‘ணங்’கென்ற சத்தத்துடன் முதலில் ஒரு பித்தளைக் குடம் வைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பல வண்ண பிளாஸ்டிக் குடங்கள் வரிசையாக வைக்கப்பட, தேசிய நெடுஞ்சாலையின் அந்தப் பகுதியே பல வண்ணக்குடங்களினால் போடப்பட்டது போல் தோற்றமளித்தது.
வானம் பார்த்த பூமியான கருத்தம்பட்டி கிராமம் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து உள்ளே இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. மழையில்லாமல் கிணறுகள் வறண்டு போக, குடிநீருக்காக ஜனங்கள் இரண்டு கிலோமீட்டர் தொலைவு நடந்து சென்று ஊருக்கு வெளியே இருக்கும் ஒரு கிணற்றிலிருந்து நீர் கொண்டு வர வேண்டியிருக்கிறது. அரசாங்கத்திடம் எத்தனையோ முறையிட்டும் பிரயோஜனமில்லை. தான் தேர்ந்தெடுக்கப்பட்டால் இந்த கிராமத்துக்கென்று மேல் நிலைக் குடிநீர் தொட்டி அமைக்க உடனடியாக ஏற்பாடு செய்வேன் என்று சூளுரைத்து வெற்றி பெற்ற அந்தத் தொகுதி ஆளுங்கட்சி எம். எல்.ஏ தமிழ்ச்செல்வனை தேர்தலுக்குப் பிறகு ஜனங்கள் இன்னும் பார்க்கவில்லை. இதோ அடுத்த தேர்தல் வந்து கொண்டே இருக்கிறது. இந்த நிலைமையில் தான் தமிழ்ச்செல்வன் அவருடைய கொழுந்தியாள் திருமணத்திற்காக அந்த வழியாக அன்று காலை செல்லப் போவதாகக் கேள்விப்பட்ட கருத்தம்பட்டி ஜனங்கள் தண்ணீர்க் குடங்களாலேயே அவரை வழி மறித்து நியாயம் கேட்க திட்டமிட்டனர். பொழுது விடிந்ததுமே சாலையில் அவ்வாறே கூடியும் விட்டனர்.
மணி எட்டாயிற்று. ஒன்பதாயிற்று. கதிரவனின் வெப்பக் கதிர்கள் சுளீரென்று முகத்தில் அறையத்தொடங்க, சிணுங்கும் கைப்பிள்ளைகளுடன் சாலையில் உட்கார்ந்திருந்த பெண்கள் நிழலைத்தேடி சாலை ஓர மரத்தடியில் போய் உட்கார்ந்தனர். அந்த ஊரிலேயே மோட்டார் சைக்கிள் வைத்திருக்கும் ஒரே ஆளான மாடசாமி தான் அவர்களுக்கு செய்தி கொண்டு வந்தான். கருத்தம்பட்டி கிராம மக்கள் சாலை மறியல் செய்வதைக் கேள்விப்பட்டு, தமிழ்ச்செல்வன் இந்தப் பக்கம் வருவதைத் தவிர்த்து இருவது கிலோமீட்டர் சுற்றிக் கொண்டு மாற்று வழியில் சென்றுக் கொண்டிருக்கிறாராம். கோபத்தோடு வயதான பெண்கள் மண்ணை இறைத்து சாபம் கொடுக்க, மற்றவர்கள் முணுமுணுப்போடு குடங்களை எடுக்க எத்தனிக்கையில், திடீரென்று எதிர்ப்பக்கம் ‘சர்’ ‘சர்’ என்று வரிசையாக வந்த கார்கள் சாலையை மறித்த குடங்களையும் ஜனங்களையும் கண்டு ‘சட்’டென்று ‘ப்ரேக்’ போட்டு நின்றன.
வரிசையாக நின்ற கார்களிலிருந்து ஒருவர் மட்டும் கீழே இறங்கி வந்து ‘என்ன விஷயம்?’ என்று விசாரித்து விவரங்களை சேகரித்துக் கொண்டு நடுவிலிருந்த காரில் அமர்ந்தவரிடம் போய்ப் பணிவாகப் பேசினார். பிறகு திரும்பி வந்தவர், “எதிர்க்கட்சித் தலைவர் சேலத்திலிருந்து சென்னை திரும்பிக் கிட்டிருக்கிறாரு. ஒங்க ஊர்ப் பெரியவங்க நாலு பேரைக் கூப்பிடறாரு. வாங்க வந்து பேசுங்க!” என்று அழைத்துக் கொண்டு போனார். போகிற போக்கில், “மறக்காம அடுத்த தேர்தலில் எங்க கட்சி வேட்பாளருக்கே வாக்களியுங்க. அப்புறம் ஏன் இந்த மாதிரி அவல நிலைமை உங்களுக்கு வரப் போகுது?” என்று பொதுவாக எல்லோரையும் பார்த்து சொல்லிக் கொண்டே போனார்.
இதற்குள் எதிர்க்கட்சித் தலைவரை ஒரு பேட்டியெடுப்பதற்காக அவருடனேயே பயணித்துக் கொண்டிருந்த ஆங்கிலத் தொலைக்காட்சி எம்.கே.என். பி.கே.என் சேனலின் இள வயது நிருபர் பரபரப்பாக கீழே இறங்கி ஜனங்களிடம் ‘மைக்’கைக் கொடுத்து கேள்வி கேட்க ஆரம்பிக்க, அவருடன் வந்த கேமிராமேன் சாலை மறியல் காட்சியை பதிவு செய்ய ஆரம்பித்தார். இதைப் பார்த்த எதிர்க்கட்சித் தலைவரின் செயலாளர், தலைவரின் காதில் ரகசியமாக ஏதோ சொல்ல, தலைவர் நிருபரைக் கூப்பிடனுப்பினார்.
“பார்த்தீங்க இல்லே? ஜனங்களை எதிர்கொள்ள முடியாம எப்படி ஆளுங்கட்சி எம். எல்.ஏ ஓடி ஓளிஞ்சு மாற்றுப் பாதையில கல்யாணத்துக்குப் போறார்னு? இதோ, இந்த சாலையோட போனா வெறும் நாலு கிலோ மீட்டர் தொலைவு தான் அவர் போக வேண்டிய நத்தம்பட்டி கிராமம். என்ன? அவரை நாம்ப சும்மா விடலாமா? திருமண மண்டபத்துக்கே போய் அவரை ஒரு பேட்டி எடுத்து டீவியில போட வேண்டாமா?” விஷமச் சிரிப்புடன் தலைவர் நிருபரை நாசுக்காக உசுப்பி விட, சுவாரஸ்யமான நாட்டு நடப்புகளை உடனுக்குடன் ஜனங்களுக்குத் தருவதற்காகவே இயங்கி வரும் தொலைக்காட்சி சேனலுக்கு ‘வெறும் வாயை மெல்பவருக்கு அவல் கிடைத்தாற் போல’ ஆயிற்று. அவசர அவசரமாக அங்கே பதிவு செய்ய வேண்டிய காட்சிகளை முடித்துக் கொண்டு தங்கள் வேனில் நத்தம்பட்டிக்கு விரைந்தனர்.
திருமண மண்டபத்தில் மாலை மரியாதைகளோடு வரவேற்கப்பட்டு தமிழ்ச் செல்வன் குடும்பத்தினர் உள்ளே நுழைந்த சற்று நேரத்திற்குள்ளாகவே எம்.கே.என். பி.கே.என் தொலைக்காட்சி சேனலின் நிருபரும் கேமிராமேனும் பரபரப்பாக கீழே இறங்கினர். மண்டபத்தின் நுழைவு வாயிலிலிருந்து படமெடுக்க ஆரம்பித்த அவர்களை திருமண கோஷ்டியினர் ஆர்வத்தோடு பார்த்து, ‘ஆளுங்கட்சி எம். எல்.ஏ தமிழ்ச்செல்வன் கலந்து கொள்ளும் திருமணம் என்பதால் சென்னையிலிருந்து டீவி ஆட்கள் வந்து படமெடுக்கிறார்கள்’ என்று தங்களுக்குள் மகிழ்ச்சியோடு பேசிக்கொண்டனர். சிலர் அவர்களாகவே ஆவலாக முன்வந்து நிருபரிடம் பேசினார்கள்.
தனக்காகக் காத்திருந்த மணமக்களுக்கு தன் கையால் தாலி எடுத்துக் கொடுத்து திருமணம் நொடியில் முடிந்து விட மண்டபத்தில் ஒரு அறைக்குள் சென்று சற்றே சிரமபரிகாரமாக ஓய்வெடுத்து ஒரு குளிர் பானமும் அருந்தி விட்டு தமிழ்ச்செல்வன் வெளியே வருவதற்குள் தொலைக்காட்சியினர் ஒரு ‘ரவுண்டு’ எல்லோரையும் படமெடுத்து பேச்சுக் கொடுக்க ஆரம்பித்து விட்டனர்.
டீவி ஆட்களைப் பார்த்து புருவத்தை உயர்த்திய தமிழ்ச்செல்வன் தன் செயலாளரை சைகை செய்து அருகே அழைத்தார். “என்ன இது? இவுங்க வரப்போறாங்கன்னு எனக்கு சொல்லவேயில்லையே நீ?”
பதறிப் போன செயலாளர் “ஒங்க வீட்டுக் கல்யாணம்னு ‘கவர்’ பண்ண நீங்க ஏதாச்சும் வரச் சொல்லியிருப்பீங்களோன்னு நெனைச்சேன் தலைவரே! இருங்க! போய் என்ன ஏதுன்னு கேட்கறேன்!”
செயலாளரை நெருங்க விடாமல் தமிழ்ச்செல்வனின் மனைவியும் மகளும் மணமக்களோடு நின்று விதவிதமாக ‘போஸ்’ கொடுத்துக் கொண்டிருந்தனர்.
“ஏய் தமிளு! வா! நீயும் வந்து நில்லு!” என்று மணமகளின் தாய், தமிழ்ச்செல்வனின் அத்தை குரல் கொடுத்தாள். தமிழ்ச்செல்வன் தன் சொந்த அத்தை மகளைத் தான் திருமணம் செய்து கொண்டிருந்தார். இப்போது அவர் மனைவியின் இளைய சகோதரிக்கு கலாவுக்குத்தான் திருமணம். மாமியாரிடம் ஒன்றும் சொல்லிக் கொள்ள முடியாமல் அவரும் வந்து நிற்க, எம்.கே.என். பி.கே.என் தொலைக்காட்சியினர் சுறுசுறுப்பாக இயங்கி படமெடுத்துக் கொண்டிருந்தனர். இப்போது மைக் தமிழ்ச்செல்வனிடம் நீட்டப்பட்டது.
தொலைக்காட்சி நிருபர் வெகு நாட்கள் பழகியவர் போல சிரித்த முகத்தோடு தமிழ்ச்செல்வனிடம் கேள்விகள் கேட்க ஆரம்பித்தார். தமிழ்ச்செல்வனின் செயலாளர் பதற்றத்தோடு நிருபரைத் தடுக்க முயன்றார். உடனே கேமிரா அவர் பக்கம் திரும்ப, செயலாளர் ஒன்றும் செய்யவியலாமல் தவிப்போடு நிற்க வேண்டியதாகப் போய் விட்டது.
“இது உங்கள் மனைவியின் சகோதரியின் திருமணமா?” நிருபர் ஆங்கிலத்தில் கேட்டார். தமிழ்ச்செல்வன் ‘ஆம்’ என்று தலையசைக்க, “உங்களால் நேரத்திற்கு வந்து இந்தத் திருமணத்தில் கலந்து கொள்ள முடிந்ததா?” என்று நிருபர் வலையை விரிக்க ஆரம்பித்தார். ‘இதென்ன கேள்வி?’ என்பது போல புருவத்தைச் சுருக்கிய தமிழ்ச்செல்வன் “யெஸ்!” என்றார்.
“இல்லை. தாங்கள் கருத்தம்பட்டி கிராம மக்களின் சாலை மறியலைத் தவிர்க்க விரும்பி சுற்றுவழியில் மாற்றுப் பாதையில் வந்திருக்கிறீர்களே, அதனால் தான் நேரமாகி விட்டதோ என்று கேட்டேன்” என்று நிருபர் சிரித்த முகத்தோடு கேட்க அப்போதுதான் தமிழ்ச்செல்வனுக்கு விஷயம் புரிந்தது. எங்கேயோ அத்வானத்தில் இருக்கும் கிராமத்தில் குடி நீருக்காக சாதாரண ஜனங்கள் நடத்தும் சாலை மறியல் யாருக்குத் தெரியப் போகிறது என்று அலட்சியமாக தான் தூக்கிப் போட்ட விஷயத்தை அலாக்காகத் தூக்கி கொண்டு தன் பின்னாலேயே ஒரு தொலைக்காட்சி சேனல், அதுவும் விடாமல் நாள் முழுவதும் ஒரே விஷயத்தையே பல கோணங்களில், மத்திய மாநில அரசு பொறுப்பிலுள்ள பல அதிகாரிகளை, சம்பந்தப்பட்ட துறை வல்லுனர்களை அணுகி நுணுகி விவாதிக்கும் சேனல் வந்திருப்பதையறிந்த தமிழ்ச்செல்வன் ஒரு நிமிடம் வெலவெலத்து தான் போனார்.
“இல்லை!” என்று அவசரமாக மறுத்த தமிழ்ச்செல்வன், “நான் முன்னதாக திட்டமிட்டபடி தான் பயணித்து வந்தேன்” என்றார். அதற்கு பதில் சொல்லுமுகமாக தொலைக்காட்சியினர் மண்டபத்தில் எடுத்திருந்த பேட்டியை அங்கேயிருந்த தொலைக்காட்சிப் பெட்டியில் போட்டு காண்பிக்க ஆரம்பித்தனர். ஒருவரைப் பார்த்தாற் போல எல்லோரும், “முகூர்த்த நேரம் தவறி விடப் போவுதேன்னு நாங்க எல்லாம் ரொம்ப பதட்டமாயிட்டோங்க! மெயின் ரோடில தான் ஏதோ மறியலாமே? அந்த வழியா வர முடியலயாமே? இவுங்க ஊரைச் சுத்திக் கிட்டு இல்ல வந்திருக்காங்க?” என்று கூறியிருந்தனர்.
“இல்லவேயில்லை! இவுங்க தப்பா சொல்றாங்க! உள்பக்கமா பாதை நல்லாயிருக்குன்னு தான் அந்த வழியில வந்தோம்!” என்று தமிழ்ச்செல்வன் மறுக்க, “அப்போ தேசிய நெடுஞ்சாலையை விட கிராமத்துக்குள்ள இருக்கிற சாலைங்க பயணத்துக்கு நல்லாயிருக்குன்னு சொல்றீங்களா?” என்று நிருபர் விடாக்கண்டனாகக் கேட்டபடி, கருத்தம்பட்டி கிராம மக்களின் சாலை மறியல் காட்சிகளைக் காட்ட ஆரம்பித்தார்.
நூற்றுக் கணக்கில் பல வண்ணக்குடங்கள் சாலையில் வீற்றிருக்க, ஜனங்கள் குடிக்கத் தண்ணீரில்லாத அவல நிலையை, வாக்குக் கொடுத்தபடி தங்களுக்கு எந்த வசதியும் செய்து தராத, ஜெயித்த பின் தொகுதிப் பக்கமே வராத தங்கள் தொகுதி எம். எல்.ஏ தமிழ்ச்செல்வனைப் பற்றி முறையிட்டனர்.
மைக்கைப் பிடித்தபடி எதிர்க்கட்சித் தலைவர் வேறு , ‘தங்கள் கட்சி ஆட்சியிலிருந்தபோது எத்தனை கிராமங்களில் மேல் நிலை குடிநீர்த் தொட்டிகள் அமைத்தது, இப்போது இருக்கும் ஆட்சியில் இந்த பிரச்சினையில் மிகுந்த மெத்தனம் காட்டி ஜனங்களின் அடிப்படைத் தேவைகளைக் கூடப் பூர்த்தி செய்யாமலிருக்கிறார்கள்’ என்று மிகுந்த வருத்தத்தோடு கூறி, சாலை மறியலில் ஈடுபட்டிருந்த ஜனங்களை நேரில் பார்த்து என்ன ஏது என்று கூடக் கேட்காமல் அவர்களைத் தவிர்த்து விட்டு கொழுந்தியாள் திருமணத்திற்காக மாற்று வழியில் தொகுதி எம். எல்.ஏ சென்றதையும் கண்டித்து பேசியதைப் பார்த்து வாயடைத்துப் போய் நின்றார் தமிழ்ச்செல்வன். அவர் முக மாறுதலைப் படம் பிடித்தபடியே தாங்கள் மண்டபத்தின் நுழைவு வாயியிலிருந்த எடுத்த படங்களை காட்ட ஆரம்பிக்க, திருமண கோஷ்டியினர் ஆர்வம் தாங்காமல் முண்டியடித்துக் கொண்டு பார்த்தனர். “இதை எப்போங்க டீவியில காண்பிப்பாங்க?” என்று ஒரு பொடிசு நிருபரை வினவியது.
“இதோ இப்பொவே ‘லைவா’ ஒளிபரப்பாகிட்டு தான் இருக்கு!”என்று நிருபர் தன் கையிலிருந்த ‘லேப்டாபில்’ எம்.கே.என். பி.கே.என் சேனலைப் போட்டுக் காட்ட, அங்கே நடந்து கொண்டிருந்த நிகழ்வுகள் வரிசையாக சேனலில் வந்து கொண்டிருந்தன.
கண்கள் அகல அதைப் பார்த்துக் கொண்டிருந்தாள் எட்டாவது படிக்கும் தமிழ்ச்செல்வனின் மகள் தாமரை. உடனே செல் ஃபோனைத் தட்டி தன் தோழிகளுக்கு எஸ். எம். எஸ். அனுப்ப ஆரம்பித்தாள்.
“எம்.கே.என். பி.கே.என் சேனலை உடனடியாகப் பாருங்கள். என் சித்தி திருமணத்தையும் எங்கள் குடும்பத்தினரையும் பார்க்கலாம்”. அவள் அம்மா அவசரமாக ஓடி வந்தாள். “தாமரைக் கண்ணு! ஒங்க அண்ணனுக்கு உடனே ஒரு எஸ். எம். எஸ். அனுப்பும்மா! பாவம்! பரீட்சைக்குப் படிக்கணும்னு கல்யாணத்துக்கு தான் வர முடியல. டீவியிலயாச்சும் சித்தி கல்யாணம் பாப்பான் இல்லே?” என்றாள் கரிசனமாக.
“எல்லாம் இந்த டீவீக்காரங்க கட்டிக்கிட்ட புண்ணியந்தான்” என்று தன் பேச்சு பதிவாகிக் கொண்டிருக்கிறது என்பதையறியாமல் அவர்களை சிலாகித்தாள் தமிழ்ச்செல்வனின் மாமியார்.
இதெல்லாம் நடந்து கொண்டிருக்கும் போதே தமிழ்ச்செல்வனின் செல் ஃபோன் அலறியது.
“என்னய்யா நடக்குது அங்க? டீவிக்கு போஸ் குடுத்தது போதுமா போதாதா?” கர்ஜித்தார் மந்திரி மலையனூர் மரகதச் செல்வன்.
“ஐயா! எனக்கு ஒண்ணுமே தெரியாதுங்க!” தமிழ்ச்செல்வன் பதறினார்.
“என்னய்யா நடிக்குறே? மொதல்ல அந்த டீவி விஷயத்தை நிப்பாட்டிட்டு அப்புறமா பேசுய்யா!” ‘சட்’டென்று செல் ஃபோன் மௌனமானது.
கருத்தம்பட்டி சாலை மறியல் விஷயம் தனக்கு தெரியவே தெரியாது என்று ஒரேயடியாக சாதித்து, இருந்தாலும் அந்த ஊர் குடிநீர் பிரச்சினையைத் தீர்க்க தான் உடனடியாக நடவடிக்கை எடுப்பேன் என்று கேமிரா முன் உறுதி கூறி ஒரு வழியாக எம்.கே.என். பி.கே.என் தொலைக்காட்சியினரை நல்லபடியாக அனுப்பி வைத்தார்.
எதிக்கட்சியினரின் டீவி சேனலில் அரைமணிக்கொரு முறை எம்.கே.என். பி.கே.என் தொலைக்காட்சியில் வந்த கருத்தம்பட்டி சாலை மறியலையும் ஆளுங்கட்சி எம். எல்.ஏ தமிழ்ச்செல்வன் வீட்டுக் கல்யாணத்தையும் ஒன்று விடாமல் காட்டியதை கருத்தம்பட்டி ஜனங்கள் பார்த்து வாயைப் பிளந்தனர்.
“இதோ பாரு பெருசு! நீ பேசுறதைக் காட்டுறாங்க!”
“:கண்ணாத்தா! யப்பா! மைக்கைப் பிடிச்சிக்கினு எப்புடி பேசியிருக்குற?”
“அடி ஆத்தீ! இதோ நா கூட டீவீல நல்லா வுளுந்திருக்கேனே!”
வாயெல்லாம் பல்லாக கருத்தம்பட்டி ஜனங்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டனர். “நம்ப விசயமெல்லாம் டீவிப் பொட்டியில வந்திருச்சி இல்லே? இனிமே நமக்கு விடிவு காலந்தேன்!” என்று சிலாகித்துக் கொண்டனர்.
குடும்பத்துடன் மறுபடி சுற்று வழியில் தமிழ்ச்செல்வன் சென்னைக்குப் பயணமானார். அவர் கையில் வைத்திருந்த செல் ஃபோன் குரல் கொடுத்தது. “தமிளு! விசயம் தெரியுமா? நம்ம மம்பட்டியான் வசமா மாட்டிக்கிட்டாரு!” சென்னையிலிருந்து மற்றொரு ஆளுங்கட்சி எம். எல்.ஏ அழகுபாண்டி கிசுகிசுத்தார். மலையனூர்க்காரரை அந்தச் செல்லப் பெயரால் தான் அழைப்பார்கள் எம். எல்.ஏக்கள்.
“என்ன விசயம்? எப்புடீ?” என்றார் தமிழ்ச்செல்வன் ஆவல் தாங்காமல்.
“மெடிகல் சீட்டுக்கு பேரம் பேசி அவர் கை நீட்டி பைசா வாங்கறப்போ எவனோ செல் ஃபோன் கேமிரால போட்டோ புடிச்சு, இந்த இங்கிலீசு டீவி எஸ்டீ. டீவி இல்லே, அதுக்கு அனுப்பிட்டாய்ங்க போல, புடிச்சு கிழிகிழின்னு கிழிக்கிறாய்ங்க அய்யாவை” அழகுபாண்டி கொக்கரித்தார்.
‘அப்பாடா!’ என்று நிம்மதியாயிற்று தமிழ்ச்செல்வனுக்கு. ‘மந்திரியே மாட்டிக்கிட்டதால கொஞ்சம் இப்போதைக்கு நம்ம விஷயத்தை மறப்பாங்க எல்லோரும்!’
ஏக காலத்தில் எம். எல்.ஏ., அவர் மகள் இருவருடைய செல் ஃபோன்களும் ஒலிக்க ஆரம்பித்தன.
“ஏய்! தாமர! கல்யாணத்தில ஒன் டிரஸ் சூப்பரா இருக்குடீ! இதோ டீவியில பார்த்துக் கிட்டே தான் பேசுறேன்! ” தாமரையின் தோழிகள் ஒருவர் மாற்றி ஒருவர் சென்னையிலிருந்து பேசினர்.
“அப்பா! டீவியில திரும்பத் திரும்ப சித்தி கல்யாணத்தையும் உங்களையும் தான் காட்டிக்கிட்டிருக்காங்க! ஒண்ணும் பிரச்சினையில்லையேப்பா?” மகன் கவலையோடு வினவினான்.
“ஒண்ணும் இல்லேப்பா. அது சரி! நாங்க வீட்டுக்கு வர்றப்போ அதைப் பார்க்க முடியுமா?” என்றார் தமிழ்ச்செல்வன் ஆவலோடு.
“நீங்க வேற! இன்னும் ஒரு வாரத்துக்கு அந்த ந்யூஸ் தாம்ப்பா அந்த டீவியில ஓடும்!” என்றான்.
“இன்னும் ஒரு வாரத்துக்கு ஓடுமா?” வாயைப் பிளந்தாள் தமிழ்ச்செல்வனின் மனைவி.
“ஆமாம்! வீட்டுக்குப் போய் சாவகாசமாகப் பாக்கலாம்!” என்றார் தமிழ்ச்செல்வன்.
“அதுக்கில்லீங்க! அமெரிக்காவுல இருக்கானே என் தம்பி அவனுக்குக் கூட சொல்லணுங்க!” என்றாள் மனைவி.
“இந்தா! ஃபோன் போட்டுத் தாரேன். நீயே பேசு!” என்றார் தமிழ்ச்செல்வன்.
அமெரிக்காவில் இருக்கும் தம்பி குடும்பத்தினர் எம்.கே.என். பி.கே.என் சேனலைப் பார்த்தபடியே பேச, இங்கேயிருந்து நேரடி ஒளிபரப்பாக தன் புடவை, மணமகளின் புடவை, நகைகள், கல்யாணத்திற்கு வந்த உறவினர்கள் உள்ளிட்ட விவரங்களை விலாவாரியாக பெருமையோடு சொல்ல ஆரம்பித்தாள் தமிழ்ச்செல்வனின் மனைவி. இடையிடையே, “ஏங்க! எல்லாம் ஒங்களால் தான்! மாமா எம். எல். ஏ. யா இருக்கறதினால தானே எங்களுக்கு இங்க அமெரிக்காவுல தங்கச்சி கல்யாணத்தை நேரடி ஒளிபரப்பா பார்க்க முடிஞ்சிதுன்னு தம்பி பெருமையா சொல்றாங்க!” என்று தன் கணவனை பெருமிதத்தோடு பார்க்க, அவர் கம்பீரமாக மீசையை நீவி விட்டபடி ஒரு புன்முறுவல் பூத்தார். கார் சென்னையை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அதில் பயணம் செய்து கொண்டிருந்த யாருக்குமே இந்தக் கல்யாணம் நேரடியாக ஒளிபரப்பாகக் காரணமாக இருந்த கருத்தம்பட்டி குடிநீர் பிரச்சினை சுத்தமாக நினைவிலேயே இல்லை.
– கலைமகள் தீபாவளி மலர் 2014