“ஏய் யாரது… சொல்றேன் கேட்காமே மாங்காயைப் பறிச்சுக் கிட்டிருக்கையே….” என்ற அதட்டல் குரல் கேட்டது. அதட்டலின் ஒலியாக இருந்தாலும் இனிமையான குரலாகவேயிருந்தது அது.
“என்ன களவாணித் தனமாயிருக்கிறது! என்ன அக்கிரமம்… கூச்சல் போட்டு அப்பாவைக் கூப்பிடட்டுமா?” என்று கூறிக் கொண்டே குடிசையில் இருந்து வெளியே வந்தாள் மரகதம்.
அவசரமில்லாமல் கூடையில் மாங்காய்களை நிரப்பிக் கொண்டு, “அம்மா! களவாணி ஒண்ணுமில்லை. நான் இந்த மாங்காய்களை விற்று வந்து கிரயத்தைச் சாயங்காலம் கொடுத்திடுவேன். பயப்படாதே!’ என்று கூறிக் கொண்டே வெகு கம்பீரமாக நகர்ந்தான் தங்கராஜ்.
மரகதம் திகைத்து, தங்கராஜ் போன திக்கையே நோக்கிக் கொண்டிருந்தாள். அவளுக்குத் தெரிந்து அவளது துடுக்குத்தனத்தையே ஸ்தம்பிக்கச் செய்தது தங்கராஜ்தான். தங்கராஜை அவள் இதற்கு முன் பார்த்ததும் இல்லை. ‘ஆள் ஊருக்குப் புதுசு போலிருக்கிறது’ என்று எண்ணினாள். ஆனால் என்ன துணிச்சல் அவனுக்கு? மாந்தோப்புக்குள் நுழைந்ததோடன்றி மாங்காய்களைப் பறித்து கூடையில் போட்டுக் கொண்டு ‘விற்று வந்து கிரயத்தைத் தருகிறானாமே!’ என்று எண்ணியபோது அவளுக்கு ஆச்சர்யம் ஒரு பக்கமும் தன்னையும் ஏமாற்றி விட்டானே என்ற கோபம் ஒரு பக்கமும் வந்தன.
பூந்தோட்டம் கிராமத்தில் பூந்தோட்டங்கள் இல்லாவிடினும் அடர்ந்த மாஞ்சோலைகளும் தென்னந்தோப்புகளும் கிராமத்தைச் சுற்றிச் சூழ்ந்து ஊருக்கு அழகைத் தந்தன. அடர்ந்த இலைகளும், குலுங்கக் குலுங்கக் காய்த்திருக்கும் மாங்காய்களும் அழகுக்கு அழகு கொடுத்தன. ‘பெரிய தோப்புப் பரசுராமன்’ என்றால் ஊரிலேயே தெரியாதவர்கள் கிடையாது.
பரசுராமன் தம் ஆயுளில் எத்தனையோ இன்பங்களை அனுபவித்திருக்கிறார். சிங்கப்பூர் சென்று ரப்பர் தோட்டங்களிலே இரண்டு கையாலும் வாரிச் சம்பாதித்திருக்கிறார். ஆசையோடு மணந்த மங்கம்மாளுக்குத் தங்க நகைகளாக இழைத்துப் பூணச் செய்து ஆனந்தப்பட்டிருக்கிறார்.
இன்பத்தோடு துன்பமும் வருவது சகஜம்தானே! ஆசை மனைவி மங்கம்மாள் மாண்டாள். சிங்கப்பூர் ஆஸ்திகள் யுத்தத்தில் சீரழிந்தன. பங்காளிகளுக்குள் ஏற்பட்ட வழக்கில் பாதிச் சொத்து கோர்ட் செலவில் அழிந்தது. இதன் பிறகுதான் அவருக்கு எல்லாவற்றின் மீதும் வெறுப்பு ஏற்பட்டது.
நிம்மதியாக எல்லாச் சொத்தையும் விற்றுவிட்டு, பெரிய தோட்டம் என்ற பெயர் அந்த மாந்தோப்பையும் அதன் நடுவே ஒரு சிறு வீட்டையும் கட்டிக் கொண்டு, மனைவி விட்டுச் சென்ற ஞாபகர்த்தமான தம் ஒரே மகள் மரகதத்தைச் செல்லமாக வளர்த்து அமைதியான வாழ்க்கையை நடத்தி வந்தார். அவருக்கு இனி என்ன?
தன் மகள் மரகதத்தைக் கல்யாணம் செய்து கொடுத்து விட வேண்டும். மாப்பிள்ளையாக வருபவன் மகளைச் செல்லமாக வைத்துக் கொள்வதுடன், மாந்தோப்பையும் பராமரிக்க வேண்டும். அவ்வளவு தானே! ஆனால், தகுதி வாய்ந்த வரன் வருமளவும் அவருக்குக் கவலையே இல்லை.
தோட்டத்தில் ஒரு மரமாவது காய்க்காமலிருக்க முடியாது. ஒரு பயல் தோட்டத்துக்குள் வந்து ஒரு காயை – என் ஒரு இலையைக் கூடத் தொட முடியாது. மாந்தளிர் போன்ற மரகதம் அல்லவா தோட்ட ராணி’ யாகக் காவல் காத்து நிற்கிறாள்!
தங்கராஜுக்கு இதெல்லாம் என்ன தெரியும் ! கல்லூரிப் படிப்பை முடித்து விட்டு கிராமத்திலேயே தங்கிவிட வந்தவன் பொழுது போக்குக்காக உலாவி வருகையில் அடர்ந்த இந்த மாந்தோப்பும். மாந்தோப்பில் தினைப்புனம் காத்து நின்ற வள்ளி போன்ற ஒரு முல்லைக் கொடியும் அவனை உள்ளுக்குள் இழுத்தன.
அன்று இரவெல்லாம் – ஏன் – அன்று முழுவதுமே மரகதம் தங்கராஜின் துணிவையே எண்ணிக் கொண்டிருந்தாள். அவனுடைய கவர்ச்சிகரமான தோற்றமும், மிடுக்கான பதிலும் அவள் இதயத் திரையில் அழியாப் படமாகப் பதிந்து விட்டன.
மறுநாள் காலை…. “அம்மா மரதகம் ! வெளியே போய் வர்றேன். பார்த்துக்கோ” என்று கூறிவிட்டு, மாந்தோப்பை ஒரு சுற்றுச்சுற்றி விட்டு வெளியே போய்விட்டார் பரசுராமன். சொல்லி வைத்தாற்போல் தங்கராஜ் அந்த வேளையில் கூடையுடன் நுழைந்தான். அவன் கண்கள் மாங்காயை மட்டுமின்றி மரகதத்தையும் சுற்றிச் சுற்றிப் பார்த்தன. முதல் நாளைப் போல் மாங்காய்களைப் பறித்துப் போட்டுவிட்டு அணில் கொத்தின ஒரு பழத்தைச் சுவைத்துக் கொண்டிருக்கையில், குடத்துடன் வந்தாள் மரதகம். தங்கராஜைக் கண்டதும் திடுக்கிட்டாள். நாகசர்ப்பமான மரகதம், தங்கராஜுக்குப் படமெடுக்காது பயந்தது வியப்புதான்.
“அம்மா! நேற்று எடுத்துச் சென்ற மாங்காய்களைப் பன்னிரண்டனாவுக்கு விற்றேன். நான்கணா லாபம் எடுத்துக் கொண்டேன். எட்டணா முதலுக்காக!” என்று கணீரென்று பதில் சொல்லிச் சில்லறையைக் கீழே வைத்து விட்டுப் பதிலைக் கேட்காமலேயே மாங்காய்களுடன் கிளம்பினான் தங்கராஜ்.
தோட்டத்தின் கதவு தாண்டும் வரை திரும்பிப் பார்த்துக் கொண்டே சென்ற தங்கராஜை இமை கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாள் மரகதம். அப்பொழுதுதான் குளித்திருந்தாள் என்றாலும் அவள் உடல் குப்பென்று வியர்த்தது. இப்படி மாங்காயைக் கண்ணுக்கெதிரே எடுத்துச் செல்கிறவனைப் பற்றி அப்பாவிடம் சொல்லி விட வேண்டும் என்று அவள் உள்ளம் துடித்தது. ஆனால், அப்படிச் செய்ய அவள் மனம் இடம் கொடுக்கவில்லை. இதுபோல் நான்கு நாளைக்கு மேல் நடந்து விட்டது. மரகதத்திற்கு அழுகை அழுகையாக வந்தது.
தன்னைக் காவல் வைத்து விட்டுப் போன தன் தந்தை இதை அறிந்தால் என்ன நினைப்பார்? இவருக்குத்தான் என்ன துணிவு? அப்பாவிடம் தான் சொல்லிப் பார்ப்போமே என்று துணிந்து விட்டாள் மரகதம். ஆனால், அவன் வந்து மாங்காயைத் திருடுவதை ஏன் மனப்பூர்வமாகத் தடுக்கவில்லை அவள்? அவளுக்கே அதன் காரணம் புரியவில்லை. அவள் தன்னையறியாமலேயே மாங்காய் திருடன் வரும் நேரத்தை ஆவலுடன் எதிர்பார்க்கலானாள்.
வழக்கம் போல் அன்றும் பரசுராமன் தன் மகளிடம் சொல்லி கொண்டு கிளம்புகையில் : “மரகதம் ! இன்னிக்கு மாங்காய்களைக் குத்தகைக்கு விடுகிறேன். கடைக்காரன் வருவான் பறித்துக் கொடுத்து விடு” என்றார். மரகதத்திற்குத் திக்கென்றது.
“அப்பா! நேற்றே சொல்ல வேண்டுமென நினைத்தேன். மேற்கு மர வரிசையைப் பாருங்களேன்!” என்றாள்.
“ஏன்.. பார்த்தேனே…”
“சரியாகப் பாருங்கப்பா! தினமும் ஒருத்தன் வந்து…”
“என்ன… என்ன… அடடே… மாங்காய்களெல்லாம் எங்கே ?” என்று ஆச்சர்யத்துடனும், ஆத்திரத்துடனும் மரங்களிடம் ஓடினார்.
“யாரது …. ஒருத்தன் வந்து….. சொல்லு…. சொல்லு….. அட…. மாங்காய்களையே காணுமே…” என்றார் படபடக்க.
தன் தந்தைக்குத் திடீரென கோபம் வருமெனத் தெரியும். ஆனாலும் சொல்ல ஆரம்பித்த சமாசாரத்தை முழுவதும் கூறாவிடில் விடமாட்டாரே…. அதனால் நடந்த விஷயத்தில் பாதியை மறைத்து எவனோ ஒருவன் – புது ஆள் வந்து மாங்காய்களைத் திருடிச் செல்வதாகக் கூறி விட்டாள்.
பரசுராமனின் மீசை துடித்தது. “இந்த வட்டாரத்திலே பரசுராமன் தோப்பிலே நுழைய ஒருத்தனுக்கு தைரியமா ? நீ சொல்லும் அடையாளத்தைப் பார்த்தால் அந்தப் பட்டணத்திலிருந்து இங்கே யார் வீட்டுக்கோ வந்திருக்கானாமே.. ஒரு பிள்ளையாண்டான் – அந்தப் பயலாகத்தான் இருக்கும். அயோக்கியப் பயலை விட்டேனா பார் அவனை!” என்று கர்ஜித்துக் கொண்டே மேல்துண்டை உதறிப் போட்டுக் கொண்டுக் கிளம்பினார்.
‘ஏண்டாப்பா சொன்னோம்.’ என்றாகிவிட்டது மரகதத்திற்கு. துடித்த மீசையும், படபடப்பான பேச்சும் என்ன விபரீதத்திற்கு உள்ளாக்கி விடுமோ? ‘அவர் என்ன ஆவாரோ… பகவானே’ என்று துடிதுடித்தாள் மரகதம்.
பரசுராமன் அங்கிருந்துப் போனதும், தங்கராஜ் சொல்லி வைத்தாற் போல் வந்து நின்றான்.
மாங்காய்த் திருடன் வந்ததில் மரகதத்திற்கு ‘நல்லவேளை’ என்ற திருப்தி எப்படியோ உண்டாகியது. இன்றைக்கு ஒரு பெருத்த சண்டை கிராமத்தில் ஏற்பட்டிருப்பது எப்படியாவது நீங்கி விடும். அந்த அவரை வீட்டிலேயே இருக்கச் செய்து அப்பா வந்ததும் கெஞ்சிக் கேட்டு மன்னித்து விடச் செய்ய வேண்டும் என்று திட்டமிட்டாள்.
தங்கராஜின் வாரி விட்ட கிராப்பும், புன்முறுவலும். அவளை ஒரு குலுக்குக் குலுக்கியது. அந்த அடர்ந்த மா இலைகளின் வழியாகப் பிரவேசித்த இளஞ்சூரிய வெளிச்சத்தில் மரகதம் தங்கப் பதுமையாகவே தங்கராஜின் கண்களுக்குத் தோன்றினாள்.
மரகதம் நடந்த விஷயங்களைச் சொல்லி , நேரக்கூடிய விபரீதங்களையும் கூறி அவரை உள்ளே போய் இருக்கும்படி செய்து தந்தையின் கோபத்திலிருந்து தப்ப வைக்க வேண்டும் என்று துடித்தாள். ஆனால், அவள் நெஞ்சிலிருந்து ஒருவார்த்தை கூட எழவில்லையே!
எவ்வளவு நேரம் இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு நின்று கொண்டிருந்தார்களோ தெரியாது. இரண்டு மூன்று பேரின் காலடிச் சப்தம் கேட்டு இருவரும் திடுக்குற்றுத் திரும்பினர்.
தன் தந்தையையும், இன்னும் இருவரையும் கண்டவுடன் மரகதம் ஸ்தம்பித்து விட்டாள்.
ஒரு கணம் தலையே கழன்றது போலாகிவிட்டது. என்ன நேரப் போகிறதோ? என்று பயந்ததாள்.
தங்கராஜ் கூட பயந்து விட்டான். தன் மாமாவுடன் இன்னும் இருவர் இங்கு வரக் காரணம் என்ன? ஒரு பெண்ணுடன் தனியாகப் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்து விட்டு தன் மாமா கோபிக்கப் போகிறாரோ என்ற எண்ணிக் கொண்டிருக்கையிலேயே தங்கராஜின் மாமா , “தங்கராஜ்! அதிர்ஷ்டசாலிடா நீ! இவருக்கு நமஸ்காரம் செய்!” என்று பரசுராமனைச் சுட்டிக் காட்டினார்.
“மரகதம்! பேஷ்…. நல்ல வரனுக்காக நான் தேடித் திரியாமல் நீயே சுலபமாகப் பிடித்து விட்டாயே… மாங்காய்க் கள்ளன் உன் மனத்தையும் கவர்ந்ததைச் சொல்லாமல் காலையில் ஒரு கணம் கோபமூட்டி விட்டாயே! நல்லவேளை தங்கராஜ் என் சிநேகிதர் முருகேசனின் தங்கை மகன் ! உம்…. முருகேசனுக்கு நமஸ்காரம் செய்!” என்றார் பரசுராமன் சிரித்தபடியே.
‘திருதிரு’ வென்று மரகதமும், தங்கராஜும் விழித்தபோதும், தம்மையறியாமலேயே முறையே பரசுராமனும், முருகேசனும் வணங்கி எழுந்தனர்.
– மாந்தோப்பு மரகதம், சிறுகதை தொகுதி -7, முதற் பாதிப்பு: 2013, யாழினி பதிப்பகம், சென்னை 600108.