மீண்டும் அந்த அக்டோபர்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 24, 2024
பார்வையிட்டோர்: 1,257 
 
 

“மணி ஆச்சு…மணி ஆச்சு…சீக்கிரம்…உங்க பெரியம்மா பெரியப்பா எல்லாருமே வந்துருவாங்க. பாரு… இப்போவே மணி நாலு ஆகுது” எனப் புலம்பிக் கொண்டே இருக்கும் பொழுது திடீரென்று “இலக்கியா” என்ற அம்மாவின் குரல் வீடே ஒலித்தது. “இன்னும் என்ன செஞ்சிட்டு இருக்க? உன் அக்காகிட்ட சொல்லி பின்னாடி கழுவ சொன்னனே கழுவிருச்சா? நீ என்ன செய்ற? முதல முன்னுக்கு வாசல சுத்தம் பண்ணியா?” என்ற அம்மாவின் குரலும் பதற்றமும் நொடிக்கு நொடி கூடிக் கொண்டே இருந்தது.

அந்த சமயம் அப்பா திடீரென்று அருகே வந்து ஒரு கட்டணச் சீட்டை அம்மாவிடம் நீட்டினார். “இந்தா பார்வதி நான் கேக் சொல்லிட்ட…இது கேக்கோட ரிசீட்…உன் செல்ல மகனுக்கு இன்னிக்கு ஏழு மணிக்குதா வேல முடியுமாம். இன்னிக்காவது சீக்கிரம் வரேனு சொன்னானே… நேத்து அவன்கிட்ட பேசிட்டு இருக்கும்போது கேட்டுடேன். அப்போ அவன் வர கண்டிப்பா மணி எட்டு ஆகிடும்…ம்ம்ம்ம் சரியா இருக்கும்” என்று அப்பா அம்மாவிடம் முனுமுனுத்தார். “அத அப்படியே இலக்கியா கிட்ட குடுங்க” என்று அப்பாவின் முகத்தைப் பார்த்தும் பார்க்காமலே அம்மா பதிலளித்தார்.

“அண்ணனுக்கு பெரியம்மா பெரியப்பானா ரொம்ப புடிக்கும்ல…அவங்க பிள்ளைங்கனா இன்னும் பிடிக்கும்…ஜோலியா விளையாடிட்டு இருப்பா…அவங்கல பார்த்தா கண்டிப்பா சந்தோஷம் படுவான். ஹ்ம்ம்ம்… என்ன பாத்தா வெறுப்பு தான் வரும். அண்ணனுக்குத்தான் என்ன பிடிக்காதே…அப்போ இன்னிக்கு வீடே கலக்கட்ட போது” என்ற ஆழ்ந்த சிந்தனையில் இருக்கும்போது மீண்டும் ஒரு கனத்த குரல்

“இலக்கியா! நானும் உன் அப்பாவும் கடைக்கு போயிட்டு வரோ, வேலைலா முடிச்சிடு” என்று கூறி அம்மா சென்று விட்டார்.

அன்றைய நாள் வீடே ஆரவாரமாகவும் பரபரப்பாகவும் இருந்த நாளை எண்ணிய நான் இவையெல்லாம் முடிந்துப் போன அழகான தருணங்கள். இந்த நினைவுகளுக்குள்ளே நாங்கள் அனைவரும் அந்த நாளில் எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தோம் என்று நினைக்க வைத்தது.

அன்று 8 அக்டோபர் மாலை மணி 6. சூரியன் மறைந்து வெண்ணிலாவின் வருகைக்கு ஏங்கிக் கொண்டிருக்கும் நேரம். எப்பொழுதும் போல் அமைதியாக இருக்கும் அப்பா அன்றோ என்னை அழைத்தார். “மா…உன் அண்ணனுக்கு இதுவரைக்கும் எதுவுமே செஞ்சது இல்ல…இன்னைக்கு அவனோட பிறந்தநாளு… நானே போய் கேக் எல்லா வாங்கி வச்சேனு தெரிஞ்சா கண்டிப்பா சந்தோஷம் படுவான்…என்னப் பாத்தாலே என்னெனு தெரியல சரியா பேசவும் மாட்டான். எதாவது வேணுமானு கேட்டாலும் எனக்கு வேணா! தங்கச்சிங்களுக்கு வாங்கி குடுங்கனு சொல்லுவான்” என்று கூறினார். அந்த ஒரு நொடி “என்னோட அண்ணன் எப்போவுமே பெஸ்ட்ல” என்று நினைத்ததும் கண்ணீர் மல்க அப்பாவைப் பார்த்தேன்.

“அவனோட அந்த ரெண்டு கூட்டாளி கிட்ட சொல்லியாச்சா? கனகேஸ் அப்புற பிரகாஷ்…இவங்க இல்லனா அப்புற அவனுக்கு ஒரு கை ஒடஞ்ச மாதிரி ஆயிடும். ஏனா… அவன் கால் இனிமேல இப்படிதான் இருக்கும்னு தெரிஞ்சும் ஆறுதலுக்கு கூட்டாளிங்க இல்லாம போன நேரத்துல அவங்க ரெண்டு பேரு மட்டும் தானே சின்ன வயசுல கூடவே இருந்து பாத்துக்கிட்டாங்க” என்று வினவினார்.

ஆம், தனது பத்து வயதில் ஒரு விபத்தில் அண்ணனுடைய வலது கால் இனிமேல் வளைந்து தான் இருக்கும் என்று டாக்டர் கூறிய அனைத்தும் அப்பா ஒவ்வொரு நாளும் எங்களிடம் கூறி “அவன் வாழ்க்கை என்ன ஆகபோகுதோ”? என்று அண்ணனைப் பற்றி நினைத்து கவலைப்படுவார். அதனால் அண்ணன் நடப்பதைப் பார்க்கும்போதெல்லாம் என் நெஞ்சம் பாரமாகவே இருக்கும்.

அவ்வாறு ஒரு நாள் “நான் இந்த வீட்டிற்கு மூத்தப் பிள்ள…நான் தான் எல்லாமே பாத்துக்கனும்…இந்த வேலை இல்லைனா என்ன? அடுத்த வேலை பாத்துக்கலாம். கால் தான் இப்படி இருக்கு! ஆனா மனசுல தெம்பு இருக்குல…நான் கார்ட் வேலைக்கு சேர்ந்தாவது உழைக்கலாம்னு இருக்க” என்று கூறி அவ்வேலையில் சேர்ந்து தனது இருபத்து ஆறு வயது வரையிலும் உழைத்து வந்தான்.

“இலக்கியா நானும் பாக்குற இதுவரைக்கும் நீ உன் அண்ணன் கிட்ட பேசவே இல்ல…என்னதான் நெனச்சுட்டு இருக்க நீ? அந்த பிரச்சனையை இன்னும் மனசுல வச்சிட்டு இருக்கியா? உன் அண்ணன் தான் மனசு இறங்கி வரல! நீயாச்சும் மனசு இறங்கி வரலாம்ல…எப்போதான் போய் பேச போற? பேசாம இருக்காத சரியா?” என்று அப்பா அதட்டினார். என் மௌனத்திற்கு மறுபுறம் என்ன பேசுவது என்று தெரியாமல் நின்று கொண்டிருந்தேன்.

அப்பாவின் அதட்டலுக்கு அன்று நான் போய் பேசிருக்கலாம். என் தவறு தான். “இலக்கியா உன் அண்ணன் சொல்றேன்! சொன்னா கேளு சரியா! அவன் சரியில்ல..எத்தன தடவதா உன்கிட்ட சொல்றது…என்னதா கூட்டாளியா இருந்தாலும் ஒரு அளவாதா பழகனும்…அவன் ஆம்பல பையன். நீ ரொம்ப அவன்கூட பழகுற. எப்போ பாரு போன் கையுமா தா இருக்குற”.

“அண்ணா! அவன் என் கூட்டாளி…அவன் எப்படினு எனக்கு தெரியாதா? உன் வேலை என்னமோ அத பாரு! சும்மா என் விஷயத்துல மூக்க நொலைக்காத! நீ எதுக்கு என்னோட விஷயத்துலா அம்மாகிட்ட சொல்ற?” என்றேன்.

“என்ன நீ ரொம்ப கூட கூட பேசுற? யாரோ ஒருத்தன் கூட்டாளினு சொல்லிக்கிட்டு என்கிட்ட வாய் பேசுற?” பளார் என்ற ஒரு சத்தம். கன்னம் பழுத்தது.

அன்று கையில் வைத்திருந்த கைத்தொலைபேசி கீழே விழுந்து உடைந்தது. இன்று வரையிலும் வேறொரு புதியவை வாங்கவில்லை.

“அறிவு இருக்கா? நீ யாரு என் விஷயத்துல தலையிடுர? போனை வேற உடைச்சிட்ட சந்தோஷமா? எங்கையாவது போய்டு! கண்ணு முன்னாடி நிக்காத! போ இங்கிருந்து!” என்று திட்டித் தீர்த்தேன்.

அன்று என்னவோ நான் மனம் புண்படும்படி பேசியதால்தான் இன்று வரையிலும் என்னிடம் பேசாமல் இருந்தான்.

“நான் பேசுறதுக்கு ரெடியாதான் இருக்கப்பா…அண்ண தான் நான் பேசுனத மனசுல வச்சிட்டு, இன்னுமும் என்கிட்ட பேசாம இருக்கு போல…ஆனா கண்டிப்பா நான் இன்னைக்கு பேசிடுவப்பா…”

“சரி வரட்டும்…பேசிக்கலாம்” என்று என் தோளைத் தட்டியவாறு என்னை சமாதானம் படுத்தினார்.

சில நேரங்களில் அண்ணன் வேலை இடத்தில் இருக்கும்போது அம்மாவின் கைப்பேசியை எடுத்து அண்ணனிடம் பேசுவதற்கு முயற்சித்தாலும் அன்று பேசிய வார்த்தைகள் நினைத்து நினைத்து தடுமாறி நின்றது தான் மிச்சம்.

அன்று இரவு வேலை முடிந்து வீட்டிற்கு அண்ணன் வந்தான். “surprise” என்று வீடே அண்ணனை வரவேற்றது. அதிர்ச்சியிலும் ஆனந்தத்திலும் அவன் மூழ்கியிருந்ததைப் நாங்கள் அனைவரும் பார்த்தோம். அப்பாவும் அம்மாவும் அண்ணனுக்குப் பிடித்த சட்டையை வாங்கி வைத்திருந்தார்கள். ஹ்ம்ம்ம்…என்னமோ தெரியல அன்னிக்குத்தான் அண்ணனோட பிறந்தநாள பெருசா செய்யனும்னு இருந்துச்சு போல. அண்ணன் குளித்து விட்டு அப்பா அம்மா வாங்கிக் கொடுத்த சட்டையை அணிந்து வந்ததைப் பார்த்ததும் ஒரு சின்ன நினைவுகள். வீட்டிலும் அதே சட்டைகள் நிறைய இருக்கிறது.

நானும் என் அக்காவும் அடிக்கடி அதைப் போட்டுக் கொண்டு அண்ணனைப் போல் அம்மாவிடம் நடித்துக் காட்டுவது வழக்கம். அம்மாவோ அதைப் பார்த்து சில நேரங்களில் சிரித்து இரசிப்பார். அன்று வீட்டிற்கு வந்திருந்த எல்லாரிடமும் பேசி மகிழ்ந்தான். என்னிடமோ பேசவில்லை. நான் பேச முன் வந்தும் என் மனதில் ஒரு தயக்கம் அன்று நடந்த காட்சிகள் முன் வந்தது. ஒரு கட்டத்தில் பேச வாய்ப்பு கிடைத்தது. அவனிடம் சென்று நின்றேன். “அண்ணா”! என்ற வார்த்தையை தான் கூற ஆரம்பித்தேன். அவன் பார்த்த பார்வையிலே தெரிந்தது அவன் இன்னும் என்மேல் கோபத்துடன் தான் இருக்கிறான் என்று.

அம்மாவிடம் ஓடிச் சென்று “ம்மா…அண்ணன் இன்னும் என்மேல் கோபத்தில் தான் இருக்கிறான்” என்று கூறி கவலைப்பட்டேன். “சரி விடு! எங்க போயிட போறான்? இங்க தானே இருப்பான். அம்மா அப்பறோ பேசிக்கிறேன்” என்று எனக்கு ஆறுதல் கூறினார். ஆனால், வீட்டில் நடக்கும் வேலைகளையும் வந்தவர்களையும் மும்முரமாகப் பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில் அம்மா அண்ணனிடம் இதைப்பற்றி பேசவே இல்லை. அம்மாவும் பெரியம்மாவும் கடலைப் போடுவதிலே குறியாக இருந்தார்கள். நானும் கடைசி வரை பேசவில்லை. அப்பா எவ்வளவோ முயன்று பார்த்தும் வேண்டாம் என்று மட்டுமே அவனின் வாயிலிருந்து வந்ததே தவிர சரி நான் பேசுகிறேன் என்ற வார்த்தை வரவில்லை. சென்றுவிட்டான். போய்ட்டு வருகிறேன் என்று.

அண்ணன் கார்ட் வேலை தன் நண்பர்களோடு வெளியில் தங்க போகிறான் என்று வீட்டில் கூறிவிட்டு தன் துணிமணிகளை எல்லாம் எடுத்துச் சென்றுவிட்டான். இப்படி ஒரு புறம் அம்மாவின் மடியில் தலைச் சாய்த்து படுத்து கனவுலகில் போன வருட அக்டோபரில் என்னெல்லாம் நடந்தது என்று நினைத்துப் பார்க்க என்னை அறியாமலே கண்களிலிருந்து நீர்க்குடம் நிரம்பி வழிந்துக் கொண்டிருந்தது. திடீரென்று வீடெல்லாம் அலறல் சத்தம்.

“ஐயோ இறைவா இப்படி உன்ன பாக்கவா நான் உன்ன தவம் இருந்து பெத்த…கடவுளே…! இந்த அம்மாவ விட்டுட்டு போரியாடா? உன்ன கூட்டிட்டு போவ வண்டிலா வந்துருச்சு…” என்ற அம்மாவின் அலறல். மறுபக்கம் “போன வருஷம் எப்படிலா சந்தோஷமா இருந்தோம்…இப்படி உன் பொறந்தநாளு அன்னிக்கேவா உனக்கு இப்படி நடக்கனும்?” என்று அப்பாவின் கதறல். திடுக்கிட்டு எழுந்தேன். கற்பனையிலிருந்து கண் விழித்துப் பார்த்தேன்.

இவ்வளவு நேரம் அம்மாவின் மடியில் படுத்து ஆழ்ந்த சிந்தனையில் இருந்தேன் என்ற குழப்பத்தோடு இருந்தபோது, என் தோலில் ஒரு பெரிய பட்டாம்பூச்சி அமர்ந்தது. அமர்ந்த அந்த பட்டாம்பூச்சி பறந்து என் கண் முன்னே இருந்த படத்தின் முன் அமர்ந்தது. அப்பட்டாம்பூச்சி போன வழியில் என் கண்கள் அலைப்பாய்ந்தது. திறுநீரைக் கொண்டு மூன்று விரல்களால் பூசி அதற்கு மேல் ஒரு பெரிய குங்கம பொட்டு. தேங்காய் இரண்டாகப் பிளந்து அதற்கு முன் ஒரு பெரிய அகல்விளக்கு. ஓம் நமச்சிவாய என்ற பாடல் ஒலிக்க, ஏறிட்டுப் பார்த்தேன். அது வேறு யாரும் இல்லை. என் அன்பான அண்ணனின் புகைப்படம். என் தோலில் அமர்ந்திருந்த பட்டாம்பூச்சி என் அண்ணன் படத்தின் மேல் அமர்ந்திருந்ததும் அதுவே என்னிடம் வந்து என்னைப் பார் என்று சொல்வது போல் இருந்தது. கண்ணீர் துளிகள் அவ்ழிய ஆரம்பித்தது.

ஆனால், இம்முறை பெட்டியின் அருகில் நின்று. கடைசி வரை பேச முடியாமலே போனது.

ஆம். இன்று அதே அக்டோபர். அண்ணனின் பிறந்தநாள் இன்று. ஆனால், அண்ணனோ சவப்பெட்டியில். இன்று. கண்ணீர் துளிகள் அடக்கி வைக்க முடியவில்லை. கூடப் பிறந்த அண்ணனாச்சே…எப்படி அழமால் இருப்பது? ஆறு போல் ஓடின. இரண்டு நாட்களாக காய்ச்சலில் இருந்தும் யாரிடமும் கூறாமல் வேலைக்குச் சென்றுவிட்டு முதல் நாள் அன்றிரவு வலிப்பு வந்து மருவத்துவமனையில் சேர்த்தார்கள். இன்று 8 அக்டோபர் விடியக்காலையில் சரியாக நான்கு மணியளவில் அப்பாவின் கைப்பேசி அலறியது. அண்ணனை மருத்துவமனையில் சென்று பார்த்து விட்டு வருகிறேன் என்று கூறிச் சென்ற அப்பா அன்று மரணச் செய்தியைத்தான் கொண்டு வந்தார். “நம்ப சத்தீஷ்…நம்ப சத்தீஷ்…. எல்லாரையும் விட்டுட்டு போய்ட்டான்” என்று கதறினார். “ஐயோ என்ன சொல்றீங்க அப்பா?” என்ற அதிர்ச்சியில் நான். கடவுளுக்கு அண்ணனை மிகவும் பிடித்துவிட்டதால் என்னமோ சீக்கிரமாகவே அழைத்துச் சென்றுவிட்டார். அழுது அழுது, கண்களெல்லாம் சோகங்களில் கனத்துப் போய் அம்மாவின் மடியில் அரை மயக்கத்தில் சாய்ந்து, நான் கண்டது கனவு என்று அப்பொழுதான் தெரிய வந்தது.

“ம்மா…அன்னாரை நல்லபடியா அனுப்பனும்ல…அவரோட கூட பொறந்தவங்கலா இறுதிச் சடங்குக்கு ரெடியாவுங்க” என்று ஐயர் கூற மனதைக் கல்லாக்கிக் கொண்டு தயாரானேன். பின்புறத்திலிருந்து ஒரு குரல். திரும்பிப் பார்த்தேன். வேறு யாரும் இல்லை. அது என் அண்ணனின் நண்பன் பிரகாஷ் அண்ணன். ”இலக்கியா! இது உன் அண்ண உன்கிட்ட குடுக்க சொன்னது…புடி!”. திறந்துப் பார்த்தேன். அப்பையினுள் ‘im sorry’ என்ற எழுத்தோடு புதியக் கைத்தொலைப்பேசி. எந்தக் கைப்பேசிக்காக சண்டையிட்டு பேசாமல் போனேனோ அதற்கு மாற்றாக வேறொரு கைப்பேசியை வாங்கிக் கொடுத்த அண்ணனுக்கு இனி நான் என்ன செய்ய முடியும்? நினைத்தாலும் திரும்பக் கூட பெறாத இந்த உறவு. கண்களில் வழியும் என் கண்ணீர் துளிகளாலே அண்ணனின் இந்த வாழ்க்கையின் இறுதிநாள் முடிந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *