முகநூலும் அகவாழ்வும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 31, 2018
பார்வையிட்டோர்: 9,589 
 

அம்மா வந்திருந்தாள்.அகமும் முகமும் மலர ஆறுமாதக் குழந்தையான என் மகனைத் தூக்கிக் கட்டிக்கொண்டு, அவனுக்கு அள்ளி அள்ளி முத்தம் கொடுத்தாள். அவளை நான் அவதானிப்பதை உணராத உலகில் அவள் எனது குழந்தையுடன்- அவளின் பேரனுடன் உறவாடிக் கொண்டிருந்தாள். அவளை இந்த நிலையிற் கண்டபோது எனக்கு நான் ஆறுமாதக் குழந்தையாகவிருக்கும்போது என்னையும் இப்படித்தான் தன்னோடிணைத்து முத்தங்களைச் சொரிந்திருப்பாள் என்று நினைப்பேன்.

கொழும்பிலிருக்கும் எங்களைப் பார்க்க அப்பா வருவது கிடையாது. அப்பாவுக்கு அவர் வயதுசார்ந்த பல நோய்களுள்ளன. ஆனால் அவர் கொழும்புக்கு வராததற்கு அதுமட்டுமா காரணம் என்று நான் பல தடவை யோசித்திருக்கிறேன். இலங்கையின் தலைநகர் கொழும்பு,உலகத்திலுள்ள பல நகர்கள் மாதிரி நாளொரு வண்ணமும் பொழுதொரு வண்ணமுமாக பல விதங்களிலம் வளர்ந்து கொண்டிருக்கிறது. அதற்கேற்ப சூழ்நிலையும் பல காரணிகளால் மாசுபட்டுக் கொண்டிருக்கிறது.

அப்பாவுக்கச் சாடையாக அஸ்த்மாவும் இருப்பதால்,மாசுபட்ட காற்றுப் பட்டால் அவர் மூச்செடுக்கக் கஷ்டப்படுவார்.அதனால் அவர் அவரின் பிறந்த ஊரான திருகோணமலையை பகுதியில் கடற்காற்றை சுவாசித்துக் கொண்டு,அவரின் மிகப் பிடித்த பொழுது போக்கான முகநூலில் உள்ள சினேகிதர்களுடன் தொடர்பிலிருக்கிறார்.

நான் எனது பெற்றோருக்கு ஒரே குழந்தை. அதனால் அவர்கள் இருவரினதும் அன்பில் திளைத்து வளர்ந்தவள்.அப்பாவும் அம்மாவும் ஆசிரியர்கள். நான் சிறு குழந்தையாயிருந்தபோது என்னை எனது அம்மாவின் தாய் தகப்பன் பார்த்துக் கொண்டார்கள். வேலைக்குச் செல்லும் அம்மாவை விட எனது பாட்டிதான் என்னை நீண்ட நேரம் தன்னுடன் அணைத்து வைத்துப் பராமரித்தவள்; என்று எனக்குத் தெரியும்.

எனது இளமைக் கால நினைவுகளை நினைத்துப் பார்த்தால்,பாட்டிக்கு வயதாகிக் கொண்டிருந்த கால கட்டத்தில் எங்கள் வீpட்டு வேலைகளுக்கு உதவி செய்ய ஒரு சொந்தக்காரப் பெண் வந்துபோவார். அதை விட அடிக்கடி வரும் உறவினர்கள், அப்பாவின் சினேகிதர்கள் போன்ற கல கலகலப்பான குடும்ப சூழ்நிலையில் வளர்ந்தவள் நான்.

நான் இப்போது கொழும்பில் ஒரு பிளாட்டில் வாழ்கிறேன். எனது மாமியார்;,என்னவரின் சகோதரிகள் வெளிநாட்டிலிருப்பதால் அவர்களைப் பார்க்க எப்போதாவது இருந்து வெளிநாடு செல்வார். எங்களுக்குக் குழந்தை பிறந்தபோது எங்களுடனிருந்தார்,நான் வேலைக்குப் போகும்போது எனது மகனைப் பார்த்துக் கொண்டிருந்தார்..இப்போது எனது மாமியார் கனடா சென்றுவிட்டதால்; எனது தாய் வந்திருக்கிறாள். அப்பா வரவில்லை. அவருக்குக் கொழும்பு பிடிக்காதாம்.

போர்ச் சூழ்நிலையால் தமிழர்கள் பட்ட பல இன்னல்களைச் சந்தித்தும், பல இடங்களுக்கு இடம் பெயர்ந்தும் எனது தகப்பன் தனது பிறந்தவிடத்தைவிட்டு நகரமாட்டேன் என்ற சொல்லி விட்டார்.

‘ஒரே ஒரு குழந்தை,அதைக் காப்பாற்றவென்றாலும் வெளிநாடு போகப் பாருங்கள்’ என்று சொந்தக்காரர் சொன்னதை அவர் ஏற்கவில்லை. ‘இலங்கைத் தமிழர் அத்தனைபேரும் ஊரை விட்டு ஓடமுடியாது’ என்று பிடிவாதமாகச் சொல்லி விட்டார்.

அப்பாவின் பிடிவாதத்தை யாராலும் உடைக்க முடியாது என்று குடும்பத்தாருக்குத் தெரியும்.

நானும் இப்போது ஆசிரியையாகவிருக்கிறேன். எனது கணவர் வங்கி ஒன்றில் வேலை செய்கிறார்அவர் எனக்குத் தூரத்துச் சொந்தம். ஆனாலும் காதலித்துக் கல்யாணம் செய்தோம்.

எங்கள் காதலுக்கு அப்பா தனது எதிர்ப்பைக் காட்டினார். காரணம் என்னவென்று எனக்குத் தெரியாது. ஆனாலும் அவரின் சொந்தக்காரர்களினதும், சினேகிதர்களினதும் குழந்தைகள் வெளிநாடுகளில் திருமணம் செய்து கொண்டு போய்க் கொண்டிருந்த காலத்தில,சொந்தத்தில் திருமணம் செய்துகொண்டு ஊரோடு வாழவேண்டும் என்ற எனது முடிவு அம்மாவுக்கு சந்தோசத்தைக் கொடுத்தது.

தனது ஒரே ஒரு மகள் ஊரை விட்டு ஓடாமல் நாட்டுடன் தங்கியிருப்பதும் தங்களைக் கடைசி காலத்தில் பார்த்துக் கொள்வாள் என்பதும் ஒருகாரணமாகவிருக்குமோ என்று நான் நினைத்தேன்.

ஆனால் இந்த முறை என்னிடம் அம்மா வந்தபோது,இதுவரை எனது தாய்தகப்பனைப் பற்றியறியாத பல தகவல்களை அவள் சொன்ன விடயங்களிலிருந்து தொகுத்தபோது, எனது காதலுக்கு ஏன் எனது தந்தையார் எதிராகவிருந்தார் என்பதும் ஏன் எனது அம்மா ஆதரவு தந்தாள் என்பதும் தெரிந்தபோது வந்த ஆச்சரியத்தில் என்னால் அவர்களுக்காக அழுவதைத் தவிர வேறொன்றும் தெரியவில்லை.

நாங்கள் இப்போது கொழும்பு தெகிவளையிலிருக்றோம். அந்தி மாலையில் தெகிவளையின்; அழகிய கடற்கரையில் காலுன்றித் திரிவது எனக்குப் பிடிக்கும். கணவர் வேலை விடயமாகச் சிலவேளை வீடுவரப் பிந்தினால் குழந்தையைத் தள்ளு வண்டியில் வைத்துக்கொண்டு கடல் மண்ணைக் கடந்து,ஓடிவரும் அலையில் கால் பதித்து நடப்பது எனக்குப் பிடித்த விடயங்களில் ஒன்று. பரந்த நீலக் கடலில் பல விதமான பெருங்கப்பல்கள் கொழும்புத் துறைமுகத்தைத்தேடிப் போய்க் கொண்டிருக்கும்.

அவற்றுக்குப் போட்டிபோடுவதுபோல் மீனவர்களின் சிறபடகுகளில் கடலைப் பிழந்துகொண்டு இரைதேடும்.கடற்கரையில் இளம் தலைமுறை பல குழுக்களாக அமர்ந்திருந்து அலட்டிக்கொண்டிருப்பார்கள். பக்கத்திலுள்ள சில பற்றைகள் மறைவில் காதலர்கள் தங்களை மறந்த உலகில் சல்லாபமாக இருப்பார்கள்.

இலங்கையின் பல்வித மக்களின் ஒன்று கூடலின் சங்கமமாகக் கடற்கரைகள் கலகலக்கும்.

அன்று என்னுடன் வந்த அம்மா அதிகம் பேசாமல் ஆழ்கடலில் பார்வை பதித்தபடி வந்த கொண்டிருந்தாள். கடற்காற்றின் சுகத்தில் குழந்தை தூங்கி விட்டான்.

அம்மாவின் பார்வையிற் தெரிந்த சோகம் என்னை ஏதோ செய்தது.எனது தாய்,என்னை இந்த உலகுக்குத் தந்த தெய்வம். என்வாழக்கையில் ஒவ்வொர நிமிடத்தையும் எனது நல்வாழ்க்கைக்காகப்; பிரார்த்திக்கும் அன்புள்ள தாய்மை,அவள் சோகம் என்னைக் குலுக்கியது.

‘ இப்போது அவர் தனது முகநூலுடன் சந்தோசமாக இருப்பார்’ அம்மா சட்டென்று சொன்னாள்.அவள் குரலில் ஆத்திரமா, ஆதங்கமா அல்லது தன்னிரக்கமா என்று எனக்குப் புரியவில்லை.

அவளைத் திரும்பிப் பார்த்தேன். அம்மா என்ற அடையாளத்தைத் தாண்டிய ஒரு சாதாரணபெண்ணாக அம்மா என்னைப் பார்த்தாள். ஒரு மகளைப் பார்க்கும் இறுக்கமான பாசத்தைத் தாண்டி அவள் பார்வையில் அவளுக்காக நான் இரங்கவேண்டும் என்ற வேணடுகோளிருந்ததுபோல் எனக்குப் பட்டது.

‘அம்மா ஓய்வு பெற்ற முதியவர்கள் பலர் செய்யும் வேலையைத்தான் அப்பாவும் செய்கிறார். பழைய சினேகிதர்களைக் கண்டுபிடிப்பதும் அவர்களுடன் கதைப்பதும், புதிய சினேகிதங்களில் இன்னுமொரு உலகத்தைத் தேடுவதுமாக இருக்கிறார்கள் என்றுதான் இவர் சொன்னார்’ அம்மாவை ஆறுதல் படுத்தும் விதத்தில் நான் சொன்னாலும் அம்மாவைக் கவனினிக்காமல் அப்பா தானும் தனது பாடுமாக இருப்பது கூடிக் கொண்டிருக்கிறது என்பதைப் போனதடவை அவர்களுடன் போய் நின்றபோது நான் அவதானித்திருந்தேன்.

‘உன் கணவர் முக நூலில் எவ்வளவு நேரம் செலவழிக்கிறார்?’ அம்மாவின் குரலில் ஒரு போலிஸ்காரரின் தொனி சாடையாகத் தெரிந்தது.

நான் தர்ம சங்கடப்பட்டேன். என்னடையவர் எவ்வளவு நேரம் முகநூலிற் செலவழிக்கிறார் என்று தெரியாது,நான் அதைப் பற்றிக் கவலைப்படுவதும் கிடையாது. அவராக எப்போதாவது இருந்து விட்டு யாரோ முகநூலில் போட்ட கவனத்தைத் தேடும் படத்தையோ, விடயத்தையோ பற்றிச் சொல்வார்.

‘ஏன் சிலர் தங்களைப் பற்றிய விடயங்களை அடிக்கடி போடுகிறார்கள்?’ என்று கேட்டேன்.அவர் சிரித்தபடி,’எங்களிடம் எல்லோரிடமும் எங்களைப் பற்றி மற்றவர்கள் புகழவேண்டும்,மதிக்கவேண்டும், ஆச்சரியப்படவேண்டும், என்ற ஆவலுள்ளது. இப்போது முகநூல் அந்த ஆசைகளை மேடையேற்றத் தளம் கொடுத்திருக்கிறது.அதனால் யாருக்கும் கெடுதி இல்லையென்றால் ஏன் கவலைப்படவேண்டும்?’ என்ற கேட்டார்.

‘நிஜமற்ற முகநூலில் நிழல்தேடியலையும் மனிதர்களும் இருக்கிறார்களே’ என்று நான் முணுமுணத்தபோது அவர் சொன்னார்.

‘மனித மனத்தின் ஒரு சிறு பகுதியைத்தான் முகநூலிற் காணலாம்.மனிதர்கள் ஒரு நாளும் முழுக்க முழுக்கத் தங்களை மற்றவர்களுக்குக் காட்டுவது கிடையாது’ என்றார்.

அம்மாவுக்கு அப்பர்,அவளைப் பொருட் படுத்தாமல் அவளுடன் நேரத்தைச் செலவழிக்கமல் முகநூலில் ஏன் அப்படி ஈர்ப்பாக இருக்கிறார் என்பது மன உளைச்சலைத் தருகிறது என்பதை உணரத் தொடங்கினேன்.

‘ஓய்வு பெற்றபின் இருவரும் தனியாகத் தாங்கள் விரும்பிய இடங்களுக்கப் போகவேண்டும், புதிய விடயங்களை, புதிய உலகத்தை ரசிக்கவேண்டும் என்று அம்மா கற்பனை செய்திருக்கலாம்.

நான் எனக்குள் பலவற்றை யோசித்தபடி நடந்து கொண்டிருந்தேன்.

‘உனது அப்பாவுக்குக் கிடைத்த நல்லதொரு வேலைக்காரி நான்’ பொங்கிவரும் கடலலையத் தாண்டிய அவள் கண்ணீர் என்னையும் கண்கலங்கப் பண்ணியது.

அப்பா முகநூலுடன் மாரடிப்பதைப் பார்த்துச் சலித்த அம்மா எங்களுடனிருக்கும்போதும் அதையே நினைத்து எரிச்சல் படுகிறாளா?

அவள் கொழும்புக்கு வந்து கடந்த இரு கிழமைகளாக அவள் தனது பேரக்குழந்தையுடனும் எங்களுடனும் மிகவும் சந்தோசமாக இருக்கிறாள் என்றுதான் நான் நினைத்தேன் ஆனாலும், அம்மாவின் பராமரிப்பில் இருக்கும் அப்பாவைத் தனியாக விட்டு வந்ததில் அவளுக்கு ஒரு நெருடல் இருக்கும் என்றும் எனக்குப் புரியும். அப்பாவின் சொந்தக்கார மருமகள் முறையான ஒருத்தியை அப்பாவுக்குச் சாப்பாடுகள் கொண்டு வந்து கொடுத்து அவரைப் பார்க்க அம்மா ஒழுங்கு செய்து விட்டு வந்திருந்தாள்.

அப்பா,பெரும்பாலான ஆண்கள் மாதிரி தனக்கோ மற்றவர்களுக்கோ தேனிர் போடக்கூடத் தெரியாதவர்.அம்மா அப்பா இருவரும் முழுநேர வேலை செய்பவர்களாக வாழ்க்கை முழுக்க ஒன்றுபட்டிருந்தாலும் அப்பா ஒரு ஆணாக’ மட்டும்தானிருக்கிறார். வீட்டில் ஒரு துரும்பைக்கூட எடுத்துப் போடமாட்டார்.

உதவிக்கு ஒரு பெண்வருவதால் அம்மாவின் வீட்டுவேலைகள் பெரிய பாரமில்லை என்று நினைத்தாரா? அவர்கள் உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெற்றதும் அம்மா தங்கள் கடைசிக்காலத்தை எப்படிச் செலவளிக்கவேண்டும் என்ற கற்பனையிலிருந்த அம்மாவுக்கு அப்பா இன்னும் ஒருபடி மேலே போய் அம்மாவை அந்நியமாக்கிக்கொண்டிருப்பதை நான் இப்போது புரிகிறேன்.

எங்கள் வீட்டில் எனது கணவர் எனக்குத் தேனிர் போட்டுத் தருவதை அம்மா ஆச்சரியத்துடன் பார்த்தாள். புதிய தலைமுறையின் வாழ்க்கையை அவள் உற்று அவதானிப்பதை நான் சாடையாக அவதானித்திருந்தேன்.

நானும் என் கணவரும் பல விடயங்கள் பற்றி உறவாடுவதும், அன்னியோன்னியமாக் பழகுவதும், மனம் விட்டு மற்றவர்களுக்கு முன்னால் எங்கள் அன்பை பகிர்ந்துகொள்ளுவதும் அம்மாவுக்குப் புதிய அனுபவங்களாகவிருக்கலாம்.

நான் சிறு பிள்ளையாகவிருந்தபோது,எங்கள் பெற்றோர் என்னை அன்பாக வளர்த்தார்கள் என்பதில் எந்தவிதமான கேள்வியுமில்லை. ஆனால் நான் வளர்ந்து கொண்டுவந்த காலத்தில் அவர்களின் தாம்பத்ய வாழ்க்கை ஒரு ‘நிர்வாக’ முறையில் கட்டுமானப் படுத்தப் பட்டிருந்ததாகவும் அதன் தலைவர் அப்பா என்பதும் எனக்குப் புரிந்தது.

அவர்களின் திருமணம் பெற்றோர்களால் தீர்மானிக்கப் பட்ட திருமணம் அப்படியான திருமணங்களில் பெரும்பாலான நேரங்களில் இருவரில் ஒருத்தரின் கையோங்கி இருக்கும் என்பதை நான் வளர்ந்த சூழ்நிலையிற் கண்ட தம்பதிகளைப் பார்த்துப் புரிந்து கொண்டேன்.

அம்மா நல்ல அழகான பெண் என்பது எனது கருத்து. அடக்கமாகப் பழகுவார். ஆசிரியையான தனக்கு சாதாரண பெண்களைவிட அதிகம் தெரியும் என்ற விதத்தில் யாரிடமும் பழகமாட்டார். பெரும்பாலான நேரங்களில் அம்மாவைப்பொல் நானும் மற்றவர்களை மதித்து வாழப் பழகியிருந்தேன். ஆனால் போட்டி பொறாமையால் என்னை மட்டம் தட்ட வருபவர்களுடன் வாதாட நேரிட்டால் அவர்கள் என்னை மட்டம் தட்டுவதில் ஓரளவுக்குமேல்ப் போகாமல் அவர்களைவிட்டு மெல்லமாக அகன்றுவிடுவேன்.

அப்படியான வாழ்க்கை நியதிகளைக் கடைப் பிடிக்கக் கற்றுக் கொடுத்த எனது தாய் கண்கலங்குவதை என்னால் தாங்க முடியவில்லை.

அப்பாவின் நோய் நொடி பற்றி அம்மாவுக்கு யோசனைகள் வருவது இயற்கை. ஆனால் இப்போது அவள் கண்கலங்கியதற்கு அப்பாவைத் தனியாக விட்டு வந்ததின் பிரதி பலிப்பா?

அதிகம் நடமாட்டமில்லாத ஒரு இடத்தில் நான் அமர்ந்தேன்.அவளும் உட்கார்ந்தாள்.

‘மாதவன் கெட்டிக்காரப் பையன்’ அம்மா தள்ளுவண்டிpயல் நித்திரை கொள்ளும் எனது ஆறுமாதக் குழந்தையைத் தடவியபடி அம்மா சொன்னாள்.

நான் சிரித்தேன். குழந்தைக்கு இப்போதுதான் ஆறுமாதம்.அவன் எதிர்காலத்தில் ஒரு நல்லவனாக வருவான் என்று அவனின் பாட்டி எதிர்பார்ப்பது ஆச்சரியமில்லை.

அம்மா நான் ஏன் சிரிக்கிறேன் என்பதுபோல் என்னைப் பார்த்தாள். அம்மாவுக்கு அறுபது வயது. முகத்தில் சுருக்கங்கள் வரத் தொடங்கியிருந்தாலும் அவளின் பவித்திரமான அழகை நான் ரசித்தேன்.

ஆழ்கடலின் எல்லையில் மறைசூரியன் இறங்கிக் கொண்டிருந்தான்.

அடிவானம் பல்நிற அழகில் உலகை மயக்கிக் கொண்டிருந்தது.

அவ்வழகின் பிரதிபலிப்பு ஆழ்கடலிற் பள பளத்தது.அம்மா எங்கோயோ பார்வையைப் பதித்தபடி,

‘ நீ அதிர்ஷ்டசாலி, நல்லதொரு கணவன் கிடைத்திருக்கிறார்’என்றாள்.

அவள் குரலிற் தோய்ந்து கிடந்த சோகத்தால் எனது இதயத்தில் சுரீர் என்று ஏதோ தைத்தது. தனக்கு அப்படி ஒரு வாழ்க்கை கிடைக்கவில்லை என்று சொல்லாமற் சொல்கிறாளா?

நான் அதை வாய் விட்டுக் கேட்கலாமா?

‘அவர் இப்போது தனது முகநூலுடன் ஒன்றிப்போயிருப்பார்’ அவள் விரக்தியாகச் சிரித்தாள். அப்பாவும் அவரின் முகநூல் ஒன்றுதலையும் இவள் அடிக்கடி சொல்வது நான் அதைப் பற்றி அம்மாவிடம் ஏதும் கேட்டவேண்டும் என்ற எதிர்பார்ப்பா?

அம்மாவுக்கு நவநாகரிகமான சமுதாய ஊடகங்களில் அக்கறையில்லை. அவளுக்கு நேரமுமில்லை. வீட்டு வேலை, தோட்ட வேலை, அப்பாவைப் பார்க்கும் வேலை, வீட்டுக்கு வரும் சொந்தக் காரர்களை உபசரிப்பதே என்று அவளுக்கு ஒரே வேலை. அவளுக்கு என்று ‘தனியாக’ நேரம் கிடைப்பது அருமை.

பாடசாலை ஆசிரியையாக இருந்தகாலத்தில், ஏதும் நேரமிருந்தால் அம்மா ஏதோ வாசிப்பாள். யாரும் சினேகிதிகளோ சொந்தக்காரர்களோ துணைக்குக் கிடைத்தால் எப்போதாவதிருந்து கோயிலுக்குப் போவாள். ஆனால் கடவுள் நம்பிக்கையென்று விரதம் எல்லாம் இருப்பது கிடையாது.ஆனால் எங்கள்; வீட்டில் பல தெய்வங்களின் படங்கள் இருக்கினறன.அம்மா படங்களுக்குப் பூக்கள் வைத்து தனக்குள் ஏதோ முணுமுணுத்துக் கடவுளிடம் பேசிக் கொள்வார்.

அப்பா உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெறும் வரையும் பாடசாலை நேரம் தவிர மற்ற நேரங்களில் டியுசன் கொடுத்தவர். திருவிழாக் காலங்களில் எப்போதாவது இருந்து கோயிலுக்குப் போவார்.

இதெல்லாம் எனது மனதில் நிழலாடியபோது, அம்மாவின் வாழக்கை இயந்திரமயமாகவிருந்தது என்று சொல்ல வருகிறாரா என்ற கேள்வி எனக்கெழுந்தது.

‘அவளுடன் அப்படி எத்தனை தரம் இந்தக் கடற்கரைக்கு வந்திருப்பார்?’ அம்மா தன்னைத்தானே கேட்டுக் கொள்கிறாளா அல்லது என்னிடம் கேட்கிறாளா?

அவளா? யார்?

நான் திடுக்கிட்டேன்.அப்பாவைப் பற்றித் திருப்பித் திருப்பி ஏதோ எல்லாம் சொல்லிக் கொண்டிருந்தவள், இப்போது அவருடன் அவள் என்று தொடங்கியதும் எனது அடிவயிற்றி ஏதோ ஊர்ந்தது.

எனக்குக் கொஞ்சம் கொஞ்சமாக ஏதோ புரியத் தொடங்கிவிட்டது.

‘உனது அப்பாவின் அந்தஸ்து போதாது என்று அவளின் பெற்றோர், அவளை வெளி நாட்டுக மாப்பிள்ளைக்குக் கல்யாணம் செய்து கொடுத்து விட்டார்கள்’

அப்பாவின் தோல்வியடைந்த பழைய காதலை அம்மா ஒரு தயக்கமுமில்லாமல் சொல்லி முடித்தாள்.

எனக்கு ஆச்சரியமாகவிருந்தது. இப்படி ஒரு தகவலை நான் எதிர்பார்க்கவில்லை.

அம்மா அந்தப் பழைய கதைகளை நான் தெரிந்துகொள்ளவேண்டும் என்ற பிடிவாதத்துடன் எனக்குச் சொல்கிறார் என்று எனக்குப் புரியத் தொடங்கியது.

நான் ஒன்றும் பேசமுடியாத ஒரு அதிர்ச்சிக்குள்ளாகி அதைத் தர்ம சங்கடதுடன் சகித்துக் கொள்வதை அம்மா அவதானித்தாள்.

‘எவரும் தங்கள் முதற்காதலை மறுப்பதில்லை’ அவள் கோபத்துடன் சொல்லவில்லை.தன்னுடையவரின் அகத்தில் எப்போதோ குடிகொண்டிருந்தவள் பற்றிய சில குறிப்ih என்னுடன் பரிமாறுகிறாள்.

அவர் தனது முதற்காதலை மறக்கவில்லை என்று சொல்வதற்குப் பதில் ‘எவரும் மறுப்பதில்லை’ என்கிறாள்.அப்படியானால் அம்மாவுக்கும் ஏதோ பழைய உறவு இருந்திருக்குமா?

எனது தர்ம சங்கமான முகத்தைப் பார்த்து விட்ட அம்மா குறும்பாகச் சிரித்தாள். ‘எனது முதற்காதல் எனது கணித மாஸ்டரில்அவரக்கு வயது ஐம்பது.ஆனால் தோற்றத்தில் இளமையாக இருப்பார். எனக்கு மத்ஸ் நல்லா வரும் பெருமையாக மற்றவர்களுக்கு என்னைப் பற்றிப் புழுகுவார். அவரில் எனக்கொரு பாசம். ஓரு ஆத்மிக ஈர்ப்பு,மதிப்பு. என்னை அவர் மாதிரிப் புரிந்து கொள்ளும் கணவர் வரவேண்டும் என்ற எனது பதினைந்து வயதில் இரகசியமாகப் பிரார்த்தித்தேன்’ அம்மா சிரிப்பும் துயருமாகச் சொல்லி முடித்தார்.

அம்மாவின் திறமையை, அன்பை,காதலான மனைவி, கடமையுள்ள தாய் என்ற பன்முகத் திறமையை அப்பா ஒருநாளும் கண்டுகொள்ளவில்லையா?

அம்மாவின் கதை:

‘உனது அப்பா,1983ம் ஆண்டில் கொழும்பில் தமிழருக்கெதிராக நடந்த இனக் கலவரத்தின்போது அவரின் மாமாவுடன் கொழும்பிலிருந்தார்.பட்டப்படிப்பை முடித்துக் கொண்டு வேலை தேடிக் கொண்டிருந்தார். சட்டென்று தொடங்கிய கலவரத்தில் ஒன்றிரண்டு நாட்களில்; பல்லாயிரம் தமிழர்கள் தங்கள் உடமைகள், சொந்தங்கள், உயிர்கள் என்பவற்றைப் பறிகொடுத்து அகதிகளானார்கள். தாங்கள் பிறந்த பூமியில்,வளர்ந்த,வாழந்த சூழ்நிலையில் அகதிகளாக்கப் பட்டார்கள்.பட்டாம் பூச்சிகளாகப் பல திசைகளுக்கு ஓடினார்கள்

உனது அப்பாவுக்கு அப்போது ஒரு காதலியிருந்தார் பல்கலைக்கழகக் காதல். கலவரம் வந்ததால் இருவரும் வெவ்வேறு இடங்களுக்குத் தப்பியோடவேண்டிய நிலை.அப்பா ஊருக்கு வந்து விட்டார்.

அதன் பின் அவர்கள் இருவருக்கும் தொடர்புகளிருக்கவில்லை. கொஞ்ச காலத்தின்பின் அவள் வெளிநாட்டு மாம்பிள்ளையுடன் நாட்டை விட்டு வெளியேறிவிட்டாள் என்ற செய்தி கேட்டு உனது அப்பா இடிந்து விட்டார்.

அப்பாவின் அந்தஸ்து சரியில்லாததால் அவள் குடும்பம் அவரை நிராகரித்தது என்ற செய்தி அவரை வாட்டியது.

என்னைக் கல்யாணம் செய்யப் பேச்சுவார்த்தைகள் நடந்தபோது இதெல்லாவற்றையம் மற்றவர்கள் மூலம் கேள்விப் பட்டிருந்தேன். தனது பழைய வாழ்க்கையைப் பற்றி எனக்குச் சொல்லமாட்டாரா என்று சிலவேளைகளில் நினைப்பேன். ஆனால் எங்களுக்குக் கல்யாணமானதும் தனது இளமைக் காதலைப் பற்றி ஏங்கிக் கொண்டிருக்காமல் எங்கள் வாழ்க்கையைக் கொண்டு நடத்திக் கொண்டிருந்தார் என்பதையும் புரிந்து கொண்டேன்.

எனக்கு எந்தக் குறையும் அவர் வைக்கவில்லை. தனது குரலையுயர்த்தி ஆத்திரத்துடன் என்னைப் பேசியோ அதட்டியோ நடத்தவில்லை. கணவரிடம் துன்பப் படும் பெண்களின் கதைகளைக் கேள்விப்படும்போத நான் எவ்வளவ அதிர்ஷ்டசாலி என்று பூரித்துக் கொள்வேன.;

ஆனால் அவர் தனது பெரும்பாலான நேரத்தை அவர் நினைத்தபடி வகுத்துக் கொண்டபோது என்னிடமிருந்து தனித்திருக்கத்தான் அப்படியான நியதிகளை வகுத்துக் கொண்டாரா என என் மனம் ஏங்கத் தொடங்கியது. அவர் வேலையால் வந்ததும் டியுசனை ஆரம்பிப்பார். இரவு எட்டு ஒன்பது மணிவரை பிசியாகவிருப்பார்.

ஓய்வு நாட்கள் என்று ஞாயிற்றுக் கிழமையில் இலங்கையில் வெளியாகும் அத்தனை ஆங்கில தமிழ்ப் பத்திரிகைகளைப் படித்துக் கொண்டிருப்பார்.

எப்போதாவது உன்னையும் என்னையும் கடை கண்ணிகளுக்குக் கூட்டிக் கொண்டுபோவார்.

கல்யாணம் செய்து கொஞ்ச நாட்களில், எனது அண்ணாவின் கல்யாணம் நடந்து அவன் கொழும்புக்கு வந்தான்.அண்ணாவைப் பார்க்க நான் கொழும்புக்கு வரும்போது எனது அப்பா ஏதோ காரணம் சொல்லி கொழும்புக்கு வருவதைத் தவிர்த்துக் கொள்வார்.

கொழும்புக்கு வந்தால் அவளுடன் திரிந்த இடங்களைப் பார்த்தால் வேதனைவரும் என்பதால் கொழும்புக்கு வருவதைத் தவிர்த்துக் கொண்டார் என்று நினைக்கிறேன்

அந்தக் கால கட்டத்தில் கொழும்பில் அப்பாவுடன் படித்த ஒருவihச் சந்தித்தேன். அவர் பெயர் சந்திரகுமார். அவர் எங்கள் கல்யாண வீட்டுக்கு வந்ததுமட்டுமல்லாமல் அதன் பின்னும் ஓரிரு தடவைகள் திருகோணமலைக் கோணேசர் கோயிலுக்குக்; குடும்பத்துடன் வந்திருக்கிறார்.

ஒரு தடவை அண்ணாவைப் பார்க்க கொழும்பு வந்தபோது குமாரும் அவர் மனைவியும் என்னைக் கடையிற் கண்டதும் தனது வீட்டுக்கு அழைத்தார்கள். மிகவும் சினேகிதமானமனிதர்கள். அங்கு போனதும் மேசையில் கிடந்த பெரிய அல்பமொன்றில் எனது பார்வை பட்டதைக் கண்ட அவர் மனைவி,’ எடுத்துப் பாருங்கள். என்னுடையவரின் பல்கலைக்கழகக் காலத்துப் பழைய படங்களைப் பார்த்தால் உங்கள் கணவருக்கும் எவ்வளவு சினேகிதர்கள் இருந்தார்கள் என்று தெரியும்.’ அவர் அப்பாவித்தனமாகச் சொன்னார்.

அல்பத்தைப் பார்த்தேன் பதறினேன்.உனது அப்பாவுடனிருந்த பழைய சினேகித சினேகிதிகளில் ஒருத்தியுடன் உனது அப்பா இருந்த பல படங்கள் யாரும் சொல்லத் தேவையில்லாத பல கதைகளை விரித்துக் காட்டின. உனது அப்பா அந்தக் காலத்தில் அவரின் மாமாவுடன் வெள்ளவத்தையிலிருந்தார் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். ஆல்பத்திலிருந்த பல படங்கள் சினேகிதர் குழாமுடன் வெள்ளவத்தை, தெகிவளைக் கடற்கரையிலெடுக்கப் பட்டவை. ஒருசிலருக்கு இருந்த காதலை அவர்களுடன் இணைந்திருந்தவர்களுடன் பார்த்தபோது தெரிந்தது. குமாரும் ஒரு பெண்ணுடன் மிகவும் நெருக்கமாக நின்றிருந்தார் குமாரின் மனைவிக்கு இதெல்லாம் தெரியுமா, அல்லது வேண்டுமென்றே எனக்கு அந்த அல்பத்தைத் தந்தாரா என்ற எனக்குப் புரியாது.

உணர்வுகளைக் காட்டிக் கொள்ளாமல்,குமாரிடம் உனது அப்பாவின் பழைய சினேகிதர்களைப் பற்றிச் சாடையாக அவளிடம் கேட்டபோது அவளும் எனது பக்கத்திலமர்ந்து கொண்டு அல்பத்தைப் பார்க்கத் தொடங்கினார்.

எனது கணவருடன் இருந்த பெண்ணைக் காட்டி,’ம்ம் இதைப் பார்த்தாயா, இந்தப் பெண் சித்திரா என்று பெயர் இவர் சொன்னார்.ஓ இந்தப் பெண் உங்களவரின் யுனிவர்சிட்டி கேர்ள் பிரண்ட். 83ம் ஆண்டு கலவரத்தில் இறந்து விட்டாளோ தெரியாது.இவளுக்கு என்ன நடந்தது என்ற யாருக்கும் தெரியாதாம்?’

அவள் காட்டிய படம் என்னுடையவருடனிருந்த பெண்ணின் படம். அவள் பெயர் சித்திராவா?

எனது ஆச்சரியத்தை நான் யாரிடமும் காட்டிக் கொள்ளவில்லை. எனக்குத் தெரிந்த தகவலின்படி அவள் அந்தஸ்தில் உயர்ந்த ஒருத்தரைக் கல்யாணம் செய்துகொண்டு வெளிநாடு போய்விட்டாள். அவளுடன் என்னவர் வாழ்ந்த காதல் வாழ்க்கையை மறக்கத்தான் அவர் ஒரேயடியாகக் கொழும்புக்கு வருவதைத் தவிர்க்கிறார் என்று இதுவரை நம்பிக் கொண்டிருந்தேன். இதுபற்றிக் கேட்க என்னவரையும் அவளையும் தெரிந்த குமாரைத் தவிர யாரும் கிடையாது.

அப்படி என்றால் அவளுக்கு என்னதான் நடந்தது? திருமணமாகி வெளிநாடு போயிருந்தால் ஒரு சிறு தகவலும் தெரியாமல் எங்கே வாழ்கிறாள்?

அதன் பின் உனது அப்பா ஏன் முகநூலில் எந்த நேரமும் தனது முகத்தைப் புதைத்துக் கொண்டிருக்கிறார் என்ற எனது ஆதங்கத்துக்குப் பதில் தெரிந்தது போலிருந்தது. தனது பழைய காதலை மறக்க இப்போது ஒரு புதிய உலக நண்பர்களைத் தேடிக்கொண்டு முகநூலில் தன்னை மறக்கிறரா?

அல்லது அவள் எங்கிருக்கிறாள், எப்படிவாழ்கிறாள் என்பதையறியத்தான் தனக்குத் தெரிந்த பலருடன் உலகம் பரந்த விதத்தில் உறவாடிக் கொண்டிருக்கிறாரா எனக்குத் தெரியாது.

அல்லது அவள் எங்கிருந்தாலும் இன்றும் எனது மனதில் வாழ்பவள் என்பதைத் தனக்குத் தானே உறுதி செய்துகொள்ள முகநூலில் அவளை அல்லது அவள் பற்றித் தேடிக் கொண்டிருக்கிறாரா

அந்தஸ்துக்காகத் தன்னை நிராகரித்தவள் எப்படி வாழ்கிறாள் என்பதையறியும் வெறியா எனக்குத் தெரியாது.

அவருக்குத் தெரிந்தவர்கள் யாரும், சித்திரா இறந்து விட்டதையோ அல்லது பலியாகிக் காணாமற் போனவர்களில் ஒருத்தியாகி விட்டாள் என்பதையே இவர் தெரிந்து கொள்ளக் கூடாது என்பதற்காகத்தான் அவள் திருமணமாகி வெளிநாடு போய்விட்டாள் என்ற கதையை இவருக்குச் சொன்னார்களோ தெரியாது.

எங்களுக்குள் இருந்த இனம் தெரியாத தூரம் நீ பிறந்ததும் கொஞ்சம் குறைந்தது.

எனது மனைவி, எனது குழந்தை, எனது வாழ்க்கை என்ற சந்தோசம் உனது அப்பா முகத்திற் தெரியத் தெரியத் தொடங்கியது.ஆனால் எனது அப்பா செல்லடி அடிபட்டு இறந்தபின் அம்மா எங்களுடன் இருக்க வந்தார். அதன் பின் அவர் பழையபடி விலகத் தொடங்கினார். அவரின் குடும்பத்தினர் பலர் போரின் காரணமாக வெளிநாடு சென்று விட்டார்கள். சொந்தம் என்று சொல்லிக் கொள்ள அவரின் தங்கச்சி மட்டும்தான் இருக்கிறாள்.அவளின் மகன் இயக்கமொன்றுடன் சேர்ந்து தமிழரின் விடுதலைக்குப் போராடச் சென்று இறந்து விட்டான்.

அவரைப் பொறுத்தவரையில் நீ ஒருத்திதான் அவரின் வாழ்க்கையின் முக்கியம். கண்களுக்குள் வைத்துப் பார்ப்பதுபோல் உன்னில் கவனமாகவிருந்தார்.

அதுதான்; நீ காதல் கல்யாணம் செய்ய முடிவு கட்டியபோது,அவர் அதை விரும்பவில்லை. ஏன் அப்படிப் பிடிவாதமாகவிருக்கிறீர்கள்’; என்ற நான் முணுமுணுத்தபோது,’எனது ஒரே ஒரு மகளைக் காதல் சொல்லி யாரும் ஏமாற்றி விடக் கூடாது’ என்றார். அப்படி அவர் சொன்னபோது விம்மியழுதுவிட்டார்.

”நான் இரவு பகலாக உழைக்கிறேன் தெரியுமா,எனது மகளுக்கு என்னால் முடிந்த வசதிகளைச் செய்து கொடுக்கத்தான் இப்படி அல்லும் பகலும் பாடுபடுகிறேன்’ என்றார்.

அவர் துயருக்கு அவரின் பழைய காதலியின் நிராகரிப்புத்தான் காரணமென்று குமார் வீட்டில் பழைய அல்பத்தைப் பார்த்தவுடன்தான் தெரிந்தது. ஆனால் அவளையே நினைத்துக் கொண்டு அவருக்கொரு மனைவியிருக்கிறாள், அவளுக்கும் சாதாரண பெண்களுக்கிருக்கும் ஆசை அபிலாசைகளிருக்குமென்பதை அவர் மறந்து விட்டதாகத்தான் நான் உணர்கிறேன்.’

அம்மாவின் அழுகைக்கு,துயரத்திற்கு ஆறுதல் சொல்ல எனக்கு வார்த்தைகளில்லை.

– 5.8.18

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *