கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 4, 2012
பார்வையிட்டோர்: 6,829 
 

தொலைவிலிருந்து வரும்போதே வீட்டை மறைத்துக் கொண்டு இருந்தது மாமரம். மாமரம் என்பதற்காக மாங்காய்கள் காய்க்க வேண்டும் என்று அவசியமில்லை என்பது போல் இருந்தது அந்த மரம். பசிய இலைகளும், செந்தளிர்களுமாக வளப்பமாக நின்று கொண்டிருந்தது. எல்லா மரங்களையும் போல இதுவும், சில பறவை இனங்கள் தங்கி போவதற்கும், கூடு கட்டவும் பயன் பட்டுக்கொண்டிருந்தது. இந்த மரத்தை வெட்ட ஆள் கூப்பிட்டு வரும்படி என் மனைவி அடிக்கடி கூறிக்கொண்டிருந்தாள். வெட்டப் பிடிக்காததால், மற்ற அலுவல்களுக்கு முக்கியம் கொடுத்து, வசதியாக மறந்து போய் கொண்டிருந்தேன்.

இந்த வீட்டிற்கு குடி வந்து ஏறத்தாழ ஒரு வருடம் ஆகியிருந்தது. நகரில் மரத்துடன், எல்லா வசதிகளுடன் அமைந்த வீடு கிடைப்பதற்கு புண்ணியம் செய்திருக்க வேண்டும். என் மனைவிக்கும் முதலில் இந்த வீடு பிடித்ததற்கு காரணம் வாசலில் இருந்த மாமரம்தான். ஓஹோ என்று வளர்ந்து வானம் பிடிக்க நிற்கவில்லை என்றாலும் கூட, தரையில் வெயில் விழாமல் குடை பிடித்துக் கொண்டிருந்தது மரம். அதனால் இதையே காரணமாக கூறி என் மனைவி இந்த மரத்தை வெட்டச் சொல்லிக் கொண்டிருந்தாள்.

“ஒரு கீரை, பூ செடி வைக்க முடிகிறதா? வெயில் இல்லாமல் எப்படி வளரும்?”

ஒரு ஓய்வு நாளில் இப்படி ஆரம்பித்த பேச்சு நாளுக்கு நாள் வலிமை கூடிக்கொண்டே இருந்தது.

” ஒரே இலையாக விழுகிறது, பெருக்கி மாளவில்லை, சிவப்பு கட்டெறும்பு கூட்டம் கூட்டமாக மரத்தில் குடியிருக்கிறது. எப்ப கடித்து வைக்குமோ” என்பதாக போய்க் கொண்டிருந்தது.

இந்த வீட்டிற்கு வந்த கொஞ்ச நாளிலேயே பக்கத்து வீட்டுப் பெண், இந்த மரத்தை காய்க்கவே காய்க்காத மரம் என்று கூறியிருக்கிறாள். நானும் இதை முன்னமே அறிந்திருந்தேன். இதற்கு முன் இந்த வீட்டில் குடியிருந்தது என் நண்பர்தான். அவ்வப்பொழுது இங்கு வந்து போயிருக்கிறேன்.

அன்று அவர்களுடைய இந்த வீட்டில், ஒரு மாலைப் பொழுதில், டீ அருந்திக்கொண்டிருந்தோம். ஊரெல்லாம் மாமரங்கள் காய்த்துக் கொண்டிருக்க, கண்கள் இந்த மரத்தில் அவற்றை தேடின.

“என்ன, இந்த மரத்தில், ஒரு பூ. சின்ன பிஞ்சு கூட இல்லை?”

வார்த்தைகள்தாம். கேட்ட பிறகுதான் அந்த கேள்வியின் முட்டாள்த்தனம் எனக்கு உறைத்தது. குழந்தை செல்வம் இல்லாத என் நண்பர் வீட்டில் இந்த அசந்தர்ப்பமான சொற்கூட்டம் எத்த்கைய வேதனையை ஏற்படுத்தியிருக்கும்?. அது வரையில் நன்றாக அனுபவித்து பேசி டீ குடித்துக் கொண்டிருந்த கணங்கள் சட்டென்று காணாமல் போய்விட்டன. என் நண்பருக்கும், அவர் மனைவிக்கும் காயத்தை என் கேள்வி ஏற்படுத்தியிருந்தது. அண்றைய பேச்சு, அதற்கு பிறகு உப்பு சப்பில்லாமல் அவசரமாக முடிந்து போய் விட்டது. வீட்டிற்கு வந்த பிறகும், என் மனம் என்னையே திட்டிக்கொண்டிருந்தது. இதனாலேயே, இந்த வீட்டீகு வந்தவுடன், இந்த மரத்தின் காய்க்காத தன்மையைப் பற்றி என் மனைவியிடம் நான் சொல்லவே இல்லை.

ஏதோ ஒரு நாள் ஊரிலிருந்து என் மனைவியின் உறவினர் வந்திருந்தார். கோடையில் காற்று பற்றி எரியும் கரிசல் காட்க்காரர் அவர். மாமரத்தையும் அதன் குளிர்ந்த நிழலையும் ஐம்புலன்களாலும் அனுபவித்துக் கொண்டிருந்தார்.

” மாப்பிள்ளை, ஒரு மரம் பத்து டன் ஏ.சிக்கு சமமான குளிர்ச்சித் தரும்”

ஏதோ ஒரு முறையில் மாப்பிள்ளையாகியிருந்த எனக்கு, எவ்வளவு பெரிய மரம், எந்த வகை மரம், இவ்வளவு குளிர்ச்சியைத் தரும் என்றெல்லாம் கேட்கத் தோன்றவில்லை. இது என் மனைவியின் காதுகளில் விழுகிறதா என்று மட்டும் அறிந்து கொள்ள ஆவலாயிருந்தது.

அன்று அலுவலக வேலையின் தீவிரத்தில் அமிழ்ந்து போயிருந்த எனக்கு, என் மனைவியிடமிருந்து ஃபோன் வந்தது.

“தேனீ மரத்தில் கூடு கட்டியிருக்கு. எனக்கு பயமாக இருக்கு. இன்னைக்காவது ஆட்களை கூட்டி வாருங்கள்”

“தேனீ ஒன்னும் பண்ணாது”

” என்னைக் கொட்டினால் பரவாயில்லை. உங்கள் குழந்தையை கொட்டி வைத்தால் உங்களுக்கு தாளாதே என்றுதான்”

என் குழந்தை நடுவில் திருப்பு சீட்டாக நின்று கொண்டிருந்தது.

” சரி, நான் சாயந்திரம் வந்து பார்க்கிறேன்”. டொக்கென்று வைக்கப்பட்ட ஃபோன் அவநம்பிக்கையின் பிரதிபலிப்பாக இருந்திருக்க வேண்டும்.

அலுவலக வேலை முடிந்த கையுடன் புறப்பட்டு, யாரைக் கூப்பிட்டு இந்த மரத்தை வெட்ட சொல்வது என்ற யோசனையுடன் வீடு வந்து கொண்டிருந்தேன். மரத்தில் தேனீ இருந்த அடையாளமே இல்லை. ” எல்லாம் ஓடிப் போச்சுங்க” என்றபடி வந்து நின்றாள் என் மனைவி. எப்படி என்று நானும் கேட்கவேயில்லை.

அன்று இரவு என் மனைவியும், குழந்தையும் அசந்து தூங்கிக் கொண்டிருந்தனர். மெதுவாக, சத்தமில்லாமல் கதவை திறந்து மரத்திடம் வந்து நின்றேன்.

“மரமே! நீ கொஞ்சம் பூத்து ஒரு சில பிஞ்சுகளையாவது பிரசவித்துவிடேன்” . வாய் திறந்து, யாரும் பார்க்கவில்லை என்று உறுதி செய்த பிறகு அதனிடம் கூறிக் கொண்டிருந்தேன். பெரிய ஜே.கே. என்று நினைப்பா மரம் காய்த்து விடுவதற்கு என்று என் மனம் கிண்டலடித்தது. காய்க்காத முருங்கை மரத்திற்கு செருப்படி கொடுத்தால் காய்க்கும் என்று எங்கேயோ படித்த ஞாபகம் இப்போழுது வந்து தொலைத்தது. மனிதனுக்கு உபயோகமில்லாத பொருட்களுக்கு என்னவெல்லாம் நேருகிறது. கறவை சக்தி இழந்த பசுக்கூட்டம் லாரி லாரியாக வெளி மாநிலம் போவதற்கும் இது தானே காரணம்.

என் நண்பர் இந்த வீட்டை காலி செய்த அன்று அவர்களுக்கு நான் உதவி செய்து கொண்டிருந்தேன். எல்லா சாமான்களையும் லாரியில் ஏற்றியாகிவிட்ட பிறகு என் நண்பரும் அவர் மனைவியும் எங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டிருந்தனர். சிறிது கலங்கிய கண்களுடன் அவர் மனைவி, ” உங்கள் மனைவியிடம் இந்த மரத்திற்கு தினமும் கண்டிப்பாக தண்ணீர் விடச் சொல்லுங்கள். இந்த மரம் கண்டிப்பாக காய்க்கும்”. கண்டிப்பாக என்னை புண்படுத்த வேண்டும் என்ற நோக்கில் அவர் அவ்வாறு கூறவில்லை. அவர் வேதனை இந்த மரமும் படாமல் இருக்க வேண்டும் என்று நினைத்து கூறுவது போல இருந்தது. தொலைவில் திரும்பிய காரிலிருந்து என் நண்பரின் மனைவி இந்த மரத்திற்கு தனியாக கை காட்டிக் கொண்டிருந்தது போல தோன்றியது.

இந்த கிட்டத்தட்ட ஒரு வருட காலத்தில் ஒரு பூவையோ, வடுவையோ கூட இந்த மரம் பிறப்பித்து விடவில்லை. பருவங்கள் மாறி இலைகளையெல்லாம் கொட்டத் தொடங்கியிருந்தது மரம்.

” எவ்வளவு குப்பை. இதையெல்லாம் கூட்டி பெருக்க எனக்கு தெம்பில்லை. காலையில் பெருக்கி முடிந்ததும் மாலையில் மறுபடியும் சேர்ந்து எழவெடுக்கிறது இந்த மரம். வெட்டி தொலைக்கவும் மாட்டேன் என்கிறீர்கள்”

இனிமேலும் தள்ளிப் போட்டு கொண்டிருக்க முடியாது. இல்லயென்றால் தினம் வீட்டில் சண்டை வெடிக்கும். ஒரு ஞாயிற்றுக் கிழமை பக்கத்து வீட்டில் அரிவாள் வாங்கி நிறைய கிளைகளை வெட்டிக் கழித்துவிட்டேன். முழுவதும் வெட்டிவிட என் மனம் இடம் தரவில்லை. இப்போதிக்கு இது போதும். சம்மர் க்ராப் வெட்டிக்கொண்ட பள்ளி சிறுவனை போல இருந்தது மரம்.

மரங்களும், மாடுகளும் மாத்திரம்தான் உபயோகமில்லாமல் போகின்றனரா என்ன? சக மனிதர்களும் கூட அவ்வளவாக உபயோகமில்லாமல் போகின்றனர். எங்களுடையது ஒரு தனியார் நிறுவனம். அவ்வப்பொழுது எடுக்கப்படும் அதிரடி மாற்றங்களில் இந்த முறை நான் அதிகப்படியான ஆளாக நிர்வாகத்திற்கு தெரிந்திருக்க வேண்டும். காய்ப்பு குறைந்ததோ, காய் சிறுத்ததோ இல்லை பழம்தான் புளித்ததோ தெரியவில்லை. அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் படி மூன்று மாத அறிவிப்பில் என்னுடைய இருப்பிற்கு அவசியமில்லை என்று நன்றியறிதலுடன் தெரிவித்துக் கொண்டது நிர்வாகம். அவ்வளவு சுலபமாக ஒருவரை வேலையிலிருந்து போகச் சொல்ல முடியுமா? என்று கேட்பவர்கள் அரசாங்க வேலையிலோ அல்லது யூனியன் அரவணைப்பிலோ இருக்கக் கூடும். இந்த மூன்று மாத காலத்திற்குள், வேறு வேலை தேட வேண்டிய நிஜம் பயத்தை ஏற்படுத்தியிருந்தது.

வீட்டிற்கு வந்து மனைவியிடம் அலுவலக ஆணையை காண்பித்தேன். நிகழ் காலம் குறித்த கவலையுடன் அவள் ஸ்தம்பித்து போயிருந்தாள். மெளனமாக நின்று கொண்டிருந்தது மரம்.

இந்த வீட்டை இன்னும் மூன்று மாத காலத்திற்குள் காலி செய்ய வேண்டியிருக்கும். அடுத்தது இந்த வீட்டிற்கு யார் குடிவரப்போகிறார்கள் என்று தெரியவில்லை. அவர்களுக்காவது நிறைய குழந்தைகள் இருக்க வேண்டும் என்றும், மரமும் பூத்துக் குலுங்க வேண்டும் என்றும் விரும்பியது மனம்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *