊருக்குப் போகிறாயே என்று தான் இருக்கிறது. பையனை ஜாக்கிரதையாகப் பார்த் துக்கொள். சௌக்கியமாக போய் வா” என்று விடை கொடுத்தார்.

தெருவில் மாட்டு வண்டி வந்து நின்றது. பவானி கல்யாணராமனையும், பார்வதியையும் வணங்கினாள். கல்யாணம் உணர்ச்சிப் பெருக்கால் கண்களைச் சிறிது நேரம் மூடியபடியே இருந்தார்.

”உனக்கு எந்தவிதமான ஆசியை நான் வழங்குவது அம்மா? இந்த ஊருக்கு வரும் போது மஞ்சள் குங்குமத்துடன் வந்தாய். நோயாளிக் கணவனுக்காக உயிருக்கு மன்றாடினாய். மலர வேண்டிய உன் வாழ்வு கருகி விட்டதே என்று நான் மனதுக்குள் மாய்ந்து போனேன். இருண்டு போன உன் வாழ்க்கையில் நம்பிக்கை ஊட்ட உன் மகன் பாலு இருக்கிறான். அவனை ஜாக்கிரதை யாகப் பார்த்துக் கொள். நீ எப்பொழுது இந்த ஊரை நாடி வந்தாலும் என் வீட்டிற்கு வரலாம்” என்றார் அவர்.

பவானி பேச முடியாமல் திணறினாள். பார்வதியை நீர் பெருகும் விழிகளால் பார்த்தாள். ‘மாமி’ என்று அழைக்கிறவள். ‘அம்மா’ என்று கூப்பிட்டாள். அவளை அப்படியே அணைத்துக் கொண்டு குலுங்கக் குலுங்க அழுதாள்.

”பவானி பைத்தியம், பைத்தியம். ஏன் இப்படி அழுகிறாய்?” என்று பார்வதி அவளைத் தேற்றினாள்.

”இந்த மாதிரி மாசில்லாத அன்பை நான் சென்னையில் எங்கே பார்க்கப் போகிறேன்?” பவானி அழுது கொண்டே பார்வதியை இவ்விதம் கேட்டாள்.

“நீ பைத்தியம் தான் போ! உன் மனசிலே அன்பு நிறைந்திருக்கும் போது பிறத்தியார் உள்ளத்திலும் அன்பு தான் நிறைந்திருக்கும். உன்னை வெறுப்பவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள்” என்றாள் பார்வதி. பிறகு இருவரும் அழுகையையும் பேச்சையும் நிறுத்தி விட்டு மூட்டை முடிச்சுக்களை வண்டியில் ஏற்றுவதற்கு முனைந்தனர்.

“ரயிலடிக்கு நானும் வருகிறேனே” என்று கல்யாணம் அவளைக் கேட்டார்.

”வேண்டாம். மாமா! ஊருக்குப் போய்விட்டு வந்ததிலிருந்து உங்களுக்கு உடம்பு சரியில்லை. இன்று தான் தலைக்கு ஜலம் விட்டுக் கொண்டீர்கள். அலைய வேண்டாம்” என்று பவானி தடுத்து விட்டாள்.

பாலு மட்டும் உற்சாகத்துடன் இருந்தான். புது ஊரைப் பார்க்கப் போகிறோம் என்கிற களிப்பு அவன் முகத்தில் படர்ந்திருந்தது.

வண்டி தெருக்கோடியைக் கடந்து பசுபதி கோவி லைத் தாண்டிச் செல்ல ஆரம்பித்தது.

ஆடி அசைந்து போகும் வண்டியில் பவானி சிந்த னையே உருவாக உட்கார்ந்திருந்தாள். நோயாளி வாசுவை அழைத்துக்கொண்டு இப்படித்தான் ஒரு நாள் அந்த ஊருக்குள் வந்தாள். இன்று பாலுவை அழைத்துக் கொண்டு மறுபடியும் ஊரைவிட்டுப் போகிறாள்.

பசுபதி கோவில் கோபுர வாயிலை வண்டி அடைந்த போது உள்ளே கொடிக் கம்பத்தைத் தாண்டி இருக்கும் மூலஸ்தானம் தெரிந்தது. பவானி கையெடுத்து வணங்கினாள்.

பாலுவும் கோவிலை அரைகுறையாகப் பார்த்துக் கொண்டே கன்னத்தில் போட்டுக் கொண்டான். அவன் பார்வை தெருக் கோடியில் வரும் மூர்த்தியின் மேல் இருந்தது.

”அம்மா! அதோ மூர்த்தி மாமா வரார்” என்றான் உற்சாகம் பொங்க.

“வரட்டும்” என்றாள் பவானி அமைதியாக. சைக்கிளில் வேகமாக வந்த மூர்த்தி வண்டியை நெருங்கியதும் வேகத்தைக் குறைத்துக் கொண்டு ‘மதராஸ் போகிறீர்களாமே…….. டிக்கெட் வாங்கிக் கொடுத்து ரயில் ஏற்றிவிட்டு வரச் சொல்லி மாமா அனுப்பினார்” என்றான்.

”எதற்கு உங்களுக்கு வீண் சிரமம்?” என்று கூறிய பவானி அத்துடன் பேச்சை நிறுத்திக் கொண்டு விட்டாள்.

ரயிலடியை அடையும்போது மணி பத்தாகி விட்டது . “வண்டி பன்னிரண்டரைக்குத்தான் வரும்” என்று ஸ்டேஷன் மாஸ்டர் அறிவித்தார். சாமான்களை யெல்லாம் ஒரு பக்கமாக வைத்து விட்டு எல்லோரும் பெஞ்சியில் உட்கார்ந்தார்கள்.

‘டிக்கெட்தான் வாங்கியாகி விட்டதே நீங்கள் போங்கள்’ என்று மூர்த்தியிடம் சொல்லப் பவானிக்குத் தைரியமில்லை.

“பாலு நீ இனிமேல் அங்கேதானே படிக்கப் போகிறாய்?” என்று பேச்சை ஆரம்பித்தான் மூர்த்தி.

”ஆமாம்! மாமா… எங்க மாமாவுக்கு கார் இருக்கிறது. மாமா பெண் சுமதிக்கு ரிக்ஷா இருக்கிறது. எதில் வேண்டுமானாலும் பள்ளிக்கூடம் போகலாம்” என்றான் பாலு பெருமை தொனிக்க.

”பேசாமல் இருடா நீயும் உன் பெருமையும்!” என்று அதட்டினாள் பவானி.

”சொல்லட்டும். அவனை அதட்டாதீர்கள்” என்றான் மூர்த்தி புன்முறுவலுடன். பிறகு எதையோ நினைத்துக் கொண்டவனாக. அந்தக் கிழவர் சீர்திருத்தவாதிகளைப் பற்றிக் கேலி பண்ணினாரே. இவரை யார் பேசச் சொல்லிக் கூப்பிட்டார்கள்?” என்று பழைய கதையைக் கிளப்பினான்.

“அவருடைய அபிப்பிராயம் அவ்விதம் இருந்தது. அதைச் சரியென்று எல்லோரும் ஆமோதிக்க வேண்டும் என்று அவர் சொல்லவில்லையே!” என்றாள் பவானி.

”இன்று நீங்கள் ரயிலுக்குக் கிளம்பிய பிறகு என்னைப் பார்த்து விட்டு மறுபடியும் எங்கள் வீட்டுக்கு வந்தார். தன் பேத்தியின் ஜாதகத்தைக் கொடுத்து விட்டு. மாமாவிடம் என் ஜாதகத்தைக் கேட்டார். அப்புறம் என்ன நடந்தது தெரியுமா?” என்று கேட்டான் மூர்த்தி.

” என்ன நடந்தது?” என்று தன் அகன்ற விழிகளை கல விழித்துக் கேட்டாள் பவானி.

”ஒன்றும் அசம்பாவிதமாக நடக்கவில்லை. பயந்து விடாதீர்கள். மாமா என்னைக் கூப்பிட்டு என் ஜாதகத்தைக் கேட்டார்”.

”ஜாதகத்தை எடுத்து வந்து அவர்கள் எதிரிலேயே கிழித்துப் போட்டேன்! எனக்கு இதிலெல்லாம் நம்பிக்கை இல்லை. நான் சீர்திருத்தவாதி. சீர்திருத்தமணம் செய்து கொள்ளப் போகிறேன்” என்றேன்.

”பார்த்தாயாடா கல்யாணம்?” என்று ஆரம்பித்தார் கிழவர்.

”பார்க்கிறது என்ன சார். பார்க்கத்தான் போகி றீர்கள். ஜாதி விட்டுக் கலியாணம் பண்ணிக் கொள்கிறது ஒருவிதமான சீர்திருத்தம். நம் நாட்டிலே வாடும் ஆயிரக் கணக்கான விதவைகளை மறுமணம் செய்து கொண்டு வாழவைப்பதும் ஒரு சீர்திருத்தம்தான். நான் ஒரு விதவையை மறுமணம் செய்து கொண்டாலும் நீங்கள் ஆச்சரியம் அடைய வேண்டாம் என்றேன்” என்று கூறி முடித்தான் மூர்த்தி.

ரயிலடி நிசப்தமாக இருந்தது. அங்கே அன்று கூட்டமே இல்லை. பவானி பற்களைக் கடித்துக் கொண்டு தலையைக் குனிந்து கொண்டாள். பாழும் ரயில் சீக்கிரம் வராதா என்று வேதனைப் பட்டாள். இந்த அதிகப் பிரசங்கியின் பேச்சிலிருந்து விடுபட்டு எப்பொழுது ரயில் ஏறுவோம் என்று ஆத்திரப்பட்டாள். வாழ்க்கையில் நேர்மையைப் பற்றி அறியாதவர்கள் முதலில் தன் வாழ்க்கையைச் சீர்திருத்தம் பண்ணிக் கொண்டல்லவா சமூகத் தொண்டு என்கிற புனிதமான சீர்திருத்தத்தில் இறங்க வேண்டும்? சே! இவனைப் போய் ரயிலடிக்கு அனுப்பினாரே கல்யாணம் மாமா என்று வேதனை பொங்க பொழுது ஒரு பாரமாய் உட்கார்ந்திருந்தாள் பவானி.

அவுட்டரில் கை காட்டி இறங்கியது. புஸ் புஸ் என்று பெருமூச்சு விட்டுக் கொண்டே வண்டி வந்து நின் மது. சாமான்களை ஏற்றி விட்டுப் பாலுவுடன் பவானி பெட்டியில் ஏறிக் கொண்டாள்.

வண்டிக்குள் கூட்டம் அதிகமில்லை. ஜன்னல் ஓரத் தில் ஒரு பெண் மூன்று குழந்தைகளுடன் உட்கார்ந்து கொண்டிருந்தாள். இன்னும் சில பேர் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தார்கள்.

”பாலு! போய்விட்டு வருகிறாயா?” என்று கேட்டான் மூர்த்தி.

“நான் வருகிறேன். உங்கள் மாமாவிடமும் மாமியிடமும் சொல்லுங்கள்” என்றாள் பவானி, வெறுப்பை எல்லாம் அடக்கிக் கொண்டு.

”சென்னையில் உங்கள் விலாசம்?”

மூர்த்தி கபடமாகச் சிரித்துக் கொண்டே பவானியை இவ்விதம் கேட்டான்.

பவானி துணிச்சலுடன் முகத்தைத் திருப்பிக் கொண் டாள். அருகில் உட்கார்ந்திருந்த பெண்ணைப் பார்த்து ‘நீங்கள் சென்னைக்குப் போகிறீர்களா?” என்று கேட்டாள்.

அந்தப் பெண் பதில் கூறுவதற்கு முன்பு ரயில்கிளம்பி விட்டது. ஜன்னல் ஓரத்தைப் பிடித்துக் கொண்டு மூர்த்தி வாடிய முகத்துடன் நடந்து வந்தான். ஜேபியிலிருந்து கைக்குட்டையை எடுத்து ஆட்டினான். தன்னையே வெறித்துப் பார்க்கும் அவனைப் பார்க்க விரும்பாத பவானி முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டாள்.

பசுமலையின் கோவில் கோபுரம் தெரிந்தது. அது வும் மறைந்து கொண்டே வந்தது. பவானிக்கு மனத்தில் ஏற்பட்டிருந்த வெறுப்பு அடங்கி வண்டிக்குள் இருந்த வர்களைக் கவனிக்கச் சிறிது நேரம் பிடித்தது.

முதல் பாகம் முற்றிற்று.

– தொடரும்…

– முத்துச் சிப்பி (நாவல்), முதற் பதிப்பு: அக்டோபர் 1986, சமுதாயம் பப்ளிகேஷன்ஸ், சென்னை.

சரோஜா ராமமூர்த்தி காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஜூலை 27, 1921-ல் ராமச்சந்திரன், கிரிஜா இணையருக்குப் பிறந்தார். தந்தை திருக்கழுக்குன்றத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்தார். பதினொரு வயதில் தாயை இழந்தார். தந்தையுடன் ஏற்பட்ட மனவேறுபாடு காரணமாக 1940-ல் அத்தை, மாமாவுடன் பம்பாயில் குடியேறினார். எழுத்தாளர் து. ராமமூர்த்தியை ஜனவரி 28, 1943-ல் பம்பாயில் பதிவுத் திருமணம் செய்துகொண்டார். மூன்று மகள்கள். நான்கு மகன்கள். மகள்கள் சரஸ்வதி, பாரதி, கிரிஜா. மகன்கள் ரவீந்திரன், ஜெயபாரதி,…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *