கதையாசிரியர்:
தின/வார இதழ்: தமிழ் முரசு
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 2, 2024
பார்வையிட்டோர்: 556 
 
 

(1961ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

‘ஐயோ அம்மா…அப்பா…’ முத்தம்மா இப்படி முனகிக் கொண்டிருந்தாள். கதவு சாத்தியிருந்தது. வீரப்பனுக்கு வேதனையாக இருந்தது. பக்கத்து வீட்டுப் பாட்டிதான் விளக்கெண்ணெயை வயிற்றில் தடவிக் கொடுத்துக்கொண்டு ‘ஆண்டவன் நல்லபடியாக்கிடு வான்’ என்ற பல்லவியைப் பாடிக் கொண்டிருந்தாள், ‘ம்… ம்… அப்பப்பா…! ஐயையோ…! பொறுக்க முடியலியே… வேதனையின் உச்சநிலையில் முனகிக் கொண்டிருந்த முத்தம்மா சத்தம் போட்டுக் கத்தினாள். எதிர்வீட்டு எள்ளம்மாளும் என்னென்னவோ சொல்லிக் கொண்டிருந்தாள். முத்தம்மாளின் வேதனைக் கூச்சலைக் கேட்டுக் கலங்கிப் போயிருந்த முனியம்மாள் ஒரு பக்க மாக ஒதுங்கி நின்று கண்ணீர் வடித்துக் கொண்டிருந் தாள். முனியம்மாள் மூன்றாவது வீட்டிலிருப்பவள். மூன்றாண்டு ‘அனுபவம்’ தான் அவள் கண்ணீருக்குக் காரணம்.

இரவு வண்டிக்குக் காத்திருப்பவர்கள் தூக்கம் வராமலிருக்க நடந்து கொண்டிருப்பார்களே அதுபோல் வீரப்பன் வெளியே தலைவாசலுக்கும் கதவுக்குமாக நடந்து கொண்டிருந்தான். பெரு பெரு மூச்சும் ‘ச்..ச்…’ எனும் சப்புக் கொட்டலோசையும் அவனையுமறியாமல் ஒலித்துக்கொண்டேயிருந்தன.

வினாடிக்கு வினாடி முத்தம்மாளின் வேதனை அதிகரித்துக்கொண்டிருந்தது. ஒன்றரை வருடக் குழந்தை யான முத்தப்பனை?வீரப்பன் தூக்கிக்கொண்டிருந்தான். அவன் இதயம் பெரும் பாரம் ஒன்றைச் சுமந்து கொண் டிருந்தது. உள்ளே முத்தம்மாளின் வேதனைக் கூச்சல். வெளியே வீரப்பனின் பெருமூச்சு. இப்படியே நேரம் ஓடிக்கொண்டிருந்தது. இல்லை; நகர்ந்தது.

நடந்துகொண்டிருந்த வீரப்பன் சோர்ந்து போய் உட்கார்ந்து விட்டான். ஆனால் அவன் சிந்தனை இப்போது நடைபோட்டது. வீரப்பனும் முத்தம்மாளும் கல்யாணம் பண்ணிக் கொண்டு கிட்டத்தட்ட ஐந்து வருடம் ஆகிவிட்டது. பஞ்சமில்லாமல் வாழ ‘பணம் காசு” இருந்தது. பண்போடு வாழ நல்ல குணம் இருந்தது. அதே சமயத்தில் பேர் சொல்ல பிள்ளை பிறக்கவில்லையே என்ற உள்ளக் குறைவும் இருந்தது.

முத்தம்மாளுக்கு அப்பாவும் அம்மாவும் இருந்தார்கள். அவர்களுக்குக் ‘குஞ்சும் குட்டியுமாக” மூன்று பிள்ளைகள் இருந்தனர். உடன் பிறந்தவர்களோடு ஒரு சிறு பிள்ளையாக விளையாடிக் கொண்டிருந்த பாசத்தின் பிழம்பைத்தான் நேசக்கரம் நீட்டிப் ‘பாசக் கயிறு’ கட்டி அழைத்து வந்து விட்டான் வீரப்பன்.

முத்தம்மா வீரப்பன் வீட்டுக்கு வீரப்பன் வீட்டுக்கு வருகிற அன்று ‘தத்தா பித்தா’ நடைபோடும் தன் பொக்கை வாய்த் தம்பியைத் தூக்கி முத்தமிட்டு பிரியா விடைபெற்றாள். ‘போடி முத்தம்மா ! அவுங்க நின்னுக்கிட்டிருக்காங்க…! அடுத்த வருடம் நீயும் ‘ஒண்ணு’ கையிலே வச்சிருப் பேடி…! என்று அப்போது அங்கு நின்றுகொண்டிருந்த ‘ராவுகாலம்’ பார்க்கும் ஓர் ‘அனுபவம்’ சொன்னது. வீரப்பனை வெட்கம் பிடுங்கித் தின்றது. தலைகுனிந்து சிரித்துக்கொண்டான். ‘போ… பாட்டி… சிணுங்கினாள் முத்தம்மாள்.

முத்தம்மாளுக்குக் குழந்தைகள் என்றாலே கொள்ளை ஆசை. பக்கத்து வீட்டுக் குழந்தைகளிடத் தில் கொஞ்சிச்கொண்டிருப்பதுதான் அவளின் பொழுது போக்கு. வீரப்பன் வீட்டுக்கு முத்தம்மாள் வந்ததி லிருந்து முனியம்மாளுக்குப் பிள்ளைகளைப் பற்றி கவலையே இருப்பதில்லை.

வீரப்பன் வீட்டுக்கு வந்திருந்த ஒரு அப்பாவி நண்பர் முத்தம்மாள் வைத்திருந்த முனியம்மாளின் மகனைப் பார்த்து, ‘ஏண்டா! உங்கப்பாவுக்கு நல்ல புத்தி சொல்லேண்டா…!” என்று வேடிக்கையாகச் சொல்லி விட்டாரென்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். இரவில் கூட நெடுநேரம்வரை அந்தப் பையன் வீரப்பனின் வீட்டில்தான் இருப்பான். பால் ஊட்டுவதைத் தவிர மற்ற பணிவிடைகளெல்லாம் முத்தம்மாளின் கையா லேயே நடக்கும் அவனுக்கு. அந்தப் பையன் எப்போதா வது அழுகின்றானென்றால் முத்தம்மாளின். அன்பு முத்தங்கள் கணக்கிலடங்காதனவாகி விட்டன என்று நாம் எண்ணிக்கொள்ள வேண்டும்.

“ஆசையப்பாரு ஆசைய…: நீ ஒண்ணு பெத்துக் கயேன்’ என்று பெண்கள் சொல்லுவார்கள். அவளுக்கும் ஆசை தான்… இன்னும் ‘ஏதோ’ அவர்கள் பேச்சில் அடிபடும். அடுத்து சிரிப்பொலி கலகலக்கும். முத்தம் மாளின் கன்னங்கள் சிவக்கும். வீரப்பன் சொல்லாமல் வெளியே போய்க்கொண்டிருப்பான்.

வெளியே போய்விட்டு வந்த வீரப்பன் ஒருநாள் ஒரு குழந்தையுடன் வந்தான். ‘ஏதுங்க…!’ ஆசை பொங்கக் கேட்டுக் கொண்டே முத்தங்களை குழந்தையின் முகத் தில் விதைத்தாள் முத்தம்மாள்! ‘முருகன் கொடுத் தாண்டி…!’ வீரப்பன் சிலேடையாகச் சொன்னான். ‘போங்க….. உங்களுக்கு எப்போதும் கேலிதான். கேட்டா சொல்லுவீங்களா…’ பொய்க் கோபம் வந்து அவள் முகத்தைக் கருநீலமாக்கியது.

“அட நீ ஒண்ணு… நெசமா முருகன் தான் கொடுத் தான். ‘கம்போங் கிளாப்பா’விலிருக்கிறானே காளியம்மா புருஷன் முருகன், அவன் கொடுத்தாண்டி. கடவுள் முருகன் கொடுத்தான்னு நான் சொன்னதாக நெனைச்சிக்கிட்டியா…? அவனுக்கும் அஞ்சு குழந்தை இருக்குல்ல… வேலையில்லாமக் கஷ்டப்பட்டுக் கிட்டிருக்கான். நான் காப்பாத்துறேன்னு சொல்லி வாங்கியாந்துட்டேன்’ என்று விவரத்தை விளக்கினான் வீரப்பன்.

‘சொர்க்கலோகம்’ என்றொன்று இருப்பதாக அவள் என்றுமே நம்பியதில்லை. ஆனால் அந்த உலகத்தை இப்போது இந்த ஆறுமாதக் குழந்தை வந்த வுடன் தன் வீட்டிலேயே கண்டாள். முத்தப்பன் என்று பெயரிட்டாள். முத்தம்மாளாகிய தனக்கு அபயமளிக்க வந்த ‘அப்பன்’ எனக் கருதினாளோ, குலதெய்வப் பெயரிட்டால் குறைவில்லாமல் வாழ்வான் என எண்ணினாளோ அது வீரப்பனுக்கே தெரியாது. முருகன் மகன் முத்தப்பன் ஆனான்.

முத்தப்பனை முத்தத்தாலேயே வளர்த்தாள். அவனும் முத்தாகவே வளர்ந்தான். வீரப்பன் விளையாட்டாகக் கூடக் கிள்ளக் கூடாது. அவனின் பிஞ்சுக் கைகளைப் பிடித்து அடிக்கச் சொல்லுவாள். இல்லையில்லை; தன் கணவனை அந்தப் போக்கில் அடித்துப் பார்ப்பாள். அவன் அங்கு குளிர்வான்.

முத்தப்பன் வந்த பிறகு முத்தம்மா கருவுற்றாள். அதாவது முத்தப்பன் வந்த மூன்றாம் மாதமே ‘முதல் மாதம்’ கணக்கு வைத்தாள் பத்து மாதங்கள் பறந்தன. இன்றுதான்..!

முனியம்மா கதவை ஒருக்களித்துக்கொண்டு ‘இங்க பாருங்க’ என்றாள். திடுக்கிட்டு எழுந்த வீரப்பனின் முதல் கேள்வி ‘என்ன குழந்தை’ என்பதுதான்.

‘குழந்தை இன்னும் பொறக்கலீங்க…! தண்ணி ஒரு வாளி கொண்டுவாங்க… சீக்கிரம்…’ அவசரப்படுத்தி னாள். ‘ம்.ம்…சரி’ என்று தோளில் தூங்கிக்கொண் டிருந்த முத்தப்பனைக் கீழே இறக்கிவிட்டான். முத்தப்பன் கத்தினான். வீரப்பனின் நிலை தர்மசங்கட மாகிவிட்டது. முத்தப்பனைத் தோளில் போட்டுக் கொண்டே கிணற்றடிக்கு ஓடினான்.

கிணற்றடியில் சுப்பன் தண்ணீர் இறைத்துக்கொண் டிருந்தான். பக்கத்து வீட்டுப் பையன்தான் அவன். பாட்டியம்மாளின் பன்னிரண்டு வயதுப் பேரன். ‘சுப்பா’ எனக்கு ஒரு வாளி தண்ணி சேந்திக் கொடப்பா! முத்தப்பன் கையில் இருக்கிறான். எப்படியோ மேல் மூச்சு கீழ்மூச்சு வாங்க விரைவாகச்சொல்லி முடித்தான். இந்த வார்த்தைகளை, மூன்றடி உயரமுடைய சுவர் உள்ள அந்த வானம் பார்த்த கேணியில் ஒரு வாளி இறைப்பதென்றால் குறைந்தது பத்து நிமிடங்களாகும். ‘சுருக்கா ..; சுருக்கா!’ விரைவு படுத்தினான் வீரப்பன். தண்ணீர் பாதிக் கேணிக்கு வந்து விட்டது. வீரப்பன் கிணற்றை எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தான். அப்போது..

அங்கே ஓடிவந்த முனியம்மா ‘உங்களைப்போலவே ஒரு ஆம்புளப் பிள்ளை உரிச்சிக்கிட்டு பொறந்திருக்கான்’ என்ற மகிழ்ச்சிச் செய்தியை ‘மளமள’வென்று சொல்லிமுடித்தாள். வீரப்பன் தன்னை மறந்தான். தன் கையிலிருக்கும் முத்தப்பனை மறந்தான். சுவரோடு சுவராக ஒட்டிக்கொண்டிருந்த தன் நிலையை மறந்தான். தன் இரண்டு கைகளையும் எடுத்து தன் நெஞ்சில் ஒற்றிக்கொண்டான் மகிழ்ச்சிப் பெருக்கில்! அடுத்த வினாடி…!

‘தொபுகடீர்’ சத்தம் கேட்டது. தொடர்ந்து ஐயோ… என்ற வீரப்பனின் அலறலும் முனியம்மாளின் ஓலமும் கேட்டன. வீரப்பன் முகத்திலறைந்துகொண் டான். சுவரில் முட்டிக்கொண்டான். முத்தப்பன் மேலே கொண்டுவரப்பட்டான், கிணற்றுத் தண்ணீரால் முத் தப்பனின் வயிறு நிறைந்தது. துக்கத்தால் வீரப்பனின் நெஞ்சு நிறைந்தது.

வீல்… வீல்.. ஒரே சமயத்தில் இரண்டு குரல்கள் ஒலித்தன. முத்தப்பன் செத்துவிட்டான். வீரப்பன் அழுதான். துடித்தான். முனியம்மாளும்தான். அடுத்த நிமிடம் வீரப்பன் முனியம்மாவின் காதோடு காதாக எதையோ சொன்னான்-கெஞ்சினான்.

குழந்தையைக் காண வேண்டும் என்ற ஆவல் முன்னுக்கிழுத்தது. முத்தப்பனின் முடிவு பின்னுக் கிழுத்தது. சோர்ந்துபோய் நடந்தான். சோகத்தின் எதிரொலி அது. எப்படியோ வீட்டினுள் சென்று விட்டான்.

இவ்வளவு நேரம் மயங்கிக் கிடந்த முத்தம்மாள் இப்போது திரும்பிப் படுத்தாள். அன்பு அவள் நெஞ்சில் சுரந்தது. அதேபோல் பாலும் சுரந்தது. சுரந்த பாலைக் கரந்தூட்டத்தான் புரண்டு படுத்தாள். கணவனையும் ஓரக் கண்ணால் பார்த்துக்கொண்டு புன்னகை பூத்து இன்பக் கண்ணீர் இரு துளி சிந்தினாள்.

‘ஆ…ஐயோ!’ முத்தம்மாள் அலறினாள். பிள்ளை ‘சில்’லிட்டுக் கிடந்தது. ஆமாம்! பிறந்த குழந்தை இறந்து கிடந்தது. ஒப்பாரி வைத்து ஓலமிட்டழ அப்போது அவளுக்குத் தெம்பு இல்லை. விழிகள் மிரள மிரள விழித்தன. கண்களில் நீர் தாரை தாரையாக வடிந்தது. ‘ஐயோ’.. முத்தம்மாளின் ஒரே கதறல்.

பாவம்…! எவ்வளவு ஆசையோடு பால் கொடுக்க- கனி இதழ் ஆரங்கள் தொடுக்க முனைந்தாளோ…! எத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு அவளுக்குப் இந்தப் பேறு ! பால் சுரந்து வழிந்தது. இதழ்க்கடையில் முத்தம் தேங்கியது. ‘முத்தப்பனைக் கொண்டாங்க!… ’ தீனக் குரலில் கேட்டாள்.

வீரப்பன் விழித்தான்;ஊமையானான். முனியம்மாள் தலைகவிழ்ந்து நின்றாள். பாட்டியும் எள்ளம்மாளும் பேந்தப் பேந்த விழித்தார்கள். ‘ஏன் பேசாம இருக் கிறீங்க…?’…… வீரப்பனின் கத்தலும் கதறலும்தான் அவளின் வினாவுக்கு விடையாக இருந்தன. முனியம் மாள் விக்கி விக்கி விஷயத்தைக் கக்கினாள்.

முத்தம்மாளுக்கு இப்போது ‘தெம்பு’ எங்கிருந்தோ வந்தது. கணவனை ‘ஒரு மாதிரி’ முறைத்துப் பார்த் தாள். இறந்து கிடந்த குழந்தையைப் பார்த்தாள். இருவரையும் மாறி மாறிப் பார்த்தாள். வீட்டை வெறிக்க வெறிக்கப் பார்த்தாள். தலையிலடித்துக் கொண்டாள். தடுத்தான் வீரப்பன். வெடுக்கென உதறி வேங்கையெனச் சீறினாள். முத்தப்பா……! முத்தப்பா……!! என்று கத்திக்கொண்டே ஓடினாள்.

அவளின் கத்தலும் கதறலும் துடிப்பும் துவளலும் அந்த ‘முத்தப்பனுக்கு’ எங்கே கேட்கப்போகிறது!

தலைவிரிகோலமாகவீதியில் ஓடிக்கொண்டிருந்த முத்தம்மாளைத் தெருவில் போய்க் கொண்டிருந்த ‘போலீஸ்காரர்கள்’ இருவர் பைத்தியக்கார வைத்திய மனைக்கு இட்டுச் சென்றனர்; தவறு…இழுத்துச் சென்றனர். முத்தப்பா……! சத்தம் எதிரொலித்தது.

– 24-9-1961 தமிழ் முரசு.

– சிந்தனைப் பூக்கள் (சிறுகதைத் தொகுப்பு), முதற்பதிப்பு: 1988, விஜயா சபரி பதிப்பகம், சென்னை.

மு.தங்கராசன் தமிழகத்தின் திருச்சி மாவட்டம் முசிறி வட்டத்திலுள்ள தளுகை பாதர்பேட்டை என்ற ஊரில் 1934ல் பிறந்தார். இரண்டாவது வயதிலேயே தனது தாயை இழந்தவர், தந்தையோடு மலாயாவுக்கு வந்தார். ஜோஹூர் மாநிலத்திலுள்ள ‘நியூஸ்கூடாய்’ தோட்டத் தமிழ்ப் பள்ளியியில் ஆசிரியராக இருந்த தனது தந்தையிடம் தமிழ்க் கல்வியைக் கற்றார். 1955ல் ஆசிரியர் பட்டயம் பெற்ற இவர் உமறுப்புலவர் தமிழ்ப் பள்ளி உட்பட பல்வேறு பள்ளிகளில் தலைமையாசிரியராகவும் ஆசிரியராகவும் பணியாற்றினார். 1955ல் தமிழ்முரசில் பிரசுரமான…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *