மாப்பிள்ளைப் பார்க்கணும்..!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 6, 2020
பார்வையிட்டோர்: 4,915 
 
 

வேறு வழி இல்லாமல் தயக்கத்துடனும் ஒரு வித அசட்டுத் துணிச்சனுடனும் நடந்தார் வெங்கடசுப்ரமணியம்.

என்ன நடக்கப் போகிறதோ. ..? !

வேண்டும் ! தாயில்லா பெண் என்று செல்லமாக வளர்த்து, சுதந்திரமாகப் பறக்கவிட்டதற்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும் !

போய்ச்சொன்னதும் கொதிப்பார்கள் ! தன் மானம் தலை போய் விட்டதாய்க் குதிப்பார்கள். ‘ வெளியே போ ! ‘ என்று கை காட்டுவார்கள். இல்லை. … கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளுவார்கள். அதுவும் நடக்கவில்லையேயென்றால் கவிழ்ந்து, விழுந்து சிரிப்பார்கள்.

‘ நீயும் ஒரு மனுசன் ! ஒரு பெண்ணுக்குத் தகப்பன். இதை தூக்கிக்கிட்டு வந்தீயே ! ‘ என்று கேலி பேசுவார்கள். அவமானமாக இருக்கும். கூனிக் குறுகி வெளியேறவேண்டும். ரத்தம் சுண்டும்!

கோடீஸ்வர வீட்டுப் பெண்கூட இப்படி சொல்ல மாட்டாள். வீட்டோடு வரும் மாப்பிள்ளை விலை கொடுத்து வாங்ககும் மாப்பிள்ளை கூட இதற்கு சம்மதிக்க மாட்டான்.

லட்சுமி சொல்வதுகூட நியாமம்தான். வாதம் சரிதான். ஆணும் பெண்ணும் சமத்துவமாகிவிட்ட பிறகு ஏனிப்படி செய்யக்கூடாது. .? ! – இந்த நியாய அசட்டுத் துணிச்சலில்தானே நடக்கிறோம். .!?

நினைத்துப் பார்த்தார் வெங்கடசுப்ரமணியம்.

லட்சுமியை பெண் பார்த்துவிட்டு மாப்பிள்ளை, மாப்பிள்ளை குடும்பம் போய் ஒரு மணி நேரம் கூட ஆகி இருக்காது.

” அப்பா. .. ! ” மகள் அழைத்தாள்.

எதிரில் போய் நின்று. .” என்னம்மா. ..? ” கேட்டார்.

” மாப்பிள்ளை வீட்ல என்ன முடிவு சொல்லி போனாங்க. .? ” கேட்டாள்.

இவள் கேட்க வேண்டிய கேள்விதான். தாய் இருந்தால் அவள் கேட்பாள். இல்லை. !! இவள்தானே கேட்க வேண்டும் ?! – நினைத்த இவர். ..

” போய் சேதி சொல்றோம்ன்னு சொல்லிப் போனாங்கம்மா. .! ” என்றார்.

” எப்போ சேதி சொல்வாங்க. .? ”

” தெரியாது ! ”

” மாப்பிள்ளைக்குப் பெண்ணைப் பிடிச்சிருக்கா. .? ”

” மாப்பிள்ளை முகத்தில் இருந்த திருப்தி, முகக் களையைப் பார்த்தால் பிடிச்சிருக்கிற மாதிரிதான் தோணுது. பிடிக்கலைன்னா வரதட்சணை, சீர்வரிசையைப் பத்தி வாயைத் திறந்திருப்பார்களா. .? அதனால புள்ளையைப் பெத்தவங்களுக்கும் உன்னைப் பிடிச்சிருக்கிற மாதிரிதான் தோணுது.” சொன்னார்.

” அப்படின்னா…. அவுங்க மொத்தத்துக்கும் என்னைப் பிடிச்சிருக்கு. நீங்க செய்யிறதும் பிடிச்சிருக்கு. கலியாணத்தை எப்போ வைச்சிக்கிறதுன்னு கேட்டிருக்க வேண்டியதுதானே ! அதென்ன. … வீட்ல போய் முடிவைச் சொல்றோம்ன்னு ஒரு இக்கு தொக்கு. .? ”

” அப்படி சட்டுப்புட்டுன்னு முடிவு எடுத்திட முடியுமா. ..? வீட்ல போய் நல்லவங்க, பெரியவங்க எல்லோரையும் கலந்துதான் முடிவெடுக்க முடியும். ..? ”

” உங்களுக்கு இந்த சம்பந்தம் பிடிச்சிருக்காப்பா. .? ”

” கண் நிறைஞ்ச மாப்பிள்ளை. கை நிறைய சம்பளம். பிடிக்காமலிருக்குமா. .? ! ” என்று கூறியவர்……….. ” ஏம்மா. .! உனக்கு மாப்பிள்ளையைப் பிடிச்சிருக்கா. ..? ” கேட்டார்.

” பிடிச்சிருக்கு. .! ”

” கவலைப்படாதே ! திருமணத்தை ஜாம் ஜாம்ன்னு முடிச்சுடுறேன் ! ” குதூகலமாய் சொன்னார்.

” அவசரப்படாதீங்கப்பா. அதுக்கு முன்னாடி ஒரு சின்ன காரியம் ! ” சொன்னாள்.

” என்னம்மா. ..? ”

” மாப்பிள்ளை வீட்டுக்காரங்க நம்ம வீட்டுக்கு வந்து போனது மாதிரி நாமளும் அவுங்க வீட்டுக்கு ஒருதரம் போய் வரணும்ப்பா. ”

” என்னம்மா சொல்றே. .?! ” இவர் புரியாமல் மகளைப் பார்த்தார்.

” ஆமாப்பா. மாப்பிள்ளை எப்படி அம்மா, அப்பா, அண்ணன், தங்கச்சியோட என்னைப் பெண் பார்த்துட்டுப் போனாரோ. .. அது போல நாமும்… நீங்க, நான், இன்னும் ரெண்டு பெரிய மனுசங்களோட மாப்பிள்ளைப் பார்க்கப் போகணும்ப்பா. .! ”

” என்னம்மா இது ? ! ” விசயம் புரிந்து அதிர்ந்து அலறினார் வெங்கடசுப்ரமணியம்.

” ஏன்ப்பா! இதுல என்ன தப்பு. .? ”

” தப்பில்லே ! ஆனா. . இது மாதிரி….. பெண், மாப்பிள்ளையைப் பார்க்கப் போறது வழக்கமில்லையேம்மா. .! ”

” வழக்கமில்லேன்னா என்ன. வழக்கப்படுத்திக்கிறோம் ! ”

” அது. .. அது. …”

” மாப்பிள்ளை… பெண்ணையும், பெண் வீட்டையும் பார்த்துத் திருப்திப்பட்டு முடிவெடுக்கிறது போல… பெண்ணும், தான் வாழப்போற வீட்டையும், எதிர்கால கணவரையும், அவர் சார்ந்த மக்களையும் பார்த்து முடிவெடுக்கிறதுல என்னப்பா தப்பு. .? ”

லட்சுமி பேச்சு அவருக்குப் புரிந்தது.

” வாதத்திற்கு இது என்னமோ சரியாத்தானிருக்கும். ஆனா. .. இது மாதிரி யாரும் செய்யறதில்லை. ! ” என்று இழுத்தார்.

” இது நியாயமா இருந்தாலும் பிள்ளையைப் பெத்த யாரும் இதுக்குச் சம்மதிக்கமாட்டாங்க. ” சொன்னார்.

” ஒத்துக்கணும் ! மத்தவங்களை மதிக்கணும். நாம போய் பெண் பார்த்துட்டு வந்தது மாதிரி பெண்ணும் ஏன் நம்பளைப் பார்க்க வரக்கூடாதுன்னு நினைக்கணும். அப்பா ! பெண் அடிமையாய் இருந்தவரைக்கும் ஆண் வர்க்கம் அப்படி நடந்துக்கிட்டாங்க. இப்போ. .. பெண் அப்படி இல்லே. சரி சமம் ஆகிட்டாள். எதையும் முடிவெடுக்கும் திறமைக்கும் வந்து விட்டாள். சுதந்திரப் பறவையாகி எல்லாம் தெரிந்து விழிச்சுக்கிட்டாள், விழிப்பாய் இருக்கிறாள். இது அவுங்களுக்குத் தெரியணும். தெரியலைன்னாலும் தெரியப்படுத்தனும், புரிய வைக்கணும். ”

” இதெல்லாம் மேடைப்பேச்சுக்குச் சாத்தியமாகும், நடைமுறைக்கு ஒத்து வராது ! ”

” ஏன். ..??…”

” ஆயிரம்தான் பெண்கள் சமத்துவம் பேசினாலும் ஆண் என்கிறவன் ஒரு படி மேல்தான் ! ”

” ஓகோ ! அந்த ஆணவத்திலதான் பத்து இடங்களில் பெண்ணைப்பார்க்கிறதும். .. அப்புறம் பிடித்த இடத்தில் திருமணம் செய்துக்கிறதும் நடக்குது. இனி அப்படி நடக்கக் கூடாது. இந்த பழக்கத்தை மாத்தனும். ! ”

” இதெல்லாம் சாத்தியமாம்மா. .? ” தழைந்தார்.

” சாத்தியமோ, சாத்தியமில்லையோ. .. இது என் விருப்பம் ! ” லட்சுமி அடித்துச் சொன்னாள்.

” இது விருப்பமில்லை லட்சுமி. போட்டி ! நீ அப்படியா. .. நானும் அப்படி என்கிற வீராப்பு, எதிர்வாதம், செய்கை. ” எடுத்துச் சொன்னார்.

” இது போட்டி, பொறாமை, எதிர்வாதம், செய்கை இல்லேப்பா. பெண் தன்மானம்.! மறைந்து கிடக்கிற உரிமை. !! அப்பா ! வீட்டுக்கு வந்து வடை, சொஜ்ஜி, பஜ்ஜி தின்னுட்டு, பெண்ணைப் பார்த்திட்டு, மாடு தரகு பண்ற மாதிரி வரதட்சணை, சீர்வரிசை பேர்ல விலையும் பேசிட்டு. .. முடிவைச் சொல்லாமல் போய் சேதி சொல்றோம்ன்னு சொல்லிட்டுப் போறது எந்த விதத்துல நியாயம். .? இங்கே என்ன ஆணாதிக்கம். .? தான் பெரியவங்க, பெரியவன் என்கிற நினைப்பு. .? இதை உடைக்கணும். ! மாப்பிள்ளை வீட்டுலேர்ந்து என்ன சேதி வரப்போகுதோ. ..பெண்ணைப்பெத்தவங்களுக்கும் , பெண்ணுக்கும் கொடுக்கிற தவிப்பை மாப்பிள்ளை வீட்டுக்கும் நாம தெரியப்படுத்தனும்.! ” சொன்னாள்.

” நீ சொல்றதெல்லாம் நியாயம் லட்சுமி. ஆனா. …”

” அப்பா ! ஆயிரம் சமாதானம் சொல்லி என் வாயை அடைக்காதீங்க. என்னால இப்படி அடிமையாய், ஒரு பக்க நியாயமாய் இந்த திருமணத்துக்கு ஒத்துக்க முடியாது. நான் இதுக்கு சம்மதிக்கவும் மாட்டேன். எனக்குத் திருமணம்ன்னா இப்படித்தான் நடக்கணும். நாமும் போய் பார்க்கணும். அப்போதுதான். .. பெண்ணைப் பெத்தவங்க அடிமை இல்லே. பெண்ணானவளும் இந்த வீட்டிற்கு அடிமையாய் வாழ வரலே என்பது அவுங்களுக்கு புரியும் .! ” சொன்னாள்.

‘ இப்படி தன் முடிவு, விருப்பத்தை தெள்ளத் தெளிவாய் சொல்லும்போது. .. எதிர்த்துப் பேசி என்ன பயன். .?! வீண் மனக்கசப்பு, வருத்தம். இதற்கு. ..இந்த பெண் நியாயத்தை அப்படியே தெரியப்படுத்தினால் விளைவு தெரிந்து கொள்ளலாம் ! ‘ நினைத்து முடிவுக்கு வந்த வெங்கடசுப்ரமணியம்……

” சரிம்மா. ..! ” தலையாட்டிவிட்டு புறப்பட்டு விட்டார்.

ஆனாலும் மனசுக்குள் திக் ! திக் ! தவிப்பு, தடுமாற்றம். !

வாசலில் படியேறும்போதே. … வீட்டினுள் மாப்பிள்ளை சேகர், அவன், அப்பா, அம்மா. ..மூவரும் கூடத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள்.

இவர் தலையைக் கண்டதும். …

” வாங்க சம்பந்தி ! ” கலியாணசுந்தரம் வரவேற்றார்.

சேகரும் தன் பங்கிற்கு… ” வாங்க மாமா ” வரவேற்றான்.

” அண்ணா ! காபி ! ” பங்கஜம் எழுந்தாள்.

” பரவாயில்லே. அப்புறமா சாப்பிடுறேனம்மா. அதுக்கு முன் ஒரு சின்ன சேதி. ..!”

” சொல்லுங்க சம்பந்தி ! ”

” நீ. … நீங்க வந்து பார்த்துட்டு வந்தாப்போல என் பொண்ணும் மாப்பிள்ளை வீடு பார்க்கணும்ன்னு ஆசைப்படுறாள். .” தட்டுத் தடுமாறி விசயத்தைச் சொல்லி அவர்களை ஏறிட்டார்.

அனைவரின் முகங்களிலும் லேசான அதிர்வு, அதிர்ச்சி.

ஆனால் அடுத்த வினாடி. ..

” அதுக்கு என்ன மாமா. தாராளமா வாங்க. வந்துட்டுப் போங்க. ” சேகர் மலர்ந்து சொன்னான்.

” நிஜமாவா சொல்றீங்க. .? ! ”

” கவலையே வேணாம். உங்க பொண்ணு எங்களுக்கு காபி கொடுத்த மாதிரி நானும் கொடுக்கிறேன். கவலையை விடுங்க. ”

” மாப்பிள்ளை. .!! ”

” அட விடுங்க சம்பந்தி ! இதை பத்திதான் நாங்க பேசிக்கிட்டேருந்தோம். உங்களை எப்படி அழைக்கிறதுன்னு யோசிச்சுக்கிட்டிருந்தோம். தாராளமா உங்க பொண்ணை மாப்பிள்ளை பார்க்க எப்போ வேணுமின்னாலும் அழைச்சு வாங்க.” மலர்ச்சியாய் சொன்னார் கலியாணசுந்தரம்.

” ஆமாம்ண்ணே! நடைமுறையை மாத்தணும்ன்னு எங்களுக்கும் ஆசை. சீக்கிரம் பொண்ணை அழைச்சு வாங்க ” பங்கஜமும் தன் பங்கிற்குச் சொன்னாள்.

வெங்கடசுப்ரமணியத்தால் தன் காதுகளை நம்ப முடியவில்லை.

” இந்த விசயத்தை நீங்களே என் பொண்ணு காதுல போட்டு முடிவு பண்ணுங்க. .. ” சொல்லி தன் கைபேசியை எடுத்து லட்சுமியின் எண்களை அழுத்தி காதில் வைத்தார்.

”என்னப்பா.? .” – லட்சுமி.

” சம்பந்தி வீட்ல பேசணுமாம் ” சொல்லி கைபேசியை கலியாணசுந்தரத்திடம் நீட்டினார்.

அவர் வாங்கி….

” சேகர் ! விசயத்தை நீயே சொல்லு, கேளுப்பா. .” மகனிடம் நீட்டினார்.

அவன் வாங்கி. .காதில் வைத்து. …

” லட்சுமி ! உன் அப்பா வந்து சேதி சொன்னார். எப்போ மாப்பிள்ளை வீடு பார்க்க வர்றே. .? ” குதூகலமாய் கேட்டான்.

” தேவை இல்லே ! ” இவள் கராறாக பதில் சொன்னாள்.

” ஏன். …???..”

” உங்க மனசு புரிஞ்சு போச்சு. அப்புறம் எதுக்கு வீண் மதிப்பு மரியாதை ! தேதி மட்டும் சொல்லி அப்பாவை அனுப்புங்க. ” சொன்னாள்.

” சரி !” சேகர் மலர்ச்சியாய் கைபேசியை அணைத்தான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *