(1977ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
காலை பத்து மணிப் பொழுது –
திருவாட்டி தில்லைக்கூத்தனுக்குப் போரடிக்க ஆரம்பித்து விட்டது. எட்டு மணிக்கு முதலே அவர் அலுவலகத்திற்குப் போய் விடுவார். அவர் நின்றால் பொழுது போவதே தெரியாது – காலை ஆறுமணிக்கே கட்டிலுக்குக் கோப்பி கொண்டு போக வேண்டும்.
“இஞ்சருங்கோ …. எழும்புங்கோ ….. நேரம் போட்டுது, கிடக்கிறியள்”.
அவர் எழுந்து, படுத்தபடியே கைகளை உயர்த்தி சோம் பல் முறித்துக்கொண்டு, எழும்புவதற்கு விரும்பாதவர் போல மீண்டும் குப்புறப் படுத்து விடுவார்.
“எழும்புங்கோ!…இதென்ன குழந்தைப் பிள்ளையள் மாதிரி…” என்றவாறே அவர் கைகளைப் பிடித்துத் திருப்பித் தூக்கிவிடுவா. அவரும் குழந்தையைப் போலச் சிணுங்கிக் கொண்டே எழுந்திருப்பார். இவவும் பக்கத்திலே கட்டிலில் அமர்ந்து தேநீரை எடுத்து ஆதரவோடு கொடுப்பா. தூக்கத் தில் கலைந்து நெற்றியில் விழுந்திருக்கும் கேசங்களைப் பரிவோடு ஒதுக்கிவிடுவா – சில இடங்களில் நரை விழத்தொடங்கிவிட்டது! அதைப்பார்க்க இவவுக்குப் பொறுக்க முடியாத கவலை தான் பொங்கிக்கொண்டு வரும். ஒன்றிரண்டு மயிர்கள் தான் நரைத் திருக்கிறது. அவற்றைப் பிடுங்கிவிடலாம் எனத் தோன்றினாலும் ‘நரைமயிர் பிடுங்கினால் இன்னும் கூடப் பரவுமாம்’ என்று எங்கேயோ கேள்விப்பட்ட பயத்தில், கவலையுடன் பிடுங்காமலே விட்டுவிடுவா; வயதும் கூடிக்கொண்டுதான் போகுது.
வயது கூடிக்கொண்டு போனாலும், அவர் அவவுக்கு ஒரு குழந்தையைப் போலத்தான். காதலித்துத் திருமணம் முடித்து ஏழுவருடங்களைக் கடந்தும் ஆயிற்று! ஆனால் இன்னும் பிள்ளைச் செல்வம் இல்லாதது ஒரு பெரிய குறைதான். பார்க்காத டாக்குத்தர்மாரும் இல்லை. கேளாத சாத்திரங்களும் இல்லை, வேண்டாத தெய்வங்களும் இல்லை. டாக்குத்தர்மார் கையை விரிச்சது போலவே சாத்திரிமாரும் அடிச்சுச் சொல்லிப்போட்டான்கள் “உங்கடை சாதகத்துக்குப் பிள்ளைப்பாக்கியம் கிடையாது” என்று!
“பாவம்…அந்தக்கவலை தான் போலை! அவரைப் போட்டு வாட்டுது” என நினைத்துக்கொள்வா. முடிந்தவரை அவருக்கு அந்தக்கவலை தெரியாத அளவுக்கு நடந்து கொள்வா.
திருவாட்டி தில்லைக்கூத்தனைப் பார்த்தால் சரியான வயதை மதிப்பிட முடியாது. இன்னும் ஒரு குமரியைப் போலத் தான். ஒருநாளைக்கு முன்னூறுதரம்’ கண்ணாடியின் முன்னால் நின்று கொண்டு அலங்கரிப்பு நடக்கும். எல்லாம் அவருக்காகத்தான். மாலையில் அவர் வருகின்ற நோமாக பின்னி விடப்பட்ட கூந்தலை முன்னே கொஞ்ச விட்டு வழிமேல் விழிவைத்துப் பார்த்திருப்பா. அவவைக் கண்டதும் தில்லைக்கூத்தனுக்கு வேலை செய்த களைப்பு எல்லாமே பறந்துவிடும். கடவுள் பெண்களைப் படைத்ததன் இரகசியம் இது தான் என நினைத்துக்கொள்வார். ‘பலவிதமான வேலைகளினாலும் தொல்லைகளினாலும் களைப்படைகின்ற ஆணினுடைய மடக்கும் உள்ளத்திற்கும் மருந்தாக அமைபவள் பெண்- அன்பான மனைவி’.
“என்ரை மனிசியைப் பார்த்தால்…மஹாலட்ஷிமி மாதிரி” என்று அப்படியே அவளை அணைத்துக்கொண்டு உள்ளே போவார். இப்படி ஒருவர் மனதை ஒருவர் புரிந்துகொண்டு நடப்பதால் பிள்ளையில்லாத கவலை தோன்றுவதில்லை தான்.
ஆனால் அவர் வேலைக்குப் போய்விட்டால்…இருட்டி தனிமையாயிருக்கும் பொழுது போரடிப்பது என்னவோ உண்மை தான். அவர் எட்டு மணிக்கு வேலைக்குப் போன பின்னர் அந்தக் கையுடனே அமர்ந்து மத்தியானச் சமையலையும் ஆரம்பித்தால் பத்து மணிக்கு முதலே முடிந்துவிடும். அதன் பின்னர் புத்தகங்களும் பத்திரிகைகளும் தான் துணை.
வெளியே சைக்கிள் மணி ஒலித்தது.
பத்திரிகைக்காரச் சிறுவன் வந்திருந்தான். பத்திரிகையை வேண்டி, தலையங்கச் செய்திகளை மேலோட்டமாகப் பார்த்த வாறே ‘ஈஸிச்செயரில்’ சாய்ந்தா.
அரசினர் பாடசாலைகளில் மாவட்ட சேவைத் திட்டத்தின் கீழ் தராதரப்பத்திரமற்ற உதவி ஆசிரியர் பதவிகள் என்ற தலையங்கத்தில் கூடிய சீக்கிரம் ஐயாயிரம் ஆசிரியர்கள் சேவைக் கமர்த்தப்பட இருக்கிறார்கள் என்ற செய்தி வெளியிடப்பட்டிருந்தது. செய்தியை இரண்டு மூன்று முறை ஆனந்தமாக வாசித்துப் பார்த்தா. அதே பத்திரிகையிலேயே இன்னொரு பக்கத்தில் மாதிரி விண்ணப்பப்பத்திரமும் வெளியாகியிருந்தது. தேவையான தகமைகளுடன் தனது கல்விப் பொதுத் தராதரப்பத்திர (சாதாரண) சிரேட்ட பாடசாலைப் பெறுபேறுகளை ஒப்பிட்டுப் பார்த்தா. நூல் பிடித்தது போலச் சரியாகப் பொருந்தியது.
திருவாட்டி தில்லைக்கூத்தனுக்கு இருப்புக்கொள்ளவில்லை. இந்தச் சந்தோஷமான செய்தியை யாரிடமாவது சொல்லவேண் டும் போலிருந்தது. எழுந்து குசினிப்பக்கமாக ஓடினா. பின்பக்க வேலியால் பக்கத்து வீட்டு பரமேஸ்வரி அக்காவைக் கூப்பிட்டுக் கதைக்கலாம். குசினிவரை ஓடிவிட்டுப் பின்னர் அதையும் விரும் பாமல் திரும்பி முன்னுக்கு வந்தா. பரமேஸ்வரி அக்காவுக்கு இரண்டு பெண் பிள்ளைகள் படிப்பை முடித்துவிட்டு உத்தி யோகத்தை எதிர்பார்த்து இருக்கிறார்கள். வாய்கிடவாமல் மடைச்சி மாதிரி’ அதுகளுக்கும் சொல்லிவிட்டால் பின்னர் அது களும் அப்பிளிக்கேசன்’ போட்டுவிடுங்கள். திருவாட்டி தில்லைக் கூத்தனின் மனது இதை ஏற்கவில்லை. ‘எப்படியாவது’ இந்தப் பதவியை தான் எடுத்துவிட வேண்டும் என நினைத்துக்கொண்டா. பலநாட்கனவு நனவாகிக் கொண்டிருப்பதைப் போல் மகிழ்ச்சி மனதெல்லாம் பாவியது. இந்தாளையும் காணயில்லை…நேர காலத்துக்கு வந்தாலாவது சொல்லலாம்” என அங்கலாய்த்தா.
திருவாட்டி தில்லைக்கூத்தனுக்கு எப்படியாவது தான் இந்த ஆசிரியர் பதவியை எடுத்து விடவேண்டுமென்ற ‘நியாய பூர்வமான’ ஆசை தோன்றியதற்குப் பல காரணங்கள்;
அந்த வீதியிலே இருக்கின்ற, மிஸஸ் சதாசிவம், அன்னபூரணி ரீச்சர், அற்புதம் ரீச்சர் ஆகியோர் நினைவில் வந்தார்கள். இனி, அவர்களைப்போலவே தானும் புதிய புதிய சேலைகளைக் கட்டிக் கொண்டு அலங்காரமாக; குடையும் ஆட்டிக் கொண்டு போய் வரலாம் என்ற எண்ணம் பொங்கியது. பள்ளிக்கூடத்துக்குப் போகும்பொழுதும் வரும்பொழுதும் பஸ் சிற்காகக் காத்து நிற்பதிலுள்ள கஷ்டங்களையும், அதனால் சில வேளைகளில் வேறு லொறிகளிலோ – கார்களிலோ தொத்திக் கொண்டு வரவேண்டி ஏற்படுகின்ற அசௌகரியங்களையும் அவர் கள் சொல்லும் பொழுது, இவ ஆற்றாமையுடன் கேட்பது வழக்கம். சில வேளைகளில் ‘பிறின்சிப்பல்’ தனது காரிலேயே தன் னைக் கொண்டுவந்து விடுவார் என அன்னபூரணி பெருமையடித்துக்கொள்வாள். சக ஆசிரியர்களின் விளையாட்டான குறும்புகளைப் பற்றியும் அவள் கதைகதையாகச் சொல்வாள். விடியற் காலை நேரத்தோடு எழுந்து, சமைத்துச் சாப்பாடு கட்டிக் கொண்டு போக வேண்டிய அலுப்பைப் பற்றி சதாசிவம் மிஸஸ்சும் அற்புதம் ரீச்சரும் வாயடித்துக் கொள்வார்கள்.
இப்பொழுது அந்த விஷயங்களிலுள்ள திறில் களை எண்ண மகிழ்ச்சியேற்பட்டது. இனி, அவர் வேலைக்குப் போன பின்னர் தனிமையிலிருந்து போரடிக்கத் தேவையில்லை – எல்லாவற்றிற்கும் மேலாக, ஒரு பிள்ளையாவது இல்லாத குறைதான் தனக்கு இப்படி உத்தியோக மோகம் ஏற்படக் காரணம் என்ற உண்மையும் மனதிற் கவலையைக் கொடுத்து மறைந்தது.
மத்தியானச் சாப்பாட்டுக்காக, தில்லைக்கூத்தன் வந்த தும் வராததுமாகவே, அவருடைய காதில் விஷயத்தை போட்டாள் திருவாட்டி.
“உனக்கென்ன சொர்ணம் விசரே?…வீட்டிலை நிம்மதியாய் இராமல்…உந்த வெய்யிலுக்குள்ளாலை அலைஞ்சு திரியப் போறியே?”
வெயிலினூடாக வந்த எரிச்சல் அவரை இப்படிச் சினக்க வைத்தது. உண்மையிலேயே மனைவியை உத்தியோகம் அது இதென அலையவைக்கவும் அவருக்கு விருப்பமில்லைத் தான். எத்தனையோ ரீச்சர்மார் உத்தியோகத்திற்காக வெயிலினூடு வேர்க்க விறுவிறுக்க போய் வருவதைப் பார்த்து இவர் இரக்கப்பட்டிருக்கிறார். தன் மனைவியும் அந்த நிலைமைக் குள்ளாவதை விரும்பாமற்தான் அப்படிச் சொன்னார்.
சாப்பிடும் பொழுது சொர்ணத்தின் முகம் ‘இரண்டு முழத்துக்கு நீண்டிருப்பதை’க் கவனித்தார். “அவளும் பாவம். எத்தனை நாளைக்கெண்டுதான்…இஞ்சை தனிய இருந்து கவலைப் படுவாள்…இப்படி ஏதாவது கிடைச்சாலா வது பொழுது போகும்” என நினைத்துக் கொண்டார்.
வேலைக்குப் போகும் பொழுது, “சொர்ணம்…உனக்கு விருப்பமெண்டால் அப்ளிக்கேசனைப் போட்டுப் பாரன்…அதுவும் போட்டவுடனை…இப்ப தூக்கித் தரப்போறாங்களே?” என ஆதரவாகச் சொல்லி விட்டுப் போனார்.
இந்த அளவிலாவது கணவன் ஒப்புக்கொண்டது பெரிய ஆனந்தமாகப் போய்விட்டது, திருவாட்டிக்கு.
மதியச் சாப்பாடு முடித்துக் கொண்டு கச்சேரிக்குச் சென்ற தில்லைக்கூத்தன் இதைப்பற்றிச் சிந்தித்துப் பார்த்தார். எவ்விதத்திற் பார்த்தாலும் இது புத்தியான யோசனையாகவே பட்டது. மனைவி ஓர் ஆசிரியையானால் அது தனது கௌர வத்தை இன்னும் உயர்த்தும் என நம்பினார். வெளியே சென்று நாலு பேருடன் அடிபட்டு வந்தால், பிள்ளையில்லாத குறையும் அவளுக்குத் தோன்றாது.
அவவும் உழைக்கப்போனால் அந்தச் சம்பளத்தில் சீவியத்தை ஓட்டிக்கொண்டு தனது சம்பளத்தை அப்படியே ‘பாங்க்’ பண்ணலாம் என்ற ஆசையும் மேலோங்கியது.
தில்லைக்கூத்தன் கச்சேரியில் ‘இன்ஃபுளூவன்ஸ்’ உள்ள மனுசன் என்பது சக ஊழியரின் கருத்து. பெரிய மனுசரைக் கைக்குள் போடுகின்ற மந்திரம் தில்லைக்கூத்தனுக்குக் கைவந்த கலை. இந்த நேரத்தில் அது கை கொடுக்கும் என நம்பினார்; “அவையளைப் பிடிச்செண்டாலும் அலுவல் பார்க்க வேணும்” என நினைத்துக் கொண்டார்.
மாலையில் ஐந்து மணிபோல அவர் வேலை முடிந்து வந்தபொழுது தான் அன்னபூரணி ரீச்சருடன் கதைத்த விஷயத்தைச் சொன்னா திருவாட்டி.
அன்னபூரணி ரீச்சர் மாலை மூன்று மணிக்கே பாடசாலை முடிந்து வந்து விடுவா. அன்னபூரணிதான் திருவாட்டி தில்லைக் கூத்தனுடைய உற்ற சிநேகிதி – ‘அவளிடம் மனம்விட்டு எதையும் கதைக்கலாம் நல்லவள், வஞ்சகமில்லாமல் கதைப்பாள்’.
“அன்னம்!…ரீச்சிங் போஸ்ற்றுக்கெல்லே கோல் பண்ணியிருக்கிறாங்கள்;”
“ஓமப்பா! நானும் பேப்பரிலை பாத்தனான். நீர் அப்ளை பண்ணயில்லையே?”
“அப்ளை பண்ணச் சொல்லித்தான் இவரும் சொன்னவர்….ஆனால் உதெங்கை எங்களுக்குக் கிடைக்கப் போகுது?”
“ஏன் அப்பிடிச் சொல்லுறீர்…உம்மடை அவரும் கச்சேரியிலை இன்ஃபுளுவன்ஸ் ஆன ஆள்தானே?…அவையள் மூலம் அலுவல் பார்க்கலாம். அல்லது ஜொப் கிடைக்கு மெண்டால் ஐஞ்சைப் பத்தைப் பாராமல் சிலவழிச்சாலும் பறவாயில்லை!”
கதை வளர்ந்தது.
அன்ன பூரணி, தனக்கு ஒருவரைத் தெரிய மென்றும் அவரைப் பிடிச்சால் நிச்சயம் வேலை எடுக்கலாம் என்று சொன் னாள். கஷ்டப்பிரதேசத்துக்குக் கிடைத்த தனது நியமனத்தை ரெளனுக்குள்’ மாற்றி எடுப்பதற்கும் அவர்தான் உதவிபோம். “நல்ல மனுசனப்பா….கட்டாயம் அந்தாள் செய்யும்….வேணுமெண்டால் ஒரு நாளைக்குப் போய்ப் பாப்பம்.”
என்று அபிப்பிராயம் தெரிவித்தாள்.
திருவாட்டி தில்லைக்கூத்தனுக்கும் அது நல்ல யோசனையாகவே பட்டது.
கணவனிடம் இதைத் தெரிவித்த பொழுது. “சரி. சரி…முதல்லை அப்ளிகேசனைப் போடுமென். அதுகளைப் பிறகு பார்க்கலாம்.” எனச் சம்மதம் தெரிவித்தார்.
***
விண்ணப்பம் அனுப்பப்பட்டது.
தில்லைக்கூத்தனும் தனது செல்வாக்கை இயன்றளவு பிரயோகித்தார்.
அன்னபூரணி இந்த விஷயத்தில் அனுபவம் உள்ளவள். மாவட்டக் கல்விக் கந்தோருக்கும், சில அரசியல் புள்ளிகளைச் சந்திப்பதற்கும், திருவாட்டி தில்லைக்கூத்தனை அழைத்துக் கொண்டு போனாள். ‘ஆர் குத்தியும் அரிசியாகட்டும்’ என்ற எண்ணத்தில் தில்லைக்கூத்தனும் விட்டுவிட்டார்.
வழக்கமான பத்திரிகைச் செய்திகளைப் போலல்லாது மூன்று மாதங்களுக்குள்ளேயே நியமனங்கள் வழங்கப்பட்டன.
திருவாட்டி தில்லைக்கூத்தன் இப்பொழுது ‘சொர்ணம் ரீச்சர்’ ஆக மாறிவிட்டா.
***
நியமனம் கிடைத்து மூன்றாவது கிழமையாக பாடசாலை சென்று வந்து கொண்டிருந்தா. சொர்ணம் டீச்சர். இப்பொழுது இலேசான அசதியும் சோர்வும் தோன்றத் தொடங்கி விட்டது. அதிகாலையில் எழும்புவதே பெரிய பாடாக இருந்தது. ஆரம் பத்தில் கோழி கூவமுன்னரே உற்சாகத்துடன் எழுந்து அவதி அவதியாகச் சுரைர், அவருக்கும் கொடுத்துவிட்டு தானும் சாப்பாடு கட்டிக்கொண்டு போன சங்கதி புளித்துப் போய் விட்டதோ!
இரண்டு நாளாக தில்லைக்கூத்தன் கவனித்தார் – சொர்ணம் எழும்புகின்ற பாடாகக் காணவில்லை. அடுத்த நாள் தானே முதலில் எழுந்து, சொர்ணத்தை எழுப்பிப் பார்த்தார். சொர்ணம் எம்புவதற்கு பெரிய பஞ்சிப்படுவது தெரிந்தது. அப்பொழுது நம் தான் மேலிட்டது. அதன் பின்னர் எழுந்த தும் முதல் அவலாக, முதல் நாள் இரவு ‘ஃப்ளாஸ்க்கில் விட்டுவைத்த சுடு தண்ணீரில் தேநீர் கலந்து கட்டிலுக்குக் கொண்டு போவார். இன்னும் இரண்டு நாள் கழிய, சொர் ணம் விழிக்கும் முன்னரே தேங்காய் துருவுதல், காய்கறி மிளகாய் வெண்காயம் நறுக்குதல் போன்ற சமையலுக்குத் தேவையான தொட்டாட்டு வேலைகளைச் செய்து வைத்துவிட வேண்டிய நிலைமை ஏற்பட்டது.
பொழுது பலபலத்து விடியத்தான் சொர்ணம் ரீச்சர் எழுந்து சோம்பல் முறித்துக்கொண்டு வருவா. கணவனைப் பார்க்கப் பரிதாபமாகத்தான் இருக்கும். ஆனாலும் என்ன செய்ய? முடியாமலிருக்கிறது. காலையில் பஸ்சிற்காக நெடுநேரம் காத்து நிற்பதிலேயே சினம் பிடித்துவிடும் – எங்காவது இருக்க முடியாதா என சுற்றிவரப் பார்த்துக் கொள்வா.
அசதியும் சோர்வும் குறைந்த பாடாகத் தெரியவில்லை. ஏதாவது ‘ரொனிக்’ வேண்டிக் கொடுக்க வேண்டுமென தில்லைக் கூத்தன் நினைத்துக் கொண்டார் – “பாவம்…பழக்கமில்லாதவள் வெயிலுக்குள்ளாலை திரியிறது….ஒத்துக்கொள்ளுதில்லைப் போலை” சொர்ணத்தின் முகம் முன்பிருந்த அழகும் செந்தளிப்பும் மாறி வாட்டமடைந்திருந்தது.
மூன்றாம் நாள் பாடசாலையிலிருந்து இடைநடுவிலேயே திரும்பிவர வேண்டியேற்பட்டுவிட்டது. பாடம் நடத்திக் கொண்டிருந்த பொழுது மயக்கமடைந்ததால் ஓய்வெடுத்து வருமாறு அதிபர் அனுப்பிவிட்டார்.
சில நாட்களாக மனதினுள் குமைந்து கொண்டிருந்த சந்தேகம் தீர்ந்து விட்டது.
கணவன் வரும்வரை பயம் கலந்த மகிழ்ச்சியுடன் காத்திருந்தாள். அவருக்கு இன்று வழக்கத்தைவிட விசேஷமான வரவேற்பு நடந்தது. மென்மையான நடுக்கத்துடன் அவர் காதில் சங்கதியை உடைத்த பொழுது,
“எந்த மடைச்சாத்திரி எனக்குப் பிள்ளைப் பலன் இல்லையெண்டவன்?” என் ஆனந்த நடனம் புரியத் தொடங்கினார் தில்லைக்கூத்தன்.
கடவுள் கண் திறந்து சிரித்தார்.
– பலாத்காரம் (சிறுகதைத் தொகுப்பு), முதற் பாதிப்பு: 10-07-1977, தமிழ்ப்பணிமனை, யாழ்ப்பாணம்