மாறியது நெஞ்சம் மாற்றியது யாரோ?

2
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 20, 2022
பார்வையிட்டோர்: 4,397 
 

அது ஜுரோங் பலதுறை மருந்தகம். காலை வேளை என்பதால் நோயாளிகளின் கூட்டம் நிரம்பியிருந்தது!; கோவிட்19 நடமாட்டக் கட்டுப்பாடுகள் சற்று தளர்த்தப்பட்ட காலக் கட்டம். ஆயினும் நோயாளிகளும் அவர்கள் உடன் வந்தவர்களும் விதிமுறைகளைக் கடைப்பிடித்தனர்! எல்லாருமே முகக் கவசம் அணிந்திருந்தனர். தாங்கள் செல்ல வேண்டிய அறைகளுக்கு வெளியே போடப்பட்டிருந்த இருக்கைகளில் இடைவெளி விட்டு அவர்கள் அமைதியாக உட்கார்ந்திருந்தனர். மருத்துவ ஊழியர்கள் மட்டும் அங்குமிங்குமாக பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தனர்.

நோயாளிகள் அவர்களுடன் துணை வந்தவர்கள் என இருந்த கூட்டத்தில் ஒருத்தியாக கடந்த ஒரு மணி நேரமாக தன் கணவனுடன் காத்திருந்தாள், லட்சுமி! ஐம்பது வயது மதிக்கதக்க லட்சுமியின் வாய் முணுமுணுத்துக் கொண்டிருந்தது. அவள் முகக் கவசம் அணிந்திருந்தாலும், உற்றுக் கேட்டால், அவள் தன் கணவன் நடேசனை திட்டிக் கொண்டிருப்பது தெரியும்.

குடிச்சு, குடிச்சு சீரழிஞ்சது பத்தாதுனு இப்ப என் உசிர வாங்கிட்டுருக்க! உனக்காக நான் லீவு போட்டுட்டு இங்க வந்து உட்காந்து இருக்கேன, என்னே சொல்லனும்! சம்பளம் உன் அப்பனா கொடுப்பான்? புலம்பினாள் லட்சுமி.

இதுக்குதான் முன்கூட்டியே அப்பாய்மெண்ட் (யிpழiவெஅநவெ) எடுத்துக்கிட்டு வரணும். இல்லைனா இப்படித்தான் காத்துக் கிடக்கனும்,லட்சுமி சலித்துக் கொண்டாள். அவளின் இத்தனை வசைகளையும் காதில் வாங்கிக் கொண்டு எங்கேயோ வெறித்துப் பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தான், நடேசன். இப்படி லட்சுமி முப்பது ஆண்டுகளுக்கு முன் அவனை ஏசியிருந்தால் அவள் கன்னம் பழுத்திருக்கும், அவள் கூந்தல் அவன் கையில் சிக்கி இழுப்பட்டிருக்கும். இப்போது அவள் பேசுவதை காதில் விழாதது போல கேட்டுக்; கொண்டு மனம் வெம்பி உட்கார்ந்தருக்கிறான் அவன்;.

நடேசனின் நோஞ்சலான தோற்றத்தை இப்போது பார்ப்பவர்கள் அவனை ஒரு குடிக்காரன் என்றோ, போதைப் புழங்கி என்றோ சொல்லிவிடுவார்கள். அந்த ஒல்லிக்குச்சி உடம்பை தொலதொல கால்;சட்டையும், கொஞ்சம் மடக்கிவிடப்பட்ட முழுக் கைசட்டையும் மூடியிருந்தன! பாழாய் போன அந்த குடியாலும் சிகரெட்டாலும் வந்த வினை தான் நடேசனின் இந்த நிலைக்கு காரணம். இதே நடேசனை அந்த நாளில் தெரிந்தவர்கள் இப்போது பார்க்க நேரிட்டால், எப்படி இருந்தவன் இப்படி ஆயிட்டானே! என்று முகவாய் கட்டையில்; விரலை வைத்து உச்சுக்கொட்டுவார்கள். வயது அறுபதை கடந்துவிட்ட நடேசன் தன் வாலிப வயதில் கட்டுமஸ்தான உடல்வாகு கொண்ட முரட்டுக்காளையாக சுற்றி வந்தவன்! லட்சுமியை பெண்பார்க்க வந்தபோது லட்சுமியின் கண்களுக்கு அவன் தமிழ்பட ஹீரோவட்டம்; இருந்தான். அவனை பார்த்தமாத்திரத்திலேயே பிடித்துப்போய், தனக்கும் அவனுக்கும் பத்து வயது வித்தியாசத்தைக் கூடப் பார்க்காமல், சரியென்று தலையாட்டினாள், திருமணம் இனிதே நடந்து முடிந்தது.

தொடக்கத்தில் நடேசன் சிகரெட் பிடிப்பதையும், கொஞ்சம் மது அருந்துவதையும் பொறுத்துக் கொண்டு போனாள், லட்சுமி. ஆனால் நாளாக நாளாக நடேசன் நடத்தையில் பெருமாற்றம் ஏற்பட தொடங்கியது. சேரக்கூடாத கூட்டாளிகளுடன் சேர்ந்து, கொஞ்சம் கொஞ்சமாக குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி நடேசனின் வாழ்க்கை சீரழிந்து போனது. வேலைக்கு ஒழுங்காக போகாதால் நடேசனுக்கு வேலையும் போனது. அன்று முதல் நிரந்தர வேலை ஏதும் தேடாமல் அவ்வப்போது கிடைக்கும் வேலையை செய்தான். எப்படியோ வாழ்க்கையை நடேசன் குடியும் குடித்தனமாகவும் ஓட்டிக்கொண்டிருக்கையில் ஒருநாள், காப்பிக்கடையில் வாய்பேச்சு நீண்டு கைகலப்பில் முடிய, குடிபோதையில் இருந்த அவன்; வம்பு செய்த சகா ஒருவனின் மண்டையை பாட்டிலால் அடித்துவிட்டான். அது போலீஸ் விவகாரமாக மாறி, அவனுக்கு சிறைத் தண்டனையும் கிடைத்தது. அதைத் தொடர்ந்து நடேசன்-லட்சுமி குடும்ப வாழ்க்கை மேலும் மோசமாகியது. சிறைக்கு போய்வந்தும் கூட திருந்தாதவனை விட்டு பிறந்த வீட்டிற்கு வந்துவிட்டாள் லட்சுமி. ஆனால் சில நாட்களிலேயே அவளைத் தேடி வந்து அழுது தான் திருந்தி விட்டதாகச் சொல்லி அவள் தலை மீது சத்தியம் செய்து அழைத்து போனான்; நடேசன். பிறகு பழைய குருடி கதவைத் திறடி என்பதற்கு ஏற்ப அவன் தன் குடியை தொடர்ந்தான்;, அவள் எதாவது கேட்டால் நடேசனின் கை ஓங்கும்.

அவள் பெற்றோர் இருக்கும் வரை அவளுக்கு ஆறுதலாகவும் பாதுகாப்பாகவும் அவர்கள் இருந்தனர். அவர்கள் ஒருவர் பின் ஒருவராக போய் சேர்ந்ததும் அவள் உடன்பிறப்புகளை கஷ்டப்படுத்த விரும்பாமல், லட்சுமி சகித்துக் கொண்டு நடேசனுடன் வாழத் தொடங்கினாள். நல்ல வேளையாக அவர்களுக்கு பிள்ளைக்குட்டி என்று ஏதுமில்லை. லட்சுமி உயர்நிலை இரண்டாம் வகுப்பு வரை படித்திருந்ததால் ஒரு பள்ளியில்; உதவியாளராக சேர்ந்து நல்ல பெயர் போட்டுவிட்டாள். நடேசனுக்கும் தன் பள்ளியில் துப்புரவு வேலை வாங்கி கொடுத்தாள். அதையும் அவன் தக்க வைத்துகொள்ள முயற்சி செய்யவில்லை. இப்படியாக அந்த வேலையும் போனது. கால ஓட்டத்தில் நடேசன் மருத்துவமனை, மருந்து, மாத்திரை என்று நோயாளியாக மாற, அவனைக் கட்டிக் கொண்டதற்காக திட்டிக் கொண்டு வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருகக்கிறாள் லட்சுமி.

முகமட் சையட்…முகமட் சையட் என்று அழைக்கும் குரல் கேட்டு லட்சுமியின் சிந்தனை ஓட்டம் தடைப்பட்டது. அவள் நிமர்ந்து பார்த்தாள். ஒரு மருத்துவ உதவியாளர், வயதான மலாய்க்காரரை மருத்துவர் அறைக்குள் அழைத்துச் சென்றார். அந்த வயதானவருடன் வந்த சிறுவனும் அவர் கூடச் சென்றான். லட்சுமி அவர்களைப் பார்த்துவிட்டு வேறு பக்கம் திரும்பிய போது, முப்பது வயது மதிக்க ஒரு சீனப் பெண்ணும் அவள் வயது ஒத்த ஒரு சீன ஆடவரும் வருவதைப் பார்த்தாள். அந்த ஆடவரை சக்கர நாற்காலியில் வைத்து அந்த சீனப் பெண் தள்ளிக் கொண்டு வந்தாள். லட்சுமியின் கூர்மையான பார்வை அவ்விருவரையும் கவனிக்கத் தொடங்கியது. அந்த ஆடவரின்; ஒரு கையும் காலும் சூம்பி இருந்தன. பிறவிலேயே அப்படி என்பதை அவனைப் பார்த்ததுமே புரிந்துவிட்டது.

ஜயோ பாவம்,என்று லட்சுமியின் மனதில் ஓடியது. அந்த பெண் லட்சுமி அமர்ந்திருந்த இருக்கையின் எதிர் வரிசையில் அவள் சக்கர நாற்காலியை நிறுத்திவிட்டு காலியாக இருந்த இருக்கையில் அவள் அமர்ந்தாள். அவன் இருமிக் கொண்டு; இருந்தான். அந்தப் பெண் உடனே எழுந்து அவனுடைய முதுகை தடவிக் கொடுத்தாள். பின்னர் குடுவையில் இருந்த தண்ணீரை அவனை குடிக்கச் செய்தாள், வாயைத் துடைத்துவிட்டாள். இத்தனையையும் முகத்தில் வெறுப்போ, முகச்சுழிப்போ இல்லாமல்; அந்தப் பெண் செய்ததை லட்சுமி கவனித்தாள். அவள் மனதில் ஒரு நெருடல் ஏற்பட்டது! உடனே நடேசனைத் திரும்பி பார்த்தாள். அவன் எங்கேயோ வெறித்து பார்த்துக் கொண்டிருந்தான். லட்சுமியின் மனம் வலித்தது! அந்த சமயத்தில் 3446 எண், அறை 57! என்று மின்பலகையில் தோன்றவும் அந்த சீனப் பெண் எழுந்து சக்கர நாற்காலியை தள்ளிக் கொண்டு அந்த அறைக்குள் போனாள்.

மேலும் அரை மணி நேரம் கழிந்தது. அப்போது அறை எண் 57ன்; கதவைத் திறந்து கொண்டு வெளியே ஒரு மருத்துவ உதவியாளர் நிற்க, அந்த சீனப் பெண் சக்கர நாற்காலியைத் தள்ளிக் கொண்டு மருத்துவர் அறையிலிருந்து வெளிப்பட்டாள். அந்தப்; பெண் லட்சுமியையும் அங்கு அமர்ந்திருந்த இதர பேர்களையும் கடந்து சென்றாள். பின்னர் அந்த உதவியாளர், நடேசன், நடேசன்! என்று அழைக்க, அதே நேரத்தில் 4367 எண்; அறை 57! என்று மின் பலகையில் நடேசனின் எண் தோன்றியது.

லட்சுமி எழுந்து நடேசனிடம் சென்றாள். அவனுடைய கையைப் பிடித்து அவனை எழுந்திருக்கச் செய்த போது அந்த பிடியில் ஒர் இறுக்கம் இருந்தது! அது உன்னை கைவிடமாட்டேன் என்பது போல இருந்தது. பல ஆண்டுகளுக்குப் பிறகு அதனை நடேசனும் உணர்ந்தான். அவளை ஏறிட்டுப் பார்த்தான், லட்சுமியின் முகத்தில் மலர்ச்சி தெரிந்தது!

Print Friendly, PDF & Email

2 thoughts on “மாறியது நெஞ்சம் மாற்றியது யாரோ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *