மாயத்திரை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 18, 2013
பார்வையிட்டோர்: 10,914 
 

“எங்க அப்பாவுக்கு என்னைக் கண்டாலே பிடிக்காது ரம்யா. எப்பப் பாரு என்னை ஏதாவது திட்டிக்கிட்டே இருப்பாரு.நான் டிவி பாத்தா திட்டு, பாட்டு கேட்டா திட்டு. என்னோட திங்ஸ் எதையுமே நான் ஹால்ல அவர் கண்ல படுற மாதிரி வெச்சிறக் கூடாது.ஏதாவது இருந்தா அவ்வளவுதான்.அன்னைக்கு பூரா ஒரே அர்ச்சனை தான்.நான் ஏதாவது சின்ன தப்பு செஞ்சிட்டக் கூட அன்னைக்கு முழுதும் அதைச் சொல்லியே திட்டிட்டு இருப்பாரு” என்று தன் தோழியிடம் புலம்பிக் கொண்டிருந்தாள் ரேவதி.

“ஏன்டீ இப்படி எல்லாம் நினைக்கிறே ? அதெப்படி பெற்ற பொண்ணுகிட்ட பாசம் இல்லாம போகும்? ” என்றாள் ரம்யா.

“உனக்குத் தெரியாது. எங்கப்பாவுக்கு என் தங்கை அஸ்வதியத் தான் ரொம்ப பிடிக்கும். எனக்கு ஏதாவது வேணும்னாக் கூட என் தங்கச்சி மூலமாத் தான் வாங்கிக்குவேன். அவ சொன்னாத்தான் எங்கப்பா வாங்கித் தருவாரு” என்ற ரேவதிக்கு எப்படிப் புரியவைப்பதென்று அறியாமல் குழம்பினாள் ரம்யா.

ரம்யாவும் ரேவதியும் ஒரே வகுப்பில் பயிலும் நெருங்கிய தோழிகள். அஸ்வதியும் ரேவதியும் இரட்டையர்கள். ரேவதி ஓவியம் வரைவதில் திறமைசாலி. தான் காணும் காட்சிகளை அப்படியே தன் கைவண்ணத்தால் ஓவியமாக பிரதிபலிக்கும் திறன் கொண்டவள்.அஸ்வதியும் அவளுக்குச் சளைத்தவளில்லை. கவிதைகள் புனைவதில் கைதேர்ந்தவள்.

இருவரும் தாம் விரும்பி தேர்ந்தெடுத்த கலைத் துறைகளில் வாங்கிக் குவிக்காத பரிசுகளே இல்லை எனலாம்.ரம்யாவின் மனதில் அவளது தந்தை குறித்தான அபிப்ராயத்தினை எப்படியும் மாற்றி விடலாம் என்று பகீரதப் பிரயத்தம் செய்தும் ரம்யாவால் முடியவில்லை.காலங்களும் கடந்தன.அனைவருக்கும் பன்னாட்டு நிறுவனங்களில் வேலையும் கிடைத்தது.வேலைக்காக தோழிகள் வெவ்வேறு இடங்களில் இருந்தாலும், இணையம்,தொலைபேசி மற்றும் கடிதங்கள் வாயிலாக தோழிகளின் நட்பும் வளர்ந்தது.
விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தாள் ரம்யா. அவ்வப்போது, பக்கத்து ஊரிலிருக்கும் தலைமை நூலகத்திற்கு சென்று வருவாள். அவ்வாறு ஒருமுறை நூலகத்திற்குச் செல்ல பேருந்து நிலையத்தில் காத்திருந்த வேளையில், தோழிகள் அஸ்வதி மற்றும் ரேவதியின் தந்தை சங்கரனை சந்தித்தாள்.

“எப்படி இருக்கீங்க அங்கிள்?” என்ற ரம்யாவை சட்டென்று அவரால் அடையாளம் கண்டுகொள்ள இயலவில்லை.சிறிது நேரம் யோசித்தவர், “நீ ரம்யா இல்லம்மா? எப்படி இருக்கற? எங்க வேலை பார்க்கற?” என்ற மற்ற பரஸ்பர விசாரிப்புகள் என்று அவர்களது உரையாடல் நீண்டது.

சில நிமிடங்களுக்குப் பின் ரம்யா, ” அங்கிள், நான் உங்க கிட்ட ஒன்னு கேக்கறேன். நீங்க தப்பா எடுத்துக்கக் கூடாது ” என்றாள்.

“என்னம்மா ? கேளு. என்றார் சங்கரன்.

” அங்கிள், நீங்க ரொம்ப கண்டிப்பானவர். ரேவதிகிட்ட ரொம்ப பேசமாட்டீங்க. சின்ன தப்பு பண்ணினாக் கூட பயங்கரமா திட்டுவீங்க. ரொம்ப கோபப் படுவீங்க. அதனால உங்ககிட்ட பேசவே ரொம்ப பயப்படுவாளாமே ரேவதி.எங்க அப்பாவுக்கு என்னைக் கண்டாலே பிடிக்காதுன்னு சொல்லி ரொம்ப ஃபீல் பண்ணுவா ரேவதி ” என்ற ரம்யாவை ஒரு கணம் அமைதியாய் பார்த்தார்.பின் பேச ஆரம்பித்தார்.

” அது நான் பண்ணுன பெரிய தப்புன்னு இப்போ உணர்றேன் அம்மா. பெண் குழந்தைக்கு ரொம்ப செல்லம் குடுத்தா, நாளைக்கு வளர்ந்த பிறகு, அதுங்க நம்ம பேச்சைக் கேட்காதுங்க அப்படின்ற எண்ணம் என் மனசுக்குள்ள வளந்துடுச்சிம்மா. அதனால எப்பவுமே நான் ரொம்ப கண்டிப்பா நடந்துக்குவேன். ஆனா, அதுவே இப்ப எனக்கும் என் பிள்ளைகளுக்கும் இடையில ஓர் தடையா ஆயிடிச்சின்னு நினைக்கும் போது வருத்தமா இருக்கு ” என்றவரின் மனதில் அதுவரை மறைத்திருந்த மாயத்திரை பரிதியைக் கண்ட பனித்துளி போல் விலகியது.

” இப்பவே நான் என் பொண்ணுங்க கிட்ட பேசறென் அம்மா. நான் வருகிறேன் ” என்று கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பினார் சங்கரன். ரம்யாவும் மன நிம்மதியுடன் நூலகத்தை நோக்கி நடக்கலானாள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *