கதையாசிரியர்:
தின/வார இதழ்: கணையாழி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 15, 2024
பார்வையிட்டோர்: 64 
 
 

(2005ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அஹ்மத் வழக்கம் போல அம்மாவுக்குக் கால் அமுக்கிக் கொண்டிருந்த போது அந்த அறைக்குள்ளே வந்தாள் சாபிரா.

அம்மாவுக்கு இன்சுலின் போட்டாச்சா தம்பி என்கிற வழக்கமான கேள்வியை இன்றைக்கு அவள் கேட்கவில்லை. முகத்தில் வருத்தம் தெரிந்தது. கேள்வி மாறி வந்தது.

“இப்பத்தான் எந்திரிச்சியாக்கும் தம்பி?”

அஹ்மத் அவளை ஏறெடுத்துப் பார்த்தான். “எட்டு மணிக்கெல்லாம் எந்திரிச்சிட்டேனே அக்கா , ஏன்?”

கண்களை மூடிப் படுத்திருந்த அம்மா, இமைகளைப் பிரித்து, என்ன விஷயம் மகளே என்று சாபிராவைப் பார்த்தாள்.

“இவன் காலைல எட்டு எட்டரை வரைக்கும் தூங்கறானம்மா. அவர் டெய்லி எங்கிட்டப் பொலம்பிட்டுப் போறார். விடிஞ்சப்புறம் இப்படிப் படுத்துத் தூங்கறானே, நம்மளுக்குத்தானே தரித்திரம்னு சதா கரைச்சல் பண்றார்மா, நான் என்ன செய்ய?”

மெல்லிய குரலில் அம்மா சாபிராவுக்கு பதில் சொன்னாள். “ஒனக்குத் தெரியாதாம்மா சாபிரா?, ராத்திரி பூரா முழிச்சிருந்து எனக்குக் கால் புடிச்சி விடறான். விடியற நேரந்தான் எனக்குத் தூக்கம் பிடிக்கிது. அப்புறந்தான் அவன் படுக்கறான்.”

“எனக்குப் புரியுதும்மா. ஒங்க மருமகனுக்குப் புரியவைக்க முடியலியே?. சும்மாவே தண்டச்சோறுன்னு இவனைக் கரிச்சிக் கொட்டிட்டிருக்கார். இப்பப் புதுசா இது ஒண்ணு.”

எம்புள்ளையைத் தண்டச்சோறுன்னு சொல்லாதீங்கம்மா என்று ஆரம்பிக்கும்போதே அம்மாவுக்குக் குரல் உடைந்தது.

“இவன் மட்டும் இல்லைன்னா, ஒங்க வாப்பா பின்னாலேயே நானும் போய்ச் சேந்திருப்பேன். இவந்தானேம்மா இப்ப ராப்பகலாப் பக்கத்துலயேயிருந்து என்னப் பாத்துக்கறான்! இந்த சீக்காளிக்கி ஒரு நர்ஸ் அமத்தற செலவு ஒங்களுக்கு மிச்சந்தானே மகளே. இருவத்தி நாலு மணி நேரமும் எனக்கு ஒரு ஆள் தேவப்படுது. இவன் ஒரு வேலைன்னு போய்ட்டான்ன; என்னை யாரம்மா பாத்துக்குவா? இவனால ஒரு எடத்துல வேலையில் இருக்கவும் ஏலாது. வெவரந்தெரியாத புள்ளயா வளந்துட்டான். நா இன்னிக்கோ நாளக்கோ எண்டு கெடக்கேன். எங்காலத்துக்குப் பிறகு நீதாம்மா சாபிரா உன் புருஷனுக்கு நல்ல வார்த்தை சொல்லித் தம்பியை கவனமாய்ப் பாத்துக்கணும். இவனத் தெருவுல வுட்ராத மகளே.”

சாபிரா ஓர் இருதலைக் கொள்ளி எறும்பு. ஒருபுறம் பாசத்தோடு அம்மாவையும் தம்பியையும் பராமரிக்க வேண்டிய கடமை. மறுபுறம், முரண்டு பிடிக்கிற புருஷனை அனுசரித்துப் போக வேண்டிய கட்டாயம்.

சாபிராவுக்குப் பிறகு பத்து வருஷ இடைவெளியில் பிறந்த ஒரே மகன் என்பதால் அஹ்மதுக்கு அநியாத்துக்குச் செல்லம். அளவுக்கு மீறிய அந்தச் செல்லம், அஹ்மதை ஒழுங்காய்ப் பள்ளிக்கூடம் போக விடாமல் செய்தது; மண்டையில் படிப்பு ஏறாமல் செய்தது.

ஏழாம் வகுப்பு வரைக்கும் தட்டுத் தடுமாறி முன்னேறியவன், அதற்குமேலே ஸ்கூலுக்குப் போக முடியாதென்று ஸ்ட்ரைக் செய்துவிட்டான். இருபது வயசுக்குமேலே, கடைசி முயற்சியாய் அவனை ஒரு கம்ப்யூட்டர் கோர்ஸில் சேர்த்து விட சாபிரா முயற்சியெடுத்தாள். அதுவும் சரிவரவில்லை.

மகளை நன்றாய்ப் படிக்க வைத்து டாக்டராக்கி, ஓர் இஞ்சினியர் மாப்பிள்ளைக்கு மணமுடித்துக் கொடுத்து, அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துத்தர முடிந்த தன்னால், தன்னுடைய ஒரே மகனுக்கு ஒரு நல்ல எதிர்காலத்தை அமைத்துத் தர இயலாமற்போன வருத்தத்திலேயே வாப்பா போய்ச் சேர்ந்து விட்டார். அம்மா படுத்த படுக்கையாகி விட்டாள்.

அம்மாவும் அஹ்மதும் சாபிராவின் புருஷனுடைய பராமரிப்பில் காலந்தள்ள வேண்டி நேர்ந்த பின்னால் பிரச்சனைகள் தலை தூக்கின.

வாப்பா இறந்த பின்னால்தான், எதிரேயிருந்த சூன்யம் அஹ்மதுக்குப் புலப்பட்டது. அதோடு, அக்கா புருஷனுக்கு இவன் மேலேயிருந்த வெறுப்பும் உறுத்த ஆரம்பித்தது. வயது இருபத்து மூணு ஆகியும் சுயசம்பாத்யம் இல்லாமல் வீட்டுக்குப் பாரமாய் உதவாக்க”ரயாய் இவன் இருப்பது அடிக்கடி சுட்டிக்காட்டப்பட்டது.

ஆனாலும், இத்தனை நாள் உடம்பில் வெயில் படாமல் வளர்ந்துவிட்டவன், எந்த வேலையென்று போய் அலைய முடியும் என்கிற பயத்தினாலும், நோய்வாய்ப்பட்டிருக்கிற அன்பான அம்மாவை விட்டு விலகியிருக்க சம்மதமில்லாததாலும் அஹ்மத் அசைந்து கொடுக்காமலிருந்தான். அம்மாவின் அறைக்குள்ளேதான் அவனது வாசம்.

அம்மாவுக்குத் தினமும் காலையில் இன்சுலின் இஞ்ஜக்ஷன் போட வேண்டும். காலையில் புருஷனைக் கிளப்பி வேலைக்கு அனுப்பி விட்டு ஆஸ்பத்திரிக்குக் கிளம்பவேண்டிய அவசரத்தில், அம்மாவுக்கு ஊசி போட நேரம் ஒதுக்குவது சாபிராவுக்கு அசௌகர்யமாயிருந்தது. மேலோட்டமான ஸப் க்யூட்டோனியஸ் இன்ஜக்ஷன்தான் இது, பொதுவான ஊசிகளைப்போல ஆழமாய்க் குத்த வேண்டியதில்லை, ரொம்ப ஈஸி என்று தம்பியைச் சரிக்கட்டி, இன்சுலின் செலுத்தும் கலையை அவனுக்கு சாபிரா கற்றுக் கொடுத்தாள். அம்மா சம்பந்தப்பட்டது இது என்பதால் அஹ்மத் ஆர்வமும் அக்கறையும் காட்டினான்.

அக்கா எதிர்பார்த்ததையும்விட விரைவாய் இன்சுலின் இன்ஜக்ஷன் போடக் கற்றுக் கொண்டுவிட்டான். அம்மாவுக்கு ஊசி போடுவது இப்போது அஹ்மதுடைய காலைக்கடன்களில் முதன்மையானது. அம்மாவுக்கு ரெண்டு கால்களிலும் நிரந்தர உளைச்சல். நீலகிரித்தைலம், தென்னைமரக்குடி எண்ணை , ஆலிவ் ஆயில், டைகர் பாம் என்று மாற்றி மாற்றித் தடவிக், கால்களை நீவி விட வேண்டும். அம்மா கண்ணயர்கிற வரைக்கும் கால்களைப் பிடித்துவிட வேண்டும். அம்மாவுக்கு இப்படிப் பணிவிடை செய்வதில் அஹ்மதுக்கு சந்தோஷம் கிடைத்தது.

நபிகள் நாயகத்தின் ஹதீஸ் என்று வெள்ளிக்கிழமை ஜும் ஆத் தொழுகையில் பிரசங்கம் செய்த பேஷ் இமாம் சொன்னார்:

மாதாவின் காலடியில் சொர்க்கம் இருக்கிறது.

இந்த நபி மொழியைக் கேட்ட பிறகு, அம்மாவின் காலடியே கதி என்று கிடப்பது அஹ்மதுக்கு இன்னும் பிரியமானதாக ஆகிவிட்டிருந்தது. அம்மா இன்னும் ரொம்ப நாளைக்கு உயிரோடிருக்க மாட்டார்கள் என்று அஹ்மத் உணர ஆரம்பித்தபோது, பயமாயிருந்தது. அம்மாவின் காலத்துக்குப்பிறகு இவன் ஜீவித்திருப்பது எவ்வாறு? அது சாத்தியமா என்றே தெரியவில்லை. அம்மாவை உன்னிடம் அழைத்துக் கொள்கிற போது, என்னையும் அழைத்துக்கொள் அல்லா என்று இறைவனை வேண்டிக் கொண்டிருந்தான். அம்மா உறங்கின பிறகு, அந்த நிர்மலமான முகத்தைப் பார்த்தபடியே உட்கார்ந்திருப்பான். கண்கள் பனிக்கும்.

…. அம்மா, என்ன வுட்டுட்டுப் போயிராதீங்க அம்மா, நானும் ஒங்க கூட வந்திர்றேன் அம்மா…

அம்மாவின் சேவையில் காலத்தை ஓட்டிக் கொண்டிருந்தவனின் ஓட்டத்தைத் தடை செய்கிற ஒரு துர்சம்பவம் அன்றைக்கு நிகழ்ந்தது. அன்றைக்குக் காலை, கண் மூடிப் படுத்திருந்த அம்மா, புஜத்தில் சுருக்கெனவும், ஸ்ஸ்ஸ்ஸென்று கண் திறந்தாள். தனக்கு ஊசி போட்டுக் கொண்டிருந்த சாபிராவைப் பார்க்க அம்மாவுக்கு ஆச்சர்யம்.

“அஹ்மத் எங்கம்மா?” என்று மகளிடம் விசாரித்தாள்.

“அவன்னா வலிக்காம பூப்போல ஊசி போடுவான். நீ குத்தறது வலிக்குதும்மா.”

“அதுசரி. நா டாட்டர் கம் டாக்டர். நா இன்ஜக்ஷன் போட்டா வலிக்குது, ஒங்க செல்ல மகன் போட்டா மட்டும் பூப்போல இருக்குதாக்கும்” என்று சாபிரா சிரிக்க முயற்சி செய்தாள். அவளால் சிரிக்க இயலவில்லை. அம்மாவின் அடுத்த கேள்வியை எதிர்கொள்ள ஆயத்தமானாள். கேள்வி வந்தது.

“அஹ்மத் எங்கம்மா? புள்ளய விடிஞ்சதுலயிருந்து காணல? என்னை வுட்டு நகரமாட்டானே?”

“பக்கத்துல எங்கயாவது போயிருப்பான். வந்துருவான்மா.”

“கடைக்கி எங்கயாவது அனுப்பிச்சிருக்கியா.?”

“அ… ஆமாம்மா, வந்துருவான். நா கௌம்பறேன். சமயல்கார அம்மா கிச்சன்ல இருக்காங்க, ஏதாச்சும் வேணும்னா கொரல் குடுங்க.”

மேற்கொண்டு அம்மா ஏதும் கேட்கும் முன் சாபிரா கிளம்பி விட்டாள். ஆஸ்பத்திரியில் சாபிராவுக்கு இருப்புக்கொள்ளவில்லை. ஒரு மணி நேரத்துக்கொருதரம் வீட்டுக்கு போன் செய்து சமையல்கார அம்மாவைத் தொந்தரவு பண்ணிக் கொண்டிருந்தாள், அஹ்மத் வந்துட்டானா, அஹ்மத் வந்துட்டானா என்று.

சாயங்காலம் சீக்கிரமாய் வீட்டுக்கு வந்து விட்டாள். வந்தவள், நேராய் அம்மாவிடந்தான் போனாள். அம்மாவின் கவலையையும் கேள்விக்கணைகளையும் எதிர்கொள்ள வேண்டியிருக்குமென்று தெரியும். பரவாயில்லை, எதிர்கொள்ளுவோம். இவளைப் பார்த்த மாத்திரத்தில் அம்மா அங்கலாய்க்க ஆரம்பித்துவிட்டாள்.

“என்ன சாபிரா இது? எங்கம்மா அனுப்பிச்சிட்டீங்க எம்புள்ளய? விடிஞ்சதுலயிருந்து அவனைப் பாக்கவேயில்லையேம்மா? எங்கம்மா போய்ட்டான் எம் மகன்? இந்த மெட்ராஸ்ல அவனுக்கு பாதை கூடச் சரியாத் தெரியாதே! ஒலகந் தெரியாத புள்ளயாச்சேம்மா? எங்க போய் அம்புட்டுக்கிட்டு அவஸ்தப்படறானோ தெரியலயே. ஓம் புருஷனுக்கு போன் போட்டுச் சொல்லி போய்த் தேடிப்பாக்கச் சொல்லேன் மகளே.”

…எம்புருஷனைப் போய்த் தேடிப்பார்க்கச் சொல்லவா! தம்பி காணாமப் போனதுக்குக் காரணமே அந்த மனுஷன்தானே! அந்தக் கதையை எப்படி அம்மாவிடம் சொல்லுவது! சொல்லத்தானே வேண்டும்…

திடீரென்று அஹ்மத் வந்து நின்றானென்றால், அவன் அழுகையும் கேவலுமாய் அம்மாவிடம் விஷயத்தைச் சொல்லுமுன், தானே சொல்லிவிடுவதுதான் உசிதம். சாபிரா மெல்ல வாயைத் திறந்தாள்.

“அம்மா, காலைல அவர் தம்பிய அடிச்சிட்டார்மா.”

அம்மா அதிர்ந்து போனாள். பதற்றத்துடன், படுக்கையில் கைகளையூன்றி எழ முயன்று, முடியாமல் திரும்ப சரிந்து விழுந்தாள். வார்த்தைகள் பதறியபடி வெளிவந்தன.

“என்னது, எம்புள்ளய ஒம்புருஷன் அடிச்சிட்டாரா? எம்புள்ள என்ன செஞ்சான்னு அடிச்சார்! ஒரு ஈ எறும்புக்குக்கூட பாவம் பாக்கறவனாச்சேம்மா? என்ன பாவத்துக்கு அவனப் போட்டு அடிச்சீங்க?”

என்னமோ ஏதோ என்று சமையல்கார அம்மா ஓடி வந்து எட்டிப் பார்த்தாள். ஒண்ணுமில்ல சரஸ்வதியம்மா, நீங்க போங்க என்று அவளை அனுப்பிவைத்துவிட்டுச் சாபிரா தாயை சாந்தப்படுத்தினாள்.

“ஒண்ணுமில்லம்மா, அவர் ஷர்ட் பாக்கெட்ல ஐநூறு ரூபா நோட்டு நாலு நோட்டு வச்சிருந்தாராம். அதைக் காணலியாம். தம்பிதான் எடுத்துட்டான்னு சாதிக்கிறார். இவர் வேற எங்கயாவது வச்சிருப்பார். பொறுமையாத் தேடிப்பாத்தா கிடைக்கும். இவருக்கு அந்தப் பொறுமை இல்ல. அஹ்மத்னா எப்பவுமே இவருக்கு ஆகறதில்ல….”

“அவர் அடிச்சத நீ வேடிக்கை பாத்துட்டு நின்னியாக்கும்? யா அல்லா, சூதுவாது தெரியாத புள்ளய அடிச்சி வெரட்டி வுட்டுட்டீங்களே, எம்புள்ள எங்க போனானோ, என்ன ஆனானோ, ஒனக்குத் தெரிஞ்சவங்க கிட்ட சொல்லித் தேடச் சொல்லேம்மா. அதோட போலீஸ்லயும் எழுதி வையி. நா உசிரோட இருக்கப்பவே எம்புள்ளய இந்தப்பாடு படுத்திறியளே, நா போய்ச் சேந்த பெறகு அவன என்னவெல்லாஞ் செய்வீகளோ, நீதான் ஆண்டவனே எம்புள்ளயக் காப்பாத்தணும்.”

அம்மாவின் கண்களில் கண்ணீர்க்குளம். அம்மாவின் மேல் கவிழ்ந்து கொண்டு கண்ணீர் விடத்தான் சாபிராவால் முடிந்தது. அன்றைக்கு ராத்திரி எவ்வளவோ வற்புறுத்தியும் அம்மா சாப்பிட மறுத்து விட்டாள். தேத்தண்ணி கூட குடிக்கவில்லை. மருந்து மாத்திரை எதுவும் உள்ளே செல்லவில்லை.

அடுத்த நாள் காலையில் இன்சுலின் ஸிரிஞ்சோடு சாபிரா, அம்மாவின் படுக்கையை நெருங்கின போது அந்த விபரீத மாற்றம் உறுத்தியது. தன்னுடைய கடைசிப் பயணத்தின் முதல் அத்தியாயத்தை அம்மா தொடங்கிவிட்டிருந்தாள்.

கோமா.

வாழ்க்கைக்கும் மரணத்துக்கும் இடைப்பட்ட அந்தர லோகத்தை அம்மா அடைந்து விட்டிருந்தாள். அந்த தினமே உயிர் பிரிந்து விடலாம். அல்லது சில நாட்கள் கோமா நீடிக்கலாம். இழுத்துக் கொண்டு கிடக்காமல் விரைவாய் ஒரு முடிவு வந்து விட்டால் அம்மாவுக்கு அவஸ்தை குறையும். ஆனால், அம்மாவின் மூச்சு நின்று போவதற்கு முன்னால் அஹ்மத் வந்து சேர்ந்தாக வேண்டுமே!

எப்படியும் அவன் வந்து சேர்ந்து விடுவான் என்று சாபிராவின் உள்ளுணர்வு சொல்லிக் கொண்டிருந்தது. அம்மாவுக்கும் அஹ்மதுக்குமிடையே நிலவுகிற பாசப் பிணைப்பில் சாபிராவுக்கு நம்பிக்கை இருந்தது. தம்பி இந்த உலகத்தில் எந்த மூலையிலிருந்தாலும் அம்மாவின் கடைசிக் கணங்கள் அவனுக்கு மானசீகமாய் உணர்த்தப்பட்டுவிட்டிருக்கும்.

சாபிரா, அமைதியடைந்த அம்மாவின் முகத்தைப் பார்த்தபடியே நின்றாள். பிறகு, அவசரமாய் ஒலுச் செய்து விட்டு வந்து புனித குர்ஆனின் சில ஆயத்துகளை அம்மாவின் தலைமாட்டில் ஓதினாள். ஆஸ்பத்திரியில் இன்றைக்கு ஆப்பரேஷன் டே. வேதனையும் குழப்பமும் கலந்த இந்த மனநிலையில் இவளால் உபகரணங்களைக் கையாள முடியாது. போய், ஏதாவது மாற்று ஏற்பாடு செய்துவிட்டு வீட்டுக்கு வந்து விடலாம். புருஷனுக்கு போன் செய்ய வேண்டுமா? வேண்டாம். அந்த ஆளுக்குச் சொல்லி ஆகப்போவது ஒண்ணுமில்லை. சாயங்காலம் சாவகாசமாய்ச் சொல்லிக்கொள்ளலாம்.

பன்னிரெண்டு மணிபோல வந்து விடுவதாய் சரஸ்வதியம்மாவிடம் சொல்லிவிட்டுக் கிளம்பினாள். இன்னொன்றையும் சரஸ்வதியம்மாவிடம் சொல்ல வேண்டுமென்று ஏனோ தோன்றியது.

“சரஸ்வதியம்மா, வெளிக்கதவை உள்ளார லாக் பண்ண வேண்டாம். சும்மா சாத்தியிருக்கட்டும், என்ன?”

ஆஸ்பத்திரியில் மாற்று ஏற்பாடு செய்துவிட்டுக் கிளம்பி பதினொண்ணேகாலுக்கெல்லாம் வீடு வந்து சேர்ந்து விட்டாள். ஓசைப்படாமல் கதவைத் திறந்து கொண்டு உள்ளே பிரவேசித்தபோது, இங்கே என்னமோ நடந்திருக்கிறது என்று மனசு குறுகுறுத்தது.

சரஸ்வதியம்மா கிச்சனில் வேலையாயிருந்தாள். அவளுடைய கவனத்தை ஈர்த்துவிடாமல் சாபிரா நுனிக் காலில் நடந்து அம்மாவின் அறையை சமீபித்து உள்ளே பார்வையைச் செலுத்தினாள். நினைத்தது சரிதான்.

அம்மாவின் கால்மாட்டில் அஹ்மத் !

அம்மாவுடைய மரண நெருக்கத்தின் இறுக்கத்தினூடே இது ஒரு ஆறுதல். அம்மாவின் அருமை மகன் வந்துவிட்டான். இனி அம்மாவின் ஆத்மா அமைதியாய் அடங்கும்.

அருகாமையில் அம்மாவை அவதானித்தபோதுதான் அவளுக்குப் புரிந்தது. அம்மாவுக்கு அமைதி ஏற்கனவே கிடைத்துவிட்டிருந்தது என்பது. உணர்ச்சிகளை ஓரங்கட்டிவிட்டு, டாட்டராயில்லாமல் ஒரு டாக்டராய் அம்மாவுக்குப் பல்ஸ் பார்த்தாள். அது அடங்கிப் போய் அரை மணி நேரமிருக்கும் என்று தெரிந்தது. அம்மாவின் கால்களைக் கட்டியபடி அஹ்மத் கவிழ்ந்திருந்தான். அவன் ஸ்பரிசித்திருப்பது அம்மாவின் உயிரற்ற உடலைத்தான் என்பது தம்பிக்குத் தெரிந்திருக்காது. அன்னையையல்லாது வேறொரு உலகத்தை அறியாதவன், எப்படி இந்த இடியையும் இழப்பையும் தாங்கிக் கொள்ளப்போகிறான்!

தம்பியின் தலையைச் சாபிரா வாஞ்சையுடன் வருடிக் கொடுத்தாள். அவன் சலனமற்றிருந்தான். ஒரு விபரீதமான சந்தேகத்தோடு அம்மாவின் கால்களைக் கட்டிக் கொண்டிருந்த தம்பியின் கைகளை விலக்க முற்பட்டாள்.

அந்தக் கைகளில் உயிரில்லை. அம்மா தனியாய்ப் போகவில்லை என்பது சாபிராவுக்குப் புரிந்தது. மாதாவின் காலடி சொர்க்கத்தைத் தேடி அஹ்மத் போய்விட்டிருந்தான். இனிமேலும் உணர்ச்சிகளைப் போட்டு அமுக்கிக் கொண்டிருப்பதற்கு நியாயமில்லை. சாபிரா தரையில் உட்கார்ந்தாள். தம்பியின் உடலை இழுத்து மடியில் போட்டுக் கொண்டு வெடித்து அழுதாள்.

– கணையாழி, ஃபிப்ரவரி 2005.

– ஏ.ஏ.ஹெச்.கே.கோரி சிறுகதைகள் (பகுதி-1). முதற் பதிப்பு: டிசம்பர் 2012, நிலாச்சாரல் லிமிடெட், சென்னை.

திருநெல்வேலிக்காரரான ஏ.ஏ.ஹெச்.கே.கோரி இப்போது வசிப்பது சென்னையில். ஜனரஞ்சகப் பத்திரிகைகளிலும், இலக்கியப் பத்திரிகைகளிலுமாக இதுவரை 200 ப்ளஸ் சிறுகதைகள் பிரசுரம் கண்டிருக்கின்றன. ஐந்து சிறுகதைத் தொகுதிகள். மெய்ன் காட் கேட் என்கிற சிறுகதைத் தொகுதியும், காதில் மெல்ல காதல் சொல்ல என்கிற நாவலும் 2009ல் வெளியாயின. மாம்பழ சாலை என்கிற ஆறாவது சிறுகதைத் தொகுதியும், சிரிக்கும் நாளே திருநாள் என்கிற நாவலும் 2011ல் வெளியாகவிருக்கின்றன. 2009ம் வருஷம் கல்கி மற்றும் கலைமகள்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *