(1951ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அட்வகேட் முத்துவையர் வெளியூருக்குப் போய் விட்டு இரவு ஏழு மணிக்கு வீடு வந்து சேர்ந்தார். வீட்டில் யாரோ ஒருவர் புதிதாக வந்திருந்தார். அவருடைய பக்கத்தில் ஒரு வெற்றிலைப் பெட்டி இருந்தது. இரவில், வெள்ளியால் செய்ததுபோல் தோன்றிற்று. அதைப் பார்த்ததும், ‘சுக்ர தசை ஆரம்பத்தில் தொழில் வலுக்கும்’ என்று ஜோசியர் சொன்னது ஞாபகத்துக்கு வந்தது. மகிழ்ச்சியால் உள்ளம் தஞ்சாவூர்க்கோவில் நந்தி அவ்வளவு பெரியதாகி விட்டது. ஆனால் பாவம் ! அடுத்த கணம் நந்தி மறைந்து போய்விட்டது. காரணம்?
“என்ன மாப்பிள்ளை, சௌக்கியமா?” என்று வந்த வர் கேட்டது தான்.
முத்துவையர்: சௌக்கியந்தான்.
வந்தவர்: என்னை உங்களுக்குத் தெரிய நியாய மில்லை. நான் கண்டமங்கலம். உங்கள் மாமனாருக்குப் பத்து நாள் ஞாதி. கண்டமங்கலத்தில் தர்ம பாடசாலை வைத்து நடத்துகிறாரே பெரிய வீட்டு விசுவநாதையர்? அது நான்தான்.
வாஸ்தவத்தில் முத்துவையருக்கு மாமனார் வழி உறவி னர் ஒருவரையுமே சரியாகத் தெரியாது. இருந்தாலும் கௌரவத்தை விட்டுக்கொடுக்காமல், “ரொம்ப சந்தோஷம்” என்று அரை டஜன் தடவை சொன்னார். பிறகு சட்டை யைக் கழற்றிவிட்டு, கொல்லைக் கிணற்றுக்குப் போய்விட் டார். அங்கே மனைவியைக் கூப்பிட்டுக் காதோடு காதாய், “இவர் எப்படி ஞாதி?” என்று கேட்டார்.
“எனக்குந்தான் இவரைத் தெரியவில்லை. ஆனால் பெரிய வீட்டு விசுவநாதையர் ஒருவர் உண்டு. பணக்காரர்” என்றாள் மனைவி.
சம்பந்தி இனத்தவரல்லவா? இராச் சாப்பாடு தட புடல் – உருளைக்கிழங்குப் பொடிமாஸ், வெங்காயசாம்பார், காராக்கருணை வறுவல் முதலியன.
சாப்பாடு முடிந்த பிறகு முற்றத்தின் ஓரத்தில் இரு வரும் உட்கார்ந்து வெற்றிலை பாக்கு மென்றுகொண்டிருந்தார்கள்.
மாப்பிள்ளை பேச்சைத் துவக்கினார்.
“இங்கே விஜயம் செய்தது வெகு அபூர்வம்.”
“அபூர்வம் என்ன, மாப்பிள்ளை! இரண்டாவது அப்பீல் விஷயமாகப் பட்டணம் போனேன். அட்வகேட் ஜெனரலுக்கு வகாலத்துக் கொடுத்தேன். சின்ன அப்பீ லாக இருந்தாலும் பீஸ் ஐந்நூறு வேணும் என்றார். பாதி கொடுத்தாகிவிட்டது. திரும்பி வரும் வழியல்லவா? குழந்தையைப் (தங்கள் மனைவியைத்தான் ; புரிகிறதா?) பார்த்துவிட்டுக் காலை போட்மெயிலில் போகலாமென்ற உத்தேசம்.”
பிறகு ஐந்தாறு நிமிஷம் ‘அக்கப்போர்’ பேசிக் கொண்டிருந்தார்கள். நெல் மூட்டைகளிலிருந்து அந்துப் பூச்சிகள் பறந்து வந்து இவர்கள் மேல் விழுந்தன. “வேண்டுமென்றால் தெருப்புறம் போவோம்” என்று மாப்பிள்ளை சொல்லவே, இருவரும் கிளம்பினார்கள்.
திண்ணையில் ஒரு பத்து நிமிஷம் கழிந்தது. பெரிய வீட்டு விசுவநாதையர், “எனக்குச் சகிக்கவில்லையே- கொசுக் களின் ஸாமகானம். குழந்தையைத்தான் பார்த்தாகிவிட் டது. ஒரு ஜட்கா வரவழையுங்கள். ரெயில்வே ஸ்டேஷனுக்குப் போய்த் தூங்கிவிட்டு, அப்படியே ரெயிலேறிப் போகிறேன்’ என்றார்.
உபசாரத்தில் விட்டுக் கொடுக்கவில்லை மாப்பிள்ளை. இருந்தாலும் வந்தவர், “இங்கே இருப்பதைப்பற்றி ஆக்ஷேபம் இல்லை. நாளைப் போக மறுநாள் ஊரில் சிவன் கோவில் கும்பாபிஷேகம். என் கைங்கர்யம். இங்கே தங்கி விட்டால் அந்தக் காரியம் தவக்கப்படும்” என்று சொன்னதைக் கேட்டு, மாப்பிள்ளை ஒருவாறு சமாதானமடைந்தார்.
“ஆனால் சரி, ஜட்கா வரவழைக்கிறேன்” என்று,”சாமி ஐயர்! சாமி ஐயர்!!” என்று தம் குமாஸ்தாவைக் கூப் பிட்டார். உடனே, “ஓகோ! அவர் வீட்டுக்குப் போய் விட்டாரோ?” என்று ஞாபகப்படுத்திக்கொண்டு தாமே கிளம்பினார்.
ஜட்கா வந்ததும், பெரிய வீட்டு விசுவநாதையர் வெற்றிலைப் பெட்டியை வண்டியில் வைத்தார்.
“வந்தால் போனால் இறங்கிவிட்டுப் போங்கள்” என்றார் மாப்பிள்ளை.
“ஓ, பேஷாக!” என்று வண்டிப்படியில் விசுவ நாதையர் காலெடுத்து வைத்தார்.
“உங்களுக்கல்லவா 1 பையில் ஏதோ மணிபர்ஸ் தெரி கிறதே. கொஞ்சம் ஸ்டேஷனில் சாவதானமாக இருக்கட் டும்” என்று மாப்பிள்ளை எச்சரிக்கை செய்தார்.
“பார்த்துக்கொள்ளுகிறேன் ” என்று வண்டியில் ஏறிப் போய்விட்டார் விசுவநாத ஐயர்.
முத்து ஐயர் வழக்கம்போல் திண்ணையில் படுக்கையைப் போட்டுக்கொண்டு சொஸ்தமாகத் தூங்கினார்.
மறுநாள் பலபலவென்று விடியும்பொழுது, அதாவது பிராம்மமுகூர்த்தத்தில், பிரம்மபத்திர சகித மாகப் பிரம்மஸ்ரீ முத்துவையர் சந்தியாவந்தனம் செய்து கொண்டிருந்தார். (இவ்விடத்தில் ‘சந்தியாவந்தன’ மென்பதற்கு அதிகாலையில் வெற்றிலை போடுவது என்று விஷயம் தெரிந்தவர்கள் வியாக்கியானம் செய்வார்கள்.)
அப்போது தெருவில் கலீர் கலீர் என்று சலங்கை ஓசை கேட்டது. அடுத்தாற்போல், பெரிய வீட்டு விசுவ நாதையர் ஜட்கா வண்டியிலிருந்து இறங்கினார். கேட்டுக்கு ஒன்றும் புரியவில்லை.
” தூங்கிக் கீங்கிப் போய்விட்டீர்களா? ரெயில் விட்டதா?” என்றார்.
“இல்லை, மாப்பிள்ளை! ஏமாந்து போய்விட்டேன்.
“ஏன்? எப்படி?”
“நீங்கள் பர்ஸ் ஜாக்கிரதை என்று எச்சரிக்கை செய்தீர்களல்லவா”
“ஹூம்”.
“அதன் பேரில் இரண்டாவது கிளாஸ் பிரயாணிகள் தங்கும் இடத்துக்குள் போய்த் தாழிட்டுக்கொண்டு சாய் மான நாற்காலியில் படுத்துத் தூங்கிவிட்டேன். இரவு இரண்டு மணி இருக்கலாம். அதட்டிய குரல் ஒன்று, “யாரையா அது, தாழிட்டுத் தூங்குவது? பிரபுக்கள் பல ருக்காக ஏற்பட்ட இடமல்லவா? தாழைத் தள்ளும்” என்றது.
நான் கதவைத் திறந்ததும் என் கண்முன் யாரோ ஜமீன்தார்போல் ஒருவர் காணப்பட்டார். அவரைச் சுற்றிலும் நான்கு அல்லது ஐந்து ஆட்கள் கைகட்டி வாய் புதைத்து நின்றார்கள். நான் எவ்வளவு அந்தஸ்துள்ளவ னாக இருந்தபோதிலும், அவரையும் அவருடைய ஆட்களை யும் பார்த்தவுடன் கடுகானது போன்ற உணர்ச்சி ஏற்பட்டது.
“டேய்! மெத்தையைப் போடு. போகி ஆட்களை ஊருக்குப் போகச் சொல்லு!” என்று ஜமீன்தார் விட்டார்.
யாரோ ஒருவன் ஓர் உயர்ந்த வெல்வெட் மெத்தை யைக் கீழே விரித்தான். அதற்குப் பிறகு எனக்குச் சாய் மான நாற்காலியில் படுத்துத் தூங்கத் துணிச்சல் வரவில்லை. சுவர் ஓரத்தில், ஜரிகை அங்கவஸ்திரத்தை விரித்துப் போட்டுக்கொண் தூங்கினேன். போட் மெயில் வருதற்குச் சற்று முன்னோடு யாரோ என் ஜேபி யில் கைபோடுவதுபோல் இருந்தது. திருடன்! திருடன்!! என்று கத்திக்கொண்டே எழுந்திருந்தேன். ஆச்சரியத்தி லும் ஆச்சரியம்! என் பணப்பையைக் கூசாமல் எடுத்துக் கொண்டு சென்ற ஜமீன் தார் தாமும், ‘திருடன்!’ என்று கூச்சலிட்டார்.
“அதற்குள் இரண்டு மூன்று போலீஸ்காரர்கள் வங் தார்கள். அவர்களிடம் விஷயத்தைச் சொல்லவேண்டி, “இதோ பாருங்கள்…” என்று நான் ஆரம்பிப்பதற்குள், ஜமீன்தார் பிறவிப் பிரபுவைப்போல் மெதுவான குரலில் இடைமறித்து, “கிராமாந்தரங்களில் அடிதடி ஏற்பட்டால், அடிபட்டவன் கிரிமினல் கேஸ் கொடுப்பதற்கு முந்தி அடித்தவன் ஒரு கேஸ் கொடுத்துவிடுவது வழக்கம். அதைப்போல அந்தச் சுவரண்டை நிற்கும் பார்ப்பான் என் பணப்பையைத் திருடிவிட்டு, ‘திருடன்’ என்று கூக்குரலிடுகிறான். அவனிடத்திலிருந்து பணப்பையைப் பிடுங்கப்பட்ட பாடு தெய்வம் அறிந்துவிட்டது” என்றார். இதைக் கேட்டதும் எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. ஜமீன் தாருடைய குரலையும், வெல்வெட் மெத்தையையும், செழும் மீசையையும், மணிபர்ஸையும் பார்த்த போலீஸ் காரர்கள் நான் சொல்லுவதையா நம்பப்போகிறார்கள் என்ற பயம் ஏற்பட்டது. பேசிப் பார்க்கலாமென்றால் நாக்கு எழவில்லை. “வா ஐயா ஸ்டேஷனுக்கு” என்ற சப்தத்தைக் கேட்டதும் சோகம் போட்டுவிட்டது. தப்பி னால் போதும் என்ற ஸ்திதியை அடைந்தேன். ஒரு யுக்தி செய்தேன். “ஜமீன்தார்வாள்! தெரியாமல் செய்துவிட் டேன். மன்னிக்கவேண்டும்” என்று கை குவித்தேன். ஜமீன்தார் கம்பீரமாக, “பிழைத்துப் போகிறான் ஐயன், விட்டுவிடுங்கள்” என்று உத்தரவிட்டார்.
“அப்பா! தப்பிப் பிழைத்தேன். தலைக்கு வந்தது முந்நூற்று ஐம்பது ரூபாயுடன் போயிற்றே! அது என் மனைவியின் மாங்கல்ய பலம் என்று நினைத்துக்கொண்டு வெளிப்பட்டேன். ஒரு போலீஸ்காரன் குறுக்கிட்டுக் கண் சிமிட்டினான். வெற்றிலைப் பெட்டியை ‘வாய்க்கரிசி ‘ போட்டேன் அவனுக்கு. அவ்வளவுதான். இதோ வந்து நிற்கிறேன். எனக்குப் போன திலெல்லாம் வருத்தமில்லை. கும்பாபிஷேகம் தடைப்படுகிறதே என்ற வருத்தந்தான். ரெயில் செலவுக்குக் காலணா இல்லை.”
“அதென்ன பிரமாதம்? நீங்கள் சொல்வதைப் பார்த் தால், ஜமீன்தார் என்று வேஷம் போட்டுக்கொண்டு நாகரி கக் கொள்ளை யாரோ அடித்திருப்பதுபோல் இருக்கிறது. ஆளை அடையாளம் தெரியுமா?” என்றார் அட்வகேட் முத்துவையர்.
“அது என்ன எழவோ ! பிடித்த சனியன் இத்தோடு போகட்டும். போலீஸில் பதிய வைக்கிறது முதலிய புதுச் சனியன் வேண்டாம். கும்பாபிஷேகம் கெட்டு விடும்.”
“பணம் நான் தருகிறேன். அதற்காக வருத்தப்பட வேண்டாம். எவ்வளவு வேண்டும்?”
“இரண்டாவது கிளாஸ் பதினைந்து ரூபாய் ஐந்தே காலணா”.
சரியென்று சொல்லிவிட்டு முத்துவையர் உள்ளே பணப் பெட்டியண்டை சென்றதும் பெட்டியில் பணம் அதிகமாக இல்லாதது ஞாபகம் வந்தது. உடனே கொல்லை வழியாகச் சென்று பக்கத்து வீட்டிலிருந்து பதினாறு ரூபாய் கைமாற்று வாங்கிக்கொண்டு வந்து அலமாரியில் வைத்துவிட்டுத் தெருப்புறத்திற்கு வந்தார்.
“உள்ளே வாருங்கள். காபி சாப்பிட்டுவிட்டுப் போகலாம்” என்றார் மாப்பிள்ளை.
காபி ஆனபிறகு அலமாரியிலிருந்த பணத்தை எடுத் துக் கொடுத்தார்.
“இந்தக் கை பிறரிடம் பணம் கடன் வாங்கினதே இல்லை. இப்போது பாருங்கள்” என்று விசுவநாதையர் வருந்தினார்.
“இதெல்லாம் நாம் செய்துகொள்ளுகிறதா?”
“ஹூம்!…இருக்கட்டும். ஊருக்குப் போனதும் தந்தி மணியார்டர் அனுப்பிவிடுகிறேன்.”
“என்ன அவசரம்? சாதாரணமாக அனுப்பலாம்.” “அப்படியல்ல மாப்பிள்ளை. இது ஜலதோஷத்தைப் போல எனக்குத் தலையில் பாரமாக இருக்கும். தந்தி மணி யார்டர் செய்தால்தான் சொஸ்தமாக இருக்கும். “
“எனக்கு ஒரு அவசரமும் இல்லை. அவ்வளவுதான் நான் சொல்லக் கூடியது. பிறகு உங்கள் இஷ்டம்.”
“ரொம்ப சந்தோஷம்; சமயத்தில் உதவி செய்ததற்குக் கும்பாபிஷேகத்தின் பலன் உங்களுக்குத்தான். இப்படிப் போய் வரட்டுமா?” என்று விடை பெற்றுக் கொண்டு கிளம்பிவிட்டார் பெரிய விசுவநாதையர்.
அடுத்த நாள் காலையிலிருந்து மாலை முழுவதும் தந்தி மணியார்டர் வரவில்லை.இப்படியே மூன்று நாள் ஆகிவிட்டது. கும்பாபிஷேகத் தடபுடலில் இதை மறந்தி ருக்கலாம் என்று முத்துவையர் தைரியமாக இருந்து விட்டார்.
மூன்று நாளுக்குப் பிறகு இன்னும் மூன்று நாள் ஆயிற்று. பிறகு அது ஒரு பக்ஷமாக நீண்டது. ஒரு விதத் தகவலும் இல்லை.
இல்லை. முத்துவையர் மொணமொணக்கத் துவக்கினார். இது விஷயம் மனைவியுடன் கொஞ்சம் பேசிப் பார்த்தார். ‘பாழாய்ப் போன கௌரவம்! என்னைக் கேட்டா கடன் வாங்கிக் கொடுத்தீர்கள்” என்று ஓர் அலசு அலசினாள் அவர் மனைவி.
அடுத்த க்ஷணத்தில் அட்வகேட்டின் மனத்தில் ஒரு தத்துவம் உதயமாயிற்று. “எதை எதிர்பார்க்கிறோமோ அது நம்மை ஏமாற்றும். எதை அலயம் செய்கி றோமோ அது ராம்ராம் சலாம் போட்டுக்கொண்டு நம் மைத் தேடிவரும். எனவே, இந்தப் பதினாறு ரூபாயை அலயம் செய்து மறந்துவிடு” என்று மனத்துக்குக் கட்டளை இட்டார்.
ஒரு மண்டலம் ஆயிற்று. அடுத்த நாள் முத்துவை யருக்கு ஒரு தபால் கிடைத்தது:
மெய்யூர்.
க்ஷேமம்: அநேக கோடி நமஸ்காரம். இடது கை வழங்குவதை அறியாத வலது கை உடைய தங்கள் பெருந்தன்மை மேன்மேலும் வளர்க. சமயத்தில் தாங் கள் எனக்கு மூக்குக் கொடுத்ததைப்பற்றி எப்படிப் புகழ்ந்தால்தான் தகாது! ஆனால் நான் முகஸ்துதி செய்யும் வழக்கம் இல்லை.
எனக்கு மூன்று பெண் குழந்தைகளும் கையில் ஒர் ஆண் குழந்தையும் மற்றொரு குழந்தையின் ஆரம்பமும், இன்னும் அநேகம் ஏற்படக் கூடிய நிச்சய மும் இருந்துவருகின்றன. சிக்கன ஏற்பாட்டின்கீழ் வீட் டுக்கு அனுப்பப்பட்ட துர்ப்பாக்கிய குமாஸ்தாக்களுள் நானும் ஒருவன். அப்போது முதல் எனக்கு வேலை கிடைக்கவில்லை. வேலையை உத்தேசித்து நடந்தலைந்த தூரத்தை மைல் கணக்கில் நீட்டிச் சொன்னால், கிருந்து ஸான்ப்ரான்ஸிஸ்கோ எவ்வளவு மைல் தூரம் இருக்குமோ அவ்வளவு இருக்கும். இன்ஷ்யூரன்ஸ் ஏஜன்ஸிகூடக் கிடைக்கவில்லை. எல்லாம் எனையாளும் ஈசன் செயல்! ஈசனைக் கூப்பிடக்கூடிய பாத்யம் எனக் குண்டா என்பது ஒரு கேள்விதான். கொஞ்சம் மன்னிக்க வேண்டும். பெண்சாதி பிள்ளைகளைக் காப் பாற்றும்படி தலையில் கூழைக் கரைத்துக் கொட்டி யிருக்கிறதென்று அநாதியான சாஸ்திரங்கள் சொல்லி வரும் ஸ்திதியில், என்னைப் படைத்த கடவுள் இவ் வளவு பொறுப்பற்றவராக இருப்பாரென்று நான் எதிர்பார்க்கவே இல்லை. குழந்தைக்குத் துரோகம் செய்யும் தாயார் உண்டு – அது கடவுள். இல்லாவிட் டால்,என் குழந்தைகளுக்கு வெறும் கஞ்சி வார்க்க வேண்டிய கடனுக்காக (நீங்கள் குசாலாக அதையே கடமை என்று சொல்லலாம்) தங்களிடம் நாசுக்காகப் பணம் யாசிக்க வேண்டிய அவசியமே இருந்திராது. ஆறு மாத காலமாக வேலையில்லை. வயிற்றுக்குச் சரி வரச் சோறில்லை. தங்கள் புண்ணியத்தால் அன்று முதல் இன்று வரை ஒரு மாதிரி காலம் தள்ளிவிட் டேன்! இனி என்ன கதியோ! ஆகையால், என்னை மன்னித்து ஏழைகளைக் காப்பாற்றிய புண்ணியத்தை ஏற்றுக்கொள்ளுங்கள். அத்துடன் என் மனைவியின் வாழ்த்துக்களையும் இதன் மூலமாகப் பெற்றுக்கொள் ளுங்கள். குழந்தைகளுக்குச் சோறிட்ட மகாராஜன் என்று தினமும் வாழ்த்துகிறாள். அவளிடத்தில் எனக்குத் தாங்கள் சிறிய வேலை கொடுத்ததாகவும், அதற்காகச் சம்பளம் ரூபாய் பதினாறு தாங்கள் கொடுத்ததாகவும் சொல்லியிருக்கிறேன். வேறு எப் படிச் சொல்லுகிறது? ஸ்கூல் பைனல் வரையில் வாசித்தும், சில வருஷங்கள் உத்தியோகம் பார்த் திருந்துங்கூட என் புத்தி வேறு வழியில் செலவாகாம லிருக்கும் சங்கடத்துக்கு நான் ஜவாப் அல்ல. உண்மை யில் நான் பொய்யனல்ல. தங்கள் உறவினன்தான். இவ்வளவும் வயிற்றுக் கொடுமை! எனக்கு ஒருவேளை எப்போதாவது வேலை கிடைத்துப் பணம் வந்தால், தங்கள் பணத்தைக் கொடுத்துவிடுகிறேன். என்னைத் தயை செய்து மன்னிக்க வேண்டும்.
இப்படிக்கு,
பொறுப்பற்ற கடவுளால் பிறப்பிக்கப்பட்டவனும் சாது ஜனங்களால் ரக்ஷிக்கப்பட்டு வருபவனுமான தொழிலில்லாத அபாக்கியன், சேஷு.
– மோகினி (சிறு கதைகள்), முதற் பதிப்பு: நவம்பர் 1951, கலைமகள் காரியாலயம், சென்னை.