முடிவற்று நீளும் கோடை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 13, 2013
பார்வையிட்டோர்: 13,462 
 
 

என்னுடைய இளவயது நினைவுகளில் மிக அழுத்தமாகப் பதிந்திருக்கும் பெயர் பான அக்கா. இத்தனைக்கும் என்னுடைய ஐந்தாம் வகுப்பு முழுப்பரீட்சை விடுமுறையின்போது அக்கா இறந்து போனாள். ஆனாலும், Y எழுத்தின் வலது மேல் பகுதியை ஒடித்துவிட்ட மாதிரி ஒயிலாக இடதுபுறம் சாய்ந்து வலதுகையில் சூட்கேஸைச் சுமந்து செல்லும் பெண்கள் யாரைப் பார்த்தாலும் பானு அக்கா ஞாபகம் வந்துவிடும்.

நடக்கும்போது அடிக்கடி மேலாடை விலகி, வலது நெஞ்சு குமிழ்மாதிரித் தெரியும். விக்கோ டர்மரிக் மணம் கமழ நடப்பாள். அவளுடைய நெஞ்சுயரம் வளர்ந்திருந்த என்னைக் கீழ்நோக்கிப் பார்த்துப் பிரியமாய்ச் சிரிக்கும்போது, சிங்கப்பல்லை ஒட்டி உபரியாக வளர்ந்திருந்த இன்னொரு குட்டிப் பல் பளபளக்கும். புறா முட்டைக் கண்கள் கோலிக்காய் மாதிரி மின்னும். திருத்தமான, அடர்த்தியான, நேர்த்தியாய் வளைந்த புருவங்கள் அக்காவுக்கு.

இத்தனை வருடங்களில், பானு அக்காவையும் அந்தக் கோடை விடுமுறையையும் இன்னதுதான் ஞாபகப்படுத்தும் என்றில்லை. கொஞ்சநாள் முன்பு ஒரு பிரபலமான பாடகி இறந்துவிட்டார் என்று செய்தித்தாள்களில் வந்தது. அந்த அம்மாளின் பெயரோ, எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதோ நினைவில்லை. சாகும்போது அவருக்குத் தொண்ணூற்றிச் சொச்சம் வயது என்பது நினைவிருக்கிறது.

அந்த அம்மாளைப் பற்றி அதே நாள் பேப்பரில் ஒரு கட்டுரை போட்டிருந்தது. எண்பத்திச் சொச்சம் வயதுக் கிழவரும், தேசிய அளவில் புகழ் பெற்றவருமான இன்னொரு பாடகரும் அந்த அம்மாளும் ஒரே குருவிடம் சங்கீதம் பயின்றவர்களாம். ஆஸ்பத்திரியில் மரணப் படுக்கையில் கிடக்கும்போது‘அவன் எப்பிடி இருக்கான்?’ என்று பாடகி விசாரிப்பாராம் – நினைவு வரும்போதெல்லாம். பாடகரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்ற தகவல் அந்த அம்மாள் இறக்கும்வரை அவருக்குத் தெரிவிக்கப் படவில்லை என்று சொன்னது அந்தக் கட்டுரை.

பாடகர் ’அக்கா’ என்று கூப்பிடுவாராம். அவரைவிட இவர் எட்டு வயது இளையவர். என்னையும் பானு அக்காவையும் மாதிரி.

பக்கத்து ஊரிலிருந்து குருவின் ஊருக்கு வந்து பாடம் கேட்டுவிட்டு திரும்பிப் போகும் பாடகியை லோக்கல் ரயிலில் ஏற்றி வழியனுப்பத் துணையாகப் பாடகர் போவாராம். ’ரயிலடிக்குப் போகும் வழியில் அன்று கேட்ட பாடங்களைப் பாடிக்காட்டச் சொல்வான்’ என்று மினுங்கும் கண்களுடன் பாடகி தெரிவித்ததாகப் படித்த மாத்திரத்தில் எனக்குக் கண் சுரந்துவிட்டது.

பின்னே? இன்றைக்கு, தொண்ணூற்றிச் சொச்சம் வயதில், இருவருமே நமக்கு ஒரே மாதிரிக் கிழவர்களாகத் தெரிகிறார்கள். அந்த வயதில்? ஒருவர் வாலிபத்தின் நுழைவாசலைக் கடந்து நடக்கும் இளம்பெண். மற்றவர், வேறு உலகத்தில் புழங்கிக் கொண்டிருந்த சிறுவன் அல்லவா? பார்க்கப் போனால், பானு அக்கா அகாலமாய் இறந்ததால்தானே, நான் சடாரென்று பெரிய பையனானேன்?

இவ்வளவு தூரம் அழுத்தமாக பானு அக்காவை நினைவூட்டிய அந்தப் பாடகியின் பெயர் மறந்துவிட்டதே என்று இருக்கிறது. ஆனால், எங்கள் குடும்பத்தில் நிலவிய சங்கீத வாசனை அவ்வளவுதான். என் அப்பாவும் அவரது இரண்டு சகோதரர்களும் வீட்டில் சுப – அசுப காரியங்கள் நடக்கும்போது நாலாயிரம் பாராயணம் பண்ணுவார்கள். அடித் தொண்டையும் அடைத்த மூக்கும் சேர்ந்து பிறப்பிக்கும் பயங்கரமான ஒலியில் நாலாயிரம் பாட்டுகளையும் மனப்பாடமாய் ஒப்பிப்பார்கள். தெய்வீகமான அந்தப் பிலாக்கணம் எப்படா முடியும் என்று நாங்கள் ஆயாசமாய்க் காத்துக்கொண்டிருப்போம். அக்காவின் மரணத்தோடு நிரந்தரமாக அதுவும் நின்றுபோயிற்று. தவிர, நான் வளர்ந்து வந்த காலங்களிலும், பெரியவனாகி சம்பாதித்துத் திருமணம் செய்துகொண்ட பிறகும், சங்கீதத்தையோ பிரபந்தத்தையோ நெருங்கவிடாமல் செய்துவிட்டது பானு அக்காவின் மரணம்.

நாங்கள் தல்லாகுளத்தில் குடியிருந்தோம். தங்கவேலு முதலியார் வீட்டு மாடியில். கீழே புஜங்க ராவ் என்ற கன்னடத்துக்காரர் குடும்பம். அவரும் என் அப்பாவும் முன் ஜென்மங்கள் பலவற்றிலும்கூட விரோதிகளாய் இருந்துவந்த மாதிரி நடந்துகொள்வார்கள். இப்போது நினைத்துப் பார்த்தால், அதில் ராயரின் தவறு எதுவுமே இருந்திருக்காது என்றுதான் தோன்றுகிறது.

பானு அக்கா குடும்பம் அலங்காநல்லூர் போகும் வழியில் சிறுவாலை கிராமத்தில் வசித்தது. சிக்கனம் கருதித்தான். பிரபல மோட்டார் நிறுவனம் நடத்திய மருத்துவமனையில், சொற்ப சம்பளத்தில், கணக்கராக இருந்தார் சித்தப்பா. அந்த வளாகத்துக்குள் இருந்த ஆஞ்சநேயர் கோவிலுக்கும் அவர்தாம் அர்ச்சகர். அதற்குத் தனி அலவன்ஸ் உண்டு. சித்தியாவது சற்றுப் படபடவென்று பேசுவாள் – சித்தப்பா எந்நேரமும் அமைதியாக இருப்பார்.

தமது இரண்டாவது அண்ணனான என் அப்பாவிடம் அபாரமான பிரியம். வாரத்தில் ஒரு நாளாவது எங்கள் வீட்டுக்கு வந்துவிடுவார். கை நிறைய மல்லிகைப் பூவும், சென்ட்ரல் தியேட்டருக்கு எதிரில் இருந்த திருவேங்கடவிலாஸ் நெய்மிட்டாய்க்கடை அல்வாவும் வாங்கி வருவார். அண்ணன் இருக்கும் அறையில் விட்டத்தையோ, ஜன்னல் சட்டத்தையோ பார்த்தபடி உட்கார்ந்து ஒரு மணிநேரத்துக்குக் குறையாமல் மௌனம் காத்துவிட்டுக் கிளம்பிவிடுவார்.

எங்க சீமாச்சு பரதாழ்வான் மாதிரி.

என்று அடிக்கடி சொல்வார் அப்பா. அப்படியானால், இவர்தான் ராமரோ என்று தோன்றுமல்லவா? இல்லை, அப்பா லட்சுமணன்தான். லட்சுமணன் மாதிரியேதான், கடும் முன்கோபி. இவர்கள் இருவருக்கும் மூத்த அண்ணா, சோழவந்தானுக்கு அருகில் உள்ள தென்கரையில் குடும்ப நிலங்களைப் பராமரித்துக்கொண்டும், பஞ்சாங்கம் பார்த்துக் கொண்டும் வசித்தார். பஞ்சாங்கம் பார்ப்பது என்றால், பிற சாதிக்காரர்களுக்குப் புரோகிதராக இருப்பது.

ராமருக்கும் பெரியப்பாவுக்கும் ஒரு ஒற்றுமையும் ஒரு வேற்றுமையும் உண்டு. ராமர் மாதிரியே இவரும் நீலமேக சியாமள வர்ணன். ராமருக்கு இரட்டைக் குழந்தைகள் உண்டு அல்லவா? பெரியப்பாவுக்குக் குழந்தைகள் கிடையாது. அவர் அதைப் பற்றிக் குறைப்பட்டுக்கொண்டதும் இல்லை. பானு அக்காவையும் என்னையும் தமது சொந்தக் குழந்தைகளாகவே பாவித்தார்.

என்னுடைய அப்பா நான் மேலே சொன்ன மோட்டார் நிறுவனத்தின் பிரம்மாண்டமான பட்டறையில் இருந்த உணவகத்தில் மேற்பார்வையாளராக இருந்தார். காய்கறி, மளிகைச் சாமான்கள் கொள்முதல் செய்வதில் மிச்சம் பிடித்து ஏகமாய்ச் சம்பாதித்தார் என்று பின்னாட்களில் கேள்விப்பட்டேன்.

சோழவந்தானுக்கு அருகில் இருந்த இரண்டு ஏக்கர் நன்செய் நிலம் எங்கள் பரம்பரைச் சொத்து. தாத்தா புரோகிதராகத் தொழில் செய்து சம்பாதித்தது. அவர் இன்னொரு தொழிலும் செய்தார் என்று உறவினர் வட்டாரத்தில் பேச்சு உண்டு. செய்வினைகள் வைப்பதிலும் எடுப்பதிலும் வல்லவராம் தாத்தா. இவரால் பாதிக்கப்பட்ட யாரோ கொடுத்த சாபம்தான், அடுத்த தலைமுறைக்குக் குழந்தை வறட்சியாக வந்து சேர்ந்ததாம். எங்கள் உறவினர் வட்டாரத்தில் ஒற்றைக் குழந்தை உள்ள குடும்பமே அநேகமாகக் கிடையாது – 70 களில்.

தாத்தாவின் புகழ் காரணமாக நேர்ந்த இன்னொரு விளைவு, ஒன்றுவிட்ட இரண்டுவிட்ட என்றெல்லாம் எந்த உறவினரும் எங்கள் வீட்டுப் படி மிதிக்க மாட்டார்கள் – நாங்களும் யார் வீட்டுக்கும் சென்றது கிடையாது…

இப்படியாக, மூன்று வெவ்வேறு இடங்களில் வேர்பிடித்த கூட்டுக்குடும்பம் எங்களுடையது.

பானு அக்கா எஸ்ஸெஸ்ஸெல்ஸி முடித்தாள். அப்போது சித்தப்பா இரண்டு காரியங்கள் செய்தார். ஒன்று, பள்ளியில் முதல் மாணவியாகத் தேறிய அக்காவை லேடி டோக் கல்லூரியில் பி யூ ஸி சேர்த்தது. இரண்டாவது, குடித்தனத்தை மதுரை நாராயணபுரம் ஐயர் பங்களாவுக்கு அருகில் மாற்றியது.

இரண்டுமே தவறான முடிவுகள் என்பது என் அப்பாவின் அபிப்பிராயம். இந்த இரு விஷயங்களில் மட்டும் அண்ணனின் சொல்லை பரதன் மீறிவிட்டார். ’எல்லாம் அந்தத் தட்டுவாணி முண்டையின் கைங்கரியம்தான்’என்று அப்பா கோபப்பட்டார். சித்தியைத்தான் சொல்கிறார்.

அடுத்தவா குடும்ப விஷயம், இதிலெ நாம யோசனை மட்டுந்தானே சொல்ல முடியும்? முடிவு அவா கையிலேன்னா இருக்கு?

என்று தழைந்த குரலில் கேட்ட அம்மா இரண்டு தவணையாக அடிவாங்கினாள்.

நீயே இந்தக் குடும்பத்திலே வந்தேறிதானேடி, என் தம்பி குடும்பத்தை ’அடுத்தவா குடும்பம்’னு சொல்றதுக்கு உனக்கு என்னடி அதிகாரம், நாயே?

என்று செமர்த்தியாகச் சாத்தினார் அப்பா.

இரவுச் சாப்பாட்டுக்குப் பிறகு, அப்பாவுக்கு இன்னொரு பாய்ண்ட் ஞாபகம் வந்துவிட்டது. அம்மா தன் தங்கைக்கும் அவள் பெண்ணுக்கும் ’சப்போர்ட் செய்கிறாள்’ என்பதற்காக இன்னொரு சுற்று அடித்து உதைத்தார். ஆமாம், சிறுவாலைச் சித்தியும் என் அம்மாவும் உடன் பிறந்த சகோதரிகள். ஆனாலும், அந்நிய சம்பந்தமான தென்கரைப் பெரியம்மாவிடம்தான் சித்திக்கு அதிக நெருக்கம்.

சாந்த சொரூபியான சித்தப்பாவைக் கல்யாணம் செய்துகொண்ட தங்கை, வெடுக் வெடுக்கென்று பேசக் கூடியவள். என் அம்மா சாதுப் பிராணி. அப்பாவின் மின்சவுக்குக்குக் குட்டிக்கரணம் போடுகிறவள். ஒரு தடவை லீவுக்குத் தென்கரை போயிருந்தபோது, விளையாட்டாக பானு அக்காவிடம் கேட்டேன்:

பேசாமெ, அப்பாவைச் சித்திக்கும், அம்மாவைச் சித்தப்பாவுக்கும் கல்யாணம் பண்ணி வச்சிருக்கலாமில்லியோக்கா?

குடும்பத்துக்குள்ளெ குழப்பம் உண்டு பண்றியேடா கோந்தூ…

அக்கா சிரித்தாள்.

…நல்ல யோசனைதாண்டா. ஆனா, அப்ப நான் உனக்குத் தங்கையான்னா ஆயிருவேன்?

’இது எப்படி’ என்று புரியாமல் நான் விழித்ததும், அதைப் பார்த்து அக்கா இன்னும் அதிகமாகச் சிரித்ததும் நினைவிருக்கிறது. அக்கா இன்னொரு கேள்வியும் கேட்டாள்.

அது சரிடா, அக்கா தங்கையை, தம்பியும் அண்ணாவும் மாத்திக் கல்யாணம் பண்ணிண்டா, பொண்டாட்டியைச் சித்தீன்னும், புருஷனைப் பெரியப்பான்னும் கூப்பிட வேண்டியிருக்குமேடா.

இது எனக்கும் புரிந்து விட்டது. இரண்டு பேருமாய்ச் சிரித்தோம்…

இளங்கலை சிறப்புக் கணிதம் இரண்டாம் வருடம் முடிந்ததும் பானு அக்கா தன் பங்குக்கு ஒரு காரியம் செய்து அப்பாவை உசுப்பேற்றினாள். சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொண்டது மட்டுமில்லாமல், புதிய சைக்கிளைக் காட்டுவதற்காக நேரே எங்கள் வீட்டு வாசலில் வந்து இறங்கினாள்.

அன்று ஞாயிற்றுக் கிழமை. அப்பா வீட்டில் இருந்தார். சந்தியாவந்தனம் முடித்துவிட்டு, தினமணிப் பேப்பரை எடுத்துக்கொண்டு மாடியில் உள்ள முன்முற்றத்துக்கு வந்து சம்பிரதாயமாக எட்டிப் பார்க்கிறார், கீழே பானு அக்கா சைக்கிளை நிறுத்திவிட்டு வீட்டுக்குள் நுழைகிறாள்.

அப்பாவின் முகத்தில் பொங்கிய ஆத்திரத்தை இன்னமும் என்னால் மறக்க முடியவில்லை. ஈஸிசேரில் தடாலென்று உட்கார்ந்து பேப்பரில் பார்வையைப் புதைத்துக் கொண்டார். அக்கா நேரே சமையலறைக்குச் சென்று என் அம்மாவுடன் கொஞ்சநேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு பழையபடி முற்றத்துக்கு வந்தாள்.

நான் ஈஸிசேரின் அருகில், மொட்டைமாடிக்கு இட்டுச் செல்லும் படிக்கட்டில் உட்கார்ந்து கணக்குப் பாடப் புத்தகத்தைப் படிப்பதாக பாவலாப் போட்டுக்கொண்டிருந்தேன். அக்கா கிளம்பினால், வழியனுப்பும் சாக்கில் கீழே போய்ப் புது சைக்கிளைத் தொட்டுப் பார்க்கலாம் என்று திட்டம்… அப்பாவைத் தாண்டி என் அருகில் வந்து நின்றாள் அக்கா.

கோந்து, மத்தியானமா நாராயணபுரம் வறியாடா? ஒனக்கும் சைக்கிள் கத்துத் தரேன்.

புயல்மாதிரி எழுந்தார் அப்பா.

தப்பிலிக் கடங்காரி, நீ கெட்டது மட்டுமில்லாமெ, எம் புள்ளையையும் சீரழிக்கணுமோ?…

என்று கையை ஓங்கி விட்டார். அந்த வேகத்தில், அக்கா கைப்பிடிச் சுவரை எகிறித் தரையில் விழுந்துவிடுவாளோ என்றே தோன்றியது. ஆனால், அக்கா பதறாமல் நின்றது எனக்கு ஆச்சரியமாய் இருந்தது. உயர்ந்த வேகத்தில் அப்பாவின் கை தானாக இறங்கியது.

…பொட்டெச்சியெக் கைநீட்டற வழக்கம் இந்தக் குடும்பத்திலே கிடையாது. நீ பொட்டெக்குட்டியாப் பெறந்தியோ தப்பிச்சியோ. கெளம்பு கெளம்பு…

என்று மறுபடி தடாலென்று உட்கார்ந்தார். மூச்சு வேகமாக இரைத்தது. அக்காவைப் பின்தொடர்ந்து முற்றத்துக்கு வந்து அப்பாவுக்குப் பின்னால் நின்றிருந்த அம்மா, மோவாய்க்கட்டையை வலது தோளில் இடித்துக்கொண்டாள். முகம் சுருங்கி இறங்கிப் போனாள் அக்கா.

நான் படிக்கட்டிலிருந்து எட்டிப் பார்த்தேன். புது சைக்கிளைத் தொட்டுப் பார்க்க முடியாமல் போனது ஏக்கமாக இருந்தது. ஆனால், வாங்கித் தின்ன என்று அம்மா கொடுக்கும் காசில், வீட்டுக்குத் தெரியாமல் அவர் சைக்கிள் எடுத்து நான் ஓட்டக் கற்றுக்கொண்டதும், சூறாவளி மாதிரி ஓட்டுவேன் என்பதும், திருஞானத்துக்கும் எனக்குமான போட்டிகளில் எப்போதுமே நான்தான் ஜெயித்து வந்தேன் என்பதும் தெரியாமல் அடித்துக்கொள்கிறார்களே, இவர்களெல்லாம் என்ன பெரியவர்கள் என்று உள்ளுக்குள் சிரித்துக்கொண்டேன்.

அப்பாவின் குடும்பத்தில், பானு அக்காவைத் தவிரப் ’பொட்டெக் குட்டி’ வேறு யாரும் இல்லையே என்றும் தோன்றியது.

அந்த வியாழக்கிழமை சாயங்காலம், திருஞானம் ஒரு புது யோசனை சொன்னான்:

எலே நெய்க் கருவாடு, சும்மா தல்லாகுளத்துக்குள்ளேயே ஓட்டிக்கிட்டிருந்தாப் போதுமா, வேற ஏரியாவுக்குப் போவம்டா.

என்றான். எனக்கு உள்ளூற உதறியது. யாராவது பார்த்துவிட்டால், முதுகுத் தோல் உரிந்துவிடுமே? ஆனாலும், திருஞானத்திடம் தோற்பது கேவலமில்லையா?

எந்தப் பக்கம் போலாம்?

ரிசர்வ் லைன் பக்கம். அங்கிட்டுத்தான் வெறிச்சுனு கெடக்கும்.

அந்த நாட்களில் வாகனப் போக்குவரத்து அதிகம் இல்லாத சாலை அது. மாரியம்மன் கோவில் வரை போய்த் திரும்பலாம் என்று முடிவெடுத்தோம் – ஒரு அவர் காசு அத்தோடு முடியும்… விசையாக சைக்கிள் ஓட்டும்போது, எதிர்காற்றின் சுகமும், திருட்டு சாகசத்தின் கிளுகிளுப்பும் எனக்குள் நிரம்பின.

கோவில் வாசலில் பானு அக்காவின் சைக்கிள் மாதிரியே புது சைக்கிள் நின்றிருந்தது. ’அட’ என்று வியந்தவாறே எங்கள் வண்டிகளை நிறுத்திவிட்டுக் கோவிலுக்குள் போனோம். உள்ளே எனக்கு இரண்டு ஆச்சரியங்கள் காத்திருந்தன.

வாசலில் நின்றது அக்காவின் வண்டியேதான். ஆனால், அக்கா தனியாக வரவில்லை. அவளுடைய தோளில் இடித்துக்கொண்டு, பன்னீர்செல்வம் அண்ணன் நின்றிருந்தார். ஒரு கணம் எனக்குள் பொறாமை உயர்ந்து அடங்கியது. அடுத்த கணத்தில் கடும் பீதி எழுந்தது. கல்யாணம் ஆனவர்கள் மாதிரி இவ்வளவு நெருக்கமாக நிற்கிறார்களே?

பன்னீர் அண்ணன் சித்தப்பா வீட்டுக்குப் பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர். மிலிட்டரியில் இருந்தார். வருஷத்துக்கு ஒரு தடவை லீவில் வருவார். எப்போதுமே பளீரென்ற, சல்லாத்துணி வெள்ளைச் சட்டைதான் போடுவார். உள்ளே வலை பனியன். சட்டைக் கைக்குள் புடைத்துத் தெரியும் தோள்பட்டைகள். ஒட்ட வெட்டிய தலையும், நல்ல உயரமும், அகலமான நெஞ்சும் என்று சீருடை அணியாத போலீஸ்காரர் மாதிரி இருப்பார். அடர்ந்த மீசை வைத்திருப்பார். அவரிடம் என்னைக் கவர்ந்த இன்னொரு அம்சமும் இருந்தது. தல்லாகுளம் பெருமாள் கோவில் அருகில் உள்ள பெட்டிக்கடையில் எல்லாரும் பார்க்க நின்று தைரியமாக சிகரெட் பிடிப்பார்.

இந்த இடத்தில் இன்னொரு விஷயமும் சொல்ல வேண்டும். எங்கள் குடும்பத்தில் எல்லா மனைவிகளும், புருஷன்மார் சாப்பிட்ட எச்சில் தட்டில்தான் சாப்பிடுவார்கள். ஆண்பிள்ளை சாப்பிட்ட தட்டில் சாப்பிடுவதால்தான் பெண்கள் வயிற்றில் குழந்தைகள் வந்து சேர்கின்றன என்று நான் கண்டுபிடித்து வைத்திருந்தேன். சமீப காலமாக, அதன்மீது ஒரு சந்தேகமும் தோன்ற ஆரம்பித்திருந்தது. அம்மாதான் தினசரி சாப்பிடுகிறாளே, பிறகு ஏன் ஒரே ஓரு குழந்தை?

அக்கா அவரோடு உரசிக்கொண்டு நின்றுவிட்டுப் போகட்டும், பரவாயில்லை. பன்னீர் அண்ணன் சாப்பிட்ட தட்டில் சாப்பிடாமல் இருந்தால் போதும். சித்தப்பாவாவது பரவாயில்லை, அப்பாவிடமும் பெரியப்பாவிடமும் சிக்கிக்கொண்டால் என்ன ஆகும்? குலை நடுங்கியது எனக்கு.

அக்கா என்னைப் பார்த்துவிட்டாள். அவரிடம் ஏதோ சொன்னாள். இருவரும் சிரித்தவாறே என்னைப் பார்த்து வந்தார்கள். அக்கா என்னையே பார்த்துக்கொண்டு நீட்டிய கையில், சட்டைப்பையிலிருந்து எட்டணா நாணயத்தை எடுத்து வைத்தார் அவர். அக்கா என் உள்ளங்கையைப் பிரித்து, காசை வைத்து அழுத்தினாள்.

வாங்கித் திங்க வச்சுக்கோடா கோந்தூ. இம்புட்டுத் தொலவு நடந்தேவா வந்தே?…

இதற்குள் திருஞானம் எங்கள் இருவர் சைக்கிள்களுக்கும் நடுவில் நின்றிருந்தான். நான் முட்டாள்தனமாக அவனையும் சைக்கிளையும் பார்த்தேன்.

…அட ராஸ்கல், சைக்கிள் ஓட்டத் தெரியுமா ஒனக்கு? அன்னிக்கிச் சொல்லவேயில்லியே? அமுக்கன்டா நீ.

சிரித்துக்கொண்டே பன்னீர் அண்ணனைத் திரும்பிப் பார்த்தாள். அவர் ’போகலாம்’ என்கிற மாதிரித் தலையசைத்தார். அக்கா மறுபடி என்னிடம் திரும்பினாள். என் தலையைக் கோதியபடி குனிந்து என் முகத்துக்கருகில் வந்தாள்.

கோந்து, அக்காவை நீ பார்க்கவே யில்லே. சரியா?

கிசுகிசுப்பாக அக்கா கேட்டதும், எனக்கு மயிர்க்கூச்செரிந்தது. சம்மதமாகத் தலையசைத்தேன்.

சாதாரணமாக, இந்த மாதிரி சமயங்களில், ’அவர் சைக்கிளுக்குக் காசு பார்க்க இன்னொரு ஊற்று கிடைத்துவிட்டது’ என்று மனம் கும்மாளம் போடுமல்லவா? எனக்கு அந்த மாதிரித் தோன்றவேயில்லை. பானு அக்காவின்மீது எனக்கு இருந்த பிரியம் அப்படிப்பட்டது. தவிர, நானும் திருட்டு சைக்கிள் ஏறித்தானே வந்து தொலைத்திருக்கிறேன்?

இத்தனை வருடங்கள் ஓடிவிட்டது. கிட்டத்தட்ட நாற்பது வருடங்கள். ஏகப்பட்ட விஷயங்களை வயது மழுங்கடித்திருக்கிறது. ஆனால், சில விஷயங்கள் மட்டும் அழுத்தமாக நினைவில் இருக்கின்றன. சித்தப்பா வீட்டு வராந்தாவில் பரமத் தேவர் வந்து உட்கார்ந்திருந்த சந்தர்ப்பமும் அப்படித்தான்.

பெரியப்பா தம்பதியும், எங்கள் குடும்பமும் சித்தப்பா வீட்டில் குழுமியிருந்தோம். என்ன காரணத்துக்காக என்று குறிப்பாக நினைவில் இல்லை. சுருட்டு மணம் கமழ, பரமத் தேவர் சித்தப்பா வீட்டுக்கு என்ன காரணமாய் வந்தார், தானாக வந்தாரா, அழைத்ததால் வந்தாரா, அதற்கு முன்னால் என்னவெல்லாம் நடந்தது என்று எவ்வளவோ யோசித்தும் ஞாபகம் வர மாட்டேனென்கிறது.

சித்தப்பா வீட்டுக்குப் பக்கத்து வீட்டில் வசித்தவர் பரமத் தேவர். பன்னீர் செல்வம் அண்ணனின் தாய்வழித் தாத்தா. அண்ணனின் அப்பாவை இளம் வயதிலேயே ஏதோ தகராறில் வெட்டிக் கொலை செய்துவிட்டார்கள். அப்போது அண்ணனுக்கு இரண்டு வயது. மதிய உணவுக் கூடத்தில் ஆயாவாக இருந்த மகளுக்கும் பேரனுக்கும் காவலாக பரமத் தேவர் வந்து சேர்ந்தார். அவர் காவல்துறையில் சர்வீஸ் முழுக்கக் கான்ஸ்டபிளாக இருந்து ஓய்வு பெற்றவர். தலை சதா நடுங்கிக்கொண்டே யிருந்தாலும், வார்த்தைகள் உறுதியாக வந்து விழும்.

பெரியப்பாவும் சித்தப்பாவும் நிற்கிறார்கள். அப்பாவும் தேவரும் ஆளுக்கொரு நாற்காலியில். தேவர் கரகரத்த குரலில் பேசியது நினைவிருக்கிறது:

…ஐயிரு மேல எனக்கு…

…ஐயங்கார்…

என்று ஆத்திரமாகத் திருத்தினார் அப்பா. பரமத் தேவர் சிரிக்கிறார்.

இதுலெ என்னாங்க இருக்கு. அவுக படுக்கப் போடுறாக. நீங்க நட்டக்குத்தலா நிறுத்திக்கிர்றீக. எல்லாம் மூணு கோடுதானெ சாமீ?

அப்பாவின் முகம் கடுமையாகச் சிவக்கிறது. எல்லாரும் ஆளுக்கொரு பக்கம் பார்த்துக்கொண்டு மௌனமாக இருந்தார்கள். பரமத் தேவர் மற்றவர்களை மாறிமாறிப் பார்க்கிறார்.

அண்ணன் தம்பிகள் மூவருமே நல்ல சிவப்பு நிறம். சொல்லிவைத்த மாதிரி, மனைவிமார் மூவருமே மாநிறம். பானு அக்கா காபிக் கலரில் இருப்பாள். வசீகரமான முக அமைப்பு அவளுக்கு. இப்போது சமையலறையில் உட்கார்ந்து, மூக்குத்தி நனையப் பொருமிப் பொருமி அழும்போதும் முகம் அழகாகத்தான் இருக்கிறது. வழக்கத்தைவிடச் சற்று அதைத்தும் இருக்கிறது. அப்பாவிடமும் பெரியப்பாவிடமும் ஏகப்பட்ட அறைகள் வாங்கியதில் கன்னங்கள் இரண்டும் லேசாகப் புடைத்திருக்கின்றன.

எனக்கு அக்காவின் அருகில் ஆறுதலாக உட்கார்ந்திருக்கத்தான் ஆசை. ஆனால், வராந்தாவில் நடக்கும் விஷயம் இன்னமும் தீவிரமானது என்று பட்டது. பொதுவாக, இந்த மாதிரி இடங்களில் நிற்க என்னை அனுமதிக்கவே மாட்டார்கள். ஆனால், ஜன்னலின் உட்புறக் கட்டையில் நான் இருப்பதை யாருமே கவனிக்கவில்லை என்றால் எவ்வளவு தீவிரம்?

பெரியப்பா செருமினார். அப்பா, சுய நிலைக்கு வந்த மாதிரித் தேவரை நோக்கினார். கனத்த குரலில் அப்பா கேட்டார்:

… முடிவா என்ன சொல்றீங்க தேவரே?

அதெத்தேன் சொல்ல ஆரமிச்சேன் – நீங்க அவசரப்பட்டுட்டீக. ஒங்க தம்பி மேல எனக்கு ரெம்ப மரியாதெ உண்டுங்க… அட, அப்பிடிச் சொன்னாக்கூடத் தப்பிதந்தேன். அபிமானம் உண்டு. சேசசயனம் னு ஒரு அதிகாரி வீட்டுலெ இருவது வருசம் ஆர்டர்லியா இருந்தேம் பாத்துக்கிருங்க. பிறாமணாள்னா எம்புட்டு ஆசாரமா இருப்பாக, அவுக போக்கு என்னா, வரத்து என்னா, கவுச்சியெ எப்பிடி அண்டவே வுட மாட்டாக, செத்தவகளுக்கு எம்புட்டு அக்கறெயாத் திதி குடுப்பாக, அக்குருமத்துக்கு எப்பிடிப் பயந்த சாதிமக்க எல்லாம் தெரியும்ங்க…

அப்பா பொறுமையிழக்கிறார் என்பது வெளிப்படையாகத் தெரிந்தது. இவ்வளவு பொறுமையாக அவர் இருப்பதையே நான் பார்த்தது கிடையாது. பெரியப்பா பேசினார்:

தேவரய்யா…

அதேஞ் சாமி சொல்ல வாறேன். பக்கத்துவீட்டுல ஒங்க தம்பி குடிவந்தாக. ரெண்டா நாத்து எங்க வீட்டுலெ கருவாட்டுக் கொளம்பு. ஒங்க தம்பி பொஞ்சாதி வாயிலெ முந்தாணியெ அடச்சிக்கிட்டு எங்க வீட்டு வாசல்லெ வந்து நின்னுருச்சு. அம்புட்டுத்தேன், எங்க வீட்டுலெ கவுச்சி சமைக்கிறதையே நிறுத்திப்புட்டோம். மூணாவது தெருவுலே எம் மயென் வீடு இருக்கால்லியா, அங்கிணெ போயிச் சமைச்சு எடுத்தாந்துக்கிர்றது. எங்க வீட்டுக் கோளி உங்க வீட்டுக் கொல்லையிலே மொளைஞ்சு பேண்டு வச்சிருதுன்னு பிராதி சொன்னாக, கோளி வளக்குறதையே விட்டுப்பிட்டோம்.

அட, நீர் என்ன தேவரே, நாங்க என்ன கேக்கறோம், நீர் என்ன பேசிட்டு இருக்கீர்?

அப்பாவின் குரல் உரத்துப் பாய்ந்தது.

நடுவுச் சாமிகளே, கோவிக்காதீக. நீங்க கேட்டதுக்குத்தேன் நா வெளக்கம் சொல்லுறேன். மிச்சதெல்லாம், கட்டுப்படுத்திக்கிர்ற விசயம், நாங்களும் கட்டுப்படுத்திக்கிட்டோம். இது வேற சங்கதி. ரெண்டு மனசுக்கும் பிடிச்சுப் போச்சுன்டா நாம குறுக்க நிக்யப் படாது. சின்னஞ்சிறுசுக, ஒண்ணொடெக்கொண்ணு ஆயிப்போச்சுன்டா, இருக்குறவகல்ல கெடந்து ஆயுசு பூராங் கலங்கணும்.

அப்ப நாங்க போலீசுக்குத்தான் போகணுங் கிறீங்க?

தாராளமாப் போங்க சாமி. எம் பேரனுக்கு ஒங்க வீட்டு மகாலச்சுமி மேல நெசம்மாப் பிரியம் இருந்துச்சுன்னா லாக்கப்பிலெயும் இருந்து காட்டத்தானே வேணும்? ஆனா, ஒண்ணுங்க சாமிகளே… நான் கிளவன், இந்தான்னு கிளம்பீருவென். ஒங்களுக்கெல்லாம் அம்புட்டு வயசில்லே. எல்லாரும் கலங்குற மாதிரி எதுவும் செஞ்சுக்கிர்றாதீக. அம்புட்டுத்தேன் சொல்வேன். பெறகு ஒங்க இஸ்டம்.

பரமத் தேவர் எழுந்தார். விடுவிடுவென்று படியிறங்கி நடந்தார். அத்தனை நேரமும் கமழ்ந்த சுருட்டு மணமும் அவரோடு வெளியேறியது. தேவர் அபாரமான உயரமும் பருமனும் கொண்டவர். அவர் ஒருத்தரை அழித்து இவர்கள் மூன்று பேரையும் குறைவில்லாமல் உருவாக்கிவிடலாம்.

ஐந்தாம் வகுப்பு முழுப்பரீட்சை விடுமுறையை என் ஆயுட்காலத்துக்கும் மறக்க முடியாது. அந்த நாட்களை நினைக்கும்போது ஒருவிதமாக நெஞ்சு அடைக்கும். சுற்றிலும் உள்ள மனிதர்கள் அத்தனைபேர் மேலும் அவநம்பிக்கையும் வெறுப்பும் தோன்ற ஆரம்பித்துவிடும்.

கடைசிப் பரீட்சை முடிந்து நான் வீட்டுக்கு வந்த நிமிடத்திலிருந்து எனக்குள் தொடங்கிய பரபரப்பு அவ்வளவு சுலபமாக முடிந்துவிடவில்லை. பதினேழு வருடம் கழித்து நான்ஸியை மணந்துகொண்ட பிறகுதான் ஒருவிதமான சமனநிலைக்கு வந்தேன். செக்கானூரணி திருத்துவ மாதா கோவிலில் வைத்து நடந்த திருமணத்துக்கு என் தரப்பு சொந்தக்காரர்கள் என்று யாருமே வரவில்லை. வருவதற்கு அதிகப் பேர் இல்லவும் இல்லை.

பானு அக்கா மரணமடைந்த நாலாவது நாள் பெரியம்மா தூக்குப் போட்டுக்கொண்டு இறந்தாள். பெரியப்பா காணாமல் போனவர் போனவர்தான். சித்தப்பா குடும்பத்துக்கும் எங்கள் குடும்பத்துக்கும் பேச்சுவார்த்தை நின்றுபோய், உறவு அறுதியாக முறிந்துபோயிருந்தது.

அம்மா மாரடைப்பால் காலமானபோது, நான் ரயில்வேயில் குமாஸ்தாவாகச் சேர்ந்து மூன்று மாதம் ஆகியிருந்தது. தானப்ப முதலித் தெருவில் ஒரு மேன்ஷன் ரூமுக்குக் குடிபெயர்ந்தேன். அப்பா தனியாகச் சமைத்துச் சாப்பிட்டுக்கொண்டு குலமங்கலம் போகும் சாலையில் ஒற்றையறையில் வசித்தார். நாங்கள் சந்தித்துக்கொள்வது முற்றாக நின்றுபோயிருந்தது. இறந்து, நாட்கணக்காக ஆகி, சடலம் நாறியபிறகு அக்கம்பக்கத்தில் கதவை உடைத்துக் கண்டுபிடித்தார்கள். தகவல் கிடைத்து நான் போய்ச் சேர்ந்தபோது, அழுகிய சதைப்பொதியாக ஒரு சாக்கு மூட்டையில் திணித்துக் கட்டியிருந்தார்கள் அப்பாவை.

இவ்வளவுக்கும் காரணமான அந்த விடுமுறையை எப்படி மறக்க முடியும் சொல்லுங்கள்?

இத்தனை வருடங்களில் எத்தனையோ நடந்து, என் தலை நரைத்து, என் குழந்தைகள் கல்லூரிப் படிப்பையும் முடித்தாகிவிட்டது என்றாலும், அந்த விடுமுறையை நினைக்கும்போதெல்லாம், நான் சின்னஞ்சிறு கோவிந்தராஜன் ஆகிவிடுவதும், என் காதுக்குள் ’கோந்தூ…’ என்று பானு அக்காவின் குரல் கிசுகிசுப்பதும் தவறாமல் நடக்கிறது…

அது ஒரு வெள்ளிக் கிழமை. சற்றுமுன் குறிப்பிட்ட கடைசிப் பரீட்சை முடிந்து வீடு திரும்பியவனை உடனடியாக முகம் கழுவிக்கொண்டு தயாராகச் சொன்னாள் அம்மா. லீவுக்குத் தென்கரை போகிறேனாம் நான். சரி, போகலாமே, மறுநாள் போகக் கூடாதா? நண்பர்களிடம் சொல்லிப் பீற்றிக்கொள்வதற்குக் கூட அவகாசமில்லாமல் இவ்வளவு அவசரமாகப் புறப்பட வேண்டுமா என்ன?

எரிச்சல் முட்டியது எனக்கு. ஆனால், கொஞ்சநேரம்தான். பானு அக்கா சைக்கிளிலும். சித்தியும் சித்தப்பாவும் ஜட்காவிலும் வந்து இறங்கிய மாத்திரத்தில் சமாதானமாகிவிட்டது. அக்காவும் என்னோடு லீவுக்கு வருகிறாள். சைக்கிளைக் கீழே உள்ள வராந்தாவில் ஏற்றி வைத்தாள் அக்கா. அப்போது எனக்குத் தெரியாது, லீவு முடிந்து வந்த பிறகு அந்த சைக்கிள் என்னுடையதாகப் போகிறது, நான் விருப்பமே இல்லாமல் அதை ஓட்டப் போகிறேன் என்று. லேடீஸ் சைக்கிள் என்பதற்காக அல்ல, அக்காவை சதா நினைவுறுத்தும் சனியனை எப்படி நிம்மதியாக ஓட்டுவது, சொல்லுங்கள்?

என்னுடைய அப்பாவையும் அம்மாவையும் நமஸ்காரம் செய்து விடைபெற்றுக்கொண்டோம். சாய்வுநாற்காலிக்குள் அமிழ்ந்திருந்த அப்பா வேறு பக்கம் பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தார். அம்மா மட்டும் பால்கனியில் வந்து நின்றாள், நாங்கள் சந்துமுனையில் கையாட்டிவிட்டு வெளியேறுவது வரை.

மையப் பேருந்து நிலையம் சென்று, சோழவந்தானுக்கு வண்டியேறும் வரை நான் தொணதொணத்துக்கொண்டே இருந்ததும், சிரித்த முகத்துடன் பானு அக்கா பதில் சொல்லிவந்ததும் நினைவிருக்கிறது. இன்னொன்றும் அழுத்தமாக நினைவிருக்கிறது. சோழவந்தானில் போய் இறங்கி தென்கரைக்கு ஜட்கா பிடித்துப் போய்ச் சேரும்வரை சித்தியும் சித்தப்பாவும் ஒரு வார்த்தைகூடப் பேசவேயில்லை. அவர்களுக்குள்ளும் பேசிக்கொள்ளவில்லை. சோழவந்தான் வண்டியில் எனக்கு ஒரு ஜன்னலோர சீட் கிடைத்ததும் நான் உடனடியாகத் தூங்கிப்போய்விட்டேன். இடையில் அவர்கள் பேசினார்களா என்று எனக்குத் தெரியாது. ஆனாலும், அவர்கள் இருந்த சீரைப் பார்த்தால் பிறந்ததிலிருந்தே பேசி அறியாதவர்கள் மாதிரித்தான் இருந்தது.

சனிக்கிழமை காலையிலேயே பேச ஆரம்பித்துவிட்டார்கள். நான் திண்ணையிலிருந்து எழுந்து கண்ணைக் கசக்கிக்கொண்டே சமையலறைக்குள் நுழைகிறேன், பானு அக்கா சுவரில் சாய்ந்து உட்கார்ந்திருக்கிறாள். எதிரில் பெரியவர்கள் நாலு பேரும் அவளை முற்றுகையிடுகிற மாதிரிச் சுற்றிலும் உட்கார்ந்திருக்கிறார்கள்.

சென்ற லீவுக்கு வந்திருந்தபோது தினசரி வழக்கப்படி சுந்தர காண்டம் படித்துவிட்டு எழுந்து வந்த பெரியப்பாவிடம் அந்தக் கதை சொல்லும்படி நச்சரித்தேன். அசோக வனத்தில் அரக்கிகள் மத்தியில் சீதாப்பிராட்டி உட்கார்ந்திருந்த கதை சொன்னார். அக்கா உட்கார்ந்திருந்ததைப் பார்த்தபோது எனக்குப் பெரியப்பா வர்ணித்தது ஞாபகம் வந்தது.

பெரியம்மா எழுந்து எனக்குக் காஃபி கலந்தாள். அவள் விசும்புகிற சப்தம்தான் முதலில் கேட்டது. சடாரென்று முகத்தை இரண்டு கைகளாலும் மூடிக்கொண்டு பானு அக்கா அழத் தொடங்கினாள். வாய்பேச இயலாதவர்களின் தொண்டையிலிருந்து கிளம்புகிற மாதிரி அவலமான ஓசையுடன் விசித்து விசித்து அழுதாள். இப்போது நினைத்தாலும் ஆச்சரியமாக இருக்கிறது, மற்றவர்களும் உடனடியாகக் குலுங்கி அழுதார்கள். காரணமே தெரியாமல் நானும் அழுதேன். அக்காவின் அருகில் சென்று உட்கார ஆசையாகவும் பயமாகவும் ஒரே சமயத்தில் இருந்தது.

அன்று முழுவதும் பேசிக்கொண்டேதான் இருந்தார்கள். விளையாடத் தெருவுக்குப் போன நான் வீட்டுக்குத் திரும்பிவந்த சமயங்களிலெல்லாம் நாலு பேரும் அதே இடங்களில், அதே தினுசில் உட்கார்ந்து பேசுவதையும் அழுவதையும் பார்த்து ஆச்சரியப்பட்டேன். தொடர்ந்து அங்கேயே இருந்தால் எனக்கும் அழுகை வந்துவிடுமோ என்று அச்சமாக இருந்தது. தெருவில் விளையாடுவது வழக்கத்தைவிட இன்பமான காரியமாகத் தோன்றியது.

ஞாயிற்றுக்கிழமை காலையில் என் அப்பாவும் அம்மாவும் வந்து சேர்ந்தார்கள். பழைய மாதிரியே சமையலறையில் அக்காவைச் சூழ்ந்து எல்லாரும் உட்கார்ந்து பேச ஆரம்பித்தார்கள். எப்போது சமைத்தார்கள், எப்போது சாப்பிட்டார்கள், எப்போது அக்காவை அடித்தார்கள் எதுவுமே எனக்குத் தெரியாது. பகல் முழுக்க நான் எங்கே போனேன் என்ன செய்தேன் என்கிற மாதிரி விபரங்களெல்லாம் அவர்களுக்கும் தெரியாது. உள்ளூர் நண்பன் மதியழகனுடன் குருவித்துறை பெருமாள் கோவிலுக்கு வாடகை சைக்கிள் அழுத்திக்கொண்டு பறந்துவிட்டேன். தென்கரையில், பெரியப்பா முன்னிலையில் என்னை அடிக்க மாட்டார் அப்பா. பெரியப்பா அனுமதிக்க மாட்டார்.

சாயங்காலம் நான் திரும்பிவந்தபோது, அக்காவின் கன்னத்தில் விரல் தடங்கள் சிவப்புக்கோடுகளாகப் புடைத்திருந்தன. ஆனால், அக்கா உற்சாகமாகத்தான் இருந்தாள். மதுரைக்காரப் பெரியவர்கள் நாலுபேரும் புறப்பட்டார்கள். அசன் சாயபுவின் பெரிய ஜட்காவைக் கொண்டுவரச் சொல்லி எல்லாரும் ஏறிக்கொண்டார்கள். பானு அக்காவும் நானும் வழியனுப்பக் கிளம்பினோம்.

வழக்கமாக வாசலில் வந்து, தெரு முனை திரும்பும்வரை கையாட்டிக்கொண்டே நிற்கும் பெரியம்மா நாங்கள் கிளம்பும்போது எங்கே போனாள் என்று தெரியவில்லை.

பெரியவர்கள் ஏறி அமர்ந்த சோமசுந்தரம் பஸ் சர்வீஸ் பேருந்து நிலைய வாசலைக் கடந்து வெளியேறிய மாத்திரத்தில் எனக்கு அந்த ஆச்சரியம் காத்திருந்தது. பாலன் தியேட்டர் பக்கத்திலிருந்து பஸ் ஸ்டாண்டுக்குள் நுழையும் வாசலில் பன்னீர் அண்ணன் நிதானமாக நடந்து வந்தார். கையில் சிகரெட் புகைந்துகொண்டிருந்தது. அவரைப் பார்த்ததும் அக்கா உடம்பு நடுங்கக் குமுறினாள்.

இரண்டு பேரும் கை கோத்துக்கொண்டு நடந்து வந்தார்கள். அக்கா உதட்டைக் கடித்தபடி விசும்பிக்கொண்டே வந்தாள். அண்ணன் வேகவேகமாகப் புகை விட்டார். ’ஐயையோ, சாயபு பார்த்துவிட்டால் வம்பாகிவிடுமே’ என்று நான் உள்ளுக்குள் பதறினேன்.

சாயபு பார்க்கவும் செய்தார். அவர் பார்க்க, ஜட்கா நிலையத்தில் நின்றிருந்த குதிரை வண்டிக்காரர்களும் குதிரைகளும் பார்க்க, தெருவில் போகும் ஜனங்களில் இந்தப் பக்கம் பார்வை திரும்பியிருந்தவர்கள் அத்தனைபேரும் பார்க்க, அவசரமாக இருட்டிவிட்ட சாயங்காலம் பார்க்க, வெளியேறிப் போன திண்டுக்கல் முருகன் ட்ரான்ஸ்போர்ட் விடுத்த புகை நாற்றம் பார்க்க, தெருவோரம் அக்காவை இறுக்கி அணைத்து நெற்றி உச்சியில் வகிடு ஆரம்பிக்கும் இடத்தில் முத்தமிட்டார் பன்னீர் அண்ணன்.

ஓரிரு கணங்கள்தாம். அக்கா விடுவித்துக்கொண்டாள். அவசரமாக ஓடி ஜட்காவுக்குள் ஏறினாள். நான் தொடர்ந்தேன். சாயபு குதிரையைச் சாட்டையால் அடித்தார். விசையுடன் கிளம்பி ஓடும் ஜட்காவின் பின் திறப்பு வழியாகப் பார்த்தேன். பன்னீர் அண்ணன் திரும்பிப் பார்க்காமல் பஸ் ஸ்டாண்டுக்குள் நுழைந்துகொண்டிருந்தார். அதன் பிறகு நான் அவரைப் பார்க்கவும் இல்லை. கேள்விப்படவும் இல்லை என்பது இதைச் சொல்லும் இந்த நிமிடத்தில்தான் உறைக்கிறது.

அக்காவைப் பார்த்தேன். குத்திட்ட முழங்கால்களுக்குள் முகத்தைப் புதைத்திருந்தாள். உடம்பு சீராக அதிர்ந்துகொண்டிருந்தது.

திங்கட் கிழமைப் பகல் பொழுது முழுக்க வீட்டில் நிலவிய அமைதியையும் வெறுமையையும் அதற்கு முன்னால் நான் கண்டதே யில்லை. பெரியப்பா பெரியம்மா பானு அக்கா மூவரும் ஒரே வீட்டுக்குள் மூன்று தனித்தனி உலகங்களில் நடமாடினார்கள் – ஒருத்தர் முகத்தை ஒருத்தர் பார்த்துக்கொள்ளாமலே.

சாதாரணமாக, வீட்டுச் சூழ்நிலை இந்த மாதிரி இருந்தால் வெளியே ஓடிவிடலாம் என்று தோன்றும் இல்லையா? எனக்கு வேறு மாதிரியாக இருந்தது. விளையாடக் கூப்பிட்ட மதியிடம் ’இன்னைக்கி நான் வல்லடா’ என்று சொல்லி அனுப்பிவிட்டேன். பானு அக்கா கூடவே இருக்க வேண்டும் என்று ஏனோ ஆசையாக இருந்தது.

ராத்திரி முழுவதும் அழுதாளோ என்னவோ, முகம் கடுமையாக வெளுத்து, வீங்கி, இமைகள் புடைத்து, வழக்கத்தைவிடவும் அழகாக இருந்தாள் அக்கா. அடிக்கடி என்னை அணைத்துக்கொண்டாள். சாயங்காலம் நாலைந்து தடவை என் கன்னத்தில் முத்தமிட்டாள்.

பெரியம்மா அக்காவை உட்காரவைத்து தலையைப் பின்னிவிட்டாள். ஒற்றைப் பின்னல். அக்கா எழுந்து நடந்தபோது புட்டத்தைத் தாண்டி இறங்கியிருந்தது. அவள் நடந்துபோவதைப் பார்த்துப் பெரியம்மாவிடமிருந்து சீறிப் புறப்பட்ட பெருமூச்சு பொருமலாக முடிந்தது.

எனக்கும் வகிடு எடுத்துத் தலைவாரிவிட்டாள் பெரியம்மா. வாசலில் சாயபு காத்திருந்தார். ஜட்காவில் ஏறி குருவித்துறை பெருமாள் கோவிலுக்குப் போனோம் நானும் அக்காவும். எந்த நிமிடமும் பன்னீர் அண்ணன் வந்து நிற்பார் என்று நான் எதிர்பார்த்துக்கொண்டேயிருந்தேன். ம்ஹும். அவர் தட்டுப்படவேயில்லை.

வழக்கத்தைவிட நிதானமாய் இருந்தாள் அக்கா. எப்போதும் கோவிலுக்குள் வந்தோமா சேவித்தோமா போனோமா என்று இருப்பவள், அன்று பெருமாள் முன்பு வெகுநேரம் கைகூப்பி நின்றிருந்தாள். திடீரென்று ஒரு விசிப்பு. அக்காவின் மூடிய கண்களிலிருந்து பளபளப்பாக இரண்டு கோடுகள் இறங்கிக் கன்னத்தில் வழிந்ததை நிமிர்ந்து பார்த்தேன். சடாரென்று கண் திறந்து பெருமாளை முறைத்த அக்கா என் கையை இறுகப் பிடித்து,

வாடா கோந்து போலாம்.

என்று கறாராகச் சொன்னாள் – ‘இங்கெல்லாம் நமக்கென்ன வேலை’ என்கிற பாவத்துடன். விரைந்து வெளியேறியவளுக்குச் சமானமாக எட்டி நடக்க முடியாமல் ஓடினேன்.

இரவுச் சாப்பாட்டுக்கு முதல் ஆளாக அடுக்களைக்குள் போனேன். அக்கா காமிரா உள்ளில் தனியாக இருட்டில் புதைந்திருந்தாள். இரண்டு தட்டுகளில் தயிர் சாதம் பரிமாறிவிட்டு தலையில் கைவைத்து உட்கார்ந்திருந்தாள் பெரியம்மா. கோவிலில் அக்கா நின்றிருந்தது மாதிரியே பெரியம்மாவும் கண்மூடி இருந்தாள்.

வழக்கமாகப் பெரிய தட்டு பானு அக்காவுக்கு. சின்னத் தட்டு எனக்கு. பெரியம்மாவின் அழுமூஞ்சியை மாற்றும் உத்தேசத்துடன்,

நான் இன்னிக்கி அக்கா தட்டுலெ சாப்பிடப் போறேன்.

என்று உரத்த குரலில் அறிவித்தவாறே உட்கார்ந்தேன். சட்டெனக் கண்விழித்த பெரியம்மா, பதறிப்போய் என்னை ஓங்கி அறைந்தாள். பெரியம்மாவா அடிக்கிறாள்! எனக்கு அழக்கூடத் தோன்றவில்லை. தலை குனிந்தபடி என் தட்டுக்கு நகர்ந்தேன். இரண்டாம் முறை ஓங்கிய கையால் தன் தலையில் நாலைந்து தடவை அடித்துக்கொண்டாள் பெரியம்மா.

இருட்டறையிலிருந்து வெளியில் வந்தாள் அக்கா. அதற்குப் பிறகு நடந்ததெல்லாம் எனக்குத் துல்லியமாக நினைவிருக்கிறதுதான் – ஆனால், விஸ்தாரமாகச் சொல்ல முடியாமல் நெஞ்சை அடைக்கிறது.

அன்றைக்கு நள்ளிரவில் பானு அக்கா பொங்கிப் பொங்கி வாந்தியெடுத்தாள். நாலைந்து முறை வாந்தி பண்ணிவிட்டு, துவண்டுபோய்ச் சுருண்டு படுத்துக்கொண்டவள் பிறகு கண்ணைத் திறக்கவேயில்லை.

ஆனால், அக்காவை நினைக்கும்போதெல்லாம் என்னைத் துடிக்க வைப்பது அவள் திடீரென்று இறந்தது அல்ல, சாதாரண ராச் சாப்பாட்டுக்கு முன்னால் வீட்டிலுள்ள பெருமாள் விக்கிரகத்தை எதற்காகச் சேவித்துவிட்டு வந்தாள் என்ற கேள்வியும் அல்ல, மறுநாள் காலை ஏழரை மணிக்கெல்லாம் அவசர அவசரமாக அக்காவைக் கொண்டுபோய் எரித்துவிட்டு வந்துவிட்டார்களே சண்டாளர்கள் என்ற ஆத்திரமும் அல்ல. பிறகு?… முதல் வாய் சாப்பிடுவதற்கு முன்,

நீ ஏதுக்குக் கலங்கறே பெரியம்மா? நீ யென்ன செய்வே பாவம்?

என்று சிரித்துக்கொண்டே சொன்னாளே பானு அக்கா, அதை நினைத்தால்தான் இன்றைக்கும் உடைந்து சுக்கு நூறாகிப் போகிறேன்…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *