“மயில் நடமிடுவோய் மலரடி சரணம்
சரணம் சரணம் சரவணபவ ஓம்
சரணம் சரணம் சண்முகா சரணம்”
ஈஸ்வரி கந்த சஷ்டி கவசம் படித்து முடித்து, கற்பூரம் ஆரத்தி எடுத்து முருகப்பெருமானை மனமார வேண்டி கிருத்திகை பூஜையை முடித்தாள். பூஜை அறையில் இருந்து வெளிவந்த பின்னர், அதில் கலந்து கொண்ட பக்கத்து வீட்டு தோழி வசந்தாவுக்கும், அவள் பெண் அர்ச்சனாவுக்கும் பிரசாதம் கொடுத்தாள். “இன்னிக்கு அவரோட பிறந்த நாள்ல இந்த கிருத்திகை வந்ததால சர்க்கரை பொங்கலும் வடையும் பண்ணேன்.” என்று சிரித்தபடியே பிரசாத தொன்னைகளை அவர்களிடம் கொடுத்தாள். பிறகு அக்கம் பக்கத்தில் இருக்கும் தன் நண்பர்களை பிரசாதம் வாங்கிக்கொள்ள கைப்பேசியில் அழைத்தாள்.
“விஜயா, சரோஜா, இந்திரா வர்றேன்னு சொல்லியிருந்தா. இன்னும் வர்ல பாருடி வசந்தா! நீ அவங்களை பாத்தியா வரும்போது?” ஈஸ்வரி கேட்டாள்.விஜயா இரண்டாம் தெருவில் வசிக்கிறாள்.
“இல்லைடி ஈஸ்வரி, விஜயாவை மட்டும் நாலு மணிக்கு பாத்தேன். இங்கே வரப்போறேன்னு சொன்னாள். பூக்கடைக்கு போயிட்டிருக்கறதா சொன்னாடி. நிச்சயம் வருவா” வசந்தா பதிலளித்தாள்.
ஐந்து பேரும் நல்ல நண்பர்கள் என்றாலும், ஈஸ்வரி, விஜயா, வசந்தா மூவரும் பெரும்பாலும் சேர்ந்தே இருப்பார்கள். ஏதாவது பொருட்கள் வாங்க, மற்றபடி விசேஷ நாட்களுக்காக புடவை துணிமணிகள் வாங்க சேர்ந்தே போவார்கள். மனம் விட்டுப் பேசிக்கொள்வார்கள். கோவில்களுக்கு செல்லும்போதும் அதேபோல்தான். ஆனால் ஐந்து பேரும் அவரவர்களின் வீட்டில் நடக்கும் பூஜைகள் மற்ற விசேஷங்கள் எல்லாவற்றிலும் தவறாமல் கலந்து கொள்வார்கள். இன்று விஜயா இன்னும் வராதது ஈஸ்வரிக்கும், வசந்தாவுக்கும் ஆச்சரியமாக இருந்தது.
“பிறந்த நாள் உன் வீட்டுக்காரருக்கு அப்படின்னு சொன்னே, அவரை எங்கே காணோம்?” வசந்தா கேட்டாள்.
“அவர் இன்னிக்கு லீவு. அவரோட கஸின் ப்ரதர் இங்கே வந்திருக்கார் இன்னிக்கு. ரெண்டு பேரும் கோவில்களுக்கெல்லாம் போகணும்னு அஞ்சு மணிக்கே கிளம்பி போய்ட்டாங்க. வர்றதுக்கு ஒன்பது மணி ஆகும். டின்னர் ஹோட்டலில் முடிச்சுட்டு வருவாங்க.வந்து பிரசாதம் எடுத்துப்பாங்க.அர்ச்சனா வரன் விஷயம் என்ன ஆச்சு? ஏதாவது சரியானபடி வந்துதா?” ஈஸ்வரி கேட்டாள்.
“வந்தபடி இருக்குடி.ஒண்ணும் எதிர்பார்த்த மாதிரி இல்லை. சிலது அவங்க ஓகேன்னா நமக்கு சரியில்லை. இவளுக்கு சிலது பிடிக்கலை. நமக்கு சரியா இருந்தா அவங்க டிமாண்ட் வேற மாதிரி இருக்கு. இப்படி போய்ட்டே இருக்கு. பாக்கலாம், ஏதாவது ஒண்ணு கிடைக்கும். ” என்றாள் வசந்தா கொஞ்சம் கவலையுடன்.
“கவலைப்படாதடி, நிச்சயம் ஏதாவது ஒண்ணு சீக்கிரமே அமையும். இல்லையா அர்ச்சனா?” என்று ஈஸ்வரி அவளைப் பார்த்து கேட்டாள்.
“அதைத்தான்மா நானும் அம்மாகிட்ட சொல்லிட்டே இருக்கேன். அவங்க கேட்காம புலம்பிட்டே இருக்காங்க. நித்யா எப்படி இருக்கா? சமீபத்தில் பேசினாளா? கூப்டும்போது நான் கேட்டேன்னு சொல்லுங்க அம்மா! நவ்நீத் பேசினானா? கனடாவிலேர்ந்து யு.எஸ் போகப்போறான்னு ரெண்டு மாசம் முன்னாடி சொன்னீங்களே, போய்ட்டானா?” அர்ச்சனா கேட்டாள். ஈஸ்வரியை ‘ அம்மா’ என்றே அர்ச்சனா அழைப்பாள்.
“அர்ச்சனா, உன்னோட அழகுக்கும், திறமைக்கும் நல்லவனா ஒருத்தன் வருவான்டி. நித்யா எங்கடி இப்பல்லாம் மாதாமாதம் பேசறா? அவளுக்கு எப்போ டைம் இருக்கோ அன்னிக்கு கூப்புடறா. அந்த நேரம் பார்த்து எனக்கு ஏதாவது முக்கியமான வேலையா இருக்கும். எப்படியோ கொஞ்ச நேரம் பேசிட்டு வச்சிடுவேன். நல்லா இருக்கா. அவ பையனுக்கு ரெண்டாவது பிறந்த நாள் கொண்டாடினா ஒண்ணரை மாசம் முன்னாடி.அப்போ பேசினோம். அப்புறம் இதுவரையில் பேசலை. வாட்ஸப்பில் ஏதாவது அனுப்புவா. நான் அதையெல்லாம் அதிகம் பாக்கறது இல்லை. நவ்நீத் யு.எஸ் இந்த மாசம் போறான். அவனோட பேசியும் கிட்டத்தட்ட ஒரு மாசத்துக்கு மேல ஆயிடுச்சு.” ஈஸ்வரி வருத்தமான முகத்துடன் கூறினாள்.
இவர்கள் பேசிக்கொண்டிருந்த போது விஜயா உள்ளே நுழைந்தாள். ” நாளைக்கு எங்க வீட்டுக்கு அவரோட சித்தப்பா வர்றதா போன் பண்ணாரு. அவருக்கு பிடிச்ச சில கறிகாய்களை வாங்க போனேன்டி, ஈஸ்வரி. அதான் லேட் ஆயிடுச்சு.பூஜை முடிச்சுட்டியா? அர்ச்சனா, எப்படி இருக்கே? எங்கேடி எங்க வீட்டு பக்கம் வர்றதே இல்லை இப்போதெல்லாம்? ” விஜயா கேட்டாள்.
“வேலை தொந்தரவு அதிகமா இருக்கு ஆன்டி இப்போ.வேற ஒரு விஷயமும் இல்லை.” அர்ச்சனா சொன்னாள்.
ஈஸ்வரி, மஞ்சள், சந்தனம், குங்குமம், இவைகளுடன், பூ, பிரசாதம் கொண்டு வந்து விஜயாவுக்கு கொடுத்தாள். விஜயா முருகப்பெருமானை கும்பிட்டு விட்டு அதை வாங்கிக்கொண்டாள். “தஞ்சாவூர் சித்தப்பான்னு உங்க வீட்டுக்காரர் சொல்வாரே, அவரா வர்றார் ” வசந்தா விஜயாவை கேட்டாள்.
“அவர்தான்டி வசந்தா.மூர்த்தி சித்தப்பா. முன்னெல்லாம் அடிக்கடி வருவார். ரெண்டு வருஷத்துக்கு அப்புறம் இப்பதான் வர்றாரு. நல்ல மனுஷன். நல்லா கலகலப்பா பேசுவாரு.” விஜயா பதிலளித்தாள்.
அப்போது சரோஜா, இந்திரா இருவரும் உள்ளே வந்தனர். ” ஈஸ்வரி, கோவிச்சுக்காதேடி. இந்திராவோட மாமியாருக்கு எண்பது வயசு முடியுது, அடுத்த வாரம். அவங்களுக்கு புடவை வாங்கி வர, என்னையும் கூப்பிட்டா. கடையில கூட்டம் அதிகம். அதனால இப்பதான் வந்தோம். உடனே கிளம்பி உங்க வீட்டுக்கு வர்றோம்.” சரோஜா ஈஸ்வரியிடம் இப்படி சொல்லும்போது, ” ஆமாண்டி, அவ லேட்டா வந்ததுக்கும் நான்தான்டி காரணம். என் மேல் கோபப்படு நீ” என்று சிரித்தபடியே இந்திரா சொன்னாள்.
“பரவாயில்லைடி, நல்ல காரியம் விஷயமாத்தானே போய்ட்டு வந்திருக்கீங்க, அதனால தப்பில்லை. இங்கே வந்து சாமியை கும்பிட்டு விட்டு பிரசாதம் தர்றேன். வாங்கிக்கோங்க” என்று ஈஸ்வரி அன்போடு பேசினாள்.
பின்னர் ஈஸ்வரி எல்லோருக்கும் காபி கொடுத்தாள். அர்ச்சனா அவளுக்கு உதவி செய்தாள். அவரவர்களும் தங்களின் சந்தோஷங்களை, கவலைகளை, மனக்குறைகளை பகிர்ந்து கொண்டிருந்தனர். அர்ச்சனா தனது கைபேசியில் மும்முரமாக இருந்தாள்.
ஈஸ்வரிக்கு தன் மகள் நித்யா, குடும்பத்துடன் நெதர்லாந்தில் இருப்பவள், முன்னைப் போல் அடிக்கடி பேசுவதில்லை என்பதும், போன வருடம் திருமணம் ஆன நவ்நீத் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறைதான் கூப்பிடுகிறான் என்பதும் வருத்தமாக இருந்தது. அதே நிலை விஜயா, சரோஜா இருவருக்கும். விஜயாவின் பெண் மஞ்சுளா திருமணமாகி டில்லியில் இருக்கிறாள். சரோஜாவின் பெண் கலா கல்யாணத்துக்கு பின் துபாயில் வசிக்கிறாள். இந்திராவின் மகன் ஆகாஷ் பிரான்ஸ் நாட்டில் மனைவி, ஒரு பெண் குழந்தையுடன் வசிக்கிறான். இந்திராவை அவன் மூன்று மாதத்திற்கு ஒரு முறை மட்டுமே கைபேசியில் அழைக்கிறான் என்ற குறை அவளுக்கு. வசந்தாவின் மூத்த மகள், அர்ச்சனாவின் அக்கா, கல்பனா மலேஷியாவில் இருப்பவள், பேசியே நான்கு மாதங்கள் ஆகின்றன என்று கவலையுடன் சொன்னாள்.அவள் கணவர் அங்கே ஒரு கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றுகிறார். எல்லோரது வாரிசுகளும், அவர்கள் இருக்கும் இடத்தில் பணிபுரிந்து வருகிறார்கள்.
வெவ்வேறு விஷயங்கள் பற்றி இவர்கள் அனைவரும் பேசிக்கொண்டிருந்தாலும் கடைசியாக மேற்கூறிய அந்த மனக்குறையின் சுமை பற்றி அதிகமாகவே பேசினார்கள்.
“என்னதான் பிஸியா இருந்தாலும் நம்மோட பேசறதுக்கு டைம் கிடைக்காம போய்டுமாடி ? இப்பவே இப்படி இருந்தா இன்னும் மீதி காலத்தில் ஒரு அக்கறையும் காண்பிக்க போறதில்லை இவங்க. ஒண்ணை பாத்த மாதிரி எல்லாமே இதே போல இருக்கே! நாமதான் புலம்பறோம். அதுக ஏதாவது லட்சியம் பண்ற மாதிரி தெரியலை.” இப்படி ஆளாளுக்கு தன் பங்குக்கு பேசியபடி இருந்தார்கள். மணி எட்டை நெருங்கியதை பார்த்தாள் ஈஸ்வரி.
பின்னர் ஈஸ்வரி ” என் வீட்டுக்காரர் அவர் கஸினோட வெளியில் சாப்பிட்டு லேட்டாத்தான் வருவார். நீங்க எல்லாரும் ஓகே சொன்னால், உங்க எல்லோருக்கும் டிபன் செஞ்சுடறேன். சாப்பிட்டுட்டு போங்களேன். என்ன வேணும்? இட்லியா, தோசையா, இல்லை அடையா?” என்று கேட்டாள்.
