கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 4, 2024
பார்வையிட்டோர்: 3,470 
 

(2002ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 7-8 | அத்தியாயம் 9-10 | அத்தியாயம் 11-13

அத்தியாயம்-9

ஜன்னலோரம் முதுகு காட்டியபடி நின்றிருந்த பரத்தை நோக்கி தயக்கமும், பயமும், வெட்கமுமாய் மெல்ல அடிமேல் அடி எடுத்து வைத்து நடந்தாள், அஸ்வினி.

அவனோ திரும்பாமல் நின்றிருந்தான்.

“க்கும்…” என்று செறுமி, தான் வந்திருப்பதை உணர்த்தினாள்.

“இங்கே வா” என்றான், மெல்லிய குரலில்.

அருகில் சென்றாள்.

திடீரென்று மின்சாரம் தடைபட… குபீரென்று இருட்டு பரவியது.

அஸ்வினி பயந்துபோய் அவனைக் கெட்டியாகப் பற்றிக் கொண்டாள்.

உடல் சிலிர்த்தது, பரத்திற்கு.

அவளைத் தன் பக்கமாய் இழுத்து மார்போடு சேர்த்து தழுவினான்.

பயத்தில் அவன் மார்பில் ஒட்டிக்கொண்டாள்.

பரத்திற்கு அவளின் துடித்த இதழ் நினைவிற்கு வர, அழுத்தமாய்க் கவ்வினான்.

இருட்டு, குளிர், தனிமை, வாலிபம்… இருவரின் எதிர்ப்புச் சக்தியையும் கட்டிப்போட்டுவிட்டு உணர்ச்சிகளைத் தூண்டிவிட…

நடக்கக்கூடாத உறவிற்கு அஸ்திவாரம் போட்டனர்.

பரத்திடமிருந்த நல்ல குணங்கள் அத்தனையும் உறங்கிய போய் மிருகம் விழித்துக்கொண்டது. அஸ்வினி, கோபியின் சொத்து என்ற எண்ணத்தை அடியோடு விலக்கிவிட்டு, சில நிமிடங்களிலேயே அவளை முழுமையாய்ப் பிழிந்து எடுத்து விட்டான்.

பத்தாவது நிமிடம் மின்சாரம் வந்தது.

நெற்றியில் இதழ் பதித்துவிட்டு, முகத்தை உயர்த்தியவனைப் பார்த்து தீயைத் தொட்டாற்போல் அதிர்ந்தாள்.அஸ்வினி.

“நீங்களா?”


இரவில் உறக்கம் வராமல் கொட்டக் கொட்ட விழித்திருந்தான், பரத்.

“ரொம்ப கட்டுப்பெட்டியா இருக்கிறாள்! சரியாகவே பேசமாட்டேங்கிறா… என்னதான் வெட்கம்னாலும் இப்படியா? இவளை வழிக்குக் கொண்டுவரவே மூணு மாசம் ஆகும் போலிருக்கே!” என்று புலம்பியபடி தூங்கிப் போய்விட்டான், கோபி.

பரத்திற்கு தன்னை நினைத்தாலே கோபமாய் வந்தது.

‘நானா… நானா அப்படி நடந்தேன்? இன்னொருத்தருக்கு நிச்சயம் செய்யப்பட்ட பெண் என்று தெரிந்தும் என் உணர்ச்சிக்கு இரையாக்கிக்கொண்டேனே… என்ன மனிதன் நான்? இல்லை அவள் மீது நான் வைத்திருந்த அளவுக்கதிகமான காதல்தான் என்னை அப்படி நடக்க வைத்திருக்கிறது. என்றாலும் நானொரு சந்தர்ப்பவாதி. என் சுயநலத்துக்காக அவளைப் பலிவாங்கிவிட்டேன். என்னைக் கோபி என்று நினைத்துதான் அனுமதித்திருக்கிறாள்… எவ்வளவு பெரிய நம்பிக்கைத் துரோகி நான்? என்ன செய்யப் போகிறேன்?விசயமறிந்தால் அமுதா என்னைப் பற்றி என்ன நினைப்பாள்? தீராத பழியல்லவா செய்துவிட்டேன்?’

குற்ற உணர்ச்சி அவனைப் பாடாய்ப்படுத்திற்று.


அஸ்வினிக்கு பயத்தில் காய்ச்சல் வந்துவிட்டது. பரத்தின் அறையிலிருந்து வந்தவளால் கோபியை நிமிர்ந்து பார்க்கமுடியாதபடி தொண்டையில் முள் சிக்கிக்கொண்ட உணர்வு.

உண்மையாகவே பரத்தை மனதிலிருந்து அகற்றி, கோபியுடன் ஆத்மார்த்தமாய்ப் பழகி, அவனுக்கு நல்ல மனைவியாய் வாழ ஆசைப்பட்டாள்.

ஆனால், நடந்ததோ?

தலையை வலிக்கிறது என்று சுருண்டு படுத்துவிட்டவளைத் தொந்தரவு செய்ய கோபிக்கு மனமில்லை. பரத்துடன் படுத்துக்கொண்டான்.

நள்ளிரவில் அஸ்வினிக்கு காய்ச்சல் கூடிவிட்டது.

அமுதா பயந்துவிட்டாள். கோபியையும், பரத்தையும் எழுப்பி அழைத்து வந்தாள்.

மருத்துவர் வரவழைக்கப்பட்டார். ஊசி போட்டார். மருந்து, மாத்திரை கொடுத்தார்.

காய்ச்சல் குறைய மறுத்து அடம்பிடித்தது. உடம்பு தூக்கித் தூக்கிப் போடவே விடிந்ததும், சென்னைக்குக் கிளம்பி விட்டார்கள்.

அஸ்வினியின் பெற்றோர் பதறிவிட்டனர்.

மருத்துவமனையில் சேர்த்து… மூன்று நாளான பிறகே இயல்பு நிலைக்கு வந்தாள்.

வீட்டிற்கு அழைத்து வந்தபிறகும் எதையோ பறிகொடுத்தவளைப் போல் காணப்பட்ட மகளைப் பார்த்து பெற்றவர்கள் பயந்துபோயினர்.

தயாளனும், கோபியும் வீட்டிற்கு வந்து நலம் விசாரித்தனர். குற்ற உணர்வு, அஸ்வினியை நிமிர்ந்து பார்க்கவிடாமல் தடுத்தது.

அப்பாவிற்குத் தெரியாமல் கிசுகிசுத்தான், கோபி.

“எல்லாம் என்னாலதான் அஸ்வினி! என்னோட தனிய இருக்கணும்ங்கிற பயத்திலேதான் இப்படியாயிடுச்சு மன்னிச்சிடு” கன்னத்தை மென்மையாய் வருடி, இதமாய் சொன்னபோது… பொங்கிவந்த அழுகையைக் கட்டுப்படுத்த சிரமமாய் இருந்தது.

“உடம்பை நல்லா கவனிச்சுக்கம்மா. மனசுல எந்தக் குறையும் இருக்கக்கூடாது. அப்புறம் உடம்பு சரியில்லைங்கிற காரணத்தை வச்சு கல்யாணம் தள்ளிப்போயிடப்போகுது, நீ சீக்கிரமா எங்க வீட்டுக்கு விளக்கேத்த வரணும்!” என்றார் தயாளன்.

அஸ்வினிக்குத் தன் உடம்பெங்கும் புழுக்கள் நெளிவு போல் இருந்தது.

அவர்கள் சென்றுவிட்டார்கள்.

நடந்த சம்பவத்தை அவளால் ஜீரணிக்க முடியவில்லை.

பரத் மீது அவள் அதுவரை வைத்திருந்த காதலும் மரியாதையும் தவிடுபொடியானது.

‘ஆள் மாறாட்டம் செய்தது கோபியும், பரத்தும்தான். எனக்கும், அமுதாவுக்கும் தெரிய வாய்ப்பில்லை. அறைக்கு வந்தது நான்தான் என்று தெரிந்தே பரத் என்னைச் சூறையாடி இருக்கிறார் என்றால்…? அவர் எப்படி நல்ல மனிதனா இருக்க முடியும்?

நண்பனுக்கும், மனைவியாய் வரப்போகிறவளுக்கும், நண்பனின் மனைவியாக ஆகப்போகிறவளுக்குமல்லவா நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டார்? கறைபடிந்த என்னை, குழந்தை உள்ளம் கொண்ட கோபிக்கு எப்படி கொடுப்பேன்? என்ன செய்யப்போகிறேன்? இந்தச் கல்யாணத்தை எப்படியாவது நிறுத்தியாகணுமே…’

‘எப்படி நிறுத்துவது?’

யோசிக்க யோசிக்க தலைவலிதான் அதிகமாயிற்று.

அன்று…

அதிசயமாய் பரத் அவளுக்கு போன் பண்ணினான்.

“எப்படியிருக்கே அஸ்வினி?”

“…”

“நீ என்மேல கோபமாயிருக்கேன்னு எனக்கு நல்லாவே தெரியும். நடந்த தவறுக்கு நான்தான் முழுக் காரணம். அதுக்காக என்னை மன்னிச்சிடுன்னு சொல்லித் தப்பிக்க நினைக்கலே, ஒரு உண்மையைச் சொல்லட்டுமா? நான் உன்னை நேசிச்சேன், உன்னையே கல்யாணம் பண்ணிக்கணும்னு ஆசைப்பட்டேன்…”

“எ…என்ன?”

“ஆமாம் அஸ்வினி ! அதை உன்னிடம் சொல்ல சந்தர்ப்பம் பார்த்திருந்தேன். ஆனா, அதுக்குள்ளே உனக்கு நிச்சயம் ஆயிடுச்சு. நான் துடிச்சுப்போயிட்டேன். அந்த நேரம் பார்த்து வீட்டில் அமுதாவுக்கும், எனக்கும் நிச்சயம் பண்ணிட்டாங்க. மறுக்கமுடியாத சூழ்நிலை…”

அஸ்வினியால் நம்ப முடியவில்லை. நம்பாமலும் இருக்க முடியவில்லை.

‘பரத்தும் என்னை நேசித்தாரா? ஊமைக்கோட்டானாய் இருந்து என் வாழ்க்கையை நானே கெடுத்துக் கொண்டேனே!’ கண்ணீர் பெருகி கன்னத்தை நனைத்தது.

“இப்பக்கூட ஒண்ணும் ஆகிடலை! நீயும், நானும் போலித்தனமா வாழுறதைவிட, நாம ரெண்டு பேரும் வாழ்க்கையிலே ஒண்ணுசேருவோம்.”

“எ…என்னது…?”

“ஆமாம் அஸ்வினி! நடந்த உண்மையை உங்க வீட்டில் சொல்லி, கல்யாணத்தை நிறுத்து. நானும் நிறுத்திடுறேன். நானே உங்க வீட்டுல வந்து பேசுறேன்!”

“என்ன பேச்சு பேசுறீங்க? இதென்ன சினிமாவா? நினைச்சப்ப காட்சிகள் மாறுவதற்கு? இதனால என்னென்ன விளைவுகள் ஏற்படும் தெரியுமா?”

“அதைப்பற்றி யோசிக்க இப்ப அவகாசம் இல்லை அஸ்வினி”

“ஆனா, அவசியம் இருக்கே?”

“என்ன சொல்றே?”

“என் கல்யாணம் நடக்காது. அது உறுதி. ஆனா, உங்க கல்யாணம் நடக்கணும், நடக்கும்!”

“புரியலே…”

“அமுதாவுக்கும், எனக்கும் உள்ள நட்பு உங்களுக்கே நல்லாத் தெரியும். திருமணம் நம்ம நட்பைப் பிரிச்சிடக் கூடாதுன்னு அழுத நல்ல தோழி. அவளுக்காக நான் என் உயிரையும் கொடுப்பேன். காதல் தோல்வியிலே முடிஞ்சா எவ்வளவு வலியைத் தரும் என்பது உங்களுக்கே தெரியும். அமுதா உங்களை உயிருக்குயிரா காதலிக்கிறா. நீங்க எடுக்க நினைக்கிற முடிவால் அவள் எந்தளவிற்குப் பாதிக்கப் படுவாள்னு நினைச்சுப் பாருங்க.”

“அதுக்காக?”

“இந்த எண்ணத்தையே மறந்திடுங்க. உங்க மனசுல இருந்து என் நினைப்பையும் போக்கிடுங்க. உங்களைப் பிரிஞ்சி அமுதாவால் வாழமுடியாது. என்னால அவளோட வாழ்க்கை பாழாகிறதைப் பார்த்துக்கிட்டு நான் உயிரோடு இருக்க மாட்டேன். என் வாழ்க்கையில் நடந்தது விபத்து. அது அமுதா உட்பட யாருக்கும் தெரிய வேண்டாம்! தெரிஞ்சா… அவள் உயிரோடு இருக்கமாட்டா! எங்க நட்பைப் பிரிக்கிற எந்த உறவும் எனக்குத் தேவையில்லை.”

“அஸ்வினி…”

“தயவுசெஞ்சு உங்க கல்யாண ஏற்பாட்டைக் கவனியுங்கள், இனி, இது விசயமாய் தயவுசெய்து பேசாதீங்க” என் கூறிவிட்டு தொலைபேசியை வைத்துவிட்டாள். மனசு லேசானது போல் இருந்தது.

‘பரத் என்னைக் காமத்தோடு தொடவில்லை, காதலோடு தான் தொட்டிருக்கிறார். போதும்… இனி எந்த நினைப்பும் எனக்குள் இருக்கக்கூடாது. அமுதா நன்றாயிருக்க வேண்டும். அவள் மகிழ்ச்சி எனக்கு முக்கியம்! தவிர, எனக்கும் கோபிக்கும் நடக்கவுள்ள கல்யாணத்தை உடனே நிறுத்தியாக வேண்டும்’.

‘சரி… என்ன காரணத்தைச் சொல்லி நிறுத்துவது? கோபி மீது குறை சொல்ல எதுவுமில்லாதபோது என்னவென்று சொல்வேன்? அப்படியானால் நான் வேறு யாரையோ நேசிக்கிறேன் என்றல்லவா நினைத்துக் கொள்வார்கள். என்ன சொல்லப்போகிறேன்? எவ்வளவு காலத்திற்கு கல்யாணமே வேண்டாம் என்று தவிர்க்க முடியும்?

எனக்கடுத்து செல்வி இருக்கிறாள். அவளுக்கும் வரன் பார்க்கிறார்கள். அப்படியிருக்க, நான் சொல்வதை லட்சிய செய்வார்களா? அப்பாவின் உடல்நிலை சரியில்லை. எந்த அதிர்ச்சியான விசயத்தையும் தாங்கிக்கொள்ளும் நிலையில் இல்லை. திருமணத்தை நிறுத்துங்கள் என்ற வார்த்தை அவருக்கு அதிர்ச்சியைத் தருமே?

ஆனால்….ஆனால்… எப்படியாவது இந்தக் கல்யாணத்ை நிறுத்தியாக வேண்டும். என்னால் காலம் முழுக்க பொய்யாக வாழமுடியாது. என்ன செய்யப்போகிறேன்? கடவுளே எனக்கு ஒரு வழிகாட்டு!-திக்குத் தெரியாத காட்டில் தவிப்பது போல் தவித்தாள், அஸ்வினி.


சேதுராமனும் செண்பகமும் களைப்புடன் வீட்டிற்கு நுழைந்தனர்.

“அஸ்வினி… அம்மாவுக்குக் குடிக்க கொஞ்சம் தண்ணீ கொண்டு வா”.

தண்ணீர் கொண்டுவந்தவள், “ஏம்ப்பா, அம்மா ரொம்ப சோர்வா இருக்காங்க?”

“உனக்கு திடீர்னு உடம்புக்கு முடியாமபோச்சில்லே? கல்யாணம் நடக்கப்போகிற நேரத்திலே இதென்ன சோதனைன்னு பயந்துட்டா. கல்யாணம் நல்லபடியா நடக்கணும்னு உங்கம்மா அங்காளம்மன் கோவில்ல அங்கபிரதட்சணம் பண்ணினா. இந்தாம்மா… இது உன் கல்யாணத்துக்காக வாங்கின மாங்கல்யம். அம்மன் மடியில் வச்சு அர்ச்சனை பண்ணினோம். இதைக் கொண்டுபோய் பூஜையறையிலே வை!”

அப்பா, அடுத்துப் பேசின எதுவும் அவள் காதில் விழவில்லை. அடியோடு ஸ்தம்பித்துப்போயிருந்தாள், அஸ்வினி.

அத்தியாயம்-10

முன்னரே நிச்சயித்தபடி கோபி-அஸ்வினி திருமணம் விமரிசையாக நடந்தது.

‘அஸ்வினிக்கு இப்படியொரு ராஜவாழ்க்கையா?’ என்று அவளின் சொந்தபந்தங்கள் வியந்தன.

அமுதா, பரத்துடன் திருமணத்திற்கு வந்திருந்தாள். மணக்கோலத்தில் அமர்ந்திருந்த அஸ்வினியை பரத் கண்ணீருடன் பார்த்துக்கொண்டிருந்தான். அதற்கடுத்த வாரமே அவர்கள் இருவருக்கும் திருமணம்.

முதலிரவு!

கோபி, அஸ்வினிக்காக காத்திருந்தான்.

தடதடக்கும் நெஞ்சுடன் வந்தவள், அவன் காலில் விழ முயன்றாள். 

அவளைத் தடுத்து பக்கத்தில் உட்கார வைத்துக்கொண்டவன், சொன்னான்: “எனக்கு இதெல்லாம் பிடிக்காது”. 

“…”

“உன்கிட்டே எனக்குப் பிடிச்சதே, இந்த வெட்கமும், தயக்கமும், அடக்கமும்தான். பெண்கள் இப்படிதான் இருக்கணும். இதுதான் அவர்களுக்கு அழகு!” 

சூடிழுத்தது போலிருந்தது அஸ்வினிக்கு, சட்டென தலை உயர்த்திப் பார்த்தாள். 

“உன் கண்கள் ரொம்ப அழகு அஸ்வினி. உன்னைப் பார்த்ததுமே எனக்கு ரொம்ப பிடிச்சுபோச்சு. நான் இதுவரைக்கும் எந்தப் பெண்ணையும் காதலிச்சதே இல்லே! அப்பாவுக்கு என் மேலே ரொம்ப பாசம். எனக்கு என்னவெல்லாம் வேணும்ங்கிறது அவருக்குத்தான் தெரியும். அதனாலதான் என் மனைவியைத் தேர்வு பண்ணுற முழு உரிமையையும், அவர்கிட்டேயே ஒப்படைச்சிட்டேன்…”

“…” 

“எங்ககிட்டே பணத்துக்கு குறைச்சல் இல்லே, நல்ல, அடக்கமான, பண்புள்ள பெண்ணா, அடங்கி நடக்கிற பெண்ணுதான் இந்த வீட்டுக்கு மருமகளா வரணும்னு தேடினார். நீ கிடைச்சே”. 

அஸ்வினிக்கு கண்களில் நீர் திரண்டது. ‘இதற்கெல்லாம் நான் தகுதியானவள்தானா?’ 

“நாமெல்லாரும் கொடைக்கானலுக்கு போயிருந்தப்ப உன்கிட்டே மனசுவிட்டு நிறைய பேசணும்னு ஆசைப்பட்டேன். ஆனா, உனக்கு காய்ச்சல் வந்து ஊருக்கு திரும்ப வேண்டியதாயிடுச்சு! உனக்கு ஏன் காய்ச்சல் வந்ததுன்னு எனக்குத் தெரியும்!” 

“தெ… தெரியுமா? எ… எப்படி?” 

“கல்யாணத்துக்கு முன்னாடியே நான் உன்னை தொட்டுடுவேனோங்கிற பயம்தானே? அதனாலதானே?” 

அதற்குமேல் அவளால் தாங்க முடியவில்லை. ‘சொல்லி விடலாமா? என் மீது இவ்வுளவு நம்பிக்கையும், பாசமும் வைத்திருக்கிறாரே! இவரை ஏமாற்றுவது துரோகமல்லவா?’

“எ… என்னை மன்னிச்சிடுங்க!” 

“சே… ஏம்மா அழுறே? கட்டிக்கப்போறவனா இருந்தாலும், அந்த விஷயத்தில் அந்நியனா நினைக்கிற இந்த நெருப்பு குணம் எல்லாப் பெண்களுக்கும் அவசியம். தாம்பத்தியம்ங்கிறது செக்ஸ் மட்டுமே சம்பந்தப்பட்டது இல்லை.”

“…” 

“முதல்ல ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுகிட்டு, அதுக்குப் பிறகு ஒண்ணா சேரணும். நீ மனசளவில் இன்னும் குழந்தையா இருக்கிறே. ஒரு பயம் இருக்கு. அதெல்லாம் குறையணும். பரஸ்பரம் நல்லா புரிஞ்சுகிட்டு நீ தெளிவான பிறகுதான் மத்ததெல்லாம். அதுவரைக்கும் நான் காத்திருப்பேன்.. பயப்படாதே. ரொம்ப களைப்பா இருக்கு, தூங்கு!” ஒரு குழந்தையிடம் தாய் காட்டும் பரிவைப் போல் இருந்தது அவன் அன்பு.

அந்த அன்பே அவளை சித்திரவதை செய்தது. 

பல இரவுகள் அவனறியாமல் தலையணை நனைத்தாள்.

நாளாக…. ஆக… அவன் காட்டும் அன்பு உறுத்தியது. இதயத்தைக் குத்திக் கிழித்தது. 

‘இப்படியொரு கணவன் கிடைக்க பெண்கள், எத்தனை கோவில்களைச் சுற்றுகின்றனர்? ஆனால், எந்த தவமும் செய்யாமலேயே கடவுள் எனக்குக் கொடுத்த அருமையான வரமல்லவா என் கணவன்! அந்தத் தவறு மட்டும் நடக்காமல் இருந்தால் எவ்வளவு ஆனந்தமாய் இருந்திருப்பேன்?’

‘தெரிஞ்சோ, தெரியாமலோ பெரிய தவறு செய்து விட்டேன். என்னை மன்னித்துவிடு கடவுளே! என்னால் இனி என் கணவரை எந்தக் காரணத்திற்காகவும் பிரிய முடியாது. அவருடன் எந்த உறுத்தலுமின்றி குடும்பம் நடத்த ஆசைப்படுகிறேன். அதற்கான தைரியத்தை எனக்குக் கொடு!’ கண்ணீர்விட்டு அழுதாள். 

கோபியுடன் மகிழ்ச்சியாய்க் குடும்பம் நடத்தினாள். தயாளனுக்கும் அஸ்வினியை மிகவும் பிடித்துப்போனது. மகளைப் போல் பாசம் காட்டினார். 

இரண்டு தெரு தள்ளியே பரத் வீடு இருந்ததால் அமுதாவும், அஸ்வினியும் தினமும் சந்தித்துக்கொண்டனர். வாழ்க்கைப் பயணம் சீராக ஓடிக்கொண்டிருந்தது. 

திருமணமாகி ஒரு மாதம் ஆனது. 

அன்று காலையில் எழுந்ததில் இருந்தே அஸ்வினிக்கு தலையைச் சுற்றியது… குமட்டியது. 

அடிவயிற்றிலிருந்து பீரிட்டு வாந்தி எடுத்தாள். பதறிப்போனான், கோபி. 

“என்னாச்சு அஸ்வினி?”

“தெரியலீங்க… தலைசுத்துது….” 

கோபி உடனே போன் பண்ணி மருத்துவரை வரவழைத்தான். 

தயாளனும் மருமகளுக்கு என்னவோ ஏதோ என்று துடித்துவிட்டார். 

அவளைப் பரிசோதித்த மருத்துவர் பங்கஜம், முகம் மலர, அஸ்வினியின் கன்னத்தில் செல்லமாய்த் தட்டினார். 

“அம்மாவாகப் போகிறே அஸ்வினி. அதுக்குத்தான் இத்தனை ஆர்ப்பாட்டமும்.” 

“என்ன… நான் தாயாகப் போகிறேனா?” வயிற்றைத் தொட்டுப் பார்த்து பூரித்துப்போனாள். 

“என்ன டாக்டர்?” புரியாமல் பார்த்தான். 

“வாழ்த்துகள் கோபி”. 

“எதுக்கு?” 

“நீங்க அப்பாவாகப் போறீங்க!” 

“உண்மையாவா?” நம்பமுடியாத இன்ப அதிர்ச்சியில் கண்கள் விரிந்தன. 

“ஆமா!” 

“நன்றி டாக்டர்… எவ்வளவு பெரிய செய்தி சொல்லி இருக்கீங்க! உங்களுக்குத்தான் முதல் இனிப்பு தரணும்.” 

முகம் கொள்ளாத சிரிப்புடன் வெளியே வந்தார்,மருத்துவர்.

“உங்க அப்பா எங்கே?” 

“மருமகளுக்கு ஏதும் ஆகிடக்கூடாதுன்னு சாமிகிட்டே மனு கொடுக்க பூஜையறைக்குப் போனார்! நான் என் அஸ்வினியைப் பார்க்கலாமா டாக்டர்?” 

“தாராளமா போய்ப் பாருங்க. நான் உங்கப்பாவைப் பார்த்திட்டு வர்றேன். அப்புறம் கோபி, சாயங்காலம் அஸ்வினியை என் ‘கிளினிக்’கிற்கு அழைச்சிட்டு வாங்க”. 

“சரி டாக்டர்” என்றவன், அவசரமாய் அறைக்கு ஓடினான்.

உள்ளே நுழைந்த வேகத்தில் அஸ்வினியை அப்படியே தூக்கினான். 

“விடுங்க…. விடுங்க….என்ன இது சின்னப் பிள்ளையாட்டம்?” செல்லமாய்ச் சிணுங்கினாள். 

“மகிழ்ச்சியில் தலைகால் புரியலே அஸ்வினி! எவ்வளவு பெரிய தித்திப்பைக் கொடுத்திருக்கே தெரியுமா? அதுவும் ரெண்டே மாசத்தில்!” முத்தத்தால் அவள் முகமெங்கும் எச்சில்படுத்தினான். 

கோபியின் கேசத்திற்குள் கையைவிட்டுக் கலைத்து விட்டவள், அன்பின் மிகுதியில் அவன் நெற்றியில் இதழ் பதித்தாள். 

“நன்றி”. 

“நன்றியா… எதுக்கு?” 

“என்னை அம்மா ஆக்கினதுக்கு?”

“எனக்கொரு ஆசை அஸ்வினி!”

“என்ன… சொல்லுங்க”. 

“ஆண்டுக்கு ஒரு குழந்தைன்னு டஜன் குழந்தைகள் பெத்து தருவியா?” 

“ஒரு டஜனா? அம்மாடி… என்னால முடியாது!”

“எனக்குக் குழந்தைன்னா உயிர்” 

“அதுக்காக? ஏதோ ஆறேழுன்னா பரவாயில்லே…. ஒரேயடியா டஜன்கணக்கிலேன்னா நான் என்னாவது?” கணவனும், மனைவியும் மகிழ்ச்சியுடன் பேசிக் கொண்டிருக்க… 

“கோபி…” என்ற மருத்துவர் பங்கஜத்தின் குரல் அந்த பங்களா முழுக்க எதிரொலித்தது. 

கோபியும், அஸ்வினியும் என்னவோ ஏதோவென்று பதறியபடி ஓடினர். 

அங்கு தயாளன் தரையில் சரிந்திருக்க, பதற்றத்துடன் அவரின் நாடித்துடிப்பை ஆராய்ந்துகொண்டிருந்தாள், பங்கஜம். 

“டாக்டர்.. அப்பாவுக்கு என்னாச்சு?” 

“மாமா… மாமா…” -அஸ்வினி அழைத்தாள். 

“நீங்க தாத்தாவாகப் போறீங்கன்னு சொன்னேன். அவருக்கு நெஞ்சுவலி வந்திடுச்சு. உடனே ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போகணும்!” 

“கடவுளே…” என்றபடி அவரைத் தூக்கிக்கொண்டு காருக்கு ஓடினான், கோபி.

ஆனால், தயாளனின் உயிர் எப்போதோ பறந்துவிட்டது.

– தொடரும்…

– மாலை மயக்கம் (நாவல்), முதற் பதிப்பு: நவம்பர் 2002, ராணி முத்து, சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *