கதையாசிரியர்:
தின/வார இதழ்: கலைமகள்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 27, 2022
பார்வையிட்டோர்: 4,288 
 
 

(1938ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அன்று வழக்கத்திற்கு விரோதமாகச் சோலை புல் கட்டுக் கொண்டு வந்தான்.

“என்ன, சோலை, உன் ஊட்டுக்காரிக்கு உடம்பு ஏதாவது சுகமில்லையா?” என்று அவனைக் கேட்டேன்.

“அதெல்லாம் ஒண்ணுமில்லிங்கப்பா!” என்று சொல்லி ஓர் அசட்டுச் சிரிப்புச் சிரித்துவிட்டு, சோலை நெளிந்து கொண்டு போய்விட்டான்.

ஆனால் என் மனம் சமாதானப்படவில்லை. உயிரில் ஒரு விதமான ருசியும் இல்லாமற்போன எனக்குத் தினம் சாயங்காலம் மின்னக்கலையின் அழகான முகத்தைப் பார்ப்பது ஓர் ஆறுதலாக இருந்தது. ஒரு விதமான தாங்க முடியாத ஏமாற்றத்துடன் வாசலில் போட்டிருந்த கட்டிலில் போய்ப் படுத்துக்கொண்டேன்.

“ராத்திரி கரூர்லெ வெள்ளி ரதமாம். நான் பார்த்ததே இல்லை. இப்பவே சாப்புட்டூட்டா ஆறு மணி பஸ்ஸுக்குப் போகலாம்” என்று என் மனைவி வாசல் திண்ணையில் நின்று கொண்டு சொன்னாள்.

“நீ வேண்டுமானால் யாருடனாவது போய்விட்டு வா; நான் வரவில்லை. எனக்கென்னவோ மாதிரி இருக்கு” என்றேன்.

“ஆமாம்! ஒரு நா மின்னக்கலையப் பாக்காட்டா அப்படித்தான் இருக்கும்!” என்று என் மனைவி எரிச்சலுடன் சொன்னாள்.

“தாறுமாறாகப் பேசாதே! உன் இஷ்டப்படியே நீ செய், என் இஷ்டப்படி நான் செய்கிறேன்.”

“வாண்டாம் வாண்டாம்! நீங்க இல்லாமெ எனக்கென்ன வெச்சிருக்கு கோவில்லே!” என்று சொல்லிவிட்டு என் மனைவி உள்ளே போய் விட்டாள்.

அரிசி மில்லும் பஸ்ஸும் வந்து கொடுமுடியின் அழகையே குலைத்து விட்டன. அதற்கு முன் அந்த ஊர், அமைப்பும் அடக்கமுமாய் அசல் கிராமாந்தரமாக இருந்தது.

காவேரிக்கரையில் ஊர். சுபிட்சமான பெரிய அக்கிரகாரம்; வளப் பம் கொண்ட நல்ல குடியான தெருக்கள்; தெம்பான வியாபாரிகள். சுற்றிலும் பயிர் பச்சை, தோட்டம் துரவு, மாடு கன்று நிறைந்த ஊர். சதா உயிர் ததும்பிக்கொண் டிருக்கும் காவேரிக்கரையொன்றே போதும்.

கவுண்டர்கள் ‘ஆமப்பா!’, ‘வரேனப்பா’ என்று வார்த்தைகளுக்கு ‘அப்பா’ சேர்த்தே சொல்லுவது வழக்கம்.

அதுவும் காலை வேளையில் பார்க்க வேண்டும். குடியானப் பெண்கள் காப்புகள் ஒலிக்கக் கையை வீசிக்கொண்டு காட்டுக்குப் போகும் காட்சி மனத்தைக் கவரும். அவர்களுடைய நடையிலேயே ஒரு சுறுசுறுப்பும் ஊக்கமும் இருக்கும். சோம்பலற்றவர்கள். நவ நாகரிக முறைகள் இன் னும் அந்தக் கவுண்ட ஜாதியை அவ்வளவாகப் பாதிக்கவில்லை. அப்பெண்கள் தலைமயிரை நன்றாகச் சீவி முடிந்திருப்பார்கள். சில பிராந்தியங்களில் செய்வதுபோல, மயிரை அள்ளிச் செருகுவதில்லை. இளம்பெண்கள் கூட ரவிக்கை அணிவதில்லை. செட்டிநாட்டுப் பெண்கள் போலச் சேலை கட்டுவார்கள்; ஆனால் உடம்பைச் சுற்றினது. போக மிகுந்த தலைப்பை இறுக்கி இடுப்பில் செருகிக்கொள்ளுவார்கள். எல்லோருமே பொதுவாக நல்ல உடற்கட்டுடையவர்கள். முகத்தைப் போலவே உள்ளத் தெளிவும் கொண்டவர்கள். அவ்வளவாகச் சூதுவாது தெரியாது, சாதாரணமாக.

கவுண்டர்கள் பயிர்த் தொழிலில் புலிகள். இடுப்புக் கோவணத்துடன் இரவு பகலாக நிலத்திலேயே பாடுபடுவார்கள். தஞ்சாவூர் திருச்சி ஜில்லாக் குடியானவர்கள் போல உடம்பு வணங்காதவர்கள் அல்ல. காவேரியையும் கிணற்றையும் வைத்துக்கொண்டு மூன்று போகம் பயிர் ஏற்றிவிடுவார்கள். உழவு மாடு இல்லாத கவுண்டனே சாதாரணமாக இருக்க மாட்டான்.

பிதுரார்ஜிதமாக எனக்கு அந்த ஊரில் ஒரு வீடும் கொஞ்சம் நிலமும் உண்டு. வடக்கே பல ஆண்டுகள் சர்க்கார் உத்தியோகம் செய்துவிட்டு மனைவியும் நானும் கடைசியாக அங்கே வந்து வாசம் செய்தோம். குழந்தை. கள் இல்லாத குறையை நீக்க என் மனைவி பல ஸ்தல யாத்திரைகள் செய்து முடித்தாள். ஏதாவது பொழுதுபோக்க வேண்டுமே. வீட்டில் ‘பல் பட்ட’ கிடாரிக்கன்று ஒன்றைச் செல்வமாக வளர்த்து வந்தேன். அதற்குக் காமு என்று பெயர் வைத்துச் சதா சதிபதிகள் இருவரும் அதன் பணிவிடையில் ஈடுபட்டோம்.

ஊரில் எல்லாரும் என்னை ஒருவிதமான பித்தன் என்று எண்ணியிருந்தார்கள். ஆனால் நான் ஒருவர் ஜோலிக்கும் போகாமல், நான் உண்டு, என் காரியம் உண்டு என்று இருந்ததால் என்னிடம் ஒரு மரியாதையும் மதிப்புங்கூட இருந்தன அவர்களுக்கு. ஓர் உத்ஸவம், பஜனை சமாராதனை என்றால் தாராளமாகக் கொடுத்தேனாதலால் கிராமத்தில் ஒரு ஸ்தானமும் எனக்கு இருந்தது.

ஒரு நாள் சாயங்காலம் கயிற்றுக் கட்டிலைத் தெருவில் போட்டுக் கொண்டு உட்கார்ந்திருந்தேன். மூன்றாம் வீட்டுக் கணபதி ஐயர் விசிறியும் கையுமாக வந்து சேர்ந்தார்.

“இன்னிக்கிக் கட்டாயம் மழை வரும்” என்றார்.

எனக்கென்னவோ அந்த விஷயத்தில் அப்பொழுது அவ்வளவு சிரத்தை ஏற்படவில்லை. “வரலாம்!” என்றேன்.

தெருவழியே ஒரு கவுண்டப் பெண் புல்கட்டு எடுத்துக்கொண்டு போனாள். புல் தளதளவென்றும் பச்சைப் பசேலென்றும் இருந்தது. அதை எடுத்துச் சென்ற பெண் அதற்கு ஒப்பிடக்கூடிய புதுமையுடன் இருந்தாள். ‘அனாக்ரா தம் புஷ்பம்’ (மோவாத மலர்) என்று துஷ்யந்தன் சகுந்தலையைப் பற்றிச் சொன்னது எனக்கு ஞாபகத்திற்கு வந்தது. அப்பொழுதுதான் பூத்த ஒரு புது மலர்போல இருந்தாள் அந்தப் பெண்.

எனக்கு வயசு நாற்பத்தைந்திற்கு மேலாகிறது. ஆசை, மீசை எல்லாம் நரைத்துப் போய்விட்டன.

அப்பொழுது நான் அந்தப் பெண்ணின் சோபையைக் கண்டு பிரமித் தேன் என்றால் அது ஆசையால் அன்று! அழகும் புஷ்டியும் கொண்ட என் காமுவைப் பார்க்கும் பார்வையுடன் பார்த்தேன். ஒரு வாலிபன் பார்க்கும் கண்ணுடன் நான் அவளைப் பார்க்கவில்லை.

“புல்லுக்கட்டு என்ன பிள்ளெ வெலை?” என்று அவளைப் பார்த்துக் கேட்டேன்.

தெருவின் நடுவே சுமையுடன் நின்று கொண்டு இளமையின் வெட்கத்தால் என்னைப் பார்க்காமல் பார்வையை ஒரு பக்கமாகச் செலுத்தியவளாய், “ஒண்ணரைப் பணமப்பா!” என்றாள்.

நான் தனியாக உட்கார்ந்திருந்தால் அவள் இரண்டரைப் பணம் சொல்லியிருந்தாலும் வாங்கியிருப்பேன். பக்கத்தில் கணபதி ஐயர் இருந்ததை உத்தேசித்து, “சொல்லு, பிள்ளெ!” என்றேன்.

‘அரைப் பணத்துக்குச் சீரழிகிறது, சார், கட்டு” என்றார் கணபதி ஐயர். பெண்ணின் முகத்திலே கோபக்குறி தோன்றியது. திரும்பிப் போக யத்தனித்தாள்.

“இந்தா பிள்ளே, என்ன அவ்வளவு கோவிச்சுக்கிறியே?” என்று நான் கொஞ்சம் சிரித்துக்கொண்டு அவளைக் கூப்பிட்டேன்.

அவளும் லேசாகச் சிரித்துவிட்டு, “ஒரு பணம்னா போடறேனப்பா!” என்றாள்.

பக்கத்திலே கணபதி ஐயர், “அரைப் பணத்திற்குத் தானே போட்டு விட்டுப் போவாள், ஸார். நீங்கள் சும்மா இருங்கள்” என்றார்.

அவர் சொன்னது என் காதில் படவில்லை. அவளைக் கண்டு நான் மெய்ம்மறந்து போனேன்.

நடுத்தரமான உயரம். அவள் பதினேழு பதினெட்டு வயசிற்குத் தகுந்த உடலமைப்புக் கொண்டிருந்தாள். கறுப்புமல்ல, சிவப்புமல்ல. பக்கத்துப் பார்வையில் முகவெட்டு மிகவும் கம்பீரமாக இருந்தது. ராணிபோல நிமிர்ந்து நின்றாள். சேலையின் தலைப்பை மடித்துத் தலையில் போட்டு அதன் மேல் புல்கட்டை வைத்துக்கொண் டிருந்தாள். கடிவாளத்தின் இழுப்பில் துடித்து நிற்கும் குதிரைபோல நின்றாள்.

“சரி, ரேழியில் கொண்டு போடு!” என்று சொல்லிவிட்டு நானும் எழுந்து சில்லறை எடுக்க உள்ளே போனேன்.

நான் வருவதற்குள் கட்டைக் கீழே போட்டுவிட்டுத் தலைப்பை உதறி இடுப்பில் செருகிக்கொண்டு விட்டாள்.

“நாளைக்கும் கொண்டாரையா?” என்று கேட்டுக்கொண்டே காசைக் கொடுத்தேன்.

“ஆகட்டுங்க” என்று சொல்லிவிட்டு வெள்ளிமெட்டி ஒலிக்க நடந்து போய்விட்டாள்.

அடுத்த நாள் அவள் வந்தபொழுது அவளைச் சில கேள்விகள் கேட்டேன்.

“உன் பெயர் என்ன அம்மா?”

“மின்னக்கலை” என்று சுவரில் சாய்ந்து கொண்டு வெட்கத்துடன் பதில் சொன்னாள்.

“கல்யாணம் ஆகிவிட்டதா?”

“ஆகிவிட்டது” என்று அவள் குனிந்து கொண்டு தலையை ஆட்டினாள்.

“உன் புருஷனுக்கு என்ன வேலை?”

“கவுண்டன் ரயில்லே போட்டருங்க” என்று தலை நிமிர்ந்து சொன்னாள்.

நாலைந்து மாதம் இந்தமாதிரி தினம் புல் கொண்டுவந்து போட்டாள். மாதம் நாலு ரூபாய் என்று மொத்தமாகப் பேசிவிட்டேன். மண் மணல் இல்லாமல் நல்ல புல்லாகக் கொண்டுவந்து போட்டாள்.

என் மனைவிக்கு என்னவோ அவளைக் கண்டது முதலே பிடிக்கவில்லை. காரணமின்றி அவளிடத்தில் ஓர் அசூயை கொண்டாள்.

“பிடி புல்லைக் கொண்டுவந்து போட்டுட்டு ஏமாத்தறா! அவள் பசப்பிலே நீங்க மயங்கிப்பேட்டேள்” என்றாள் ஒரு நாள்.

“என்ன இப்படி அர்த்தமில்லாமல் பேசுகிறாய்? பிடி புல்லா கொண்டு வருகிறாள்? பெரிய கட்டு என்று எல்லாரும் சொல்லுகிறார்கள். அவள் பசப்புகிறாள் என்கிறாயே, அந்தக் குழந்தையைப்பற்றி நீ இப்படிச் சொல்லலாமா?” என்று நான் சொன்ன பிறகு என் மனைவி என்னிடம் அவளைப்பற்றி அதிகமாகப் பேசுவதில்லை. ஆனால் அவள் மனத்தில் மட்டும் அந்த எண்ணம் விடவில்லை.

மின்னக்கலை தன்னுடன் ஓர் இளமையையும் இன்பத்தையும் – தினமும் கொண்டுவந்தாள். அவளுடைய மிதப்பான நடையும் மெதுவான குரலும் எனக்கு ஆறுதலாக இருந்தன. என் வாழ்க்கையின் வெயில் தாபத்தினுடைய இறுதியில் அவள் தினமும் ஒரு மலர்க் காற்றுப் போல வந்து குளுமை கொடுத்தாள்.

என் வாத்ஸல்யத்தை ஊகித்து அறிந்துவிட்டவள் போல் என்னிடம் ஒரு மகள் போன்று நடந்து கொண்டாள்.

தீபாவளிக்கு நான் அவளுக்கு ஒரு சேலை வாங்கிக் கொடுத்தேன். என் மனைவி என்னுடன் ஒரு வாரம் பேசவில்லை.

“என்னடி முட்டாளாயிருக்கிறாயே? நமக்குக் குழந்தைகளா, குட்டிகளா? ஓர் ஏழைப் பெண்ணுக்கு உபகாரம் செய்தால் நல்லது தானே?”

“என் தங்கை பெண்ணுக்குச் செய்யுங்களேன்!”

“அவளுக்குத் தான் பெற்றவன் பிடிபிடியாகச் செய்கிறானே.”

பதினைந்து இருபது நாள் சோலையே புல் கொண்டுவந்து போட்டான். மின்னக்கலையைக் கண்ணால் பார்க்காத அப்பொழுது தான் அவள் தேவை எனக்கு நன்றாக அர்த்தமாயிற்று. என் வாழ்க்கையில் காலியாக, நிரம்பாமல் இருந்த ஓரிடத்தை அவள் பூர்த்தி செய்துவிட்டாள். அவள் என் பார்வையில் இருக்கிறாள் என்ற திருப்தியே என் வாழ்க்கையை ஸபலமாக்கிற்று. அவளுக்கு ஆதரவாக இருக்கிறோமென்ற நினைவே எனக்குப் போதுமானதாக இருந்தது. அவளைக் காணாமல் எனக்கு இருப்புக் கொள்ளவில்லை.

ஒருவேளை என் மனைவி ஏதாவது அவளை வராதே என்று தடுத்திருப்பாளோ என்றுகூடச் சந்தேகப்பட்டேன்!

ஒரு நாள் அகஸ்மாத்தாக வயலுக்குக் குடியானத் தெரு வழியாகப் போகலாமென்று போனேன். சோலை வீடு அங்கு எங்கேயோ இருக்கிற தென்று தெரியுமே ஒழிய இடம் தெரியாது. ஒரு தெரு மூலை திரும்பி ஒரு குறுக்குத் தெருவில் நுழைந்தேன்.

அப்படியே நடுத்தெருவில் நின்றுவிட்டேன். எதிரே ஒரு சின்ன வீட்டின் முன், சாணி தெளித்து மெழுகியிருந்த மண் தரையில், எங்கோ பார்த்துக்கொண்டு படுத்திருந்தாள் மின்னக்கலை. பக்கத்தில் ஒரு மொட்டை வண்டி இருந்தது.

அவளைப் பார்த்துக்கொண்டு அப்படியே நின்றேன். என்னை அறியாமலே என் கண்களில் நீர் நிறைந்தது. அவள் கர்ப்பம்! அதனால் தான்….என் முன் அந்தக் கோலத்துடன் வர வெட்கப்பட்டுக்கொண்டு தன் புருஷனை அனுப்பியிருக்கிறாள்!

ஆகையால் அவளை அப்பொழுது கலவரப்படுத்த எனக்கு இஷ்டமில்லை. ஆனால் திடீரென்று திரும்பி அவள் என்னைப் பார்த்துவிட்டாள்.

சட்டென்று எழுந்து ஓடிக் கதவின் பின் நின்றுகொண்டு, “வாங்க சாமி , வாங்க! இந்த வண்டியிலே உட்காருங்க!” என்று சொல்லிவிட்டு எதிர் வீட்டுச் சிறுமியைச் சமிக்ஞை செய்து அழைத்தாள். அவளை உள்ளே கூட்டிக்கொண்டு போய் வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு மூன்றும் ஓர் ஓலைத் தட்டில் வைத்து அவளிடம் கொடுத்தனுப்பினாள்.

“கவுண்டன் புல்லுக்குப் போயிருக்காரு. இதோ வந்துடுவாரு…” என்று சொல்லிக்கொண்டு தெருக்கோடியை எட்டிப் பார்த்தாள்.

கொஞ்ச நேரத்திற்கெல்லாம் சோலை வந்தான்.

“என்ன சோலை, எங்கிட்ட ஏன் சொல்லவேயில்லை?” என்று கேட்டேன்.

இருவரும் வெட்கித் தலைகுனிந்து கொண்டார்கள்.

“சோலை, நீயா புல் பிடுங்கப் போகிறாய்?”

“ஆமாங்க. போட்டர் வேலேலெ ஒண்ணும் வல்லிங்க. சின்ன டேசனுங்க.”

“பின் எப்படி காலக்ஷேபம்?” என்று ஆச்சரியத்துடன் கேட்டேன்.

“ஒங்க நாலு ரூவாதானுங்க கஞ்சி ஊத்துது.”

“அட பாவி என்னிடம் ஏன் சொல்லவில்லை?” என்று பதைத்துப் போய்க் கேட்டேன்.

“நீங்க இன்னும் என்னதான் செய்வீங்க? அவ வீடு கூட்டலாம்னா”

அவன் சொன்னது என் காதில் படவில்லை. எனக்கு உயிரில் ஓர் பற்றை ஏற்படுத்தி உற்சாகம் கொடுத்த மின்னக்கலை அவ்வளவு நாளாக அரைவயிறு கஞ்சி குடித்து வந்திருந்தவள் என்ற எண்ணம் என்னைத் திடுக்கிடச் செய்தது. என் குழந்தையைப் பட்டினி போட்ட குற்றவாளிபோல நான் வேதனை அடைந்தேன்.

“உனக்கு உழவு வேலை தெரியுமா?” என்று திடீரென்று கேட்டேன்.

“நல்லாத் தெரியுங்க; ஊர்லெ எடமில்லீங்க.”

“என் பண்ணை ஆளாக இரு!”

சோலை வெலவெலத்துப் போனான். அவனுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. அவன் கண்கள் கலங்கிவிட்டன.

“பிள்ளை குட்டி நல்லாயிருக்கணும்” என்று கும்பிட்டான்.

“எனக்குப் புள்ளெயும் கிடையாது; குட்டியும் கிடையாது. எல்லாம் மின்னக்கலைதான்” என்று முகத்தை மறுபக்கம் திருப்பிக்கொண்டு சொன்னேன். மின்னக்கலையின் முகத்தைப் பார்க்க வெட்கி, சொல்லிக் கொள்ளாமலே விர்ரென்று கிளம்பி வீடு வந்து சேர்ந்தேன்.

– ஜூன், 1938 – கலைமகள் கதம்பம் (1932-1957), வெள்ளி விழா வெளியீடு, முதற் பதிப்பு: ஏப்ரல் 1957, கலைமகள் காரியாலயம், சென்னை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *