மாப்பிள்ளைச் சோறு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 12, 2019
பார்வையிட்டோர்: 7,094 
 
 

(இதற்கு முந்தைய ‘இசக்கியின் கல்யாணம்’ சிறுகதையைப் படித்து விட்டு, இதைப் படித்தால் புரிதல் எளிது)

ஏற்கனவே இசக்கி ஒரு சாப்பாட்டுப் பிரியன். அதுவும் ஒரு புது மாப்பிள்ளையாக ‘மாப்பிள்ளைச் சோறு’ சாப்பிட இலஞ்சி வந்ததும் அவன் தினமும் ஏராளமாகத் தின்று தீர்த்தான்.

புதுமனைவி கோமதி அவன் குறிப்பறிந்து நடந்து கொண்டாள். அவள் காட்டிய வாஞ்சையும், மரியாதையும் இசக்கியை அசர வைத்தன.

காலையில் படுக்கையைவிட்டு எந்திரிச்சதும் ரெண்டு நாட்டுக் கோழி முட்டையை உடைத்து ரெண்டு சின்னச் சொம்பில் தனித்தனியாக வைத்திருப்பார்கள். ரெண்டு மஞ்சள் கருவும் எண்ணையில் கிடக்கிற தங்கரசக் குண்டு போல தக தகன்னு மின்னியபடி கெடக்கும்.

அந்த ரெண்டையும் அப்படியே தூக்கி வாயில் போட்டு முழுங்கிட வேண்டியதுதான். முட்டையை உடைக்கிற சின்ன வேலைகூடக் கெடையாது இசக்கிக்கு. வீட்டு மாப்பிள்ளையாச்சே…! ஆச்சா… முட்டையைக் குடித்த கையோடு பெரிய சொம்பு நெறைய அப்பத்தான் கறந்து காச்சின பசும்பால். முட்டை சாப்பிட்டால் ஒவ்வொரு சமயத்தில சூட்டைக் கிளப்பி விட்டுடுமே… அதுக்குத்தான் பால்.

அப்புறம் இசக்கி பல் தேச்சு, மோட்டார் தண்ணியில நல்லா அரைமணி நேரம் குளிச்சி, வேட்டி கட்டி வந்து உக்காந்தா இட்லி, கொத்துக்கறி அப்படி இல்லேன்னா இட்லியும் ஈரலும். அதுவும் இல்லேன்னா சாப்சுகறி. இப்படி ஏதாவது ஒரு பலகாரம்… தொட்டுக்க மட்டும் கறிதான். சட்னி, சாம்பார் எப்போதுமே கிடையாது. அப்படியொரு பழக்கம் அங்கெல்லாம். யார் வீட்டிலாவது மாப்பிள்ளைக்கு இட்லிக்கு தொட்டுக்கொள்ள சைவமாய் வைத்தார்கள் என்றால் பாளையங்கோட்டைக்காரர்கள் கால் துட்டுக்கு மதிக்க மாட்டார்கள் சாம்பார், சட்னி என்றால் அவ்வளவு இளப்பம்.

சரி, காலைப் பலகாரம் ஒருவழியா ஆச்சு. மாப்ளை கொஞ்சநேரம் ரெஸ்ட் எடுத்துப்பார். பத்து மணிக்கு பச்சை மிளகா; கறிவேப்பிலை; உப்பு, இஞ்சி; கொஞ்சம் பெருங்காயம் எல்லாம் போட்ட நீர்மோர் பெரிய சொம்பு நெறய ஜில்லுன்னு வரும். ஒரு சொட்டு விடாமே மாப்ளை அந்த நீர்மோரைக் குடித்து வைப்பார். அப்புறம் ரெண்டு வெள்ளரிப் பிஞ்சி, கொய்யாப்பழம்; பப்பாளி இப்படி ஏதாவது வரும்.

மத்யானம் ஒருமணிக்கு முழுச் சாப்பாடு. தட்டில் நிறைய சோத்தைப் போட்டு மூளைக் கொழம்பு இல்லேன்னா மீன் கொழம்பு ஊத்தி ஊத்தி மாப்ளை ஒரு விளாசு விளாச வேண்டியதுதான். ஆனா மீன் கொழம்போடு போயிடாது. அவிச்ச முட்டை; கறிவத்தல்; இல்லேன்னா கறிக்கோலா உருண்டை. வாய்ல எடுத்துப் போட்டா அப்படியே கரைஞ்சி கரைஞ்சி ஓடும்.! இப்ப கொழம்புச் சோறு முடிஞ்சது. இனிமே ரசச் சோறு. அதுவும் கோழி ரசச்சோறு. அதுக்குத் தொட்டுக்க நல்லா அடை ஊத்தின முட்டை. இதுக்கும்மேலே கட்டியான தயிர் சோறு. அதுல கலந்து சாப்பிடறதுக்குன்னே சுண்டல் மாதிரி நல்லா கிண்டி எடுத்த ஆட்டு ரத்தம். இவ்வளவையும் சாப்பிட்டு கடைசியில் மலை வாழைப்பழம் ஒண்ணை எடுத்து முழுங்கிட்டு எந்திரிச்சா எந்திரிக்கவா முடியும் மாப்ளையால..?

கையைத் தொடச்சிகிட்டு போய் நாற்காலியில் உக்காந்தா வெத்தலைப் பாக்கு, வாசனைச் சுண்ணாம்பு… மாப்ளை வாயைத் தெறந்தா காக்காதான் கொத்தும். மாமனார் அப்படியும் விடமாட்டார் மாப்ளையை.

“சோடா ஒண்ணு குடிச்சிருங்க மாப்ளை, இல்லேன்னா ஏப்பம் ஏப்பமா வந்துகிட்டு இருக்கும்” என்று சொல்லி ‘தமிழ்மணி’ சோடா ஒண்ணை எடுத்து உடைத்துக் கொடுப்பார்.

இதெல்லாம் முடியும்போதே மணி ரெண்டாகி விடும். மாப்ளை கொஞ்சநேரம் அசந்து தூங்கிட்டு எந்திருப்பார். மணி அஞ்சாகிவிடும். சாயந்திரப் பலகாரம் ரெடியாகிவிடும். இந்தச் சாயந்திரப் பலகாரத்தில் மட்டும் மாற்றம் இருக்காது. திருப்பித் திருப்பி உளுந்துவடை, இல்லேன்னா உளுந்துச் சுண்டல். ஏன்னா உளுந்து ஒடம்புக்கு அவ்வளவு கொடுத்தா, பலத்தில் நீயா நானான்னு கேக்குமாம் மாப்ளை ஒடம்பு. கலவியில் ஈடுபடும்போது விடிய விடிய அஞ்சுதரம், ஆறுதரம்னு அலுக்காம கொள்ளாம ஒடம்பு வஜ்ரம் மாதிரி அது பாட்டுக்கு இருக்குமாம். அதான் புதுசா கல்யாணமான பொம்பளைப் புள்ளைங்க பொழுது விடிஞ்சி எந்திரிச்சி வரும்போது பொங்கின பால் மாதிரி பாக்கிறதுக்குத் தெரிவாகளாம்…!

அப்புறம் ராத்திரி எட்டு மணிக்கு கொஞ்சம் வேற மாதிரியான சாப்பாடு. முட்டைப் பரோட்டா இல்லேன்னா பரோட்டா சால்னா… அரைவேக்காட்டு முட்டையில் லேசா மிளகுத்தூள் போட்டு. இதுக்கு அப்புறம் பால்சோறு, தேங்காத் துவையல், கொத்தமல்லித் துவையல். சில சமயம் காடை, கெளதாரி கிடைத்தால் இட்லி. இட்லிக்கு காடைக்கறி கண்ணே கண்ணேன்னு இருக்கும். காடையும், கெளதாரியும் ஒருத்தன் சாப்பிட்டு ருசி பாத்திட்டான்னா வாழ்க்கையில் வேற ஒரு கறியைத் தொடமாட்டான்!

இசக்கிக்கும் இந்த மாதிரித்தான் மாப்பிள்ளைச் சோறு இலஞ்சியில் மூணு மாசத்துக்கு நடந்தது. மாமனார் அவனை ஆறு மாசத்துக்கு அப்படிச் சாப்பிட வற்புறுத்தினார். அவன்தான் முடியாது, தோதுப்படாது என்று சொல்லிவிட்டான். இசக்கிக்கு கடைச் சோலி ஏகத்துக்கும் இருக்கே! அப்புறம் வியாபாரம் என்ன ஆவது?

விருந்து முடிக்க நல்ல நாள் பார்த்தார்கள். பூரணி, இசக்கியையும் கோமதியையும் பாளையங்கோட்டைக்கு கூட்டிச்செல்ல ஆவுடையப்பனையும் அவர் மனவியையும் ஏற்பாடு செய்திருந்தாள். இதற்கு நடுவில், இசக்கியின் மாமியாருக்கு ஒன்பதாவது பிள்ளை சுகப்பிரசவத்தில் பிறந்தது. இசக்கிக்கு இன்னொரு சின்ன மச்சான்.

“கஜக்கோல் பாண்டியனா இருப்பாரு போலிருக்கு இசக்கியோட மாமனார்.”

“அதுசரி, மாமனார் எட்டடி பாஞ்சார்ன்னா மாப்ளை பதினாறடி பாயாம இருப்பாரா?”

“இந்நேரமே பாஞ்சிருப்பார்.”

புதுமணத் தம்பதிகளை அழைத்துப்போக ஆவுடையப்பன் தன் மனைவியுடன் இலஞ்சிக்கு வந்தார். அங்கு ஏற்கனவே எல்லா சீர் வரிசைச் சாமான்களும் தயாராகக் கட்டி வைத்திருந்தார்கள். இலஞ்சி சனம் பூராவுமே இசக்கியின் மாமியார் வீட்டில்தான் கூடிக் கிடந்தது.

கோமதியின் மாமன் பெஞ்சாதி, கோமதிக்கு திருஷ்டி நெட்டி முறித்து விட்டு, “ராசாத்தி கிளம்பிப்போற நேரத்துக்கு சட்டுப் புட்டுன்னு புள்ளை உண்டாகி புள்ளையை பெத்துக்க பொறந்த ஊரு வந்துசேரு” என்றாள். அவ்வளவுதான், அத்தனை நேரம் அழுகையை அடக்கி வைத்துக் கொண்டிருந்த கோமதி ‘ஓ’ன்னு சத்தம்போட்டு ஒப்பாரியே வைக்க ஆரம்பித்துவிட்டாள். காலம் காலமாக எது எப்படி மாறிப் போனாலும் இது மட்டும் மாறவே காணோம். பொம்பளைப் பிள்ளைகள் பொறந்த அன்னிக்கே தலையில் எழுதப்பட்டு விட்ட விசயம் இது. அவர்களும் எப்படா கல்யாணமாகி புருசன் வீட்டுக்குப் போவோம்னு காத்திட்டு நிற்பார்கள். எத்தனைதான் செல்லமாக வளர்ந்தாலும் பிறந்தவீடு அவர்களுக்கு வீடு கிடையாது. ஆனால் கல்யாணமாகி புருசன் வீட்டுக்குப் போகிற நிமிசம் மனசு கலகலத்துப் போய்விடும். எல்லாரையும் விட்டுவிட்டு ஏதோ கண்காணாத தேசத்துக்குப் போகிற மாதிரி அழுகை அது பாட்டுக்கு பொத்துகிட்டு வரும். பிறந்த வீட்டுக் கன்றுக்குட்டியிடமும் வேப்ப மரத்திடமும் கூடச் சொல்லி விட்டுப் போக வேண்டும் என்கிற மாதிரி மனம் பதைதைக்கும்.

ஆச்சி, எல்லா சாமானும் நல்லா கட்டி ஸ்டேஷன் ப்ளாட்பாரத்துக்கு வந்தாச்சி. பாசஞ்சர் ரயில் ஐம்பது நிமிடங்கள் லேட். புதுப் பெண்ணும், மாப்பிள்ளையும் ஸ்டேஷன் மாஸ்டர் அறையில் உட்கார வைக்கப் பட்டிருந்தார்கள். சொந்தக்காரர்களின் கூட்டம் ஸ்டேஷன் பூராவும் நிறைந்து விட்டது. கோமதியின் கண்கள் அழுது அழுது சிவந்து கிடந்தன.

“என்னத்துக்கு அழுவுற பாப்பா… இந்தா இருக்கு ஊரு. மாப்ளை கொல்லத்துக்குப் போகும்போதும் வரும்போதும் அவர் கூட இங்கன வரலாமே..”

“மாப்ளே கோமதியை நல்லாப் பாத்துக்குங்க. பொம்பளைப் பிள்ளைகளுக்கு கொஞ்ச நாளைக்கி தாய் வீடு ஒலகம் இருந்துகிட்டேதேன் இருக்கும். நீங்கதேன் பொறுத்துப் போவணும். திடீர்ன்னு எங்கம்மாவைப் பாக்கணும் போலயிருக்குன்னு சொல்லிப் பொருமுங்கள் பாத்துக்குங்க.”

“கவலையே படாதீங்க மாமா, நான் நல்லா பாத்துக்கிறேன் கோமதியை…”

“அம்மா வீட்டுக்குப் போகணும், போகணும்னு நச்சரிப்பாளுங்க… கொண்டாந்து விட்டீங்கன்னா ரெண்டு நாளக்கி மேல இருப்புக் கொள்ளது. பெட்டியைத் தூக்கிட்டு போறேன்னு சொல்லிட்டு கிளம்புவாளுங்க..”

“ரயில் வருது, சாமானைத் தூக்குங்க..” திடீரென எல்லோரும் பரபரத்தார்கள்.

ரெண்டு நிமிசம் நிற்க வேண்டிய ரயில் பத்து நிமிசம் நின்றது. பிறகு ஆசுவாசமாக கிளம்பியது. பாளை வீட்டின் முன்பு தம்பதிகளை நிற்க வைத்து ஆரத்தி எடுத்து, ரெண்டு பேருக்கும் பொட்டு வைத்து வலது காலை எடுத்துவைத்து உள்ளே வரச்சொன்னார்கள். பூரணிக்கு வாழ்க்கையில் தான் பூரணமடைந்து விட்டதாகத் தோன்றியது. ஒரேயொரு ஆம்பிள்ளைப் புள்ளையை தனியாய் நின்னு வளர்த்து அவனை வியாபாரம் செய்யவைத்து, வீட்டைக் கட்டிப் பெரிசாக்கி, மகனுக்குப் பெரிய இடத்ல பெண் பாத்து கல்யாணம் செஞ்சிவைத்து பெருமையா தலை நிமிர்ந்து வாழறதைப் பாக்க தன் புருசன் இல்லாமல் போய்விட்டாரே என்று நினைத்தபோது பூரணிக்கு அழுகை பொத்துக்கொண்டு வந்தது. கொஞ்சநேரம் புலம்பி ஒப்பாரி வைத்தாள். மகனும், மருமகளும் அவளுக்கு ஆறுதல் கூறினார்.

பாளையில் புது மாப்பிள்ளையையும், புதுப் பெண்ணையும் பார்க்க நெறைய பேர் வீட்டிற்கு வந்தார்கள். ஆகையால் ஒருவாரத்துக்கு இசக்கி எங்கேயும் வெளியே போகாமல் இருந்தான். இடையில் ஒருதரம் கோமதியை பாளை அசோக் டாக்கீஸ் அழைத்துச் சென்றான். கோமதி இசக்கியிடம் சொல்லி புது மாதிரியான ‘பாடி’ வாங்கிக் கொண்டாள். அம்மாவையும், மனைவியையும் அழைத்துக்கொண்டு வாடகை ப்ளசர் காரில் மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கும், அழகர் கோயிலுக்கும் கூட்டிச் சென்றான்.

அவ்வளவுதான்… இனி வியாபாரத்தைப் பாக்க வேண்டியதுதான். தலைக்கு மேல் சோலி கெடக்கே. இசக்கி எப்பவும்போல வாராவாரம் கொல்லம் போய்வர ஆரம்பித்துவிட்டான். ஒவ்வொரு முறையும் திரும்பி வரும்போது இசக்கியின் மச்சான்கள் தென்காசி ஸ்டேஷனில் வந்து சந்தித்துச் செல்வார்கள். சில சமயம் மாமனார் அவனைப் பார்க்க ஸ்டேஷன் வந்தால் இசக்கி மரியாதையுடன் கீழே இறங்கி நின்றுகொண்டு அவரிடம் பேசுவான். அவனைப் பார்க்க யாரும் கையை வீசிக்கொண்டு வரமாட்டார்கள். எள்ளுருண்டை; அதிரசம்; முறுக்கு; பணியாரம்; ரெண்டு நாளைக்கு வைத்துச் சாப்பிட மீன் கொழம்பு; கருவாடு; தோட்டத்தில் விளைந்த பச்சைக் காய்கறிகள்; தேங்காய்கள் என கொண்டுவந்து தருவார்கள்.

அவன் திரும்பி வரும்போது கோமதி ஆவலுடன் அவனை எதிர்கொள்வாள். அம்மா வீட்டிலிருந்து வகை வகையா பண்டம் வருதே!. பொறந்த வீட்டிலிருந்து ஒரு சீப்பு கதலிப் பழம் வந்தாலே, பொம்பளைப் பிள்ளைங்களுக்குக் கால் தரையில் படாது. கோமதிக்கும் அப்படியே வானத்ல ரெக்கையை கட்டிகிட்டு பறக்கிற மாதிரி இருக்கும். இங்க என்னடான்னா சட்டி நெறைய ‘ஐயிர மீன்’ மூக்கைத் தொளைக்கிற வாசனையோடு வருது… ஆனா மனசைத் தொடற மாதிரியான ஒரே விசயம், ருசி எப்படி இருக்குன்னு பாக்கலாம்னுகூட எதையும் எடுத்து வாயில் போட்டுக்கிட மாட்டா கோமதி.! எல்லாமே புருசனுக்குத்தான்.! பாத்து பாத்து இசக்கிக்குத்தான் எடுத்து வைப்பாள்.

அப்புறம் மாமியாரை விழுந்து விழுந்து கவனிப்பாள். பூரணியும் கோமதியும் மிகவும் அன்னியோன்னியமாக இருந்தனர். மருமகளின் குணத்தை பாத்துப் பாத்து பூரணிக்கு உச்சி குளிர்ந்து போய்விட்டது. என்னிக்கி கோமதி, பூரணியோட மச்சி வீட்டுக்குள்ள காலை எடுத்து வெச்சாளோ அன்னைக்கில இருந்து இசக்கியோட வியாபாரம் பயங்கர தடபுடலா நடக்க ஆரம்பித்துவிட்டது.

பாத்தான் இசக்கி, உடனே ஒரு போனுக்கு அப்ளை பண்ணிவிட்டான். கொஞ்ச நாளில் இசக்கியின் வீட்டுக்கு ஒரு டெலிபோன் அலாட் ஆனது. பூரணிக்கும், கோமதிக்கும் பெருமை பிடிபடவில்லை.

தெருவிலேயே இசக்கியின் வீட்டில்தான் போன் அடிக்கிற சப்தம் கேட்கும் அந்தக் காலத்தில் இது பெரிய விசயம். இசக்கியின் போன் பேச்சும் எல்லோருடைய வீட்டுக்கும் அச்சாகக் கேக்கும். அவன்தான் எட்டு ஊருக்கு கேட்கிற மாதிரி கத்திப் பேசுகிறானே.! போன் வந்த புதிதில் அவனுக்கு தலைகால் புரியவில்லை. அசோக் டாக்கீஸுக்கு போன் செய்து சாயந்திர ஆட்டம் சினிமா எத்தனை மணிக்கு என்று கேட்பான். கோமதியின் அண்ணன்களும் லேசுப்பட்டவன்கள் இல்லை. சைக்கிளை எடுத்துக்கொண்டு தென்காசி போய் ஒரு மரக்கடையில் இருந்து தொண்டைத் தண்ணீர் வத்திப் போகிற மாதிரி அந்தக் கத்து கத்திப் பேசுவார்கள். பதிலுக்கு இசக்கி இங்கிருந்து கத்த, ரெண்டு பக்கமும் அவர்கள் கத்துகிற கத்தைப் பார்த்தால் போனே தேவை கிடையாது என்பது போலத்தான் இருக்கும். இவர்களுக்கு நடுவே கோமதி வேறு. இத்தனைக்கும் அப்பவே பேசித் தீர்க்க வேண்டிய எந்தத் தலை போகிற சேதியும் அவர்கள் பேச்சில் இருக்காது. ஆனாலும் விடாது உப்புச் சப்பில்லாமல் பேசிக்கொண்டிருப்பார்கள். இதுக்குத்தான் அத்தனை மெனக்கிட்டு ட்ரங்கால்.

“வாழ்வு வந்தா அதுக்காக இப்படியா..”

“மயிருள்ள மகராசன் என்னமோ பண்ணிட்டுப் போறான்…” என்று ஊர்க்காரர்கள் பேசினார்கள்.

ஆச்சி, இசக்கியின் கல்யாணம் முடிஞ்சி ரெண்டு வருசம் முழுசாக ஓடிவிட்டது. கோமதியும் மாசம் தவறாமல் முழுகிக் கொண்டிருந்தாள். பாளையில் இது ரொம்பப் பெரிய விசயம். கல்யாணமான பத்தாவது மாசம் ஒரு பிள்ளை பெற்றுவிட வேண்டும். இல்லாவிட்டால் போச்சி. ‘என்ன ஒண்ணையும் காணோம்’ என்பது போலப் பார்ப்பார்கள், பிறகு பேசுவார்கள். நேரில் பார்த்தே விசாரிப்பார்கள். அதற்குப் பிறகும் பிள்ளை உண்டாகாவிட்டால் ‘அவனுக்குப் போதாது’ என்பார்கள். அதன்பிறகு, ‘அந்தப் பயலுக்கு மாடு மிதித்து விட்டது’ என்று நக்கலாகப் பேசிச் சிரிப்பார்கள். ‘நீயெல்லாம் ஆம்புளைன்னு சொல்லிட்டு வந்துட்டே பாரு’ன்னு அப்புராணிப் பயலாக இருந்தால் மூஞ்சிக்கு நேராகவே சில பயல்கள் பேசி மனசை நோகடிப்பதும் உண்டு. இசக்கி விசயத்தில் அப்படி மூஞ்சிக்கு நேராக பேசிவிட முடியாது. பேசினால் உரித்து எடுத்து விடுவான். ஆனாலும் இசக்கியின் முதுகின் பின்னால் ‘வெத்து வேட்டுப் பயல்’ ன்னு பேச்சு கிளம்பிவிட்டது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *