மாயப்பறவை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 1, 2024
பார்வையிட்டோர்: 245 
 
 

(1985ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

இன்று காலைக்கரண்டு. மதியம் வரைக்கும்தான் பம்ப்செட் மோட்டார் ஓடும். அழுக்குத் துணிமணிகளை அள்ளிக்கொண்டு தாழரை அவசரமாய் புறப்பட்டாள். மஞ்சள் பௌடர் ஒரு தாளில் மடித்துக்கொண்டாள். 

கிணற்றில் மோட்டார் தடதடத்துக் கொண்டிருந்தது. தண்ணீரை அள்ளி இறைத்துக் கொண்டிருந்தது. சிமெண்ட் தொட்டியில் வெள்ளிக் கற்றையாக விழுந்த தண்ணீர், நுரைகளாக உடைந்து, வாய்க்காலில் கண்ணாடியாக ஓடியது. 

துணிகளை நனைத்தாள். ஜாக்கெட்டைக் கழற்றுவதற்கு முன்பாகச் சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டாள். ஒரு ஈ காக்கை கூட கிடையாது. ஆனாலும், முந்தானையை பல்லால் கவ்வி, முன்பக்கம் மறைத்துக்கொண்டுதான் ஜாக்கெட்டை உரித்தாள். 

தேகத்தின் சுடர் ஜொலிப்பில் அவளுக்கு ஒரு மயக்கம் உண்டு. எந்தத் தீண்டலுக்கும் ஆட்படாத காட்டு மலரின் வனப்பும் வாளிப்புமாக இளமை பிரகாசித்தது. 

‘தாமரையைப் பாருடி, சாணாத்தி பெத்த புள்ளை மாதிரியாகவா இருக்காள்? ஏதோ பாப்பாத்தி (பிராமணப் பெண்) வயத்துலே பெறந்த பவுன் மாதிரியில்லே இருக்காள்!’ 

கிழவிகள் தாடையில் விரல் வைத்து வியந்து சொல்கிற வர்ணிப்பு வார்த்தைகள் தாமரையின் நெஞ்சுக்குள் உயிர்ப் புற்று, இப்போதுகூட தேனாக இனித்தன. 

பெருமிதத்திலும் கர்வத்திலும் நனைந்த மனசு, பூங்கொத்தாகக் குலுங்கியது. சேலையையும் உரிந்தாள். பாவாடையை உயர்த்தி மார்பை மறைத்துக் கட்டிக் கொண்டாள். 

துணிகளை அலசித் துவைத்தாள். கடைசியில், சிமெண்ட் தொட்டிக்குள் இறங்கி உட்கார்ந்தாள். வெள்ளிக் கற்றையில் இருட்டுக் கற்றை நனைத்தாள். எண்ணெய்ச் சிக்கும், அழுக்கும் நுரை பொங்கியது. 

பாவாடையை லேசாக தளர்த்தி, மேனியின் சகல பகுதியும் தேய்த்துக் குளித்தாள். மஞ்சள் பூசிக் கொண்டாள். யாரும் இல்லை என்கிற சுதந்திர உணர்வில் திருப்தியாகக் குளித்தாள். 

பம்புசெட் ரூமுக்குள்ளிலிருந்து ஒரு ஜோடிக் கண்கள் இமை தட்டாமல் மேய்ந்து விழுங்கிக் கொண்டிருப்பதை அவள்கவனிக்கவேயில்லை. 

ஈரக் கூந்தலை அழுத்திப் பற்றி உருவி, நீரை வழியச் செய்துவிட்டு அள்ளி முடிந்துகொண்டாள். நீர்த்திவலைகள் சுடர் மேனியில் ஆதாரமில்லாமல் நின்று ஜ்வலித்தன. 

மாற்றுச் சேலையை உடுத்திக் கொள்வதற்காக பம்ப்செட் ரூம் மறைவுக்கு ஒதுங்கியபோது- 

‘தாமரை’ என்று கிசுகிசுத்த குரலில் ஒரு ஆண்! 

தாமரையை ஒரு உலுக்கு உலுக்கிவிட்டது. திகைத்துத் திணறினாள். 

முகமெல்லாம் ஆசை வழிய… உலர்ந்த உதடுகள் லேசாக விரிய, கருநாகம் போன்ற கையை நீட்டினான், முத்து. 

தனது முழுமை ரகசியமாக ரசிக்கப்பட்டிருக்கிறது என்ற எண்ணமே அவளுக்கு அருவருப்பாக இருந்தது, மனசுக்குள் நெருப்பாகத் தகித்தது. 

இணக்கமாகச் சிரித்துக் கொண்டே முத்து அவளது குளிர்கரத்தைப் பற்றினான். “தாமரை, உன்னை நெனைச்சு எம்புட்டு நாள் தவிச்சிருக்கேன். தெரியுமா? நீதான் கண்டுக்கவே மாட்டேன்றீயே” 

சுண்டி இழுத்தான். ஒரு காய்ஞ்ச மாட்டைப் போல கம்மங்கொல்லையை வெறியோடு தழுவினான். 

மலத்தை மிதித்துவிட்ட அசூயையில் அவள் சிலிர்த்தாள். சாக்கடையில் புரண்ட ஒரு பன்றி உரசி விட்டதைப் போன்ற அருவருப்பும் ஆத்திரமுமாக அவள் திமிறினாள். ‘ச்சீ…நாயே!’ 

மனசெல்லாம் உடம்பெல்லாம் கோபத்தில் நெருப் பாகத் தகிக்க… அந்தத் தகிப்பையெல்லாம் உள்ளங்கையில் இறக்கி, ஓங்கிய வேகத்தில் அறைந்தாள். கன்னத்தில் விழுந்த அந்தச் சாட்டையடியில் முத்து ஆடிப்போனான். 

தடுமாறிச் சுவரில் சாய்ந்தான். 

‘த்தூ! எச்சிலை நாயே!’ காறித்துப்பினாள். 

துணியை அள்ளிக்கொண்டு பொழிப்பாதையில் அவசரமாக நடந்தாள். கல்லெறிபட்ட கள்ள ஆடு போல முத்து, கண்மூக்கு தெரியாமல்… புஞ்செய்களுக்குள் செடிகளை மிதித்துக்கொண்டு வேறு திசையில் ஓடினான். 

பாதையில் ஊரை நோக்கி வந்து கொண்டிருந்த கிருஷ்ணன், மேற்காக நடந்து ஓடுகிற தாமரையையும், வடக்காக ஓடி வருகிற முத்துவையும் பார்த்தான். அவன் மனசுக்குள் ஒரு யூகம் சட்டென்று கருக்கொண்டது. 

போன வருஷம் சடங்கான பொடுசு. அதுக்குள்ளே அரிப்பெடுத்து, ஆம்பளையே தேடிக்கிருச்சோ…’ 

வியர்த்து விறுவிறுத்து வருகிற முத்துவை கையாட்டி கூப்பிட்டான். “என்னலே…” 

“ஒன்னுமில்லே…” 

“என்ன ஒன்னுமில்லே? அவா அங்குட்டு ஓடுறா…நீ இங்குட்டு ஓடியாறே” 

“சும்மாதான்” 

“சும்மாவா? காலங்காத்தாலே லட்டு பூந்தி தின்னுட்டு… சும்மான்னா சொல்றே?” 

முத்து திருடனைப் போல விழித்தான். பயந்தான். 

“அண்ணே, இதை மனசுக்குள்ளே வச்சுக்க. யார் கிட்டேயும் சொல்லிடாதே…” கிலியுடன் கெஞ்சினான். கிருஷ்ணன் நமட்டுச் சிரிப்புடன் தலையசைத்துக் கொண்டான். 

இவன் மனசுக்குள் வைத்துக் கொள்ளமாட்டான் என்று முத்துவுக்குத் தெரிந்தது. ஊரெல்லாம் சொல்லத்தான் செய்வான்… 

சொல்லட்டும்… அதுவும் நல்லதுதான்… 

இவன் பரப்புகிற ஒரு செய்தியே ஒரு நிர்ப்பந்த மாகி, தாமரையைத் தன்னை நோக்கித் தள்ளிவிட்டாலும் விடலாமே… 

கிருஷ்ணன் அரசியல் பேசுவான். பொதுப் பிரச்னைகள் எல்லாம் பேசுவான். ஆனால், பெண்களைப் பற்றிய பேச்சு என்றால்… அவனுக்கு அதில் தனிக் குஷி வந்துவிடும். சுய ஈடுபாட்டுடன் ரசனையோடு சளைக்காமல் பேசுவான். பெண் விஷயத்தில் அவன் வக்கிரமான ஆள். 

கல்யாணத்துக்கு முன்னாலேயே ஒரு பெண்ணுடன் முறைகெட்டு வாழ்ந்தவன். கல்யாணத்துக்குப் பின்னாலும்… ஒரு எளிய ஜாதிப் பெண்ணின் வாழ்க்கையை முழுசாகக் களங்கப் படுத்தியிருக்கிறான். இடையில் அவ்வப்போது பல பெண்களுடன் சகவாசம். இந்த விஷயத்தில் மட்டும் அவன் எவ்வித வரைமுறைகளையும் மதிக்கவே விரும்பமாட்டான்… 

…கிருஷ்ணனுக்கு நெஞ்சு உப்பியது, விம்மிக் கொண்டேயிருந்தது. எங்காவது செய்தியை இறக்கி வைக்காவிட்டால் நெஞ்சே வெடித்து விடும் போலிருந்தது. 

ஊருக்குள் நுழைந்தவன் வீட்டுக்குப் போகவில்லை. நேராக டீக்கடைக்கு வந்தான். இந்த டீக்கடை இருக்கிறதே… இது ஒரு வானொலி நிலையம். செய்திகளை டிரான்ஸ்மீட்டர் இல்லாமலேயே ஊரெல்லாம் பரப்பிவிடும். ஊரின் எந்த ரகசியமும் இங்குதான் முதலில் கசியத் துவங்கும். அப்புறம் ஊரெல்லாம் ஒலிபரப்பாகிவிடும். 

ஆனந்தப் பரபரப்போடு நுழைந்த கிருஷ்ணன் “அண்ணே, ஒரு டீ ஸ்ட்ராங்கா போடு” என்றவன் ‘ஊரும் கெட்டுப் போச்சு. நம்ம வாலிபப் பசங்களும் ரொம்பக் கெட்டுப் போனாங்க’ என்று சலிப்போடு கூறினான். 

இவனது பீடிகையிலேயே பரபரப்படையத் துவங்கி விட்ட இளவட்டங்கள் என்ன என்னவென்று விசாரித்தனர். உட்கார இடம் கொடுத்தனர். அதில் ஒருவன், ”என்ன கிட்டணண்ணே, விடிஞ்சவுடனே எதுனாச்சும் ‘கண்றாவி’யை பார்த்துட்டீயா?” 

”ஆமப்பா! அந்தக் கொடுமையைத்தான் பார்த்துட்டு வாரேன். சாயங்கால நேரத்துலேதான் வேலிக்காட்டுக்குள்ளே ஜோடிக கூடிப் பிரியும்னு கண்டுருக்கோம். இதென்னப்பா அநியாயம், காலங்கார்த்தாலே காதல் கொண்டாட்டம்?ச்சே!” 

“பூடகமாவே சொன்னா எப்படி புரியும்? போட்டு உடை.” 

“ச்சே… அதெல்லாம் பாவம்! அந்தக் கிளிகளுக்கு எம்புட்டுத் தாகமோ, என்ன வேகமோ…. அந்த ரகசிய இன்பத்தை இங்க பேசிப் பாழாக்கக்கூடாது. பாவம், இருந்துட்டுப் போகட்டும்.” 

“நாங்க என்ன வேண்டாம்னா சொல்றோம்? முடிஞ்ச மட்டும் சந்தோஷமாக அனுபவிக்கட்டும். வைக்கோல் படப்பா? அள்ளுனா குறைஞ்சு போறதுக்கு! குறையில்லாம கூடியிருக்கட்டும்… நீ யார்னு மட்டும் சொல்லிடு.’ 

“அதை அப்புறமா சொல்றேன்” என்ற கிருஷ்ணன், டீயைக் குடித்தான். பீடியைப் பற்ற வைத்துக் கொண்டான். சுற்றிலும் நெருக்கமாக வந்து உட்கார்கிற இளசுகளின் ஆவலைப் புரிந்து கொண்டான். 

அடுத்தவர்களின் அந்தரங்கத்தை அறிவதிலும், அறிவிப்பதிலும் அப்படியோர் போதை. 

“சொல்லு…” 

“அட பொறுங்கப்பா” கிருஷ்ணன் மனசுக்குள் செய்திக்கு வர்ணம் தீட்டிப் பார்த்தான், திருப்தியாக இருந்தது. செருமிக் கொண்டான். 

”களை வெட்டுக்கு பருவமாயிருக்குதான்னு பாக்குறதுக்கு தெக்காட்டுப் புஞ்சைக்குப் போய்ட்டு திரும்பி வந்துக்கிட்டிருந்தேன். ஒரு பெட்டைக் குருவி ‘குளிக்கப் போறேன், வா’ன்னு சொல்லிவிட்டுப் போயிருக்கு…” 

“பெட்டைக் குருவின்னா, யாரு?” 

“போட்டுக் குடையாதீகப்பா. அதை அப்புறமா சொல்றேன். முதல்லே நடந்ததைக் கேளு” 

“சரி, பெட்டைக் குருவி வரச்சொல்லிட்டு குளிக்கப் போச்சு. ஆண் குருவி போனதா?” 

“போகாமலாயிருக்கும்? பொட்டைக் குருவி ‘கண்ணடிச்சா’ ஆண் குருவி பின்னடிக்கவா செய்யும்? போயிருக்கு. மோட்டார் தண்ணியிலே நல்லா குளிச்சிட்டு, சோப்பு மஞ்சளெல்லாம் தேச்சு குளிச்சிட்டு காத்திருந்துருக்கு. ஆண் குருவியும் வந்து சேர்ந்தது. ரெண்டும் ஜோடி சேந்து பம்ப்செட்டுக்குள்ளே நுழைஞ்சது. நுழையும் போதே நல்லபாம்பும் சாரைப் பாம்பும்போல கட்டித் தழுவிக்கிட்டு நுழைஞ்சது…” 

“ஐயோ… அதுகளுக்கு எம்புட்டுத் தவிப்போ…” 

ஒரு சிரிப்பலை எழுந்து அடங்கியது. கிருஷ்ணன் தொடர்ந்தான். 

“பாதையிலே வந்துக்கிட்டிருந்த நா பார்த்துட்டேன். எனக்குப் பொறுக்கலே. வாய்க்குள்ளே விரலை வைச்சு ஒரு விசில் அடிச்சேன். கேக்கலே. ரெண்டாவது உசிரை குடுத்து ஒரு விசில் குடுத்தேன். அம்புட்டுத்தான். குருவிக கலைஞ்சுருச்சு. பெட்டைக் குருவி ஊரைப்பாத்து ஓடிடுச்சு. பய வடக்காம ஓடினான். பிடிச்சுட்டேன். என்னலேன்னு விசாரிச்சு கசக்கினேன். பூராத்தையும் கக்கிட்டான்…” 

“என்ன கக்குனான்?” 

“இந்த நல்லபாம்பு சாரைபாம்பு விளையாட்டு நாலு மாசமா நடக்குதாம். நாப்பதுநா வவுத்துலே தங்குனதைக் கூட கலைச்சுட்டாகளாம். 

“அப்ப… ஜோடிக கைதேர்ந்துருச்சு?” 

“ம்! ரொம்ப தேறிடுச்சு” 

“சரி, குருவி பேரு?” 

”இரு, சொல்றேன்.” 

சொன்னான். 

அங்கே வர்ணம் தீட்டிப் பறக்கவிடப்பட்ட பறவை ஒவ்வொரு இடத்திலும் வெவ்வேறு வர்ணஜாலம் காட்டியது, அந்த மாயப்பறவை விதம் விதமான தோற்றத்தில் எல்லோர் கண்ணிலும் தென்பட்டது. 

டீக்கடையிலிருந்து பத்துப்பேரும் தனித்தனியாகப் பத்து இடங்களில் உட்கார்ந்து பேசிச் சிரித்துக் கொண்டனர். செய்தியை மேலும் உண்மையாக்கினர். 

“ஆமப்பா… நாங்கூட கவனிச்சேன். முந்தாநா அவா புஞ்சைக்குப் போனா… இந்தப் பய பாத்த பார்வை எடுக்காம பார்த்துக்கிட்டிருந்தான். அப்புறம் எந்திச்சு… இவனும் அவா போன பாதையிலேயே புறப்பட்டான்… இதுக்காகத்தானா…? நா இப்படி நெனைச்சுப் பார்க்கவேயில்லையே…” 

இப்படியே சாட்சியாகச் சம்பவங்களை விவரித்தனர் சிலர். செய்திக்கு வர்ணம் ஏறியது. டீக்கடைகளில் – மடத்துத் திண்ணையில் வாசக சாலையில் வாலிபர்கள் கூடுமிட மெல்லாம் இதே பேச்சுதான். மீண்டும் மீண்டும் மறு ஒலிபரப்பாயிற்று. 

பிறத்தியார் அந்தரங்கங்களைக் குடைந்து அறிந்து கொள்வதிலும், தண்டோரா போடுவதிலும் இருக்கிற சந்தோசம் ஒரு போதை போல வேலை செய்தது. 

வண்ணப்பறவை அகலமாக வட்டமடித்துப் பறந்தது. 

இந்தச் செய்தி, பரவிய வேகத்தில் புழுதி கிளம்பியது. அந்தப் புழுதித் திரையில் ‘யார் இதைப் பார்த்தது, யார் சொன்னது’ என்ற விஷயம்கூட மறைக்கப்பட்டு விட்டது. 

மடத்துத் திண்ணையிலிருந்து சாப்பிட வீட்டுக்குப் போன ஒருவன், மனைவியின் காதில் கிசுகிசுத்தான். மாதர் வட்டாரத்தில் இன்னும் கூடுதலான புயல் வேகத்தில்… அதிக வர்ணமேற்றிக் கொண்டு பறக்கத் துவங்கிவிட்டது. 

பொழுது மலைவாசலில் நின்றது. 

“தாமரை… அடியே தாமரை” 

அவளது தோழி பூச்சி ஓடி வந்தாள். புல்லுக்குப் போய்விட்டு வந்திருந்த தாமரை, எருமை மாட்டுக்குப் புல்லை அள்ளிப் போட்டுக் கொண்டிருந்தாள். வியப்போடு திரும்பினாள். 

“என்னடி பூச்சி, இப்படி ஓடியாறே?” 

“என்ன தாமரை இது, அழுது புலம்பிக்கிட்டு இருப்பியேன்னு நெனைச்சு ஓடியாந்தேன். நீ கல்லுப் போல இருக்கே?” 

“நா எதுக்குடி அழுது புலம்பணும்?” 

”ஊரெல்லாம் சேர்ந்து உன்னைப் போட்டு உருட்டிக் கிட்டிருக்குடி” 

“எதுக்கு உருட்டுறாக?” 

சத்தத்தை குறைத்து பூச்சி காதுக்குள் கிசுகிசுத்தாள். 

தாமரைக்குள் பாம்பு ஊர்ந்தது. அடிவயிற்றில் ஏதோ ஒரு ராட்ஸசக் கரம் பிசைவது போன்ற கொடிய உணர்வு! 

இருதயம் இருந்த இடம் வெறுமையாகி விட்டாற் போல வேதனை உணர்ச்சி. 

குழாயடியில் தண்ணீர் எடுக்கப் போனபோது… வழக்கத்திற்கு விரோதமாகப் பெண்கள் மௌனம் சாதித்ததும்… முதுகுக்குப் பின்னால் நமட்டுச் சிரிப்பாக சிரித்ததும்… இதனால்தானோ! 

தாமரைக்குள்ரம்பம் போட்டு அறுப்பது போலிருந்தது. 

கடாப் பெட்டியை எடுத்துக்கொண்டு புல்லுக்குப் போகும் போது… மடத்துத் திண்ணையில் உட்கார்ந் திருந்தவர்கள் வாயைப் பொத்திக்கொண்டு, கள்ளப் பார்வை பார்த்தார்களே… அந்தப் பார்வைக்கு இதுதான் அர்த்தமோ? இதுதான்காரணமோ… 

இவளுக்குத் தெரியாமல் இவளைப்பற்றி எத்தனை இழிவாக – இகழ்வாக – மட்டமாக – அபாண்டமாக… ச்சே! 

உடம்பெல்லாம் தேள்கள் ஊர்ந்தன. கொட்டின. அவமானத்தில் மனம் குன்றிக் குறுகியது. ஊரின் நடுவே நிர்வாணப்படுத்தி நிறுத்தி விட்டதைப் போல ஒரு வேதனை உணர்வு! இதயத்துக்குள் மூச்சுத் திணறியது. தொண்டை உலர்ந்துவிட்டது. மனசெல்லாம் தீயாக எரிந்தது. முகம் காகிதமாக வெளுத்தது. 

ஊர் முழுவதும் ஓங்காரக் கூச்சலில் ஆர்ப்பரிக்கும் போது… இவளது ஒற்றைக் குரல் எடுபடுமா? உண்மை, உண்மையென்று ஒப்புக் கொள்ளப்படுமா? அதையும் யாரிடம் சொல்லுவது? யார் கேட்பார்? 

அய்யா…? 

ஆற அமர யோசிக்கமாட்டாரே… நல்லது கெட்டது நிதானிக்கிற சுபாவமில்லையே! குருட்டுத் தனமாக புரிந்து கொண்டு குதிப்பாரே… ஆத்திரத்தில் அரிவாளை எடுப்பாரே… 

அதிர்ச்சியில் நிலை குலைந்து போன தாமரை, அப்படியே எருமையின் காலடியில் உட்கார்ந்துவிட்டாள். தலையில் ‘மடேர், மடேரெ’ன அடித்துக் கொண்டாள். ‘ஐயோ, ஐயோ” என்று ஹீனக்குரலில் கசிந்தாள். சத்தம் போட்டு அழக் கூட பயந்து போய்… நெஞ்சு அடைத்துக் கொண்டது. 

பூச்சி செய்வதறியாமல்… திகைத்துப்போய் நின்றாள். 

பொழுது இருட்டி நேரமாகிவிட்டது. தாமரையின் அப்பா தங்கச்சாமி இன்னும் வீட்டுக்கு வரவில்லை. இடுப்பில் சொருகிய சூரிக்கத்தியுடன் தெருத் தெருவாய் அலைந்தார். வெறி பிடித்தவராய் முத்துவைத் தேடியலைந்தார். வடக்குத் தெருவில் எதிர்ப்பட்ட ஒரு பெரியவரிடம் கேட்டார். 

“முத்துப் பயலை பார்த்தீகளா?” 

“எதுக்கு அவனைத் தேடுறே?” 

”ரெண்டுலே ஒன்னு நடக்கணும். அவன் சாகணும் இல்லே நாசாகணும்…” 

“புத்தி கெட்டுப்போய் அலையாதே. என்ன ஏதுன்னு நெசத்தை விசாரிக்கணும். ஒன்னு இருக்க ஒன்னு செய்யக் கூடாது. ஊரான் புள்ளையை கொல்ல நீயாரு…?” 

“மானத்தை எழந்துட்டு எதுக்கு வாழணும்?” 

“ஊருக்குள்ளே பேசிக்கிடறதை வச்சுப்பாத்தா… தப்புலே உன் மகளுக்கும் பங்கு இருக்குன்னு தெரியுது. முதல்லே உன் மகளை கண்டிச்சு திருத்து. இவளை மேய விட்டுட்டு, ஊரான் பெத்த பயலை கொன்னா அது என்ன நியாயம்?” 

“என்ன செய்யணும்ங்கிறீர்?” 

“பொம்பளை சம்மதமில்லாத ஆம்பளை தப்பு செய்ய முடியாது. முதல்லே உன் வீட்டு ஓட்டைகளை அடைச்சுவை. அதுக்குப் பிறகு எலியை விரட்டலாம். ஒம்மகளை கண்டிச்சு அடக்கி வை. அதுக்குப் பிறகும் அந்தப் பய சேட்டை பண்ணுனா, அவன் செட்டையை (சிறகை) ஒடிப்போம்… புரியுதா…?” 

தங்கச்சாமிக்கு கோபமெல்லாம் மகளின் மீது திரும்பியது. 

‘இந்தச் சிறுக்கி செஞ்ச காரியத்தாலே… எம்புட்டு கேவலம் வந்துருச்சு…? முளைச்சு ரெண்டு இலை விடுறதுக்குள்ளே புருஷன் கேக்குதோ… தேவடியா மக… இவளைக் கொன்னு தோலை உரிக்கணும்…’ 

அதே வெறி வேகத்தில் வீட்டுக்குத் திரும்பினார். 

வீட்டுக்கு வந்தார். கதவைக் காலால் ஓங்கி உதைத்தார். விளக்கு ஏற்றாமல் வீடு இருண்டு கிடந்தது. 

“தாமரை… ஏய் தாமரை…” 

அவரது ஆங்காரச் சப்தம் அவர் முகத்திலேயே மோதியது. வீடு பூராவும் இருட்டு. எதுவும் தெரியவில்லை. கோப வெறியில் திட்டிக் கொண்டே விளக்கை ஏற்றினார். அந்த மெல்லிய வெளிச்சத்தில்… தாமரை பாயில் படுத்து உறங்குவது தெரிந்தது. 

“அடி சிறுக்கி மகளே, மப்பு கொழுத்துப் போய் ஊர் மேய்ஞ்சு… இல்லாத கேவலத்தை கொண்ணாந்து விட்டுட்டு… உறக்கமா… உறங்குறே?” 

திடுதிடுவென்று நடந்தவர், காலை ஓங்கி ஏற்று எற்றினார். புரண்டு அசைந்தது உடம்பு. துவண்டு மல்லாந்த தாமரையின் வாயோரத்தில் நுரை தள்ளிக் கிடந்தது. 

பகீரென்றது. அவருள் ஏதோ ஒன்று சரிந்து நொறுங்குவது போலிருந்தது. 

நடுங்கும் கையோடு தொட்டுப் பார்த்தார். தாமரை ஜில்லிட்டுப் போயிருந்தாள். 

“ஐயய்யோ… என்னை அனாதையாக்கிட்டீயே… தாமரை… அம்மா…” 

அவரது அலறலில் இதயமே வெடித்து விடும் போலிருந்தது. ஊரே திரண்டு ஓடி வந்தது… 

ஓடி வந்தவர்களெல்லாம் திகைப்பும் வியப்புமாகவே வந்தனர். அதிர்ச்சியை ஜீரணிக்க முடியாமல், அவநம்பிக்கையுடனே இருந்தனர். “செத்துருப்பாளா… எதுக்காக சாகணும்? ஏன் மருந்து குடிக்கணும்?” 

இந்தக் கேள்விகள் எல்லார் மனதிலும் போலவே, ஓடிவந்த கிருஷ்ணன் மனதிலும் நின்று அழுத்தின. நிஜமாகவே அவனுக்கு அதிர்ச்சியான ஆச்சர்யமாகவே இருந்தது. 

இந்த மரணத்திற்கு தான்தான் காரணம் என்று அவன் உணரவேயில்லை. 

– சோலைக் குயில்கள், 1985 மூன்றாமாண்டு சிறப்பு மலர்.

– சிபிகள் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: 1987, கங்கை புத்தக நிலையம், சென்னை.

மேலாண்மை பொன்னுச்சாமி (செ. பொன்னுச்சாமி; கலைக்கண்ணன்; அன்னபாக்கியன்; அன்னபாக்கியச் செல்வன்; ஆமர்நாட்டான்) (1951- அக்டோபர் 30, 2017) எழுத்தாளர். வட்டார வழக்கில் பல சிறுகதைகளையும், புதினங்களையும் படைத்தார். மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்ந்து செயல்பட்டார். தனது படைப்புகளுக்காகப் பல்வேறு விருதுகள் பெற்றார். மேலாண்மை பொன்னுச்சாமி படிக்க வேண்டும் என்று ஆவல் கொண்டிருந்தார். கல்வி தடைப்பட்டதால் நாளிதழ்கள், நூல்கள் வாசித்து தனது வாசிப்பார்வத்தை வளர்த்துக் கொண்டார். வாசித்த ஜெயகாந்தனின் நூல்கள் இவருள்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *