மாமியார் குணம்!

0
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 13,094 
 
 

“”இன்னைக்கு என்னமா பிரச்னை?” தொலைபேசியை எடுத்த பிரபா கேட்க, “”அதை ஏண்டி கேக்கற? எனக்கு மருமகள்னு வந்து இருக்காளே ஒருத்தி, அவளும், அவ சமையலும். இன்னைக்கு அவ ஒரு ரசம் வைக்கறேன்னு சொல்லிட்டு வைச்சா பாரு… தூ! வாயில் வைக்க முடியலை. ஆனா, உன் அப்பா அவளை பாராட்டி தள்ளுறார்.”
அம்மாவின் பொருமலை பொறுமையாய் கேட்டவள், “”அம்மா, நீ பேசாம கொஞ்ச நாள் இங்க வந்து தங்கிட்டு போ,” என்றழைக்க, வேதாவுக்கும் பெண் வீட்டில் தங்கி வந்தால் தேவலாம் என்று தோன்றியது.
“”அம்மா, ஊரில் இருந்து வந்தது களைப்பா இருக்கும். இந்தா காபி குடி,” பிரபா சொல்லி கொண்டிருந்த போதே, கோவிலுக்கு சென்றிருந்த பிரபாவின் மாமியார் வந்தார். “”அடடா வாங்க. எப்போ வந்தீங்க? நல்லா இருக்கீங்களா?” வேதாவின் அருகில், நாற்காலியை இழுத்து போட்டு அமர்ந்து கொண்டாள். அவருக்கும், தனக்குமாய் காபி எடுத்து வந்த பிரபா, அவர்களுக்கு அருகே, அப்படியே தரையில் அமர்ந்து கொண்டாள்.
மாமியார் குணம்!“”பிரபா, எனக்கு இன்னைக்கு காபி கொஞ்சம் அதிக தித்திப்பா குடிச்சா நல்லா இருக்கும்ன்னு தோணுது, நான் கொஞ்சம் சர்க்கரை சேர்த்துக்க போறேன், உனக்கும் எடுத்துகிட்டு வரவா?” என்று பிரபாவின் மாமியார் கேட்க, “”நீங்க இருங்க அத்தை நான் போய் சர்க்கரை டப்பாவை எடுத்து வந்தாள்.
அன்று இரவு உணவுக்கு, சப்பாத்தி தயார் செய்தாள் பிரபா. ஆனால், வேதாவால் அதை கடிக்க கூட முடியவில்லை. குருமாவின் சுவையும் ஒன்றும் பிரமாதமாய் இல்லை. பிரபாவின் கணவனும், மாமியாரும் சப்பாத்தியை குருமாவில் ஊற வைத்து, ஏதும் சொல்லாமல் சாப்பிட்டனர். ஏனோ, வேதாவுக்கு, மருமகள் பூஜாவின் மிருதுவான சப்பாத்தியும், சுவையான காய்கறி சப்ஜியும் மனதுக்குள் வந்து போனது.
மறுநாள், பிரபா காலை உணவுக்கு இட்லி, செய்ய, கல் போன்ற இட்லி வேதாவின் தொண்டையில் இறங்க மறுத்தது. எல்லாரும் அமைதியாய் சாப்பிட, வேதாவால் பொறுக்க முடியவில்லை. “இதுங்க எல்லாம் எதை போட்டாலும் சாப்பிடுங்க போல…’ என, மனதுக்குள் பொருமியபடியே, தண்ணீர் குடித்து குடித்து, இட்லியை உள்ளே தள்ளினாள்.
“”பிரபா, அடுத்த முறை இட்லிக்கு ஊறப் போடும்போது, ரெண்டு டீஸ்பூன் வெந்தயம், ஒரு கைப்பிடி அவல் சேர்த்து ஊற போடுமா. அப்படி போட்டா, இட்லி இதைவிட மிருதுவா, மல்லிகை பூ மாதிரி இருக்கும்ன்னு என் தோழி சொன்னா,” என்று சம்மந்தியம்மா, மகளிடம் சொல்வதை கேட்ட வேதாவுக்கு, “இவங்க முன்னபின்ன மிருதுவான இட்லியே சாப்பிட்டது இல்லையோ…’ என்ற கேலி மனதுக்குள் எழுந்தது.
“”பிரபா நான் சமைக்கறேண்டி மதியத்துக்கு,” வேதா சொல்ல, அதை மறுத்தாள் மகள்.
“”வேணாம் அம்மா, நான் சமைச்சாதான் அவருக்கும், அத்தைக்கும் பிடிக்கும்,” என்றாள். இதை கேட்டு வேதாவுக்கு சிரிப்பதா, அழுவதா என்று புரியவில்லை.
வந்ததில் இருந்து, ஒழுங்கான உணவை சாப்பிடாததால், மதியம் சீக்கிரமே பசித்தது. பிரபாவின் சமையலை சாப்பிட வேண்டும் என்று நினைத்த போதே, மனதில் லேசான பயமும் வந்தது. எதிர்பார்த்த மாதிரியே, ஒன்றில் கூட உப்போ, காரமோ இல்லை. “”சமையல் இன்னைக்கு நல்லா அமைஞ்” போச்சு பிரபா. “”அம்மா வந்து இருங்காங்கன்னு, நீ ரொம்ப சிரத்தை எடுத்து சமைச்சு இருக்க,” என்றார் மாமியார். “”என்ன… இந்த வெண்டைக் காய் பொரியலில் ஒரு துளி காரம் இருந்தால் அருமையோ அருமை. ரசத்துல கொஞ்சம் உப்பு சேர்ந்துகிட்டா இன்னும் ஜோரா இருக்கும்.”
தன் மகளின் கேவலமான சமையலை பாராட்டும் சம்பந்தியம்மாவை, ஒரு மாதிரி பார்த்தாள் வேதா. “”ஏங்க… நான் சொல்றது சரிதானே?” என்று பிரபாவின் மாமியார் இவரையும் கேட்க, வேறு வழியின்றி பலியாடு போல தலையாட்டி வைத்தாள்.
இங்கேயே இன்னும் இரண்டு நாட்கள் இருந்தால், பசியில் செத்தே போய் விடுவோம் என்று தோன்ற, மறுநாள் விடிந்தும் விடியாததுமாய், ஊருக்கு போயே தீர வேண்டும் என்று நின்றார் அம்மா. ஆனால், மகளும், அவள் மாமியாரும், காலையில் கண்டிப்பா சாப்பிட்டு விட்டுதான் போக வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்க, ஐயோ… இது என்ன கொடுமை என்று எண்ணிக் கொண்டே சாப்பிட அமர்ந்தாள்.
அருமையான மசால் தோசையும், கொத்தமல்லி சட்னியும் பரிமாறினாள் மகள். தோசையை சுவைத்தவர், புரியாமல் மகளை பார்க்க, “”இவ்ளோ நல்லா சமைக்க தெரிந்த நீ, ஏன் ரெண்டு நாளா அவ்ளோ கேவலமா செய்தேன்னு கேக்க நினைக்கற இல்ல?” பிரபாவே அவர் மனதை படித்தவள் போல கேட்டாள்.
“ஆமாம்…’ என்று வேதா தலையாட்ட, எல்லாம் காரணமாத்தான். நீ எனக்கு செல்லம் கொடுத்து, கல்யாணம் வரை சமையலறை பக்கமே விடலே. கல்யாணம் ஆகி வந்த புதுசுல, நான் இப்படித்தான் சுவையே இல்லாம சமைப்பேன். ஆனா, என் மாமியார், என்னையோ, இல்லை உன்னையோ ஒரு வார்த்தை குறை சொன்னது இல்லை தெரியுமா? இங்க என் சமையல் நல்லா இல்லைன்னாலும், என் மாமியார் என்னை பாராட்டியே, அதில் உள்ள குறை என்னன்னு சொல்லிடுவாங்க. நீ வந்த அன்னைக்கு, அவங்களுக்கு காபியில் கொஞ்சம் கூட நான் சர்க்கரை போடலை, ஆனா, அவங்க அதை குறையா சொல்லாம, இனிப்பா குடிக்கணும் போல இருக்கு, கொஞ்சம் சர்க்கரை கூட போடுன்னு சொன்னாங்க. அதே மாதிரி, சப்பாத்தி பண்ணின போதும், நான் சாப்பிடும் போது எனக்கே அதில் உள்ள குறை தெரிஞ்சு, சரி செய்துப்பேன்னு ஏதும் சொல்லாம, குருமா ஊத்தி ஊற வச்சு சாப்பிட்டாங்க. நேத்து காலையில் இட்லி எப்படி இருந்ததுன்னு உனக்கே தெரியும்… அதை பத்தியும் பிரச்னை ஏதும் செய்யாமல், மல்லிகை பூ இட்லி செய்ய டிப்ஸ் சொன்னாங்க. எதையும் நாம சொல்லற விதத்துல சொன்னா, அது கேக்கறவங்க மனசை கஷ்டப்படுத்தாது.”
மகள் தன்னை குத்தி காட்டுகிறாளோ என்று ஒரு கணம் தோன்றியது… “”அதை ஏன் இப்போ என்கிட்டே சொல்ற?”
“”அம்மா… என்கிட்டே கோவிச்சிக்காதே. நீ பூஜாகிட்ட செய்யற மாதிரி, என் மாமியார் என்கிட்டே குறை காண ஆரம்பிச்சு இருந்தாங்கன்னா, என்னால இங்க இவ்ளோ சந்தோஷமா வாழ முடியுமா?”
தன் மகள் தனக்கு அறிவுரை சொல்வதா என்ற ஈகோ எட்டி பார்த்தது வேதாவுக்கு. “”சரிடி பிரபா, உன் மாமியார் மாதிரி எனக்கு பக்குவமா பேச தெரியாது. நான் இப்படியே இருக்கேன். நீ ஒண்ணும் பெரிய மனுஷி மாதிரி எனக்கு புத்தி சொல்ல வேணாம்,” படபடவென பொரிந்தாள் வேதா.
“”அம்மா நான் சொல்றத கொஞ்சம் பொறுமையாதான் கேளேன். நேத்து எனக்கு ஏன் நீயா சமையலில் உதவ வந்த? நான் உன் பொண்ணு அப்படிங்கறதையும் மீறி, என் மோசமான சமையலை உன்னால சாப்பிட முடியலை. அதான் எனக்கு உதவற மாதிரி, உன் சுவைக்கு ஏற்ப நீ சமைச்சுகலாம்ன்னு நினைச்சே… சரிதானே?”
மகளின் கேள்விக்கு, “ஆமாம்’ என்று தலையாட்டுவது தவிர, வேறு வழி இல்லை அவருக்கு.
“”அதே மாதிரி, ஊரிலும் உனக்கு தேவையானதை நீயே சமைச்சுக்கோ. அப்படியே, பூஜாவை பக்கத்துல நிக்க சொல்லு… அவ புத்திசாலி பொண்ணு, ஒரு வாரத்துல உன் சுவை எல்லாம் அவளுக்கும் பிடிபட்டுடும்.”
இப்படியும் செய்திருக்கலாமோ என்று தோன்றியது வேதாவுக்கு.
“”அம்மா, உண்மையில் உன் பிரச்னை சாப்பாடோ, அதன் சுவையோ இல்லை. அதை செய்யற பூஜாவை உனக்கு பிடிக்கலை. உன் பேச்சை மதிக்காம, அண்ணன் அவளை காதல் கல்யாணம் செய்துகிட்டான்னு கோபம். அந்த கோபத்தை எல்லாம், அவகிட்ட காட்ட நீ கண்டுபிடிச்ச வழி, அவளை குறை சொல்வது. அது ரொம்ப தப்பும்மா. அவ, உன்கிட்ட பேசணும்ன்னு தமிழ் கத்துகிட்டா, சைவ சமையல் செய்ய பழகிக்கிட்டா; கடைசில அவ இவ்ளோ செய்தும், நீ தினமும் அவளை அழ வைக்கறே. அவ ரொம்பவே நல்ல பொண்ணு. அதான், நீ படுத்தறதுக்கு எல்லாம், பேசாம இருக்கா. இதுவே, வேற ஒருத்தியா இருந்தா, இந்நேரம், அண்ணன் தனி குடித்தனம் போய் இருப்பான்.”
மகளின் வார்த்தையில் உள்ள உண்மை புலப்பட தொடங்கியது.
வேதா யோசிக்க தொடங்கினாள். தான் வேண்டுமென்றே பூஜாவிடம் அவள் செய்யும், சமையல் மட்டுமல்லாமல், ஒவ்வொரு சின்னச்சின்ன விஷயத்துக்கும் குறை காணுவது புரிந்தது. பிரபாவின் மாமியாருக்கு இருக்கும் பக்குவம், தனக்கு இல்லையே என்ற எண்ணம் வந்தது.
“”அப்பா, அவள் செய்வதை எல்லாம் பாராட்டுவது, என் மாமியார் கையாளும் அதே டெக்னிக் தான். அதையும் நீ புரிஞ்சிக்கணும்,” மகள் சொல்லும் போதுதான், கணவனின் செய்கையின் அர்த்தம் விளங்குவது போல இருந்தது.
“”அம்மா, கடைசியா நான் ஒண்ணு சொல்றேன், நாம நம்மை சுற்றி இருக்கற மனிதர்கள் கூட தான் குடும்பம் செய்யணுமே தவிர, உப்பு, புளி, மிளகு கூட எல்லாம் இல்லை. பூஜா, நம்ம வீட்டுக்கு வாழ வந்தவள், அவளை நீ மகளாய் நினைக்க வேணாம், ஒரு சக மனுஷியா நினைச்சு, அவக்கிட்ட அன்பா நடந்துக்கலாம் இல்லே. அம்மா, இனிமேலாவது பூஜாவோட உணர்வுகளை மதிக்க கத்துக்க. தயவு செய்து உன்னை மாத்திக்க பாரு. இதுக்கும் மேல உன் இஷ்டம்,” என்றவள் அம்மாவின் பதிலை எதிர்பார்க்காமல், கால் டாக்சிக்கு போன் செய்தாள்.
“”இப்போ எதுக்கு டாக்சிக்கு சொல்ற? நான் வாயும் வயிறுமா இருக்கற என் மருமகளுக்கு, ஏதாவது செய்து எடுத்துகிட்டு போறேனே! அவளுக்கு மைசூர் பாக் பிடிக்கும். தேவையான சாமான் வாங்க காசு தர்றேன், நீ வாங்கிட்டு வந்து தந்த பின், இனிப்பு, கை முறுக்கு எல்லாம் செஞ்சு எடுத்துகிட்டு நாளைக்கு போறேன்,” என்று கொஞ்சும் குரலில் சொல்லும் அம்மாவை, புன்னகை ததும்ப பார்த்தாள் பிரபா.
“”அம்மா, உன் மனசு எனக்கு தெரியாதா? நீ ஏதோ குழப்பத்துல இருந்த; அதான் அப்படி பூஜாகிட்ட நடந்துகிட்ட; நீ மனசு மாறி, இப்படி ஏதாவது சொல்லுவேன்னு தெரிஞ்சுதான், நானே எல்லாம் ரெடி பண்ணி வச்சு இருக்கேன்.” பிரபா சொல்ல, முகத்தில் கிண்டல் வழிய, “”அச்சோ, நீ பண்ணினதா? வேணாம் வேணாம் என் மருமகள் பாவம்,” என்ற வேதாவை, தன் இடுப்பில் கை வைத்து பொய் கோபத்துடன் பிரபா முறைத்தாள். மகளின் முகபாவத்தை பார்த்த வேதாவிற்கு, சிரிப்பு பொங்கியது. அதே சந்தோஷம், அவள் வீட்டிலும் இனி தொடரும்.

– சாத்விகா (டிசம்பர் 2012)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *