அத்தியாயம் 6-10 | அத்தியாயம் 11-15 | அத்தியாயம் 16-20
11. புதுப் பள்ளிக்கூடம்
சற்று முன் விசிறிக் காம்பால் பவானி தன்னை அடித்ததை பாலு அடியோடு மறந்து விட்டான். அதைப் போலவே மகன் செய்த துஷ்டத்தனத்தைப் பவானி அறவே மறந்து. அவனை உபசரித்து உணவு பரிமாறினாள்.
பவானி குனிந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த பாலுவையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள். எலுமிச்சை வண்ண உடலும், அகன்ற பெரிய விழிகளும், சுருள் சுருளான கேசமும் கொண்ட அந்தப் பாலகன் உண்மையிலேயே அழகானவன். துரு துருவென்று பார்க்கும் அந்தப் பார்வையில் அவன் துடுக்குத் தனம் எல்லாம் தெரிந்தது . இப்படி அழகான ஒரு குழந்தையைப் பெற்றெடுத்து வளர்ப்பதே ஒரு பேறு என்று அவள் நினைத்தாள். ஆனால் ஊரார் அதை ஒப்புக் கொள்கிறார்களா? எப்படியாவது பாலுவை ஒரு நல்ல பள்ளிக் கூடத்தில் சேர்த்து விட்டால் அவன் விஷமங்களும் துடுக்குத்தனங்களும் ஓய்ந்து போகும். இந்தப் பஞ்சாயத்துப் பள்ளிக்கூடத்தில் குழந்தைகளைக் கவனிப்பதே இல்லை என்று நினைத்துக் கொண்டாள்.
பாலு சாப்பிட்டு விட்டுத் தட்டை எடுத்துக் கொண்டு கொல்லைப் புறம் சென்று கை அலம்பிக் கொண்டு உள்ளே வந்தான் வந்தவன் தாயின் இலையைக் கவனித்து விட்டு, “என்ன அம்மா! குழம்புச் சாதத்தை அளைந்து கொண்டு எந்தக் கோட்டையையோ பிடிக்க முயன்று கொண்டிருக்கிறாயே. சாதம் ஆறிப்போய் இருக்குமே” என்று கேட்டான். பவானி அதற்கு ஒன்றும் பதில் கூறவில்லை.
“ஏண்டா அப்பா! பள்ளிக்கூடம் திறக்க இன்னும் பதினைந்து தினங்கள் தானே இருக்கிறது? உன்னை வேறு பள்ளிக் கூடத்தில் சேர்க்க வேண்டுமே. பேசாமல் இருக்கிறாயேடா?” என்று கேட்டாள்.
பாலுவிற்குப் புதுப் பள்ளிக்கூடம் என்றதும் உற்சாகம் பொங்கி வந்தது. அவன் தாயின் அருகில் வந்து உட்கார்ந்து கொண்டு, “ஓ! அதுக்கென்ன அம்மா! சேர்ந்தால் போச்சு. டி. ஸி. தான் வாங்கணும். ரைட்டரைக் கேட்டால் கொடுப்பார். டி.ஸி. வாங்க நாளைக்குப் போகட்டுமா?” என்றான் ஆவலுடன்.
பவானிக்கு ஒரே கவலை. புதுப் பள்ளிக் கூடத்தில் அவனைச் சேர்ப்பதற்கு யாராவது பெரியவர்களாக ஏற்றுக் கொண்டு செய்தால் தேவலை என்று நினைத்தாள்.
அடுத்த வீட்டுக் கல்யாணராமன் அவளுக்கு எது வேண்டுமானாலும் செய்வார். ஒவ்வொன்றிற்கும் போய் அவரைத் தொந்தரவு செய்ய வேண்டுமே என்று யோசித்தாள் பவானி. வேறே அவளுக்காக உதவ அந்த ஊரில் யார் இருக்கிறார்கள்? மாசம் பிறந்தவுடன் நாலாம் தேதியன்று ஊரிலிருந்து ஐம்பது ரூபாய் வந்து கொண்டிருந்தது. மணியார்டர் கூப்பனில் ஒரு நாலு வரிகள் எழுதியிருப்பான் நாகராஜன். “பவானிக்கு ஆசீர்வாதம். பாலு சமத்தாகப் படித்துக் கொண்டிருப்பான் என்று நினைக்கிறேன். உனக்கு மேலும் பணம் ஏதாவது தேவையானால் எழுதவும்” என்று இருக்கும்.
இரண்டு பேர் சாப்பிட மாதம் ஐம்பது ரூபாய்க்கு மேல் ஆகிவிடுமா? கல்யாணராமன் பவானியிடமிருந்து ஒரு சல்லிக் காசுகூட வாடகைக்கு என்று வாங்கிக் கொள்வதில்லை. வீட்டை வாங்கி இப்படி இனாமாக விடுவார்களோ என்று நாலு பேர் பேசிக் கொண்டார்கள். “அதெல்லாம் என் இஷ்டம், உங்களுக்கு என்ன ஐயா?”
என்று அடித்துப் பேசினார் அவர்.
“அது ஒரு அரைப் பைத்தியம். ராஜா மாதிரி மருமகன் இருக்கிறான். அவனுக்குக் காலா காலத்தில் கல்யாணம் பண்ணி வைத்து. இருக்கிறதை அவனுக்குக் கொடுக்கக் கூடாதா? மேட்டுக் கழனியிலிருந்த மனையைப் பள்ளிக்கூடம் கட்டத் தானம் பண்ணி விட்டதாமே!” என்று சிலர் பேசிக் கேலி செய்தார்கள்.
“இந்தக் காலத்தில், தான தருமம் செய்து அது பத்திரிகைகளிலும் வெளியானால் தான் சார் பெருமை!” என்றார் ஒரு பொறாமைக்காரர்.
இவர்கள் இப்படிப் பேசுவதைக் கேட்டு பார்வதி அவரிடம், “மூர்த்திக்கும் வயசாகிறதே, நல்ல இடமாக வந்தால் பாருங்களேன்” என்றாள். மூர்த்தியைக் கல்யாணராமன் கவனிக்கவில்லை என்று ஊரார் சொல்வது பார்வதியின் காதில் விழுந்தது. அதனால் அவள் கணவனைத் தொந்தரவு செய்ய ஆரம்பித்தாள்.
“நீயும் நானும் பார்த்துச் செய்து வைக்கிற கல்யாணத்துக்கு அவன் இசைந்து வருவானா? அவனுக்கு ‘லவ்’ இல்லாமல் கல்யாணம் பண்ணிக் கொள்ளவே பிடிக்காதே” என்றார் அவர்.
பார்வதிக்கு இந்தக் காலத்து வழக்கங்களெல்லாம் சிறிது தெரியும். கணவர் என்ன சொல்கிறார் என்பது அவளுக்குப் புரிந்தது. நாற்பத்தைந்து வயதுக்கு மேல் ஆகியிருந்தாலும் முகத்தில் வெட்கம் படர..”உங்களுக்கு என்ன வேலை? எதையாவது சொல்வீர்கள். அப்படி அவன் யாரையாவது ‘லவ்’ பண்ணுகிறான் என்று தெரிந்தால் அதன்படியே செய்து விட்டுப் போகிறது” என்றாள்.
“ஆகட்டும். பார்க்கலாம். கல்யாணம் என்பது ஆயிரங்காலத்துப் பயிர் போன்றது. இந்தப் பிள்ளைக்கு ஏற்ற ஒரு பெண்ணைத் தேடுவது மிகவும் சிரமம். பேச்சிலும் செய்கையிலும் ஒழுங்கு தவறியவன். அவனைத் திருத்தி நல்வழிப்படுத்த ஒரு பண்புள்ள பெண் தான் வேண்டும்” என்று மனைவியைச் சமாதானம் செய்தார் கல்யாணராமன்.
மூர்த்தி பசுமலைக்கு வந்த நாட்களாக அவனைப் பற்றி அதிகம் கவலைப்பட்டவர் கல்யாணராமன் தான். நாலு இடங்களுக்குப் போய் விட்டு வந்தவன் கௌரவமாகவும் கண்யமாகவும் நடந்து கொள்வான் என்று எதிர்பார்த்தார் அவர். ஆனால் அவனுடைய போக்கு சிறிதும் மாறவில்லை என்று தெரிந்ததும் அவர் மனம் வருந்தினார். அன்று காலையில் தெருவில் நடந்த சில்லறைச் சண்டைக்கு அப்புறம் அவர். மூர்த்தி பவானியின் வீட்டுக்குள் போய் விட்டு வந்ததை விரும்பவில்லை. “இவன் தத்துப் பித்தென்று பேசிக் கொண்டு அங்கே போவானேன்?’ என்று தான் அவர் நினைத்தார். மூர்த்தி தெருத் திண்ணையில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தபோது கல்யாணம் தாகத்துக்குச் சாப்பிட உள்ளே சென்றார். அங்கே பார்வதி வெள்ளரிப் பிஞ்சுகளைத் துண்டங்களாக நறுக்கி, மிளகும் உப்பும் சேர்த்துப் பொடி செய்து அதில் துண்டங்களைப் பிசிறி இரண்டு கிண்ணங்களில் எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள்.
“ஏது வெள்ளரிக்காய்? வாங்கினாயா என்ன?” என்று கேட்டுக் கொண்டே கல்யாணம் மணையில் உட்கார்ந்து கொண்டார்.
“ஆமாம். மேட்டுக் கழனியிலிருந்து அந்தப் பெண் பச்சையம்மாள் கொண்டு வந்தது. மூர்த்திதான் விலை பேசி வாங்கினான். அவன் தான் என்னமாகப் பேரம் பேசுகிறான் என்கிறீர்கள்? அந்தப் பெண்ணிடம் குழைந்து குழைந்து பேசி வாங்கினான்” என்று மருமகன் சமர்த்தை மெச்சி வாயாரப் புகழ்ந்து கொண்டாள் பார்வதி.
கல்யாணத்துக்கு இதைக் கேட்கவே அருவருப்பாக இருந்தது. எந்தப் பெண்ணைப் பார்த்தாலும், இப்படிப் பல்லைக் காட்டும் மூர்த்தியின் மேல் அவருக்கு ஆத்திரமாக வந்தது.
“இந்தா! சிறிசுகள் வந்தால் நீ பேரம் செய்து வாங்குவாயா? மூர்த்தி வாங்கினான் கீர்த்தி வாங்கினான் என்கிறாயே! அந்தக் கல்யாண விஷயம் மறந்துவிட்ட தாக்கும் உனக்கு! நீதான் எதையும் லேசில் மறந்து போகிறவளாயிற்றே’ ‘ என்று கண்டித்தார் அவர்.
பார்வதி பதில் கூறுவதற்குள் கொல்லைக் கதவை திறந்து கொண்டு பவானியும் பாலுவும் உள்ளே வந்தார்கள். பாலு கல்யாணத்தின் அருகில் சென்று உட்கார்ந்து வெகு சுவாதீனமாகக் கிண்ணத்திலிருந்த வெள்ளரி துண்டுகளை எடுத்துச் சாப்பிட ஆரம்பித்தான்.
பவானி பார்வதியின் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டாள். சிறிது நேரம் அங்கிருந்த யாருமே பேசவில்லை. பனியன் கூடப் போடாமல் வெற்றுடம்பாக அறையில் நிஜாருடன் உட்கார்ந்திருந்தான் பாலு. காய்களை நறுக்கி முடித்ததும் அரிவாள் மணையை ஒருபுறமாக வைத்துவிட்டுத் திரும்பிய பார்வதியின் கண்களில் பாலுவின் விலாப்புறம் தெரிந்தது. வரி வரியாக விசிறிக் காம்பால் அடித்த அடிகள் அங்கே அந்தப் பொன்மேனியில் கன்றிப்போய்த் தென்பட்டன. ஒரு மகவுக்காகத் தவமிருந்த அந்தப் பெண் உள்ளத்தில் வேதனை நிரம்பியது. பச்சைப் பாலகன், ஒன்றும் தெரியாத வயசு. இப்படி அடியும் உதையும் வாங்க அந்தக் குழந்தை செய்த தவறு தான் என்ன என்று நினைத்துப் பார்வதி கண் கலங்கினாள். புடவைத் தலைப்பால் கண்களைத் துடைத்துக் கொண்டு அவள், “பவானி! குழந்தையை அடித்தாயா?” என்று கேட்டாள்.
கல்யாணராமன் அப்பொழுது தான் பாலுவைக் கவனித்தார். வரிவரியாகத் தெரிந்த அந்த அடிகளைப் பார்த்ததும் அவர் பவானியை ஏறிட்டுப் பார்த்தார். அந்தப் பார்வையில் பிள்ளையைப் பெற்று விட்டால் மட்டும் போதாது. எப்படி வளர்க்க வேண்டும் என்றும் தெரிந்து இருக்க வேண்டும் எனும் பாவம் தொனித்தது. வயசான அத்தம்பதி தன்னை ஒரு தினுசாகப் பார்ப்பதை உணர்ந்து வெட்கித் தலை குனிந்தாள்,
“ஆமாம் மாமி. பாலுவை அடித்து விட்டேன். ஊரார் சொன்னதை நீங்கள் கேட்டிருந்தால் நான் அடித்தது சரியா தவறா என்று தெரிந்து கொண்டிருப்பீர்கள்” என்றாள் பவானி.
”ஊரார் என்ன சொல்லி விட்டார்கள் பவானி? தகப்பன் இல்லாத பிள்ளை என்று தானே சொன்னார்கள். வாஸ்தவம்தானே அம்மா அது ? வாசு இருந்திருந்தால் பாலுவை நீ இப்படி அடித்திருப்பாயா?” என்று கேட்டார் கல்யாணம்.
தன்னை அடித்ததற்காக அம்மாவை எல்லோரும் கண்டித்துப் பேசுவதைப் பாலு விரும்பவில்லை. ஆகவே அவன் கணீரென்ற குரலில்..”அம்மா அடித்தால் பரவா யில்லை மாமா. அதற்குப் பதிலாக எனக்கு இரண்டு பங்கு உருளைக் கிழங்கு பொடிமாஸ் போட்டு விட்டாள். அத்தோடு என்னைக் கட்டிக் கொண்டு, ‘என் கண்ணே, ஏண்டா நீ விஷமம் செய்கிறாய்?’ என்று கேட்டுக் கண்ணீர் விட்டாள்” என்றான் பாலு.
வெப்பத்தால் சுடும் மணல் வெளியின் அடித்தனத்திலே ஓடும் குளிர்ந்த நீரைப் போல தாயின் கருணை இதயத்தின் ஆழத்திலே தேங்கிக் கிடக்கிறது. சமயம் நேர்ந்தபோது அது பொங்கிப் பிரவாகமாக வெளியே வருகிறது. அழகிய சுனைகளையும் நீர் ஊற்றுக்களையும் வற்றாத ஆறுகளையும் தன் அகத்தே கொண்டிருக்கும் பூமிதேவி. குமுறும் எரிமலைகளையும், கொதிக்கும் ஊர் றுக்களையும் கூடத் தாங்கியிருக்கிறாள். தாயின் உள்ளத்தில் கருணையும் கண்டிப்பும், அன்பும் கோபமும் ஒன்றோடொன்று பிணைந்து தான் இருக்கும்.
அம்மா வேண்டுமென்று தன்னை அடிக்கவில்லை. ஊரார் ஏசுகிறார்களே என்று குமுறித்தான் அடித்தாள் என்பதை அந்த பிஞ்சு மனம் புரிந்து கொண்டதோ இல்லையோ? ”என் கண்ணே!” என்று அவள் அவனை அன்புடன் அணைத்துக் கொண்டவுடன் அவன் அடியை மறந்து விட்டான். இனிமேல் விஷமம் செய்யக் கூடாது.. என்று தீர்மானித்துக் கொண்டான்.
கல்யாணராமன் தன்னையே நொந்து கொண்டார் ஒரு கணம். விரிந்த கடலைப் போல வியாபித்து நிற்கும் தாயின் அன்புக்குச் சற்று முன் களங்கம் கற்பிக்க முனைந்தார் அல்லவா?
பார்வதி மட்டும் அருகில் இருந்த அலமாரியைத் திறந்து தேங்காய் எண்ணெயை எடுத்துப் பஞ்சில் தோய்த்து பாலுவின் விலாப் புறத்தில் தடவிக் கொடுத்தாள். பவானிக்குப் பாலுவின் விலாவைப் பார்க்கும் போதெல்லாம் இதயம் வலுத்தது.
”நாளைக்குச் சரியாகப் போய்விடும் மாமி’, என்றான் பாலு அலட்சியமாக.
“என்ன சரியாகப் போகிறதோ, போ! ஆடு மாடுகளைக் கூட இப்படி அடிக்கக் கூடாது” என்றாள் பார்வதி சற்று உஷ்ணமாகவே.
“அப்படியா மாமி! எங்க பள்ளிக்கூடத்து வாத்தியார்கள் இதைவிடக் கேவலமாக அடிப்பார்கள். ஒரு வாத்தியார் பிரம்பால் அடித்தால் வெளியே வரி வரியாகத் தெரிந்து விடும் என்று தலையில் ‘நறுக்’ ‘நறுக்’ சென்று குட்டுவார். ஒருவர் காதைப் பிடித்துத் திருகுவார். ஒருவர் வாய்க்கு வந்தபடி ஏசுவார்” என்று பாலு தன் பள்ளிக்கூடத்தைப் பற்றிப் பேச ஆரம்பித்தான். பிறகு அவன், “மாமா, அடுத்த தடவை என்னை வேறு பள்ளிக்கூடத்தில் சேர்த்து விடுங்கள். அதைப்பற்றிக் கேட்கத்தான் நானும் அம்மாவும் இங்கே வந்தோம்’ என்றான்.
12. பெண்களின் சம உரிமை!
திண்ணையில் தூங்கிக் கொண்டிருந்த மூர்த்தி விழித்துக் கொண்டு சமையலறையில் இவர்கள் பேசுவதை அரை குறையாகக் கேட்டுக் கொண்டிருந்தான் . இடையில் வந்து சடாலென்று பேச்சில் கலந்து கொள்வதைவிடச் சற்றுப் பொறுத்திருந்து எழுந்து போகலாம் என்று நினைத்து அங்கேயே படுத்திருந்தான்.
பாலு புதுப் பள்ளிக்கூடத்தில் சேர இருப்பது அவனுக்கு மகிழ்ச்சியைத் தந்தது. அடுத்த வீட்டுக்குள் போய் பவானியுடன் பேசுவதற்கு ஏதாவது ஒரு சாக்கு வேண்டாமா?
பாலு கூறியதைக் கேட்டதும் கல்யாணம், ”அதற்கென்ன அப்பா டவுனில் இருக்கும் முனிசிபல் ஹைஸ்கூலில் சேர்த்தால் போச்சு. நாளைக்குப் போய் ரைட்டரைக் கேட்டு டி.ஸி. வாங்கி வந்துவிடு” என்றார் .
“அவனை ஏன் போகச் சொல்ல வேண்டும்? நானே போய் வாங்கி வருகிறேன்” என்றாள் பவானி.
திண்ணையிலிருந்த மூர்த்தி மெதுவாகக் கூடத்தை அடைந்தான். பேச்சு சுவாரஸ்யமான கட்டத்துக்குத் திரும்புகிறது என்பதை அறிந்ததும் அடுத்தாற்போல் இருந்த சமையலறைக்குள் அவன் நுழைவதற்கு அதிக நேரம் பிடிக்கவில்லை .
இது வரையில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்த பவானி தயக்கத்துடன் எழுந்து நின்றாள்.
”நோ, நோ — நீங்கள் பேசாமல் உட்கார்ந்து கொள்ளுங்கள் இந்தக் காலத்தில் — அதுவும் ஈக்வாலிட்டி ஏற்பட்டிருக்கும் இந்த நாளில், ஒரு ஆணைப் பார்த்துப் பெண் எழுந்து நின்று மரியாதை செய்வது எல்லாம் எனக்குப் பிடிக்காது. உட்காருங்கள்” என்றான் மூர்த்தி .
பவானி தயங்கிக் கொண்டே உட்கார்ந்தாள்.
“நீ பாட்டுக்கு உட்கார் பவானி. அவன் உன் உடன் பிறந்தவன் மாதிரி” என்றாள் பார்வதி.
”சே! சே! சுத்தத் தவறு! உடன் பிறந்தவன் எதிரில் உட்காரலாம்; அன்னியன் எதிரில் உட்காரக் கூடாதாக்கும்! – பெண்கள் சுதந்திரம், சம உரிமை எல்லாம் சும்மா பேச்சளவிலே இருக்கிறதே தவிர, நடை முறையில் வரக் காணோமே” என்று அலுத்துக் கொண்டான் அவன்.
“அதெல்லாம் நடைமுறையில் வருவதற்கு முன்பு வாலிபர்களின் மனம் நன்றாகப் பண்பட வேண்டும். அது தெரியுமா உனக்கு மூர்த்தி? பேச்சிலே ஒழுங்கு இருந்தால் மட்டும் போதாது. செய்கையிலும் நடத்தையிலும் ஒழுக்கமும் பண்பாடும் நிரம்பி இருக்க வேண்டும். அது எல்லோரிடமும் இருக்கிறதா அப்பா? பெண்களை நிமிர்ந்து பார்க்காமல் போகிறவனை அசடன் என்றும், அப்பாவி என்றும் கேலி செய்கிறகாலம் ஆயிற்றே இது?” என்றார் கல்யாணராமன் .
மூர்த்தியின் முகம் சட்டென்று வாடிப் போயிற்று. “என்ன மாமா இது? நான் ஏதோ பேசப் போக நீங்கள் என்னவோ சொல்லுகிறீர்களே” என்று பேச்சை மாற்றினான்.
பவானிக்கு இந்தப் பேச்செல்லாம் பிடிக்கவில்லை. பஞ்சாயத்துப் பள்ளிக்கூடத்து ரைட்டரிடமிருந்து டி.ஸி வாங்குவது ’சிவனை நேரில் தரிசித்து வரம் வாங்கும் விஷயமாகவல்லவா இருக்கிறது?’ என்று கவலைப்பட்டு உட்கார்ந்து கொண்டிருந்தாள்.
தலையைக் குனிந்து சிந்தனையில் மூழ்கி இருந்த பவானியின் தோற்றத்தை மூர்த்தி தன் ஒரக் கண்களால் அளவெடுத்துக் கொண்டான். கனகாம்பர வர்ணத்தில் மெல்லிய கரை போட்ட கைத்தறிப் புடவையை உடுத்தி, வெள்ளைச் ’சோலி’ அணிந்திருந்தாள் அவள். அலை அலையாகப் படிந்து வளர்ந்திருந்த கூந்தலை முடிச்சிட்டி ருந்தாள் பவானி.
நீண்ட அவள் கண் இமைகள் இரண்டும் மை தீட்டப் பட்டவை போலக் கருமையுடன் விளங்கின. அவள் வேண்டுமென்று கண்களைச் சுழற்றுவது இல்லை. ஆனால், மனத்திலே குமிழியிடும் துயரம் அவள் கண்களில் தேங்கி அவைகளைச் சஞ்சலத்தில் ஆழ்த்தி அங்கும் இங்கும் சுழல வைத்தன.
‘யாருடன் பேசினால் என்ன தவறு நேர்ந்து விடுமோ? யாரைப் பார்த்தால், ஏதாவது களங்கம் வந்து விடுமோ’ என்றெல்லாம் அவள் மனம் தவித்துக் கொண்டிருந்தது. அழகாகப் பிறந்தது அவளுடைய குற்ற மில்லை. அழகை ஒரு பெண்ணுக்கு அள்ளி அளித்த ஆண்டவன் அவள் வாழ்க்கையைச் சூன்யமாக்கி விட்டானே. அவனுடைய குற்றம்தானே அது?
தண்ணீர் கொண்டு வருவதற்குக் குளத்துக்குப் போனால் அறுபது வயசான சேஷாத்ரி ஏதாவது காரணத்தை வைத்துக் கொண்டு அவளிடம் பேச வருகிறார்.
”பையன் நன்றாகப் படிக்கிறானா? வாசு போன அப்புறம் உன் அண்ணா இந்தப் பக்கமே வரவில்லையே? கூடப் பிறந்தவர்களே அப்படித்தான் அம்மா” என்று ஏதாவது பேசிக் கொண்டு நிற்பார் குளத்தங் கரையில்.
”என்னோடு பேசாதீர்கள். இதெல்லாம் என்ன அனாவசியமான பேச்சுக்கள்!” என்று அவரிடம் சொல்லி விட வேண்டும் என்று பவானி துடிப்பாள். ஆனால் ஊரில் நாலு பெரியவர்களுடைய உதவி தனக்குத் தேவையாக இருக்கும் என்று எண்ணி ஒரு பரிதாபச் சிரிப்புச் சிரித்து விட்டு அங்கிருந்து வீட்டுக்கு வந்து விடுவாள்.
தலையைக் குனிந்து கொண்டு அவள் உட்கார்ந்திருந்தாலும் அவளுடைய சிந்தனை பூராவும் பாலுவின் வருங்காலத்தை எப்படி உருவாக்குவது என்பதில் முனைந்திருந்தது. பவானி இப்படி திடீர் என்று மௌனியாகச் சிந்தனையில் மூழ்கி விடுவதை பார்வதியும் கல்யாணமும் கவனித்திருக்கிறார்கள். ஆனால் மூர்த்தி மட்டும் தன்னைப் பார்த்துத்தான் அவள் தலை குனிந்து உட் கார்ந்து இருக்கிறாள் என்று விகல்பமாக நினைத்துக் கொண்டு அந்த அதர்மமான கற்பனைக்கு உருவம் கொடுக்க ஆரம்பித்தான்.
13. அம்பலத்தரசன்
தகுந்த துணையின்றி வாடும் ஒரு அபலையின் வாழ்க்கையிலே. இன்பமும் அமைதியும் பார்ப்பதற்குக் கிட்டாது.
கல்யாணராமனின் வீட்டிலிருந்து கிளம்பி பவானி கொல்லைப் பக்கமாகவே தன் வீட்டுக்குள் சென்றாள். கொல்லையில் அடர்த்தியாகப் படர்ந்திருந்த நித்திய மல்லிகைப் பந்தலிலிருத்து ‘கம்’ மென்று மணம் வீசியது. மாலைத் தென்றலில் மலர்ந்து பசுமையான இலைகளின் ஓடையே அவை ஆடி அசைவதே வனப்பு மிகுந்த காட்சியாக இருந்தது.
பந்தலின் கால் ஒன்றில் சாய்ந்து பவானி சிறிது நேரம் வான வெளியையும், தொலைவில் மறையும் சூரியனின் அஸ்தமனத்தையும் பார்த்துக் கொண்டிருந்தாள். அக்கினிப் பிழம்பான ஆதவன் தன் வெப்பத்தைக் குறைத்துக் கொண்டு மேற்குக் கடலாகப் போய்க் கொண்டிருந்தான். வான வீதி எங்கும் பாவைகளின் பட்டம். தெருக்களில் மேய்ச்சலிலிருந்து திரும்பும் பமக்களின் குளம்பொலி. பசுமலைக் கிராமத்தில் எழுந்தருளி இருக்கும் பசுபதி கோவிலிலிருந்து மிதந்து வரும் பணியின் நாதம்.
‘இன்னொருவருடைய மனதிலே என்ன இருக்கிறது? விஷம் இருக்கிறதா அல்லது அன்பெனும் அமுதம் நிறைந் திருக்கிறதா என்பதை எப்படித் தெரிந்து கொள்வது? கல்யாணராமன் வெள்ளை மனத்தவர். அன்புடன் பழகுகிறார். அந்த அம்மாள் பார்வதி கருணையே உருவானவள். அடக்கமானவள். ஆனால் அவர்? அந்த மூர்த்தி எப்படிப்-பட்டவர்? பேச்சும் செய்கையும் அவரைப் பலவிதமாக எண்ணத் தோன்றுகிறதே!’ என்று குழம்பினாள் பவானி.
அப்பொழுது கோவிலிலிருந்து காற்றிலே ஒரு இசை கலந்து வந்தது. மணியின் நாதத்தோடு அந்த இசை பரவியது.
இசையின் ஆனந்தத்தில் லயித்துப் பவானி அப்படியே நின்றாள். மேற்கே செக்கர் வானில் ஒளிப் பிழம்பாகச் சுழலும் சூரியனின் வடிவத்திலே தில்லையம் பதியிலே ஆனந்த நடனமிடும் இறைவன் தோன் றினான். உலகையே தன் சக்தியால் ஆட்டுவிக்கும் வள்ளலின் ஆட்டங்களுக்கு முன்பு நல்லவையும், தீயவையும். தலை குனிந்து வணங்க வேண்டியது தானே?
பவானியின் கல்யாணத்தின் போது அவளுக்குப் பல பரிசுகள் வந்திருந்தன. அதிலே அவளுக்குப் பிடித்தமான தேவாரப் பாடல்கள் புத்தகத்தை மட்டும் எடுத்துப் பத்திரமாகப் பெட்டியில் வைத்துப் பூட்டிக் கொண்டாள். யாரோ ஒருவர் அன்புடன் அளித்த நடராஜனின் திருஉருவப் படத்தை வீட்டுக் கூடத்தில் மாட்டி வைத்தாள்.
குடும்பம் பல்கிப் பெருகப் போகிறது என்றுதான் முதலில் அவள் நினைத்தாள். ஆனால், அவள் இதயத்தில் அரசு புரிந்த நடராஜன் வேறு விதமாகவல்லவா செய்து விட்டான்? கணவனைப் பிரிந்த பிறகு சிலகாலம் அவள் நடராஜனின் உருவத்தை ஏறிட்டும் பார்க்க வில்லை. வாசு போய் ஒரு வருஷம் வரையில் அந்தப் படத்தில் தூசும். தும்பும் படிந்து கிடந்தது.
அன்று திருவாதிரை நாள். கோவிலில் பாண்டும் நாதஸ்வரமும் ஒலித்தன. உதயத்தில் நடராஜன் ஆடிக் கொண்டே கோபுர வாயிலில் பக்தர்களுக்கு தரிசனம் அளிக்க வந்து விட்டான். பவானி தன் வீட்டுத் திண்ணை ஓரமாக வந்து நின்று கோவிலின் வாயிலை நோக்கினாள்.
அருள் சுரக்கும் ஆண்டவனின் வதனம் அந்தச் காலை வேளையில் அன்புடன், தன் மகவுக்குப் பாலூட்டும் தாயின் கருணை முகத்தை நினைவூட்டியது. தாயை மறந்து மகவால் உயிர் வாழ முடியுமா? வறண்டு போயிருந்த அவள் உள்ளத்தில் அன்புப் பிரவாகம் பெருக ஆரம்பித்தது. பித்துப் பிடித்தவள் போல் வீட்டுக்குள் ஓடினாள். கூட்டத்தில் மாட்டியிருந்த நடராஜப் பெருமானின் உருவப் படத்தை நீர் மல்கும் கண்களால் பார்த்தாள் . விம்மி விம்மி அழுது கொண்டே . . ’பிரபு! என்னை மன்னித்துவிடு! உன்னை உதாசீனம் செய்தால் என் நெஞ்சில் ஏற்பட்ட துயரத்துக்கு முடிவு காண முடியும் என எண்ணி ஏமாந்து விட்டேன்’ என்று வாய் திறந்து தன் உறவினர் ஒருவருடன் பேசுவது போல் அந்தப் படத் கடன் பேசினாள் பவானி.
கொல்லையில் பவழ மல்லிகைப் பூக்கள் உதிர்ந்து கிடந்தன. கூடை நிறைய மலர்களைச் சேர்த்து எடுத்து வந்து பாலை புனைந்து படத்துக்கு அணிவித்தாள் பவானி. அன்றிலிருந்து அவள் துன்பத்தால் வாடும் போதெல்லாம் தன் ஒப்புவமையற்ற புன்னகையால் நட ராஜப் பெருமான் அவளைத் தேற்றி வந்தான்.
கல்யாணராமனும் புன்னகை புரிந்து தான் அவளுடைய துயரங்களைக் கேட்கிறார். பார்வதி கவலையும் கஷ்டமும் பட்டுக் கொண்டே அந்தப் பேதைக்கு ஆறுதல் அளிக்கிறாள்.
’மூர்த்தி’ என்று நினைத்ததும் பவானியின் மனம் ஒரு வினாடி ‘திக்’ கென்று அடித்துக்கொண்டது. உடம்பு ஒரு தரம் குப்பென்று வியர்த்தது. அவன் கபடமாகச் சிரிக்கும்போது அதில் வஞ்சகம், சுயநலம், அதர்மம். கோழைத் தனம் இவ்வளவும் குமிழியிடுகின்றனவே என்று நினைத்தாள் பவானி.
இவ்வளவு பேர்களுடைய சிரிப்பையும் விட அவளுக்கு நடராஜப் பெருமானின் கொவ்வைச் செவ்வாயின் குமிண் சிரிப்புத்தான் பிடித்திருந்தது. ஆகவே, அவள் அப்பொழுதுதான் அலர்ந்து கொண்டிருந்த நித்திய மல்லிகை மலர்களைப் பறித்து எடுத்துக் கொண்டு வீட் டுக்குள் நுழைந்தாள்.
கூடத்தில் ஸ்வாமி படத்தருகில் விளக்கேற்றி விட்டு இரண்டு ஊதுவத்திகளை எடுத்துக் கொளுத்திச் சுவரில் செருகி வைத்தாள். வாழை நாரை எடுத்து வந்து படத்துக்கு நேராக உட்கார்ந்து கூடையிலிருந்த மலர்களைத் தொடுக்க ஆரம்பித்தாள்.
அந்த அந்தி வேளையிலே, சற்றே திறந்திருந்த கொல்லைக் கதவை நன்றாகத் திறந்து கொண்டு அசட்டுச் சிரிப்புடன் மூர்த்தி உள்ளே வந்து நின்றான்.
பந்தாட்ட நிபுணன் போல் அவன் “ஸ்போர்ட்ஸ்’ பனியனும், அதன் கழுத்துப் புறத்தில் சற்றே வெளியில் தெரியும்படியாகச் சுற்றப்பட்டிருந்த கைக்குட்டையும், ‘பனாமா பாண்ட்’டும் அணிந்து உதட்டைப் பற்களால் அழுத்திக் கடித்துக் கொண்டே நின்றான். அவன் தடவியிருந்த வாசனைத் தைலத்தின் நெடி காத வழிக்கு வீசியது.
”யார்? நீங்களா?” என்று அதிர்ச்சியுடன் கேட்டாள் பதறி எழுந்த பவானி.
“ஆமாம். என்னைக் கண்டு நீங்கள் ஏன் இப்படிப் பதறுகிறீர்கள்? படித்த பெண்ணாகிய நீங்கள் இப்படிப் பயந்து நடுங்குவது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது” என்றான் மூர்த்தி.
14. அன்னையும் ஆண்டவனும்
மல்லிகை மாலையைக் கையில் பிடித்துக் கொண்டு முகம் வெளிறிட அவள் நின்ற காட்சி பழைய சித்திரம் ஒன்றை நினைவூட்டியது அவன் மனத்தில். ’என் வீட்டுக்குள் உத்தரவில்லாமல் ஏன் வந்தாய்? வெளியே போய் விடு’ என்று சொல்ல வேண்டும் போல் பவானி திணறினாள். ஆனால், கலவரத்தால் வார்த்தைகள் தொண்டைக்-குள்ளேயே புதைந்து போயின. கலவரமும் குழப்பமும் போட்டியிட அவள் பேசாமல் தரையைப் பார்த்துக் கொண்டு நின்றாள்.
அவள் வெகுண்டு எழாமல் மௌனியாக நின்றது மூர்த்திக்கு அதிகமான துணிச்சலை ஏற்படுத்தியது. அவன் நிதானமாக பெஞ்சியில் உட்கார்ந்து கொண்டு ”பாருங்கள் மாமாவிடம் சொல்லிக் கொண்டிருந்ததை கேட்டேன். பாலுவை வேறு பள்ளிக்கூடத்தில் சேர்க்க வெண்டும். அவ்வளவு தானே? அதையெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன். உங்களுக்கு என்ன உதவி தேவையானாலும் என்னிடம் கேளுங்கள் செய்வதற்குச் சித்தமாக இருக்கிறேன்” என்று நாடக பாணியில் தலையைத் தாழ்த்தித் தன் பணிவைத் தெரிவித்துக் கொண்டான்.
பவானிக்குச் சற்றுத் தைரியம் வந்தது. “சே! சே! அதெல்லாம் வேண்டாம். உங்களுக்கு எதற்கு வீண் சிரமம்?” என்றாள் பவானி, தன் கையில் இருந்த மாலையைப் பார்த்துக் கொண்டே.
மாலையிலிருந்த அரும்புகள் யாவும் மலர்ந்து ‘கம்’ மென்று மணம் வீசிக் கொண்டிருந்தது. இவன் வராமல் இருந்தால் இத்தனை நேரம் அதைப் படத்துக்குப் போட்டிருப்பாள் அவள். சட்டென்று அவள் மனசில் ஓர் எண்ணம் தோன்றியது. கோவிலுக்குப் போகிறேன் என்று சொல்லிக்கொண்டு அங்கிருந்து வெளியே கிளம்பி விட்டால் ஒரு வேளை போய் விடக்கூடும் என்று தோன்றவே, அருகில் இருந்த அலமாரியைத் திறந்து தட்டில் வெற்றிலைப் பாக்குப் பழம், கற்பூரத்தை எடுத்து வைத்தாள்.
பெஞ்சியில் உட்கார்ந்திருக்கும் தன்னை அவள் லட்சியம் பண்ணின மாதிரியாகவே காட்டிக் கொள்ள வில்லையே என்று மூர்த்தி மனத்துள் குமைந்தான். அவளோடு மறுபடியும் பேச்சை எப்படி தொடங்குவது என்று புரியாமல் திகைத்தான்.
அதற்குள் பவானி மாலையை நடராஜப் பெருமானுக்குச் சாத்தி விட்டுக் கையில் தட்டுடன் கொல்லைப் பக்கம் போகத் திரும்பினாள். மூர்த்தி தொண்டையைக் கனைத்துக் கொண்டு எழுந்து நின்றான்.
”எங்கே கோவிலுக்கா?” என்று அவளைத் தடுத்துப் பேசினான்.
“ஆமாம்; இன்று கிருத்திகை போய்விட்டு வருவது வழக்கம்”
முன்னைவிட அவள் வார்த்தைகள் சற்று உஷ்ணமாகவே வெளி வந்தன.
”இதிலெல்லாம் உங்களுக்கு நம்பிக்கை உண்டா?” என்று கேலியாகக் கேட்டான் மூர்த்தி.
”எதில்?” – பவானி திகைத்துப் போய்க் கேட்டாள்.
”கோவிலுக்குப் போகிறதில், அங்கே அவர்கள் இது தான் கடவுள் என்று சொல்லிக் காட்டும் உருவத்தை வணங்குவதில்.”
பவானி, கூட்டத்தில் இருந்த நடராஜனின் உருவத்தை ஏறிட்டுப் பார்த்தாள். என்றும் எப்பொழுதும் நிலவும் அந்தப் புன்னகையைக் கவனித்தாள். பிறகு அழுத்தமாக ”உங்களுக்குப் பெற்றோர் இருக்கிறார்களா?” என்று கேட்டாள்.
“ஏன்? அப்பா போய் ரொம்ப காலம் ஆகிவிட்டது. அம்மா சமீபத்தில் நாலைந்து வருஷங்களுக்கு முன்பு தான் காலமாகி விட்டாள்” என்றான் மூர்த்தி.
”அப்படியா? அந்த அம்மாள் தான் உங்கள் தாயார் என்று எப்படி நிச்சயமாகச் சொல்வீர்கள்?”
மூர்த்தியின் முகம் வெளிறியது. ”என்ன? நீங்கள் என்ன சம்பந்தமில்லாமல் பேசுகிறீர்கள்?” என்றான்.
பவானிக்கு கோபம் வந்தது.
”சம்பந்தத்துடன் தான் பேசுகிறேன். பிறந்த தினத்திலிருந்து பார்த்து வந்தாலும். தாயின் அன்பணைப்பிலே வளர்ந்தாலும், எல்லாவற்றிற்கும் மேலாக அவள் கர்ப்பத்தில், அவள் ரத்தத்தினாலும் வளர்ந்ததனால் அந்த நம்பிக்கை வேரூன்றி விட்டதல்லவா? அதைப் போலவே இறைவன் என்னும் மகாசக்தியும் தாயைப் போன்றதுதான். அதைவிட மேலானது. பெற்ற தாய் மகவை மறக்கும் காலமும் உண்டு. ஆனால் நம்மைப் படைத்த ஆண்டவன் நம்மை மறந்தான் என்கிற பேச்சே கிடையாது. கோவில். கடவுள் பக்தி, அரிய பண் பாடு. சீலம், சத்தியம், நேர்மையாவும் நம் உள்ளத்திலே தாயன்பைப் போல வளர்ந்து வேரூன்றி இருக்கிறது. கண்டதைப் படித்து விட்டு, கண்டவர்கள் பேசுவதைக் கேட்டு விட்டு, குதர்க்கம் பண்ணாதீர்கள்!” என்று சொல்லிக் கொண்டே பவானி கொல்லைக் கதவைத் திறந்து கொண்டு வீதியில் இறங்கிக் கோவிலை நோக்கி நடந்தாள்.
‘வெறிச்’ சென்று கிடந்த அந்த வீட்டைப் பார்த்தான் மூர்த்தி. கூடத்திலிருந்த நடராஜப் பெருமான் அவனைப் பார்த்துச் சிரித்தார்.
திறந்து கிடந்த கொல்லைப் பக்கமாக பார்வதி பாலுவுடன் உள்ளே வந்தாள். அவள் கையில் ஒரு பாத்திரத்தில் வெண் பொங்கலும், இன்னொரு கையில் மாங்காய் ஊறுகாய் ஜாடியும் இருந்தது.
”பவானி, பவானி, இன்று கிருத்திகை ஆயிற்றே. ராத்திரி நீ சாப்பிடமாட்டாய் என்று நினைவு வந்தது. இதை எடுத்துக் கொண்டு வந்தேன்” என்று சொல்லிக் கொண்டே உள்ளே வந்தாள் பார்வதி. அங்கே மூர்த்தி நிற்பதைப் பார்த்ததும், ”நீ எங்கேடா இங்கு வந்தாய்? எங்காவது வெளியே போய் இருக்கிறாயாக்கும் என்றல்லவா நினைத்தேன்? பவானி எங்கே?” என்று கேட்டாள்.
மூர்த்திக்கு நடுக்கம் கண்டது. ”நீ எங்கேடா இங்கு வந்தாய்?’ என்ற கேள்வி என்ன சாமானிய மானதா?
’உனக்கு இங்கே என்ன வேலை’ என்கிற அர்த்தம் அதில் புதைந்து கிடந்தது. பார்வதி சமையலறைக்குள் சென்று தான் கொண்டு வந்தவைகளை வைத்து விட்டுத் திரும்பியதும் மூர்த்தி சமாளித்துக் கொண்டு, “நான் பாலுவைத் தேடிக் கொண்டு வந்தேன் மாமி. நான் உள்ளே வரும் போது பவானி கொல்லைப் பக்கமாகவே கோவிலுக்குப் போவதைப் பார்த்தேன்” என்றான்.
”கோவிலுக்குப் போனாளா? என்னைக் கூப்பிடாமல் போகமாட்டாளே?” என்று ஒரு கணம் தயங்கியபடி யோசித்தாள் பார்வதி. பிறகு என்னவோ நினைத்துக் சொண்டவளாக அவனைப் பார்த்து, “சரி. நானும் இப்படியே கோவிலுக்குப் போய் சுவாமி தரிசனம் செய்து விட்டு வருகிறேன்” என்று கூறிவிட்டுக் கோவிலுக்குச் சென்றாள்.
மூர்த்தி சிந்தனை நிறைந்த மனத்துடன் வீட்டை அடைந்தான். அவன் மனத்திலே பல போராட்டங்கள் நடந்தன. கோவிலுக்குச் சென்ற பவானி பார்வதி மாமியிடம் தன்னைப் பற்றி ஏதாவது சொல்லி விடுவாளோ என்று அஞ்சினான். அதைத் தெரிந்து கொண்டு மாமா, “ஏண்டா! அந்த வீட்டுக்குள் உனக்கு என்னடா வேலை? மறுபடியும் உன் புத்தியைக் காண்பிக்க ஆரம்பித்து விட்டாயே’ என்று ஏதாவது சொல்லி விட்டால் என்ன பண்ணுவது என்று மனத்துக்குள் வேதனைப்பட்டான்.
ஆனால் பெருந்தன்மையும், நிதான புத்தியுமுடைய பவானி கோவிலுக்குச் சென்றவுடன் முதலில் விநாயகப் பெருமானுடைய சன்னிதிக்குச் சென்று அவனைத் தோத்திரம் செய்து வணங்கினாள். அன்று கிருத்திகை யாதலால் மூலஸ்தானத்தில் அதிகக் கூட்டம். அங்கே நின்று உலகெலாமுணர்ந்து ஓதற்கரிய பரம் பொருளை மன முருகித் துதித்தாள்.
வீட்டிலே அரைமணிக்கு முன்னால் நடந்த சம்பவங்களை அவள் அநேகமாக மறந்துவிட்டாள். அவள் உள்ளத் தெளிவுடன் முருகனின் சமூகத்தை அடைந்தவுடன், ”பவானி! என்னைக் கூப்பிடாமல் கோவிலுக்கு வந்துவிட்டாயே! உன்னை வீட்டில் போய்த் தேடிய பிறகுதான் நீ இங்கு வந்திருப்பது தெரிந்தது. மூர்த்தி சொன்னான்” என்றாள் பார்வதி.
ஒரு கணம் பவானிக்கு மூர்த்தியின் பேச்சுக்கள் நினைவுக்கு வந்தன. அரையிலே பச்சைப்பட்டு தரித்து நவரத்தினங்களால் ஆன ஆபரணங்களை அணிந்து, கையிலே தாங்கியிருக்கும் சக்தி வேலுடன் கந்தவேல் நிற்கும் கண்கொள்ளாக் காட்சியை அவன் பார்க்காததனால் தான் ‘கோவிலிலே என்ன இருக்கிறது?’ என்று கேட்டான். கோவிலில் இல்லாத அழகு. இன்பம். வேறு எங்கே இருக்கிறது?
ஹும்……. பாவம்! சிறு பிள்ளை ! கட்டுப்பாடு இல்லாமல் வளர்ந்ததனால், இப்படிக் கண்டபடி பேசிக் கொண்டு அசட்டுத்தனமாக நடக்கிறார் பாவம்! என்று மனத்துக்குள் அனுதாபப்பட்டாள் பவானி. மூர்த்தியைப் போலத் தான் பாலுவை வளர்க்கக் கூடாது.
கொஞ்சம் கண்டிப்பும், மிரட்டலும் அவசியம் தான் என்று நினைத்துக் கொண்டாள்.
சன்னிதியில் தீபாராதனை நடந்தது. விபூதிப் பிரசாதம் பெற்றுக் கொண்டு பவானியும் பார்வதியும் வெளியே பிராகாரத்தை அடைந்தார்கள்.
யார் முதலிலே பேசுவது. எதைப் பற்றிப் பேசுவது என்று தோன்றாமல் இருவரும் மௌனமாகவே பிரதட்சிணம் செய்தார்கள். ’மூர்த்தி உன் வீட்டுக்கு வந்திருந்தாளா? அவன் ஒரு மாதிரிப் பையன்’ என்று சொல்லிப் பவானியை எச்சரிக்க வேண்டும் என்றெல்லாம் பார்வதிக்கு எண்ணங்கள் தோன்றின. ஆனால் யாரைப் பற்றியும் அவதூறாகச் சட்டென்று பேசி விடக்கூடாது என்று தன் மனத்தை அடக்கிக் கொண்டாள் அவள். மூர்த்தி வந்திருந்தான். வருவதைப் பற்றித் தவறில்லை. ஆனால் உலகம் அதைத் தெரிந்து கொண்டு பேசுமா? எனக்குக் கவலையாக இருக்கிறது! என்று பார்வதியிடம் கூறிவிட வேண்டும் என்று பவானி பன்முறை முயன்று தன்னையே அடக்கிக் கொண்டாள். ‘சொந்த மருமகனைப் பற்றி மாமியிடமே அவதூறாகப் பேசி விடலாமா?’ என்று நினைத்து பவானி எதுவுமே பேசவில்லை.
15. குற்றமுள்ள நெஞ்சு
குற்றம் செய்தவனுடைய நெஞ்சிலே நிறைந்து இருக்கும் பயமானது ஒருவித விசித்திரத் தன்மையுடையது. ஒவ்வொரு நிமிஷமும் அது அவனை ’நீ ஒரு குற்றவாளி’ என்று எச்சரித்துக் கொண்டே இருக்கும். நல்லதையோ கெடுதலையோ செய்யும்படித் தூண்டுவது பானம்தான். எச்சரிப்பதும் மனமேதான்.
பார்வதியும் கோவிலுக்குப் போன பிறகு மூர்த்தி திறந்த கொல்லைக் கதவைச் சாத்திக்கொண்டு தெருவில் இறங்கிக் கோவிலை நோக்கி நடந்தான். பிராகாரத்தை அவர்கள் சுற்றி வரும் போது, திருடனைப் போல பெரிய கல்தூண்களுக்குப் பின்னால் மறைந்திருந்து பவானியையும் பார்வதியையும் கவனித்தான். எதிர்பார்த்தது என்ன? பார்வதியைப் பவானி கோவிலில் சந்தித்தால் தனியாக ஒரு இடம் தேடிப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து பார்வதியிடம் மூர்த்தியைப் பற்றிச் சொல்லி அழுவாள் என்று நினைத்திருந்தான். ஆனால், ஒன்றுமே நடவாதது போல் பவானி அமைதியாக ஒவ்வொரு சன்னிதியாகச் சென்று சுவாமி தரிசனம் செய்துவிட்டு வருவது அவனுக்கு ஆச்சரியத்தை உண்டு பண்ணியது.
பவானியும் பார்வதியும் வீடு திரும்பும் போது இரவு ஏழரை மணி இருக்கும். கல்யாணராமன் பவானியின் வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து பாலுவுக்குப் பாடம் சொல்லித் தந்து கொண்டிருந்தார். அவர்கள் வீட்டை அடைவதற்கு முன்பே மூர்த்தி வேறொரு சந்தில் புகுந்து, அங்கே வந்து பாலுவுக்கு அருகில் உட்கார்ந்து கொண்டான். பள்ளிக்கூடம் விடுமுறை ஆதலால், கல்யாணம் சில கதைகளைப் பாலுவுக்குச் சொல்லிக் கொண்டிருந்தார்.
”காந்தி மகாத்மா சிறு பையனாக இருந்தபோது தான் மாமிசம் சாப்பிட்டால் உடம்பு வலுவாகி வெள்ளைக் காரர்களை இந்த நாட்டை விட்டு விரட்டி விடலாம் என்று நினைத்து ரகசியமாகத் தன் நண்பனுடன் மாமிசம் சாப்பிட்டார். ஆனால் அப்பா அம்மாவுக்குத் தெரியாமல் அவர் இப்படிச் செய்வது அவருக்கே பிடிக்கவில்லை. எத்தனையோ இரவுகள் இதைப்பற்றி நினைத்துக் கொண்டு தூங்கவே மாட்டாராம்” என்றார் கல்யாணம்.
”அப்படியானால் கெட்ட காரியங்களையும், மனசுக்குப் பிடிக்காதவைகளையும் செய்தால் தூக்கம் வராதா மாமா?” என்று கேட்டான் பாலு.
”ஆமாம் பாலு! திருடன் நிம்மதியாகத் தூங்க மாட்டான். அப்படித் தூங்கினாலும், அவனைப் போலீஸார் பிடித்துக் கொண்டு போவதாகவும், சிறையில் கல் உடைப்ப-தாகவுமே அவன் கனவு கண்டு கொண்டிருப்பான். அவனவன் செய்கைகளைப் பொறுத்தே இருக்கிறது உள்ளத்துக்குக் கிடைக்கும் ஆறுதல்” என்றார் கல்யாணம்.
இந்த உபதேசங்களைக் கேட்கவே பிடிக்கவில்லை மூர்த்திக்கு. ‘வயசான இந்தக் கிழங்களே இப்படித்தான் பெரிய சாமியார் மாதிரி வேதாந்த பாடம் சொல்லிக் கொடுக்கிறார் குழந்தைப் பையனுக்கு’ என்று நினைத்தான் மூர்த்தி.
அப்பொழுது பவானி வீட்டை அடைந்தாள். “இன்றைக்கு என்ன அம்மா கோவிலில் ரொம்ப நாழிகை இருந்து விட்டாய்? ஏதாவது உற்சவமா என்ன?” என்று கேட்டார் கல்யாணம்.
“வீட்டில் இருப்பதைவிட அங்கே இருந்தால் எவ்வளவோ ஆறுதலாக இருக்கிறது மாமா. உலகத்திலே எனக்குச் சில கடமைகள் இருப்பதால் வீடு என்றும் வாசல் என்றும் இருந்து பார்த்து வேலை செய்ய வேண்டி இருக்கிறது. இல்லாவிட்டால் இப்படியே எங்காவது புண்ணிய ஸ்தலங்களாகப் பார்த்து வட்டு வரலாம்” என்றாள் பவானி.
கல்யாணராமன் சிரித்தார். ”ஒவ்வொருவரும் இப்படி விரக்தியடைந்து கிளம்பி விட முடியுமா? அதைச் சரியென்றும் நான் சொல்ல மாட்டேன். உனக்கு வாழ்க்கையில் இன்னும் எவ்வளவோ இருக்கிறதே” என்றார்.
“எனக்கா? வாழ்க்கையில் எனக்கு என்ன மாமா தேவை? காலை மலர்ந்து பகலாவதற்குள் கருகிப் போன என் வாழ்க்கையில் இன்னும் என்னவோ பாக்கி இருக்கிற மாதிரிச் சொல்லுகிறீர்களே!”
”அப்படியெல்லாம் மனசை அலட்டிக் கொள்ளக் கூடாதம்மா. பாலு படித்துப் பெரியவனாகிவிட்டால் அப்புறம் உனக்கு வாழ்க்கையில் என்ன கஷ்டங்கள் இருக்கப் போகிறது!” என்றார் கல்யாணம்.
தன்னுடைய தாய் திடீரென்று கலகல வென்று பேசிக் கொண்டிருப்பது பாலுவுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.
”கதை கேட்டு அலுத்து விட்டது மாமா. வேறே ஏதாவது விளையாட்டுச் சொல்லிக் கொடுங்கள்” என்று .
அவன் கல்யாணராமனைப் பார்த்துக் கேட்டவுடன், மூர்த்தி அவனைப் பார்த்து “உனக்கு என்ன விளையாட்டு தெரியும் சொல். நானும் நீயும் விளையாடலாம்” என்று கேட்டான்.
பாலுவுக்கு உற்சாகம் பொங்கி வந்தது.
“ஒரு வாரமாக சேஷாத்திரி வீட்டில் கேரம் ஆடிப் பழகி இருக்கிறேன். அந்த ஆட்டம் நன்றாக இருக்கிறது. விளையாடலாமா?” என்றான்.
பார்வதியும் அடுப்பங்கரை வேலைகளை முடித்துக் கொண்டு தெருத் திண்ணையில் வந்து உட்கார்ந்தாள். பாலு சொல்லியதைக் கேட்டவுடன் அவள், “ஆமாம் மூர்த்தி! ’கேரம்’ பலகை மச்சில் தூசு படிந்து கொண்டு கிடக்கிறது. நாளைக்கு அதை எடுத்து பாலுவுக்குக் கொடு” என்று கூறினாள்.
பாலுவுக்கு அப்பொழுதே அந்தப் பலகையை எடுத்து வைத்துக் கொண்டு விளையாட வேண்டும் என்று ஆசையாக இருந்தது. அன்று இரவு முழுவதும் அவனுக்குச் சரியான தூக்கமே இல்லை.
– தொடரும்…
– முத்துச் சிப்பி (நாவல்), முதற் பதிப்பு: அக்டோபர் 1986, சமுதாயம் பப்ளிகேஷன்ஸ், சென்னை.