மாப்பிள்ளை மயக்கம்!

1
கதையாசிரியர்:
தின/வார இதழ்: பாக்யா
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 26, 2022
பார்வையிட்டோர்: 8,726 
 

மாப்பிள்ளையின் போட்டோவைப்பார்த்ததும் அதிலேயே மனம் லயித்துப்போய் ,பிடித்துப்போயிற்று மாலதிக்கு!

“அம்மா….! அப்பாகிட்ட சொல்லி இந்த இடத்தையே முடிச்சிடுங்க ” என்றாள் உறுதியுடன்.

“சரி மாலதி. உனக்கு ஒரு நல்ல இடம் அமையனங்கிறதுதானே எங்களோட ஆசை. கண்டிப்பா உனக்கு பிடிச்சிருக்கிற இந்த மாப்பிள்ளையையே ஏற்பாடு பண்ணச்சொல்லறேன்.” என்று அவள் அம்மா கூறியதைக்கேட்டு மகிழ்ச்சியின் எல்லையைத்தொட்டாள்.

மாலதி அரசு பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்ப்பவள். கை நிறைய சம்பளம். பெற்றோருக்கு ஒரே செல்ல மகள். வசதிக்கு குறைவில்லை. இருந்தும் ஜாதகத்தில் உள்ள செவ்வாய் தோச குறைபாடு காரணமாக இது வரை பல வரன்கள் வந்தும் பொருந்தவில்லை.

தந்தை வேதாச்சலம் வீட்டினில் நுழையும் போதே “அப்பாடா” என்றார்!

“என்னங்க போன காரியம் ஆச்சா…? ஜாதகம் பொருந்தி வந்திருக்கா…?” எனக்கேட்டாள் கணவனிடம் மனைவி வேதவல்லி.

“பொருத்தம் சரியா இருக்கு. நாளைக்கே பொண்ணு பார்க்க வரச்சொல்லிட்டேன்.” என்றார் மகிழ்ச்சி பொங்க.

அன்று இரவு மாப்பிள்ளையின் போட்டோவுடன் குடும்பமே நடத்தி விட்டாள் மாலதி.

காலையில் தன்னை அலங்கரித்துக்கொண்டு தயாராய் இருந்தாள்.

மாப்பிள்ளையும்,மாப்பிள்ளை வீட்டினரும் ஒரு காரில் வந்து வீட்டின் முன் இறங்கினர்.

பெண் பார்க்கும் படலம் முடிந்தவுடன் திருப்தியை இரண்டு வீட்டினரும் பரிமாறிக்கொண்டனர்.

பெண்ணுடன் தனியாக பேச வேண்டும் என்று மாப்பிள்ளை விருப்பம் தெரிவிக்க ,பெற்றோர் சம்மதத்துடன் மொட்டை மாடிக்கு சென்றனர் இருவரும்.

“இத பாருங்க மாலதி… உங்களை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. நான் புதுசா ஆரம்பிக்கப்போற ரியல் எஸ்டேட் பிசினஸ் நமக்கு கல்யாணம் ஆன பிறகு பெரிய லாபம் தரும்னு எனக்கு நம்பிக்கை இருக்கு.”

என்ற மாப்பிள்ளை வேகனின் பேச்சைக்கேட்டு உச்சி குளிர்ந்து போனாள் மாலதி.

“அதுக்கு கூட ‘மாலதி ரியல் எஸ்டேட்’ னு பெயர் வைக்கலாம்னு இருக்கேன். ஆனா…” என்று இழுத்தான்.

“என்னங்க… எதுவா இருந்தாலும் என் கிட்ட நீங்க சொல்லலாம். எல்லாம் முடிவான பிறகு நமக்குள்ள ஒளிவு மறைவு எதுக்கு?” என்றாள்.

“நான் வாங்கின இடத்தோட அக்ரிமெண்ட் டைம் இன்னும் ரெண்டு நாள்ல முடியப்போகுது. மொத்த பணத்தையும் கொடுத்து எழுதலேன்னா அட்வான்ஸ் பணம் ஒரு லட்சம் போயிடும் அதான்” என்றான்.

“கவலைப்படாதீங்க. நான் ஹெல்ப் பண்ணறேன். என்னோட அப்பா,அம்மாவுக்கு இப்போதைக்கு இந்த விசயம் தெரிய வேண்டாம். என்னோட சம்பளத்துல கிடைச்ச பணம் ஐந்து லட்சம் என்னோட பேர்ல டெபாசிட் பண்ணியிருக்கு. அதுல லோன் போட்டு நாலு லட்சம் எடுக்கலாம். வேணும்னா நாளைக்கே எடுத்து தர்றேன்.” என்று மாலதி சொன்னதும் மகிழ்ச்சியுடன் விடை பெற்றான் அவள் வருங்கால கணவன் வேகன்.

அடுத்த நாள் நாலு லட்சம் தனது டெபாசிட் தொகையிலிருந்து லோன் கேட்ட மாலதியை ஆச்சர்யமாகப்பார்த்தார் வங்கி மேலாளர் மேகநாதன்.

“எதுக்காக இவ்வளவு பெரிய தொகையை லோனா கேட்கறீங்க…?”

“தேவை” என்றாள் சிக்கனமாக.

“அத நான் தெரிஞ்சுக்கலாமா…? இது உங்க பணம்னாலும் உங்க அப்பா ஸ்தானத்துல நான் இருக்கேன். அதான்”

“என் வுட்பிக்கு உதவ…”

“ஏம்மா இந்தக்காலத்துல கட்டின கணவனையே நம்ப முடியல. வுட்பிக்கு உதவறேன்னு சொல்லறியே….? எதுக்கும் உன்னோட முடிவை மறுபரிசீலனை செஞ்சு பாரு.” என்று மேலாளர் கூறிய போது, அருகிலிருந்த வேகனுக்கு அவர் மேல் ஆத்திரம் வந்தது.

“இது எங்க பர்சனல் விசயம். இதுல நீங்க தலையிடக்கூடாது ” என்றான் வேகன் சற்று கோபமாக.

“மிஸ்டர் நீங்க அவங்க அப்பாகிட்டவே உதவி கேட்டிருக்கலாமே…?” என்றார்.

“அதைக்கேட்க நீங்க யார்…?” என்றவன் ,யாரும் எதிர் பாராத விதமாக ஆத்திரம் கண்களை மறைக்க,வங்கி மேலாளருடைய சட்டையை எட்டிப்பிடிக்க, அரண்டு போயினர் மாலதி உள்பட அங்கிருந்த அனைவரும்.

காவலர்கள் வந்து வேகனைக்கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்துச்சென்றனர்.

‘நம்மால் தானே இவருக்கு இவ்வளவு அவமானம். இருந்தாலும் மேனேஜர் நம்ம விசயத்துல இந்தளவுக்கு மூக்கை நுழைத்திருக்கக்கூடாது.’ என்று கவலையுடன் வேகனை ஜாமீனில் எடுக்க காவல் நிலையம் நோக்கிச்சென்றாள் மாலதி.

இன்ஸ்பெக்டர் துரை மாலதியை ஏறிட்டார்.

“நீங்க தான் மாலதியா…?”

“ஆமா சார்”

“நல்ல நேரம்மா. பேங்க் மேனேஜர் ரூபத்துல கடவுள் வந்து உன்னைக்காப்பாத்திட்டார். கல்யாணம் ஆகலேன்னாலும் பரவாயில்லை. ஆனா இவனைப்போன்ற கிரிமினல்களுக்கு மட்டும் வாழ்க்கைப்பட்டிடக்கூடாது.”

“நீங்க என்ன சார் சொல்லறீங்க…?” அதிர்ச்சியுடன் கேட்டாள் மாலதி.

“இவன் பக்கா கிரிமினல். இது வரைக்கும் ஏழு பெண்களை ஏமாத்தி கல்யாணம் பண்ணியிருக்கான்.” என்றார்.

இதைக்கேட்ட மாலதிக்கு மயக்கமே வரும்போல இருந்தது.

“கவலைப்படாதீங்க மாலதி. இனியாவது நல்லா விசாரிச்சு சம்மதம் சொல்லுங்க. பெஸ்ட் ஆப் நெக்ஸ்ட் லக்” என்று இன்ஸ்பெக்டர் கூற,புலியிடமிருந்து தப்பிய புள்ளி மானாக வீடு நோக்கிச்சென்றாள் மாலதி.

(1998 -ல் பாக்யா வார இதழில் வெளியான எனது சிறுகதை)

Print Friendly, PDF & Email

1 thought on “மாப்பிள்ளை மயக்கம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *