முகத்திரை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 19, 2024
பார்வையிட்டோர்: 211 
 
 

(1984 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மூன்று தினங்களாக விடாத மழை!

மேகங்கள் கருமை சூழ்ந்து குட்டை குளங்களெல்லாம் நீர் நிறைந்து, இயற்கை எழில் அழிந்து, கிராமம் விதவைச் சோகத்தில், பொழிவிழந்து காட்சி தருகிறது. குடிசைக்குள்ளி ருந்து தலையை நீட்டி, விரக்தியோடு ஆகாயத்தை வெறித்துப் பார்த்தான் ரபீக்.

‘யா அல்லாஹ்! இண்டைக்கும் இந்த பாழாய்ப் போன மழ வுடாது போல….. ம்…!’ மனம் சுடுகாட்டு நெருப்பாய் எரிந்து கனன்றது. மூன்று நாட்களாய் அந்த வீட்டு அடுப்பே எரியாத நிலையினை நினைக்கையில் மனம் மட்டுமல்ல, வயிறும் எரிந்தது. அறியாப் பிஞ்சுகள் நான்கும், மூலைக் கொன்றாய், பசிக் கொடுமையினால், வாடிச் சோர்ந்து கிடந்தன. தொடர்ந்து பெய்த மழையினால், அன்றாடம் கூலித்தொழில் செய்து பிழைக்கும் ரபீக்கின் குடும்பம் ஆகாரத்தைக் கண்டு சில தினங்களாகி விட்டன. குமைந்து கனக்கும் எண்ணச் சுமைகளின் அழுத்தத்தில், நேற்று இரவு நடந்த நிகழ்ச்சி வேறு மனதைக் குடைந்தது.

வாப்பா சுல்தான் ஹாஜியார் ஊரில் பெரும் புள்ளி. சகல வசதிகளோடும் – பக்கத்து வீடுதான். இருந்தென்ன? ஏட்டுச் சுரக்காய் கறிக்கு உதவுமா?’ கறுமிகள் யாராயிருந்து யாருக்கு என்ன லாபம்?

பசிக்கொடுமையில் வாடும் பிள்ளைகளுக்கு ஏதாவது வாங்கி அவித்துக் கொடுக்கலாம் என்ற நப்பாசையில் தகப்பனி டம் ஒரு பத்து ரூபா கைமாற்றாகக் கேட்டுப் பார்த்தான். கருணையே இல்லாத வாப்பா கையை விரித்ததை நினைக்கை யில் இந்த உலகத்தின் மீதே அசாத்தியமான வெறுப்பு மேலிட் டது அவனுக்கு. இன்று பொழுது சாய்வதற்குள் அந்தப் பிஞ்சுகள் ஆகாரத்தைக் காணாத பட்சத்தில், பசியின் உக்ரத் தால் ஒரு மையத்து விழுந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. இவற்றை எல்லாம் எண்ணி ஏங்கி மனம் பேதலித்துத் தவித்தான். துயரம் கிளந்தெழ, விழிகளில் நீர் முட்டியது.

கண்களைத் துடைத்துக் கொண்டு நிமிர்வதற்குள் பக்கத்து விட்டு மேசன்பாஸ், சரூக்கின் குரல் உச்சஸ்தாயியில் கேட்டது. ‘தம்பி ரபீக்!… இண்டைக்கும் மழ வுடுற மாதிரி இல்ல! அத்ப் பார்த்து வுட்டுக்குள்ளேயே இருந்தா கூரையப் பிச்சுட்டு வந்து டுமா? பொடியனையும் கூட்டுக் கொண்டு வா! ஒரு வேல செய்வம்!’

சரூக்கின் பேச்சிலிருந்து இன்றைய போஜனத்திற்கு ஏதோ வழிபிறக்கப் போகிறது என்ற நம்பிக்கை இவனில் ஊற்றெ டுக்க உற்சாகமாய் வெளியே வந்தான். குழந்தைகள் துயரம் மறந்து மகிழ்ச்சி முகங்களுடன் விளையாடும் காட்சி இவன் மனக் கண்ணில் நிழலாடின. அடுத்த கணம்,

திமு – திமுவென வளர்ந்திருந்த சரூக்கின் தோட்டத்து மரவள்ளிச் செடிகளை ஆர்வத்தோடு மூவரும் பிடுங்கத் தொடங்கினர். பென்னம் பெரிய கிழங்குகள் குவிவதைக் கண்ட ரபீக்கின் நெஞ்சில் சுமைகள் மெல்ல மெல்ல நீங்குவ தைப் போன்ற உணர்வு மேலிட்டது. கிழங்கு பிடுங்கும் பணி மும்முரமாகிக் கொண்டிருக்கையில், ரபீக்கை அவசரமாக வரும்படி வாப்பா சுல்தான் ஹாஜியார் ஆள் அனுப்பியிருந் தார். வெறுப்பை சுமந்தவாறு அவர் முன்னிலையில் போய் நின்றான் இவன்.

கறுத்த குள்ளமான உருவம். மக்கத்துத் தொப்பி எப்போ தும் தலையை அலங்கரிக்கும். தொழுது தழும்பேறிய அகன்ற நெற்றி. அதற்குக் கீழே சோபையிழந்து துடிக்கும் பேராசை நிறைந்த விழிகள். கறை படிந்த ஒழுங்கற்ற பார்வைகளால் மகனைப் பார்த்து ஒரு செயற்கை புன்னகையை உதிர்த்து விட்டு, ஏதோ சொல்ல வாயெடுத்தார். அடுக்களையிலிருந்து கோழிக்கறி, நெய் சோறு புரியாணி வாசம் மூக்கைத் துளைத்தது.

‘மகன்! இண்டைக்கு எங்கட பள்ளிவாசலுக்கு சக்கரியா மௌலானா அவங்க வந்தீக்கியாங்க! ரண்டு நாளைக்கி மிச்சம் இங்க தங்க மாட்டாங்க! அவங்களுக்கு சாப்பாடு கொடுக்கிய துக்கு ஊரில் பணக்காரங்க எல்லாம் போட்டி. நான் மிச்சம் கஷ்டப்பட்டு பகலைக்கு சாப்பாடு ஒழுங்கு பண்ணியிருக்கியன்.’

நீ மகன்களை கூட்டிக் கொண்டு சரியா பதினொரு மணிக்கு வந்துடு. எல்லாருமா பெயித்து சாப்பாட்ட குடுத் திட்டு வருவோம் சரியா?’ சுட்டெரிக்கும் விழிகளால், இவன் ஹாஜியாரை வெறித்துப் பார்த்தான். அவரது வார்த்தைகளில் இருக்கும் வாஞ்சை உள்ளத்தில் இல்லை என்பதை, கடந்த முப்பது வருடங்களாக அவன் அறிந்த அனுபவபூர்வமான உண்மை.

‘மவுலானாவுக்கு சாப்பாடு போட பணக்காரங்க போட்டி! சாப்பாட்டுக்கு வழியில்லாத எத்தனை ஏழைகள் இந்த கிராமத் தில சாகத் துடிக்கிதுகள். இவர்களை நினைத்துக்கூட பார்க்க இந்த ஊர் பிரபலங்களுக்கு ஏது நேரம்? மவ்லானாவை மகானாக்கி மயங்கும் இவர்கள், தங்கள் சுயநலத்திற்காகத்தான், வியாபார முன்னேற்றம், நோய்நொடி, வீட்டு பரக்கத், ஆகிய சங்கதிகள் மவ்லானாவின் – ‘அரபி – இஷ்ம்’ மூலமாக வெற்றியைத் தரும் என்பது இவர்களது அசைக்க முடியாத நம்பிக்கை. இந்த அறிவுச் சூனியங்களை நினைத்து அசூயை கலந்த நெடுமூச்சொன்றை உதிர்த்தான் இவன்.

குறித்த நேரத்தில் சுல்தான் ஹாஜியார் தலைமையில் ஒரு குட்டி ஊர்வலமொன்று கன்றுத் தோட்டத்தினூடாக, பள்ளிவா சலை நோக்கிப் புறப்பட்டது. நெய் சோறு, கோழிக்கறி, வட்டலாப்பம், பழங்கள் அடங்கிய பாத்திரங்கள், ரபீக் கோஷ் டியினரின் தோள்களில் கனத்தன. அவற்றின் மயக்கும் வாசனை பசித்த வயிறுகளை ஏக்கமுறச் செய்தன. மவ்லானா பள்ளிவாசல் ஊர் பெரியவர்களோடு மிக நெருக்கமாக உரை யாடிக் கொண்டிருந்தார். ஹாஜியாரின் சலாத்தை தொடர்ந்து அனைவரும் மகிழ்ச்சியாக பதில் சலாம் உரைத்தார்கள். சாப் பாட்டுப் பாத்திரங்கள் வரிசையாக வைக்கப்பட்டன. நல்ல தொரு புண்ய காரியம் நிறைவேறப் போகும் திருப்தி ஹாஜியாருக்கு. அடுத்த வினாடி அடலேறென ஒலித்த குரல் கேட்டு யாவரும் சித்தம் கலங்கினர்.

‘மவ்லானா! நான் கேட்கிற கேள்விக்கு தயவு செய்து பதில் தாங்க! தனது மகனின் பிள்ளைகள் மூன்று நாளா சாப்பாடு இல்லாம தவிக்கிற போது, அத நல்லா அறிஞ்சும் அசட்டை யாக இருந்து கொண்டு, பேரும் புகழுக்குமாக மவ்லானாவுக்கு கோழிக்கறி சாப்பாடு போட எந்தக் குர்ஆனில் சொல்லப்பட்டிருக்கு. ‘தன் அண்டை வீட்டான் பசியால் வாட எவன் வயிறு முட்ட உண்டு களிக்கிறானோ அவன் என்னைச் சேர்ந்தவனல்ல!’ என்று நபிமணி நாயகம் சொல்லியிருக்கிறார்களே! தன் சொந்தப் பிள்ளை ஏழை என்ற காரணத்தால், அவனைப் புறக்கணிச்சு, பட்டினி போட்டு புகழுக்காக இப்படி ஒரு காரியம் செய்றதை உங்களால் ஏற்றுக் கொள்ள முடிகிறது?’

ரபீக் நியாயத்தை நெஞ்சு நிமிர்த்தி தைரியமாகக் கேட்டான். கூடியிருந்தவர்களின் முகத்தில் அசடு வழிந்தது. ஹாஜியாரின் உடல் அவமானத்தால் குறுகியது. மவ்லானாவின் நெற்றியில் அரும்பிய வியர்வையை கைக்குட்டையால், துடைத்தவாறு அவர் மிக நிதானமாகச் சொன்னார்.

‘அல்லாஹ்! நம் அனைவரையும் மன்னிப்பானாக! ஹாஜி யார் உங்கள் மகன் சொல்வது மறுக்கமுடியாத உண்மை. தயவு செய்து இந்த சாப்பாட்டை உங்க மகனுக்கும் பேரப்பிள்ளைகளுக்கும் கொடுத்திடுங்க. இதை நான் ஏற்க மாட்டேன்!’ என்றார்.

‘அவசியமில்லை. நல்ல மஞ்சக்கா கிழங்கு புடுங்கி வைச்சிருக்கேன். அது எங்கட பசியை ஆத்தும்!.’ என்று கூறிவிட்டு பிள்ளைகளோடு வெடுக்கெனப் புறப்பட்டான் ரபீக்.

– மல்லிகை ஜனவரி 1984 – மீறல்கள், மல்லிகைப் பந்தல் வெளியீடு, முதற்பதிப்பு: நவம்பர் 1996

பேராசிரியர் எம்.எஸ்.எம் அனஸ் - 12 May 2013 மு.பஷீரின் ‘இது நித்தியம்’ என்ற சிறுகதைத் தொகுதி அவரது நாலாவது சிறுகதைத் தொகுதியாக அவரது சொந்த கல்ஒழுவைக் கிராமத்தில் வெளியிடப்படுவது இலக்கிய உலகுக்கும் கல்ஒழுவைக் கிராமத்திற்கும் மறக்க முடியாத வரலாற்று நிகழ்வாகும். ஏற்கனவே மீறல்கள் (1996), தலைமுறை இடைவெளி (2003), நிஜங்களின் வலி (2005) என்று ஒரு சீரான இடைவெளியில் அவரது தொகுப்புக்கள் வெளிவந்து 4வது வெளியீடாக ‘இது நித்தியம்’…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *