மாறாட்டத்தால் நேர்ந்த போராட்டம்

0
கதையாசிரியர்:
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: குடும்பம் சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: June 5, 2022
பார்வையிட்டோர்: 39,924 
 
 

(1942ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கதை உறுப்பினர்

ஆடவர்
1. ஈஜியன் : ஸைரக்கூஸ் நகர்ச் செல்வன் – இரட்டையரான இரு அந்திபோலஸ்களின் தந்தை.
2. மூத்த அந்தி போலஸ் : ஈஜியன் மூத்த மகன் – பீஸஸ் நகரப் படைத்தலைவன் – அதிரியானா கணவன்,
3. மூத்த துரோமியோ : மூத்த அந்திபோலஸின் பணியாள் – அதிரியானாவின் பணிப் பெண்ணின் கணவன்.
4. இளைய அந்திபோலஸ் : ஈஜியன் இளைய மகன் – தாடையும் தமையனையும் தேட எபீஸஸ் வந்தவன்.
5. இளைய துரோமியோ : இளைய அந்தி போலஸின் பணியாள். – பின்னால் அதிரியானா பணிப் பெண்ணின் தங்கையை மணந்தவன்.
6. எபீஸஸ் நகரத் தலைவன்.
7. மெனெபோன் கோமகன் :- நகரத்தலைவன் உறவினன் மூத்த அந்திபோலவின் உயிர் நண்பன் –அதிரியானாவின் மாமன்.
8. பொற் கொல்லன்.

பெண்டிர்
1. ஈஜியன் மனைவி : (மாற்றுருவில்) எபீஸஸில் மடத்தலைவி – இரு அந்திபோலஸ்களின் தாய்.
2. அதிரியானா : மூத்த அந்திபோலஸின் மனைவி – மெனெ போன் கோமகன் மருகி.
3. அதிரியானாவின் தங்கை : இறுதியில் இளைய அந்திபோலவன் மனைவி.
4. அதிரியானாவின் பணிப்பெண் : மூத்த துரோமியோவின் மனைவி.
5. அதிரியானாவின் பணிப்பெண்ணின் தங்கை : இறுதியில் இளைய துரோமியோவின் மனைவி.
6. நடிகை : மூத்த அந்திபோலஸின் காதலி.

கதைச் சுருக்கம்

கப்பலுடைந்ததனால் ஸைரக்கூஸ் நகரச் செல்வன் ஈஜிய னுடைய மூத்த மகன் அந்திபோலஸும், அவன் வேலையாள் துரோமியோவும் ஏdஸில் தங்கினர். அந்திபோலஸ் நகர்த் தலைவன் உறவினன் மென்போன் நட்பினால் அவன் மருகியாகிய அதிரியானாவை மணந்து படைத்தலைவனாய் வாழ்ந்தான். அவன் பணியாள் துரோமியோவும் அதிரியானாவின் பணிப்பெண்ணை மணந்தான். ஈஜியன் மனைவி அதே நகரில் ஒரு மடத்தில் சேர்ந்து மடத்தலைவியானாள். ஈஜியலும் மூத்த அந்திபோலஸுடன் பிறந்து அவனையே போன் உருவுடைய இளைய அந்திபோலஸும், துரோமியோவையே போன்ற உருவுடைய அவன் தம்பி இளைய துரோமியோவும்ஸைரக் கூஸில் வாழ்ந்தனர். தமையனையும் தாயையும் தேடி இளைய அந்திபோலஸும் துரோமியோவும் எபீஸஸ் செல்ல, அவர்களைப் பின்பற்றிச் சென்ற ஈஜியன் ஸைரக்கூஸருக்கெதிரான எபிஸஸ் நகரத்துச் சட்டப் பொறியுட்பட்டுக் கோபத் தீர்ப்பளிக்கப் பட்டான். ஆயினும், அவன் மீதிரங்கித் தலைவன் மாலை வரை ஆயிரம் பொன்தண்டம் செலுத்தித் தண்டனையிலிருந்து தப்புமாறு கூறினான். இதற்கிடையில் இருஅந்தி போலஸ்களும், இரு துரோமியோக்களும் ஒரே உருவுடைய வராயிருந்ததனால், அதிரியானா, அவள் பணிப்பெண் முதலியோரும், மூத்த அந்திபோலஸினிடம் காதல் கொண்ட நடிகையும், அவள் பொற் சங்கிலி செய்யக் கொடுத்திருந்த பொற் கொல்லன் ஒருவனும் பலவாறு குழைப்பமடைந்தனர். இறுதியில் ஈஜியன் தூக்கிலிடப்போகும் தறுவாயில் அவள் மனைவியாகிய மடத்தலைவியும், பிள்ளைகளும் ஒருங்கே வந்து குழப்பம் தற்செயலாய் நீங்க, அனைவரும் மகிழ்ந்தனர். இளைய அந்தி போலஸ் அதிரியானாவின் தங்கையையும், இளைய துரோமியோ அவள் பணிப்பெண்ணின் தங்கையையும் மணந்தனர்.

மாறாட்டத்தால் நேர்ந்தபோராட்டம்

1.குடும்பப் பிரிவு

ஸைரகூஸ் (Syracuse) என்ற நகரில் ஈஜியன் {Aegeon) என்று ஒரு செல்வன் இருந்தான். தொழிலை ஒட்டி, அவன் சிலகாலம் அயல்நாடு சென்று வாழ வேண்டி யிருந்தது. அப்போது அவனுக்கு, ஒரே அச்சில் வார்த்தவர் போன்ற இரண்டு புதல்வர் பிறந் தனர். பெயரிலும் வேற்றுமை இல்லாதபடி ஈஜியன் அவ்விருவரையும் அந்தி போலஸ் (Antipolis) என்றே அழைத்தான்.

Shakespear19

அப்புதல்வர்கள் பிறந்த அதே நேரத்தில் அந்நகர் விடுதியில் ஓர் ஏழை மாதினுக்கும் இரண்டு பிள்ளைகள் பிறந்தனர். அவர்களும் ஒரே சாயலும் தோற்றமும் உடையவரா யிருந்தனர். அவர்கள் தாய் அவர் களுக்கும் துரோமியோ (Dromio) என்று ஒரே பெயரிட்டு அழைத்தாள். அவள் மிகவும் ஏழையானதனால் அவர்களைத் தானே வளர்க்க முடியாமல் ஈஜியனிடம் ஒப்படைத்தாள். ஈஜியனும் அவ்விருவரையும் தன் பிள்ளைகளின் பணியாளராக வைத்து வளர்த்து வந்தான்.

இரு அந்திபோலஸ்களும் இரு துரோமியோக் களும் சிறுவரா யிருந்தபோது பெற்றோர், தம் தாய்: நாட்டுக்குப் போகப் பயணமாயினர். ஆனால் காலக் கேட்டினால், வழியில் அவர்கள் ஏறிச்சென்ற கப்பல் புயலிற்பட்டு நொறுங்கிவிட்டது. கப்பலில் இருந்த வருள் ஒரு சிலர் மட்டுமே படகுகளில் தப்பினர்.

ஈஜியனும் அவன் மனைவியும் தம் பிள்ளைகள் ஒவ்வொருவரையும் அவரவர் பணிப்பிள்ளைகளுடனே சேர்த்து இரண்டு மரத்துண்டுகளில் கட்டி மிதக்க விட்டார்கள். பின் தாங்களும் தனித்தனியாகப் பாய் மரத்தில் மிதந்து தப்ப முயன்றனர்.

காற்றும் அலையும் அடிக்கும் வழியிற் சென்று எல்லாருமே பிழைத்தனர். ஆயினும், ஒருவர் பிழைத்ததை இன்னொருவர் அறியமுடியவில்லை.

ஊழ்வலியால் இங்ஙனம் சிதறிய அக்குடும்பத் தினரைப் பல ஆண்டுகள் கழித்து அதே ஊழ்வலி எபிஸஸ் (Ephesus) என்னும் நகரில் வேறு வேறாகக் கொண்டுவந்து சேர்த்தது. அனைவருக்கும் பிறர் உயிர் பிழைத்தது தெரியாதது போலவே, அனை வரும் ஓர் இடத்தில் வந்து சேர்ந்ததும் அவர்களுக்குத் தெரியா மலே இருந்தது. அதன் பயனாக அவர்கள் பலவகையான இக்கட்டுகளுக்கும் குழப்பங்களுக்கும் ஆளாயினர்.

அவர்கள் அனைவரிலும், முதன் முதலாக எபீஸஸ் வந்தவர் ஈஜியன் மனைவியும், மூத்த அந்தி போலஸும் அவன் பணியாளான மூத்த துரோமியோவுமேயாவர். அவர்கள் அந்நகரத்துச் செம்படவர் சிலரால் கடலி லிருந்து காப்பாற்றப்பட்டனர். சிறுவர் இருவரையும் தாயினிடமிருந்து பிரித்து அச்செம்படவர் பிறர்க்கு அடிமைகளாக விற்றுவிட்டனர்.

மக்களை இழந்த தாய் மனமுடைந்து, நகரெங்கும் பித்துக்கொண்டவள் போல் அலைந்தாள். அப்போது துறவி ஒருவர் அவளுக்கு மெய்யறிவு புகட்ட, அவள் ஒருவாறு மனந்தெளிந்து ஒரு மடத்தில் இறைவன் பணியில் ஈடுபட்டாள். அவளது மனத் தூய்மையைக் கண்ட மடத்துத் துறவுமாதர் அவளையே அம்மடத் தின் தலைவியாக்கினர்.

ஈஜியன் மக்களை விலைக்கு வாங்கியவன், நகர்த் தலைவனுக்கு உறவினனும் பெருவீரனுமாகிய மெனெ போன் கோமகனே (Duke of Menaphon). அவன் மூத்த அந்திபோலஸின் பெருமிதத் தோற்றத்தைக் கண்டு அவனைப் படையில் ஒரு பணியாளனாகச் சேர்க்கும்படி நகர்த்தலைவனைத் தூண்டினான்.

படை வீரனான அந்திபோலஸ், தனது வீரத் தாலும் நற்குணத்தாலும் மிகவும் மேம்பாடெய்தி இறுதியில், தனக்கு உதவி செய்த மெனெபோன் கோமகன் உயிரையும் காப்பாற்றினான். அதன் பயனாக நகர்த்தலைவன் அவனையே தன் படைத் தலைவனாக அமர்த்திக்கொண்டான். அது முதல் மெனெபோன் கோமகன் அவனைப் பின்னும் அருமையாகப் பாராட்டித் தன் மருகியாகிய அதிரியானாவை (Adriana) அவனுக்கு மணஞ்செய்து கொடுத்தான்.

அந்திபோலலின் பணியாளாகிய துரோமியோ வும் அதிரியானாவின் பணிப்பெண் ஒருத்தியை விரும்பி மணஞ் செய்து கொண்டு, அவளுடனேயே வாழ்ந்து வந்தான்.

மூத்த அந்திபோலஸ் இங்ஙனம் எபீஸஸில் நல் வாழ்வுடையவனா யிருப்பது ஸைரக்கூஸ் நகரிலி ருக்கும் அவன் தந்தையாகிய ஈஜியனுக்கும், இளைய அந்தி போலஸுக்கும் தெரியாது. ஆகவே அவர்கள் அவனைப்பற்றிக் கவலை கொண்டு அவனை என்று காண் போமோ என்று தனித்தனியாக ஏங்கியிருந்தனர்.

பல ஆண்டுகள் இங்ஙனம் கழிந்தும் அண்ணனைப் பற்றிய செய்தி எதுவும் தெரியாதது கண்டு இளைய அந்திபோலஸ் தந்தையை அணுகி, ‘அப்பா, இன்னும் நாம் வாளா இருப்பது நன்றன்று; நானாவது போய் அம்மையையும் அண்ணனையும் தேடி வருகிறேன்’ என்றான்.

ஈஜியனுக்கும் உண்மையில் மனைவியைப்பற்றியும் மகனைப்பற்றியும் கவலை உண்டு. ஆயினும், அவர்களைத் தேடத் தன் இளைய மகனை அனுப்பினால் எங்கே அவனையும் இழக்கவேண்டி வந்து விடுமோ என்று அஞ்சினான். எனினும், வேறு வழியின்றி அவன் அவர்களைத் தேடும்படி இளைஞனை அனுப்பத் துணிந்தான்.

இளைய அந்திபோலஸ் இளைய துரோமியோவை யும் உடன் கொண்டு பல இடங்களுக்குச் சென்று தன் உடன் பிறந்தானையும் தாயையும் தேடி யலைந்து கடைசியாக எபீஸஸ் நகரம் வந்து சேர்ந்தான். அந்நகருக்கும் ஸைரக்கூஸிற்கும் நெடுநாள் பகைமை உண்டு என்பதை அவன் அறிவானாதலால், தானும் பணியாளும் வேற்று நகரத்தாராக உருமாறி உட் சென்றனர். சென்று எங்குஞ் சுற்றி ஓய்வுற்று, அங்குள்ள விடுதி ஒன்றில் தங்கி இளைப்பாறினர்.

முதலில் மனைவியையும் ஒரு பிள்ளையையும் இழந்ததனால் ஒரு கண்ணும் கையும் இழந்தவன் போன் றிருந்த ஈஜியன், எஞ்சிய கண்ணும் கையுமாய் அமைந்த இளைய மகனையும் பிரிய நேர்ந்ததில் மிகவும் மனமுளைந்தான். ஆனால், எப்படியும் அவ்விளையோன் முன் இழந்த மனைவியையும் மகனையும் தேடி அழைத்துக்கொண்டு வருவான் என்ற நம்பிக்கையில் ஈஜியன் சிலகாலம் கழித்தான். நாளாக ஆக அந் நம்பிக்கையும் மறையலாயிற்று. இறுதியில் அவன் பொறுமை இழந்து, முதலிற் காணாமற் போனவரையும் பின்பு அவர்களைத் தேடச் சென்றவரையும் சேர்த்துத் தானே சென்று கண்டு பிடிப்பதெனத் துணிந்து புறப்பட்டான்.

2.ஈஜியன் துயர்

இளைய அந்திபோலஸை எபீஸஸ் பக்கம் இழுத் துச் சென்ற அதே ஊழ், ஈஜியனையும் அந்நகரின் பக்கமே கொண்டுவந்து சேர்த்தது.

எபீஸஸுக்கும் ஸைரக்கூஸிற்கு மிடையில் பகைமை உண்டு என்பதை ஈஜியன் மறந்து, ஸைரக் கூலர் உடையிலேயே நகரில் புகுந்து விட்டான். ஆகவே நகர்க்காவலர் அவனைப் பிடித்துக் கொண்டு போய் நகர்த்தலைவன் முன் நிறுத்தினர்.

தலைவன் ஈரநெஞ்சின னாயினும் நடுநிலை பிறழாதவன். ஆதலால் ஈஜியனின் ஆண்டு முதிர்ச்சியைக் கண்டு பரிவுற்றனாயினும், நகர்ச் சட்டத்தைத் தவிர்க்கக்கூடாமல் ஆயிரம் வெள்ளி தண்ட வரி செலுத்த வேண்டும்; அன்றேல் அவன் தலையிழத்தல் வேண்டுமெனத் தீர்ப்பளித்தான்.

ஈஜியன் தன் துயரமிக்க வரலாறு முற்றும் நகர்த் – தலைவனுக்கு எடுத்துரைத்தான். அதுகேட்டு மன மிரங்கிய அத்தலைவன், தண்டனையை நிறைவேற்ற மாலை வரையில் தவணை கொடுக்கக் கூடு மென்றும், அதற்குள் நகரில் நண்பர் எவரேனும் இருந்தாற் கண்டுபிடித்து ஆயிரம் வெள்ளியைக் கொடுத்து உயிர் பிழைக்கலா மென்றும் கூறினான்.

ஈஜியன் இத்தீர்ப்புக் கேட்டு, அன்றே தன் உயிர் அகன்ற தென்று கருதினான். ஆயினும், மாலைவரை யில் நேர மிருக்கின்றது. ஒருகால் அதற்குள் இறை யருள் ஏதேனும் வழிகாட்டுதலுங் கூடும் என்ற நம்பிக்கையுடன் சுற்றிச் சுற்றி அலைந்தான். மாலை அணுக அணுக அச்சிறு நம்பிக்கையும் வறண்டு போயிற்று.

கறுத் திருண்ட முகிலினிடையிலும் வெள்ளிய மின்னற்கொடி தோன்றி ஒளிர்வது போல, நம்பிக்கையற்றுத் துயர் சூழ்ந்த இடத்திலும் மறைந்து நின் றளிக்கும் இறையருள் ஒளி வீசும் என்பதை யாரே அறிவர்! ஈஜியன் தான் ஆளற்றுத் துணையற் றுத் தவிப்பதாக நினைத்து மனமழுங்கிய அதே நாளில், அண்மையிலேயே அவன் மனைவியும் அவன் பிள்ளை களும் இருந்தனர் என்பது அவனுக்குத் தெரியா தன்றோ? அதிலும், இறையருளால் ஒரு மகன் நிறை செல்வமும் உயர்நிலையும் உடையவனாய் அருகி லுள்ளதோர் மாளிகையில் வீற்றிருந்தான் என்பதை எப்படி அவன் அறியக்கடும்?

இதற்கிடையில், இங்ஙனம், ஒரே வடிவுடைய இரண்டு அந்திபோலஸ்களும் இரண்டு துரோமியோக் களும் அந்நகரில் இருந்தது, அவர்களிடையே பல வகையான மருட்சிகளையும் குழப்பங்களையும் உண்டு பண்ணிற்று.

3.குழப்பங்கள்

இளைய அந்திபோலல் தன் பணியாளிடம் பணப் பையைக் கொடுத்துக், கடைக்குப் போய்ச் சமையலுக்கான பொருள்கள் வாங்கிவர அனுப்பிவிட்டுத், தான் நகர் பார்க்கும் எண்ணத்துடன் தெருக்களில் சுற்றிக்கொண்டிருந்தான்.

மூத்த அந்திபோலஸ் அதே நேரத்தில் தனது படை நிலையத்தில் இருந்தான். உணவு நேரமாகியும் தொழில் மிகுதியால் அன்று அவன் வீடு செல்ல முடியாமல் காலந்தாழ்த்த நேர்ந்தது. அவன் மனைவி யாகிய அதிரியானா அக் காலத்தாழ்வுக்குக் காரணந் தெரியாமல் பலவகையில் தன் மனத்தை அரட்டலானாள்.

Shakespear20

அவள் தன் கணவனிடம் மாறாப் பற்று வாய்ந்த வளாயினும், ஐய மனப்பான்மையால் அலைக்கழியும் நெஞ்சினளா யிருந்தாள். இதனால் அவள் அவனுக்கு நேரம் வேளை என்பதின்றி எப்போதும் தொந்தரவு கொடுத்து வந்தாள். அன்றைக்கு முந்தின நாளும் அவள் அங்ஙனம் தொந்தரவு செய்தபோது அந்தி போலஸ், இப்படி நீ என்னை என்றும் அரிப்பதாயின், நான் உன்னை விட்டுவிட்டு வேறு மனைவிதான் பார்த் துக்கொள்ள வேண்டும்’ என்று சினந்து கூறினான்.

வெள்ளையறிவினளாகிய அதிரியானா, அவன் மேலீடாகக் கூறிய இச் சினமொழிகளை அப்படியே மெய்யெனக் கொண்டு மனமுளைந்தாள். இன்று. அதற்கேற்ப, அந்திபோலஸ் வேளையில் வீட்டுக்கு வரக் காலந் தாழ்த்தது கண்டு, அவள் தன் கணவன் தன்னிடம் சொன்னபடியேதான் தன்னை விட்டுவிட் டானோ என்று மிக்க அச்சங் கொண்டாள். எனவே, அவள் தன் பணியாளாகிய மூத்த துரோமியோவை அழைத்துத் தன் கணவனைத் தேடிக் கொண்டு வரும் படி அனுப்பினாள்.

துரோமியோ தன் தலைவனைத் தேடிக்கொண்டு போகும் போது, வழியில் இளைய அந்திபோலஸைக் கண்டான். கண்டு அவன் தன் தலைவனே என்று எண்ணிய துரோமியோ , தலைவி அழைக்கின்றாள் என்று கூறி வீட்டுக்கு இழுத்தான். ஆனால், அவ் வந்திபோலஸ், இத் துரோமியோவைத் தன் பணி யாளாகிய துரோமியோவே எனக் கருதி வெகுளியுடன், “என்னிடம் ஏன் நகையாடுகிறாய்? எனக்குத் தலைவியு மில்லை, கொலைவியுமில்லை; ஏன் தொந்தரவு செய்கிறாய்?” என்று சீறினான். துரோமியோ போகாமல் பின்னும் பசப்புவது கண்டு, அவனை அந்திபோலஸ் நையப் புடைத்தனுப்பினான்.

துரோமியோ அழுதுகொண்டு தலைவியிடம் வந்து, “அம்மணி, தங்கள் கணவர், நான் போய் அழைத்ததும் கடுஞ்சினங்கொண்டு என்னை அடித்துத் துரத்திவிட்டார். மேலும், அவர் ‘எனக்குத் தலைவியு மில்லை, கொலைவியு மில்லை’ என்று வெறுத்துரைக்கிறார்’ என்று கூறினான். அதைக் கேட்டதும், அதிரியானாவின் மனக்குழப்பம் முன்னையினும் பன் மடங்கு மிகுதியாயிற்று. உணர்ச்சிச் சுழலிற் பட்ட அவள், மனம் பதைத்துத் தன் கணவனைச் சீற்றந் தணித்து அழைத்துவரத் தானே புறப்பட்டாள்.

துரோமியோ கூறிய குறிப்பைப் பின்பற்றி அதிரியானா ஒரு பணிப்பெண்ணுடன் இளைய அந்தி போலஸ் இருக்கும் விடுதிக்கு வந்துசேர்ந்தாள்.

துரோரியோவைப் போலவே அவளும் அவனைத் தன் கணவன் அந்திபோலஸே என்று நினைத்தாள். ஆகவே, அவள் அவனைத் தன்னுடன் வீட்டுக்கு வந்து உண வருந்தும்படி வேண்டினாள். அந்திபோலஸ் உண்மை யில் அவள் யார் என்றே அறியாதவனாதலின், ஒன்றும் விளங்காது விழித்தான். சற்று முன்னதாகப் பணியாள் கூறிய மொழிகளைக் கூட, அவன், ‘வேண்டு மென்றே ஏளனமாகக் கூறிய புனை சுருட்டு’ என்று கருதினான். இப்போது அவன் கதைக்கு ஏற்றபடி தாளமிட , இப்பெண் எங்கிருந்து வந்தாள் என்று அவன் நினைத்து வியப்படைந்தான்.

ஆனால், அவன் எவ்வளவுக் கெவ்வளவு அதிரி யானாவினிடம் ஏதிலனாக ஒதுங்கி நடந்துகொண்டானோ, அவ்வளவுக்கவ்வளவு அவள் அவனிடம் கணவன் என்று உரிமை கொண்டாடிக் கெஞ்சி வற்புறுத்தி அழைக்கலானாள். அம் மொழிகளை மறுக்க முடியாமையினாலும், பசி வேளையாயிருந்ததனாலும், இப்பித்தலாட்டங்களின் முடிவுதான் என்ன என்று தெரிந்து கொள்ளும் விருப்பத்தினாலும் அவன் அவளைப் பின்பற்றி அவள் இல்லத்தை அடைந்தான்.

அதிரியானாவுக்குத் தங்கை ஒருத்தி இருந்தாள். அவளும் அதிரியானாவைப் போலவே அழகுமிக்கவள். ஆனால் அவளிடம், அதிரியானாவின் படப்படப்போ ஐய மனப்பான்மையோ சிறிதும் இல்லை. அதிரியானா அந்திபோலஸை வற்புறுத்தி உணவளிக்கும் போதெல் லாம், அவள் சற்றே அகல நின்றிருந்தாள். அதிரி யானாவின் கடுமொழிகளை விட, அவளுடைய கலங்கிய இரு விழிகளும், அவ்வப்போது கூறும் அன்பு நிறைந்த அருமொழிகளும் அந்திபோலஸின் மனத்தை மிகுதி யாக இயக்கின. அவன் தன்வயமற்றவனாய் அவர் களுடன் இன்னுரையாடி அன்போடு உண்ணலானான்.

4.கணவன் ஏமாற்றம்

இதனிடையில் அதிரியானாவின், கணவனான மற்றைய அந்திபோலஸ், மற்ற நாளினும் மிகுதியாக நேரஞ் சென்று வீட்டிற்குத் திரும்பினான். வரும் வழியில் தன்னைத் தேடிவரும் பணியாள் துரோமியோ வைக் கண்டு அவனையும் அழைத்துக்கொண்டு வந் தான். ஆனால் இருவரும் வீடுவந்து சேர்ந்த பொழுது வீட்டின் வாயில் அடைத்திருந்தது. வீட்டினுள்ளிருந்து, அதிரியானாவும் அவள் தங்கையும் யாருடனோ அளவளாவிப் பேசுங்குரல் கேட்டது. வெளியில் கதவைத் தட்டியது அவர்களுக்குக் கேட்கவில்லை.

ஆனால், கதவருகில் இருந்த பணிப்பெண்கள் சிலர், ‘யார் அங்கே’ என்று கேட்டார்கள். இருவரும் தாம் இன்னார் என்பதைத் தெரிவித்த அளவில் அவர்களுள் ஒருத்தி கொல்லென நகைத்து, “ஏனையா, இப்படி அடாப்பொய் அளக்கிறீர்! தலைவரும் என் கணவராகிய அவர் பணியாளும் உள்ளிருந்து உண்டு கொண்டிருக்க, அவர்கள் பெயரால் என்னை ஏமாற்றுகிறீரே” என்று எடுத்தெறிந்து கூறி ஏளனஞ் செய் தாள். அதுகேட்டு மூத்த அந்திபோலஸ், கடுஞ் சினங்கொண்டு தன் நிலைய ததையே நோக்கி மீண்டான்.

அவன் போகும் வழியில் ஒரு நடிகையின் வீடு இருந்தது. அவன் சில நேரங்களில் பொழுதுபோக்கிற்காக அங்கே சென்று அவளுடன் பேசி யிருப்ப துண்டு. இன்று தன் மனைவி தன்னை அவமதித்ததை எண்ணி மனம் வெறுப்புற்று, அவளிடம் சென்று சற்றுப் பேசிக் களித்திருக்கலாம் என்று கருதினான். அவளும் அவன் வரவின் அருமை யறிந்து போற்றி, அவனிடம் பரிவாய் உரையாடினாள். அதுகண்டு களிப்புற்ற அந்திபோலஸ், தான் தன் மனைவிக்கென்று செய்துவரும் பொற்சங்கிலி ஒன்றை அவளுக்குத் தருவதாக வாக்களித்தான். அவளும் அவன் பரிவுக்கு மகிழ்ந்து, தன் கைக் கணையாழியை எடுத்து அவன் கையில் அணிவித்தாள்.

பொற்சங்கிலியைச் செய்ய ஏற்றுக்கொண்ட பொற்கொல்லன், அது முடிந்ததும் அந்திபோலஸைக் காண வந்துகொண்டிருந்தான். வழியில், அவன் இளைய அந்திபோலஸைக் கண்டு, அவனே மூத்த அந்தி போலஸ் என்று நினைத்து அவனிடம் சங்கிலி யைக் கொடுத்தான். அந்திபோலஸ் அது தனதன்று என்றபோது, அவன் சினங்கொண்டு, “இப்போது என தன்று என்பதனால் என்ன பயன்? உமக்கெனச் செய்தாயிற்று; இனி நீர் அதை ஏற்றுக்கொள்ள வேண்டியதே” என்று அதை அவனிடம் எறிந்து விட்டுப் போனான்.

கொஞ்சநேரங் கழித்து அப் பொற்கொல்லன் ஒரு கடன்காரனால் சிறைபிடிக்கப்பட்டான். காவ லுடன் சிறைக்கூடத்திற்குச் செல்லும் வழியில், அவன் மூத்த அந்திபோலஸைக் கண்டான். கண்ட வுடன் சங்கிலிக்குப் பணம் கொடுக்கும்படி அவனைக் கேட்க, அந்திபோலஸ், ‘பணம் இருக்கட்டும், சங்கிலி எங்கே’ என்றான். பொற்கொல்லன் ‘உம்மிடந்தான் சற்று முன் கொடுத்தேனே’ என்று துணிவாகக் கூறினான். இருவரும் வாதாடினர். காவலர், இருவரையும் சிறைப் பிடித்து நகர்த்தலைவனிடம் அழைத்தேகினர்.

Shakespear21

இங்ஙனம் சிறை செல்லுதல், தன் உயர்நிலைக் குத் தகாதென அந்திபோலஸ் எண்ணினான். ஆகவே, தான் வழியில் கண்ட இளைய துரோமியோவைத் தன் பணியாள் என்று நினைத்துத், தன் மனைவியி னிடம் சென்று தான் விடுதலை பெறுதற்கான பொருளை உடனே வாங்கிவரப் பணித்தான்.

துரோமியோ அந்நேரத்தில் உண்மையில் தன் தலைவனாகிய இளைய அந்திபோலஸைத் தேடிக் கொண்டு வந்தான். ஏனென்றால், அவர்கள் இதற்கு முன், ‘பித்தர் போன்று நடக்கும் மக்களையுடைய இம் மாய நகரை விட்டு உடனே நீங்கவேண்டும்’ என்று உறுத, செய்திருந்தனர். ஆதலால், இளைய அந்தி போலஸ், கப்பல் புறப்படும் நேரத்தை அறிந்து வரும் படி தன் துரோமியோவை வெளியே அனுப்பி யிருந்தான். கப்பல் ஒன்று அன்றே புறப்பட இருந்ததை அறிந்த துரோமியோ, அதை அறிவிக்கத் தான் தன் தலைவன் அந்திபோலலை நாடி வந்தான். . ஆனால் தன் ஏற்பாடுகளுக்கு ஒவ்வாத மொழிகளை அவன் இப்போது பகர்ந்தது கேட்டுத் துரோமியோ, பெரிதுங் குழப்பமுற்றான்.

ஆயினும், ‘பணியாளுக்குரிய கடன் சாரியகாரண ஆராய்ச்சியன்று; கட்டளைப்படி நடப்பதேயாம்’ எனத் துணிந்து, அவ் வந்திபோலஸைக் கணவன் என்று உரிமை பாராட்டிய அதிரியானாவின் வீடு சென்று நிலைமையைத் தெரிவித்துப் பணம் கேட்டான். கணவனிடம் எல்லையற்ற பற்று வைத்திருந்த அதிரியானா, உடனே பதைத்துக்கொண்டு தானே பணத்தைக் கொடுத்தனுப்பினாள்.

துரோமியோ அப்பணத்தைக் கொண்டு செல் கையில் இளைய அந்திபோலஸைக் காணவே, அவன் ‘நம் தலைவன் இதற்கு முன் காவலிருந்தானே; எப்படி வெளிவந்தான்’ என்ற வியப்புடன் பணத்தை அவன் முன் வைத்தான். பணம் ஏது என்று அந்தி போலஸ் கேட்க, அவன், ‘நீங்கள் கேட்டுவிட்டபடியே உங்களைக் கணவர் என் றழைத்த அம்மாது தான் கொடுத்தாள்’ என்றான்.

சற்றுமுன் ஒரு பொற்கொல்லன் ஒரு சங்கிலி யைக் கொடுத்துச் சென்றதும், தன் பணியாளே முன் பின் முரணாக நடப்பதும் காண, இளைய அந்தி போலஸின் மனத்தில் ‘அந்நகர் ஏதோ சூனியக்காரியின் மந்திரவலையிற் பட்ட மாயநகர் போலும்’ என்ற ஐயம் வலுத்தது.

இந்நிலையில் மூத்த அந்திபோலஸுடன் நட்புப் பூண்ட நடிகை அங்கு வந்து, தனக்குச் செய்த உறுதிப்படி சங்கிலி வராததனால் தன் கணையாழியைத் திருப்பிக் கொடுத்து விடும்படி அவனை வேண்டினாள்.

இளைய அந்திபோலஸ் ‘நீ யார் என்பதையே நான் அறியேன். ஆயினும், ஏதோ சங்கிலி என்று நீ கூறுவதற் கேற்ப; ஒருவன் இச்சங்கிலியை என்னிடம் எறிந்து போனான்’ என்று சொல்லி அதனை அவளிடம் கொடுத்தான்.

அவள் சங்கிலியை எடுத்துக்கொண்டு வீட்டுக்குப் போகும்வழியில் அதிரியானாவைக் கண்டு, தான் அறிந்த வரலாறுகளெல்லாம் சொல்லி, ‘அந்திபோல ஸுக்குக் கட்டாயம் பித்துத்தான் பிடித்திருக்க் வேண்டும்’ என்று தன் கருத்தை வெளியிட்டாள்.

5.ஆடவர் நலிவு

அதிரியானாவும் தன்னிடம் அவன் நொடிக்கு ஒரு வகையாக நடப்பதை ஓர்ந்து அவள் கூறுவது உண்மையாக இருக்கக்கூடும் என்று நம்பினாள். அப்போது இளைய அந்திபோலஸும் அவனுடன் பூச லிட்ட வண்ணமாக இளைய துரோமியோவும் வந்தனர். தம் கணவர் பித்துக் கொண்டனர் என்றெண்ணிய அதிரியானாவும் அவள் பணிப்பெண்ணும் அவர்களிடம் நடிகையின் செய்தியைக் கூறி, அவர்களை உண் மையிலேயே வெறிகொள்ளச் செய்தனர். எப்படி யாவது தப்பினால் போதும் என்று அவர்கள் திமிறிக் கொண்டோடப் பார்க்கவே, பெண்டிர் அவர்கள். பித்தராதலால் அடைத்து வைப்பது நன்று என்று கூறிக்கொண்டு அவர்களைப் பிடிக்கச் சென்றனர். ஆடவர் இருவரும் சினந்து எழுந்தனராயினும் அத்தகைய நெருக்கடியில் வேறுவகையறியாமல் ஓடிச் சென்று பக்கத்திலிருந்த ஒரு பெரிய கட்டிடத்தினுள் நுழைந்தனர். அதிரியானாவும் பணிப்பெண்ணும் அங்கும் நுழைய முயன்றனர்.

அக்கட்டிடமே ஈஜியன் மனைவி மடத்தலை வியாக அமர்ந்து நடத்திய மடமாகும். இளைய அந்திபோலஸும் இளைய துரோமியோவும் அதிரியானாவினால் துரத்தப்பட்டுத் தஞ்சம், தஞ்சம் எனத் தன்மடத்திற் புகுந்தபோது, அவள், அவர்கள் தன் பிள்ளையும் பணியாளுமே யாவர் என்பதை அறியாதவளாய்த் தன் இயற்கை இரக்க மனப்பான்மையினால் அவர்களுக்குத் துணைதர முன் வந்தாள்.

அதிரியானாவும் அவள் பணிப்பெண்ணும் தம் கணவர் பித்துக்கொண்டவராதலால், அவரைத் தம்மிடமே ஒப்படைக்க வேண்டும் என்று கேட்டனர். ஆனால், மடத்தலைவியான ஈஜியன் மனைவி, ‘அவர்கள் அறிவிழந்து பித்துக் கொண்டால், நீங்கள் அமைதி இழந்து பித்துக்கொண்டிருக்கிறீர்கள்; அவர்களை ஆதரிக்கும் நிலை உங்களுக்கில்லை. நானே அவர்களை ஆதரித்து உங்களிடம் ஒப்புவிக்கிறேன்’ என்று கூறி விட்டாள்.

மேலும், அதிரியானா தன் கணவனிடம் மட்டற்ற பற்றுக் கொண்டவளாயினும், அதன் காரணமாகப் பொறுமையும் நல்லுணர்வும் இழந்து, அவன் மீது ஐயங்கொண்டு அவனுக்கு ஓயாத தொந்தரவு கொடுத்து வருவதையும் மடத்தலைவி உய்த்துணர்ந்து கொண்டாள். ஆகவே, அவள் தனது இனிய நேரிய மொழிகளால் அதிரியானாவுக்கு அவள் குற்றம் தென்படும் வண்ணம் அறிவுரை நல்கினாள். அதிரியானா வும் தெருட்சியுற்றுப் பொறுமையுடன் கணவன் குறிப்பறிந்து நடப்பதாக ஒத்துக்கொண்டாள். ஆயி னும், மடத்தலைவி அவளை முற்றும் நம்பி அந்திபோல ஸையும் துரோமியோவையும் அவளிடம் ஒப்படைக்க மனமில்லாமல் அவர்கள் அனைவரையும் நகர்த்தலைவனிடம் கொண்டுபோய் நிறுத்தி, அவன் மூலம் ஆவன செய்ய வேண்டு மென்று கருதினாள்.

6.முடிவு

அந்திபோலஸின் தாய் மடத் தலைவியாய் இருந்த இம்மடத்தின் முன்புறமே, அந்நகரின் தூக்குமேடை அமைந்திருந்தது. மாலை வரையில் நண்பர் எவரை யுங் காணாமையால் தண்டவரி செலுத்த வகையில் லாத ஈஜியனைக் காவலர் கொலைத் தண்டனைக்காக அம்மேடைக்குள் கொண்டுவந்தனர். அவனுடன், அத்தண்டனையை வேண்டா வெறுப்பாக நிறை வேற்றும் பொறுப்பை ஏற்று நகர்த்தலைவனும் வந்தான்.

இதே நேரத்தில், சிறையில் வைக்கப்பட்ட மூத்த அந்திபோலஸ் தன் உயர் நிலையின் உதவியால் சிறை காவலனை அச்சுறுத்தி விலக்கிவிட்டுத் துரோமியோவுடன் அத்தலைவன் முன் வந்து, தமக்கு நகரில் நேர்ந்த பலவகை இன்னல்களையுங் கூறி, ‘இவையனைத்தும் யாரோ எதிரிகளின் மாயமாயிருக்கவேண்டும்’ என்று மன்றாடினான். தலைவன், அஃது இன்ன தென்று அறியாது குழப்பமுற்றான்.

ஊழ்வலியால் இத்தறுவாயில், மடத்தலைவியாகிய ஈஜியன் மனைவி, இளைய அந்திபோலலையும் இளைய துரோமியோவையும் அதிரியானாவுடனும் பணிப் பெண்ணுடனும் கூட்டிக்கொண்டு வந்து தன் மடத்தின் முன் நடந்தவை அனைத்தும் புகன்றாள். இதற்குள், அதிரியானாவும் அவள் பணிப்பெண்ணும் தத்தம் கணவர் உருவுடன் ஒருவருக் கிருவர் நிற்பது கண்டு எல்லையிலா வியப்பும் விழிப்பும் அடைந்தனர் நகர்த்தலைவனும் அவர்களைக் கண்டு, ‘இஃதென்ன, இவர்கள், வடிவும் அதன் நிழலும் போல ஒத்து நிற்கின்றனரே; இவர்கள் இருவரோ ஒருவரோ’ என மலைவுற்றான்.

அப்போது திருமடத் தலைவியின் உள்ளத்தில் ஒரு பேரொளி உண்டாயிற்று. அவள் இரு அந்தி போலஸ்களையும் வாரி எடுத்து, ‘ஆ, நீங்கள் என் பிள்ளைகள் அல்லிரோ’ என்று அழுதாள். ஈஜியனும் தன் துயரமெல்லாம் மறந்து தானே பிள்ளைகளின் தந்தை எனக் கூறிக்கொண்டு ஓடி வந்து, அருகிருந்து இன்பக் கண்ணீர் உகுத்தான்.

மடத்தலைவி, இரு அந்திபோலஸ்களும் ஒரே உருவுடைய தம் இரு பிள்ளைகள் என்றும், உடன் இருக் கும் இரு துரோமியோக்களும் அங்ஙனமே பணிமாது ஒருத்தி பெற்ற இரட்டைப் பிள்ளைகள் ஆவர் என்றும் கூறி, ஈஜியன் தன்னை விட்டு நெடுநாட் பிரிந்திருந்த தன் கணவனே என்றும், தாம் பிரிந்து கூடிய இவ்வியத்தகு வரலாறு முற்றும் எடுத்துரைத்தாள்.

அதுகேட்டு அனைவரும் எல்லையிலா வியப்பும் மகிழ்ச்சியும் எய்தினர்.

இளைய அந்திபோலஸ் அதிரியானாவின் தங்கையையும், இளைய துரோமியோ அவள் பணிப்பெண்ணின் தங்கையையும் விரும்பி மணந்தனர்.

நகர்த்தலைவன் இளைய அந்திபோலஸைத் தன் கருவூலத் தலைவன் ஆக்கினான். அனைவரும் இன்புற்று வாழ்ந்துவந்தனர்.

– K.அப்பாதுரைப் பிள்ளை, சிறுவர்க்கான ஷேக்ஸ்பியர் கதைகள் (ஆறாம் புத்தகம்), முதற் பதிப்பு: ஜனவரி 1942, சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *