வட்டமுகம், பரந்த நெற்றி, அகலமான கண்கள், குவிந்த உதடுகள், சுருட்டை மயிர், வலதுபக்க மூக்கில் ஒற்றைக் கல் மூக்குத்தி என அச்செடுத்து வார்த்தமாதிரி இருந்த அந்த அம்மாவினதும் மகளினதும் முகங்களில் ஒன்றையொன்று விஞ்சும் வகையில் சோகமும் குழப்பமும் தாண்டவமாடின.
“என்ர பெயர் டொக்டர் அகிலா சண். ஆரம்பிக்கிறதுக்கு முதல் நீங்க ஏதாவதுசொல்ல விரும்புறீங்களா அல்லது என்னட்டை ஏதாவது கேட்க விரும்புறீங்களா?”
“எனக்கிருக்கிற பிரச்சினையளோடை சேந்திருக்கிற மனநலப் பிரச்சினையள் அம்மாக்கு விளங்குதில்லை. அவவுக்கு அதுகளை விளங்கப்படுத்துவீங்களா?”
“ஓ, நிச்சயமா! சாப்பிடுறதிலை இருக்கிற இந்த ஒழுங்கீனப் பிரச்சினை பற்றி நீங்க என்னம்மா அறிஞ்சிருக்கிறீங்க? சுமியிலை என்ன வித்தியாசங்கள் உங்களுக்குத் தெரிஞ்சது…?
அம்மாவின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடியது. “முந்தி இவவுக்கு என்னிலை சரியான பாசமிருந்துது… இப்ப எந்தநேரமும் என்னோடை எரிஞ்சுவிழுகிறா! சாப்பிடுறதில்லை. கொரோனா தொடங்கின காலத்திலை… போன ஏப்பிரிலிலை நானும் வேலையில்லாமல் வீட்டிலைதான் இருந்தனான். அப்ப எக்சசைஸ் செய்வமெண்டு கேட்டா. சரியெண்டு தொடங்கினம். இப்ப அதை அளவுக்கதிகமாகச் செய்யிறா. நல்லாக் கொட்டிண்டு போனா… இதொண்டும் எனக்கு நேரத்தோடை விளங்கேல்லை. எந்தநேரமும் முழுக்கை சேர்ட்டும் பான்ற்ஸ்ம்தான் போடுறது. நேத்து சரியான வயித்துக்குத்தெண்டு… எமெர்சன்சிக்குக் கொண்டுபோனதிலைதான் இது தெரியவந்திச்சுது…”
“இந்தப் பிரச்சினையின்ரை இயல்பு அப்பிடித்தான், பாரதூரமாகிறவரைக்கும் மற்றவைக்குத் தெரியவாறதில்லை. அதோடை ஈற்றிங் டிஸ்ஓடர்ஸ் எண்டது வெறுமன சாப்பாட்டோடை மட்டும் சம்பந்தமான ஒரு விஷயமில்லை. சாப்பாட்டைப்பத்தி, தங்கடை தோற்றத்தைப்பத்தி ஒவ்வொருத்தரும் நினைக்கிற எண்ணங்களோடை தொடர்பான ஒரு சிக்கலான மனநலப் பிரச்சினை இது. ரீன்ஏஜ் கேர்ள்ஸ் சிலருக்கு வாற இந்தப் பிரச்சினையிலை வித்தியாசமான வகைகளிருக்கு. சுமிக்கு இருக்கிறது சாப்பாட்டைத் தடைசெய்யிற பிரச்சினை, அதாவது உடலைச் சிலிமாக வைச்சிருக்கோணும் எண்டதுக்காகச் சாப்பிடாமல் விடுறது அல்லது சாப்பிடுறதைச் சரியாய்க் குறைக்கிறது. இந்தப் பிரச்சினையை நாங்க அனோரெக்ஸ்யா நேர்வோசா எண்டு சொல்லுவம். இதைக் கையாளுறதுக்கு மருத்துவரீதியா, உளவியல்ரீதியா இடையீடுகள் தேவை. இல்லையெண்டால் வெவ்வேறைவிதமான ஆரோக்கியப் பிரச்சினையள் வரலாம். ஆனா, நீங்க இப்ப சரியான இடத்துக்குத்தான் அவவைக் கொண்டுவந்திருக்கிறியள் எண்டதை முதலில நான் உங்களுக்கு உறுதிப்படுத்த விரும்புறன்.”
“நான் காலைமை ஏழுமணிக்குப் போனா, வேலையாலை திரும்பிவாறதுக்கு ஆறுமணியாகும். சிலவேளையிலை ஓவர்ரைமும் இருக்கும். விடிய நாலுமணிக்கே எழும்பி எல்லாம் செய்துவைச்சுப் போட்டுத்தான் போறனான். தேத்தண்ணி, காலைமைச் சாப்பாடு, மத்தியானச் சாப்பாடு எண்டு எல்லாம். ஆம்பிளைப்பிள்ளை ஒரு பிரச்சினையுமில்லாமல் சாப்பிட்டிடுவான், இவதான்…”
“அவ வேணுமெண்டு செய்யிறதில்லை, இந்த நிலைமை அவவை அப்பிடிச் செய்யவைக்குது.”
“வேலை பிஸி எண்டாலும்கூட சாப்பிட்டினமோ எண்டு பாக்கிறதுக்காண்டி காலைமை ஒம்பதுமணிக்கு, பிறகு ஒருமணிக்கு எண்டெல்லாம் கோல்பண்ணுறனான். அப்பெல்லாம் தான் சாப்பிட்டிட்டதாக இவ எனக்குப் பொய் சொல்லியிருக்கிறா.” மீண்டும் அம்மா அழுதார்.
“சாப்பிடு, சாப்பிடெண்டு நீங்க எந்தநேரமும் கண்காணிக்கேலாதுதானே. அவதான் தான் சாப்பிடுறதுக்குப் பொறுப்பாயிருக்கோணும். இங்கையிருக்கேக்கை அதை அவ பழகிக்கொள்றதுக்கு நாங்க எல்லாரும் உதவிசெய்வம். குறைஞ்சது ஆறுகிழமையாவது அவ இங்கை இருக்கோணும். பிறகும் இந்தத் திட்டத்திலை வெளிநோயாளரா நாலுகிழமை பங்குகெடுக்கோணும். சாப்பாடு, சாப்பிடுறது பற்றின அடிப்படைச் சிந்தனைகள் மாறுறதுக்கேற்ற வகையில நாங்கள் தெரபி கொடுப்பம். என்னத்தைச் சாப்பிடோணும், என்னத்தைச் சாப்பிடக்கூடாது எண்டெல்லாம் ஏதாவது விதிமுறைகள் உங்கடை வீட்டிலை இருக்கா? சாப்பாட்டு நேரம் எண்டால் அது உங்கடை வீட்டில பொதுவா எப்பிடியிருக்கும்?”
“நாங்க மாட்டிறைச்சி, பன்றிறைச்சி சாப்பிடுறதில்லை. மற்றும்படி எங்கடை கலாசாரச் சாப்பாடுதான் சமைக்கிறனான். பசிக்கிறநேரம் பசிக்கிறவை சாப்பிடுவினம்.”
“பொதுவா எல்லாருமா சேந்திருந்து ஒண்டாச் சாப்பிட்டால், சாப்பிடுறதுசந்தோஷமானதொரு அனுபவமா இருக்கும், அதோடை சாப்பிடுறது ஒரு முக்கியமான விஷயமெண்ட எண்ணம் வளரும்.”
“எங்கட வீட்டிலை நாங்க சேந்து சாப்பிடுறது வலுகுறைவு, அம்மாக்கு வேலை, அப்பாவும் வீட்டிலை இருக்கிறதில்லை.”
“சனி, ஞாயிறு சிலவேளை சேந்து சாப்பிடுகிறனாங்க, எண்டாலும். ஒவ்வொருத்தரும் தங்களுக்குப் பிடிச்சதைத்தான் சாப்பிடுவினம். வெளியிலை எங்கையாவது போனாலும் நாங்க ஓடர் பண்ணுறதொண்டும் இவ சாப்பிடமாட்டா. தனக்கு விருப்பமானதைத்தான் ஓடர் பண்ணுவா.”
“ம்ம், ஒவ்வொரு நாளும் ஒரு சாப்பாடாவது சேந்து சாப்பிடுறமாரி இருக்கிறதுக்கு என்ன செய்யலாமெண்டு நினைக்கிறீங்க?”
“இரவுச் சாப்பாட்டை தகப்பனோடை சேந்து சாப்பிடலாம்.”
“அது நல்ல விஷயம், வெளிநோயாளராக இருக்கிற அந்த நாலுகிழமையும் ஒரு சாப்பாட்டு நேரத்தை நாங்க மேற்பார்வை செய்வம்.”
“இது திரும்பவும் வருமா? வராமலிருக்கிறதுக்கு நாங்க என்ன செய்யலாம்?” அம்மா உடைந்த குரலில் கேட்டார்.
“இதற்கு மரபியல் காரணிகளும் காரணமாக இருக்கு, இருந்தாலும் சூழல் காரணிகள்தான் முக்கிய பங்குவகிக்குது. சாப்பாடு, சாப்பிடுறது பற்றின நேர்மறையான எண்ணங்களைப் பேணுறது முக்கியம். அதோடை வாழ்க்கையிலை இருக்கிற மனத்தகைப்புகளும் இதற்குக் காரணமாக இருக்கலாம் எண்டதாலை இங்கையிருக்கிற ஆறுவாரமும் அதுகளைப் பற்றியும் நாங்க கதைக்கலாம்.”
***
அந்த அறையை விட்டு வெளியேறிய எனக்கு மிகவும் புழுக்கமாக இருந்தது. ஆயாசத்துடன் கோர்ட்டைக் கழற்றிவிட்டு சுமி பற்றிய குறிப்புக்களைப் பதிவதற்காகக் கணினியைத் திறந்தேன். எப்பவும்போல அக்காவின் நினைவு நெஞ்சோரத்தில் வலியை ஏற்படுத்தியது. ஈற்றிங் டிஸ்ஓடர் பிரச்சினை அவவுக்கு இருக்கெண்டு ஆருக்குமே அந்தநேரம் தெரிஞ்சிருக்கேல்லை. ஒருதடவை நல்ல காய்ச்சலில படுத்திருந்தபோது ரண்டுநாளா அவ ஓண்டுமே சாப்பிடேல்லை. அந்த ஞாயிறு வீட்டுக்கு வந்திருந்த சித்தி, “என்ன யசோ கொஞ்சம் மெலிஞ்சிருக்கிறாள்போலைகிடக்கு, ஆள் நல்ல வடிவாயிருக்கிறாள்,” எண்டு சொன்னவவாம். அது அந்த வடிவைப் பேணவேணுமெண்டு அக்காவைத் தூண்டியிருக்கு. அதோடை தொடங்கினதுதான். நீச்சல் கிளப், தினமும் 5 கிலோமீற்றர் ஓடுகிற கிளப் எண்டு எல்லாத்திலும் சேந்துகொண்டா. “14வயசாகியும் யசோ இன்னும் குந்தக்காணோம், நான் 11வயசிலை சாமத்தியப்பட்டிட்டனெண்டு அம்மா சொல்லிக்கொண்டிருந்தாவே தவிர அக்கான்ரை பிரச்சினை என்னெண்டு அவவுக்கு விளங்கேல்லை. அப்பாவுக்கும் அதைப் பற்றிக் கரிசனைப்பட நேரமிருக்கேல்லை. இப்பவும் பிடிச்ச சாப்பாடெண்டாலும்கூடக் கலோரிக் கணக்குப் பாத்துத்தான் அவ சாப்பிடுறா. நல்லவேளையா பெரிய பிரச்சினை ஒண்டும் வராததாலை தப்பிட்டா. இனியாவது கவுன்சலிங்குக்குப் போய் ஆவன செய்யிறதுக்கு முயற்சி எண்டாலும் கேட்டால்தானே…
ஊடகங்களும், சுத்தவர இருக்கிற ஆக்களும், பொம்பிளை எண்டா இப்பிடி இருக்கிறதுதான் வடிவெண்டு ஒரு ஃபோமுலா வைச்சிருக்கினம். அதுதான் அழகெண்டு பிழையான விம்பங்களையும் எண்ணங்களையும் இளம்பிள்ளைகளின்ர மனசிலை விதைச்சுவிதைச்சு அவையளை நாசமாக்கினம். இதுகளுக்கெல்லாம் முடிவே வராதா என்ற துயரம் எனக்குள் பெருமூச்சைக் கிளர்த்தியது.
நன்றி – நடு – நவம்பர் 2021