மின்னூட்டாம் பூச்சி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 19, 2024
பார்வையிட்டோர்: 136 
 
 

மைய்யத்தை அடக்கிவிட்டு நகர்ந்து வருவதற்குள் மனம் தவியாய் தவித்தது. நான் இயங்கமுடியாத அளவுக்கு எனக்குள்ளே ஏதோ ஒன்று சுழன்று வீசியடித்தது. முன்கர் நக்கீர் வந்திருப்பார்களா? கேள்விகளை கேட்கத் துவங்கி இருப்பார்களா? மைய்யத்தை உயிரூட்டி எழுப்பி இருப்பார்களா? அந்த கேள்வி பதில் உரையாடலை மனம் ஒரு தளத்தில் நடத்திக் கொண்டே இருக்கிறது. எனக்கும் அந்த மைய்யத்திற்கும் இடையே உள்ள முப்பதாண்டு நிகழ்வுகள் நான் விலக்கித் தள்ளியும் முடியாமல் மனம் முழுவதும் வியாபித்துக் கிடக்கிறது.

அவள் எனக்கு குண்டி கழுவி தந்ததிலிருந்து என்னை அணைத்துக் கொண்டுகிட்டேபடுத்துக் கிடந்தது எனக்கு சுன்னத் செய்யப்பட்டபோது எனது ஆண் உறுப்பின் எரிச்சலைப் போக்க பனைஓலை விசிறியால் வீசி தந்தது. நான் அரேபியாவிலிருந்து வந்தபோது என்னைக் கெட்டிபிடித்து ”செல்லவாப்பா…” என முத்தியது வரை காட்சி சித்திரம் தொடர்ச்சியாகவும் தொடர்ச்சியற்றும் மின்னல் வேகத்தில் வந்து மறைந்து என்னை வாட்டி எடுத்துக் கொண்டே இருக்கிறது.

அவளின் மரணம் துக்கப்படும்படியாக இல்லை. யாரும் துக்கிக்வும் இல்லை. இரண்டு மூன்று மாதங்கள் படுக்கையில் கிடந்தும் அவளின் மலத்தை எடுத்து அவள் சரீரத்திலேயே தேய்த்துக் கொண்டும் பிடிவாதத்தின் உச்சத்தில் கிடந்தவள் தனது எம்பதாவது வயதில்தான் மரணமடைந்தாள்.

இருபதாண்டுகால வாழ்வில் எத்தனையோ மரணங்களை பார்த்திருக்கிறேன். இயல்பான இயல்பற்ற வித்தியாசமான விசித்திரமான மரணங்கள் இவைகளில் அடங்கும். மைய்யத்தை அடக்கிவிட்டு வந்த ஒன்றிரெண்டு நாட்கள் மைய்யத்தின் நினைவுகள் எப்படி விலக்கித்தள்ளினாலும் இரவு தூக்கத்தை தின்றுதீர்த்து விடுகிற அளவுக்கு விலகாமலே இருக்கும். சிறுபிராயத்தில் மைய்யத்துகள் ஒப்பாரி சத்தத்தைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் கையை காலை அடித்துக் கொண்டு எழும்பிவிடும் என்று நம்பினேன் நாள்படநாள்பட மையத்துக்கள் எழும்புவதில்லை என்ற உண்மை தீர்க்கமானது.
அவளை ஒரு இரவில்தான் அடக்கினோம். அந்த இரவில் தூக்கம் கண்களை தழுவிய மறுநிமிடம் திடுக்கிட்டு முழிப்பு வந்தது. கண்களை மெல்ல திறந்து பார்த்தேன். அறையின் மூலையில் ஒரு மின்னூட்டாம் பூச்சி மின்னி மின்னி என்னை நோக்கி வந்து கொண்டிருந்தது. மரித்துப் போனவர்கள் மின்னூட்டாம் பூச்சியாக வருவார்கள் என்று எப்போதோ கேட்ட வாய்மொழி கதையை மனம் ஞாபகப்படுத்தித் தொலைத்தது. மறுநொடி நடுக்கத்தோடு கூடிய பயம் நெஞ்சில் உட்கார்ந்தது. கண்களை இறுக்க மூடினேன்… மீண்டும் திறந்தேன். மின்னூட்டாம் பூச்சி என் பாயைச் சுற்றிச் சுற்றி வட்டமடித்தது. கண்களை மூடாமல் திறந்தே வைத்திருந்தேன். பயத்தில் மின்னூட்டாம் பூச்சியை கொன்றுவிடலாமா என யோசித்தேன். மின்னூட்டாம் பூச்சி அவளாக மாறியதைப்போல இருந்தது. தலைமாட்டிலிருந்த டார்ச்லைட்டை எடுத்து வெளிச்சத்தை மின்னூட்டாம் பூச்சியின் மேல் குவித்தபோது மின்னூட்டாம் பூச்சி மட்டுமே இருந்தது. டார்ச் வெளிச்சத்தை அணைத்த மறுநொடியில் மீண்டும் மின்னூட்டாம் பூச்சி அவளாக தெரிந்தது. தொடர்ந்து மின்னூட்டாம் பூச்சி வாசலுக்கு நேராகப் போனது. அதுஅப்படியே போயவிடும் என நினைத்து கண்களை மூடித் திறந்தேன். மீண்டும் மின்னூட்டாம் பூச்சிஎன்னை நோககியே மின்னி மின்னி வந்து கொண்டிருந்தது. வியர்வை ஊற்றெடுத்தது. படபடப்பும் நடுக்கமும் நாக்கு வரச்சியுமாக மின்னூட்டாம் பூச்சி கிட்டே வந்தால் கொன்றுவிட தீர்மானித்தேன். மின்னூட்டாம்பூச்சி என் கைக்கு எட்டும் தூரத்துக்கு வராமல் திரும்பியது.

என் மனம் முழுவதும் கியாமத்துநாள். மஹ்சர் மைதானம் என வட்டமிட்டுக் கொண்டே இருந்தது. வலதுதோளில் நன்மை எழுதுகிற மலக்கும் இடது தோளில் தீமை எழுதுகிற மலக்கும் நினைவில் வந்தார்கள். இறைவனின் திருநாமத்தை உச்சரித்துக் கொண்டே இருந்தேன். பாவமன்னிப்பு கேட்டேன். அது ஒரு பயங்கர இரவாக இருந்தது. நன்மையை ஒரு தட்டிலும் தீமையை ஒரு தட்டிலுமாக வைத்து நிறுத்துப்பார்க்கிற ஒரு பிரமாண்டமான தராசுத் தெரிந்தது. தலைமுடியை விட மெல்லிய சிராத்துல் முஸ்தகீம் பாலமும் சொர்க்கமும், நரகமும் என ஏற்கனவே சொல்லித் தந்த செய்திகளின் வழியாக ஒரு காட்சித் சித்திரத்தை மனம் காட்டிக் கொண்டே இருந்தது. மின்னூட்டாம் பூச்சி என் கால்கள் அருகில் மின்னியது. காலால் நசுக்கி விடலாம் தான் ஆனாலும் மனம் வரவில்லை. ஜன்னல் வழியாக அவள் எட்டிப் பார்த்தாள். கண்களை திறந்தேன். காணவில்லை. என் தலைமாட்டில் நின்றாள். திரைச்சிலையை இழுத்துக் கொண்டு போய் வந்தாள்… அவள் உட்கார்ந்திருந்தாள் சற்று தள்ளிபடுத்திருந்தாள். மின்விசிறியாய் சுற்றினாள்… நான் குடிப்பதற்கு தண்ணீர் வைத்திருந்த சில்வர் செம்பில் உட்கார்ந்தாள். குழந்தைக்கு கட்டியிருந்த தொட்டிலில் ஆடினாள். அவள் தலையணையாக மாறியபோதுதான் ரொம்பவும் அவஸ்தையாகிப்போனது.

இப்போது மின்னூட்டாம் பூச்சி எனது படுக்கைக்கு அருகிலேயே மின்னிக் கொண்டிருந்தது. விரலால் சுண்டிவிட்டேன். தூரமாய் போய் விழுந்து. மீண்டும் அது என்னை நோக்கியே வந்து கொண்டிருந்தது. விடியும்வரை இப்படித்தான் பொழுதுபோனது. விடிந்தபிறகு மின்னூட்டாம் பூச்சியைக் காணவில்லை.

நேற்றைய நினைவுகளிலேயே பகல் நகர்ந்து போனது. மீண்டும் இரவின் தொடக்கத்திலேயே ஒருவிதமான பதட்டம் ஒட்டிக் கொண்டது. பாய் விரித்து படுக்கையில் சாய்ந்த மறுநொடியில்அவள் மைய்யத்தை கபர் குழியில் இறக்கி வைத்த காட்சி ஓடியது. ஒன்றன்பின் ஒன்றாக நினைவுகளை மாத்தி மாத்தி (வேறுசிந்தனைக்கு மனதை கொண்டுபோகும் முயற்சியில் தோற்று மின்னூட்டாம் பூச்சியைத்தேடினேன். மின்னூட்டாம் பூச்சி அந்த இரவில் வரவே இல்லை. அவளுக்கு முன்னால் மரித்துப்போன சிலரோடு சேர்ந்து அவள் ஒருகூட்டமாய் நடமாடுவதாக தோன்றியது. எனக்கும் அவளுக்கும் முன்பு நடந்த காரசாரமான சண்டையில் நானும் அவளும் ஆக்ரோஷமாக தர்கித்துக் கொண்டது. மீண்டும் ஒருமுறை நிகழ்ந்தது. மையத்துக்கள் எழும்பி வருவதில்லை என மனம் திரும்பத் திரும்ப சொன்னபோதும் அவள் வந்து கொண்டுதான் இருந்தாள்.

அவளுக்கு மரிப்பதற்கு கொஞ்சமும் இஷ்டமில்லை, தான் இனிமரித்துப் போவோம் என்பதை உணர்ந்து கொண்டு ஒப்பாரி வைத்து அழுதாள். அவள் மரித்தபோது அந்த முகத்தைப் பார்க்க முதலில் பயமாகவே இருந்தது. வீட்டுக்கு கொண்டு வந்து குளிப்பாட்டி தூக்கிக் கிடத்தியபோது அவளின் முகத்தில் பழைய செளந்தர்யம் பரவிக் கிடந்தபோது பயம் போய்விட்டது. அவள் முகத்தில் பரவி நின்ற செளந்தர்யத்தை கபர்குழியில் இறக்கி வைக்கும் வரையிலும் காணமுடிந்தது. மைய்யத்தை சந்தூக்கில் தூக்கி பள்ளிக்கு கொண்டு போனதும் எனக்கு அழுகை வந்தது. அதுவரையிலும் அமைதியாக நின்ற நான் யாரும் அறியாமல் இருட்டோடும் மறைந்து நின்று ஒரு குழந்தையைப்போல அழுதுவிட்டு மீண்டும் வெளிச்சத்துக்கு வந்தேன்.

உம்மாவுக்கும் அவளுக்குமான உறவு ஒருக்கிலும் சீராகவே இல்லை. உம்மாவும் மகளும் எப்போசூம வன்மத்தோடு மோதிக்கொள்ளும் மனோபாவத்திலேயே இருந்தனர். பொதுவாக அவள் யாரோடும் அவளுக்கான உறவை சீராக வைத்துக் கொண்டதில்லை. மரண தருவாயில் அவளின் உயிர் இழுத்துக் கொண்டு கிடக்கும்போது கூட ஒப்புக்காகவே உம்மாபோய் பார்த்தாள்… மயக்கநிலையில் உணர்வற்றுக் கிடந்தவளின் காதுகளில் ”ஒனக்க மொவ வந்திருக்கா…” என உரக்கச் சொன்னபோது மெல்ல கண்திறந்துப் பார்த்து ஓவென அந்த முகம் அழுதது. அவளின் அந்த அழுதமுகமும் இப்போது இரவில் இம்சிக்கிறது.

இரண்டாவது மூன்றாவது இரவுகளும் எனக்கு பயங்கரமானதாகவே இருந்தன. இரவுகளைப் பற்றிய பயம் அல்லது சிந்தனைப் பகலிலேயே தொடங்கிவிடுகிறது. பகல் தூக்கத்தில் கூட கனவுகளின் தொல்லை. விசித்திரமான கனவுகள். ஒருமுறை ஒரு பெரிய பறவை என்னை கொத்தி குதறியது. அது தனது நீண்ட அலகால் கொத்திப்போடப்போட கிழிக்கப்பட்ட என் சதைகள் மூடிக் கொண்டே இருந்தன. எரிச்சலில் பறவை என்னை தூக்கி முழுங்கியது. அதன் வயிற்றுக்குள் முட்டி மோதி உருண்டு பிறண்டு அதன் மலைத்துவாரம் வழியாக வெளியேறி வந்தேன். அதன் வயிற்றுக்குள் இருட்டறையில் என்ன நிகழ்ந்தது என்பதை இதுவரையிலும் நினைவுகளுக்குள் கொண்டு வரமுடியவில்லை. ஒரு அதிகாலை கனவில் இறந்துபோன ஒரு மனிதர் என்னைக் கட்டிப்பிடித்து நலன் விசாரித்தார். அவர் நலன் விசாரிக்கும்போதே அவர் இறந்துபோன மனிதர் என்பதை உணர்ந்து கொண்டு அவரை பலங்கொண்ட மட்டும் பிடித்துத்தள்ளினேன். அவர் தூரமாய்போய் விழுந்த இடத்தில் அவரைக் காணவில்லை.
அவளை நான் கனவில் காணவிரும்பவில்லை. அவள் என் கனவில் வரமாட்டாள் என்றே நம்புகிறேன். நல்ல ஆத்மாக்கள் கனவில் வராது என்று சொல்லுவார்கள். அவள் நல்ல ஆத்மா என்பதில் எனக்கு மாறுபாடு இல்லை. ஒருவேளை மற்றவர்களுக்கு இருக்கலாம். எல்லா இடங்களிலும் இந்த மற்றவர்களை தவிர்க்க இயலாது.

ஒரு இரவின் கடைசியில் அவள் வீட்டுக்கு வந்தாள். அவளை அடக்கம் செய்யப்பட்டபோது அவளுக்கு அணிவித்திருந்த ஆடையோடு வீட்டைச் சுற்றி நடந்து கொண்டிருந்தாள். பட்டென ஜன்னல் கம்பியின் இடைவெளியில் நுழைந்து உள்ளே வந்தாள். உம்மாவுக்கும் அவளுக்கும் தர்க்கம் துவங்கியது போ… போ…. என விரட்டினாள். அவள் பளிச்சென தொட்டிலில் கிடந்த ஒரு குழந்தையை தூக்கிக் கொண்டு வெளியேறினாள். உம்மா அவளை துரத்திக் கொண்டு பின்னால் ஓடினாள். ”குழந்தையை தந்துட்டு போ…” கத்திக் கொண்டே அவளிடமிருந்து குழந்தையை வாங்கிவிடும் வேகத்தில் உம்மா தொடர்ந்து பின்னால் ஓடினாள் அவள் ஓடுகிறாளா பறக்கிறாளா என்பது துல்லியமாகத் தெரியவில்லை.. ”குழந்தைய தந்துட்டு போ…. குழந்தைய தந்துட்டு போ…” அழுகையினூடே ஆக்ரோசமாக உம்மா கத்திக் கொண்டே ஓடினாள் அல்லது பறந்தாள். ஒரு பாறையின் சரிவில் குழந்தையை போட்டுவிட்டு அவள் மறைந்து போனாள். தொடர்ந்து ஓடிப்போன உம்மா கிட்டபோய் குழந்தையை தேடியபோது குழந்தையை காணவில்லை. இப்போது குழந்தையின் அழுகைச் சத்தம் கேட்டது உம்மா திடுக்கிட்டு எழுந்து பார்த்தபோது குழந்தை தொட்டிலில் அழுது கொண்டு கிடந்தது. குழந்தையை வாரி எடுத்து மார்போடு அணைத்துக் கொண்டு உம்மா நடுங்கினாள். வீடும் வெளிப்புறமும் நிசப்தமாகவே இருந்தது. கனவுக்குப்பிறகு எல்லோருக்கும் ஏற்பட்ட கலக்கம் இயல்பாகவே மாறிவிட்டது என்றாலும் சில இரவுகள் அவஸ்தையாகத்தான் இருக்கின்றன.

சித்தார்த்தனை எரித்துவிட்டு வந்தபோது கூட இப்படியான அவஸ்தை ஏற்பட்டதில்லை. கொஞ்சநேரம் சங்கடமாக இருந்தது. பிறகு நிம்மதியாக தூங்கியதாகத்தான் ஞாபகம். அலுமினிய பெயின்ட் சிந்திய அவன் ஆண் உறுப்புதான் நினைவில் வந்து சங்கடப்படுத்தியது.

சித்தார்த்தனின் முழு பழக்கமும் எங்களோடு தான். தெரியாதவர்கள் அவனையும் சாயிப்பு பைய்யன் என்றுதான் சொல்வார்கள். பள்ளி முற்றத்தில் தான் விளையாடுவான். மதரஸா திண்ணையில் தான் எங்களோடு இருப்பான். பள்ளிக்கூடத்தில் தொடங்கிய நட்பு கல்லூரி வரையிலும் வந்தது. கல்லூரி படிப்பு முடிந்ததும் சென்னைக்குப் போனான். சித்தார்த்தன் மிகச் சிறந்த ஓவியன். விடுமுறை நாட்களில் பெயின்ட் அடிக்கப்போவான். அப்படி ஒருமுறை செட்டியார் கோவிலில் பெயின்ட் அடிக்கப்போன போதுதான் மிச்சம் வந்த ஜன்னல் கம்பிகளுக்கு அடிக்கும் அலுமினியப் பெயின்ட் சேம்பிள் டின்னை திருடி எடுத்து ஜட்டிக்குள் ஒளித்து வைத்துக் கொண்டான். ஜட்டிக்குள் வைத்த மறுநொடியில் ஒற்றை அசைவில் அலுமினிய பெயிண்ட் டப்பாவின் மூடி திறந்த பெயின்ட் கொட்டியது. இதற்கு மறுநாள்தான் பையன்மார்கள் கூட்டமாக அணைக்கட்டுக்கு குளிக்கப்போனாம். சித்தார்த்தன் தண்ணீரில் சாடினான். வலகிய அவனின் துண்டின் இடைவெளியில் அலுமினிய நிறம் மின்னியது. சேக்முகம்மது பார்த்தான் பதறிப்போனான். எல்லோரும் கூடி சித்தார்த்தனை தூக்கி அவன் துண்டை இழுத்து நிர்வாணப்படுத்தியபோது… அலுமினிய பெயிண்ட் திருடிய கதை வெளியே வந்தது.

நான் காலையில் குளத்துக்குப் போகும்போதுதான் சித்தார்த்தன் சென்னையிலிருந்து வந்தான். முகம் கொஞ்சம் இறுக்கமாக இருந்தது. யாத்திரை களைப்பாக இருக்குமென்று அப்போது கருதினேன். அவனிடம் பேசிவிட்டு நான் குளத்துக்குப் போனேன். குளத்தில் குளித்து கரையேறும்போது நசீர் வந்து சொன்னான் சித்தார்த்தன் விசம் சாப்பிட்டு விட்டதாகவும் ஆஸ்பத்திரிக்கு கொண்டு போயிருக்கிறார்கள் என்றும் பதறிக் கொண்டு வீட்டுக்கு வந்து புறப்பட்டு ஆஸ்பத்திரிக்குப் போனேன். அந்த ஆஸ்பத்திரியில் முடியாமல் இன்னொரு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தாக சொன்னார்கள். அந்த இன்னொரு ஆஸ்பத்திரிக்குப் போய் பார்த்தபோது சித்தார்த்தன் பிணமாகக் கிடந்தான். எலிமருந்தை மண்ணெண்ணையில் கலக்கி குடித்ததால் காப்பாற்ற முடியவில்லை எனச் சொன்னார்கள்.

சித்தார்த்தனின் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் ஒத்துவராமல் பிரிந்து இருந்தார்கள். அவர்களை ஒன்றிணையச்சொல்லி சித்தார்த்தன் நீண்ட நாட்களாக சொல்லி வந்ததன் முடிவாகவே தற்கொலை செய்து கொண்டான். அவன் தற்கொலையின் நோக்கம் நிறைவேறி மீண்டும் தோற்றுப்போனது வேறுவிசயம்.

மதியம் பனிரெண்டு மணிக்கு சித்தார்த்தனின் சடலத்தை வீட்டுக்கு கொண்டு வந்தார்கள். விசம் தின்று செத்துப்போனதால் போலீஸ் வழக்காக மாறும் என பயந்து அவர்களில் பலரும் ஒதுங்கிக் கொள்ள நாங்கள் முன் இழுத்து வரப்பட்டோம். சித்தார்த்தனுக்கு உறவினர்கள் என்று பெரிய அளவில் எவரும் இல்லை. சித்தார்த்தனின் அம்மாவின் விருப்பத்துக்கு ஏற்ப அவனுக்கு புதுபேண்டும் சர்ட்டும் மாலைக்குள் தைத்து வாங்கினோம். சித்தார்த்தனின் சடலத்தை எப்படி எரிப்பது என சொல்லித்தரவும் முன்னின்று நடத்தவும் ஒரு பெரியவர் சம்பளத்துக்கு வந்திருந்தார். அவரின் ஆலோசனைப்படியே சித்தார்த்தனின் சடலத்தை மாலை ஆறுமணிக்கே குளிப்பாட்டினோம். அவனின் வாயிலிருந்து ரத்தம் ஒழுகிக் கொண்டே இருந்தது. கழுவக் கழுவக் கடைசி வரை ரத்தம் வந்து கொண்டேதான் இருந்தது. குளிப்பாட்டி புதுபேன்டும் சர்ட்டும் பே’ட்டு அவனின் அம்மா விழுந்து விழுந்து அழ அழ பாடைகட்டி சடலத்தை தூக்கிப்போய் காடாக கிடந்த அந்த மைதானத்தில் வைத்து கதம்பையும் வைக்கோலும் அடுக்கி பந்தம் கொளுத்தி சித்தார்த்தனின் அப்பாவின் கையில் கொடுத்து எரித்துவிட்டு குளத்துக்கு வந்து எல்லோரும் குளித்து விட்டு வீட்டுக்கு வந்தோம்.

“அஞ்சாறு சாயிப்பு பைய்யன்மாரு நாளைக்கு உள்ளே போவானுவோ…” என சிலர் சொல்லியதைக் கேட்டும் பயப்படவில்லை. அந்த இரவு மாடி அறையில் தனியாகத்தான் படுத்தேன். ஆனாலும் மின்னூட்டாம் பூச்சி வரவில்லை. ஒருவேளை சித்தார்த்தனின் வீட்டில் மின்னூட்டாம் பூச்சி வந்ததோ என்னமோ தெரியவில்லை. அதுபற்றி விசாரிக்கவுமில்லை. சித்தார்த்தன் குறித்த நினைவுகள் அடிக்கடி வரும். குறிப்பாகநல்ல ஓவியங்களைப் பார்க்கும் போதும் ஜன்னல் கம்பிகளில் அலுமினியப் பெயின்டைப் பார்க்கும் போதும். ஆனாலும் சித்தார்த்தனின் நினைவு போன்றதல்ல அவள் நினைவு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *