(2011ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
சதாசிவம் அன்றைய நாளிதழைப் புரட்டிக் கொண்டிருக்கிறார் “அப்பா! இது உங்களுக்கு !” தபால் பெட்டியிலிருந்து கடிதங்களை எடுத்து வந்த அவரது மகன் சரவணன்தான். ஓர் கவரை, அவருக்கு முன்னால் இருந்த அந்த சிறிய ‘கண்ணாடி மேசையில்’ போட்டுவிட்டுப் போகிறான். பத்திரிகையில் மேய்ந்து கொண்டிருந்த அவரது விழிகள், சட்டென்று அந்த மேசையின் பக்கம் சாய்கின்றன. ‘ஹீம்! என்னா கடிதமாக இருக்கும்?’ அவரது உள்ளத்தில் கேள்வி எழ , மேசையில் கிடக்கும் அந்த ‘கடித உறையை’ அவரது விழிகள் அளவெடுக்கின்றன. அது, வெண் நிறக்கவர்; அதன் முதுகுப்புரத்தில் சிறிய கண்ணாடித் திரை அத்திரைக்குள் அவரது முழுப் பெயரும் முகவரியும் காட்சித்தருகின்றன. மின்சாரத்தைத் தொட்டது போல் ஓர் உணர்வு அதிர்வு அவரது உள்ளத்தில் ‘வந்துவிட்டனே!’ என்று சொல்லாமல் சொல்லி அவரை நையாண்டி செய்யும் அந்தக் கவரை, அவர் வெறுப்போடு நோக்குகிறார். வெறுப்புக்கு பின்னால் கலக்கமும் அவரை ஆட்கொள்கிறது.
“சனியன்! வந்துடுச்சு!; மாத கடைசி வாரத்துலே, மறக்காமே என் கழுத்தை அறுக்க வந்துடுச்சு! கடவுளே! இந்த மாசம் எவ்வளவு வந்துருக்கோ? அவரது உள் மனம் புலம்ப.. இனம் புரியாபயம், வேதனை அவரை மெல்ல தழுவுகிறது. “அந்தக் கவரை பிரித்துப் பார்க்கலாமா…? வேண்டாமா?” அவரது மனதுக்குள் சிறு போராட்டம் ‘மிக முக்கியமான கவர் அது! அதை… பிரித்துப் பார்க்காமல் அலட்சியப்படுத்தினால் பிறகு அபராதம் கட்ட வேண்டி வரும்!’ சதாசிவத்தின் பகுத்தறிவு… அவரை எச்சரிக்கிறது அக்கவரை அவர் மெல்ல கைப்பற்றுகிறார்; பிரிக்கிறார்! நீலம்… கருப்பு… சிகப்பு வாணங்களில் எழுத்துக்கள்… கட்டங்கள்… கணக்குகள்!
‘‘ஐயோ! இந்த மாசம் நூற்றைம்பத்தாறு வெள்ளியா?” அதிர்ச்சியால் அவர் அதிர்ந்து போகிறார் ‘மொத்தத் தொகை’ என்று குறிப்பிடப்பட்டிருந்த கட்டத்தை, சதாசிவம் மீண்டும் ஒருமுறை ஆழமாக நோக்குகிறார். ‘சந்தேகமே…யில்லை! இது நூற்றைம்பத்தாறு வெள்ளிதான்!’ அவரது உதடுகள் முணுமுணுக்கின்றன. ‘கடவுளே! போன மாசம் தானே சுளையா நூற்று நாற்பது வெள்ளியை கட்டியழுதேன்! இப்போ நூற்று ஐம்பத்தாறு வெள்ளி வந்துருக்கே!’ தன் விழிகளை அவரால் நம்பமுடியவில்லை. மாதமொரு முறை, ‘ வேண்டாத விருந்தாளியாக’ அவரது வீட்டுக்கு வந்து , அவரது மனநிம்மதியை பறித்துச் செல்லும் அந்த ‘பியூபி பில்லை; அவரது விழிகள் சுட்டெரிக்க முயலுகின்றன ‘எடுக்கிற சம்பளத்திலே அரைக்கால் வாசியை, இந்த பியூபி பில்லுக்கு கட்டியழ வேண்டியிருக்கிறது!’ அவரது உள்ளத்தில் எரிச்சல்! ஒவ்வொரு மாதமும்… அந்த ‘பியூபி பில்லை ‘ பார்க்கும்போதெல்லாம் சதாசிவத்தின் உள்ளம், பற்றி எரியும்; இப்போதும் எரிந்துக் கொண்டுதான் இருக்கிறது! வெறுப்பு மேலிட, அந்த பியூபி பில்லை மேசையில் போட்டுவிட்டு , மெல்ல எழுந்து சன்னல் பக்கம் போகிறார் சதாசிவம்; சன்னல் வழியாக, பரந்துக்கிடக்கும் வானவீதியை அவர் நோக்குகிறார். ஆம்! உள்ளத்தை அழுத்தும் துன்பத்திலிருந்து நம்மை மீட்கும் சக்தி… இயற்கையின் எழிலுக்க்குத்தானே உண்டு!
அதோ! கருநீல வானவீதி; அந்த வீதியில் பல கோலங்களில் மிதந்துச் செல்லும் வெண்முகில்கள்! அந்த வெண்முகிற் கூட்டங்களை ஊடுறுவிக் கொண்டு, அவரது விழிகள் அந்த கருநீல வானை, துளையிட ஆரம்பிக்கின்றன. விழிகளால் வானத்தை எவ்வளவு நேரம்தான் துளையிட முடியும்? வான்பரப்பிலிருந்து தனது விழிகளை மீட்டுக் கொள்கிறார் சதாசிவம்.
“கடவுளே! அந்த வெண்முகில்களைப் போல… பறவைகளைப் போல பூச்சி புழுக்களைப்போல என்னை நீ படைச்சிருக்கக் கூடாதா? மனித பிறவியைக் கொடுத்து… ‘பியூபி பில்லைக் காட்டி என் நிம்மதியை அலைக்கடல் துரும்பாக்கி விட்டாயே!’ அவரது மனம்தான் புலம்புகிறது. அந்த பியூபி பில்லில் சிறிதாக குறிக்கப்பட்டிருந்த “நூற்றைம்பத்தாறு’ என்னும் எண்கள், அவரது மனத் திரையில் பெரிய ‘சினிமாஸ்கோஃப் படம் போல் காட்சி தந்து, அவரை பயமுறுத்துகின்றன ‘வான்மதி வளர்கிறது.. தேய்கிறது; ஆனால் இந்த பியூபி கட்டணம் வளர்கிறதே தவிர, தேய்ந்து குறைந்து தன் இதயத்தில் குளிர்ச்சியை ஏற்படுத்த மாட்டேன்’ என்கிறதே என்ற ஏக்கம் அவருக்கு ‘ பியூபி பில்….’ அவரது மனநிம்மதியையே குலைத்துவிட்டது!
ஆங் மோ கியோவில், மூவறை வீட்டில் அவர் குடியிருந்தபோது, பியூபி கட்டணம் மாதாமாதம் எழுபது வெள்ளியிலிருந்து எண்பது வெள்ளிக்குள்தான் அடங்கும் அதுவே அவருக்கு அதிகமாகத் தோன்றி அவரது உள்ளத்தை குடையும்! ஆனால் இன்று…? பியூபி பில்லை பார்க்கவே அவரது உள்ளம் நடுங்கும் அளவுக்கு, நூற்றறுபது… நூற்றெழுபது என்று வருகிறது. ‘ பியூபி பில்’ அவரது விழிகளை பிதுக்கி, அவரது உள்ளத்தை நசுக்க ஆரம்பித்தபோதே, அவரது நொந்த உள்ளத்தில் ஓர் கேள்வி தலைதூக்கி ஆம்..! ‘பியூபி கட்டணம் வீட்டின் அளவைப் பொருத்து நிர்ணயிக்கப்படுகிறதா?’ என்று அந்த மகத்தான கேள்விக்கு இதுநாள் வரை அவரால் விடை காண முடியவில்லை . ஆனால் அவரது மனைவி காமாட்சி, ‘ஐந்தறை வீடுன்னா… பியூபி கட்டணம் ரொம்பத்தாங்க வரும்னு!’ எவ்வளவு அலட்சியமாகக் கூறுகிறாள் தன் மனைவியைப் பற்றி அவருக்குத் தெரியாதா என்ன! ஓட்டைக் கையாச்சே! அவளுக்கு!
சதாசிவத்தின் நண்பர் ராமனும் ஐந்தறை வீட்டில்தான் குடியிருக்கிறார் அவரது குடும்பத்திலும் ஐந்து பேர்கள்தான். தொலைக்காட்சி – வானொலி – ஐஸ் பெட்டி – பேஃன் – குக்கர் இப்படி சதாசிவத்தின் வீட்டில் இருக்கும் அத்தனைப் பொருட்களும், அவரது நண்பர் ராமனின் வீட்டிலும் இருக்கின்றன ஆனால் ராமன், தனது படுக்கை அறையில் ‘ ஏர்-கோஃன்’ போட்டிருக்கிறார்; சதாசிவத்தின் வீட்டில் ‘ஏர்-கோஃன்’ இல்லை. இருந்தும் ராமனின் ‘பியூபி பில்’ இருக்கிறது…! என்பது சதாசிவத்துக்கு நன்கு தெரியும் அது அவருக்கு வியப்பை மட்டும் அளிக்கவில்லை; அவரது வயிற்றெரிச்சலை மேலும் வளர்த்துவிட்டது. ‘எப்படி. .. எப்படி அவருக்கு மட்டும் பியூபி பில் குறைவாக வருகிறது?’ என்று தனக்குத்தானே கேட்டு விடைக்காண முடியாது , அவர் மனம் சோர்ந்து போனார். தன் வயிற் றெரிச்லை ஒரு நாள் தன் நண்பர் ராமனிடம் சொல்லி, தனது பியூபி பில்லுகளையும் காட்டினார் சதாசிவம். அந்த பியூபி பில்லுகளைப் பார்த்ததுமே ஆச்சரியத்தால் வாயைப் பிளந்தார் அவரது நண்பர் ராமன் ‘சதாசிவம்! உங்க வீட்டு மீட்டருளே ஏதோ கோளாரு… இருக்கு! நீங்க உடனே ‘சோமர்-செட்’ ரோட்டிலே இருக்கிற பியூபி பில்டிங்குக்கு போயி புகார் செய்யுங்க! உங்க வீட்டு மீட்டருங்களை அவங்க வந்து செக் பண்ணுவாங்க! நீங்க இப்படியே… அலட்சியமா இருந்தீங்கன்னா… பின்னாலே இருநூறு முந்நூறு வெள்ளியின்னுக்கூட பியூபி பில்லு வரும்!’ என்று அவரை எச்சரிக்க, சதாசிவம் நடுநடுங்கிப் போனார்.
ராமனின் கூற்றை தெளிவாக்கிக்கொள்ள, தனக்குத் தெரிந்த வேறு பலரிடமும் தனது பியூபி பில்லைக்காட்ட, அவர்களும் ராமனின் கூற்றை பிரதிபளிக்க், சதாசிவம் சுதாரித்துக் கொண்டார். ‘என்ன ஆனாலும் சரி; ரெண்டுலே ஒன்று பார்த்திடணும்!’ என்ற எண்ணத்தில், ஒரு நாள் வேலைக்கு… ‘டிமிக்கி’ கொடுத்துவிட்டு, ‘சோமர்-செட்’ சாலையோரத்தில்… ‘சோமர் செட் எம்.ஆர்.டி’ நிலையத்துக்கு எதிரே அமைந்திருந்த பியூபி. கட்டிடத்துக்கு விரைந்தார் சதாசிவம். அங்கே முதல் மாடியில், பெண்மணி ஒருவர் அவரை புன்னகையோடு வரவேற்று, வந்த விவரத்தை விசாரிக்க சதாசிவமும் அழாக்குறையாக வந்த விவரத்தைக்கூறி, தான்…. கையோடு கொண்டு வந்திருந்த சில ‘பியூபி பில்களை’ அப்பெண்மணியிடம் காட்டினர். அப் …பியூபி பில்களை வியப்போடு நோக்கிய அப்பெண்மணி, “இது உண்மையிலேயே அதிகம்தான்! ‘ என்று கூறி, சதாசிவத்தின் விவரங்களை கணினியில் பதிவு செய்து கொண்டார்.
‘எங்கள் சூபர்வைசர்கிட்டே சொல்லி, உங்க வீட்டு மீட்டருங்களை ‘செக் பண்ண சொல்லுறோம்! ஓரிரு வாரத்தில் உங்களுக்கு விவரத்தை தெரிவிக்கிறேன்’ என்று பணிவன்போடு கூறி, அவரது தொலைபேசி எண்களை குறித்துக் கொண்டு , அவருக்கு விடை கொடுத்தார். அப்பெண்மணி மனதைப் போட்டு அழுத்திக் கொண்டிருந்த ‘பாரத்தை’ அங்கே… அந்த பியூபி பில்டிங்கிலேயே இறக்கி வைத்துவிட்டு, ஓர் பெரிய சாதனையை சாதித்த மனநிறைவோடு, வீடு திரும்பினார் சதாசிவம்.
பிரச்னை தீர்ந்தது; இனி… பியூபி பில்லுக்கு அதிகமாக பணம் கட்ட வேண்டி வராது என்ற எண்ணத்தில், நம்பிக்கையில் அவரது மனம் குளிர்க்காய்ந்துக் கொண்டிருந்தது சரியாக எட்டு நாட்களுக்குப் பிறகு ‘பொது பயனிட்டூக் கழகத்திலிருந்து, அவருக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. அவர் புகார் கொடுத்துவிட்டு வந்த பெண்மணிதான், அவரோடு தொலைபேசியில்… தொடர்பு கொண்டார்!
“உங்க வீட்டு கேஸ் – மின்சாரம் – தண்ணீர் மீட்டருங்களை எங்க தொழில் நுட்ப அதிகாரிங்க வந்து சோதித்துப் பார்த்ததிலே அந்த மீட்டருங்களிலே எந்தவொரு பழுதும் இல்லை! என தெரிகிறது ; ஆகையால் உங்க வீட்டு உறுப்பினர்களை தயவு செய்து மின்சாரம், தண்ணீர் கேஸ் இவற்றை கொஞ்சம் சிக்கனமாய் உபயோகிக்கச் சொல்லுங்க!’ ‘ என்று கூற, சதாசிவத்தின் நம்பிக்கையில் இடி விழுந்தது. மீண்டும் பியூபி பில் பிரச்னையில் அவரது மனம் அலைமோத தொடங்கியது.
கடந்த வாரம்தான்; ‘பொது பயனீட்டுக் கழகத்திலிருந்து; அந்த பெண் அதிகாரியிடமிருந்து அவருக்கு தொலைபேசி அழைப்பு வந்து, ‘அவரது வீட்டு மீட்டருங்களிலே எந்தவொரு கோளாறும் இல்லை ‘ என்று அவருக்கு அறிவிக்கப்பட்டது ; இதோ! இன்று வழக்கம் போல் பியூபி பில் வந்துவிட்டது . அவரது மனதையும் களங்க வைத்துவிட்டது சதாசிவத்தின் விழிகள், மீண்டும் வானவீதிக்கு தாவுகின்றன.
“கடவுளே! இதற்கு ஓர் விமோசனமே கிடையாதா? அவரது உள்ளம்தான் வானவீதியைப் பார்த்து புலம்புகிறது! அவரது சிந்தனையில் சறுக்கள்! ‘இந்த சாதாரண விஷயத்தை ஏன் கடவுளிடம் கொண்டு செல்லுகிறாய்? ‘வினை விதைத்தவன் வினை அறுப்பான்’ என்பதை மறந்துவிட்டயா? பியூபி கட்டணம் உயர்ந்துக் கொண்டு போகிறது என்றால்… வீட்டில் உள்ளோர் தாராள மனதோடு தண்ணீரையும் மின்சாரத்தையும்.. எரி வாயுவையும் செல வளிக்கின்றனர் என்பது உன் மூளைக்கு எட்டவில்லையா? முதலில் உன் வீட்டில் உள்ளவர்களிடத்தில் சிக்கனத்தை புகட்டு. பிறகு பியூபி பில் கட்டணம், தானே சரிந்துவிடும்…! என்று கூறி, பகுத்தறிவு அவரது தலையில் குட்ட, அவர் சுதாரித்துக் கொள்கிறார். ‘இத்தனை காலமும் கண்ணிருந்தும் பார்க்காமல்… காதிருந்தும் கேட்காமல் இருந்துவிட்டேன்! இனி… கண்ணையும் காதையும் தீட்டிக் கொள்ள வேண்டியதுதான்’ சதாசிவத்தின் மனம் ஓர் முடிவுக்கு வருகிறது.
அந்த ஒன்பதாவது மாடியில் அவரது வாசலுக்கு எதிரேதான், இரண்டு மின் தூக்கிகள் அமைந்திருக்கின்றன. அந்த மின் தூக்கிகளுக்கு வலப்பக்கம் சற்றுத்தள்ளி தான் பொது குப்பைத் தொட்டி ஒன்று உள்ளது.
அந்த ஒன்பதாவது மாடியில் குடியிருப்போர், மின்தூக்கிகளை பயன்படுத்த வந்தாலும் சரி, குப்பைகளை குப்பைத் தொட்டிக்குள் போட வந்தாலும் சரி, சதாசிவத்தின் வீட்டு வாசலை தாண்டித்தான் செல்ல வேண்டியிருக்கும். அதோ! சதாசிவம் வேலை முடிந்து வீடு திரும்புகிறார், வீட்டு வாசலுக்கும் மின் தூக்கிகளுக்கும் இடைப்பட்ட பகுதியில் நடைப்பாதையில் முழங்காலிட்டு அமர்ந்து, அவரது மனைவி ‘சிமெண்ட் தரையில்’ கோலம் போட்டுக் கொண்டிருக்கிறாள். ஆம்! அந்த சிமெண்ட் தரையில் செளக்கார நுரைகள் பூத்து நிற்க, ‘கம்பி-பிராஷ்சால்… ‘பரக்…! பரக்…!’ என்ற, தரையை அவள் தேய்த்து கழுவிக் கொண்டிருக்கிறாள். வீட்டு வாசல் பக்கம் நிறைய தண்ணீரோடு நாளைந்து வாளிகள்! சதாசிவம் அலட்சியமாக கருதிச் செல்லும் வழக்கமான காட்சிதான் அது! ஆனால் சூடுபட்டு சுதாரித்துக் கொண்ட அவரால், இன்று அக் காட்சியை அலட்சியப்படுத்த முடியவில்லை. வினையத்தோடு தன் மனைவியை அவர் நோக்குகிறார்.
“புளோக்குங்களை கழுவி விடத்தான் ‘நகராண்மைக் கழகம்’ ஊழியர்களை அமர்த்தியிருக்கே… பிறகு நீ வேறே ஏன் வீணாப் போட்டு கழுவிக்கிட்டுக் கிடக்கே?”
“கழுவி விட ஆளுங்க இருக்கானுங்க! அவனுங்களை நீங்கதான் மெச்சிக்கணும்! ரெண்டு மூணு மாசத்துக்கு ஒரு தடவை வருவானுங்க! கழுவிவிட்டுட்டோங்கிறதைக் காட்டிக்க…. தரையிலே தண்ணியை தெளிச்சிட்டு போவானுங்க! அவன்களும் அவன்களோடு வேலைகளும்… அவன்களை நம்பியா நாம வீடு வாங்கியிருக்கோம்? நம்ப வீட்டு வாசல்புரத்தை சுத்தமாய் வச்சுக்கிறது எப்படியின்னு எனக்கு தெரியும்! வாரத்துலே குறைஞ்சது ரெண்டுத் தடவையாவது இப்படி புருஷைப் போட்டு அழுத்தி தேய்ச்சி , ஏழு எட்டு வாளி தண்ணீரை ஊற்றி கழுவி விட்டுக்கிட்டு வறேனாக்கும்! அதனாலேதான் இந்த நடைப்பாதை “தும்பை-பூவாட்டம் இருக்கு!” தரையில், ‘புருஸினால்’ அழுத்தி கோலமிட்டபடி, பெருமையோடு கூறுகிறாள் அவரது மனைவி தன் மனைவியின் கூற்றில் ஓரளவு உண்மை இருப்பதை அவரது மனமும் ஒப்புக் கொள்கிறது.
“அது சரி காமாட்சி! நீ கழுவி விடுறதைப்பத்தி சந்தோஷம்தான்; ஆனா நகராண்மைக் கழகத்துக்கு சொந்தமான தண்ணீர் குழாயிலிருந்து , ஏழு எட்டு வாளி தண்ணி பிடிக்கிறியே… இதை எவனாவது பார்த்து நகராண்மைக் கழகத்திலே வச்சிவிட்டானா…. என்னா ஆகும் தெரியுமா? அபராதம் கட்டுறதோட… உன் படமும் பெரிசா பத்திரிகையிலே… வந்துடும்! மானமே கப்பலேறிடும்!” குப்பைத் தொட்டிக்கு அருகில் அமைந்திருக்கும் நகராண்மைக் கழகத்துக்கு சொந்தமான பைப்பில், தண்ணீர் பிடிப்பது குற்றம் என்பதை தன் மனைவிக்கு சுட்டிக்காட்டுகிறார் சதாசிவம்.
“நா அந்த பைப்பிலேயிருந்துதான் தண்ணி பிடிச்சேன்னு உங்கக்கிட்டே யாருங்க சொன்னது? அந்தப் பைப்பிலேயிருந்து திருட்டுத்தனமா தண்ணி பிடிக்கிறது தப்புன்னு எனக்கு நல்லாவே தெரியுமுங்க! “ மனைவியின் பீடிகை, அவரது மனதை கலக்குகிறது.
“அந்தப் பைப்பிலிருந்து தண்ணி பிடிக்கலேயா. .. பிறகு?” இமைகள் அகன்று புருவங்கள் உயர, சதாசிவம் தன் மனைவியை நோக்குகிறார்.
“எல்லாம் நம்ப வூட்டு தண்ணித்தாங்க! பாத்ரூம்பிலே யிருந்து எட்டு வாளி தண்ணியை பிடிச்சி வெளியிலே கொண்டு வரதுக்குள்ளே ஏ இடுப்பே கழன்றுப் போச்சுங்க! “ அவரது மனைவி சலித்துக் கொள்கிறாள்; ஆனால் சதாசிவத்தின் உள்ளம், எரிகிறது! ‘இத்தனை யோண்டு இடத்தை கழுவி விட, எட்டு வாளி தண்ணியா ; இது அந்த கடவுளுக்கே பொறுக்காது!’ அவரது உள்ளம் முணுமுணுக்க , அவர் வீட்டினுள் காலடியெடுத்து வைக்கிறார். ஐஸ் கட்டியின் மீது கால்களை வைத்ததுபோல் ஓர் உறுத்தல்; ‘‘என்ன? காமாட்சி! ஹாலையுமா கழுவி விட்டிருக்கே?” “ஹாலை மட்டும் இல்லிங்க; மூனூ படுக்கையறை … சாமியறை… ஸ்ரோரு… கிச்சன்! எல்லாத்தையுமே மொத்தமா கழுவிவிட்டுட்டேன்! அவரது மனைவி காமாட்சி, பூரிப்போடு கூறுகிறாள் மனைவியின் உள்ளத்தில் பூரிப்பு, ஆனால் அவரது உள்ளத்தில்?
“முந்தாநாள்தானே வீட்டை கழுவி விட்டே… அதுக்குள்ளேயும் என்னா அவசரம்?” அவரது கேள்வியிலே கசப்பு!
“என்னாங்க நீங்க? முந்தாநாளு கழுவிவிட்டால்… இன்னிக்கு கழுவிவிடக் கூடாதுங்களா?” வீட்டை மட்டும் ரெண்டு நாளைக்கு ஒரு தடவை, சுத்தமா கழுவி விடனுமுங்க! வீட்டை சுத்தமா வைச்சிருந்தாத்தான்… மகாலட்சுமி வீட்டுக்குள்ளே நுளையுவாள்! அவரது மனைவிதான் அவருக்கு அறிவுரை கூறுகிறாள். ‘மகாலட்சுமி வரமாட்டாள்; மூதேவிதான் ‘பியூபி பில்’ ரூபத்திலே தவறாம வந்துக்கிட்டிருப்பாள்!’ வெறுப்போடு சதாசிவத்தின் உள்ளத்திலிருந்து எழுந்த வார்த்தைகள்… அவரது தொண்டைக் குழிக்குள்ளேயே அமுங்கிவிடுகின்றன.
“ஓர் ஐந்தறை வீட்டையே முழுசா கழுவி விட்டிருக்கியே, இதுக்கு எத்தனை வாளி தண்ணியை செலவளிச்சே.” பயம் கலந்த ஆர்வத்தோடு அவர் தன் மனைவியை கேட்கிறார், உள்ளத்தில் ஒரே படபரப்ப! “வாளித்தண்ணியா! இந்த வீட்டைக் கழுவிவிட வாளித் தண்ணியை பஃக்கப் பண்ணினா முப்பது நாப்பது வாளித் தண்ணிக்கூட பத்தாதுங்க! நல்லவேளை! நம்ப… நம்ப ‘ஹாகூவே அண்டி’ இருக்காள் இல்லீங்க? அதாங்க நம்ப பக்கத்து வீட்டு சீனக்கிழவி, அவ, பெரிய ‘கித்தாப் பைப்’ வைச்சிருக்காள்! அவக்கிட்டே இருந்துதாங்க… அந்த கித்தாப் பைஃப்பை பிஞ்சாம் பண்ணி… நம்ப வீட்டை கழுவி விட்டுக்கிட்டு வறேன்!” ஏதோ ஓர் பெரும் சாதனையை சாதித்து வருவதுபோல், அவரது மனைவி உற்சாகத்தோடு கூறுகிறாள்’ மனைவியின் சொற்கள் ஊசிகளாக மாறி அவரது உள்ளத்தை குத்த…. உள்ளம் காற்றுப்போன பலூனாகி விடுகிறது!
இடுப்புலே ஓர் பெரிய துவாளையை சுற்றிக்கொண்டு , கைகளை பிசைந்தப்படி ஹாலில் நடைப்பயின்றுக் கொண்டிருகிறார் சதாசிவம். “ச்சே! என்னா பிள்ளை! சரியா ஆறுமணிக்கு குளிக்க பாத்ரூம்பிலே நுளைஞ்சிச்சி! இப்போ மணி ‘எட்டேகால் ஆகிறது! ஆறு மணிக்கு திறந்த பைப்பை மூடாமே, அப்படி என்னா குளியலோ தெரியலே! கடவுளே! ஓர் சாதாரண குளியலுக்கு எத்தனை ‘கேலன்’ தண்ணி வீணாவது?’ அவரது உள்ளத்தில் முணுமுணுப்பு! முகத்திலே கடுகடுப்பு!
“ குட்டிப்போட்ட பூனை மாதிரி.. யேன் அங்குட்டும் இங்குட்டும் நடந்துக்கிட்டிருக்கீங்க. பேசாமே ஓர் இடத்துலே உட்காருங்க! அது… இப்போ வந்துடும்!’ ‘ எரிகிற நெருப்பில் எண்ணையை வார்க்கிறாள் அவருடைய மனைவி காமாட்சி. சதாசிவம் இயல்பாகவே பொறுமைசாலி! ஆனால் பொறுமைக்கும் ஓர் எல்லையுண்டு அல்லவா! அவரது மனைவி யின் வார்த்தைகள், அவரின் மூளையை சூடேற்றுகின்றன. கோபத்தோடு தன் மனைவியை நோக்குகிறார் அவர்!
“உன் அருமை மவ… எத்தனை மணிக்கு பாத்ரூமுக் குள்ளே போனதுன்னு உனக்கு தெரியுமா? சரியா ஏழு மணிக்கு! இப்போ மணி என்ன? எட்டேகால் ஆகப் போகுது; இன்னும் அது குளிச்சிக்கிட்டுதான் இருக்கு! குளிக்கறதுக்காக இப்படி ரெண்டு அவரு. .. மூணு அவர்ன்னு தண்ணியை திறந்து விட்டுக்கிட்டிருக்கிறது உனக்கே நியாயமா படுதா? ஓர் சாதாரண குளியலுக்கு எத்தனை கேலன் தண்ணி வீணாப் போகுது!” தன் மனைவியின் குணம் தெரிந்திருந்தும்… அவளிடம் நியாயத்தை கேட்கிறார் சதாசிவம்.
“தண்ணி வீணாவுதுன்னா… குளிக்க வேணாமுன்னு சொல்லுறீங்களா.” அவரது மனைவியின் குரலிலே, கடுகடுப்பு!
குளிக்க வேணாமுன்னு சொல்லுவேனா? தண்ணியை சிக்கனமா பயன்படுத்த சொல்லுறேன், ஒரு பத்து பதினைஞ்சி
நிமிஷத்துலே குளிச்சிட்டு வாங்கன்னு சொல்லுறேன்!” அவரது குரலில் கெஞ்சல்!
“பத்து பதினைந்து நிமிஷத்துலே குளிச்சிட்டு வந்துடுன்னுமா? அது எப்படிங்க முடியும்?”
“யேன் முடியாது? நா… குளிச்சிட்டு வரலே?”
“நீங்க ஆம்பிள்ளை…! ஐஞ்சே நிமிஷத்திலே குளிச்சிட்டு வந்துடுவீங்க! நாங்க பொம்பளைங்க! எங்களாலே முடியுங்களா?” ஆம்பிள்ளை குளிக்கிறதுக்கும் பொம்பளை குளிக்கிறதுக்கும் வித்தியாசம் இருக்கூங்க!”, அவரது மனைவி புதிர் போடுகிறாள்.
“வித்தியாசமுன்னா.”
“சிட்டுக்குருவி குளிக்கிறதை பார்த்திருக்கீங்களா? அதுபோல தாங்க ஆம்பிள்ளைங்க குளிக்கிறதும், தலைக்கும் உடம்புக்கும் கொஞ்சம் தண்ணியை தெளிச்சிட்டாலே போதும், குளியல் முடிச்சிடும்; ஆம்பளைங்க குளியலு… குருவி குளியல்….!”
ஆண்களை அவரது மனைவி சாட, அவரது உள்ளத்தில் உஷ்ணம்!
‘ஐஞ்சு பத்து நிமிஷத்திலே ஆம்பளைங்க குளிச்சிட்டு வரது… குருவி குளியலா? ஒரு அவரு… ரெண்டு அவருன்னு…. தண்ணிலேயே ஊறிக்கிட்டு நிக்கிறாங்களே பொம்பளைங்க… அவங்கக் குளியலு…. எருமைமாட்டுக் குளியலா?’ சதாசிவம் வாய்திறந்துக் கேட்கவில்லை; மனசுக்குள் தனக்குத்தானே கேட்டுக் கொள்கிறார். வாய் திறந்து கேட்டால் அங்கே பூகம்பம்
வெடிக்கும் என்பது அவருக்கு நன்கு தெரியும். பொறுப்புள்ள மனைவியாய் இருந்தால் கணவனின் வார்த்தைக்கு செவிசாய்ப்பாள்; ஆனால் அவரது மனைவிதான் ‘குண்டுச்சட்டிக்குள் குதிரையை ஓட்ட நினைப்பவளாயிற்றே!’ ‘‘ஆம்பளைங்க அவசரக்காரங்க! குளிக்கும்போது கூட அவர்களுக்கு அவசரம்தான். தண்ணிலே உடம்பை நனைச்சிக் கிட்டு ஐஞ்சி… பத்து நிமிஷத்திலே குளியலை முடிச்சிக்குவாங்க! ஆனா பொம்பளைங்க பொறுமைசாலிங்க! எதிலும் நிதானமாக நடந்து கொள்ளுவாங்க! அவசரப்படமாட்டாங்க , குளிக்கிற விஷயத்திலும் அப்படித் தாங்க! கூந்தலை அலசவே குறைஞ்சது அரை மணி நேரமாவது பிடிக்கும்! அப்படியிருக்கும் போது… ஐந்து பத்து நிமிஷத்திலே எப்படிங்க குளிச்சிட்டு வரமுடியும்?” தண்ணீரை சிக்கமானமாய் புழங்கும்படி அவர் அறிவுரை கூறுகிறார்; ஆனால் அவரது மனைவி விதண்டாவாதம் செய்து அவரது வாயை அடைக்கிறாள். “ என்னா… ம்மா ஒரே சத்தம் ?” குளியல் அறையிலிருந்து வெளிப்படும் அவரது அருமை மகள்தான், தன் தாயிடம் வினா தொடுக்கிறாள். “ ஒண்ணுமில்லே… ஜெயா! நீ ரெண்டு அவர்க்கு மூணு அவர்க்கு குளிக்கிறியாம்! அதனாலே தண்ணிக்காசு ஏறிக்கிட்டே போகுதாம்… உங்கப்பா சொல்றாரு!”
“தண்ணீரை இப்படி வீணாக்காதே! “ என்று , மகளுக்கு அறிவுரை கூற முடியாவிட்டாலும் பரவாயில்லை; ‘வேட்டு’ வைக்காமல் இருக்கலாம் அல்லவா… தாய் வேட்டு வைக்க, மகள் வெடிக்க ஆரம்பிக்கிறாள்!
“நா என்னா ஒரு நாளைக்கு பத்து பதினைஞ்சி தடவையா குளிக்கிறேன். காலையிலே ஒரு தரம் ராத்திரியிலே ஒரு தரம்! இதுக்கு போயி யேன் அலுத்துக்கணும்? இந்த வீட்டுலே… நிம்மதியாய் குளிக்கக்கூட முடியாது போலிருக்கே!” சதாசிவத்தின் செல்ல மகள்தான் நேரடியாக அவர் மீது பாயாமல், தன் தாயிடம் கூறுவதுபோல் கூறிவிட்ட, முகத்தில் வெறுப்பை அப்பிக்கொண்டு தன் அறைக்குச் சென்று வாசற்கதவை ‘படார்’ என்ற சாத்துகிறாள். அவரது இதயத்தில் அடி! ஆனாலும் அவரது முகத்திலே அலட்சிய புன்னகை! ஆம் ! அறிவுரை கசக்கத்தானே செய்யும். குஞ்சு மிதித்துவிட்டு போகிறது! சேவலால் கோப்பட முடியுமா?
மனைவி… மகள்…. மகன் எல்லோருக்கும் அவர் மீது கோபம்! கண்களையும் காதுகளையும் மூடிக்கொண்டு ‘தான் உண்டு தன் வேலை உண்டு’ என்று அவர் இருந்தவரை சதாசிவம் குடும்பத்தில் நல்லவராக மதிக்கப்பட்டார். இடையில் ‘பியூபி பில் கட்டணம் உயர்ந்து கொண்டு போவதற்கான காரணத்தை கண்டறிய, தனது கண்களையும் காதுகளையும் கூர்மையாக்கிக் கொண்டு, “சிக்கனத்தைப் பற்றி குடும்ப உறுப்பினர்களிடையே உப்தேசிக்க ஆரம்பித்தபோதுதான், குடும்ப உறுப்பினர்களின் வெறுப்பை சம்பாதித்துக் கொள்ள ஆரம்பித்தார். அவர் என்னா.. ‘குளிக்க வேண்டாம்…! துணி துவைக்க வேண்டாம்! வீடுவாசலை கழுவிவிட வேண்டாம்’ என்றா கூறுகிறார்? இல்லையே! ‘தண்ணீரை கொஞ்சம் சிக்கனமா செலவு செய்யுங்க!’ என்றுதானே கூறுகிறார். இது குற்றமா? சதாசிவத்தின் வீட்டில் தண்ணீருக்கு மட்டும்தான் இந்த அவலநிலையா? இல்லை! மின்சாரத்துக்கும் எரிவாயுவுக்கும் இதே நிலைதான்!”
கேஸ் -அடுப்பில் ‘கேட்டலில்’ தண்ணீர் கொதித்து கூத்தடித்துக் கொண்டிருக்கும், அவரது மனைவி அடுப்பில் தண்ணீர் வைத்திருப்பதையே மறந்து, அண்டை-அயலார் புராணங்களை தன் தோழியிட்ம் தொலைபேசியில் விமர்சனம் செய்து கொண்டிருப்பாள். இதனால் எத்தனையோமுறை தண்ணீர்வற்றிப்போய் பாத்திரங்கள் தீ பிடித்திருக்கின்றன; ‘சோறு’ அடிப்பிடித்திருக்கிறது! கறியும்… கரியாகியிருக்கிறது! ஆனால் சதாசிவத்தின் மனைவி , இதைப்பற்றியெல்லாம் கவலைப்படுவதேயில்லை. அடுப்பை பற்றவைக்கும்போது அடுப்பு எரிந்தால் சரி; மற்றபடி எரிவாயுவைப் பற்றியோ… அதன் உபயோகம் பற்றியோ… அதன் மதிப்புப் பற்றியோ அந்த அம்மாளுக்குக் கவலையில்லை!
சதாசிவத்தின் வீட்டில் மின்சாரத்துக்கும் இதே கதிதான்! மகனின் அறையில் ஓர் ரேடியோ; அதில் ஆங்கிலப் பாடல்கள் அலறிக் கொண்டிருக்கும். மகளின் அறையில் ஓர் ‘கேசட்-பிளேயர்;’ அதில் பாம்பே… காதலன் போன்ற நவீன படங்களின் பாடல்கள், தொடர்ந்து இடம்பெற்றுக் கொண்டிருக்கும் சமையல் அறையிலும் ஓர் ரேடியோ! அதில் ஒலி 96.8-ன் நிகழ்ச்சிகளை அவரது மனைவி ரசித்து கேட்டுக் கொண்டிருப்பாள். இவற்றுக்கெல்லாம் மேலாக ஹாலில், ‘யார் பாக்கிறார்களோ இல்லையோ தொலைக்காட்சி கதறிக் கொண்டிருக்கும்! இவை போதாதென்று மகன் மகளது அறைகளில் ‘மின்விசிறி’ ஓய்வின்றி சுழன்று கொண்டிருக்கும்! இரவு பகல் பாராது பிள்ளைகளின் அறைகளில்… சமையல் அறையிலும்தான்…. விளக்குகள் வஞ்சகமில்லாது ஒளி சிந்திக் கொண்டிருக்கும். இந்த லட்சணத்தில் எல்லா அறைகளுக்கும் ஏர்-கோன் போடும்படி அவரது மனைவி, அவரை நச்சரித்துக் கொண்டிருக்கிறாள். நல்லவேளை! இதுநாள்வரை அவர் ‘ஏர்-கோன்’ போடவில்லை; இனி இந்த ஜென்மத்தில் போடப் போவதுமில்லை!
எரிவாயு-மின்சாரம்-தண்ணீர் இம்மூன்றும் மனித வாழ்வை இயக்கும் சக்திகள்! இவை இல்லையென்றால் மனிதவாழ்வு அஸ்த்தமித்துவிடும்! மனித வாழ்வுக்கு இன்றியமையாத இந்த அரிய பொருள்களை, ‘அளவோடு பயன்படுத்தும்படி நம் அரசாங்கம் ஒரு புரம் அறைகூவல் விடுத்துக் கொண்டிருக்கிறது. மறுபுறம் நான் பணம் கட்டுகிறேன்; எப்படி வேண்டுமானாலும் செலவழிப்பேன்’ என்று இறுமாப்போடு கூறிக்கொண்டு கண்மூடித்தனமாக தண்ணீரையும், மின்சாரத்தையும், எரிவாயுவையும் செல வழிக்கும் ஜென்மங்களும் நம்மிடையே உலாவத்தானே செய்கின்றனர்; அதற்கு உதாரணம், சதாசிவத்தின் குடும்பத்தார். ‘பியூபி கட்டணம் உயர்ந்து கொண்டு போவதற்கான காரணம்… சதாசிவத்துக்கு நன்கு தெரிகிறது! தெரிந்தும் அவரால் என்னா செய்ய முடியும்? அவரது மனைவி மக்களிடையே பொறுப்பும் புரிந்துணர்வும் சிறிதும் இல்லையே! கண்மூடித்தனமாக அல்லவா அவர்கள் நடந்து கொள்கின்றனர். முட்டையை சுவைத்து சாப்பிடும் நாம்… அந்த முட்டையை இட்ட கோழியைப் பற்றி…. அந்த முட்டையை இட,அது பட்ட வேதனையைப் பற்றி சிறிதேனும் சிந்தித்துப் பார்க்கிறோமா? ஆம்! ‘ முட்டையிடும் கோழிக்குத்தானே வலி தெரியும்! அதுபோல் பியூபி பில்லுக்கு பணம் செலுத்தி வரும் குடும்பத் தலைவருக்குத்தானே வேதனை தெரியும்! பாவம் சதாசிவம்! பியூபி கட்டணம் எவ்வளவு வந்தாலும் அவர்தானே கட்டியழ வேண்டியிருக்கிறது!
– புது அப்பா!, முதற்பதிப்பு: பெப்ரவரி 2011, தமிழ்க் கலை அச்சகம், சிங்கப்பூர்