முதலாவது கல்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 8, 2022
பார்வையிட்டோர்: 3,296 
 
 

(2016ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சட்டியிலே உறைந்து போய்க் கிடந்த பால், மறு சட்டியிலே மிஞ்சிக் கிடந்த மா, தேங்காய்ச் சிரட்டைக்குள் ஊறிக்கிடந்த பனங்கட்டித் தண்ணீர் ஆகியவற்றையெல்லாம் ஒன்றாய் ஊற்றிக் குழப்பிய கதம்பக் கூழ் சுமார் இரண்டு அகப்பை இருக்கும்.

அப்ப அடுப்பின், மேல் நெருப்புச் சட்டியை இரு கடதாசி மடிப்பு களைப் பிடித்து இறக்கி வைத்துவிட்டு, அந்தக் கதம்பக் கூழை அப்படியே அப்பச்சட்டிக்குள் ஊற்றி, அதை ஒரு தடவை தூக்கி, சரித்து வளைத்து அளாவி நெருப்புச் சட்டியை மேலேற்றி காலடியில் கிடந்த கரித்தூள், துகள்களை வழித்தெடுத்து நெருப்புச் சட்டியில் போட்டு, கைகளை தட்டி உரசி நாரியை நிமிர்த்திப் பின் சரித்து ஒரு பெருமூச்சு விட்டுக் கொள்கிறாள் கத்தறின் கிழவி.

அது தொழில் முடிந்துவிட்டதனால் ஏற்பட்ட திருப்தி. மாதா கோவிலின் திருந்தாதி’ மணி அடிப்பதற்கு முன்னதாகவே எழுந்து, புளிக்க வைத்த மாவைக் கலக்கி, தேங்காய்த் துருவி, பால் பிழிந்து, பனங்கட்டி நொறுக்கிக் கரைத்து வடியவைத்து, சிலுவை அடையாளம் காட்டி, சட்டிகளை அடுப்பேற்றி, நெருப்பு வைத்து, பொக்குவாய்ப் பொருமிப் புடைக்கும்படி ஊதிப் புகைத்துக் கண்ணீர் கொட்டி, அதற்குமேல் தொழிலைத் தொடங்கி, அப்பங்களாக வார்த் தெடுத்து, மோதும் கிராக்கிகளைச் சமாளித்து முடிப்பதென்றால் சர்வ சாதாரண காரியமல்ல. அதுவும் இத்தனை வயதுக்கப்புறம்!

கிழவி கத்தறினின் அப்பத்துக்கென்றால் மிகவும் கிராக்கி, அந்தப் பக்கத்தில் எத்தனையோ அப்பக் கடைகள் உண்டு. ஆனாலும், கிழவி கத்தறினின் அப்பத்திற்கு மட்டும் ஏன்தான் இப்படியோ?

ஊரில் எல்லோருந்தான் பனங்கட்டித் தண்ணீர் வடிய வைத்து, அப்பத்தில் தெளித்துத் தொழில் நடத்துகிறார்கள். அதில், கிழவி கத்தறினின் பனங்கட்டி அப்பத்தின் சுவை ஒரு விதம். அப்பம் வெந்து வரும் பருவம் பார்த்து, அவள் பனங்கட்டித் தண்ணீரைப் பனுக்குகிறாள்.

அந்தப் பருவப் பனுக்களில்தான் ஏதோ ஒன்று இருக்கிறது. அதை மற்றவர்களால் செய்ய முடிவதில்லை. சின்ன வயசில் அவளின் பிறந்த ஊரில் யாரோ ஒருத்தியிடம் அவள் கற்றுவைத்திருந்த பாகமுறை அது. மற்றவர்களுக்கு அது வரவே வராது.

சற்று வேளைக்குப் பின்பு, அந்தத் தட்டிக் கடைக்குள் இருந்து ‘லொக், லொக்’ என்ற சத்தம் எழுகிறது. கத்தறின் கிழவி உரலில் வெற்றிலைக் கூட்டுச் சேர்க்கிறாள்; வாயில் போட்டுக்கொண்டு குதப்பு கிறாள். அதில் ஒரு இன்பம்! குழைவுத்தனம்!

கிழவியின் கரங்கள் துறுதுறுத்து வேலை செய்கின்றன. கரிச்சாக்கு, தட்டகப்பை, பெட்டி, சுளகுகள், துருவு பலகை யாவும் இருப்பிடங் களை அடைத்து விடுகின்றன. சின்னஞ்சிறிய அடுக்குப் பெட்டி யொன்றைக் கிழவி எடுக்கிறாள். இரண்டு அடுக்குகளை ஒன்றாகக் சேர்த்துச் சேர்த்து, இழுத்துப் பக்கத்தே வைத்து விட்டு, கடைசிப் பெட்டியை நிலத்தில் கவிழ்த்துக் கொட்டுகிறாள்.

ஒரு ரூபாய் நோட்டு ஒன்று, அம்பது சதக் குத்திகள் நான்கோ ஐந்தோ, இருபத்தைந்து சதக் குத்திகளாக ஏழோ எட்டோ , பத்து சத, ஐந்து சத, ஒரு சத குத்திகளாகப் பதினைந்தோ இருபதோ.

சேர்த்த பணத்தைக் கிழவி கணக்கிட்டுக் கொள்கிறாள்; தலையை நிமிர்த்திக் கடன்போன விபரங்களை நிரைப்படுத்திக் கொள்கிறாள்…

‘அந்தோனியாப்பிள்ளை ஐஞ்சப்பம்… செவ்வேத்தியான்ரை மேள் எட்டப்பம்… லூத்துப்பொட்டை மூண்டு…ம்…ம்…மற்றதுறோசை பயினொண்டு…’

கடன் போனவைகளையும் கிழவி கணக்கெடுத்துவிட்டாள். கையிருப்பு ரூபா ஆறுக்கு மேல்! அதை அப்படியே மடிப்பெட்டி யில் போட்டு இடுப்பில் சொருகிக் கொண்டு நிலத்தில் கிடந்த துண்டு துணுக்குகளை எடுத்து அடுக்குப் பெட்டியில் அநாயாசமாய்ப் போடுகிறாள்.

சுமார் நூறு ஆண்டுகளை நினைவுறுத்தும் அரைச் சதங்கள், கால் சதங்கள், மிகவும் பருத்த தடித்த நாணயம் அதைவிட சிறிய அளவில் வெற்றியாலான ஒன்று, சிறு மீன் செதிள் போன்ற இன்னொன்று….

அடுப்பில் இருக்கும் சட்டி அப்பத்தின் வேகல் வாசனை இலேசாக வருகிறது.

தட்டிக்குமுண்டு கொடுக்கப்பட்டிருக்கும் தடியைத் தட்டி, கடையை மூடிக்கொள்ளக் கிழவி முன் நகருகிறாள்.

தட்டியின் வடக்கெல்லையோடு நிற்பது அன்னம்மாவின் குழந்தை திரேசம்மாள். அவளின் ஊத்தைபடிந்த பிஞ்சுக்கரம் தட்டியின் வெளியை நோக்கி நீள்கிறது. அந்தக் கரத்திலே இருப்பவை பத்துச் சதங்கள்! இரண்டு அப்பத்துக்காக -அல்லது அந்தச் சட்டி அப்பத்துக்காக அவள் கரம் நீண்டு கிடக்கிறது. இதற்கு முன் பணம் இல்லாமலே, அந்த சட்டி அப்பம் அவளுக்குக் கிடைக்கும். ஆமாம். எப்போதுமே அந்த அப்பம் அவளுக்குத்தான் கிடைக்கும். ஆனால், இரண்டு நாட்களாக அதை அவளுக்குத் தர, கிழவிக்கு முடியவில்லை . அது ஊரின் கட்டளை. அவள் அதை மீறக் கூடாது.

மீறிவிட்டால்?

ஊ…கும், மீறவே கூடாது! அதை மீறிவிட்டால், கிழவி செத்துப் போனதன் மேல், அந்தப் பிணத்தை எடுத்துச் செல்ல யாரும் வர மாட்டார்கள்; கோவிலின் மணி நாக்குகள் அசைய மறுக்கும். அப்புறம் கிழவியின் பிணம் நாற்றமெடுக்க வேண்டியதுதான்!

***

கரையூர் !

இதுதான் அந்த ஊரின் பெயர். இப்போது என்னவோ ‘குருநகர்’ என்றுதான் சொல்லப்படுகிறது.

யாழ்ப்பாணப் பட்டணப் பிரதேச எல்லைக்குள் தான் ‘குருநகர்’ இருக்கிறது. ஊரின் தொடக்கத்தில், ‘குருநகர்’ என்ற பென்னம் பெரிய பெயர்ப் பலகை தொங்குகிறது. அத்துடன் அவ்விடத்தில் வியாபார ஸ்தலங்களிலும் இதே பெயரில் சிறிய பலகைகளும் தொங்குகின்றன. நாகரிகத்துக்காக அந்தப் பெயர் இருந்தாலும், ‘கரையூர்’ என்றால்தான் பட்டணத்தின் ஏனைய பகுதிகளில் இருப்போருக்குப் பட்டென்று விளங்கும். சில வருடங்களுக்குமுன், வெறும் பரவைக் கடலாகக் கிடந்த அந்த இடத்தைச் சிறைக் கைதிகளைக்கொண்டு வேலை வாங்கி, மேட்டுப் பிரதேசமாக அரசாங்கம் ஆக்கியதன் மேல், இருநூற்றுக்கு மேற்பட்ட வீடுகளை அமைத்து, மக்களைக் குடியேற்றி வைத்த தினால் அந்தப் பகுதி சற்று நாகரிகமாக இருக்கிறது.

அந்த ஊரின் பாரம்பரியத்தை விளக்க, இரண்டே இரண்டு சின்னங்கள் உண்டு. ஒன்று, வானத்தைத் தொட்டு நிற்கும், உறுதி யானதும், வேலைப்பாடுகள் அமைந்ததுமான சந்தியோகுமையோர் ஆலயம், அடுத்தது கடலின் எல்லைக்கோட்டைத் தொட்டு நிற்கும் மீன் துறை.

காலை ஆறு மணிக்கும், எட்டு மணிக்குமிடையில் அந்தத் துறையில் நின்று பார்த்தால், ஜனநெருக்கத்தைத் தாங்கமாட்டாது, அந்தத் துறை கடலில் அமிழ்ந்து விடுமோ என்றுதான் எண்ணத் தோன்றும்.

‘தார் பத்தேகாப்பணம்; தார் பத்தேமுக்காப்பணம்; தார் பத்தே முக்காப்பணம்; தார் பத்தேமுக்காப்பணம்; பத்தரைப்பணம்!’

ஆதியிலிருந்து கூறல்காரியால் கூறப்பட்டுவந்த இந்த முறையில், இப்போது மட்டும் சிறிது மாற்றம்! ‘தார் பத்தேகா ரூவா; பத்தரை ரூவா!’ அவ்வளவுதான்.

புத்தம் புதிதாக அந்தத் துறைக்கு வருபவர்கள் காதுகளைப் பொத்திக் கொண்டிருக்க வேண்டியதுதான் அத்தனை இரைச்சல்!

கிழவி கத்தறின் அந்த மீன் துறையின் கூறுல் காரியாக இருந்து மௌசுடன் வாழ்ந்து வந்தாள். அந்தச் சீரையும், சிறப்பையும் இன்று நினைத்துப் பார்க்கவே அவளால் முடிவதில்லை.

கத்தறினுக்கு அப்போது வயசு முப்பத்தைந்துதான். அப்பகுதியின் பிரபல ‘சம்மாட்டி’யராக இருந்த சூசைப் பிள்ளையாரின் மனைவி யாக வந்தமையால், அங்கு வேலை செய்தவர்கள் பேருதவிகளும் செய்தார்கள். ‘நன்றி மறவாக்கடன்’ என்பது அவர்கள் நினைப்பு.

சூசைப்பிள்ளை செத்துப்போகும்போது, கத்தறினுக்கு வயது முப்பத்தைந்துதான். சூசைப்பிள்ளையுடன் அவள் வாழ்வு நடத்திய வருடங்கள் பதின்மூன்று இந்தப் பதின்மூன்று வருடங்களில், கர்த்தரின் கட்டளைப்படி, பலுகிப் பெருகிப் புவியை நிரப்ப’ ஒரு ஜீவனைத் தன்னும் மண்ணுக்குத் தர அவளால் முடியவில்லை. அப்படி ஒரு ஜீவன் வேண்டுமென்று சூசைப்பிள்ளைக்கு இடையிடையே ஆசை அரும்பியதும் மடிந்ததும் உண்டு. ஆனால், கத்தறினுக்கு அது மனதோடு ஒட்டிக்கொண்டு, ஏக்கமாக மறுஜென்மம் எடுத்திருந்தது. சூசைப் பிள்ளை செத்துப்போனதும், இந்த ஏக்கம் நஞ்சாக மாறி, அவள் உடலெல்லாம் வியாபித்துப் பிரதிபலித்தது. ஆனாலும், மீன் துறைக்கு வந்ததிலிருந்து உடலின் சோர்வும், வெம்மையும், சோகையும் போய் அவள் புதுப்பொலிவுப் பெற்று வந்தாள்.

மீன்காரன் கூடையில் இருக்கும் மீனைக் கத்தறினின் தட்டுச் சுளகில் கொட்டுவான், அப்போது கத்தறின் மீன்காரனின் சார்பில், விரும்பிய ஒன்றை எடுத்துத் தனது கூடையில் போட்டுக் கொள்வாள்.

‘பதினைஞ்சே காப்பணம்; தார் பதினைஞ்சே முக்காப் பணம்; தார் பதினைஞ்சே முக்காப்பணம்; பதினைஞ்சரைப் பணம்!”

தீர்வை ஆனதும், கொண்டவனின் சார்பில் ஒரு அள்ளாக்கு மீன்! மீன்துறை நெருக்கம் கலைந்து போகும்போது, கத்தறினுக்கு ஒரு கூடை மீன் சேர்ந்து விடும். அது ஒரு வலைகாரனின் பங்குக்குக் குறைந்ததாக இருக்காது!

ஏற்கனவே உள்ள இரண்டு கூறல்காரிகளுக்கும் மனசுக்கு மிஞ்சிற பொறாமை! வலைக்காரர்கள் எல்லாம் கரை ஏறியதும் ஏறாததுமாகக் கத்தறினை நோக்கித்தானே ஓடுகிறார்கள். எல்லாவற்றிற்கும் அவளின் உடலிலே உள்ள மினு மினுப்புத்தான் காரணம் என்பதைப் புரிந்து

கொண்டு, மறைவான சொல் ஈட்டிகளை கத்தறின் மீது வீசிவந்தார்கள்.

**

ஐம்பது வயது வரையில் கத்தறின் வாழ்ந்துவிட்டாள். பரிசுத்த திருச் சபையில் தூண்போல இருந்து பெருவாழ்வு வாழ்ந்து விட்டாள்.

திடீரென்று ஒருநாள், லேயோனுக்குத் திருக்கல்யாணம் நடந் தேறியது, இத்தனை வயதுவரை கல்யாணப் பேச்சுக்களையே உதறி எறிந்து, தடிப்பிரம்மச்சாரி வாழ்வு வாழ்ந்துவிட்டவனுக்கு எத்தனை இலகுவில் கல்யாணம் நடக்கிறது.

கத்தறினுக்கு நோய் வந்து விட்டது. அந்த நோயின் இனத்தை யாராலுமே கண்டுகொள்ள முடியவில்லை. கடைசியில், உள்ளூரின் பிரபல ‘கந்தர் பரியாரியின் நடை மருந்தோடு அவள் நின்றுவிட்டாள். உடலிலே நடுக்கம், சோர்வு.

கத்தறின் நீண்ட காலம் பாயும், படுக்கையுமாகக் கிடந்தாள். அதனால், அந்தக் கூறல் தொழில் போய்விட்டது.

படுக்கையை விட்டு அவள் மெதுவாக எழுந்திருக்கும் நிலைவரும் போது, அவள் கிழவியாகிவிட்டாள்.

சருமங்கள் சுருங்கி, பொருக்கேறி, கண் ஒளி மங்கி, தலை நரைத்து, இடுப்பு வளைந்து, இமை மடலங்கள் உப்பி, மூக்கு முருத்து ஒடுங்கி, நீண்டு வளர்ந்து, நெற்றிப்புருவங்கள் கோலி, முன்புடைத்துப் பார்ப் பதற்கே அவள் கிழடுதட்டிவிட்டாள், சமீப காலம் வரை மொழு மொழுன்று இருந்தவள் இத்தனை விரைவில் கிழண்டிப் போய் விட்டாள்.

உயிர் என்ற ஒன்று இருக்கிறது. அதைப் பிடித்துவைத்திருக்க உணவு வேண்டுமே. அதற்காகக் கிழவிக்குக் கிடைத்த தொழில் அப்பக் கடை!

அடுத்த வீதி பாச்சுவலை தெரு.’ அத்தெருவில் நான்கு அப்பக்கடைகள் இருக்கின்றன. பக்கத்து வீதி கொண்டோடிவலைத் தெரு.’ அங்கே இரண்டு அப்பக்கடைகள் உண்டு. பின்புறமுள்ளது மாராபத் தெரு. அங்கேயும் மூன்று அப்பக் கடைகள்! முன்புறமுள்ளது ‘தூண்டி வலைத் தெரு’ அங்கேதான் ஒரே ஒரு அப்பக்கடை இருக்கிறது. இத்தனை போட்டிகளுக்குள்ளும் தொழிலை நடத்தியாக வேண்டும்! காலக்கிரமத்தில் கிழவிக்கு ‘மவிசு’ வந்துவிட்டது. எதிலும் கை வந்துவிட்டால், ‘மவிசு’ தானாகவே வந்துவிடும்!

மாக்காரியிடமிருந்து மூன்று ரூபாவுக்கு மாவு வாங்குகிறாள், தேங்காய்க்காரியிடமிருந்து இரண்டு தேங்காய் வாங்குகிறாள்.

அடுத்த வீட்டுக்கார அன்னம்மாவிடம், பணத்தைக் கொடுத்து ஏனையபொருட்களை வாங்குகிறாள்.

தொழில் நடக்கிறது. அடுத்த வீட்டுக்காரக் கைம்பெண் அன்னம்மாள் மட்டும் இல்லா விட்டால், இந்தத் தொழிலில் கிழவியால் நிலைத்திருக்கவே முடியாது.

கத்தறின் கிழவிக்கு இப்போது வயது அறுபது!

***

சட்டி அப்பத்தின் வேகல் வாசனையில், கருகல் சுவை படர்ந்து வருகிறது, பதத்திற்கப்பாலும் அது வெந்து கருகுகிறது.

நினைவின் வேறு உலகத்தில் சஞ்சரித்துவிட்டு வந்துவிட்டவளைப் போன்று, எதையோ எண்ணிக்கொண்டு நெருப்புச் சட்டியைக் கீழே எடுத்து வைத்துவிட்டு, தட்ட கப்பை கொண்டு கத்தறின் கிழவி அந்த அப்பத்தைப் பக்குவமாக எடுக்கிறாள்.

விதவை அன்னம்மாளின் மகள், திரேசம்மாளின் கரம் இன்னும் நீண்டுதான் கிடக்கிறது.

கிழவி எதைத்தான் நினைத்துக்கொண்டாளோ? சட்டி அப்பத்தை ஒரு இலையில் மடித்து, அந்தக் குழந்தையின் கையில் வைக்கிறாள். குழந்தையின் கையிலிருந்து நாணயத்தை அந்த அப்பம் மூடிக்கொண்டது.

‘பொடிச்சி, காசையும் கொண்டுபோய்க் கொம்மா விட்டைக் குடு’ அங்குமிங்கும் பார்த்துவிட்டு, ஓசை உரக்காதபடி கிழவி கூறினாள். திரேசம்மாள் வேலியோரமாகச் சென்று மறைகிறாள். மறுநாள்; அதிகாலை. கிழவி கத்தறினின் அப்பக் கடையை ஜனங்கள் முற்றுகையிட்டுக் கொள்கின்றனர்.

கிழவி அப்போதுதான்சட்டியில் நெருப்பேற்றுகிறாள். ‘கத்தறின் நீ கடை வைக்கப்படாது!’ இந்தக் குரல் கிழவிக்கு மிகவும் அறிந்த குரல்; பழகிப் போன குரல்; பல தடவைகளில் வர்ணனைக் குழம்பில் குழைத்துத் தரப்பட்ட குரல்!

அந்தக் குரலில் இப்போது தொனிப்பது கோரம் கட்டளை! ‘எடி வேசையாரே, திருச்சவை கழிச்சு வச்சவளின்ரை பிள்ளைக்கு அப்பம் சுட்டுக் குடுத்திட்டியே தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டு கிழவி அசைவற்று இருக்கிறாள்.

‘எடி கிழவி, கட்டடி கடையை!’ கிழவி அசையாது இருக்கிறாள்.

முரட்டுப் பாதம் ஒன்று. அப்பச்சட்டி அடுக்கின் மேல் பதிகிறது. அடுப்போடு சேர்ந்து போய், சட்டிகள் நொறுங்கிப் போகின்றன. கிழவி தலையை நிமிர்த்திக்கொண்டு, பரிதாபமாகப் பார்க்கிறாள். கிழவிக்கு முன்னே நிற்பது, ஒரு ஆசானுபாகுவான உருவம்.

அவன் லேயோன்! அவனுக்குப் பக்கத்தே நிற்பது அவன் – மனைவி! சுற்றி நின்ற சனக்கூட்டத்தின் கோபாக்கினி கிழவியைத் தீய்த்து விட்டது!

கிழவிக்குத் தலையைச் சுற்றிக்கொண்டு வருகிறது. நினைவு விடு பட்டுப் போகிறது.

கணவனை இழந்து ஐந்தாண்டு தொட்டு, நேற்றுவரை வாழ்ந்து விட்ட அன்னம்மாள், ஒரே ஒரு தடவை தவறிவிட்டாள். அதற்காக முன்பு புனிதமாகப் பிறந்த குழந்தைக்குக்கூட யாரும் உணவளிக்கக் கூடாது.

கிழவி கத்தறின் அவளுக்கு உணவளித்துவிட்டாள். அதற்காகவே அவள் சாகிறாள்; செத்துக்கொண்டிருக்கிறாள்!

‘யேசுவே; என் யேசுவே!’ கிழவியின் உதடுகள் அசைகின்றன. ‘தலைவிரிக் கோலமாக ஒரு பெண் தலைகுனிந்து நிற்கிறாள். ஜனங்கள் சூழ்ந்து நின்று, அவளைத் திட்டுகிறார்கள்; ‘தூ! விபச்சாரி!’ என்று உமிழ்கிறார்கள். கூழாங்கற்களை எடுத்து அவளை மோத வருகிறார்கள்’

‘யேசு வருகிறார்; ஜனத்தை ஊடறுத்துக்கொண்டு அந்த விபச்சாரி யின் பக்கத்தே வருகிறார். சுற்றி நிற்கும் ஜனக்கூட்டத்தைச் சுற்றி, அவரின் சுட்டுவிரல் நகர்ந்து வருகிறது’

‘உங்களுக்குள்ளே பாவமில்லாதவன். இவள் மீது முதலாவது கல் எறியக்கடவான்!’

யேசுவின் கட்டளைக்குச் செவிகொடுத்த எல்லோருமே நகர்ந்து செல்கின்றனர்.

கிழவி கத்தறினின் கண்கள் மூடிக்கிடக்கின்றன. மசிய நிறமான இந்தக் காட்சிகளை அவள் கண்டிருக்க வேண்டும்!

சூம்பிப்போன அவளின் வலக்கரம் மேலே மேலே எழுகிறது. விரல்களை இறுக்கி, சுட்டு விரலை மட்டும் நீட்டிக்கொண்டே அவள் ஏதோ பேச முயற்சிக்கிறாள்.

“லேயோன்… லேயோ …ன், நீ…நீ….’ இதற்குமேல் கிழவியின் நாவுக்கு வார்ததைகளை வெளியே தள்ளும் சக்தி இருக்கவில்லை.

நொறுங்கிப்போய்க் கிடந்த சட்டிக்கு மேல் பாதத்தை ஊன்றியபடி லேயோன் நின்றான்; ஆசானுபாகுவாக நின்றான்.

– கே.டானியல் படைப்புகள் – சிறுகதைகளும் குறுநாவல்களும் (தொகுதி இரண்டு), முதற் பதிப்பு: 2016, அடையாளம், திருச்சி.

கே. டானியல் (25 மார்ச் 1926) ஈழத்தின் பஞ்சமர் இலக்கிய முன்னோடி. இந்தியாவில் தலித் இலக்கியம் என்ற இலக்கியவகை பிரபலமாக முன்பே டானியல் ஈழத்தில் குறிப்பிடத்தக்க பங்காற்றியுள்ளார். யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டையில் பிறந்த டானியல் பல சிறுகதைகளையும் நாவல்களையும் எழுதியுள்ளார். இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தில் பங்கு கொண்டு 11 மாதங்கள் சிறைப்பட்டார். தமிழகத்திற்கு வந்து தஞ்சையில் தங்கினார். இலங்கையில் தீண்டாமை ஒழிப்பு வெகு ஜன இயக்கத்தின் அமைப்பாளராகவும், மக்கள் கலை இலக்கியப்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *