ஈஸ்வரி அக்காவுக்கு இருப்புக் கொள்ளவில்லை! ’என்னடா எழவாப் போச்சு?! இந்தப் பொண்ணு இப்படிப் பண்ணீடிச்சே’ன்னு மனசு இருப்புக் கொள்ளாமல் தவித்தாள்! ‘ஜோசியம் பார்ப்பதா? குறி கேட்பதா? இல்லை…., பேசாம குலதெய்வத்துக்கு ஒரு கடா வெட்டி காரியத்துக்கு கடன் கழிப்பதா?’ ஒண்ணும் புரியாமல் உள்ளத்துக்குள் பொருமிக் கொண்டிருந்தாள்.
வாத்தியார் விட்டவழின்னு பிரச்சனை வரும்போதெல்லாம், ஆரம்பப் பள்ளி ஆசிரியர் ஈஸ்வரிக்கு எல்லாம். சுந்தரம்தான் சுகமாக்கும் ஜோசியக்காரனென்று முடிவுக்கு வந்து, அவரிடமே போய் நின்றாள்.
அதிகாலை வேளையில் அவள் வந்து நிற்கவும் வாத்தியார் புரிந்து கொண்டார், ‘ஈஸ்வரி எதோ சிக்கலில் சிக்கி இருக்கிறாள். தீர்வு தேடித்தான் தன்னிடம் வந்திருக்கிறாள்’ என்று முடிவுக்கு வந்து,
‘என்ன ஈஸ்வரி இந்த அதிகாலை வேளையில் அத்தி பூத்தாப்புல?’ என்றார்.
‘காரியமில்லாம வருவேனா சார்? எல்லாம் என் பையன் பாஸ்கரன் பற்றித்தான் என்றாள்.
‘என்ன ஆச்சு அவனுக்கு?! பத்து பதினைஞ்ச்சு வருஷத்துக்கு முன்னாடி ஐஞ்சாவது எங்கிட்ட படிச்சவன் இப்ப என்ன பிரச்சனை அவனுக்கு என்றார்.
‘அவனுக்கு ஒரு கல்யாணம் பண்ணீடலாம்னு முடிவு செஞ்ச்சிருந்தோம்!’ சார்.
‘நல்ல விஷயம்தானே? இப்ப என்ன பிரச்சனை?! அவனுக்கு கல்யாணத்துல இஷ்டமில்லையா?’ என்றார் சுந்தரம்
இப்பத்தான் பசங்க எதோ ஒரு பெண்ணை மனசுல நெனைச்சுட்டு அதை வெளிப்படையாச் சொல்லாம, கல்யாணத்தைக் தட்டிக் கழிக்கறாங்களே?!’
‘அவனுக்கு ஒரு பெண்னைப் பார்த்தோம்! பெரியவங்க பேசி எல்லாம் முடிவு செஞ்ச்சுட்டோம்.’ இழுத்தாள் ஈஸ்வரி.
‘என்ன ஆச்சு? பொண்ணு வேற யார்கூடவாவது ஓடிப் போயிட்டாளா? பேசுன கல்யாணம் பிடிக்காம?!’ கேட்டார் கேவலாய்ப் பார்த்தபடி.
‘அப்படி ஓடிப் போயிருந்தா பரவாயில்லையே சார். . ஓடி வந்திருச்சு, அதுவும் என் பையனைத்தான் கட்டிக்குவேன்னு!’
சுந்தரம் ஈஸ்வரியை ஆச்சரியமாய்ப் பார்த்தார்.
அவள் தொடர்ந்தாள்.
‘கல்யாணத்தை வைகாசில வச்சுக்கலாம்னு பேசி இருந்தோம். இந்தப் பொண்ணு திடுதிப்புன்னு என் பையனைத்தான் கட்டிக்குவேன்னு, வைகாசி வரை பொறுத்திருக்க முடியாதுன்னு இப்படி மார்கழி மாசத்துல முருகன் கோயில்ல வச்சு, என் பையனைக் கல்யாணம் பண்ணீட்டு வந்து நிக்கறா..?! நான் என்னத்தைச் செய்வேன்?! ஒண்ணும் புரியாம உங்ககிட்ட வந்திருக்கேன். ஒரு வழி சொல்லுங்க! மார்கழியில கல்யாணம் பண்ணக் கூடாதுங்கறாங்க ஊர்ல எல்லாரும்?!’ என்றாள்.
புரிந்தது, இது வித்யாசமான கேசு. மார்கழி கல்யாணம் பண்ணக்கூடாதுன்னு ஈஸ்வரி நெனைக்க, பேசி வச்ச பொண்ணு வைகாசிவரை பொறுக்காம, பேசினவனையே கூட்டிட்டு ஓடிப்போய் முருகன் கோயில்ல மார்கழியில் கல்யாணம் பண்ணீட்டு வந்து நிக்குது! இதில் யார் நம்பிக்கை தப்பு.?! ஈஸ்வரி மார்கழியில் கல்யாணம் கூடாதுங்கறதா? பெரியவங்க பேசி முடிச்சவனோடுயே ஓடிப்போய்க் கல்யாணம் கட்டிக்கிட்டதா?
கடா கிடா வெட்டி தப்புக்கு தீர்வு கண்டுக்கவா? சொல்லுங்க சீக்கிரம் என்றாள் ஈஸ்வரி இருப்புக் கொள்ளாமல்.
ஒண்ணுமில்லாத பிரச்சனைக்கு எதுக்கு ஒரு வெள்ளாட்டின் விதி முடிக்கணும்?!.
‘நாள் என் செய்யும்? வினைதான் என் செய்யும்!?’ பாட்டைச் சொல்லி, ‘அவள் முருகன் கோயில்ல தானே தாலி கட்டிக்கிட்டா முருகனுக்கே ஒரு மாலை வாங்க்கிப்போட்டு தீர்வை அவங்கிட்டயே விட்டுடு! கடா கிடாவெல்லாம் வெட்ட வேண்டாம்!, வேலும் மயிலும் துணைன்னு நம்பு! மார்கழியாவது ஒண்ணாவது. நடத்தறதே முருகந்தான் அவன் பார்த்துப்பான். மாதங்களில் நான் மார்கழி என்று மாலவனே சொல்லியிருக்கான் மாதங்களில் அவள் மார்கழின்னு கண்ணதாசனே சொல்லியிருக்கார் கலங்காம போ! உன் மகனை நம்பி வந்த பொண்ணு நல்லாயிருப்பா. அவள் மாதங்களில் மார்கழி!’ என்று நம்பிக்கை தர தைரியமாய் நகர்ந்தாள் ஈஸ்வரி.