மாமியாரின் மாமியார்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 12, 2016
பார்வையிட்டோர்: 8,542 
 
 

கமலம் மாமி ரொம்ப கெட்டிக்காரி. படு சாமர்த்தியம். கட்டும் செட்டுமா அவ குடித்தனம் நடத்துகிற அழகே தனி. மாமிக்கு ஐம்பத்தியெட்டு வயதானாலும் பார்ப்பதற்கு நாற்பத்தியைந்துக்கு மேல் மதிப்பிட முடியாது. எப்பவும் தேனீயைப் போல சுறுசுறுப்புடன் வளைய வருவாள்.

நங்கநல்லூரில் வாசம். வீட்டை சுத்தமாக வைத்திருப்பாள். நன்றாகச் சமைப்பாள். தன் வீட்டுக்கு வருபபவர்களை அன்புடன் நன்கு உபசரிப்பாள்.

மாமி கல்லூரி படிக்க ஆரம்பித்தபோதே, பதினெட்டு வயதிலேயே சொந்த மாமாவுடன் திருமணமாகிவிட்டது. மாமா காதலில் கசிந்துருகி மாமியை திருமணம் செய்துகொண்டார். அம்மாவின் இளைய சகோதரர் என்பதால் தன் பாட்டியே மாமிக்கு மாமியார் என்றாகிவிட்டது. அதனால் மாமியார் உபத்திரவமே எதிர்கொள்ளாமல் மாமி சொகுசாக வளர்ந்தவள். ரொம்ப வெகுளி. எவரிடமும் சண்டை போடமாட்டாள். அதிர்ந்து பேசமாட்டாள். அமைதியானவள்.

மாமிக்கு முப்பது வயதில் முரளி என்று ஒரு மகன். நன்கு படித்து சென்னையிலேயே ஒரு பெரிய மல்டி நேஷனல் கம்பெனியில் மானேஜராக இருக்கிறான். அவனுக்கு ஒரு கால்கட்டு போடணும்னு மாமி ஒரு நல்ல பெண்ணை சல்லடை போட்டு தேடிக் கொண்டிருந்தபோது மயிலாப்பூரிலிருந்து கிடைத்த ஜாதகம்தான் காயத்ரி. பயோ டெக்னாலஜியில் பி.ஹெச்டி முடித்துவிட்டு அதைத் தொடர்ந்து மேற்கொண்டு ஏதோ பெரிய படிப்பும் படித்திருந்தாள். அவள் அப்பா ஒரு சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட். ஒரே ஒரு தம்பி, கல்லூரியில் கடைசி வருடம் படித்துக் கொண்டிருந்தான்.

காயத்ரி-முரளி ஜாதகத்தில், பத்து பொருத்தத்தில் எட்டு பொருந்தி இருந்தது. கல்யாணம் மிக நன்றாக நடந்தது..

குடித்தனம் ஆரம்பித்தபோதுதான் கமலம் மாமிக்கு, காயத்ரியின் சுயரூபம் புரிந்தது. வீட்டு வேலைகள் எதையும் பகிர்ந்துகொள்ள மாட்டாள். கதவை சாத்திக்கொண்டு எப்பவும் பெட்ரூமுக்குள்ளேயே அடைந்து கிடப்பாள். பாதி நேரம் படுத்துக் கொண்டிருப்பாள். மீதி நேரம் தன் லாப்டாப்பில் மூழ்கி விடுவாள். மாமி அசாத்திய சுறுசுறுப்பு. காயத்ரி படு சோம்பேறி.

தினமும் எட்டு மணிக்குதான் படுக்கையிலிருந்து எழுந்திருப்பாள். அதற்குள் முரளி குளித்து முடித்து அலுவலகம் கிளம்பிக் கொண்டிருப்பான். பெட்ரூம் கதவை ஒருக்களித்து மெதுவாகத் திறந்து அம்மா செய்யும் காலை உணவை தட்டில்போட்டு எடுத்துக்கொண்டு மறுபடியும் பெட்ரூமுக்குள் வந்து, அங்கிருக்கும் லாப்டாப் டேபிளின்மீது தட்டை வைத்து அமர்ந்து அவசரமாகச் சாப்பிடுவான்.

அவன் சாப்பிடும்போது காயத்ரி படுக்கையிலிருந்தபடியே “குட்மார்னிங் முரள்” என்று செல்லமாகச் சொல்லி சோம்பல் முறிப்பாள்.

பின் மெதுவாக ஆடி அசைந்து எழுந்திருப்பாள். பல் தேய்த்தவுடன் பெட்ரூமிலிருந்து வெளியேவந்து சமையலறையில் நுழைந்து, மாமியை உரசிக்கொண்டு நின்றபடி இஞ்சி, ஏலக்காயுடன் சூடாக டீ போட்டுக் கொண்டு, அதை ஒரு பெரிய பீங்கான் கப்பில் எடுத்துக்கொண்டு மறுபடியும் பெட்ரூமிற்குள் நுழைந்து கதவைச் சாத்திக்கொண்டு, அரைமணிநேரம் அந்த டீயை உறிஞ்சி உறிஞ்சிக் குடிப்பாள். டீ குடிப்பதை ஒரு யாகம் மாதிரி சிரத்தையுடன் செய்வாள். அவள் வந்த பிறகுதான் வீட்டில் டீத்தூள் புழங்க ஆரம்பித்தது.

டீ குடித்து முடித்தவுடன், அந்த டீ கப்பை உடனே தேய்க்கப்போட மாட்டாள். அடுத்தமுறை டீ போடும்வரை அதில் கறைபடிந்து அசிங்கமாக காணப்படும். சுத்தம் என்றால் கிலோ என்ன விலை? என்று கேட்கும் ஜாதி காயத்ரி. காலை வேளையில் குளிக்க மாட்டாள். நினைத்தபோது வெந்நீரில் குளிப்பாள். இந்த மெட்ராஸ் வெயிலில் வெந்நீரில் குளிப்பது காயத்ரியாகத்தான் இருக்கும்.

காயத்ரி சமையலறைக்கு வந்தாலே கமலம் மாமி போட்டது போட்டபடி தலைதெறிக்க அங்கிருந்து ஓடி விடுவாள்.

பதினோரு மணிக்கு மெதுவாக சமையலறைக்கு வந்து பிரட்டோஸ்ட் தனக்காக மட்டும் பண்ணிக் கொள்வாள். ஒரு மரியாதைக்காகக் கூட “நீங்க ஏதாவது சாம்பிட்டீங்களாம்மா” என்று கேட்கமாட்டாள். ஒரே வீட்டில் இருந்துகொண்டு இரண்டு குடித்தனம் பண்ணுவாள்.

மாமிதான் சமையல். மூன்று மணிக்குமேல் ஹாலுக்கு வந்து மாமி செய்த சமையலை எடுத்துப் போட்டுக்கொண்டு வக்கணையாகச் நாக்கை சப்பு கொட்டிக்கொண்டு மெதுவாகச் சாப்பிடுவாள். சாப்பிட்டதும் பாத்திரங்களை திறந்தபடியே போட்டுவிட்டு, மறுபடியும் பெட்ரூமுக்குள் சென்று கதவை சாத்திக் கொண்டுவிடுவாள். சற்று நேரம் அங்கு டி.வி சத்தம் கேட்கும். பிறகு அதுவும் நின்றுவிடும்.

டிபன், சாப்பாடு நிறைய சாப்பிடுவாள். அதைத் தவிர நொறுக்குத்தீனி நிறைய வாங்கி வைத்து அதை சாப்பிட்டுக் கொண்டிருப்பாள். முரளி தினமும் அவளுக்கு நொறுக்குத்தீனி வாங்கிவர வேண்டும்.

தான் நிறைய படித்திருக்கிறோம் என்கிற திமிர் ஜாஸ்தி. மாமியைப் பார்க்க யாராவது வீட்டிற்கு வந்தாலும், அவர்களை இன்முகம் கூறி வரவேற்க மாட்டாள்.

இவளின் சோம்பேறித்தனமான நடவடிக்கையை மாற்றிக்கொள்ளச் சொன்னால், “எங்காத்துல இப்படித்தான் வளர்ந்தேன்” என்பாள். நொறுக்குத் தீனியைக் குறைத்து குண்டான உடம்பை குறைக்கச் சொன்னால், இன்டர்நெட்டில் அப்படிப் போட்டிருக்கு, இப்படிப் போட்டிருக்கு என்று பெரிதாக வியாக்கியானம் பேசுவாள்.

வீட்டிற்கு மாட்டுப்பெண் வந்த பிறகும், மாமிதான் எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக்கொண்டு செய்வதைப் பார்த்த மாமா, “என்னடி இவ இப்படி இருக்கா?” என்றார்.

மாமி சோகத்துடன் “எல்லாம் என் தலையெழுத்து….அவகிட்ட எது பேசினாலும் பதிலுக்கு பதில் எதிர்த்து பேசறா… எதுக்கு வீண் வம்பு? பாவம் முரளி, அவனுக்கு நாமதான இவள தேடிக் கண்டுபிடித்து கல்யாணம் பண்ணி வச்சோம்?” என்று அவரை சமாதானப் படுத்துவாள்.

ஒரு வருடமாக இதுமாதிரி புகைச்சலில் காலம் தள்ளிக் கொண்டிருக்கையில், முரளி தன் கடமையைச் செய்ய, காயத்ரி கருவுற்றாள். மாமா, மாமிக்கு ஒரே சந்தோஷம். காயத்ரியை தாங்கு தாங்கென்று தாங்கினார்கள். நல்ல நாளிலேயே நாழிப்பால் கறக்கும் காயத்ரி, இதுதான் சாக்கு என்று ‘எனக்கு அது வேணும், இது வேணும்’ என்று சொல்லி தனக்கு வேண்டியதை சாதித்துக் கொண்டாள்.

பிரசவத்துக்கு மயிலாப்பூரில் உள்ள தன் அம்மா வீட்டிற்கு சென்றாள். ஹாஸ்பிடலில் கஷ்டப்பட்டு சிசரியேனில் ஒரு பெண் குழந்தை பெற்றுக் கொண்டாள். மாமாவுக்கு, முதல் குழந்தையாக பேரன் பிறந்து, தன் வம்சம் விருத்தியாகாததில் சற்று வருத்தம்தான்.

குழந்தையுடன் ஐந்து மாதங்கள் அம்மாவுடன் இருந்துவிட்டு, ஒரு நல்ல நாளில் நங்கநல்லூர் வந்தாள். அவளின் அதிகாரம் மீண்டும் கொடிகட்டி பறக்க ஆரம்பித்தது.

மாமி அவளிடம் அதிகமாக கஷ்டப்பட ஆரம்பித்தாள். இன்பெக்ஷன் வந்து விடும் என்று சொல்லி, குழந்தையை எவரையும் தூக்க விடவில்லை. மாமியையே குழந்தையிடம் அண்ட விடவில்லை.

குழந்தையைப் பார்க்கவந்த உறவினர்கள், தெரிந்தவர்கள் அனைவரும் குழந்தையைப் பார்க்கக்கூட முடியவில்லை. பெட்ரூமிற்குள்ளேயே குழந்தையை பொத்தி வைத்துக்கொண்டு, “இப்ப தூங்கறா….இப்ப பால் கொடுக்கணும்” என்று சாக்கு போக்கு சொல்வாள்.

கமலம் மாமி ஒருநாள் கொதித்துப்போய், “நான் பெத்து வளர்த்த பிள்ளையைத்தான இப்ப நீ கல்யாணம் பண்ணிண்டு குடித்தனம் நடத்துற? உனக்கு இப்ப என்ன இன்பெக்ஷன் வந்துவிட்டது?” என்றாள்.

“அப்ப உங்களுக்கு விவரம் எதுவும் தெரியாது…. அப்ப எல்லாம் ஏது இன்டர்நெட்?” காயத்ரி குரலை உயர்த்தினாள்.

வாய் வார்த்தை தடித்துவிடாமல் இருக்க ஹாலில் இருந்த மாமா, “கமலம் டோன்ட் ஆர்க்யூ வித் ஹர்” என்றவுடன் இருவரும் அமைதியானார்கள்.

அன்று ஒரு ஞாயிற்றுக்கிழமை. குழந்தையைப் பார்க்க மாமியின் எண்பது வயது அம்மா, மாமியின் சகோதர சகோதரிகள், அவர்களின் பேரன் பேத்திகள் என படைசூழ மாம்பலத்திலிருந்து வந்திருந்தனர். .கூட்டத்தைப் பார்த்த காயத்ரி, குழந்தையை எவரும் தூக்க விடவில்லை. காபந்து பண்ணிக் கொண்டிருந்தாள்.

மதியம் குழந்தை தூங்கியவுடன், அவள் குளிக்கச் செல்லும்போது, முரளியிடம் குழந்தையைப் பார்த்துக்கச் சொல்லிவிட்டு சென்றாள்.

அவள் குளிக்கச் சென்றவுடனேயே, தூங்கும் குழந்தையை வாரி எடுத்து உறவினர்கள் சந்தோஷமாக கொஞ்ச ஆரம்பித்தனர். வளர்ந்த குழந்தைகள் குழந்தையின் பட்டு கால்களை ஆசையுடன் வருடிப் பார்த்தனர். சிலர் அதன் இலவம் பஞ்சு பாதத்தை தங்கள் முகத்தில் தேய்க்க, குழந்தை முழித்துக்கொண்டு தன் ரோஜா இதழ்களை விரித்து கன்னத்தில் குழிவிழ சிரித்தது. குழந்தை அழுது விடுமோ என்று பயந்த அனைவரும், மாறாக சிரித்ததும் அதை உச்சி முகர்ந்து ஆனந்தத்துடன் முத்தமிட்டனர். அதுவும் ங்கே, ங்கே என்று கொஞ்சியது.

கமலம்மாமி கண்களில் நீர்மல்க தன் அம்மாவிடம், “நீயே பாரு அம்மி….இந்தமாதிரி அவ இல்லாதப்ப திருட்டுத்தனமா நாம குழந்தையை கொஞ்ச வேண்டியிருக்கு… அவ பண்ற அழிசாட்டியம் தாங்கமுடியல அம்மி…இதுக்கு ஒரு முடிவே கிடையாதா?” என்று வேதனைப் பட்டாள். .

அம்மி “நீ இத்தனை காலம் மாமியாரே இல்லாமல் அனுபவிச்சே…. இப்ப உன்னோட ஐம்பத்தெட்டு வயசுல உனக்கு ஒரு மாமியார் அமைஞ்சுட்டா…காயத்ரிதான் இனி உன்னோட மாமியார். இதுதான் உன்னோட விதி. பொறுமையாக இரு. நல்லதே நடக்கும். இதுவும் கடந்துவிடும். எல்லாம் பகவத் சங்கல்பம்.” என்றாள்.

Print Friendly, PDF & Email
என் பெயர் எஸ்.கண்ணன். இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளார். முதல் நான்கு கதைகள் ஆனந்தவிகடனில் வெளிவந்தது. இவரது 'தாக்கம்' சிறுகதை கலைமகள் நடத்திய அமரர் கா.கா.ஸ்ரீ.ஸ்ரீ நினைவுச் சிறுகதைப் போட்டியில் 2003 ம் ஆண்டிற்கான முதல் பரிசை பெற்றது. 'புலன் விசாரணை' 1990 ம் ஆண்டிற்கான அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டியில் பிரசுரமானது. ஸ்ரீ ராமகிருஷ்ணவிஜயம் 2015ம் ஆண்டு நடத்திய சிறுகதைப்போட்டியில் இவரது 'மனிதர்களில் ஒரு மனிதன்'…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *