மானுடம் வெல்லும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 16, 2024
பார்வையிட்டோர்: 267 
 
 

(1981ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சாப்பிட்டு முடித்த ராஜையா, வெத்தலைப் பையை எடுத்து. மடியில் வைத்துக் கொண்டான். 

பிள்ளைகள் சாப்பிட்டுக் கொண்டிருப்பதைக் கவனித்துக் கொண்டு, கடைக்குட்டியை மடியில் போட்டு தன் ரத்தத்தை பாலாக்கிக் கொண்டே கணவனிடம் கேட்டாள் முத்துமாலை. 

“வெளியே மழை பேயுதா?” 

“இன்னும் பேயத்தான் செய்யுது” 

இரண்டு மாதங்களுக்கு முன் இந்த மழைக்காக ரொம்ப ஏங்கினார்கள். வாகனத்தை அண்ணாந்து அண்ணாந்து பார்த் தார்கள். மேகங்களின் அசைவையும், காற்றின் போக்கையும் உன்னிப்பாகக் கவனித்தார்கள். 

பூமி மனிதக் கரங்களின் தழுவலையும், மேகத்தின் அபி ஷேகத்தையும் மிகவும் விரும்பியது பூமியின் விரகதாப வேதனை கண்டு, மேகங்கள் இரங்கி விட்டன மேகத்தின் கண்ணீர்! நாடெல்லாம் நீர்க்காடு; நாடே தண்ணீரில் மிதக்கிறது…. 

வருணபகவானின் அதிகப்படியான இரக்கம் மனிதர் களுக்கு அழிவு சக்தியாக மாற ஆரம்பித்து ‘இச்சிலாத்தி’ப் படுத்தியது, 

முத்துமாலைக்கு ரொம்ப ‘இச்சிலாத்தி’யாக இருந்தது. எப்போ பார்த்தாலும் சடசட; எங்கு மிதித்தாலும் நச நச;  ஒன்றரை மாசமாக ஒரு ஜேர்லி நடத்த முடியவில்லை. வேலை யில்லாமல் கூலியில்லாமல், எப்படி கஞ்சி குடிப்பது? மழைத் தண்ணி குடிச்சி பிழைச்சிருக்க முடியுமா? 

“என்ன இழவு கூட்டப் போகுதோ. இப்படி ஓய்வு ஒழிச் சல் இல்லாமெ பேயுது. மழை ‘விடேன் பிடி’ன்னு நாப் பது தாளா ‘சொருச்சொரு’ன்னு இடைவிடாமெ தண்ணியா ஊத்துதே. அன்னாடம் ஒழைச்சுக் கஞ்சி குடிக்கிற நம்ம மாதிரி ஜனங்க என்ன செய்யும்?… ம்ம்… வேலையுமில்லாமெ வெட்டியு மில்லாமே….வயிற்றிலே ஈரத் துணியையா, கட்டுறது?” 

“நாமெ கூலிக்காரங்கதான். இருக்கலே! செத்தா போனாம்?” 

“நாமாச்சும் ஒரு ஆட்டுக் குட்டி வைச்சிருந்தோம் ‘வித்த பணத்தை’ தின்னு, பொழுதை கழிக்கிறோம். இதுவும் இல்லாத ஜனங்க…. திங்கிற புள்ளைகளை வச்சிக்கிட்டு என்ன தவிப்பு தவிக்குங்க..ம்…” 

“இவா யாருடி, சுத்த விவரம் கெட்டவ, நாட்டு நடப்பு தெரியாமெ வருத்தப்படுதே வேலையில்லையேங்கிறதா, இப்ப கவலை? பேயிற பேய்மழையிலே உயிரைக் காப்பாத்துறதே பெரும் பாடாயிருக்கு, தெரியுமா? பெரிய பெரிய டவுன்களுக் குள்ளேயெல்லாம் இடுப்பளவு தண்ணி புகுந்து குடிசைகளெல் லாம் வெள்ளத்துலே மிதக்குது, ஒன்னு ரெண்டு இல்லே, லட்சக்கணக்கான குடிசைக தண்ணியிலே போயிடுச்சு நூத்துக் கணக்கிலே ஆளுக செத்துடிச்சு…” 

“ம் ச்சூ ச்சூ ச்சூம், மண்ணைக் குழைச்சு சுவரா வைச்சு, ஏதோ ஒரு இருப்பிடம்னு உக்காந்திருந்தா அதுலேயும் மண் ணைப் போடுதாக்கும், இந்த நாசமழை! இந்த மழைக்கு அப்படி யென்ன பேதியோ, அடியம்மா, நாபொறந்தாம் பொறப்புலே இப்புடி மழையை பார்த்ததேயில்லையம்மா.” 

“நம்ம திருவேங்கடத்து ஆத்துலே இன்னிக்கு ரெண்டு பொண்ணுக வெள்ளத்துலே போயிடுச்சாம்….” 

“என்னது? ரெண்டு பொண்ணுகளா? நம்ம திருவேங்கடம் ஆத்துலேயா? நெசந்தானா?” திடுக்கிடல் தெளிவாகத் தெரிந்தது. 

“பெறகென்ன பொய்யா சொல்லுறேன்?” 

”அங்கனே ரெண்டு ஆம்பளைக இல்லே?” 

“இருந்துதா, இறங்க வேண்டாம்னு சொல்லியிருக்காக. நெல்லுக்கு களையெடுக்க வந்தவக. திடுதிப்புன்னு வெள்ளம் ஏறியிடுச்சு. பாலத்துக்கு மேலே, கம்பி தெரியாமெ தண்ணி திமுதிமுன்னு வெறி பிடிச்ச வேகத்துலே போயிக்கு அங்க இருந்த ஆம்பளைக் கடத்தி விடுதோம்னு சொல்லியிருக்காங்க. 

“இதுக குமரிப் பொண்ணுக. ‘இக்கரையிலும் அக்கரை யிலும் மொளோர்னு ஆளுககூடி வேடிக்கைப் பார்க்கிறதுனாலே, ஆம்பளையை தொட்டுக்கிட்டு வௌத்துலே இறங்க கூச்சப்பட் டுக்கிட்டு, கடத்திவிட முன் வந்தவர்களையும் வேண்டாம்னுட் டாக. ஏழு பேரும் கையை கோர்ந்துக்கிட்டு தண்ணியிலே இறங்கியிருக்கிறாக. என்ன இருந்தாலும் பொம்பளைக தானே!’ 

“அடடா, பெறகு?” முத்துமாலையின் மனம் நிஜமாக துடித்தது. 

”பெறகென்ன, தொடையளவு தண்ணிக்கு போனவுடனே புள்ளைக பயந்துடுச்சு தண்ணி திமிங்கலம் போல சுழிச்சு இழுத் துருக்கு. வேகம்னா அப்படி வேகம். ஏழுபேரும் ஒன்னோ டொன்னு கட்டிப்பிடிச்சுக்கிட்டு அலறியிருக்குக, தண்ணி வேகமா இழுத்து உருட்டிப் புரட்டி யடிச்சிடுச்சு அதைப் பாத்து, ஆம்பளைக குதிச்சு. அடிச்சு இழுத்துட்டுப் போனதுலே அஞ்சு பேரை அரைஉசுரோட கரைசேத்துட்டாக. ரெண்டு பேரை தண்ணி கொண்டே போயிடுச்சு” 

“அய்யோ, பாதரவே (பரிதாபமே), அந்நேரம் அந்தப் புள்ளைக மனசு என்ன தவிப்பு தவிச்சதோ! எந்தப் புண்ணியவதி வவுத்துப் புள்ளைகளோ வம்பாடு பட்டு வளர்த்து, தண்ணிக்கு வாரிக்குடுத்துட்டு அந்தப் புண்ணியவதிக எத்தனை கோடி அழுகை அழுததுகளோ”. 

முத்துமாலை கண்ணில் நீர் வடிந்தது. சொந்த மகளை இழந்து விட்டதைப் போன்ற சோகத்தில் அவள் முகம் வாடி வெளுத்தது. உதடுகள் நடுங்கி அசைய அழுதுவிட்டாள். 

அவன் மனதுக்குள் சிரித்து கொண்டான். ‘பொம்பளைக பொசுக்குங்குன’ அழுதுடுறாகளே என வியந்து கொண்டான் இருப்பினும் பொதுவாக பெண்களுக்குள்ள இரக்க சுபாவத்தை யும், உயர்ந்த மனிதாபிமானத்தையும் நினைக்கும்போது, பிரமிப்பாகவே இருந்தது. 

வெளியே மழை இன்னும் பொசும்பிக் கொண்டுதானிருந் தது. இந்நேரத்துக்கு நாலு ‘பாட்டம்’ முரட்டடியாக அடித்து விட்டது. இன்னும்விட மனசில்லாமல் தூறுகிறது. வீதியில் கண்ணாடிச் சுத்தமாக தண்ணீர் ஓடியது அதில், மழைத் தூறல் விழும்போதெல்லாம், அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது போல ஒவ்வோர் ஊசியாக எழுந்து அடங்கியது. 

“மூணு வருஷமா காய்ஞ்சு கெடுத்தது. இப்ப பேய்ஞ்சு கெடுக்குது. நமக்கு மட்டும் இப்படி ஊர்களை கொள்ளை கொண்டு போக நாசமழை வந்து வாய்ச்சதாக்கும்?” 

முத்துமாலையின் துயரார்ந்த அங்கலாய்ப்பு. 

“இங்க மட்டுமல்ல முத்துமாலை. தமிழ்நாடு பூராவும் இதே மழைதான். எத்தனையோ கன்மாய்க உடைஞ்சு. கிராமங் களையே இழுத்துட்டுப்போயிடுச்சு. வெள்ளத்துலே பன்னிகளும், வெள்ளாடுகளும், கழுதைக் குட்டிகளும் செத்துமிதந்து வரு தாம். பரமக்குடி ஏரியா பூராவும் தண்ணி சூழ்ந்து, அவங் களையே தனித் தீவாக்கிடுச்சாம். பாவம் வீடிழந்ததுக! எத்தனையோ புள்ளை குட்டிகளை பறி கொடுத்து தவிக்கிறதுக எத்தனையோ” 

“அடக் கொடுமையே, உலகத்தை அழிக்கத்தான் இந்த மழை இப்படி ஊத்துது. பரமக்குடின்னா, நம்ம செல்லச்சாமி அண்ணாச்சி மகன் கூட்டம் கூட்டம்னு போவானே அந்த ஊரா? அது, கடலுக்கு அங்குட்டா இருக்கு?” 

“அங்குட்டு இல்லே. இங்கிட்டுதான் அதுவும் நம்ம மாவட்டம்தான்” 

“இப்படி பேயா மழை பெரு மழையா பேய்ஞ்சு கெடுக் குதே. நாமெல்லாம் என்னதான் செய்றதோ ! இந்த ஏற்கை (இயற்கை)யோட இன்னும் எத்தனை காலம் மல்லுக் கட்டணுமோ” 

என்ற முத்துமாலை ‘ஏதோவோர்’ நினைப்புடன் தமது வீட்டை அண்ணாந்து ஒரு சுற்று பார்த்தாள். கண்களில் ஒரு பிரகாசிப்பு. 

புது வீட்டின் மணம் இன்னும் போகவில்லை கதவில் தடவிய எண்ணெய், மேலே பனங்கட்டையில் பூசிய கீல் எண்ணெய் இவையின் மணம் இன்னும் புதுசு மங்காமல் வீசுகிறது. கூரை யில் மூடியிருந்த செங்கல் ஓடுகள் மழைத் தூறலை ‘கணங்கண’ வென்று எதிரொலித்தது. 

இந்த வீட்டைப் பார்க்கப் பார்க்க அவளுக்கு நெஞ்சம் பெருமையிலும் பூரிப்பிலும் விம்மியது. இனிய இசை கேட்ட பசுவின் மனசைப் போல லாகிரியில் மயங்கியது. 

வீடென்றால் இது சாதாரணமாக கல்லும் மண்ணும் கலந்து கட்டிய வீடா? இந்தக் குடும்பத்தின் ரத்தமும் சதையும் எலும்பு மாக சேர்த்து எழுப்பிய வீடல்லவா இது! 

இது அவளுக்கு ஒரு லட்சிய வெற்றி இப்படி வீடு கட்ட வேண்டுமென்று கொஞ்சமா கனவு கண்டாள்! ஒரு வருஷமா, ரெண்டு வருஷமா, பத்து வருஷகனவல்லவா!” 

கல்யாணம் முடிந்து ராஜையாவுடன் தம்மந் தட்டையால் வேய்ந்த சிறு குடிசைக்குள் நுழைந்தாள் மறு மாதம். 

ஆடி மாதக் காற்று சூறாவளியாக மாறி சுழன்றடித்ததில் அந்தக் கூரையின் கம்மந்தட்டையில் பாதிக்குமேல் அள்ளிச் சென்று விட்டது. வீடு ‘பெளாச்’ சென்று வாய் திறந்து விட்டது. 

சூரியனின் வெயில் பூராவும் வீட்டுக்குள்தான் ராஜையா ரொம்ப மனசு உடைந்து போனான். 

முத்துமாலையை பிடிக்காத ஒரு சில பெண்கள் இப்படி கிசுகிசுக்கத் தொடங்கினர். 

“எந்த நேரத்திலே இந்த ஓடு காலி நுழைஞ்சாளோ வீட்டைக் காத்து பறத்திட்டுப் போயிடுச்சு” 

அது, ‘இவளை ரொம்பப் பாதித்தது இரவுகளில் தனியே உட்கார்ந்து நீண்ட நேரம் விசும்பி விசும்பி யழுவாள் ராஜையா எத்தனை சமாதானம் சொன்னாலும். மனசு ஆறவில்லை நெருப்பாகத் தகித்தது. 

“இந்த முண்டச்சிக கண்ணுக்கு முன்னாலே நாமும் ஒரு பெரிய வீடு கட்டுனாத்தான் எம்மனசு ஆறும்” என்று அவமதிக்கப்பட்ட பாஞ்சாலியின் ஆவேசத்துடன் கூறினாள். 

அந்த ஆவேசமே கனவுகளாக….லட்சியமாக நெஞ்சில் உறைந்து அவளை ஒரு பேயாக ஆக்கிவிட்டது. 

இந்த வீட்டை இப்போது பார்க்கிறபோது மனசெல்லாம் நிறைந்து ததும்பிவிடுகிறது லட்சியத்தை எட்டிப் பிடித்த வீராங்கனை போல சவாலில் ஜெயித்து விட்டதைப் போல, துரியோதனின் தொடை ரத்தத்தை கூந்தலில் பூசிக்கொள்ளும் போது பரவசப்பட்ட பாஞ்சாலியின் மனசைப் போல முத்துமாலை இப்போது சந்தோஷப்பட்டாள். 

அவளது கண்களின் பிரகாசம் நெஞ்சில் இறங்கி நாவிலும் துடித்துக்கொண்டிருந்தது…. 

“எப்படியோ எந்தச்சாமி புண்ணியத்திலேயோ நாமெ நல்ல படியா ஒரு வீட்டை கட்டி முடிச்சாச்சு கஞ்சி குடிச்சாலும், குடிக்காட்டாலும் புள்ளை குட்டிகளை வைச்சுகிட்டு பத்திரமா உறங்கி முழிக்கலாமே” 

அவள் நெஞ்சில் பொங்கி வழிந்த பெருமிதம், ராஜையா நெஞ்சிலும் தாவிக் கொண்டது. இவனும் விரிந்து ஒளிரும் கண்களுடன் வீடு முழுக்க ஒரு சுற்றுசுற்றினான். ‘கோபாலச் சுவரில் வந்து பார்வை நின்றது. தேங்கியது; மங்கியது; மனசில் ஒரு கவலையின் பாரம்… 

…அன்று பனங்கட்டை அடித்து, ஓடு வேய்ந்து கொண்டி ருந்தார்கள். டவுனிலிருந்து வந்திருந்த ராமையா நாடார் வேளை நடக்கும் விதத்தை உற்றுக் கவனித்துக் கொண்டிருந் தார். 

மிளகாய் வற்றல் கமிஷன் மண்டியில் கணக்கப்பிள்ளையாக இருக்கிறார் ஆனால், இந்த கிராமம் தான் பூர்வீகம். 

அவர் வீடுகளை-வீட்டுச்சுவர்களை – கட்டுமான முறைகளைப் பற்றியெல்லாம் நிறைய அனுபவ ஞானம் மிக்கவர். புது வீடு, கட்டுகிறவர்களெல்லாம் அவரைக் கூட்டிக்கொண்டு போய் காட்டி, அவர் சொல்லும் யோசனைகளையும், திருத்தங்களையும் கேட்டு அதன்படியே செய்வார்கள். அவரது எஞ்ஜினீயரிங் மூளைமீது அத்தனை நம்பிக்கை. 

அவர்தான் ஓடு கவிழ்ப்பதையும், வீட்டுச்சுவர் கட்டுமானத் தையும் உன்னிப்பாகப் பார்த்தார். 

“என்ன மாப்ளே, வீட்டுக்கு சுவர் வைச்சது யார் மாப்ளே?” 

“நம்ம கொத்தனார்தான் மாமா, என்ன விஷயம்?” 

அவர் மௌனமானார். அவர் மனசுக்குள் ஏதோ எண் ணங்கள் ஓடுகின்றன சற்று தயக்கத்திற்குப் பிறகு கேட்டார். 

“இந்தக் கோபலச் சுவர் கட்டணும்னு யாரு சொன்னது?” 

”கொத்தனார்தான் மாமா” 

“எதுக்காம்?” 

“ஓடு மரம் வாங்க பணம் போதாமே தவிச்சிக்கிட்டிருந் தேன் பணம் பத்துப் பானைஞ்சுநாள் தாமதமாயிடுச்சு. நா மரு கிக்கிட்டு நிக்கிறதை பாத்துட்டுதான் கொத்தனார் இந்த யோச் னையை சொன்னார்”

“என்ன சொன்னார்?” 

“கோபாலச் சுவர் வைச்சிடலாம் வைச்சிட்டா ஓடு மரம் வாங்றே செலவு பாதியா கொறைஞ்சு போகும்னு சொன்னார். எனக்கும் அது நல்லதாப் பட்டது. சரின்னுட்டேன்”

”அப்படியா” என்று உயிரில்மாமல் எதிரொலித்தார். மீண் டும் மௌனமாக இருந்தார். ரொம்ப யோசனையாக இருந்தார் மட்டியைக் கடிப்பதுவும், மீசையை நீவுவதுமாக இருந்தார் பார்வை, கோபாலச்சுவர் மீது ஆணி அடித்தாற்போல நிலைத்து நின்றது. 

ராஜையாவுக்கு மனசுக்குள் ‘நறுக்’கென்றது ‘நேர்ந்து விட்ட தவறை சுட்டிக்காட்டி ஏன் விணாக பயப்படுத்த வேண்டும்’ என்று தயங்குவதுபோல அவரது முகபாவனை உணர்த்தியது, 

ராஜையா கொடுத்த வெற்றிலையை போட்டு வாயில் குதப் பிக் கொண்டே சொன்னார். 

“பெரியவுங்க வீட்டைக் கட்டிப்பாரு கல்யாணம் பண்ணிப் பாருன்னு’ சொல்லுவாக ரெண்டும் ரொம்ப காலம் நிலைச்சு நிக்க வேண்டிய விவகாரம் ரொம்ப நிதானமா யோசிச்சு, குறையில்லாதபடிக்கு செய்யணும். ஏதாச்சும் ஒரு குறை செய்ஞ்சுட்டா பின்னாடி வந்து பாதிக்கும். ரொம்ப நஷ்டமா கும் திருத்த முடியாத ஒரு சிக்கலாகிப் போகும்” 

என்ற ரீதியில் அவர் பேசிக் கொண்டிருந்தது ராஜையா வுக்கு இன்னும் நெஞ்சில் புதுமை குன்றாமல் ஒலிப்பது போலிருந்தது. 

கோபாலச்சுவர் ஒரு குறைதானோ’ என்ற நினைப்பு ஒரு நெருடலாக ஒரு பீதியாக இருந்து கொண்டே தானியிருக்கிறது. 

“என்ன யோசனை?” 

முத்துமாலையின் உசுப்பலில் ராஜையா விழித்துக் கொண்டான். 

‘ஒன்னுமில்லே” என்று சொல்லிவிட்டு, மனசின் கனத்தை ஒரு பெருமூச்சாக்கி லேசாக வெளியிட்டு விட்டு வெளியேறி விட்டான். 

தூறலுக்கு மறைவாக ஒரு சாக்கை ‘கொங்காணி’ போட்டு கொண்டான். 

இந்த ஒரு மாதமாகவே வானத்தின் நீலவண்ணம் கண் ணில் படவில்லை. மதம் பிடித்த யானைக் கூட்டங்களைப்போல மேகங்கள் திரண்டு திரண்டு, அடர்ந்து-குவிந்து-படர்ந்து-தா மிரட்டிக் கொண்டே திரிகின்றன. 

வெயிலின் வெளுப்போ உஷ்ணமோ, புழுக்கமோ இல்லா விட்டாலும், எந்நேரமும் ஒரு இறுக்கம் இருந்து கொண்டே யிருந்தது. சண்டை நடந்த வீட்டில் போல. 

ஆற்றில் பத்து வருஷமாக இல்லாத பயங்கர வெள்ளம், பெருத்த இரைச்சலுடன் பெருக்கெடுத் தோடுகின்றது. 

வளர்ந்து நின்ற வேலி மரங்களையெல்லாம் சாய்த்துப் பணிய வைத்து மறைத்துக் கொண்டு ‘செவேர்’ ரென்று வெள்ளம் பாய்கிறது. 

வெள்ளத்தை வேடிக்கை பார்க்க ஆண்களும், பெண்களும், சிறுவர், சிறுமிகளுமாக ஏராளமான கூட்டம். 

வெள்ளத்தில் பாய்ந்து அக்கரைக்கும், இக்கரைக்குமாக நீந்தி வீரசாகசம் செய்து காட்டும் விடலைப் பையன்களின் குதூகலப் பேரொலிகள். 

தோட்டமெல்லாம் ததும்பிக் கிடக்கும் நீர்ப்பெருக்கு. நட் டப்பட்டிருந்த மிளகாய் நாற்றுகள் தூர் அழுகி உயிரிழந்து காணப்பட்டன கிணறுகளெல்லாம் நீர் நிரம்பி, ‘மறுகால்’பாய் கிறது. பம்ப் ஷ்ெட் அறைகளுக்குள்ளிலிருந்து சில மோட்டார் கள் நீரில் மூழ்கிக் கிடக்கன்றன; முன்கூட்டி விழித்துக் கொண்டவர்கள், மோட்டாரை மட்டும் கழற்றி வீட்டிற்கு கொண்டு போய் விட்டனர். 

பாவம், இந்த ஊர்க் கடைக்காரர்கள்! ரோடு வசதியில்லை. எந்தத் திசையில் போனாலும் முழங்காலளவுக்கு இறங்கும் சகதி; போதாக் குறைக்கு வடக்கிலும், தெற்கிலும் வெள்ளத் தின் சீற்றமான பாய்ச்சல். எங்கும் போக இயலவில்லை. 

சரக்குகள் வாங்க எப்படி போவது? சிரமப்பட்டு போனாலும், எப்படி சரக்குகளை சுமந்து வருவது? அப்பப்பா… நரகவேதனை தான். 

கொங்காணியுடன் நடுத்தெரு மடத்துக்கு வந்தான் ராஜை யா, அங்கே ஏற்கனவே கூடியிருந்த விவசாயிகள் மேற்கண்ட விஷயங்கள் பற்றியெல்லாம் பேசிக் கொண்டிருந்தார்கள். சாங் கோபாங்கமாக அவர்கள் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டுக் கொண்டிருந்தான். 

அடேயப்பா, அதில் தான் எந்தனை நகைச்சுவைத் தூறல்கள்!  

வெள்ளத்தில் பருத்தி விதை மூட்டையைப் பறி கொடுத்து விட்டு கரையில் உட்கார்ந்து அழுத கடைக்காரன் ஒருவனைச் சொல்லிச் சொல்லிச் சிரித்தார்கள். 

வெள்ளத்தில் இறங்கி, நீந்த மூடியாமல் நீரைக் குடித்து முள்ளுக்குள் கைகள் சிக்கி, மேனியெல்லாம் ரத்தக் கீறல்களுடன் தவித்து, மிரண்டு கரையேறிய ஒரு விவசாயியையும் கேலி செய்து சிரித்தார்கள். 

அவர்கள் பார்வை ராஜையா பக்கம் திரும்பியது. 

“இந்தா இருக்கானப்பா, புது வீட்டுக்காரன் ராஜையா’ 

”அவனுக்கென்னய்யா கவலை ஊரு நாடெல்லாம் வீடி டிஞ்சு கூரை விழுந்து ஜனங்க தெருவுலே நாதியத்து திரியுது. இவன் அரண்மனை மாதிரி வீடு கட்டி… சௌக்கியமா யிருக்கா னய்யா. 

“இந்த மாதிரி பெரிய வீடு கட்ட பணம் எங்கேயிருந்து கிடைச்சது? எங்கையாச்சும் புதையல் கிதையல் எடுத்தானா?” 

”அவன் எதுக்கு புதையல் எடுக்கணும்? முத்துமாலையே ஒரு புதையல் மாதிரி தானே! பூதம் மாதிரி உழைக்கக் கூடியவள். நல்ல செட்டுமைக்காரி.” 

அதற்கெல்லாம் சேர்த்து பொதுவாக ‘சும்மாயிருங்கய்யா’ என்று ஒரு சிரிப்பு சிரித்தான். எத்தனை மறைக்க முயற்சித்தாலும் சிரிப்பில் ஒரு பெருமிதம் ஒளிவிடத்தான் செய்தது. 

உரையாடல் தொடர்ந்தது. ராஜையா நினைவுகளில் புதைத்து போனான். ‘இப்படி ஒரு வீட்டை எப்படி தன்னால் கட்டி முடிக்க முடிந்தது?’ 

இப்போது நினைத்தால் கூட மனசில் ஒரு மலைப்பும், பிரமிப் பும் தோன்றத்தான் செய்கிறது. 

நிஜந்தான். முத்துமாலை ஒரு புதையல் மாதிரிதான். என்ன உழைப்பு உழைப்பாள். நாள் பூராவும் அயராமல் அத்தனை உழைப்பு, தொடர்ந்து உழைக்க அவளால் எப்படி முடிந்தது? அதுவும், ‘இன்னும், இன்னும்’ என்கிற மாதிரியான தீராத ஆர்வத்துடன் கூடிய உழைப்பு. 

வீட்டு வேலைகளை முடித்துவிட்டு கூலி வேலைக்குப் போய் விடுவாள். மாலை வீடு திரும்புபோது ஆட்டு குட்டி, மாடு கன்றுக்குத் தேவையான புல்லைப் பறித்துக் கொண்டு வந்துவிடுவாள். 

சாயங்காலம் வீட்டில் வேலைகள். கம்போ, சோளமோ குத்த களி கிண்ட – கடைக்குச் செல்ல.. குழம்பு காய்ச்ச வெல்ல மும் தேயிலையும் போட்டு கொதிக்க வைச்ச ‘கெடுந்தண்ணி’யை ஊற்றி காய்ந்த குடலை சூடேற்றிக் கொள்ள… 

இடை இடையே சண்டை போட்டு சேட்டைகள் செய்யும் குழந்தைகளையும் சமாதானம் செய்து கொள்ள, அம்மம்மா, அவள் ராட்சஸிதான் உழைப்பதில்! 

“அங்கே போ” ‘“இங்கே போ “ இதைச் செய்” என்று ஒரு நிமிடம்கூட ஓயாமல் இவனையும் அவள் துரத்தித் துரத்தி வேலை வாங்குவாள். உஸ்ஸென்று உட்கார அவளுக்கு மனம் சம்மதிக்காது. 

அனாவசியமாக ஒரு சல்லிக் காசு செலவழிக்க மாட்டாள் துட்டு இல்லையே என்று ராஜையா வருத்தப்பட்டுக் கொண் டிருக்கும் தருணத்திலெல்லாம் – அவசியமான செலவாக தோன் றினால் முத்து மாலையின் முந்தியிலிருந்து காசு வெளிப்படும். 

ஏதோ விரதமெடுத்து செயல்படுபவள் போல பல்லைக் கடித்துச் செலவழிப்பாள். எப்படியாவது மிச்சம் பிடிப்பாள் நல்ல செட்டுமைக்காரி தான். 

கால்நடைகள் வளர்ப்பதற்கென்றே பிறவி எடுத்தவள் போல அத்தனை பாசத்துடன் வளர்ப்பாள், அதில் தான் மிச்சமே கிடைக்கும் சீட்டு பிடிப்பாள். அதற்காக வீடுவீடாக அலைவாள். இப்படி வழியும் வியர்வைைைய துடைக்க பொழு தில்லாமல் பாடுபடுவான். 

உழைக்காமல் கூரை நிழலில் குழந்தைகளை வைத்துக் கொண்டு ஒரு பெண் சும்மாயிருந்தால் அவளை முத்துமாலை அடிமனசிலிருந்து வெறுப்பாள். 

“இப்பேற்பட்ட ‘கூகை’களை ஊருக்குள்ளேயே வைக்கக் கூடாது. ஊர் பாழாகிப் போகும்” என்பாள். 

முத்துமாலையால் தான் இந்த வீடே எழுந்தது. வீட்டின் ஒவ்வொரு கல்லிலும் மண்ணிலும் அவளது வியர்வையின் வாடையை நுகர முடியும். 

வாழ்க்கையில் கால் எடுத்து வைத்த ஆரம்பத்தில் இதயத் தில் பட்ட வலிய அடி-அதன் தீவிர பாதிப்பு-மனசுக்குள் உரு வாகிக்கொண்ட சவால்… அதன் உத்வேகம்-பத்து வருஷ கால இடைவிடாத ஒயாத உழைப்பு. 

எல்லாமாக சேர்ந்து இன்று ஒரு நல்ல பெரிய வீடு எழுந்து விட்டது! 

தூறல் நின்று, மழை ‘சட்டச்சட்ட’வென்று ஆவேசமாகக் சாடியது. மடத்தின் தகரக்கூரை பிரளய வருகை அறிவிப்பு போல அந்தச் ‘சடசடப்பை’ வாங்கி பெரிதாக எதிரொலித்தது. 

மழை அச்சுறுத்தும்படி நீண்ட நேரம் நீடித்தது. 

மேகங்களின் உச்சபட்ச தாக்குதலே இன்றுதான் என்பது போல பூமியை சர்வநாசம் செய்யும் நினைப்புடன் மழை இறங்கி விட்டதைப் போல ஆக்ரோஷமாக ரொம்ப நேரம் சடசடத்தது. 

தெருவில் தண்ணீர் வெள்ளக் காடாக பெருக்கெடுத்தோடி யது. மழை பெய்ய பெய்ய வானம் வெளி வாங்குவற்குப் பதி லாக யானைக்கூட்டங்கள்” மேலும் மேலும் காற்று முற்றுகை யிட்டு இருண்டு கொண்டே வந்தது. 

மழையை சபித்தார்கள், கூதலடித்தது. பீடி சுங்குகள் கண் விழித்தன. மழை ரௌத்ரமாக தாண்டவமாடியது. 

சதசதவென்று ஈர மண் சுவர் சரியும் சப்தம் பக்கத்தில் கேட்டது. எல்லோரும் பயந்துபோய் எட்டிப் பார்த்தனர் பயனில்லாமல் நின்று கொண்டிருந்த ஒரு கட்டை மண் சுவர்தான் சரிந்திருந்தது, 

ஆஸ்வாசப் பெருமூச்சுடன் மீண்டும் திரும்பினர். 

மீண்டும் கேலி கிண்டல்கள்; கவலை; சபித்தல்கள்; மழை நீடிப்பு பற்றிய வருத்தப் பரிமாறல்கள். இதை நிறுத்த வழி தெரியாத கையறு நிலைமை; கிழக்கே போகும் ரயிலில் மழையை நிறுத்தச் செய்யும் ஐதிகம் பற்றிய ஒரு இளைஞனின் கதை. 

மழையும் நேரமும் நீண்டது. 

அந்நேரம். 

“ஐயய்யோ ஐயய்யோ” இதயத்தை அறுக்கும் பீதியுடன் பெருத்த ஒலமாக மேற்கிலிருந்து கேட்டது. கூட்டமே திடுக் கிட்டது. 

‘என்னவோ, ஏதோ’ வென்று விழுந்தடித்துக் கொண்டு ஒடினர். மழையை பொருட்படுத்தாமல் நனைந்து கொண்டு துடிக்கும் நெஞ்சுடன் ஓடினர். 

மழைக்குப் பயந்து சிலர் தேங்கி நின்றனர். அதில் ராஜை யாவும் ஒருவன். 

“ஐயய்யோ ஐயய்யோ” அந்த ஒலம் இன்னும் பெரிதாகி அவலமாக -ஒலித்தது. அந்தக் குரல்களில் ஒன்று, முத்துமாலை யின் குரலைப்போல ஒரு பிரமை! ராஜையாவின் மூளையில் ஒரு மின்னல்! 

நெஞ்சு ‘திக்’ கென்றது. மழையைச் சாடி பாய்ந்து கொண்டு ஒரு புயலைப் போல ஓடினான். சப்தம் வந்த திசையை நோக்கி- 

அவன் வீட்டில்தான் கூட்டம் அடைத்துக் கொண்டு நின்றது இதென்ன கொடுமை! 

மழைத்துளிகள் கண்களில் விழுந்து மறைந்தது. வெறியுடன் ஓடினான் அய்யோ! 

கோபாலச்சுவர் இரு பக்கமும் சாய்ந்து ஒரு மண் குன்றாக நனைந்து கிடக்க மரமும் ஒடுகளும் சரிந்து நொறுங்கிக் கிடக்க முத்துமாலை விரிந்து கிடக்கும் தலையில் அடித்து அடித்து அழுக வீடே கிழித்துப் போடப்பட்ட ஒரு ஒவியமாக-பிய்த்து உதறப் பட்ட மலர் மாலையாக- வேங்கை மிருகத்தின் மூர்க்கத் தாக்குதலுக்குப் பலியான ஒரு மனித உடலைப்போல அலங்கோலப்பட்டு நிற்க. 

ராஜையாவுக்கு இது ஒரு அதிர்வாக தெரியவில்லை; ஒரு ஒரு இடியாக தாக்கியது. அலைபாய்ந்த விழிகளால் அனைத் தையும் வெறியுடன் பார்த்தான் பார்க்கப் பார்க்க கண்கள் விரிய – பந்து போல் ஏதோ ஒன்றுதிரண்டு வந்து நெஞ்சை அடைக்க ஹா…ஹா,அம்மா…’ அடி மனசைக் கிழித்துக் கொண்டு அலற- 

காலுக்கடியில் பூமி நழுவிக் கொண்டது. 

‘நேற்று கட்டிய வீட்டை நாசப்படுத்திய மழையை சபித்துக்கொண்டு, இழப்பின் கொடூரம் உணர்ந்து துக்கித்துக் கொண்டிருந்த கூட்டம் அதிர்ச்சி தாங்காமல் நிலை குலைந்து மயங்கிச் சரிந்த ராஜையாவுக்கு முதல் சிகிச்சை செய்ய ஆரம்பித்தது. 

‘சோடா வாங்கிட்டு வாப்பா’ 

“சுக்கும் கருப்பட்டியும் வாங்கி வாய்யா” 

“பச்சை வெங்காயம் கொண்டாம்மா” 

ஒரு பெரியவர் கண்களை துடைத்துக் கொண்டே சொன்னார்: 

“உடம்பும் மனசும் தெம்பாயிருந்தா, ஒம்பது வீடு கட்ட லாமே, உழைச்சு. இதெதுக்கு இவன் இப்படி மனசு தளரணும்” 

“அதென்ன அப்படி சொல்லிட்டீக. பத்து வருஷமா வம்பாடு பட்டு கட்டுன வீடு, பொசுக்குன்னு இடிஞ்சு விழுந்தா, யாரால்தான் தாங்க முடியும் ஆனா அதுக்கா வுட்டுடவா செய்வா….? இன்னும் கட்டத்தான் செய்வான். மழையை விட மனுஷன் குறைஞ்சவன் இல்லையே!” 

– மேலாண்மை பொன்னுச்சாமியின் முதல் சிறுகதைத் தொகுப்பு.

– மானுடம் வெல்லும் (சிறுகதைகள்), முதல் பதிப்பு: ஏப்ரல் 1981, கரிகாலன் பதிப்பகம், மேலாண்மறைநாடு, இரமநாதபுரம் மாவட்டம்.

Print Friendly, PDF & Email
மேலாண்மை பொன்னுச்சாமி (செ. பொன்னுச்சாமி; கலைக்கண்ணன்; அன்னபாக்கியன்; அன்னபாக்கியச் செல்வன்; ஆமர்நாட்டான்) (1951- அக்டோபர் 30, 2017) எழுத்தாளர். வட்டார வழக்கில் பல சிறுகதைகளையும், புதினங்களையும் படைத்தார். மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்ந்து செயல்பட்டார். தனது படைப்புகளுக்காகப் பல்வேறு விருதுகள் பெற்றார். மேலாண்மை பொன்னுச்சாமி படிக்க வேண்டும் என்று ஆவல் கொண்டிருந்தார். கல்வி தடைப்பட்டதால் நாளிதழ்கள், நூல்கள் வாசித்து தனது வாசிப்பார்வத்தை வளர்த்துக் கொண்டார். வாசித்த ஜெயகாந்தனின் நூல்கள் இவருள்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *