(1993ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
இதென்ன இத்தனைக் கூட்டம்.’ஜே ஜே’ தேரா திரு நாளா? இல்லை நான் ஊரைவிட்டுப் போய் வருடம் ஐந்தா ஐந்நூறா?
என் பெட்டி படுக்கை, மூட்டை முடிச்சுகளுக்கு நடுவே காட்டில் விட்டாற்போல் நான் நிற்கையில். என் தோளில் உரமாய் ஓர் அறை விழுந்து, திரும்பிப் பார்த்தால் அப்பா அவர் விழிகள் சிரிப்பைச் சிந்தி..
”என்னடா விழிக்கிறே. திருதிருன்னு. என்ன தேடு கிறாய். எதைக் கீழே போட்டாய் – ஓ என் பாதத்தைத் தொடுகிறாயா. இன்னும் கூட தெல்லாம் வைத்துக் கொண்டிருக்கிறாயா? ஏது உயர்ந்து விட்டாயே!”
என்ன உயர்ந்தால் என்ன. இன்னும் நான் அப்பாவை அண்ணாந்துதான் பார்க்கிறேன்.
“உம் – not bad. என் தோளுக்கு வந்திருக்கிறாய் ஆனால் தோளுக்கு மிஞ்சினால்தான் தகப்பன்; அதனால் இப்போதைக்கு இன்னும் பிள்ளைதான்!”
அப்பாவின் உயரமும் காத்ரமும் என்னால் என்றுமே ஆகமுடியாது.
“என்ன எசமான் அடைச்சுட்டு நிக்கிறீங்களே, சின்ன அய்யாவை நானும் கொஞ்சம் பார்க்கறேனே!”
ஓ! மாடசாமியும் வந்திருக்கிறானா? மாடசாமி மீசை, மீசையா அது? அதிலிருந்து குருவி பறக்குமா, காடை பறக்குமா என்று அப்பவே கேட்பேன். அவனும் சளைக்காது, மீசையை முறுக்கி விட்டுக்கொண்டு, “ராவுலே வந்து அடையும். பார்த்துச் சொல்றேன்” என்பான்.
“என்ன போவோமா? மடசாமி எடேண்டா பெட்டியை!”
அப்பா மடசாமி என்றுதான் அழைப்பார். ஆனால் அப்பா ஓண்டிதான் அப்படி அழைக்க முடியும்-
இரும்புப் பட்டை போட்ட தொட்டி மாதிரி கட்டை குட்டையும், குத்து மீசையுமாய் அவனைப் பார்க்கவே யாருக் கும் சற்று அச்சம்தான். ஒரு சமயம் அரை சமயம் அப்பா விடம்கூட அவன் சிலும்புகையில், சர்க்கஸ் கூண்டில், சிங்கமும் சாண்டோவும் ஒருவரை யொருவர் முறைப்பது போலிருக்கும்.
ஒரு சமயம் கோப வெறியில் அவன் யாரையோ கொலை செய்துவிட்டு, அப்பாவின் தலையீட்டால்தான். ஒருவருடக் கடுங்காவலுடன், கயிறுக்குத் தப்பித்ததாகக் கேள்வி. விஷயத் தின் மற்ற விலாசம் எங்களுக்குத் தெரியாது, அதெல்லாம் அந்த நாள். நான் பிறக்கு முன்பே, ஒன்றொன்று அப்படித் தான். ரொம்பவும் உட்புகாமல் இருப்பதனாலேயே நாட் களின் மூட்டத்தில் என்னவோ என்னவோ என்றே, அதில் அடவியின் இன்னிருள் கண்டு, அதன்மேல் ஒரு நளினமான அழகும் படர்ந்து விடுகிறது.
“என்னடா நடவேன்! இன்னும் மயங்கி மயங்கி நிற்கிற வழக்கம் போகவில்லையா?”
இரண்டு பேரும் என்னை எங்கே அழைத்துச் செல்கிறார்கள்? இந்த ராட்சஸக் கார் ஏது? அப்பாவே ஓட்டும் இடத்தில் அமர்கிறாரே!
“Come on, come on!” என்னை உள்ளே இழுத்துத் தன் பக்கத்தில் இருத்திக்கொண்டு. காரை ‘ஸ்டார்ட்’ பண்ணுகிறார்: பண்ணிக்கொண்டே, என்னை ஓரக்கண்ணால் பார்க்கிறார். அவர் விழிகள் கூத்தாடுகின்றன.
“ஆபாலு, உனக்கு நான் ஒன்றிரண்டு விஷயங்கள் எழுத மறந்து போனேன். பாலு இந்த இரண்டு வருஷமாய் நான் பிஸிநெஸில் Lucky, கொஞ்சம் Lucky என்றால் என் அமெரிக்கை பாசாங்காகி விடும். ரொம்ப Lucky என்றேனோ எனக்கு மண்டை வீங்கிப் போச்சு என்பார்கள், ஆனால் உண்மை என்னவென்றால் I have been samned lucky!”
தன்னை மீறிய களிப்பில், அப்பா என்னை முதுகில் அறைந்த அறை எனக்குப் ‘பக்’கென மூச்சை அடைத்தது.
பின்னாலிருந்து:
“எசமான், எசமான் உங்க சந்தோஷத்திலே சின்ன அய்யா ரத்தம் கக்கிடும்போல் இருக்குதே!”
zoom! முழுவேகத்தில் வெகு சொகுஸ்ஸாய். அப்பா ரோடு விளிம்பில் காரை வளைத்தார். ஒரு சைகிள் ஆசை தப்பித்தது.
“பின்னே என்ன. அம்மாவும் நீயும் சேர்ந்து இதுவரை வனை நிழல் பயிர் செய்தது போதும், இனி என் பையனை இப்படித்தான் பதனம் பண்ணனும்!”
“இதென்ன மகரை, மாட்டுத் தோலா’ பதனம் பண்ண?’ நீங்க பண்ற தோல் வியாபாரம்னு நினைச்சுட்டேங்களா?”
”ஆமாம் நான் ஒரு கசாப்புக் கடைக்காரன்!”
கசாப்பு கடைக்காரன்!
கசாப்பு…ஆ…ஆ…ஆ… கசாப்பு கடைக்காரன்!
அப்பா உரக்கப் பாட ஆரம்பித்தார், பாட்டா அது? களி வெறியின் எக்காளம். காரின் உள்ளடைப்பில் ‘பூம்’ என்று ஜாலர் போல் எதிரொலித்தது.
தூரத்துக்குத் தூரம் புள்ளி நகர்ந்தாற் போல் ஆள் நட மாட்டம், நூங்கள் போய்க் கொண்டிருந்த பாதையில், ஒரே வெறிச்சிட்டுவிட்டது. வண்டி பருந்து வட்டத்தில் நிதானத்தில் பறந்து கொண்டிருந்தது. தடவிக் கொடுத்த பூனைபோல் எஞ்சினின் சத்தம் மெத்தென செவியில் ஒத்திற்று.
கம்பி வேலி தடுத்த ஒரு பெரிய காம்பவுண்டினுள், நான் கண்டு தெளிவதற்குள் கார் புகுந்துவிட்டது, அடர்ந்த புற்றரைகளினிடையே எங்கள் எதிரே சாலை நெளிந்து ஓடிற்று. அரவம் கேட்டு, ஒரு மான் கம்பீரமாய்த் தலை தூக்கி எங்களைப் பார்த்துவிட்டு மறுபடியும் மேய ஆரம்பித் தது. அதன் முகத்தில் அமைதி குலையவில்லை, விழிகளில் மருட்சியில்லை. அதன் கொம்பின் கிளைகளில் சிக்குண்ட என் மனதை விடுவித்துக் கொள்ளும் முன்னரே, முட்ட வருவதுபோல் எங்களை நோக்கி விரைந்து வரும் மரமதிலின் மேல் இலைக்காடுகளின் பின்னணியிலிருந்து மாடி முகடு திடு மென திருப்பத்தில் தெரிந்ததும் எனக்கு உடல் புல்லரித்து விட்டது.
“என்னப்பா அது?”
”ஆ பாலு, உனக்கு நான் ஒன்றிரண்டு விஷயங்கள் எழுத மறந்து போனேன். மலிவா வந்தது வாங்கிப் போட்டேன், come on get down: ஒரு பயலுக்கும் ஒரு செப்புக் காசு இதன்மேல் பாக்கி கிடையாது, எவனாவது எதையாவது கொண்டாடிண்டு வந்தானோ, முறிச்சுட்டேன் காலை! ஆமாம். துலுக்கன் தர்பார்தான்; முன்னாலே தண்டனை, பின்னால் விசாரணை!”
அப்பாவின் கண்களில் திடீரென சிவப்பேறிவிட்டது. காளைக்குத் திமில் சிலிர்ப்பது அவர் தோள்கள் குலுங்கு கையில் நிஜமாவே பயமாயிருக்கும். அப்பா சொன்னபடி செய்யமாட்டார் என்று சொல்ல முடியாது. ஒரு தடவை வென்னீருள் பாயிலரை நிறைஜலத்துடன் அப்பா அலக்காகத் தூக்கிப் பார்த்திருக்கிறேன்.
யாரை மனதில் வைத்துக்கொண்டு, அப்பா யார்மேல் கோபம் கொள்கிறார் என்று சமயங்களில் சொல்ல முடியாது. எனக்குத் தோன்றுவதுண்டு; தன் எதிரிகளை அவ்வப்போது தன்னிலேயே ஆவாஹனம் பண்ணிக்கொண்டு தன் மேலேயே ஆவேசங் கொள்வதிலேயே அப்பாவுக்குத் தனிக் ‘குஷி’யோ? கோபத்தை ஒத்திகை பார்த்துக் கொள்கிறாரோ?
வந்த கோபம் வந்ததுபோலவே சட்டென விட்டது. என் தோள் மேல் கை போட்டுக்கொண்டு, “அம்மாவைப் பார்க்கப் போவோமா?” என்கிறார்.
வளை மாடியேறி ஒரு அறையுள் நுழைகிறோம். மேகத்தின் பின் நிலவு ஒளிந்தாற்போல், அறையில் நீல இருள் சூழ்ந்திருக்கின்றது.
”பாலசந்திரா!”
இம்மாதிரி இக்குரலில் என் பெயர் கேட்டு எத்தனை வருடங்களாகிவிட்டன என்று தோன்றுகையிலேயே, என் கண்கள் சர சரவென நிறைந்துவிட்டன.
“பாலு.”
“பாலன்.”
“மிஸ்டர் சந்தர்,”
உரிமையுடன் ஓரிருவர் என் உடல் மென்மையைக் கேலிசெய்ய.
“பாலா!”
“ஏடி பாலம்மா!”
என இத்தனை நாட்கள் அழைத்துப் பிறை தேய்ந்து போனபின், இவ்வறையின் இருளிலிருந்து அசரீரிபோல் அம்மாவின் தீனக்குரலில் என்னிடம் என் முழுப்பெயர் திரும்பி வருகையில், நானே ஏதோ கிரஹணத்தினின்று விடுபட்டு, எனக்குப் புத்துயிர் ஊட்டினாற்போல், உடல் பூரா ஒரு விறுவிறுப்பு பாய்ந்தது. என் பெயருக்கு முழுமை தந்து அழைப்பது அம்மா ஒண்டிதான்.
”அம்மா!”
“ஊஹும். நமஸ்காரம். பண்ணாதே. படுத்துண்டிருக்கிறேன் – என்னடா ஒரேயடியாய் இளைச்சுப் போயிருக்கையே!”
“விஜயா. இதுவரையில் எந்த அம்மாவுக்கு அவள் பிள்ளை பயில்வானாய்ப் பட்டிருக்கிறான்? உன் பிள்ளை பயில்வானாய் இல்லை. ஆனால் மோசமாயில்லை. கொஞ்சம் உயர்ந்திருக்கிறான்”.
“ஏது உங்கள் கண்ணே பட்டுவிடும் போலிருக்கே!”
“அதுவும் சரிதான். என்ன இருந்தாலும் நான் தகப்பன் தானே! கவலைப்படாதே. மற்றபடி உன் பிள்ளை. மாறி விடவில்லை. நீ அனுப்பிவைத்த மாதிரியே பேசாமடந்தை யாய், ஊமைக் கனா கண்டு கொண்டு…”
பூம்! அந்த ஆண்சிரிப்பு அறையின் மூட்டத்தைக் கலைத்து திருகொளி காட்டுகின்றது.
அம்மாவால் இதற்குமேல் வற்ற முடியுமோ? நாங்கள் திகைக்கத் திகைக்க இப்படியே நித்யகாண்டம் பூரணாயுசாய் இழுபட்டுக் கொண்டிருக்கிறாள். நான் பார்த்ததற்குப்போது இன்னும் சுண்டி, குறுகிப்போய்,பெருக்கியெடுத்து முகத்தில் வாரிய குப்பைபோல், எலும்புக் குவியலாய், கட்டிலில் கிடக் கிறாள். என்னைப் பெற்றதிலிருந்தே ஒன்று மாற்றி ஒன்று ஏதோ கோளாறுக்கு வைத்யம் பண்ணி, அதில் வேறு சிக்கல் கண்டு கடைசியில் இரைப்பைக்குத் தீரா பழுது வந்துவிட்டது. இப்பொழுது ஜலம்கூட தங்க மறுக்கின்றது. அவளுக்கு இனி விமோசனமில்லை என்று அவரவர்க்குத் தெரிந்தும், அதை நாங்கள் ஒருவருக்கொருவரி, தம் தமக்கே ஒப்புக் கொள்ளாத உண்மை.
என்னைப் பெற்றெடுத்ததே சாக்காய்; நான் அவளுடைய மெது யமனாய் வாய்த்து விட்டதை நினைத்து புழுங்கு கையில் என்னையே எனக்கு வேண்டியில்லை. ஆனால் ஊசலாடும் தன் உசிரை அவள் என் மேலேயே விடுவது காணக் காண இன்னும் நெஞ்சையறுக்கிறது,
“என்னப்பா பாலு சௌக்யமா?”
குரல்கேட்டுத் திரும்புகிறேன், சாலா மாமி இரண்டு கைகளிலும் இரண்டு டிபன் தட்டுகள் ஏந்தி நிற்கிறாள். படிப்பு படிப்புன்னு வருடக் கணக்கில் போய் உட்கார்ந் துட்டியே எங்களை மறக்கக்கூட நாளாச்சு!”
மாமி குரல் கம்மியது காண எனக்கு நெஞ்சு நெகிழ்கின்றது.
மாமி – நா என்ன. எங்கள் குடும்பமே உங்களை மறக்க முடியுமோ? ஆனால் ஒருவேளை நீங்கள் ஞாபகமூட்டுவது போல் மறந்து போனோமோ என்னவோ? உயிரோடு இழையும் மூச்சு எப்பவும் ஞாபகத்திலேயே இருக்கிறதா? மூச்சு தடைபடும் போது தானே மூச்சின் நினைவு? நினைவே மூச்சாய்த் தவிக்கிறது.
அம்மா படுத்த படுக்கையாகிவிட்டபின், வீட்டில் உள்ள அரிசியைச் சாதமாய்ப் பொங்கிப்போட யாருமிலாது குடும்பம் தவித்துக்கொண்டிருக்கையில், எங்கள் கஷ்டம் விடியவே போல். மாமி தனக்கும், தன் கையில் குழந்தைக்கும் திக்கிலாது வந்து சேர்ந்தாள். இதெல்லாம் சொல்லத்தான் கேள்வி. எனக்கே தெரியாது, எனக்கு நினைவு தெரிந்து, நான் என் தாயின் மடி அறியேன்; ஆனால் சாலா மாமிதான் எனக்கு மறுதாய்! என் தாய்க்கு செவிலித்தாய், அம்மாவுக்கு மலஜலம் முதல் எடுத்து, துணி மாற்றி, ராக்கண் விழித்து – எங்கள் குடும்பத்துடன் தானும் ஒன்றாகிவிட்டதன் அடையாளமாய், மாமி சம்பளம் வாங்குவதுவிட்டு வருடங் கள் ஓடியாச்சு.
அவள் துயரம் எங்கள் உழவால்; இனி அவள் சந்தோஷம் என் கடமை.
“பாலசந்த்ரா. சாலாவின் அன்பான கவனத்தின் அக்ஷயமாய், அவள் சிச்ருஷை வளர்த்த உயிர்பிச்சையில்தான் நான் வாழ்கிறேன்; எனக்கு சில வேளைகளில் இப்படித் தோணுவதுண்டு; ‘சீ, இத்தனை அவஸ்தை பட்டுண்டு பூமிக்குப் பாரமா, எல்லாருக்கும் கடனா வாழணுமா, ஒரு மாத்திரைக்கு நாலு மாத்திரையா ஒரே சமயத்தில் முழுங்கி, ஆட்டத்தை ‘க்ளோஸ்’ பண்ணிட்டால் என்ன?”. ஏன் முழிக்கிறாய்? இது தேகம் தானே. ஒரு சமயம் இல்லாட்டா ஒருசமயம் இதுக்கே அலுப்புத் தட்டாதா? அப்போ சாலா சொல்லுவாள்: ‘அப்படியெல்லாம் அவசரப் பட்டுடா தேங்கோ, அசட்டுத்தனமா, உங்கள் பேரன் உங்களுக்கு நெய்ப்பந்தம் பிடிக்கவேண்டாமா? ஆனால் நீங்கள் தான் பார்க்க முடியாது”.
“நீயாவது பார்த்து வந்து என்னிடம் சொல்லு” என்பேன்.
“தாராளமா, இது கூட உங்களுக்கு நான் செய்யக் கூடாதா? சக்குவைக் கையைப் பிடிச்சுக் கொடுத்துட்டேன்னா அப்புறம் எனக்கு இங்கே என்ன வேலை?”
“ஐயோ, இந்தப் பொம்மனாட்டிகள் பேச்சே!”
“ஆமாம். வேறென்ன பண்ணுவது, இப்படிக் கொட்டி ஆத்திக்கறதில் தான் எங்களுக்கு ஒரு ஆறுதல்.”
“சரி, சரி,ஜாலா, டிபனை நாங்கள் சாப்பிடக்கொண்டு வந்தையா, இல்லை எங்களுக்குத் தட்டை நைவேத்ய காட்டிவிட்டு எடுத்துப் போக வந்தையா?”
மாமி புன்னகை புரிகிறாள்,
“பாலு, உங்கப்பாவின் கோபத்தை எப்படி அடையாளம் கண்டுகொள்வதுன்னு எனக்கு இன்னும் தெரிஞ்சபாடில்லை.”
ஒருக்களித்த கதவின் பின் கைவளை குலுங்கக் கேட்டுத் திரும்புகிறேன். கதவை வெடுக்கெனத் திறந்து கொண்டு கையில் கூஜாச் செம்புடன் ஒரு பெண் வெளிப்பட்டு, உள் நுழைகிறாள். என்னைப் பார்த்துச் சட்டெனத் திக்பிரமை பிடித்தாற்போல் நிற்கிறாள்.
“யாரம்மா இது, நம்ம கொக்கு பாலுவா?”
மாமி முகம் சட்டென மாறியது. “உஷ் அசடே! இனிமேல் அப்படியெல்லாம் பேசக்கூடாது! பாலு, நீ விட்டுப் போன இடத்திலேயே வருஷங்கள் நின்னு போச்சுன்னு சக்கு நினைச்சுண்டிருக்காள்”
சகுந்தலாவா இது? பாவாடை சொக்காயிலிருந்து தன் வசமிலாது கையும் காலும் குச்சி குச்சியாய் நீட்டிக் கொண்டிருந்த சுக்கு சக்குவா? இந்த சாரத்தின்மேல் இந்தக் கட்டிடத்தை எழுப்பியிருக்கும் வருடங்களின் வேலைப் பாட்டைக் கண்டு வியப்பதா? சப்பாத்திக் கள்ளி பூச் செண்டாய் மாறிவிட்ட மாயத்தைக் கண்டு பிரமிப்பதா?
எனக்கும் சக்குவுக்கும் என்றுமே ஒத்துக்கொள்ளாது, மஹா கோபக்காரி. அடிக்கடி கை மிஞ்சிவிடுவாள். எனக்குத் திருப்பியடிக்க அதிகாரம் கிடையாது, “பெட்டைக் குழந்தையைத் தொட்டு அடிக்கிறதாவது! வெட்கமா யில்லை?’ என்று அம்மாவே கண்டிப்பாள். ‘குழந்தையாம்! என்னைவிட ரெண்டு வயதுதானே அவள் சின்னவள்’ அப்போ நான் மாத்திரம் பெரியவனோ?” என்று நான்’ பொறுமுவேன்.
மாமி தலையிடமாட்டாள். அவள் புன்னகைக்கு அவரவர்க்கு இஷ்டமான அர்த்தம் பண்ணிக்கொள்ளலாம்.
அம்மாதிரி இப்போது மாமியின் புன்னகைக்கு என்ன அர்த்தம் கொள்வது?
கீழிருந்து மாடசாமி குரல்: “எசமானுக்கு டெலி போன்!” அப்பா எழுகிறார்.
“சக்கு, பாலுவுக்கு அவன் அறையைக் காண்பி!”
அவள் முன்னால் போக நான் பின் தொடருகிறேன். பின்னலா அது? இரைதின்ற பாம்பு. ஓரிருமுறை என்னைத் திரும்பிப் பார்த்துப் புன்னகை புரிகிறாள். கன்னம் குழிகின்றது,
“சரி, நீ மென்னு முழுங்கிண்டுதானிருப்பாய். நானே முந்திக்கறேன். ஏன் பேயறைஞ்ச மாதிரி முழிக்கிறாய்?”
நான் திக்குமுக்காடிப் போனேன்,
நாங்களே இப்படித்தான். பருவ வேகம் எங்களுக்கே எங்கள் அடையாளம் மாறிப் போயிடறது. அதிலும் நான் சுபாவத்திலேயே வாளிப்பு. ரொம்பவும் பருத்திருக்கேனா?
தன் கவலையில் தன்னையே திரும்பிப் பார்த்துக் கொள்கிறாள்.
“பட்டினியிருந்தால் குறையுமோன்னு பார்த்தால், இப்போதான் ஒருபிடி கூட இழுக்கிறது!” வாய்விட்ட அவள் சிரிப்பின் அவுட்டு நக்ஷத்திரங்கள் அவைகளின் பல்வேறு வர்ணங்களுடன் என் நெஞ்சில் பெய்கின்றன. என்னுள் அவை விழுந்த இடங்கள் வர்ணங்கள் மாறுவதை உணர்கிறேன்.
சட்டென சிரிப்பு ஒடுங்குகிறது,
“அம்மா அப்பப்போ என்னை மட்டந் தட்டிண்டு தானிருக்கா. என்னவோ பழமொழி அடிக்கடி சொல்றா பொட்டலம் பிரிச்சா போச்சாம். பொண்ணு சிரிச்சா போச்சாம். நீ வரப்போறேன்னு எ ணை என்னென்ன எச்சரிக்கை பண்ணியிருக்கா தெரியுமா? ஆனால் நான் ‘ராபணா’. உன்னை க் ‘கொக்கு பாலு’ன்னுட்டேனே. அதுக்கு எனக்குக் கீழே போனால் பாட்டு இருக்கு. ஆனால் அம்மா சுபாவம் பாட்டு இல்லை. முந்தியெல்லாம் அடித் துடைவில் துளிச் சதையைக் கட்டை விரலுக்கும் சுட்டு விரலுக்கும் நடுவில் அள்ளித் திருகுவாள். பிராணன் போகும். ஆனால் இப்போ சொல்லே, நெருப்புக் கொட்டையைத் தேய்ச்சு அங்கே வெச்சாப்போலே, அதுக்கு மேல் சுறீலாயிருக்கு. ஆனால் கறுப்பு நாயை வெள்ளை நாயாக்க முடியுமோ? நீ பார்த்ததுக்கிப்போ எனக்குக் கறுப்பு உதிர்ந்திருக்கோ? ஆனால் நீ நன்னா செவந்துப் போயிட்டே. போன இடத்தில் உனக்கு உடம்பிலேயே ஒருதோல் உரிஞ்சு போச்சு. பாம்புச் சட்டை மாதிரி. பாலு. உனக்கு ஞாபகமிருக்கா? ஒரு தடவை நமக்குள்ளே சண்டையில் நம்மில் சண்டையைத் தவிர வேறென்ன இருந்தது?- ஆத்திரத்தில் உன் தோளை வகையாக் கடிச்சுட்டேனே! கடிச்ச இடம் சிவந்து, சுழிச்சு அப்புறம் கறுத்துப் போச்சு. அம்மாகூட விஷக்கடின்னு என்னை அடிச்சா. அதுமாதிரி எல்லோருக்குமே விஷக்கடி இருக்காமே! பாலு, நான் கடிச்ச தழும்பு இன்னும் இருக்கோ? அம்மா சொல்றா: சில தழும்புகள் சாகும்வரை இருக்குமாம். ஆனால் வெளியே தெரியாதாம். அப்படி உண்டோ? உன் அப்பா, “உன் அம்மா பேசறது அது ஒரு பாஷை” என்கிறார். பள்ளிக் கூடத்தில் படிச்சிருக்கேன் தேசங்கள்தோறும் பாஷைகள் வேறுன்னு. ஆனால் இந்த வீட்டில் மனுஷாளுக்ரு மனுஷாளே மாறியிருக்கு, நான் பள்ளிக்கூடத்தை விட்டு நின்னூட்டேன், தெரியுமோன்னோ? எனக்குப் படிப்பு வரல்லே. நீ என்னவோ ஒஸ்திப் படிப்புப் படிச்சிருக்தாயாமே! நிஜமாவா? இந்த மாடி உயரம் இருக்குமா? ஊமைக் கோட்டான்? நான் பேசிப் பேசியே, இதோ உன் ரூமும் வந்தாச்சு. சரி நான் போறேன். அம்மா இப்பவே பல்லை நற நறன்னு கடிச்சுண்டிருப்பா-“
மண்டி, சிதறிக்கிடக்கும் சோபாக்கள், நாற்காலிகள் திண்டுகள் மத்தியில் திகைத்து நிற்கிறேன். தரை தெரிய வில்லை. காலடியில் விரிப்பு மெத்தென அழுந்துகிறது. சுவரையடைத்த அலமாரிகளில் புத்தகங்கள் வழிகின்றன.
அறையல்ல. இது ஒரு தனி உலகம்.
“எப்படி?” என் பின்னால் அப்பாவின் குரல் ‘பூம்’ இடுகின்றது. திடுக்கிட்டுத் திரும்புகிறேன்.
“How do you like it? Good show, Isnt it?”
அப்பா கையை வீசுகிறார். இன்னும் அந்தப் பச்சைக்கல் மோதிரத்தை அணிந்து கொண்டுதான் இருக்கிறாரா என்ன? அம்மா எப்பவோ வாங்கினாளாம். அப்பாவுக்கு என்று. நாளடைவில் அது மோதிர விரலிலிருந்து சுண்டு விரலுக்கு மாறிவிட்டது.
தழையத் தழைய வெள்ளை ஜிப்பாவும், பாதம் தெரியாது தரைபுரள் – அப்படியும் கரையில் ஒரு இம்மி அழுக்கு படாது- மல் வேட்டியும் அப்பாவின் வாட்ட சாட்டத்தை எடுத்துக் காட்டுகின்றன. அப்பாவுக்கு இன்னும் ஒரு மயிர் நரைக்கவில்லை. ஒரு மயிர் உதிரவில்லை.
”You know, சிலர்போல்,இது ஏழையின் குடிசையென்று நான் வேஷம் போடமாட்டேன். “அமரிக்கையாயிருக்கிறார்களாம்! ஹம்பக்! நன்றாய் அனுபவி, நன்றாய் அனுபவிக்க நன்றாய் உழை. நன்றாய் உழைக்க நன்றாய் அனுபவி, இது தான் என் கொள்கை. இவை அத்தனையும்”- மறுபடியும் கை வீச்சில் மோதிரக்கல் ‘பளிச்’- ” என் சித்தாந்தத்தின் அத்தாட்சிகள்.” கூட்டில் புலிபோல் அப்பா உலாத்த ஆரம்பித்து விட்டார். அப்பாவை இப்படி உக்கிரத்தில் பார்க்கப் பார்க்க அப்பா அலுக்காத காட்சி.
“You know, பாலு, நானும் யோசனை செய்துதான் பார்த்தேன். செயலை விட மனிதன் கண்ட காணக்கூடிய விடுதலை எது? விருப்பு வெறுப்பற்று, பலனை எதிர்பாராத செயல் எனும் சிக்கல் எல்லாம் எனக்குத் தெரியாது. நான் கீதை படிக்கவில்லை, உழைத்துவிட்டு, உழைப்பின் பலனன எதிர்பாராவிடில் நான் மனுஷனா? எதிர்பார்த்த பலனை அடையாவிடில் என் பௌருஷம் ஆகும் கதிதான் என்ன? ஆகையால் இந்த வீடு, வாசல், சாமான், தோட்டம், போர்ட்டிகோவில் காத்திருக்கும் கார், மற்ற வசதிகள், சுகங்கள் அத்தனையும் நான், அந்த முறையில் இந்த உலகமே நான். ஏன், பயமாயிருக்கிறதா? என் பேச்சு அகந்தையின் சிகரமாயிருக்கிறதா? இருக்கட்டும். அகந்தை என் சித்தமிசை குடிகொண்டது. கொள்ளட்டும். எனக்கு என் உணர்வு இல்லாவிடில், உயிரே ஏது? இவ்வுணர்வு முற்றின உச்சம்தானே அகந்தை! சிந்தனையால்தான் சித்தத்திற்கு அமைதியென்றிருந்தால் இவ்வுலகில் செயலுடன் சிந்தனையும் இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால் mind you!-” தன் வழியில் திடுமென நின்று, நான் குற்றவாளி போல் என்னைச் சுட்டிக்காட்டுகின்றார். அவர் கண்கள் கொதிக்கின்றன, “என்னிடத்தில் செயலுக்குப் பின்னிடம் தான் சிந்தனை. சிந்தனையென்பது ஒரு போதை. ஹா ஹா!”
அப்பாவின் எக்காளத்தில், அறையில் ஆங்காங்கே அலங்காரமாய், பெரியதும் சிறிதுமாய், உயரமும் குட்டையும் தட்டையுமாய் நிறுவியிருக்கும் வெண்கலக் கிண்ணங்கள் ‘கிண்’ணென்று அதிர்கின்றன.
“நான் படிக்கவில்லை. நான் கடவுளை வழிபடவில்லை. ஒப்புக்கொள்கிறேன். ஆனால் உங்கள் சிந்தனையில் எனக்கு நம்பிக்கையில்லை. சிந்தனையாளர்கள் விஞ்ஞானிகள் நீங்கள் சாதித்ததென்ன? நீங்கள் செய்வதே என்ன, செயலின் ஆராய்ச்சிதானே! சிலந்தி தன் எச்சிலிலிருந்து திரித்த நூல் கொண்டு கூடு கட்டுவது போன்று, செயல் என்று ஒன்று நேர்ந்தபின் அதனின்று உருவான சரடுதானே! செயல் எனும் சிலந்தி – ஆ! இது எனக்குப் பிடித்திருக்கிறது-இது இப்படி வரும் என்று எனக்குத் தெரியாது. ஆகவே இதுவே செயல் தான்- செயல் எனும் சிலந்திதான் என் கடவுள், செயலின் ஒடுக்கம் புலனின் ஒடுக்கம், புலனின் ஒடுக்கம் மனதின் ஒடுக்கம்; மனதின் ஒடுக்கம் உயிரின் அமைதி – இதுதானே சிந்தனையின் சாதனை! கொக்கு தலையில் வெண்ணெயை வைத்துப் பிடிப்பது எப்படி என்று கண்டுபிடிப்பதுதானே விஞ்ஞானம்; செயலின் புலிப்பசிக்குப் புல்லைக் காட்டும் புல்லர்கள்! செயலை செயல் வழி ஏற்காது அதைப் பெருக்குவதே நீங்கள்தான்!”
அப்பாவின் முகத்தில் தணல் நக நகக்கின்றது. அவரே, உடல் பூரா ஒரு சுடராகி விட்டார் என்று எனக்குத் தோன்றுகிறது.
“பிரமாதமாய் சிந்தனைக்கும் விஞ்ஞானத்திற்கும் போய்விட்டோம். முதலில் இந்த உடலைச் சொல்- தேங்காயைச் சுண்டுவதுபோல், தன் மார்பில் சுண்டிக் கொள்கிறார்.-” முதலில் இந்த உடலைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டியதெல்லாம் நாம் தெரிந்து கொண்டு விட்டோமா, தெரிந்து கொள்ளத்தான் முடியுமா? யூகமும் தர்க்கமும் தவிர. சாட்சி பூர்வமாய், பிறப்புக்குமுன் தெரியுமா, சாவுக்குப்பின் தெரியுமா? இடையில் இயங்கும் உயிரிண் உண்மையான தன்மை தெரியுமா? இதையே நேரம்என்கிறோம். சிந்தனையென் கிறோம்; இந்த நேரத்திற்குள் குருவி தலையில் பனங்காடை வைக்கின்றோம். ஆனால் இதையும், இத்தனையையும் உடல் தாங்கிக் கொள்கிறதே, அதுதான் ஆச்சரியம்! இவ்வுடல் பலம் பெரும்பலம் தம்பி ! செயலுக்கே. ஆமாம், சிந்தனை யும் உள்பட எச்செயலுக்கும் அடித் தடவாளம் உடலைத்தான் நான் செயலுக்கும் முன் வணங்குகிறேன். எனக்கு சிந்தனை வேண்டாம். பெரும் பெரும் யோசனைகள் செய்திட புத்தி,அறிவு,என ஆயிரம் கூர்மை வேண்டாம். செயல் கொடு. போதும், அது தோலோ, தோலுரியோ. கசாப்போ, அதனினும் ஈனமோ, செயல்கொடு, அச்செயலின். முழுமையுடன் இயங்க உடல்கொடு போதும் வேறெதும், வேண்டிலேன், துயரமோ, வாழ்வோ நான் இயங்கு கிறேன் என்பதே எனக்கு ஒரு பெரிய உண்மை. இந்த உண்மைக்கு இந்த உடல் சாட்சி. ஆகையால் இந்த உடலை முதலில் நான் புரிந்து கொள்ளப் பார்க்கிறேன். இந்த உடலை மறுக்க உண்மைக்கே உரிமை ஏது? அதைத் தாங்குவதே உடல் தானே! ஆகையால் நான் என் உடலை மறுத்தால் உண்மையை மறுத்தவனாவேன். பிறகு நான் வாழவே லாயக்கற்றவன். பிறகு வாழ்வதற்கே எதுவுமில்லை -ஓ, எங்கோ ஆரம்பித்து எங்கெங்கோ போய் வந்துவிட் டோம். நான் வேலையா வெளியே போகிறேன். எப்போ திரும்புவேனோ? எனக்காகக் காத்திருக்க வேண்டாம். சாப்பிட்டுவிட்டுத் தூங்கு. உனக்கு ரயில் அலுப்பு இருக்கும்.”
அப்பா போய் எந்நேரமோ ஆகிவிட்டது. ஆனால் என்னை ஒரு புயல் ஊடுருவி, தன் வழியில் என்னைச் சக்கையாய்த் துப்பி விட்டுச் சென்றாற்போல் எனக்கிருக் கிறது. அந்த மயக்கத்திலேயே நான் சாய்ந்த இடத்தில் அயர்ந்துவிட்டேனோ, என்னை யாரேனும் எழுப்பி சாதம் போட்டார்களா, அல்லது நான் உறங்கும் அசதிகண்டு எழுப்பாமலே இருந்துவிட்டார்களா தெரியாது. நான் தூங்கினேனே? அதுவும் அறியேன், நினைவுக்கும் நினைவு தன்னை இழக்கும் எல்லைக் கோட்டிற்கும் இடையே உணர்வு தத்தளித்துக் கொண்டிருந்ததோ என்னவோ? திடீரென என் எதிரே. பெரிய ஜன்னலை அடைத்துக் கொண்டு ஒரு ராட்சதச் சிலந்திக் கூடு காற்றில் படபடக் கின்றது. அதில் அங்குமிங்கும் முகங்கள் மாட்டிக் கொண்டு தவிக்கின்றன; தெரிந்த முகங்கள் தெரியாத முகங்கள், அப்பா. அம்மா, சாலா மாமி,நான். எங்கள் முகங்களும் தெரிகின்றன. கூட்டின் நடுவே சிலந்தியின் இடத்தில் கனத்ததொரு பின்னல் சுருண்டு கிடக்கின்றது, இரைதின்ற பாம்புபோல் அவ்வளவு கனம்,
இருந்தாற்போல் இருந்து அது சுருள் சுழன்று என் முகம் நோக்கி ஊர்ந்து வருகிறது. உடல் பின்னல், முகம் பாம்பு என்னால் எதுவும் செய்ய முடியவில்லை, நான்தான் கூட்டில் மாட்டிக் கொண்டிருக்கிறேனே! என்மேல் ஏறி என் கழுத் தைச் சுற்றிக் கொள்கிறது. எனக்கு மூச்சு திணறுகிறது: ஆனால் அது விடுவதாயில்லை. என் முகத்தில் இடம் தேடி, கழுத்தைக் கவ்வுகிறது, திடீரெனக் கைகள் எனக்கு எப்போது முளைத்தன? பாம்பின் உடல், சிண்டு சிண்டாய் என் கையில் பீய்ந்து வருகிறதேயொழிய கவ்விய கடி விடுவதாயில்லை. பற்கள் இரக்கமற்ற தீர்வையுடன் பதிந்து, அழுந்தி, சந்திக் கின்றன. ஐயோ! ஐயோ!! ஐயோ!!! எப்படியோ பாம்புத் தலையை வெடுக்கென்று பிடுங்கி யெறிகிறேன். அதுவும் மற்ற முகங்களுடன் கூட்டில் அது விழுந்த இடத்தில் மாட்டிக் கொண்டு விட்டது. அதன் வாயில் என் கழுத்துச் சதை கொத்தாய் அடைத்துக் கொண்டிருக்கிறது. என் கழுத்தில் கடித்த இடத்தைத் தொட்டுப் பார்த்துக் கொள்கிறேன். ஐயோ! எவ்வளவு பெரிய, கோரமான தழும்பு! என்ன மறைத் தாலும் மறைக்கவே முடியாது. இந்தத் தழும்பு போகவே போகாது.
பாம்பின் முகத்தில் எவ்வளவு பெரிய துயரம்! ‘பெரிய’ என்றால் பற்றாது. துயரம் என்று விட்டதால் மட்டும் சொல்லி ஆகிவிடாது. உலகம் உற்பவித்த நாள் முதலாய் அதன் சோகம். தன் வண்டல்கள், வருடங்களாய்த் தெளிந்த பனி நீராகி, இரண்டு குளங்களில் தேங்கி, அக்குளங்களுக்கு விழிகள் எனப் பெயரிட்டாற் போல் அவ்வளவு மகத்தான துயரம். இந்தத் துயரம் என்னால் சசிக்க முடியவில்லை. அழுது அழுது கண்ணீராய்க் கரைந்து இவ்விழிகளுள் கலந்து விட மாட்டேனா. அப்படிக் கலந்து நானே அற்றுப் போனா லும் என் வேதனையின் ‘விண் விண்’ அற்றுப் போகுமோ?
பாம்பின் விழிகள் அதன் கரைகள் கரைந்து வேறாய் இழைகின்றன. ஆ! புரிகிறது. நான் இவ்வீட்டுக்குள் வரும் வழியில் புற்றறையில் மேய்ந்து கொண்டிருந்தது. என்னை நிமிர்ந்த மான் விழிகள் அல்லவா இது! பயமற்ற பார்வை இல்லை இது. யார், சக்குவா?
“இன்னும் விடியல்லியா பாலு? உன் அம்மாவுக்குப் பல் தேய்க்க வென்னீர் பேஸின் எல்லாம் கொண்டு வந்தேன். கதவு திறந்திருந்தது.எட்டிப் பார்த்தேன். எத்தனை நாழியா உன்னைப் பார்த்துண்டிருக்கேன் தெரியுமா? அம்மா கூட கண்டிப்பாள், தூங்கறவாளை அப்படி கவனிக்கலாகாதுன்னு அது என்ன சாஸ்திரமோ? ஆனால் அதுவே எனக்கு ஒரு கெட்ட பழக்கமாய் போச்சு. நீ தூங்கறபோது ஏதோ ஒரு தினுசில் அழகாய்த் தானிருக்கே. ஆனால் பார்த்தால் ஏதோ பாவமாயிருக்கு, ஏன்? ரெண்டு மூணுதரம் உன் மூச்சு தேம்பித்து, அடிச்ச குழந்தை அதே சாக்காய் தூங்கிட்டாப் போல, ஏன்? மறுபடியும் நம்ம ரெண்டுபேரும் சண்டை போட்டுக்கறாப்போல கனாக் கண்டாயா? ஏன். பேசவே மாட்டேன்கிறே? குரல் ரொம்பவும் கட்டை ஆயிடுத்தா? ஆண்களுக்கு குரல் மாறினால், சிலபேருக்கு ரொம்பக் கண்றாவியாயிருக்குமாமே.நிஜமாவா? குரல் மாறினப்புறம் ஆயுசுக்கும் அதே குரல்தானாமே? அதுதான் குரலைக் காட்ட மாட்டேன்கிறையா? அதென்ன, அவ்வளவு பெரிசா? என் குரலை விடவா? அட, அதையும்தான் பார்த்து விடுவோமே! அம்மா என்னை அடிக்கடி குரலைக் காட்டாதேடி காட்டாதே”ன்னு கன்னத்தைப் பிடித்து இழைச்சுண்டு தானிருக்கா. இந்தப் பெரியவாள் எல்லாம் என்னத்தை அப்படித் திருத்துவாளோ? அது என்ன கிழக்கே நிற்காதே. மேற்கே திரும்பாதேயோ? சரிதான் போறேன்…”
அவன் மாடியிறங்கிப் போகும் ‘திடும் திடும்’ செவியில் மோதுகின்றது.
எழுந்திருக்க மனம் இல்லை. வெளியே எட்டிப் பார்க் கிறேன். இரண்டு மேகங்கள் வெள்ளை எருதுகளின் உரு வெடுத்து ஒன்றோடொன்று மோதுகின்றன. ‘டங்’ கென்று நெற்றிகள் முட்டிக்கொள்ளும் சப்தம் கேட்காமலிருப்பது எனக்கு ஆச்சரியமாயிருக்கிறது.
ஐன்னலின் கீழ் நேற்று நான் கண்ட மான் மேய்ந்து கொண்டிருக்கிறது, ஒரே கோட்டில் வரைந்தாற் போன்று எழுந்த அதன் உருவ லகு ஏதோ ஒரு தினுசில் என் இதயத்தில் ஓசையற்ற இசையை மீட்டுகையில் நெஞ்சு விம்முகின்றது. அந்த நடையில் என்ன மென்மை, பூமிமேல் பாதம் படுவதே அதற்கு அச்சம் போல்! மொழு மொழுவென சதைப்பற்றாய், வழு வழுத்து அழுத்தமான அதன் இடை அசல் மனித இனத்தது போலவே இல்லை? இடையை ஒடித்து ஒடித்து அது நடக்கையில், சக்கு மாதிரி-
அப்படித் தோன்றியதுதான் தாமதம்.
மதகின் கதவுகள் திறந்து கொண்டாற்ரோல் என்னுள் ஒரு பெரும் வெள்ளம் பெருக்கெடுத்தது. என்னை அடியோடு சுரண்டி. என்னை ஓலைப் பாயாய்ச் சுருட்டி மறுபடியும் என்னுள்ளேயே வீசியெறிந்த பாய்ச்சுருள் என் காலடியில் கழன்று விரிந்து ஓடுகையில், ஓலை பட்டாய் மாறி, அதில் வர்ணங்கள் சரசரவென விதவிதமாய் மாறி மாறி நெய்து கொண்ட மின்வேகம் கண்ணைப் பறித்து புருவ மத்தியில் குடைந்து துருவியெடுத்தது. நான் களைத்துப் போய் தலையணையில் சாய்ந்தேன்.
”சக்கு! சக்கு!! சக்கு!!!” நெஞ்சு முனகிற்று.
பால் விஷமாய்த் திரிந்த பயங்கரத்தைக் காட்டிலும் திரிந்த நஞ்சு மறுபடியும் முன்னைக்காட்டிலும் அதிமதுரமான அமிர்தமாய் மாறும் இன்பத்தில், அவ்வின்பத்தின் வேதனையில், என் காலடியில் பூமியே குலுங்குகிறது.
உண்மையில் எங்கள், ஏன் யாருடைய சச்சரவுகளும் அடி, தடிகளுமே மூலபாசத்தின் தோலுரிப்புகள் தாமோ?
நானும் யோசித்துப் பார்க்கிறேன். ஹாஸ்டலில் இருக்கையில் எப்போதாயினும் உன்னை நினைத்திருப் பேனோ? அம்மா என்ன பண்ணுகிறாளோ, அம்மாவுக்கு மூச்சு சரியாக ஓடுகிறதோ? என்று ஏமாந்துவிடப் போகிறோமோ என்றெல்லாம் அம்மாவைப் பற்றிக் கவலைப்பட்ட துண்டு. ஓரிரு சமயங்கள் அம்மாவை நினைத்து என்னையறி யாமலே, தூக்கத்தில் கன்னம் நனைந்ததுண்டு சாலா மாமியைப்பற்றிக் கூட நினைக்கப் பிடிக்கும். அம்மாவுக்குப் பக்கபலமாய். தக்க துணையாயிருக்கிறாள் என்று ஆறுதலா யிருக்கும்.
சக்கு படகாமணி. பத்ரகாளி, சமையல்காரி பெண்ணைப் பற்றிப் பரிவாய் நினைக்க என்ன இருக்கிறது? ஆகையால் இப்போது இதுவே எனக்குப் பிரமிப்பாயிருக்கிறது. இம்மாதிரி காலைவாரி விடும் பரிவு நிலை ஒன்று இருக்கிறதா என்ன?
சக்கு, என், என், என்-
இல்லை, என் தவிப்புக்கு வார்த்தை காணாமல் தவிக்கும் தவிப்பில், சொற்களே பித்தங்களாய் மாறி வயிறு குமட்டுகிறது.
“என்னப்பா பாலு, ஹோட்டலில் கண்டதைச் சாப்பிட்டு, வயிற்றைப் பாழ் பண்ணிண்டுட்டியா? பரிமாறின பண்டம் அப்படியே இருக்கே, தொட்டுப்பார்த்ததோடு சரியா, உடம்பு சுகமில்லையா?”
“இல்லேம்மா, பாலு பெரிய மனுஷனாயிட்டான்!”
என்னைக் குற்றுயிராக்கியதல்லாமல் கொத்தி வேறு ஆகணுமா?
அப்பா அவசரமாய் வருகிறார், போகிறார்.
“ஒரு முக்கியமான deal. மூச்சுவிட நேரமில்லை. இந்தத் தோல் மார்க்கெட் இருக்கே. இது ஒரு பெரிய தண்டா. இன்னிக்குச் சிகரத்தில் இருக்கோமென்று தங்கி, மூச்சு வாங்கிக்கொள்ள முடியாது. விலை சரிஞ்சால் தடால் சாக்கடைதான்- என்ன ஒருமாதிரியாயிருக்கே, what is wrong with you?”
சக்கு,சக்கு, சகுந்தலா–
நாமம் என்ன திவ்யமானாலும் ரூபத்துக்கு இணையாகுமோ?
ரூபத்தின் நிழல்களைத்தான் நாமம் தரமுடியும். தவிர, நாம ஜபத்தில் நாமரூபம்தான் கிட்டும். அதுவும் நிழல்கள்.
ரூப தரிசனம், தானே தந்த பின் நாமஜபம் என்ன பயன்?
அதுவும் என்னைத்தானே வந்தடைந்த தரிசனத்தை என்னென்று சொல்வது? நாமம் தாண்டியபின் நாமமே நெஞ்சில் பாய்ந்த கோடாரியாகி விடுகிறது. சகுந்தலை, சக்கு என்னும் நாம் தூரத்திற்கு அவளை நாம் பிரிந்திருப்பதே என்னால் தாங்க முடியலில்லை. நாமக் கோடரி பிளந்த கூறாய் நெளிகிறேன்.
திக்குத் தப்பி அறைகளைச் சுற்றி வருகிறேன்,
வீடு ஒரு காடு.
மாடசாமி வருகிறான். அவன் தோள் மேல் ஒரு குழந்தை குப்புறப் படுத்துக் கொண்டிருக்கிறது.
“நம்ம பையனுதானுங்க, இவன் ஆத்தா மூணு நாளா இவனுக்குப் பாலை மறக்கடிக்கப் பாக்கறா. நெனச்சு நெனச்சு வீல் வீல்னு கத்தறான். எங்களுக்கு ராத் தூக்கம் போயிட்ட ஆத்திரத்தில் நானும் ரெண்டு மொத்தறேன். நான் என்ன செய்வேன்? என் பெண்சாதியையும் குத்தம் சொல்றதில் குணமில்லை. மகவைப் பெத்து அவளும் உடம்பு சலிச்சுட்டா. இதுவும் அட்டையாட்டம் அவள் ரத்தத்தை உறிஞ்சுது. குடிக்குது. இதோ பாருடா கண்ணு, சின்னய்யா வைக் கண்ணெடுத்து, பிக்கெட்டு தருவாரு.”
குழந்தை தலை தூக்கி என்னைப் பார்க்கிறது. ஆனால் உண்மையில், அதன் கண்களில் பார்வையில்லை. அழுது அழுது வீங்கிப்போன கண்களில் ஒரு பெரும் சீறல்தான் தெரிகின்றது. உலகத்தில் யாருமே இப்போது அதற்கு எதிரிதான். முடிந்தால் உலகத்தையே எரித்து விடும் ருத்ரம், அதே சமயத்தில் தன் கோபம் தனக்கே புரியாத ஒரு திகைப்பு.
மறக்கடிக்கிறார்களாம்!
பின்னால் சிரிப்புக் கேட்டுத் திரும்புகிறேன்.
இடையில் குடத்துடன் நிற்கிறாள்.
“பாலு, நிஜம்மா இப்போ உன் முகம், பால் ஏக்கம் பிடுச்சுப்போன இதன் முகம் மாதிரிதான் இருக்கு. கண்ணாடி யில் பார், நான் பொய் சொல்றேனா பார்த்துக்கோ!”
மாடசாமி தன் பையனைச் சமாதானம் பண்ணிக் கொண்டு கீழே போகிறான்.
அவள் அம்மாவின் அறையை நோக்கிப் போகிறாள். நடையில் அவள் இடையின் ஒடிப்பினின்று என் கவனத்தை மாற்ற முடியவில்லை. அப்படியே அவனை என் கண்களால் விழுங்கி, விழிகளுள் வாங்கிக் கொள்ள மாட்டேனா? பிறகு அவளைத் தேடத் தேவையில்லை அல்லவா?
மாலை வருகின்றது.
ஆனால் எனக்கு வெறும் மாலை வருவதாக இல்லை. எதற்கோ நேரம் நெருங்குவது போல்தான் தோன்றுகிறது. ஆனால் ஒவ்வொரு நிமிடமுமே இப்படித்தான். ஏதோ ஒரு நேரத்தை, ஒரே நேரத்தைக் குறித்து நெருங்கி வருவதுபோல் வருகிறது? வந்து போகிறது, ஆனால் நேரம் நிமிடத்தில் பிடிபடாமல் நழுவி விடுகின்றது, இப்படியே நிமிடம் மணியாகி, மணி மாலையாகி, வாழ்நாளே நேரத்தின் ஏமரற்றமாகி, நேரம் கழுத்திலிட்ட சுருக்கில் உயிர் போகாமல் ஊசலாடுகிறது.
என் துக்கமே, என் வதைப்பே இதுதானா? காரணங் கண்டும் கொள்ள முடியவில்லை. இவளே தான் என் நேரம், இனி என் காரணி. என் கண்ணில் அவள் பட்டுக் கொண்டிராத ஒவ்வொரு கணமும் நான் உயிர்ப் பிணம்.
இனி என்னால் ஒரு நிமிஷமும் பொறுக்கமுடியாது. இதோ அவள் திடுதிடுவென மாடியேறி வரும் சப்தம் கேட்கிறது. எனக்குப் பரபரப்பு தாங்க முடியவில்லை. எழுந்து வந்து என் அறைவாசலில் நிற்கிறேன். மாடி வளைவினின்று படிக்குப்படி, படிப்படியாய் அவள் உருவம் உயருகையில், மூழ்கிய கோபுர வெள்ளம் வடிந்து கலச தரிசனம் ஆவது போல் வெளிப்படுகிறாள்.
நெற்றியின் நடுவகிடிலிருந்து கூந்தலின் வங்கிகள் சரிந்தன. புருவத்தில் அகல் வளைவில் கீறிய சாந்தி லிருந்து குங்குமம் குபீரெனச் சுடராய் எழுந்தது, விழி யோரங்களில் நீட்டிவிட்ட மை, கத்திப் பிடிபோல் காது வரை ஓடிற்று. மடிப்பினின்று குதித்தெழுந்த கத்தியின் அலகுபோல் விழிகள் எஃகொளி வீசின.
என்னைப் பார்த்ததும் சட்டென நின்றான்.ஒடியேறி வந்த வேகத்தில் அவள் மார்பு லேசாய் மிதந்தது.
அவள் கைகளை எட்டிப் பிடித்தேன்.
அவள் தன்னை விடுவித்துக் கொள்ள முயலவில்லை. ஆனால் விழிகள் சஞ்சலித்தன.
“சக்கு”
மாமியின் குரல் கணீரென ஒலித்தது. அந்தக் ‘கணீரே’ துப்பாக்கி ரவை போல் என் மார்பில் பாய்ந்தது,
சக்குவை என்னால் பார்க்க சஹிக்கவில்லை. திடீரென அப்படி அலண்டு போனான், கண்கள் வட்டமாய்ச் சுழன்றன. கைகள் கூப்பி விரல்கள் பின்னிக் கொண்டன். திகிலுக்கு ஒரு பெயர் சக்கு.
”இல்லேம்மா.”
”சக்கு, கீழே போ!'”
மாமி என்னை நெருங்கினாள். என்னை அடிக்கப் போகி றாளா? இல்லை, மாமி முகத்தில் கோபம் இல்லை.
“பாலு சக்கு உன் தங்கை!”
மாமியின் விழிகள் நிறைந்தன.
“உன் தங்கை, நான் சொல்றது புரியறதாடா, சக்கு உன் தங்கை!”
கண்ணீர் பெருகி கன்னங்களில் வழிந்தோடியது.
”என்றைக்கேனும் இப்படி ஏதேனும் நேர்ந்துடு மோன்னு நான் வயிற்றில் நெருப்பைக் கட்டிண்டுதானி ருக்கேன். அவளும் வெகுளியாயிருக்காள். நான் என்னசெய்வேன்? ராமா, என்ன செய்வேன்?”
மாமி வாய்மேல் முன்றானையை மூடிக்கொண்டு மெதுவாய்க் கீழே யிறங்கிப் போகிறாள் – தள்ளாடுகிறாள்.
நான் பஸ்மமாய்க் குமுங்கிக் குன்றி விட்டேன்,
என்னுள்ளேயே நான் இல்லை,
தூங்கிவிட்டேனா, நினைவிழந்தேனா, இறந்து போனேனா, என்மேல் கூரை சரிந்து லிழுந்து விட்டதா? எல்லாமே ஒன்றாய்த்தானிருக்கிறது.
அறையில் இருள் சூழ்ந்திருக்கிறது. இரவா? இருட்டா தெரியவில்லை, தெரிந்து என்ன ஆகவேண் டும்? எங்கோ கடிகாரம் மணியடிக்கிறது. எத்தனை தரம்? இப்போ தெரிந்து என்ன ஆக வேண்டும்? வீடே அரவம் அடங்கிக் கிடக்கிறது. இனி எனக்கு இங்கே என்ன வேலை?
வீடு என்னும் காடு.
எழுந்து இருளில் என் வழியைத் துழாவிச் செல்கிறேன். கால்போன வழி.
“பால சந்த்ரா!”
ஓ,இங்கே வந்திருக்கிறேனா? வாசலில் நீற்கிறேன்.
நான் உள்ளே போகவில்லை’ ஏன் போகணும்?
அம்மாவே எனக்கு அவள் குரலில்தான் வாழ்கிறாள்.
“பாலசந்த்ரா, உன் மன நிலையை நான் அறிவேன். நீ வருவதற்கு முன்னாலேயே சக்குவுக்குக் கல்யாணம் கூடியிருந்தால் உனக்கு இது தெரிய வேண்டிய அவசி யமேயிருந்திருக்காது. அப்படித்தான் நாங்கள் நினைச் சுண்டிருந்தோம். ஆனால் தக்க வரன் இதுவரை கிடைக்க வில்லை, உனக்காக. கையை விட்டுக் கழிஞ்சுதுன்னு கண்ட இடத்தில் தள்ளிவிட முடியுமா? இனி நீயும் சேர்ந்து உன் தங்கைக்கு நல்ல வரனாய்த் தேடணும், சாலாவுக்கு நம்மாலான கைம்மாறு இதுதான்,”
சற்றுத் தயங்கி அசரீரி மறுபடியும் வருகின்றது.
“பாலசந்த்ரா, நீ இனிமேல் குழந்தையில்லை. இதெல்லாம் நீ தெரிஞ்சுக்க வேண்டியதுதான். முதல் முதலில் எனக்கு உன்போல்தானிருந்தது. ஆனால் அலை அடங்கினப்புறம் நியாயம் தெரியாமல் இல்லை. அர்ச்சுனன் போல ஆம்படையானுக்கு வியாதிக்காரப் பெண்டாட்டியா வாய்ச்சுட்டு எனக்குப் பேச வாய் என்ன இருக்கு? அதுவும் ஒருநாளா, ரெண்டு நாளா, என்னால் அவருக்கும் ஆயுசுக்கும் தண்டனையா? நாம் எல்லாரும் மனுஷாள் தானே! இது ஒண்ணு நீ புரிஞ்சுண்டால் போதும்.”
ரூபதரிசனம் கிட்டிவிட்டால் போதாது. தரிசனத்தின் உறவும் புரிந்துகொள்ள வேண்டுமோ?
அதற்குத்தான் நாம ரூபமோ?
ரூபதரிசனத்தை நாமரூபத்தில் அடையவே நாம ஜெபமோ?
அம்மா குரல் அடங்கிவிட்டது. இதுவே அவளுக்கு அசதியாயிருக்கும், கீழே யிறங்கிப் போகிறேன்.
எங்கே வந்திருக்கிறேன்? அப்பா, என்ன இருட்டு!
காலை ஏதோ முகர்கின்றது, குனிந்து உற்று நோக்கு கிறேன். எது என்று புரிந்ததும் என்னைப் பெரும் சீற்றம் பற்றிக்கொண்டது. என் பலம் கொண்ட மட்டும் ஓங்கி அதை அறைந்தேன். அடி சப்பையில் விழுந்ததும், மிரண்டு அது ஒரு துள்ளு துள்ளிற்று.
“மாயமான்! மாய் மான்!”‘ என்று அலறியபடி அதைத் துரத்திக்கொண்டு ஓடினேன், இருளில் வேர் தடுக்கிக் குப்புற விழுந்தேன்.
குளம்போசை என்னின்று எட்ட எட்ட ஓய்ந்து கொண்டிருந்தது.
அழுகையும் வந்தது.
– தயா (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: செப்டம்பர் 1993, வானதி பதிப்பகம், சென்னை.