அன்றிரவு கைவிளக்கை ஊதி அணைத்து விட்டுத் தன் கரடுமுரடான பனை யோலைப் பாயிற் சாயும்பொழுது பொன்னம்மா எறிந்த பெருமூச்சில் தங்கியிருந்தது அவளுடைய வாழ்வின் தத்துவமெல்லாம். பெருமூச்சு! அதுதான்.
பெருமூச்சுக்களே அவளுடைய வாழ் வின் சாஸ்வதமான ஐசுவர்யம். இன்று நேற்று மட்டுமல்ல. அவளுக்கு அறிவு வந்த காலந் தொட்டுப் பெருமூச்சுக்களே அவளுடைய வாழ்க்கையை நிரப்பி வந்திருக்கின்றன. ஒருவேளை அப்பெரு மூச்சுக்கள் அவளுடன் கூடப்பிறந்தனவோ, என்னவோ…
அந்தப் பெருமூச்சோடு கலந்து வந்த “அப்பனே முருகா” என்ற வார்த்தைகளில் பொன்னம்மாவைப் பொறுத்தமட்டில் ஒரு விதமான அர்த்தமும் கிடையாது. நாத மாத்திரையான வெறும் வார்த்தைகள்தான்.
அவளுக்கும் முன் அவளுடைய தாய் “அப்பனே முருகா” என்றாள். அதற்குமுன் அவளுடைய பாட்டி. இப்படிப் பரம்பரையாக வந்த பழக்கத்தினால் பொன்னம்மாவும் “அப்பனே முருகா” என்றாளே அன்றி, அவளுடைய மனத்தில் அந்த வார்த்தைகள் ஒருவிதமான உணர்ச்சியையும் பெருக்கவில்லை. அவைகளை வார்த்தை உருவத்திலிருந்து உணர்ச்சி உருவத்திற்கு மாற்றி அறியவும் அவள் முயலவில்லை. ஒருவேளை இளமையில் தன் வேதனையின் முதற் கடுகடுப்பில் முயன்றிருக்கலாம்.
ஆனால் இப்பொழுது தினமும் உச்சரித்து நாப்பழக்கமாகி விட்டன அவ்வார்த்தைகள். அவ்வளவுதான்.
அந்த “அப்பனே முருகா”வைப்போல அவளுடைய பெரு மூச்சுக்களும் இப்பொழுது அர்த்தமற்றுப் போய்விட்டன. இப்பொழுது அவைகளில் வேதனையின் தொனி இல்லை; ஏக்கத்தின் பதைபதைப்பு இல்லை; ஏமாற்றத்தின் பிரதிபலிப்புக்கூட இல்லை. அவையெல்லாம் எப்பொழுதோ மறைந்து போய்விட்டன – இல்லை – அவை மறைந்து போய்விடவில்லை. ஆனால் பொன்னம்மா அவைகளைப் பொருட்படுத்துவதுதான் மறைந்து போய்விட்டது.
மனிதவாழ்வில், இல்லை, தன்னுடைய பிரத்தியேக வாழ்வின் ஒவ்வொரு சம்பவத்திலும், வேதனையும் ஏக்கமும் ஏமாற்றமும் இலை மறை காய் போலப் பதுங்கிக் கிடக்கின்றன என்ற மகத்தான உண்மையை அவள் எப்பொழுதோ அறிந்துவிட்டாள். அவைகளை அவள் தன் வாழ்வின் இன்றியமையாத ஒரு அம்சம் போலக் கருத ஆரம்பித்து விட்டாள்.
அவளுக்கு அருகிற் படுத்திருந்த அவளுடைய மகன் சின்ன ராசாவின் மூச்சு ஒழுங்காக வந்து கொண்டிருந்தது. அவன் ஆழ்ந்த நித்திரையிலிருந்தான்.
பொன்னம்மாவுக்குத் தூக்கம் பிடிக்கவில்லை. மீண்டும் ஒருதரம் பெருமூச்சு எறிந்தாள். ஐயோ பாவம்! சின்னராசாவுக்கு இன்னும் பதினொரு வயதுகூட ஆகவில்லை. அதற்குள் பொருள் தேடும் நிர்ப்பந்தத்திற்கு ஆளாக நேரிட்டுவிட்டது. அவனோ டொத்த மற்றப் பிள்ளைகள் எல்லோரும் தமிழ்ப் படிப்பு முடிந்து, இங்கிலீஷ் பள்ளிக்கூடத்திற்குப் போகத்தொடங்கிவிட்டார்கள். அவன் மட்டும் -! யார் என்ன செய்யலாம்? எல்லாம் அவரவர் கொண்டு வந்த பலன்…
அவள் ஏதோ சிரமப்பட்டுச் சின்னராசாவைத் தமிழ் மூன்றாம் வகுப்புவரை படிக்க வைத்துவிட்டாள். தன் ஒரே குழந்தைக்கு அதாவது செய்யமுடியாவிட்டால் அவள் ஏன் தாய் என்ற முறைமை தாங்கி இருக்க வேண்டும்? தன் மகனை இங்கிலீஷ் படிக்க வைத்து, அவன் காலுறை கையுறை போட்டுக் கொண்டு கொழும்புக்குப் போய் உத்தியோகம் பார்க்கவேண்டும் என்றும், அவனுடைய நிழலில் தானும் தன் தள்ளாத வயதில் கொஞ்சம் ஆறியிருக்கலாம் என்றும் ஆசைப்பட்டதுண்டு.
மனிதர் ஆசைப்படுவதுபோல எல்லாம் முடிந்துவிடுகிறதா? ஆசைக்குத்தான் அளவில்லை. மனம் கொண்ட மட்டும் ஆசைப் படலாம். ஆசையில் தேவ இன்பங்களைக் கூடச் சுவைத்து விடலாம். ஆனால் நடக்கவேண்டியது நடந்துதான் தீரும். அதை அணுவளவுகூட அசைக்க முடியாது.
ஒருவேளை “அவர்” உயிரோடிருந்தால் – ஹும்! அதைக் குறித்து எண்ணி என்ன பிரயோசனம்? நடந்துபோனவைகளைக் குறித்துத் துயரப்பட்டு ஆவது ஒன்றுமில்லை.
பொன்னம்மா ஒருநாள் ஒரு தேர்த் திருவிழாவில், யானை கரும்பு சாப்பிட்டதைப் பார்த்திருக்கிறாள். ஒரு முழுக் கரும்பை ஒரு சிரமமுமில்லாமல் நாலாக மடக்கி அந்த யானை தன் அகன்ற வாய்க்குட் போட்டு அதக்கியதைக் கண்டு அவள் ரொம்ப ஆச்சரியப்பட்டாள். அந்தக் கரும்பில் ஒரு துரும்புகூட வெளியே தெரியவில்லை. யானையின் கடைவாய் வழியாக வந்த கருப்பஞ் சாறு ஒன்றுதான் யானையின் வாய்க்குள் கரும்பு இருப்பதற்கு அத்தாட்சி. ஆமாம்; யானை வாய்க் கரும்பு! போனது போனது தான்.
அவள் செய்ய முடிந்தது அவ்வளவுதான். சின்னராசாவை மூன்றாம் வகுப்பிற்குமேற் படிக்கவைக்க அவளால் முடிய வில்லை. அதன்பிறகு அவன் வீட்டிற் சும்மா இருப்பதா? சும்மா இருந்தால் ‘கழிசறைகளுடன் சேர்ந்து கெட்டுப்போய் விடுவான். அதோடு, சாப்பாட்டிற்குத்தான் வழி ஏது? ஆதலால் அவள் தன் மகனைச் சுருட்டுத்தொழிலிற் சேர்த்துவிட முடிவு செய்திருந்தாள். காலுறை கையுறை அணிந்து உத்தியோகம் செய்வதற்குச் சுருட்டுச் சுற்றுவது ஒரு வகையிலும் ஈடாகாதுதான். ஆனால் என்ன செய்வது?
“நாலு காசெண்டாலும் தம்பி உழைக்கட்டும்” என்று தன் மனத்தைத் திருப்தி செய்து கொண்டாள்.
யாரோ ஒருவன் தெரு வழியே “திரிலோகமும் புகழும் சுந்தரா ஆ..ஆ”… என்று ஸ்ரீராகத்தை நீட்டி முழக்கிக்கொண்டு சென்றான். எங்கோ ஒரு வேலியருகில் இருந்துகொண்டு ஒரு புடையன் பாம்பு “க்றொக், க்றொக்” என்று கொறித்தது. பொன்னம்மாவின் உடல் சிறிது நடுங்கியது. “ஐயோ தம்பி நாளைக்கு எப்படித்தான் சுத்துக்குப் போகப் போகுதோ எனக்குத் தெரியாது. முதல் முதலாய்ப் போகேக்கையே என்ன நடக்குதோ…” என்று வாய் விட்டுக் கூறியபடியே, அவள் தன் போர்வையை இழுத்து மூடிக்கொண்டு மறுபுறமாகத் திரும்பிப் படுத்துக் கொண்டாள்.
வைகறை, நாலு மணி நேரம். முதற் கோழி கூவிற்று. பொன்னம்மா திடுக்கிட்டு விழித்துக் கொண்டாள். ஐயையோ நேரமாகிவிட்டதே!
“தம்பி, எழும்படா, விடிஞ்சு போச்சு. நீ சுத்துக்குப் போக வேணுமல்லே , ம்…ம், எழும்பு ”
சின்னராசா தன் உடம்பை நெளித்து முனகினான். சித்திரை மாதத்தில் இரவு பகல் ஓயாமல் வீசும் சோளகக் காற்று உலர்ந்து தொங்கிய பனைஓலைகளையும் வாழை மரங்களையும், வேலி களையும் வீட்டுக் கூரைகளையும் அசைத்துப் பெரிய ‘கலாட்டா’ செய்து கொண்டிருந்தது.
அதன் லேசான குளிரில் கால் விரல்கள் மட்டும் வெளியே தெரியும்படி போர்வையை இழுத்து மூடிக் கொண்டு “வைகறைத் துயில் செய்தல்…” ஆ! எவ்வளவு இனிமையானது. நித்திரை செய்வதிலும், நினைவிற்கும் கனவிற்கும் இடையில் உள்ள அரைத் தூக்க நிலையில் மனத்தை மாலுமி அற்ற மரக்கலன் போல் இன்பமான நினைவு அலைகளின் மேல் யதேச்சையாக அலைந்து செல்லவிடுவது இன்னும் எவ்வளவு இனிமையானது! சின்னராசா இப்பொழுது அந்த நிலையில்தான் இருந்தான்.
தாயாரின் குரல் அவனது தூக்கத்தைக் கலைத்துவிட்டது. மறுபடி குலைந்துபோய் இருந்த போர்வையை இழுத்து மூடிக் கொண்டான். கண் இமைகள் தாமாகவே ஒன்றை ஒன்று கவ்வின. ஆஹா, இன்றைக்கு சுருட்டு வேலைக்கா போகவேண்டும்? அவனும் தாயும் கடைத்தேறுவதற்கு அதுதான் வழிபோலும்!
மூன்றாம் வகுப்புப் புத்தகத்தில் வரும் துருவனைப் போல், அவனும் தவவேடம் கொண்டு காட்டிற்குத் தவம் செய்யப் போகின்றான் – தனக்கும் தாய்க்கும் எவருக்கும் கிட்டாத பெரும்பேறு வேண்டி.
ஆனால் ஆச்சி எப்படி அவனை விட்டுப் பிரிந்திருப்பாள்? அவள் எங்கோ நின்றுகொண்டு காட்டிற்குப் போகும் தன் மகனைக் கண்களில் நீர் சொரியக் கூந்தல் அவிழ்ந்து விழ, வருந்தி அழைக்கிறாள்.
“அடே தம்பி, எழும்படா, என்னடா இப்படி நித்திரை. பொடியங்கள் வந்திடப் போறாங்கள். போய் முகத்தைக் கழுவிப் போட்டுவா.”
சின்னராசா திடுக்கிட்டு எழுந்து உட்கார்ந்தான். இனிப் படுத்திருப்பதென்பது முடியாத காரியம். ஆச்சி விடமாட்டாள்.
தன் போர்வையை உதறி எறிந்து, பாயைச் சுருட்டி ஒரு மூலையில் போட்டுவிட்டு, கதவைத் திறந்து கொண்டு வெளியே – சென்றான். பொன்னம்மாவும் தன் படுக்கையை விட்டு எழுந்து கைவிளக்கை ஏற்றினாள். பிறகு அருகிற் கிடந்த ஒரு பாதி எரிந்த சுருட்டைப் பற்றவைத்துக் கொண்டு, அடுப்பங்கரையை நோக்கிச் சென்றாள். அடுப்பைச் சுத்தம் செய்து நெருப்பு மூட்டிப் பானையில் நீர் கொதிக்க வைப்பதற்குள், சின்னராசாவும் முகம் கழுவி நெற்றி நிறைய திருநீறும் பூசிக்கொண்டு அடுப்பங்கரைக்கு வந்து சேர்ந்தான். உடனே பொன்னம்மாள் இரவில் தண்ணீர் ஊற்றி வைத்திருந்த பழைய சோற்றை ஒரு பாத்திரத்தில் பழங்கறியோடு போட்டுப் பிசைந்து மகனுக்குத் திரட்டிக் கொடுத்தாள்.
சாப்பாடு முடிந்ததும் ஒரு கண்ணாடி டம்ளர் நிறைய தேநீரும் ஒரு துண்டு பனங்கட்டியும் கொடுத்தாள். சின்ன ராசா வயிறு நிறைந்ததும் பலவிதமான அங்க சேஷ்டைகளோடு ஒரு ஏப்பம் விட்டான்.
“பார்; ஊத்தைக் கந்தனை, பறையன் மாதிரி. போடா, போய் தைலாப் பெட்டிக்கை ஒரு வெள்ளை வேட்டியும் சால்வையும் எடுத்து உடுத்துக்கொண்டுவா” என்றாள் பொன்னம்மா.
பொழுது புலரும் சமயம், காகங்கள் சமுத்திரம் இருந்த திசையை நோக்கி ஒவ்வொன்றாகப் பறந்து கொண்டிருந்தன. பொன்னம்மாவின் வீட்டு வாசலில் நாலு ஐந்து பையன்கள் கூடி நின்றனர். “எடே சின்னராசா நீ வரவில்லையே? நாங்கள் போறோம்” என்றான் ஒருவன். “எடே வாறியோ இல்லையோ?” என்றான் இன்னொருவன்.
– சின்னராசாவுக்குத் தலை சீவிக் கொண்டிருந்த பொன்னம்மா “கொஞ்சம் பொறுங்கோ, இதோ வந்திட்டான்” என்றாள் உள்ளிருந்தபடியே. தலை சீவி முடிந்ததும் “இந்தா, தம்பி, பத்துச் சதம், தேத்தண்ணி குடிக்கிறதுக்கு வைத்துக்கொள்” என்று மகனிடம் ஒரு நாணயத்தைக் கொடுத்தாள். “சரி மேனே, நேரம் போட்டுது, போ. கவனமாய் வரவேணும். நீ வாறதைப் பார்த்துக் கொண்டிருப்பேன்…”
அவர்கள் சுருட்டுக் கொட்டகையை அடையும்பொழுது ஏழரை மணியாகிவிட்டது. சுருட்டுக்காரர்களிற் பலர் தங்கள் தங்கள் இடங்களில் அமர்ந்திருந்தார்கள். அவர்கள் ஒவ்வொரு வருக்கும் முன்னால் பனை ஓலைப் பாய்களில் ஒவ்வொரு குவியல் புகையிலைத் தூள் இருந்தது. சின்னராசாவைச் சுருட்டுக் கொட்டகை முதலாளி தம் அருகில் வரும்படி சைகை செய்தார். “டேய் சுட்டான், நீயும் சுருட்டுத் தொழில் செய்யவா வந்தாய்? அதுதான் நல்லது. உங்கே எல்லாரும் இங்கிலீசைப் படிச்சுப் போட்டு என்ன செய்யிறது? தெருத்தெருவாய் அலையிறதுதான் கண்ட மிச்சம். சரி, நீ போய் அதோ இருக்கிறாரே ஒருத்தர், அவருக்குப் பக்கத்திலே இருந்துகொண்டு அவர் சுருட்டிப்போடும் சுருட்டுக்களை எடுத்து இந்த மஞ்சள் நூலாலே கட்டிப் போட்டு ஒவ்வொண்டாய் அடுக்கி வை. இதுதான் இண்டைக்கு உன்ரை வேலை. போ” என்றார்.
சின்னராசாவிற்கு அன்று வேலையில் அதிக நாட்டம் செல்ல வில்லை. அம்மாவின் நினைவு, சோம்பேறித்தனம் முதலியன அவன் கவனத்தை இழுத்தன. அதனால் பலதரம் புகையிலைக் காம்பினால் அடியும் படவேண்டி நேரிட்டது. ஒவ்வொரு அடியும் “சுள்” என்று தோலைப் பிய்த்துக் கொண்டு போவதுபோல்…
மாலை ஐந்து மணி சமயம், வேலை முடிந்துவிட்டது. சின்னராசாவுக்கு நாற்பது சதம் கிடைத்தது. அவன் அதைத் தன் வேட்டித் தலைப்பில் முடிந்துகொண்டான்.
வீட்டுக்கு வரும்பொழுது நன்றாக இருட்டிவிட்டது. பொன்னம்மா விளக்கேற்றி வைத்துவிட்டு வாசலில் மகன் வரவை ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டு நின்றாள்.
சின்னராசா தாயைக் கண்டதும் அவளைக் கட்டிக் கொண்டு அவளுடைய மார்பில் தன் முகத்தைப் புதைத்துக் கொண்டான். “ஆச்சி-” அதற்குமேல் அவனால் பேசமுடிய வில்லை. விம்மல் தொண்டையை அடைத்துக் கொண்டது.
பொன்னம்மா மெதுவாக அவனுடைய தலையையும் முதுகையும் வருடினாள். “சீ வெட்கங் கெட்டவனே, இதுக்கேன் இப்படி அழுகிறாய்? அதெல்லாம் வளரமுன்னுக்கு மாறிவிடும். இஞ்சை பார், நான் பிள்ளைக்குக் கொளுக்கட்டை அவிச்சு வைச்சிருக்கிறேன். போய்க் கால் முகம் கழுவிப்போட்டு ஓடியா. தம்பி எங்கையடா உன்ரை உழைப்பு? எங்கே, முடிச்சை அவிழ் பார்ப்பம். ஓ! இஞ்சை றம்பத்தான்…”
– வெள்ளிப் பாதசரம், முதற் பதிப்பு: ஜனவரி 2008, மித்ரா ஆர்ட்ஸ் அண்ட் கிரியேஷன்ஸ், சென்னை.