எல்லோரும் அதற்கு சம்மதித்தனர். ஏனெனில் வசந்தாவின் கணவர் அலுவலக நிமித்தமாக வெளியூர் சென்றிருக்கிறார். விஜயா, சரோஜா இவர்களுக்கு முன்னமே தெரியும் தன் வீட்டுக்காரர் அலுவலகத்தில் வருடாந்திர கணக்கு தணிக்கை நடப்பதால், வேலை முடிந்து உணவருந்தி விட்டு தாமதமாகத்தான் வருவார் என்பது பற்றி. இந்திராவின் கணவர் இன்று அலுவலகம் செல்லவில்லை. எனவே இந்திரா அவள் வீட்டுக்கு தாமதமாக வருவது பற்றி அவரிடம் சொல்லி விடுவதாக சொன்னாள்.
இதை கவனித்த அர்ச்சனா ” ஈஸ்வரி ஆன்டி, நாம எல்லோரும் ஒரு சேஞ்ச் ஆக இருக்க நம்ம தனபாக்கியம் அக்கா இட்லி கடைக்கு போய் ஏன் சாப்பிடக்கூடாது? அவங்க கடை இட்லியோட அருமை நம்ப எல்லோருக்கும் தெரியுமே! இப்பவே ஃபோன்ல கூப்பிட்டு சொல்லிடுவோம். என்ன சொல்றீங்க?” என்று மிகுந்த ஆவலுடன் கேட்டாள்.
‘அதுவும் நல்ல ஐடியா தான், நாமும் தனம் கடைக்கு போய் சாப்பிட்டு நாளாயிடுச்சு’ என்றபடியே, தனபாக்கியத்தின் கைபேசி எண்ணை அழுத்தி ஈஸ்வரி பேச ஆரம்பித்தாள். ” சரி, தனம், இன்னும் இருபது நிமிஷத்துல அங்கே வர்றோம் ” என்று கூறி, இவர்களை பார்த்து,”கூட்டம் அதிகமா இல்லை. வாங்கன்னு சொன்னா. நாம் கிளம்பி மெதுவா நடந்தோம்னா கால் மணி நேரத்தில போய்டலாம். நான் பணம் கொடுக்கிறேன். நீங்க ஒண்ணும் செய்ய வேண்டாம். இது என் செலவு.” என்றாள்.
தனபாக்கியம் இட்லி கடைஅங்குள்ள சுற்று வட்டாரத்தில் மிகவும் பிரசித்தம். தனபாக்கியம் கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்கு மேலாக அந்த கடையை நடத்தி வருகிறாள். அறுபத்தாறு வயதாகும் தனபாக்கியத்தின் கணவர் கரும்பாயிரம் ராணுவத்தில் பணிபுரிந்து வீரமரணம் அடைந்தவர். எல்லைப் போரில் மிகவும் துணிச்சலான முறையில், ஆற்றலுடன் போராடியவர் என்று அரசாங்கம் பாராட்டி விருது அளித்தனர். தனபாக்கியம் டில்லியில் சென்று விருதைப் பெற்று வந்தாள். தனபாக்கியம் சுறுசுறுப்பு மிக்க உழைப்பாளி. அவளது வீட்டின் முன்பு ஒரு சிறிய அறை அமைத்து தரச் சொல்லி கரும்பாயிரத்திடம் வற்புறுத்தி அவரும் அதை நிறைவேற்ற, அதில் மாலை வேளைகளில் மட்டும் இட்லி கடை ஆரம்பித்தாள் பதினைந்து வருடங்கள் முன்பு. தரமான தயாரிப்பு, சுவை இரண்டும் இருக்கவே வியாபாரம் சூடு பிடிக்க, அடுத்த இரண்டு வருடங்களில் காலை வேளைகளிலும் கடை நடத்தி வரத்தொடங்கி, இன்று வரையில் நடக்கிறது.
தனபாக்கியத்திற்கு மனோன்மணி, ராணி என்று இரண்டு பெண்களும், குமரன் என்ற பையனும் வாரிசுகள். மூவரையும் தன் உழைப்பால், முக்கியமாக இந்த இட்லி கடையின் வருமானத்தால், சேமிப்பு செய்து பட்டதாரி ஆகுமளவிற்கு படிக்க வைத்து, அதன் பின்னர் நல்ல பொருத்தம் வந்த போது திருமணமும் செய்து வைத்தாள். மனோன்மணி பூனாவில் இருக்கிறாள். ராணி அபுதாபியில் வசிக்கிறாள். குமரன் இந்தோரில் துணிக்கடை வைத்து வியாபாரம் செய்து குடும்பத்துடன் வசித்து வருகிறான். இந்த வாரிசுகள் ஏதாவது ஒரு பொங்கல் பண்டிகைக்கோ அல்லது கோடை விடுமுறைக்கோ இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை வந்து, தனபாக்கியத்துடன் பத்து நாட்கள் தங்கிவிட்டுப் போவார்கள். மற்றபடி கைபேசியில் என்றாவது பேசுவார்கள்.
பிற நாட்களில் தனபாக்கியம் தன் வேலையில் மிகவும் மும்முரமாக இருப்பாள். அந்த ஊரில் அவளது கடையில் இட்லி சாப்பிடாதவர்களே இல்லை எனலாம். அவளது கைப்பக்குவமும் அப்படியே. மிருதுவான இட்லிகள், மூன்று வகையான சட்னியுடன் சுடச்சுட சாப்பிடுவதற்கு காலையும், மாலையும் தினமும் கூட்டமாக நிற்பார்கள். அத்தனை பேருக்கும் புன்னகையுடன் அலுப்பில்லாமல் பதிலளித்து, சேவை செய்வாள் தனபாக்கியம். அதேபோல் ஈஸ்வரியும் அவளுடைய தோழிகளும் தனபாக்கியம் கடைக்கு அடிக்கடி வரும் நிரந்தர வாடிக்கையாளர்கள். அதே போல் பசியுடன் வரும் நபர்களுக்கு அவர்களிடம் பணம் இல்லை என்றாலும் ‘ நீ சாப்பிடு, எப்போ கொடுக்க முடிஞ்சுதோ கொடு’ என்று உபசரிப்பாள்.
“வா, ஈஸ்வரி, அட, அஞ்சு பேரும் சேந்தே வந்திருக்கீங்களா? அர்ச்சனா பொண்ணும் வந்திருக்காளே, சந்தோஷமா இருக்கு எனக்கு இப்போ, இப்படி நீங்க எல்லாரும் சேந்து வந்து ரெண்டு மாசம் இருக்கும் போல இருக்கே!” என்று தனபாக்கியம் ஈஸ்வரியையும் மற்றவர்களையும் அன்புடன் வரவேற்றாள்.
“தனம், என்ன மறந்துட்டியா, போன மாசம்தான் ஒருநாள் காலேல வந்தோமே, ஞாபகமிருக்கா,நீ கூட அன்னிக்கு எங்களுக்காக புதுசா மல்லி சட்னி அரைச்சு கொண்டு வந்தியே, இடைல எங்களால் வர முடியாமல் ஏதேதோ வேலை வந்துடுச்சு”. ஈஸ்வரி சொன்னாள்.
“அட, ஆமாம், ஞாபகம் இருக்கு, ரெண்டு மாசம் ஓடிப்போன மாதிரி இருக்கு எனக்கு.ஒரு அஞ்சு நிமிஷம் இருங்க. அந்த தட்டுலேர்ந்து எடுத்து சூடா தர்றேன். அது வரைக்கும் மெது பக்கோடா சாப்டறீங்களா? சுண்டல் வேணுமா?” என்று தனபாக்கியம் கேட்டாள்.
“இதெல்லாம் எப்ப போட ஆரம்பிச்சே தனம்? பரவாயில்லையே, நல்ல மாற்றம்தான்”. என்று விஜயா கூறினாள். மற்றவர்களும்” ஆமாம், ” என் ஆமோதித்து, ” ரெண்டு ப்ளேட் ரெண்டுலயும் கொடு. நாங்க ஷேர் பண்ணிக்கிறோம்.” என்றனர்.
“வர்றவங்க எல்லாரும் ஏதாவது இது மாதிரி கேக்க ஆரம்பிச்சாங்க, ரொம்ப நாளா யோசிச்சிட்டு இருந்தேன். இப்ப ஒரு மாசமா இப்படி ஏதாவது ஒண்ணு ரெண்டு ஐட்டம் செஞ்சு விக்கறேன். சுண்டல் நல்லா போகுது.” என்றபடி சூடான மெது பக்கோடாக்களையும், கடலை சுண்டலையும் அவர்களிடம் தட்டுகளில் கொடுத்தாள் தனபாக்கியம். அதை ருசித்த பெண்மணிகள் ” சூப்பரா இருக்கு தனம். இதுக்காகவே இனிமேல் நாங்க அடிக்கடி வரவேண்டி இருக்கும் போல் தோணுது” என்று பாராட்டி மகிழ்ந்தனர். இவர்கள் சாப்பிட்டு முடித்த நேரத்தில் சூடான இட்லிகளை கொண்டு வந்து தந்தாள் தனபாக்கியம்.
“கண்ணுங்களா, உங்க பொண்ணு, பசங்க எல்லாம் எப்படி இருக்குதுங்க? எல்லாரும் பேசினாங்களா? எப்போ இங்கே வர்றதா சொன்னாங்க? மறுபடியும் பேசும்போது, நான் அவங்களை கேட்டதா சொல்லுங்கப்பா!” என்றாள் தனபாக்கியம்.
“நல்லா இருக்காங்கன்னு வாட்சப்பில் பாத்துதான் தெரிஞ்சுக்கறோம். மத்தபடி எங்களை கூப்பிட்டு பேசறதெல்லாம் எப்பவாவது நடக்கும் தனம். அடிக்கடி எங்க பேசுறாங்க, ஏதாவது காரணம் சொல்லி வாட்சப்பிலதான் மெஸேஜ் அனுப்பறாங்க. எங்க எல்லாருக்கும் இதே கவலைதான். இப்ப கொஞ்ச நேரம் முன்னாடி கூட அதைப்பத்தி கோபப்பட்டு பேசிட்டு இருந்தோம்.” என்று எல்லோரும் ஒன்று கூடி மாற்றி,மாற்றி அவர்கள் வாரிசுகள் பற்றி சத்தம் போட்டு தனபாக்கியத்திடம் குறை கூறினர்.
“அர்ச்சனா இன்னும் நாலு இட்லி போட்டுக்க, என்ன வயசுப்பொண்ணு, இவ்வளவு மெதுவா சாப்டறே, சட்னி வேணுமா?” என்று தனபாக்கியம் கேட்டாள். அவளுக்கு மட்டும் இல்லாமல் எல்லோரது தட்டிலும் மேலும் இட்லிகளை போட்டாள் தனபாக்கியம். யாரும் மறுப்பு சொல்லவில்லை.
“சரி தனம், உன்னோட பொண்ணு மனோ, ராணி எப்படி இருக்காங்க? குமரன் நல்லாருக்கானா? உனக்கு அதிர்ஷ்டம், அவங்க எல்லா ஞாயித்துக்கிழமையிலும் கூப்பிட்டு பேசுவாங்க, இல்லையா” ஈஸ்வரி, விஜயா, சரோஜா கேட்டார்கள்.
“அதெல்லாம் அப்போ, இப்பவெல்லாம் ரெண்டு மாசத்துக்கு ஒரு தடவை கூப்பிட்டாலே அதிசயந்தான்.எல்லாரும் நல்லா இருக்காங்கன்னு மட்டும் தெரியும். ஏதாவது போட்டோ எப்பவாவது அனுப்புவாங்க. அவ்ளோதான். நானும் அதைப்பத்தி யோசிக்கறதில்லே கண்ணுங்களா!” என்று சிரித்தபடியே கூறினாள் தனபாக்கியம்.
“பாத்தியா தனம், இதே கூத்துதான் எங்கே கேட்டாலும். அப்பா, அம்மாவோட வாரம் ஒரு தடவை பேசுறதுல என்ன குறைஞ்சிடும் இவங்களுக்கு?” ஈஸ்வரி ஆதங்கத்துடன் கேட்டாள்.
“நமக்கு நேரம் ஒதுக்க அவ்வளவு அலட்சியம் அவங்களுக்கு. என்னத்தை சொல்ல?” விஜயாவும், சரோஜாவும் ஒன்று போல குறைப்பட்டார்கள்.
“நாம் மட்டும்தான் சொல்லிட்டே இருக்கோம் இதை. அவங்க இதைப்பத்தி கவலைப்படறதா தெரியலை.” இந்திரா கூறினாள்.
“நானும் நிறைய கல்பனா கிட்ட சொல்லி அலுத்து போயாச்சு! திரும்பவும் அவங்க செய்றதைத்தான் செய்றாங்க.” வசந்தா அலுப்புடன் சொன்னாள்.
எல்லாவற்றையும் புன்னகையுடன் கேட்டுக்கொண்டிருந்த தனபாக்கியம், ” கண்ணுங்களா, ஏன் இந்த மாதிரி அங்கலாய்க்கறீங்க? அவங்களுக்கெல்லாம் கல்யாணம் ஆகி குடும்பத்தோடு செட்டில் ஆகி இருக்காங்க.அதுங்களுக்கு அன்னியன்னிக்கு என்ன முக்கியமான வேலை இருக்கு, எதை முதல்ல செய்யணும்னு கட்டாயம் இருக்கு இதெல்லாம் நமக்கு என்னப்பா தெரியும்? நல்லா இருக்காங்களா, சந்தோஷம், அப்படி எடுத்துட்டு போக வேண்டியதுதான். நம்ப நிலைமை அவங்களுக்கும் அவங்க நிலைமை நமக்கும் தினமும் தெரிஞ்சுக்கணுமா என்ன?” தனபாக்கியம் இவர்களை கேட்டாள்.
“அது அப்படி இல்லை தனம். என்னதான் வேலை இருந்தாலும் பெத்தவங்களுக்கு கொஞ்சம் நேரம் ஒதுக்கலாம் இல்லே, ஏன் உன் பெண்ணுங்களும், மகனும் அதை செய்யலைன்னு உனக்கு வருத்தமா இல்லையா? உனக்கு அந்த கவலை வராதா!” ஈஸ்வரி கேட்க, மற்றவர்களும் ” அதானே, தனம் உன் மனசில் இதெல்லாம் இல்லாம போகாது.நிஜமா சொல்லு” என்றனர்.
தனபாக்கியம் அவர்கள் சாப்பிட்டு முடிந்ததை கவனித்து, எல்லோருக்கும் தண்ணீர் கொடுத்தாள். பிறகு இவர்களை உள்ளே அழைத்து அருகில் இருக்கும் பெஞ்சியை காட்டி “இப்படி உட்காருங்க எல்லாரும். ” என்று கூறிவிட்டு, அப்போது வந்த வாடிக்கையாளர்களுக்கு இட்லிகளை கொடுத்து விட்டு திடமான குரலில் பேச ஆரம்பித்தாள்
“அம்மணிகளா, நீங்க ஒருத்தர் ஒருத்தரும் உங்களுக்கு கல்யாணம் ஆனதுக்கப்புறம் உங்க ஊரைவிட்டு வேற ஊருக்கு உங்க புருஷன் இருக்கற இடத்துக்கு போன நாளுக்கப்புறமா எத்தனை நாள் உங்க பிறந்த வீட்டுக்கு லெட்டர் போட்டீங்க? எத்தனை நாள் அவங்களை ஃபோன்ல கூப்டீங்க? அப்படியே கூப்பிட்டு இருந்தாலும் எவ்வளவு நாளுக்கு அதை விடாம செய்ய முடிஞ்சுது? ஏன், எத்தனை தடவை அவங்க சொந்த ஊருக்கு போக முடிஞ்சுது? நினைச்சுப் பாருங்க. ஈஸ்வரி உனக்கு சொந்த ஊர் திருத்துறைப்பூண்டி பக்கம் இருக்கற கிராமம்னு எனக்கு தெரியும். வசந்தா தஞ்சாவூர் பக்கம், விஜயா திருநெல்வேலி, இந்திரா கும்பகோணம் பக்கம் இருக்கற கிராமம், சரோஜா சீர்காழி கிட்ட.நீங்க சொல்லித்தான் இது எனக்கு தெரியும். நானும் வேற ஊர்தான் திருவண்ணாமலை பக்கத்தில் இருக்கற ஊர். எவ்வளவு தடவை அங்கே எல்லாம் போனீங்க? விரல் விட்டு எண்ணிடலாம் ஏன் போகல இல்லைன்னா எதனால் போகமுடியல சொல்லுங்க பாக்கலாம் “. என்று நிறுத்தி இவர்களைப் பார்த்தாள்.
அவர்கள் ஒவ்வொருவரும்” எனக்கு அந்த நேரத்தில் இப்படி ஒரு வேலை இருந்தது, இங்கே ஒரு முக்கியமானது செய்ய வேண்டி இருந்தது ” இப்படி கூறிவிட்டு, ” அந்த காலத்தையும், இன்னிக்கு நிலைமையையும் எப்படி ஒப்பிட்டு பேசுவே தனம் ” என்று கேட்க, தனம் சிரித்தபடியே, ” அம்மாடி, எல்லா காலத்திலயும் எந்த வேலை முன்னால் செய்யணும்னு நினைக்கிறோமோ அதுக்குத்தான் முன்னுரிமை கொடுப்போம். அவங்கவங்களுக்கு தினப்படி இது மாறும்போது, முதல்ல அதைக்கவனிப்பாங்களா, எதுக்கு முன்னுரிமை கொடுப்பாங்க? யோசிச்சு பாருங்க. உங்களுக்கு எதுக்கெல்லாம் முன்னுரிமை கொடுக்கணும்னு நினைக்கறப்போ மத்த வேலைங்க பின் தள்ளித்தான் போகும். அது மாதிரிதான். உங்க வாரிசுங்களுக்கும், என் வாரிசுங்களுக்கும், இதே நிலைமைதான் இருக்கும். இப்பல்லாம் போட்டி நிறைய. வேலை தொந்தரவு நிறைய. வாழும் முறையும் அவசரகதியில் இருக்கு. குழந்தைகள வழிப்படுத்தறதுக்குள்ள இவங்க ஒரு வழி ஆயிடறாங்க. அதெல்லாத்தையும் சமாளிச்சுட்டு நேரம் கிடைக்கறப்போ நம்மோட பேசுறாங்க இல்லையா? அந்தந்த நேரத்தில இந்த முன்னுரிமை மாறிட்டேதான் இருக்கும். அதுக்கு தகுந்தபடிதான் நாம மாறிக்கணும். நான் இப்படித்தான் எடுத்துக்கறேன். அதனால இதுக்கெல்லாம் மனசைப்போட்டு குழப்பி, காயப்படுத்திக்காதீங்க கண்ணுகளா.” தனபாக்கியம் ஒரே மூச்சில் பேசி முடித்தாள்.
வசந்தா உடனே சொன்னாள். ” தனம் சொல்றதிலயும் நியாயம் இருக்கு. அவங்க எல்லாருக்கும் என்னென்ன தட்டமுடியாத சூழ்நிலைன்னு நமக்கு தெரியாது இல்லையா?”
உடனே அர்ச்சனா இடைமறித்து ” இதேதான் நான் உங்கிட்ட நிறைய சொல்லிருக்கேன். ஆனால் எங்கிட்ட கோபப்படுவ நீ.” என்றாள்.
“நீயும் நாளைக்கு உன் புருஷன் ஊருக்கு போய் குடும்பம் நடத்தும்போது இப்படிதான் இருக்கப்போறே கண்ணு, இதெல்லாம் சகஜம்தான் ” என்றாள் தனபாக்கியம்.மேலும் ” உங்க அம்மாக்கள் எல்லாரும் எத்தினி முறை உன் பாட்டி, தாத்தாவைப் பாக்க போயிருக்காங்க; குடும்பம்னு வந்துட்டா, அதுல உள்ள வேலைதான் முக்கியம்.பாக்கி எல்லாம் அப்புறம்தான். உலக வழக்கம் இப்படித்தான் பெரும்பாலும் போகுது.இல்லையா?” என்று அர்ச்சனாவை நோக்கி கேட்டாள். அவள் அதை ஆமோதித்து” ஆமாம், ஆன்டி, என் கருத்தும் அதேதான் ” என்றாள்.
ஈஸ்வரி எல்லோரும் சாப்பிட்டதற்கு தனபாக்கியத்திடம் பணம் கொடுத்துக்கொண்டே, ” எப்படியோ தனம் இன்னிக்கு இங்கே வந்து சாப்பிட்டதில சந்தோஷம் மட்டுமில்ல, ஒரு தெளிவு கிடைச்சது. வாழ்க்கைல ” ப்ரையாரிட்டி” எப்படியெல்லாம் மாறிடுங்கறதை அழகா சொன்னே! இனிமேல் குழம்பவே மாட்டேன் ” என்று கூறி சிரித்தாள்.
“அது, கரெக்ட்தான். அநாவசியமா மனசை அலட்டிக்கக்கூடாது” என்று மற்றவர்களும் கூறி, தனபாக்கியத்திடம் விடை பெறும்போது, “அம்மணிகளா, நீங்க எல்லாரும் என் சகோதரிங்க மாதிரி நான் என்னிக்கும் நினைக்கிறேன்.அதனால இவ்வளவு தூரம் உங்களுக்கு சொல்ல நினைச்சேன். நீங்க திருப்தியான கவலைப்படாத நினைப்போட இங்கேயிருந்து கிளம்பறது எனக்கு மகிழ்ச்சியா இருக்கு” என்றாள் தனபாக்கியம்.
ஈஸ்வரி, வசந்தா, விஜயா, சரோஜா, இந்திரா அனைவரும் நிறைவான மனதுடன் வீட்டை நோக்கி நடந்தனர். “அப்பாடா, இப்பதான் எனக்கு நிம்மதியா இருக்கு” என்று புன்னகையுடன் அவர்களிடம் சொல்லிக்கொண்டு அர்ச்சனா அவர்கள் பின்னே தொடர்ந்தாள்.