கதையாசிரியர்:
தின/வார இதழ்: ஈழகேசரி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 25, 2022
பார்வையிட்டோர்: 5,311 
 
 

(1939ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

நன்றாய் மலர்ந்த இல்வாழக்கையிலே அது ஒரு பெருங்குறையா யிருந்தது. முற்றிப்பழுத்த மாங்கனியிலே இருக்கும் புழுப்போல.

விசாலாட்சி தனது ஓய்வு நேரங்களிலெல்லாம் கிராமம் கிராம மாய்ச் சென்று தன்னைப் படைத்த இறைவனை நோக்கிக் கையெடுத்து வந்தாள். வாழ்க்கைப் பூங்காவிலே எல்லாமிருந்தும், அவளுக்கு எட்டா மல் எஞ்சி நின்றது ஒன்று. அவள் வீட்டின் முன்னால் நிற்கும் மயிர் மாணிக்கக் கொடி போல அவள் மனம் அப்பொருளைத் தேடி அலைந்து கொண்டிருந்தது.

இல்வாழ்க்கையின் இன்பரசத்தைத் தன் கணவர் சின்னத்தம்பி யுடன் சுவைத்து வந்தாள். ஆம், சின்னத்தம்பியை வரித்து பதினைந்து ஆண்டுகளாகின்றன. இப்பொழுது இருவரும் அந்தரங்கத்தில் ஓலமிட் டுக் கொண்டிருந்தார்கள். ஒரு காதற் பண்போல் ஓடிய இல்வாழ்க்கை யின் காலம் முறிந்து கவர்ச்சி குறைந்து வந்தது. ஆனால் ஏன்?

மணவாழ்க்கைக்கு மகுடம் வைப்பது குழந்தை. குழந்தை ஒன்று தானும் இல்லாவிடில் அக்குறை நிவர்த்தி செய்ய முடியாத பெருங்குறையே. விசாலாட்சியும் சின்னத்தம்பியும் எழுப்பிய வாழ்க்கைக் கோபுரமும் முடிவடையாமல் நின்றது.

சுற்றிலும் கேட்டும் கேளாமலும் சாசுவதமாய் இசைத்துக் கொண்டிருக்கும் விவிதராகங் களெல்லாம் இறுதியில் சோகரசத்திலே போய் முடிவடைகிறதா? துக்கமே உலகத்தில் நிரந்தரமானது. இன்பமெல்லாம் வாழ்க்கைப் பாலைவனத்தில் தோன்றி ஏமாற்றும் கானல் நீரா? சின்னத்தம்பியின் எண்ணங்கள் இப்படி ஓடவில்லை. உண்மையில் அவனுக்கு இத்தத்துவங்களெல்லாம் என்றுமே புரியாது.

ஆனால் சின்னத்தம்பியின் மனவிருப்பம் நிறைவேறாமற் போகவே அவனுக்கு மூடநம் பிக்கையிலும் தெய்வபக்தியிலும், ஒரு நம்பிக்கை பிறந்தது. வைதீகக் கொள்கைகளும், குருட் டுப் பழக்கவழக்கங்களும் அவன் மனத்தராசிலே முன்னிருந்ததிலும் பார்க்க நிறையிலும் மதிப்பிலும் உயர்ந்துவிட்டன.

கணவனின் மனமாற்றம் தனிவழியிலே சென்று கொண்டிருந்த விசாலாட்சிக்கு ஒரு துணை கிடைத்த மாதிரி. திடீரென அவர்கள் வீட்டிலே சோதிடர், ரேகை சாஸ்திரிகள், சந்நி யாசிகளின் நடமாட்டம் கூடிவிட்டது. வழக்கத்துக்கு மாறாக இருவரும், தம்பதிகளாய் கோயில் குளமென்று போய் வரத் தொடங்கிவிட்டனர். ஏழை எளியவர்களுக்கு தங்களாலானதைப் பொருளாயும், பணமாயும் வாரி வழங்கினர். மனசிலேயிருந்த ஆசை நிறைவேறாமல் போனாலும், ஒரு வகையில் இச்செயல்களால் அவர்கள் மனத்தில் ஆறுதலும் அமைதியும் பிறந்தது.

அன்று புதன்கிழமை. அயல் வீட்டுக் குழந்தைகளின் விளையாட்டும், கூத்தும், கும்மாள மும் காற்றில் மிதந்து வந்து கொண்டிருந்தன. விசாலாட்சியும் புருஷனும் தங்கள் துர்ப்பாக் கியத்தை நினைத்துக் கொண்டு இருவரும் மௌனமாய் இருந்தார்கள். சட்டென குடு குடு குடு… குடுகுடு… என்ற சப்தம் வீதியில் இருந்து வந்தது. விசாலாட்சி வீட்டின் வாசலுக்கு ஓடி னாள். அப்பொழுதுதான் கார்முகில் கூட்டங்களிலிருந்து விடுபட்ட சூரியன் வெளிக் கிளம்பிக் கொண்டிருந்தான். விசாலாட்சியின் வருங்கால வாழ்க்கையின் புலரிக்காலத்தை அறிவுறுத் தும் தேவதூதனா?

குடுகுடுப்பைக்காரன் பக்கத்து வீட்டிலிருந்து வெளியேறி வந்தான். குடு குடு… குடு குடு. அவன் விசாலாட்சியைக் கண்டுகொண்டான். பிச்சைக்காரருக்கும் குறிசொல்வோருக்கும் மனிதரின் முகத்திலிருந்தே அவர்களின் மனத்தை வாசிக்கும் ஆற்றல் வந்துவிடுகிறது. அது பலதரப்பட்ட மக்களுடன் பழகுவதாலும் நீண்ட அனுபவத்தாலும் வந்தது போலும்.

அவன் விசாலாட்சியைப் பார்த்து “சலாமுங்காச்சி, ஆச்சிக்கு நல்ல காலம் வருகுது… குடு குடு குடு… ஆச்சியின் மன வருத்தம் ஒரு பொருளைப் பற்றியல்ல. பணத்தைப் பற்றியல்ல… குடு குடு…. ஒரு உயிரைப் பற்றியது. ஆச்சியின் ஊட்டுக்கு மவராசன் வரப்போறார். குடுகுடு… ஆச்சி ஒங்க மனசிலே ஏதோ ஒரு குறை நெடுநாளாயிருந்து வருதுங்க. அது ஒருநாளிலல்ல. ஒரு மாசத்திலல்ல, பத்து மாசத்தில் சரியாய்ப் போயிடுங்க…”குடு குடு குடு…… குடு குடு.”

விசாலாட்சிக்கு அப்பொழுதிருந்த மனநிலையிலே அவன் சொன்னதை தேவவாக்கா கவே எடுத்துக்கொண்டாள். அவள் அதை முற்றிலும் நம்பி விட்டாள். இப்போது அவர்களுக்கு எட்டிப்பிடிக்க இருந்தது ஓர் ஊன்றுகோல் – நம்பிக்கை. அது நாளுக்கு நாள் உறுதிபெற்று, அதைச் சுற்றி இருவரும் மனோராஜ்யங்களைப் புனைந்து இன்பத்திலே ஊறிப்போனார்கள். ஆ, அந்த நம்பிக்கை – அதிலல்லவா மனித வர்க்கம் முழுவதுமே சுழன்று கொண்டிருக்கிறது.

“அவன் சொன்னதில் எனக்கு இன்னும் நம்பிக்கை இருக்கிறது. நீங்கள் என்னத் தைத்தான் சொல்லுங்களேன், ஏதோ எங்களுக்கும் நன்மையான காரியம்வரப் போகிற தென்று என் மனம் சொல்கிறது” என்றாள் விசாலாட்சி ஒரு நாள்.

“மாதமும் எட்டாகப் போகிறது. இன்னும் அவன் சொன்னதை நம்பி இருக்கிறாய்? ஏதோ வாயில் வந்ததைச் சொன்னான். அவன்தான் என்ன செய்வான். இதுதானே அவன் பிழைப்பு. நாங்கள் அல்லோ இதற்குக் கொடுத்து வைக்க வேணும்.”

அன்றிரவு காலை நாலரை மணி இருக்கும். ஆம், சற்று முன்னர் தானே பக்கத்து வீட் டில் கடிகாரம் நாலடித்தது. அவர்கள் வீட்டு வாசலில் “குவா, குவா” என்ற ஒரு குழந்தை கத்தும் சத்தம் கேட்டது. விசாலாட்சி திடுக்கிட்டெழுந்தாள். உற்றுக் கேட்டாள். அது ஒரு குழந் தையின் அழுகுரல்தான். சந்தேகமில்லை . எழுந்து பரபரப்புடன் ஓடினாள். அவர்கள் வீட்டு வாசலிலே ஒரு கந்தைத் துணியால் சுற்றியபடி கிடந்தது. ஒரு ஆண் குழந்தை. பிறந்து மூன்று அல்லது நாலுமாதம் இருக்கலாம் .விசாலாட்சி அதைத்தூக்கி அன்புடன் அணைத்துக் கொண்டதும் அழுகை குறைந்துவிட்டது. சின்னத்தம்பிக்கு ஒன்றுமே விளங்கவில்லை. குழந்தையைக் கண்டதும் உள்ளம் குளிர்ந்து பூரித்துப் போனார். “கடைசியாக எங்களுக்கும் ஒரு குழந்தை… ஆனால் இது யாருடைய குழந்தை?” யாராவது இருக்கிறார்களோவென்று சுற்றிலும் பார்த்தார்கள். ஆனால் எங்கும் ஒரே அமைதியாய் இருந்தது.

“எங்களுக்கில்லாவிட்டாலும், கடவுள் ஒரு குஞ்சைக் கொடுத்திருக்கார். இப்படி விட்டு விட்டுப் போன பாவி யாரோ? நாங்கள் எங்கள் குழந்தைபோல வைத்திருந்து வளர்ப்போம்” என்று உறுதிப்படுத்திக் கொண்டார்கள்.

விசாலாட்சிக்கு பிள்ளைகளை வளர்த்துப் பரிச்சியம் இல்லை. இது அவளுக்கு புது அநுபவம். குழந்தைக்கு வேண்டிய பால் அவளிடத்தில் ஏது? பசும்பால் கொடுத்து ஒருவாறு சமாளித்தாள் விசாலாட்சி. அவள் குழந்தையைத் தொட்டாலே தேள் கொட்டியது போல் ‘வாள் வாள்’ என்று கத்திப் பிடுங்கியது – குழந்தையை வைத்துப் பார்ப்பதற்கு ஒரு ஆயாவை தேடிக் கொண்டிருந்தார்கள்.

இரண்டு மூன்று தினங்களில் “அம்மா, தர்மங் கொடுங்கம்மா. நாலு நாளாய்ப் பட்டினி பசி காதை அடைக்குது. ஒங்களைக் கெஞ்சுறனம்மா. கோடி புண்ணியம் கிடைக்குமம்மா” என்று கேட்டுக் கொண்டு ஒரு பிச்சைக்காரி அவர்கள் வீட்டு வாசலில் வந்து நின்றாள். விசா லாட்சி குழந்தையை நித்திரையாக்க ஓராட்டிக் கொண்டிருந்தவள் குழந்தையையும் தூக்கிக் கொண்டு வாசலுக்கு வந்தாள். குழந்தை நிததிரை கலைந்து கத்தத் தொடங்கியது. பிச்சைக் காரி “இப்படிக் கொடுங்கம்மா” என்று குழந்தையை வாங்கி பக்குவமாய் அணைத்துக் கொண்டாள். குழந்தையின் அழுகை ஓய்ந்து சிறிது நேரத்திலே நல்லாய்த் தூங்கத் தொடங்கியது.

விசாலாட்சிக்கு அந்தப் பிச்சைக்காரியைக் கண்டதுமே அவள் மேல் ஒரு விருப்பம் வந்தது. அவளை வீட்டில் வைத்திருந்தால் குழந்தையை வளர்க்க உதவியாயிருக்கும் என எண்ணலானாள். தன் விருப்பத்தைப் புருஷனிடம் தெரிவித்து அவளைத் தங்களுடன் இருக் கும்படி கேட்டாள். அவளும் ஒரு பிரபுவின் வீட்டில் ஆயாவாக இருந்து பழக்கப்பட்டவள். உடனே ஒத்துக் கொண்டாள்.

அவர்கள் குழந்தையைச் சுவீகாரம் எடுத்தது நேற்றுப் போல இருக்கிறது. ஆனால் பசுபதிக்கு (பசுபதி தான் குழந்தைக்கு அவர்கள் வைத்த பெயர்) பதினைந்து வயசாகப் போகிறது. சின்னத்தம்பி அவனை கொழும்பில் ஒரு கல்லூரியில் சேர்த்து உயர்தரக் கல்வி கொடுக்க விரும்பினார். விசாலாட்சிக்கு மகனை விட்டுப் பிரிய மனம் துணியவில்லை. அவன் பச்சைக் குழந்தை பாருங்கோ. கொழும்பூரிலே அவனுக்கு யார் துணை? னரோ எவருமில்லை. ஏன் இங்கே படித்த எத்தனையோ பிள்ளைகள் உத்தியோகம் பார்க்கி றார்கள். அவன் இங்கே படித்துக் கொண்டு எங்கள் கண்முன்னே இருக்கட்டுமே” என்று வற்புறுத்திச் சொன்னாள். ஆயாவும் அம்மா சொன்னதைக் கேட்டு மன அமைதி பெற்றாள். அவள் அவர்களிடம் ஒன்றும் சொல்லவில்லை .

சின்னத்தம்பி அவனை கொழும்புக்கு அனுப்பும் கதையைத் திரும்பவும் எடுக்க வில்லை. உண்மையில் அவனுக்கும் பசுபதியைப் பிரிந்திருக்க முடியாது போல் தோன்றியது. ஆகவே பசுபதி ஊரில் ஒரு கல்லூரியில் தன் மேற் படிப்பைத் தொடர்ந்து வந்தான்.

அன்று கல்லூரியின் விடுதலை நாட்கள் தொடங்கும் நாள். பகல் பத்து மணியிருக்கும். பசுபதி கூட்டாளிகள் இருவருடன் வீட்டுக்கு வந்தான். “அம்மா, இன்றைக்கு கடற்கரையிலே ஒரே அமளியா இருக்கிறது. மாணவர்களெல்லாரும் கடலில் நீந்தி விளையாடப் போகி றார்கள். நானும் கோபாலனுடன் போய்வரப் போகிறேன் தாயாரை அனுமதி கேட்டான்.

விசாலாட்சிக்கு அவனைத் தனிய அனுப்ப மனமில்லை. சின்னத்தம்பியும் வீட்டில் இல்லை. அவனைப் போக வேண்டாமென்று எவ்வளவோ சொல்லிப் பார்த்தாள். ஆனால் அவன் ஒரே பிடிவாதமாய் நின்றான்.

விசாலாட்சியால் ஒன்றும் செய்ய முடியாமல் “சரி போயிட்டுவா ராசா. தம்பி கோபால், இவனைக் கவனமாய்க் கூட்டிட்டுப் போய் குளித்து விட்டு சீக்கிரம் வந்த விடுங்கள்” என்று கவனம் சொல்லி அனுப்பிவைத்தாள்.

பசுபதி கூட்டாளிகளுடன் துள்ளிக் குதித்துக்கொண்டு ஓடினான். அவர்கள் போய் மறையுமளவும் பார்த்தபடி நின்றாள் விசாலாட்சி. அவளுக்கு மின்னல் மின்னி மறைந்தது போல் இருந்தது. ஏன் அவனை அனுப்பினேனென்று தன்னையே கடிந்து கொண்டாள்.

இரண்டு மணிநேரம் கழிந்தது. பூம், பூம், பூம்….. விசாலாட்சியின் வீட்டுக்கு முன்னால் ஒரு மோட்டார் வண்டி வந்து நின்றது. விசாலாட்சி ஓடிப் போய் பார்த்தாள். ஓவெனக் கத்திக்கொண்டு கீழே வீழ்ந்து விட்டாள்.

சின்னத்தம்பி அப்பொழுதுதான் வீட்டை நோக்கி வந்து கொண்டிருந்தார். தன் வீட்டுக்கு முன்னால் ஒரு ஜனக்கூட்டம் நிற்பதைப் பார்த்து ஓடி வந்தார். மோட்டாரில் ஒரு உருவம் கிடந்தது. ஆம் பசுபதியின் உடல் – ஐயோ …!

பசுபதி எப்படி இறந்தான்? ஊர் முழுவதும் அன்று அதே பேச்சு – அந்த இடத்திலே குளிக்கப்படாதென்று விளம்பரம் போட்டிருக்கிறார்களே! கடலின் கீழ் பயங்கரமான நீரோட்டம் இருக்கிறதென்று தெரிந்தும் இப்பிள்ளைகள் அங்கே போகலாமா? ஒன்றா, இரண்டா? எத்தனை உயிர்களைக் கவர்ந்து கொண்டான் இந்நீர் அரக்கன். ஆ, விசாலாட்சியும் சின்னத் தம்பியும் தான் பெரும்பாவிகள். கடவுள் கொடுத்த குஞ்சை அவரே எடுத்துக்கொண்டாார். நாம் என் செய்வது என்று பேசி மனசை ஆற்றிக்கொண்டார்கள்.

விசாலாட்சியையும் சின்னத்தம்பியையும் பற்றியே எல்லோரும் அனுதாபப்பட்டார்கள். ஆயா ஒருத்தி இருக்கிறாளே – இவனைப் பாலூட்டி வளர்த்தவள். அவளைப் பற்றிய பேச்சே இல்லை. அவள் ஒரு அனாதைப் பிச்சைக்காரிதானே. அவளுக்கும் இதயம் ஒன்று இருக்கிற தேயென்று எவரும் கவலைப்படவில்லை.

திரும்பவும் அந்த வீட்டில் கனத்த அந்தகாரம் சூழ்ந்திருந்தது – பசுபதியுடன் வந்த பிரகாசமும், விளையாட்டும், குதூகலமும் எங்கே?.. கார்முகிலிலே ஓடிய மின்னல் போல் மின்னி மறைந்து விட்டது.

ஆயாவால் இன்னும் அந்த வீட்டில் இருக்க முடியவில்லை. பசுபதியின் உடைகள், விளையாட்டுச் சாமான்கள், பள்ளிக்கூடப் புஸ்தகங்கள் எல்லாம் பசுபதியை நினைவூட்டிக் கொண்டிருந்தன. அவளைத் தங்களுடன் இருக்கும்படி விசாலாட்சி வற்புறுத்தியும் அவள் கேட்கவில்லை.

அவள் அவர்களை விட்டுப் பிரியும் போது, கண்ணீரும் கம்பலையுமாய் விசாலாட் சியைப் பார்த்து, “அம்மா என்னை மன்னியுங்கள், உங்கள் குழந்தை பசுபதிக்காக என்னை

மன்னித்து விடுங்கள். அவன் நான் பெற்ற குழந்தை!” என்றாள்.

“உன் குழந்தை?” இரண்டு குரல்கள் ஒரே சமயத்தில் ஒலித்தன.

– ஈழகேசரி 23.07.1939

– ஈழத்துச் சிறுகதைக் களஞ்சியம், முதற் பதிப்பு: நவம்பர் 2019, பண்பாட்டலுவல்கள் திணைக்களம், வடக்கு மாகாணம்.

வைத்தியலிங்கம், சி. (1911 - 1991.05.25) யாழ்ப்பாணம், ஏழாலையைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் ரவீந்திரன் என்னும் புனைபெயரால் அறியப்பட்டார். 1930களிலிருந்து சிறுகதைகளை எழுதத் தொடங்கிய இவர், 25 இற்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார். இவர் பராசக்தி, நெடுவழி, மூன்றாம் பிறை, பாற்கஞ்சி, ஏன் சிரித்தார், என் காதல், பைத்தியக்காரி, பார்வதி, பிச்சைக்காரர், உள்ளப்பெருக்கு, டிங்கிரி மெனிக்கா உட்படப் பல சிறுகதைகளை எழுதியுள்ளார். மேலும் இவரது சிறுகதைகள் தொகுப்பு நூல்களாகவும் வெளிவந்துள்ளன.…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *