முகவரியில்லா முகம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 22, 2012
பார்வையிட்டோர்: 9,112 
 
 

முந்தானைத் தலைப்பைத் தூக்கி முகத்தில் அப்பியிருந்த வியர்வையைத் துடைத்துக் கொண்டாள் சியாமா. சூரியன் உச்சத்துக்கு வந்து உச்ச வெப்பத்தை உமிழ்கிறானோ என்னவோ… வீட்டுக்குள்ளேயே அப்படியொரு புழுக்கம்.

“ஃபூ… கெழமைல சனி ஞாயிறு வரவே படாது…

வேல…வேல… முடிவில்லாத வேல…” தனக்குத் தானே புறுபுறுத்தபடி அடுக்களையை விட்டு வெளியே வந்தாள். குளித்தால் நன்றாக இருக்கும். குளித்துத் தான் ஆக வேண்டும். சமையல் வேலைகளோடு போராடிய உடலில், உடையில் அழுக்கை அகற்றியாக வேண்டுமே… கணவரும் பிள்ளைகளும் உடுத்தி விட்டுக் களைந்த அழுக்குத் துணிகள் மலை போல சியாமாவை பயமுறுத்தியது. வாரநாட்களில் பிற்பகலில் கிடைக்கும் அற்ப சொற்ப நேரங்களில் எங்கிருந்தோ சோம்பல் வந்து குடிகொள்வதால் ஒரு சில அழுக்குத் துணிகளையாவது துவைத்துப் போட நினைக்கும் எண்ணங்கள் எப்படியோ துண்டாடப்பட்டு விடும்.

ம்ஹூம் ‘அழுதாலும் பிள்ளை அவளே பெற வேண்டும்’ குடும்பப் பெண்களுக்காகவே சொல்லப் பட்டது போல ஒரு பழமொழி வேறு. சியாமா குனிந்து அழுக்குத் துணிகளைத் தேர்ந்து கொண்டிருந்தாள்.

“சியாமா.. ப்ளீஸ் ஒரு பிளேன் டீ… தந்தா ‘டொப்’ ஆக ஈக்குமே…” கணவன் நிலாம் குரல் கொடுத்தார்.

‘இப்பத்தான் குசினில வேலயெல்லாம் முடிச்சிட்டு குளிக்கப் போவப் பார்த்தா.. அவருக்குப் பிளேன் டீ வேணுமாம் பிளேன் டீ, இந்த ஆம்புளயளே இப்பிடித்தான் பொம்புளயள் படுற கஷ்டம் கொஞ்சமும் வௌங்கிறல்ல.’ இவ்வளவையும் சியாமா உரத்துச் சொன்னால் வீட்டில் எரிமலையொன்றே அனல் கக்க ஆரம்பிக்கும். “ஏன் டீ ஒரு பிளேன் டீ…. கேட்டா ஊத்தித்தர வக்கிலாட்டி நீயெல்லாம் ஒரு பொண்டாட் டியா டீ…” என்று எத்தனையோ ரக ‘டீ’ க்கள் சரமாரியாகப் பறக்கும். அது மட்டுமா? ‘நேரத்துக்குச் சாப்பாடு மேசையில் இல்லையென்றால்… உடுக்க வேண்டிய உடுதுணிகள் அழுத்தப்படா மலிருந்தால் … என்னவெல்லாம் ரகளை வரும் இந்த வீட்டுக்குள்?

இன்று நேற்றைய வழக்கமா? பதினாறு வருடங்களாய்ப் பழகிப் போன சமாச்சாரம் இது. தனக்குள்ளேயே கனன்று புகை ந்து போவதைத் தவிர சியாமாவுக்கு மாற்றுவழி கிடையாது.

“சியாமா… பிளேன் டீ கேட்டேனே..?” அதற்குள் அவசரம். “இப்பத்தான் கேத்தல வச்ச கொஞ்சம் இருங்க ஊத்தித் தாறேன்”.

சனி ஞாயிறு அல்லாத தினங்களில் காலை ஆறரை மணிக்குள்ளாக காலையாகாரம், பகலுணவு என்று தயாரித்து முடித்து, பாடசாலை செல்லும் பிள்ளைகளுக்கும் தனக்கும் பார்சல் கட்டி, தேநீர் ஊற்றிப் பகிர்ந்து கணவருக்கு அவசியமானவற்றை எடுத்து வைத்து, வீடு பெருக்கி, மறந்துவிட முடியுமென்றால் விடும் மூச்சு கூட இரண்டாம் பட்சமே எனும் அளவிற்கு சகல வேலைகளையும் பம்பரமாகச் சுழன்று செய்து விட்டுப் பாடசாலைக்குப் போகும் சியாமாவுக்கு ஏனோ சனி ஞாயிறு தினங்களில் மட்டும் இருபத்துநான்கு மணித்தியாலங்கள் இல்லை போல…

விடியற்காலையிலே எழும்பி வழமைபோல வேலைகளைச் செய்து முடித்து விட்டு சிறிது நேர ஓய்வாக இருப்போம் என்றுதான் வெள்ளிக்கிழமை இரவு வரை நினைத்துக் கொள்வாள் சியாமா. அதற்காக அலாரமும் வைத்துவிட்டுப் படுப்பாள். ‘கிணீங் கிணீங்’ என்று அது அடிக்கத் தொடங்கும் போது முடிக்கிவிட்ட பொம்மையாய் எழுந்து வந்து அலாரத்தின் பொத்தானை அமுக்கி விட்டு மீண்டும் வந்து படுக்கையில் விழுவதில் அப்படியொரு அலாதி சுகம். ‘எல்லாநாளும் தானே விடிய எழும்புற. இன்னக்கி மட்டும் தானே கொஞ்சம் கூட படுத்து எழும்புவம்’ மனது சொல்லும் சமாதானத்தில் மயங்கி, சுணங்கி எழுந்து சுறுசுறுப்பைத் தொலைத்து விட்டு இப்படி மூக்கால் முனங்குவது… சியாமாவுக்கு வாடிக்கையான விடயம்.

சுவர்க்கடிகாரம் ‘டாங்’ என்ற ஒற்றை ஒலியை எழுப்பியது. ‘ஒரு மணியாகிவிட்டதோ’ என்று நேரத்தைப் பார்த்தாள். பன்னிரெண்டு முப்பது. அரை மணித்தியாலத்துக்கு ஒருமுறை தன்னை பார்க்க வைக்கும் சுவர்க்கடிகாரத்தின் முயற்சி அது.

அழுக்குத் துணிகளைப் பொதியாக்கி, கக்கத்தில் இடுக்கிக் கொண்டு வீட்டின் பின்புறமாயுள்ள தாங்கியடிக்குச் சென்றாள் சியாமா. குழாயைத் திறந்து பார்க்க, நீருக்குப் பதிலாக காற்றுதான் வந்தது. ‘இந்தப் பக்கத்து தண்ணி லைன் எப்பவுமே இப்படித்தான். எப்ப தண்ணி வரும், எப்ப நிக்கும் என்று சொல்லேலா..லீவு நாட்கள்ல தண்ணி வந்தா எவ்வளோ வசதி..’ மனதுக்குள் குடிநீர் விநியோக சபையைத் திட்டிவிட்டு தாங்கியைப் பார்த்தாள். நல்ல வேளை. முக்கால் பங்கு தாங்கி நீரால் நிரம்பியிருந்தது.

என்னதான் ‘வேலவேல’ என்று புலம்பினாலும், உடுப்புக் கழுவுவதும், முறுக்கிப் பிழிந்து காயப்போடு வதும் ஏனோ சியாமாவுக்கு மிக்க விருப்பமான காரியங்கள். பாடசாலையில் சக ஆசிரியைகளோடு சகஜமாக ஓய்வறையில் அளவளாவும் சந்தர்ப்பங்களில் பரீஸா டீச்சர் சொன்னா….”எனக்கென்டா தேங்கா துருவுறது சோம்பரம் புடிச்ச வேல..” சாகிரா டீச்சர் சொல்வா “எனக்கு கீரை அரியிறது போல போரடிக்கிற வேலை வேற ஒன்றுமில்ல. அதால எங்கட ஊட்டுல கீரைக்கறி சமைக்கிறதே இல்ல…” சியாமா ஒரு தடவை சொல்லி விட்டாள். “எனக்கென்டா உடுப்புக் கழுவுறது.. நல்ல விருப்பமான வேல..” போதுமே… சகாக்களுக்கு… “ஐயோ…எங்களுக்கெல்லாம் காட்டேலாத வேலய நீ விருப்பமென்டு சொல்றியே..நீ யென்டா.. ஒரு தண்ணித் தபக்கையாத்தான் பொறந்தீக்கோணும்.. சியாமா…” சக ஆசிரியைகளின் கிண்டலைக் கேட்டு சியாமா சிரிப்பாள்.

உண்மைதான். தண்ணீரோடு சம்பந்தப்பட்ட வேலைகளில் சியாமாவுக்கு அலாதி பிரியம். சலசலத்து ஓடும் ஓடைகள் என்றால் கொள்ளை ஆசை. தன் வீட்டோடு அருகாமையில் ஒரு சிற்றோடையாவது இருந்திருக்கக் கூடாதா என்று ஏங்குவாள். கனத்த மழை பெய்து பாதையில் கலங்கல் நீர் பாய்ந்தோடும் அழகைக் கூட சுவாரசியமாய்ப் பார்த்துக் கொண்டிருப்பாள்.

நீரோடு உறவாடும் இயற்கையை இரசிக்கும் சுபாவம் சியாமாவின் பிறந்தக கக் காணிக்கை என்றுதான் சொல்ல வேண்டும். ஓங்காரமாய் கிளம்பி, அகங்காரமாய் முன்னேறி, கரையை அண்மித்தும் சிருங்காரமாய் ‘சுருசுரு’ என்று சிணுங்கி வெள்ளை நுரைகளைக் கரையில் தவழவிட்டுத் தலைதாழ்த்திப் பின்வாங்கும் கடலலைகளின் நாதத்தில் மனதைப் பறிகொடுத்த வளாய்த் தன் இளமைக் காலத்தைக் கழித்தவள் தான் சியாமா. பிறந்த வீட்டின் கொல்லைப் புறத்திலே கடலென்றாலும் தாயாரின் உத்தரவின்றி கால் நனைக்கமுடியாது சியாமாவுக்கு. கிடுகு வேலியோடு திறந்து மூடக்கூடிய ஓலைப் படலையை விரியத் திறந்து கடலலைகளின் நர்த்தனத்தைக் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாலும், உம்மா நச்சரிப்பா. கண்டிப்பு கலந்த அந்த நச்சரிப்பின் அர்த்தம் இளவயதில் புரியவில்லை. கலா சாரச் சீரழிவுகளின் கேந்திர நிலைய மாக கடற்கரை யோரங் கள் சிலாகிக்கப்பட்ட பொழுது தான் தடையுத்தரவின் தர்மம் புரிந்தது.

கடலலைத் தழுவி சுகம் காண வேண்டும் என்ற இளவயது தவிப்பு நிறையவே சியாமா வுக்கு, உம்மாவிடம் உத்தரவு பெற உத்திகளைக் கண்டு பிடித்தாக வேண்டும். பள்ளித் தோழிகளோடு கலந்துபேசி, அவர்களில் சிலரை வீட்டுக்கழைப்பித்து, அவர்களைச் சாட்டுச்சொல்லி உம்மாவைக் கெஞ்சிக் கூத்தாடி அனுமதி பெறுவதற்குள் போதும் போதுமென்றாகி விடும். “கொமருப் புள்ளயள் கடலுக்குப் போற கூத்தடிக்கவா? சரிசரி மிச்ச நேரம் ஈக்கிறல்ல.. சுருக்க வந்துடோனும்”.

“நல்ல உம்மா…” உம்மாவின் கன்னச்சதையப் பிய்த்து உதட்டில் வைத்து உம்ம கொடுத்துவிட்டு சிட்டாகப் பறப்பாள் சியாமா தோழிகளுடன். உம்மாவென்றால் சும்மாவா? சின்னத் தங்கையை மெல்ல அனுப்பி வைத்திருப்பா குமருகளின் காவலுக்கு.

“அடி கனீமா அங்கபாருங்கோ… நாங்க இப்ப பொம்புளயள் கூட்டமா வந்துட்டோமா… மெதுவாக ஆண் அலை வந்து எங்கட காலுவள தொட்டுட்டுப் போகும். ஒடனே பொண் அலைக்கு கோவம் கோவமா வருமாம். அதால பொண் அல வேகமா வந்து எங்களைத் தொரத்தும் பாரேன்…”

சியாமா சொல்லி முடிப்பதற்குள் பெரிய அலையொன்று ஆக்ரோஷமாக வந்து அவர்களை யெல்லாம் விழுத்துமாப் போல் விரட்டியடித்தது.

“அடீ மெய்யே தான். சியாமா சொல்றது…” தோழிகள் புதுமிப்பார்கள். சியாமாவுக்கோ பெருமை தாங்காது. இன்னுமின்னும் கடலைப் பற்றி கதைகதையாக சொல்லத் தோன்றும். தோழியரோடு ஒப்பிடும்போது தனக்கு மட்டும் தான் கடல் பற்றிய அறிவு மிகைத் திருக்கிறது என்ற இறுமாப்பும் சற்று தலைதூக்கும்.

வருடங்களின் நகர்வு, சியாமாவை கடற் கரையை விட்டும் பலமைல்கள் தூர நகர்த்தி விட்டது. சியாமா ஊருக்குப் போனால்…. உம்மா வாப்பாவைக் குசலம் விசாரித்து விட்டு அடுத்தபடியாக எட்டிப் பார்ப்பது கடலைத்தான்.

“ஆ.. அன்ன கடல் பைத்தியம் வந்துட்டுது” தங்கை கேலி செய்வாள். சியாமாவின் பிள்ளைகளும் கடல் என்றதும் யார் தயவையும் எதிர்பாராமல் துள்ளிக் குதித்தோடுவார்கள். இனி பின்னாலே சியாமாவின் வாப்பாவும் ஓடுவார். ‘கடலப் பழக்கமில்லாத புள்ளயள் ஓரத்து அலையடிச்சா பயந்துடு வாங்க” என்று சியாமாவின் பிள்ளைகள் ஆசைதீர கடலில் ஆடும் மட்டும் வாப்பா காவலிருப்பர். சிறு பிள்ளையைப் போல அவரும் குதித்துக் கூத்தாடிய படியே… சியாமாவுக்குச் சில சமயம் பொறாமையாகவும் இருக்கும். எங்கள் சின்னவயதில் இப்படிக் கடலில் ஆடிக்களிப் பதை விட்டு, கடலோரச் சிப்பிகளைப் பொறுக்கி மகிழக் கூட இவர்கள் இடம் தரவில்லையே என்று.

கடலோரக் கவிதையாய் வீசிய தென்றலின் சுகந்தத்தை அணுஅணுவாய் அனுபவித்தவள் சியாமா. நீலப் பின்னணியில் தெரிந்த தொடுவானை ஓடிப் போய் தொட்டு விடலாமா என்று கற்பனையில் சுகங் கண்டவள். காலைச் செக்கர் வானமென்றும், மாலை மஞ்சள் வானமென்றும் மாறிமாறி வர்ணஜாலம் காட்டிய கோலக் கடலின் மீது சியாமாவுக்கு எப்போதுமே காதல்தான்.

பிறந்தது முதல் விவரம் புரியும் பருவ வயது தொட்டு சந்தோசங்களை உடனிருந்து அள்ளித் தந்த அந்த கடல், எதிர்பாராத ஒரு வேளையில் ஆக்ரோஷமாய் ஊழித்தாண்டவமாடிய போது… தங்கையின் பராமரிப்பிலிருந்த உம்மாவும், வாப்பாவும், தங்கையின் சின்னக் குடும்பத்தோடு சின்னாபின்னமாகித் தான் போனார்கள். கடலோரமாகவே இல்லத்தையும் இல்லறத்தையும் ஆண்டாண்டு காலமாக கட்டிக்காத்த வர்கள் கடலுக்குள்ளேயே குடும்ப சகிதம் கரை காண நேர்ந்த அந்தக் கோரம்… சியாமாவை மட்டுமா கடலோரக் காற்றோடு கலந்துறவாடிய எத்தனை பேரின் நெஞ்சத்தை உலுப்பி விட்டிருக்கும்?

விழியோரம் கசிந்த கண்ணீரை உடுத்தாடை யால் குனிந்து துடைத்துக் கொண்டாள் சியாமா. கழுவிய துணிகளை ஓரமாக்கி விட்டி நீரை அள்ளி அள்ளித் தலையில் ஊற்றினாள். கான்வழியே அந்தத் தண்ணீர் சலசலத்து ஓடிக் கொண்டிருந்தது. எப்படியோ சில எறும்புகள் அந்த நீரோட்டத்தில் சிக்கிக் கரையேறத் தத்தளிப்பதைக் கண்டாள். ‘இப்படித்தானே என்னவர்களும் ஆழிப்பேரலை களுடன் போராடியிருப் பார்கள்’ என்று நினைத்தவள், அருகிருந்த கம்புத் துண்டு ஒன்றைப் போட்டு எறும்புகளுக்கு கரைசேர வழிசெய்தபோது … அவளையும் முந்திக் கொண்டு கானில்நீர் எறும்புகளைச் சமாதியாக்கிக் கொண்டது.

“சியாமா…இன்னமா குளிக்கிற சோறு போடுற நோக்கமில்லையோ” நிலாமின் குரல் சியாமாவைச் சுயநினைவுக்குக் கொண்டு வந்தது.

“தலை தொடச்சிட்டீக்கிறன்…வா..ஓடி வாறேன்” என்றவளாக தன்னைத் துரிதப்படுத்தினாள்.

“எங்கட உம்மாவா… குளிக்க எறங்கிட்டாவா.. அப்ப நாங்க பசியில தான். தண்ணித் தாரா தண்ணியிலஎறங்கினா ஒருநாளும் சுருக்க வாறல்லயே…” மூத்த மகன் சீண்டுவதும் காதில் விழுந்தது.

அந்த நேரத்தின் அடுக்களை வேலைகள் ஒருவாறு முடிவுக்கு வந்தாயிற்று. ஈரத்தலையில் அள்ளி முடிந்திருந்த துவாயைப் பிரித்து, தலைமுடியைக் கோதிக்கொண்டே முன் ஹாலுக்கு சியாமா வர, நிலாமின் குறட்டை ஒலி பக்கத்து அறையிலிருந்து அவளை வரவேற்றது. சுவரில் நேரத்தைப் பார்த்தாள். மாலை மூன்று பதினேழு. பிள்ளைகள் மதியநேர தொலைக் காட்சித் திரைப்படத்தில் தங்களை மறந்திருந்தனர். இன்னும் ஒரு மணித்தியாலத்துக்கு வேலைகளிலிருந்து தற்காலிக நிவாரணம் பெறலாம். சியாமா தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு வராண்டாவிலிருந்த கதிரையில் அமர்ந்து அன்றைய தினசரியைப் பிரித்தாள்.

குளித்த உடம்பின் சுகமும், வீசிய இளம் காற்றின் வருடலும் மெல்ல அவள் கண்களுக்குள் தூக்கத்தைத் தூவின.

“நோனா ஏதாச்சும் ஹதியா தாங்கோம்மா…”

கனவில் ஒலித்தது போல கேட்ட கெஞ்சு மொழி… அதனையே மறுபடி பிரதி செய்து ஒலித்தது ஒரு பிஞ்சுமொழி. வெயிலுக்கே கருத்துச் சுருண்ட தோற்றத்தில் ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி. ஆளுக்குப் பெரிய சேர்ட் அணிந்தபடி ஆறு அல்லது ஏழு வயது மதிக்கத்தக்க ஒரு சிறுவன். வாசலில் நின்று கொண்டிருந்தார்கள். சியாமா எதுவும் பேசாமல் உள்ளே போய் சில்லறையை எடுத்து வந்து நீட்டினாள். “எனக்கும்” என்று சிறுவனும் தன் குஞ்சுக் கையை விரித்து நீட்டினான்.

“நோனா… சரியான மட்டும் பசிக்குதும்மா… ரெண்டு மூனு ஊட்டுல கேட்ட, கெடைக்கல… தின்ன ஏதாச்சும் குடுத்தீங்கன்னா நல்லா ஈப்பீங்க…”

சியாமாவுக்குப் ‘பகீர்’ என்றது. வயிறுகள் நிரம்பிய மயக்கத்தில் நாங்கள்: வயிறுகளே நிரம்பாத மயக்கத்தில் இரு சீவன்கள்…’ நெஞ்சம் பதைத்தது.

“ஐயோ டா… இப்பதான் நாங்க திண்டு முடிச்ச. எதுக்கும் கொஞ்சம் இரிங்க. பார்த்துட்டு வாறன்” என்றபடி அடுக்களைக்குள் புகுந்தாள். நல்லவேளை ஒரு தாய்க்கும் மகனுக்கும் போந்தும் போதாத அளவுக்கு சட்டியில் சோறும் கறிகளும் இருந்தன. இருந்ததை யெல்லாம் ஒரு தட்டில் வழித்தும் போட்டு எடுத்து வந்தாள்.

தாயும் பிள்ளையும் வாசற்படியிலிருந்து சற்று மேலே வந்தமர்ந்து அவள் கொடுத்ததைச் சாப்பிடத் தொடங்கினார்கள். சிறுவனோ ஒரு கவளம் சோற்றை உண்பதும், சியாமாவையே மருண்டு பார்ப்பதுமாக இருந்தான். அவன் கண்களில் ஒரு தேடலோ, ஏக்கமோ ஏதோவென்று தெரிந்தது. குழந்தையாக இருக்கையில் செக்கச் செவேலென்று அழகாக இருந்திருப்பான் போலும். தகிக்கும் வெயில் சுட்டதனாலோ தக்க நேரத்துக்கு ஆகாரம் இன்மையினாலோ அவன் மேனி ஒருவித இருண்ட நிறத்தில் சிவப்பாக இருந்தது.

சியாமா, தாயையும் மகனையும் நோட்ட மிட்டாள். அவளது எண்ணத்தில் பொறி தட்டியது. தாய்க்கும் கூட வந்திருக்கும் சிறுவனுக்கும் இரத்த சம்பந்தம் இருக்கவே இருக்காது என அவள் மனம் வாதிட்டது. மனதோ சுழி போல் விழுந்த கேள்விக்கு விடை காணத் துடித்தது. மெல்ல கதை தொடுத்தாள்.

“இந்தப் புள்ளக்கி எத்தன வயசும்மா…”

“எனக்குத் தெரியா நோனா…”

“அப்ப இது ஒங்கட புள்ள இல்லயா?”

அந்தப் பெண் தண்ணீரை ஒரு மிடறு குடித்துவிட்டு ஒரு கவளம் சோற்றையும் வாயில் போட்டுக் கொண்டாள்.

“எனக்கிருக்கிறதெல்லாம் பெரிய புள்ள மூனு தாம்மா. அததுக கள் ஒரு மாதிரி தங்கட வாழ்க்கைய தாங்களே தேடிக்கிட்டு ஒவ்வொரு திக்கில இருக்காங்க. அவங்க புள்ள குட்டியளோட படுற பாட்டப் பார்த்தா…. ஏன் அவங்களுக்கு நானும் சொமையா இரிக்கோணும் என்டு பிச்சக்கார சங்கத்துல சேந்திட்டன்…”

“பிச்சைக்கார சங்கமா?” ஆச்சரியமாக இருந்தது சியாமாவுக்கு.

“சங்கடமென்டா நோனா… கூட்டமெல்லாம் ஒன்னுமில்ல. எங்கள மாதிரி பிச்சையெடுக்கிறவங்கள ஒரு எடத்துக்கு வரச்சொல்லி ஒன்னு சேர்த்து ஒரு புரோக்கர் ஒவ்வொரு எடத்தச் சொல்லி அந்த ஏரியாவுல பிச்சை கேட்கச் சொல்லுவாரு… அவர் சொல்ற எடத்துக்கு போயி கெடைக்கிற காசுபணத்தையெல்லாம், உடுதுணியெல்லாம் அவருகிட்ட குடுக்கோணும். அந்தியோட அந்தியா அவரு எங்களுக்கு ஒரு கணக்கு கைல தருவாரு. அதுபோதும் நோனா எங்களுக்கு”.

சியாமாவுக்கு வியர்த்துப் போட்டது…

என்ன முட்டாள் மனிதர்கள்?

“அப்ப இந்தப் புள்ள?”

தட்டில் கையை அலம்பிக் கொண்டே ஓரத்திலிருந்த எச்சிற் பருக்கைகளை விரல்களால் தட்டுக்குள் வழித்தப்படி அவள் தொடர்ந்தாள்.

“அதையேன் கேக்குற நோனா. நாங்க தான் வக்கில்லாம கை நீட்டுறம் இந்தச் சிறுக்கன் பாவம். இவன எனக்குப் பொறுப்பு தந்திட்டாரு அந்த புரோக்கர். சின்னப் புள்ளயளோட போனா புள்ளக்கி வேறயாக் கெடைக்குமென்டு அந்தப் பச்சப் புள்ளயயும் பிச்சைக் கேட்கப் பழக்கியிருக்காங்க. ஒரு கல்லுல ரெண்டு மாங்காய் என்டு, சல்லியும் கெடைக்கும் புள்ளயும் எங்களோட பத்திரமா இரிக்கும்…”

சியாமாவுக்குத் தலையே சுற்றியது.

“இதுபோல எத்தினையோ புள்ளயள் ஈக்கிறாங்க நோனா. சுனாமியில உடுபட்ட புள்ளயள் கொஞ்சத்த எங்கட புரோக்கரும் வாங்கினதாம். அதுல ஒருத்தன் தான் இவன். இந்தச் சிறுக்கன எனக்கிட்ட தந்தப்ப தங்கக்கட்டி மாதிரி தளதளன்று இருந்தான். பாவம் எந்த மவராசி பெத்த புள்ளயோ…”

நிலைகுலைந்து போய் சிலையாய்ச் சமைந்தாள் சியாமா. சுனாமியில் எவ்வளவு தேடியும் உடலே கிடைக்காது போன தனது தங்கையின் மகனாக இவன் இருப்பானோ? மிகச் சிறுவயதில் இந்தகவீட்டுக்கு உறவு பாராட்டி பெற்றோரோடு வந்துவிட்டுப் போன நினைவு அவனுள் இருந்ததால் தான் அடிக்கடி தன்னைப் பார்த்து மருகினானோ…? தான் யார்? தனக்கு என்ன நேர்ந்தது? என்பதைப் பற்றியெல்லாம் கூறிக்கொள்ள முடியாத இயலாமையிலிருந்தானோ நாலரை வயதில் அத்தனையையும் துறந்து ஏழு வயதில் எதனையும் சரியாக நினைவுக்குக் கொண்டு வர முடியாமல் தவித்தானோ? காலச்சுழற்சியில் சொந்தங்களென்று யாரையும் சரியாக சட்டென்று அனுமானித்துக் கொள்ள முடியாமல் திண்டாடியிருப்பானோ?

சியாமாவின் மனது படபடவென்று அடித்தது. குறைந்தபட்சம் ஒரு போட்டோவைக்கூட விட்டுப் போகாத சுனாமியைச் சபித்தாள். சிலவேளை அவன் பெயர் சொல்லிப் பார்த்திருந்தால்…ஏதாவது உணர்வுகளை வெளிக் காட்டியிருப்பானே… என்ற நினைவு சட்டென்று உதித்தது.

” மிர்…. ஷா…ட்…..”

கூவிக்கொண்டே வேகமாய் வாசற்படியைத் தாண்டிப் பாதையை எட்டிப் பார்த்தாள்.

மாலைநேர மயக்கத்தில் சாலை வெறிச்சோடிக் கிடந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *