ஆஸ்பத்திரியில் இருந்து அம்மாவை மைலாப்பூரில் உள்ள தன் வீட்டு க்கு அழைத்துச் சென்றான் ராகவன். 25 நாள் அடித்த காய்ச்சலில் எலும்பும் தோலுமாய் காட்சியளித்தாள் விசாலம்.
மெல்ல காரிலிருந்து இறக்கி அம்மாவைக் கைத்தாங்கலாக வீட்டுக்குள் அழைத்துச் சென்றான். மருமகள் ஊர்மிளா வலுவில் வரவழைத்துக் கொண்ட புன்னகையுடன “வாங்க அத்தை! உடம்பு பரவாயில்லீங்ளா?” விசாரித்தாள்.
“பரவாயில்லம்மா!” அப்படியே மெதுவாக சோஃபாவில் அமர்ந்துகொண்டாள் விசாலம். லக்கேஜை தரையில் வைத்த ராகவன், “இப்போ பால் குடிம்மா. குளிச்சதுக்கப்புறம் சூடா இட்லி, காரமில்லாத சட்னியும் சாப்பிடலாம்” என்றான். மருமகள் தந்த பாலைக் குடித்த விசாலம், “ராகவா! ஆஸ்பத்திரியிலேயே கேட்கணும்ன்னு நினைச்சுக்கிட்டிருந்தேன். முதல்ல கொஞ்ச நாள் உங்கண்ணனும் அண்ணியும் வந்து என்னைப் பார்த்தாங்க. அதுக்கப்புறம் வரவேயில்லியே…ஏன்பா?”
சட்டென மனைவியை ஒரு தடவை பார்த்தவன், “அதுவா…” மென்று விழுங்கியபடி, “ஆபிஸ்ல வேலை ஜாஸ்தியா இருந்திருக்கும்….” கூறி சமாளித்தான்.
அன்று அந்த மாதத்தின் முதல் தேதி. கணவரின் வாக்குப்படி விசாலம் மூத்தவன் சரவணன் வீட்டிற்குச் செல்லவேண்டும். கணபதி இறக்கும் தருவாயில், “இதோ பாருங்கப்பா! எந்தவிதமான சூழ்நிலையிலும், மாதா மாதம் உங்கம்மாவை மாறி மாறி நீங்கள் ரெண்டு பேரும் வைத்துக்கொள்ள வேண்டும்” என்ற வாக்குறுதியை தன் இரு மகன்களிடமும் பெற்றுக்கொண்ட பிறகு கண் மூடினார். இரண்டு வருடமாக அதன்படி செயல்படுகின்றனர் மூத்தவனும் இளையவனும்.
விசாலம் குளித்து முடித்து டிஃபன் சாப்பிட்டு முடித்தாள். அடித்த காய்ச்சலில் உடலில் உள்ள சக்தியெல்லாம் காணாமல் போய் மிகவும் ஆயாசமாக இருந்தது.
செய்தியறிந்து திருவல்லிக்கேணியில் இருக்கும் சரவணன் ராகவன் வீட்டுக்கு வந்தான். அவன் நடையில் தொய்வு. முகம் பார்க்கச் சகிக்காமல் இறுகிப்போயிருந்தது.
“எப்படிம்மா இருக்கே?” விசாரித்த மகனை உற்று நோக்கிய விசாலம், “அது சரி. நீ ஏன் ஒரு மாதிரியா இருக்கே, உடம்பு சரியில்லையா?”
“அதெல்லாம் ஒண்ணுமில்ல…சரி..கிளம்பலாம்!” அம்மாவின் லக்கேஜை எடுத்துக் கொண்டவன், இருவரிடமும் சொல்லிக்கொண்டு சரவணன் கிளம்ப , மெல்ல எழுந்த விசாலம், “ராகவா! ஸ்கூல்லேர்ந்து திரும்பி வரும் உன் பிள்ளை ராஜாக்கிட்ட சொல்லிடுப்பா!” எனக் கூறிவிட்டு கிளம்பினாள். ராகவன் அம்மாவைக் கைத்தாங்கலாக அழைத்துச் சென்று காரில் உட்கார வைத்தான். கார் கிளம்பியது. சிறிது தூரம் வரை அம்மாவும் மகனும் பேசிக் கொள்ளவில்லை.
கல்யாணி ஆஸ்பத்திரி எதிரில் காரை நிறுத்திய சரவணன்,
“ஏம்பா இங்க காரை நிறுத்திட்டே? யாரையாவது பார்க்கப் போறயா?”
சட்டென குலுங்கி அழத்தொடங்கினான் சரவணன். விசாலம் திகைத்தாள். “என்னாச்சு சரவணா; ஏன் இப்படி அழறே?”
அழுகையை நிறுத்தியவன், “அம்மா! மனசை திடப்படுத்திக்கோ..அதிர்ச்சியான விஷயம் சொல்லப் போறேன். வந்து நம்ம முரளி தவறிப்போயிட்டாம்மா!” குலுங்கி அழ ஆரம்பித்தான்.
அதிர்ச்சியுற்ற விசாலம், “ஐயோ…என்னப்பா ஆச்சு முரளிக்கு?” பெருங்குரல் எடுத்து அழ ஆரம்பித்தாள். அப்போதுதான், சரவணன் ஆஸ்பத்திருக்கு வராததன் காரணம் புரிந்தது. அதோடு, ராகவனும் ஊர்மிளாவும் சுரத்தின்றி செயல்பட்டதிலும் நியாயம் தெரிந்தது.
அழுகையை நிறுத்தி சுதாரித்துக் கொண்ட சரவணன், “நீ அட்மிட் ஆன அடுத்த வாரமே முரளிக்கு காய்ச்சல் கண்டது. மருந்து , மாத்திரை சாப்பிட்டும் குணமாகல்லே. அட்மிட் பண்ணினோம். பிளட் டெஸ்ட் எடுத்துப் பார்த்ததில் டெங்கு ஜூரம்னு உறுதியாயிடிச்சு..தேறல்ல…போய்ச் சேர்ந்துட்டான்” மீண்டும் அழுதான்.
“அட அநியாயமே! 70 வயசான நான் டைஃபாய்டுலேர்ந்து பிழைச்சுட்டேன். குழந்தை பிழைக்கல்லே… ஆண்டவா!” தன் நெற்றியில் அறைந்துகொண்டு அழுதாள். மனக்கண்ணில் சட்டென அந்தக் காட்சி தோன்றியது.
போனமாதம், ஒண்ணாம் தேதி, தன் டெர்ன்படி அம்மாவைக் கூட்டிச்செல்ல ராகவன், சரவணன் வீட்டிற்கு வந்திருந்தான் .
புறப்படும்போது, என்றுமில்லாத திருநாளாக, முரளி விசாலத்தைக் கட்டிப்பிடித்தபடி முத்த மழையாய் பொழிந்தான். விசாலமும் சிரித்தபடி தன் பேரனை அணைத்துக்கொண்டாள்.
புறப்படும்போது, ஹாலில் இருந்தபடியே, “பாட்டி போறியா… சரி போய் வா.” என்றான்.
வழக்கம்போல் வெளியே வந்து டாடா சொல்லவில்லை. இந்த ஒரு விஷயமே விசாலம் மனதை சில நாள் நெருடிக்கொண்டிருந்தது.
‘கடைசி தடவையாக தனக்கு விடை கொடுப்பதற்காக அப்படி நடந்துகொண்டானோ’ நினைத்தாள். நினைப்பு நெருப்பாய்ச் சுட வெடித்தழுதாள் விசாலம்.
“அம்மா…ப்ளீஸ் கண்ட்ரோல் பண்ணிக்கோம்மா…”
முந்தானையால் தன் கண்களைத் துடைத்துக்கொண்டாள். கார் கிளம்பியது.
“அத்தை வாங்க!” நுழைந்த கையோடு வரவேற்ற மருமகள் நர்மதாவின் கைகளைப் பற்றி, மீண்டும் ஓ வென குரலெடுத்து அழுத விசாலம், “கிழவி நான் ஜூரத்துல.விழுந்து எழுந்துட்டேன்..குழந்தையை பறிகொடுத்துட்டு இப்படி நிக்குறுயே…”
அருகில் வந்த சரவணன், “அம்மா! இனி அழுது ஒரு பிரயோஜனமும் இல்ல..வீணாக உங்க ரெண்டு பேரோட ஹெல்த்துதான் பாழாகும்!”
“ஏன்..நர்மதாவுக்கென்ன?”
“அது…வந்து….நாள் தள்ளிப்போயிருக்கம்மா நர்மதாவுக்கு!”
தேனாய் காதில் விழும் வார்த்தைகள்! ஆனால் அனுபவிக்கும் நிலையில் தற்போது இல்லை. ஒரு உயிர் போயிற்று. இன்னொன்று வர இருக்கிறது.
தற்செயலாக விசாலம் பார்வை மேஜை பக்கம் சென்றது. நர்மதாவிடமிருந்து விலகி மேஜை அருகில் சென்றாள். மேஜை மீது வைக்கப்பட்டிருந்த மாலையுடன் சேர்த்த பெரிய சைஸ் புகைப்படத்தில் முரளி சிரித்துக் கொண்டிருந்தான்.
‘என்ன பாட்டி! எட்டு வயசுக்குள்ளயே நான் போயிட்டேன்னு பார்க்கறயா! கவலைப்படாதே. நான் திரும்பவும் எங்கம்மா வயத்தில் வந்து பிறப்பேன். உன் பேரனா இருப்பேன்.’ புகைப்படத்தில் இருக்கும் முரளி கூறுவது போல் பட, துக்கம் துக்கமாக வந்தது விசாலத்திற்கு.