(2012ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அழைப்பு மணி ஓபன் த டோர் பிளீஸ் என்று இனிமையாக ஒலித்தது, கதவைத் திறந்த ராஜேஷுக்கு ஓர் இனிய அதிர்ச்சி. வா.வ் வாங்க வாங்க எதிர்பார்க்கவே இல்லே உள்ளே வாங்க என்று அழைத்துக்கொண்டு போய் சோபாவில் உட்காரவைத்து விட்டு அதிர்ச்சி விலகாமல் ஆச்சரியத்துடன் தாரிணி யார் வந்திருக்காங்கன்னு வந்து பாரு என்றான்.
தாரிணி இதோ வரேன் என்றபடி வந்தவள் மிஸ்டர் பிரேம் நீங்களா! எங்க வீட்டுக்கு எப்பிடி! மன்னிக்கணும்.
உங்களை இங்கே பார்த்த அதிர்ச்சியிலே கையும் ஓடலைகாலும் ஓடலை” என்றபடி பிரிஃட்ஜை’த் திறந்து குளிர்பானத்தை ஒரு கோப்பையில் ஊற்றி அவனிடம் அளித்துவிட்டு அவளும் வந்து உட்கார்ந்தாள்.
நானும் முன்பின் அறிவிக்காமல் வந்துவிட்டேன் அதற்கு நீங்கள்தான் என்னை மன்னிக்கணும் என்றபடி கோப்பையை கையில் வாங்கி டீப்பாயின் மேல்
வைத்தான் நடிகர் பிரேம்! பிரபல தொலைக்காட்சியில் நேற்று நடந்த மனமொத்த தம்பதிகள் நிகழ்ச்சியை ஏற்று கலகலப்பாக நடத்தி தாரிணியையும் அவள் கணவன் ராஜேஷையும் மனமொத்த தம்பதிகளாகத் தேர்ந்தெடுத்து பாராட்டி முதற் பரிசு வழங்கிய பிரபல நடிகர் பிரேம்!!
திரைப்பட உலகில் கால் பதித்து குறுகிய காலத்தில் பிரபலம் அடைந்து பல்லாயிரக்கணக்கான ரசிகர்களைத் தன் கைவசம் வைத்துக்கொண்டு வெற்றிகரமாகத் திரை உலகில் பவனி வரும் இளம் புயல் பிரேம். அப்படிப்பட்ட பிரேம் முகத்தில் ஒரு கவலை ரேகை. அதைக் கவனியாமல் ஆச்சரியத்துடன் தாரிணி ஐயோ எனக்கு சந்தோஷமா இருக்கு. இந்த சந்தோஷத்தை எப்படிக் கொண்டாடறதுன்னே தெரியலையே. ஒரு நிமிஷம் என்னோட நண்பர்களை, உறவுக்காரங்களை எல்லாரைம் கூப்பிடறேன். அவங்க நம்ப மாட்டாங்க.
இருந்தாலும் வந்து பாத்தா நம்புவாங்க என்றபடி தொலைபேசியை நோக்கி நகர்ந்தாள் தாரிணி. பிரேம் அவளைப் பார்த்து ஒரு நிமிஷம், நான் உங்க ரெண்டு பேர்கிட்டயும் தனிமையிலே பேச வந்தேன். கூட்டமெல்லாம் வேண்டாம் என்றான். அவன் முகம் வாடியிருந்தது. ஒரு கணம் அதிர்ந்து சரி என்றபடி குழப்பமாய் அவள் கணவன் ராஜேஷைப் பார்த்துவிட்டு வந்து உட்கார்ந்தாள் தாரிணி.
பிரேம் மெல்லிய குரலில் தொடர்ந்தான் அதென்னவோ தெரியலை நேற்று உங்க ரெண்டு பேரையும் பார்த்ததுலேருந்து ஏதோ ஒரு உணர்வு.
உங்ககிட்ட மனம் விட்டு சில உண்மைகளைப் பகிர்ந்துக்கணும்னு தோணிச்சு. உங்க ரெண்டு பேரோட ஒத்துமை உணர்வு, ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்கிற தன்மை இதெல்லாம் பார்த்து மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருந்துது. இப்போ நான் சொல்லப் போற விஷயத்தை வெளியிலே யார்கிட்டயும் பகிர்ந்துக்க முடியலை. வெளியே தெரிந்தால் மீடியாக்கள் என்னைப் பத்தி மோசமா செய்திகள் வெளியிட்டு என்னோட வாழ்க்கையிலே மேலும் சிக்கல் ஏற்படுத்திடுவாங்க. அதனாலே தயவுசெய்து வெளியே எதையுமே சொல்லாதீங்க.
என்னை நடிகனா பாக்காம, உங்க சகோதரனா நினைத்துக்கொள்ளுங்கள் என்று தழுதழுத்த பிரேமின் கண்களில் கண்ணீர் நிற்காமல் வழிந்து கொண்டிருந்தது. சமாளித்துக்கொண்டு பேச ஆரம்பித்தான் பிரேம். நான் இப்போ.. இந்த வினாடி முதல் அதுவும் உங்க வீட்டிலே இருக்கிற நேரம் வரை சத்தியமா நடிக்கப் போறதில்லை. சில நேரமாவது ஒரு சாதாரண மனிதனா வாழப் போறேன் என்று கூறிவிட்டு, அவன் மனைவி படுத்தும் பாட்டையும், அவன் அவளுடைய அன்புக்கு ஏங்குவதையும், அவன் மனைவி அவனுடைய புகழ், பணம், அவளுடைய சுற்றம் இவற்றுக்கு அளிக்கும் மதிப்பைக் கூட அவனுக்கு அளிப்பதில்லை என்றும் கூறி உடைந்து போய் மனம் விட்டு அழுதான். தாரிணியும் ராஜேஷும் ஆறுதல் கூறி அவனை ஆசுவாசப்படுத்தினர்.
இப்போது மனம் சற்றே தெளிவாக உள்ளது உங்களுக்கு என் நன்றி” என்று மனமார நன்றி கூறிவிட்டு, “நீங்க ரெண்டு பேரும் ஒரு நாள் என் வீட்டுக்கு வரணும், உங்க காலடி படற நேரமாவது என் வாழ்க்கையில் சந்தோஷம் வருதான்னு பாக்கிறேன் என்று கூறியபடி, தாரிணி கொடுத்த குளிர் பானத்தைக் கையிலெடுத்தான். அந்தக் குளிர்பானம் சூடாகி இருந்தது. வேறு குளிர்பானம் தரட்டுமா என்றாள் தாரிணி. இல்லை வேண்டாம், இந்தச் சூடான குளிர்பானம் போல்தானே என் வாழ்க்கையும் இருக்கிறது. இதையே குடிக்கிறேன் என்று குடித்துவிட்டு முகத்தை துடைத்துக்கொண்டு கிளம்பினான். அந்தப் பிரபல நடிகன் கோடீஸ்வரன் பிரேம் ஓபன் த டோர் பிளீஸ் என்று இனிமையாய் அழைப்பு மணி ஒலித்தது. உள்ளிருந்தே பார்க்கும் மாயவிழிக் (Magic Eye) கண்ணாடியில் இருவரும் மாறி மாறி முகம் வைத்துப் பார்த்தனர். அவர்கள் இருவரின் வக்கீல்களும் வந்திருந்தனர்.
தாரிணியும் ராஜேஷும் சுதாரித்துக்கொண்டு இயல்பு நிலையை அடைந்தனர். ராஜேஷுக்கும் தாரிணிக்கும் சட்டப்படி விவாகரத்து அளிக்க ஒரு வருடம் சேர்ந்து வாழுவது அவசியம் என்று நீதிபதி கூறியதையும், அதற்காக சேர்ந்து வாழ ஆரம்பித்து அன்றோடு அந்த ஒரு வருடம் நிறைவு பெறுவதும் இருவருக்கும் ஒரு சேர நினைவுக்கு வந்தது. இருவரும் திகைத்தனர், முகத்தை துடைத்துக்கொண்டனர்! ராஜேஷும் தாரிணியும் கதவைத் திறப்பதா, வேண்டாமா எனக் குழம்பிக் கொண்டிருந்தனர்.
– வெற்றிச் சக்கரம் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: அக்டோபர் 2012, தமிழ்க் கமலம் பதிப்பகம்.