மிரட்டல் கடிதம்

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 1, 2013
பார்வையிட்டோர்: 9,793 
 

எல்.கே.ஜி.யிலிருந்து யு.கே.ஜி. சென்ற நாள் முதல் எனக்கு (வினோத்) பெரிய தலைவலியாக இருந்தது. யு.கே.ஜி. என்னைப் பொறுத்தவரை அவ்வளவு ராசியாக இல்லை. அந்த இடஅமைப்பும், அதன் வாஸ்து அமைப்பும் எனக்கு அவ்வளவாக ஒத்துப் போகவில்லை. ஏதோ மூச்சு முட்டுவது போன்றதொரு மனநிலை. யாரோ கழுத்தை இறுக பிடித்து அமுக்குவது போன்று ஒரு கற்பனை. எல்.கே.ஜியிலிருந்து, யு.கே.ஜி. சென்றுவிட்டதாலேயே எனக்கு ஏதோ வாழ்வின் முக்கிய பொறுப்புகள் எல்லாம் தலைக்கு மேல் வந்து விட்டதாக இந்த ஆசிரியர்கள் கொடுக்கும் பில்ட்அப் சகிக்க முடியவில்லை. இப்பொழுது யு.கே.ஜி. படிக்கும் மாணவர்கள் எல்லாம் சீனியர்களாம். எல்.கே.ஜி படிக்கும் தம்பி, தங்கைகளை பொறுப்புடன் பார்த்துக் கொள்ள வேண்டுமாம்.

எவ்வளவு சுதந்திரமாக இருந்தது எல்.கே.ஜி. காலையில் 11 மணிக்கு வந்தால், மதியம் 3 மணிக்கு வீட்டுக்குச் சென்றுவிடலாம். பின்னர் விளையாட்டுதான். எதை வேண்டுமானாலும் போட்டு உடைக்கலாம். யாரும் கேட்பதற்கில்லை. இப்பொழுதெல்லாம் எதையாவது தெரியாத்தனமாக போட்டு உடைத்துவிட்டால், யு.கே.ஜி. படிக்கிற இதைக் கூட பொறுப்பாக வைத்துக் கொள்ள முடியவில்லையா? என மானம்போகும்படி திட்டுகிறார்கள். அன்று அப்படித்தான் வாட்டர்கேனை தொலைத்துவிட்டேன். அதற்காக அரை மணி நேரம் திட்டுகிறார் என்னுடைய மம்மி. அதுவும் என் கூட படிக்கும் அனுஷ்கா, வீட்டுக்கு வெளியே அவளது மம்மி மடியில் அமர்ந்து செர்லாக் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது அவள் காதில் விழும்படியாக திட்டுகிறாள். நான் சேர்த்து வைத்திருந்த மானம் மரியாதை அனைத்தையும் நொடியில் காற்றில் பறந்து போனது போன்றதொரு உணர்வு என்னை வாட்டி வதைக்கிறது.

கொஞ்சம் கூட இங்கீதம் இல்லாத அம்மா, என்ன தான் சின்னப் பையனாக இருந்தாலும். எனக்கு மானம், வெட்கம், சூடு, சொரனை இவையெல்லாம் இல்லையென்று நினைப்பது எந்த வகை நியாயம் என்று புரியவில்லை. சின்னப் பையன்களை எல்லாம் எவ்வளவு வேண்டுமானாலும் திட்டி அசிங்கப்படுத்தலாம் என்று எந்த நீதிநூல் அவர்களுக்கு கற்பித்தது. அப்படித்தான் இந்த நீதி நூல்கள் அவர்களுக்கு கற்பித்தது என்றால் அவைகள் உண்மையில் நீதி நூல்கள் தானா, அவைகளை கண்டிப்பாக நீதிநூல்கள்தானா என்று பரிசோதனை செய்தே ஆக வேண்டும்.

இதோ என்னைப் பெற்று விட்டதனாலேயே என் கன்னத்தில் அறைய உரிமை உண்டு என்று எண்ணிக் கொண்டிருக்கும் என் தந்தையின் பொறுப்பிலிருப்பவர். எப்பொழுதும் ஒரு வெள்ளைத்தாடி வைத்த கிழவரின் படம் போட்ட புத்தகத்தை வைத்துக்கொண்டு இரவும், பகலும் படித்துக் கொண்டிருக்கிறார். அந்த வெண்தாடிக்காரர் ஏதோ பெரிய புரட்சிக்காரராம். 100 ஆண்டுகளுக்கு முன் புரட்சிகரமான சிந்தனைகளையெல்லாம் தமிழ் சமுதாயத்தில் விதைத்தவராம். அவரைப் பற்றி அடிக்கடி பிரமாதமாகக் கூறிக் கொள்வார் என் தந்தை.

அன்று ஒரு நாள் மிகவும் கஷ்டப்பட்டு எழுத்துக் கூட்டி படித்துவிட்டேன். அந்த தாடிக்காரரின் பெயர் பெரியாராம். அவர், பெண்களை அடிமைகளைப் போல் நடத்தக் கூடாது. ஆண்களுக்கு நிகராக சமமான உரிமை கொடுத்து, அவர்களது சிந்தனைகளுக்கு மரியாதை கொடுத்து அவர்களை மதித்து வாழ வேண்டும் என்று கூறியிருக்கிறார் போல. அதனால் என் அப்பா என்றுமே என் அம்மாவை அடித்ததில்லை. ஒருவார்த்தை கூட கடிந்து பேசியதில்லை. நினைத்தாலும் முடியாது. இந்த ஞான ஒளி அவருக்கு ஏற்பட்டதற்கு காரணம் பெரியாரின் கருத்துக்கள் அடங்கிய புத்தகங்கள்தான் என்று எங்கள் தெருவே நம்பிக் கொண்டிருக்கிறது. ஆனால் எனக்கென்னமோ அதிலெல்லாம் நம்பிக்கையில்லை.

எனக்கும் எங்கள் வீட்டு நெளிந்து போன பாத்திரங்களுக்கும் தான் தெரியும், என் மம்மியின் பெண் சுதந்திரத்துக்கான உண்மைக் காரணம் என்னவென்று,

பெரியாரின் புரட்சிகரமான கருத்துக்கள் என் டாடியை எப்படியெல்லாம் பாதித்திருக்கிறது என்பதை கீழ்காணும் குறிப்புகள் மூலம் அறிந்து கொள்ளலாம்.

பெரியார் கள்ளுண்ணாமையை வலியுறுத்தியிருக்கிறார். என் டாடி குடிப்பது ஏதோ காப்பி கலர் திரவம். அது நிச்சயமாக கொக்கோ கோலா இல்லை. எனக்கு சரியாக வாசிக்கத் தெரியவில்லை. நான் ஒன்றாம் வகுப்பு சென்றவுடன் அதை சரியாக வாசித்து விடுவேன், அந்தபாட்டிலை பிரிட்ஜ்ஜிக்குள்தான்அவர் வைத்திருக்கிறார் எப்பொழுது வேண்டுமானாலும் அதை என்னால் எடுத்து பார்க்கவோ படிக்கவோ முடியும்.

ஆனால் என் டாடி ஒரு நாளும் கள்குடித்ததே இல்லை. அது எப்படி இருக்கும் என்று அவருக்கு சுத்தமாகத் தெரியாது. என் டாடியை பற்றி எனக்கு நன்றாகத் தெரியும். அவர் ஒரு தடவை முடிவெடுத்துவிட்டால் அவர் பேச்சை அவரே கேட்கமாட்டார். மேலும் அவர் போதையில் இருக்கும்போது யார் பேச்சையும் கேட்க மாட்டார்.

அந்த தாடிக்காரத் தாத்தா புகைபிடிப்பதைப் பற்றி ஏதாவது சொல்லியிருக்கலாம், என்னால் அந்த புகை நாற்றத்தை சகித்துக் கொள்ளவே முடியவில்லை.

என் டாடிக்கு ஜாதி, மதம் என்றால் சுத்தமாக பிடிக்காது. ஆனால் என்னை ஸ்கூலில் சேர்ப்பதற்காக ஜாதிமாற்றி சான்றிதழ் வாங்க கடுமையாக போராடினார். அதில் ஏதோ பெனிஃபிட் இருப்பதாக கூறினார்.

பூ வாங்கும்போது கூட ஜாதிப் பூவை வாங்க மாட்டார். மதம் பிடித்த யானை தொலைக்காட்சி சேனலில் காண்பிக்கப்பட்டால் கூட சேனலை மாற்றி விடுவார். அவருக்கு யானையைப் பிடிக்கும் ஆனால் அதில் உள்ள மதம் மட்டும்…….. ம்ஹூம்…………

பத்திரிகை, ஜனநாயகம், பார்ப்பனீயம், சினிமா இவையெல்லாம் நாட்டைப் பிடித்த நோய்கள் என்று அவர் அவரது நண்பரிடம்பேசிக் கொள்வதை அடிக்கடி நான் கேட்டிருக்கிறேன். எல்லாம் பச்சைப் பொய்.

சினிமா நோய் என்றால் பின் எதற்காக சன் மியூசிக்கில் சினிமா பாடலை தினசரி ஒன்று முதல் இரண்டு மணி நேரம் கேட்கிறாராம். என்னால் ஏ.பி.சி.டி. யை ஒழுங்காக மனப்பாடம் கூட செய்ய முடியவில்லை.

“டாடி நாளைக்கு எனக்கு ஜனவரி, ஃபிப்ரவரி டெஸ்ட் இருக்கு டி.வி.யை ஆஃப் பண்ணு” அப்படின்னு சொன்னால் நான் படித்துக் கொண்டிருக்கும் அறைக்கதவை சாத்தி என்னை சிறையில வைத்துவிட்டு அவர் சத்தத்தை குறைவாக வைத்துக் கொண்டு கேட்கிறார். அவரால் சினிமா பாடலை கேட்காமல் இருக்க முடியவில்லை போல. ஆனால் நான் மட்டும் டி.வி. பார்க்கக் கூடாது. இந்த வீட்டில் ஜனநாயகம் இல்லை. பேச்சுரிமை இல்லை. நியாயம் இல்லை.

கடைசியாக என் டாடி பெண்களுக்கு அதிகமாக மரியாதை கொடுப்பார். அந்த தாடிக்காரத் தாத்தா பெண்களுக்கு மட்டுமல்ல, சிறுவர்களையும் மரியாதையுடன் நடத்த வேண்டும் என்று கூறியிருக்கலாம். அவர் ஏன் அதைச் சொல்லாமல் விட்டுவிட்டார். அவருக்கு ஒரு வேளை இதற்கெல்லாம் நேரமில்லாமல் போயிருக்கலாம். என்ன செய்வது நான் கொடுத்து வைத்தது அவ்வளவுதான். என் டாடி ஒரு போலிஸ்காரர் என்பதால் அடிக்கடி பெல்டை சொடுக்கி காட்டுகிறார். வீட்டிற்கு யாராவது வந்தால் அவர்கள் முன்னால் நான் ஏ.பி.சி.டியும், ஒரு இங்கிலீஷ் ரைம்சும் பாடிக்காட்ட வேண்டுமாம்.

அவர் ஏன் என்னை இப்படி நடு முற்றத்தில் நிற்க வைத்து அசிங்கப்படுத்துகிறார் என்றுதான் புரியவில்லை. அவர்கள் என்ன என்னைப் பெண் பார்க்கவா வந்திருக்கிறார்கள். என்னைப் பாடிக்காட்ட சொல்கிறார்கள். விட்டால் மாட்டுக்கு பல்லைப்பிடித்து பார்ப்பது போல் என் பல்லையும் பிடித்துப் பார்ப்பார்கள் போல. அதிலும் நான் ஏ.பி.சி.டி தான் சொல்ல வேண்டுமாம். ஆனா, ஆவன்னா எல்லாம் சொல்லக் கூடாதாம். ஆனா, ஆவன்னா சொல்லிக் காண்பித்தால் அவன் அறிவு குறைந்தவனாம். தமிழ் பாடல் எல்லாம் பாடிக்கட்டக் கூடாதாம். எனக்கு பாரதியாருடைய கண்ணன் பாட்டு நன்றாகத் தெரியும். அதை கூறவா என்று கூறினால், அதட்டுகிறார்கள். பின் எப்படி பெரிய பையன் ஆனபின் சாஃப்ட்வேர் எஞ்சினியர் ஆவது என்றெல்லாம் கூறி திட்டுகிறார்கள். இங்கிலீஷ் பாட்டுத்தான் பாட வேண்டு மென்றால் என்னை இங்கிலாந்தில் வைத்து பெத்திருக்க வேண்டியதுதானே. ஏன் தமிழ்நாட்டில் வைத்து பெற்றார்களாம். எதற்கும் ஒரு அளவில்லாமல் போய்விட்டது.

நான் ஆண்பிள்ளை. எவ்வளவு கொடுமைகளை வேண்டுமானாலும் பொறுத்துக் கொள்ளலாம். ஆனால் என் வகுப்புத் தோழி, அனுஷ்காவுக்கும் இதே நிலைமையென்றால் என்னால் அதை பொறுத்துக் கொள்ளவே முடியாது. ஏன் இந்த டாடிக்கள் எல்லாம் ஒரே மாதிரியாக இருக்கிறார்கள்.

தனக்காக இல்லையென்றாலும் பிறருக்காக போராடுவதில் உள்ள ஒரே சந்தோஷத்திற்காக மட்டுமே நான் அந்த காரியத்தை செய்யத் துணிந்தேன். நான் அனுஷ்காவுக்கு உதவி செய்தே ஆக வேண்டும் என்கிற உந்துதல் வெகு நாட்களாகவே என்னை வாட்டி வதைத்துக் கொண்டுதான் இருக்கிறது. வகுப்பில் இப்பொழுதெல்லாம் அவள் முகம் வாடிய பூவைப் போலக் காணப்படுகிறது. அவள் ஒரு பேச்சுக்குக் கூட சிரிப்பதில்லை. எப்பொழுதும் முகத்தை உர்ரென்று வைத்துக் கொண்டிருப்பாள். வேறு எப்படி இருப்பாள். பாவம்…. என்னைப் போன்ற இரும்பு மனமும் அவளுக்கில்லை. அவள் டாடியும், என் டாடியும் நண்பர்கள் வேறு. பின் என்னத்தை சொல்ல வேண்டியதிருக்கிறது. அவளுக்கு ஆறுதல் சொல்லக் கூட எனக்கு வழியில்லை. பையன்கள் எல்லாம் ஒரு பெஞ்சில் உட்கார வேண்டுமாம். பெண்கள் எல்லாம் மற்றொரு வரிசையில் உட்கார வேண்டுமாம். என்ன ஒரு சீர்திருத்தம் இந்த யு.கே.ஜி.யில்…….

இப்படி அடக்கி, ஒடுக்கியதால்தான் நான் அந்த காரியத்தை செய்துவிட்டேன். அனுஷ்காவின் தந்தைக்கு ஒரு மிரட்டல் கடிதம் எழுதி விட்டேன்.

கடிதம் :

இதோ பாருங்க அங்கிள், சின்னப் பையன் சொல்றானேன்னு கோபப்படாதிங்க. நல்லா சிந்திச்சுப்பாருங்க. நீங்க என் டாடியோட சேந்து அந்ததாடிக்கார தாத்தாவோட புத்தகங்கள் எல்லாம் படிக்கிறீங்கன்னு கேள்விப்பட்டேன். அதனால கோபப்படாம சிந்திச்சுப்பாக்குற பகுத்தறிவு உங்களுக்கு இருக்கும் அப்படிங்கிற நம்பிக்கையிலதான் இந்த லெட்டரை உங்களுக்கு எழுதுகிறேன்.

அனுஷ்காவுக்கு ஐஸ்கிரீம் வாங்கிக் கொடுக்காம அவளை அடிச்சதா கேள்விப்பட்டேன். அவள் சிறு குழந்தை அப்படித்தான் அடம்பிடிப்பாள்.அதற்காக அவளை அடிப்பதா….. எதிர்த்து ஒன்றும்பேச முடியாத குழந்தையை உங்கள் உடல்திறனை காட்டி அடிப்பது ஒரு கொடூரமான செயலாக உங்களுக்குப்படவில்லையா?. கொஞ்சம் யோசித்துப்பாருங்கள்.பெண்களை அடிப்பது மட்டுமல்ல குழந்தைகளை அடிப்பதும் ஒரு மாபெரும் குற்றம்தான். இதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள் அங்கிள். அனுஷ்கா அடம்பிடித்தால், அவளை சமாதானப்படுத்துங்கள். எடுத்துச் சொல்லி புரிய வையுங்கள். அதைவிட அப்படியென்ன தலைபோகிற வேலை உங்களுக்கு இருக்கிறது. வன்முறையை காட்டி அடக்குவது என்பதை உங்களைப் போன்ற பெரிய மனிதர்களிடம் இருந்துதான் என்னைப் போன்ற சிறுவர்கள் கற்றுக்கொள்கிறார்கள். ஆனால் உங்கள் மீது உள்ள தவற்றை கடைசிவரை ஒத்துக் கொள்ளவே மாட்டீர்கள். அப்படித்தானே…..அங்கிள்ள்ள்ள்ள்ள், (பற்களை நறநறவென கடித்துக் கொண்டான்) ஒன்று மட்டும் சொல்லிக் கொள்கிறேன் நன்றாக மனதில் இறுத்தி வைத்துக் கொள்ளுங்கள், உங்களுடைய அராஜக, வன்முறை செயல்கள் இதே போன்று மேலும் தொடருமேயானால், நம் தெருவில் உள்ள ஜஸ்டிஸ் தாத்தாவிடம் சென்று புகார் கொடுத்து விடுவேன். பின் பெற்ற குழந்தையை அடித்ததற்காக ஜெயிலுக்கு செல்ல வேண்டியிருக்கும். ஜாக்கிரதை. பெண்களையும், குழந்தைகளையும் காக்க அரசாங்கம் மட்டும் இவ்வளவு சட்டங்களை இயற்றவில்லை என்றால் உங்களை போன்ற ஆண்களிடமிருந்து எவ்வாறு எங்களை காப்பாற்றிக் கொள்ள முடியும். அந்த கடவுளே வந்தாலும் அது முடியாமல் போய்விடும். ஆம் குழந்தைகளை உங்களைப் போன்ற கடுமையான தந்தைகளிடமிருந்து காக்க வந்த குட்டி பெரியார் நான்தான். ஜாக்கிரதையாக நடந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு தங்களை கடுமையாக எச்சரிக்கும்
வினோத்

அனுஷ்காவின் டாடிக்கு மட்டுமல்ல, அத்தனை டாடிக்களுக்கும் ஒரே எச்சரிக்கைதான். சின்னப்பசங்களுக்கும் மானம் இருக்கு, வெட்கம் இருக்கு, சூடு, சொரணை இருக்கு, ஆசை இருக்கு, கனவு இருக்கு, வலிஉணர்வு இருக்கு, முக்கியமாக புரிந்து கொள்ளக்கூடிய ஆறாவது அறிவு இருக்கு. அவர்கள் ஆடுகளோ, மாடுகளோ, கோழிகளோ இல்லையென்று உறுதியாக நம்பலாம். மற்ற வீட்டு பிராணிகளுக்கும், அவர்களுக்கும் நிச்சயமாக வித்தியாசம் இருக்கு. வீட்டிலிருக்கும் பொமரேனியன் நாய்குட்டியும், குழந்தையும் ஒன்றில்லை. இரண்டுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு, நாய் குட்டியை மதிக்கத் தேவையில்லை. ஆனால் குழந்தைகளாகிய எங்களை மதிக்க வேண்டும். உணர்வுகளுக்கு மரியாதை கொடுக்க வேண்டும். ஆறாவது அறிவுக்கு மரியாதை கொடுக்க வேண்டும். ஒரு பொமரேனியனால் ஏ.பி.சி.டி. சொல்ல முடியுமா, ரைம்ஸ் மனப்பாடம்செய்ய முடியுமா? முடியாதல்லவா. அப்படியானால் குழந்தைகளின் அறிவை மதிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்.

Print Friendly, PDF & Email

1 thought on “மிரட்டல் கடிதம்

  1. வணக்கம்…

    வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… தொடர்கிறேன்… இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி…

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது… வாழ்த்துக்கள்…

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/12/blog-post_3.html) சென்று பார்க்கவும்… நன்றி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *