மாணவி, மனைவி, தாய்

0
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 7, 2013
பார்வையிட்டோர்: 7,714 
 
 

என்னம்மா பணம் கட்டியாச்சா?” நர்ஸ் கேட்டாள்.

“”இன்னும் இல்லேமா… பணம் புரட்டத்தான் போயிருக்காக. வரவும் கட்டுறோம். நீங்க அவளக் கவனிங்கம்மா, ரொம்ப பயமாயிருக்கு” என்று கெஞ்சும் குரலில் கூறினாள் தனலெட்சுமி.

“”என்னத்தக் கவனிக்குறது? ஆபரேஷன் பண்ண வேண்டிய கேசை நான் என்ன கவனிக்க முடியும்? கொழந்தை தலைகீழா கெடக்குது. உடனே சிசேரியன் ஆபரேஷன் பண்ணியாகணும்னு பெரிய டாக்டரம்மாவே சொல்லிட்டாங்க. சொல்லியும் இரண்டு மணி நேரமாச்சு. இன்னும் பணம் கட்டலே. இந்த நிலையிலே நான் என்னமா செய்ய முடியும்? மருந்தெழுதிக் கொடுத்தாங்களே அத வாங்கியாச்சா?”

மாணவி, மனைவி, தாய்“”இல்லே… காசில்லாம எப்பிடி வாங்க முடியும்? எல்லாத்துக்கும் அவரு வந்தாத்தாம்மா முடியும்”

“”ஏமா… கொஞ்சமாவது உங்களுக்கு அறிவிருக்கா? காசில்லாம இந்த ஆஸ்பத்திரிக்கு எதுக்குமா இந்தக் கேசைக் கொண்டு வந்தீங்க? இது என்ன தரும ஆஸ்பத்திரியா காசில்லாம பாக்க? சுத்தப் பட்டிக்காடுங்கறதே அப்படியே காட்டுறீங்களே, போம்மா சீக்கிரமா வர்றாரான்னு பாரு, இதுக்கு மேலேயும் நேரங்கடத்தினா இந்தக் கேசு தாங்காது… அப்புறம் பொணமாத்தான் கொண்டு போகணும்” என்று நர்ஸ் கோபமாகச் சொல்லிவிட்டு வேகமாகப் போய்விட்டாள். தனலெட்சுமி அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றாள்.

“பாவி இப்படி பொணமாத்தான் கொண்டு போகணும்னு, கொஞ்சங் கூட ஈவு இரக்கமில்லாம சொல்றாளே’ என்று தனக்குள் நொந்து கொண்டு ரோட்டுக்கும் மகள் இருக்கும் பெட்டுக்குமாக அலைந்தாள். போன சுப்பையா வரவில்லை.

எண்பதாயிரம் எப்படி அவ்வளவு சீக்கிரமாப் புரட்ட முடியும்? இதுவரையிலும் எண்பதாயிரத்தை மொத்தமாக வாழ்க்கையிலேயே பார்க்காத மனுசன்… எப்படி எண்பதாயிரத்தைப் புரட்டுவார்? என்ன இருக்கு அடகு வைக்க? எல்லாத்துக்கும் நாங்கள்னு சொன்ன மாப்புள வீட்டுக்காரங்க இப்ப எதுவுமே கண்டுக்காம இருக்காகலே, இவரு இப்ப சம்பந்திய பார்க்கத்தான் போயிருப்பாரா? ஒண்ணுமே புரியலியே… புலம்பித் தவித்தாள் அன்னலட்சுமி.

சுப்பையா சம்பந்தி வீட்டுக்குள் நுழைந்தபோது சொகுசான சோபாவில் அமர்ந்து காபியருந்திக் கொண்டிருந்தார் சோமசுந்தரம். சுப்பையாவின் சம்பந்தி.

சுப்பையாவைப் பார்த்ததும், “”ம்ம்… வாங்க சம்பந்தி… காபி சாப்பிடுங்க… என்ன பேறு காலம் முடிஞ்சிருச்சா?

என்ன புள்ளே? பொண்ணா… ஆணா?” பரிதாபமாக விழித்தார் சுப்பையா.

“”மோசமான நிலைமையில இருக்கா தெய்வானே, கொழந்தே தலைகீழாக் கெடக்குதாம். பெரிய டாக்டரம்மா சொன்னாங்க, ஒடனே ஆபரேஷன் செஞ்சாத்தான் ரெண்டு பேரையும் காப்பாத்த முடியும்னு சொல்லிட்டாங்க”

“”என்ன இதுக்குப் போயி பெருசாக் கவலைப்படுறீங்க. இப்ப இதெல்லாம் ரொம்ப சகஜம் சம்பந்தி. ஆபரேஷனைப் பண்ணுங்க, அதுக்கு ஏன் இங்க வந்தீங்க? ” கேட்டதும் உடைந்து போனார் சுப்பையா.

“”என்ன இப்படிக் கேக்குறீங்க… ஆபரேஷனுக்கு மட்டும் எண்பதாயிரம் ரூபாய் கட்டச் சொல்றாக. இன்னும் மருந்து மாத்திரைகள் இருக்கு. இதுக்கெல்லாம் நான் எங்க போவேன்?”

“”என்னைக் கேட்டா? இது உங்க மகளுக்கு தலைப் பிரசவம், இத நீங்கதானே பார்க்கணும்? மாப்பிளை வீட்டுல வந்து கண்ணைக் கசக்கிக்கிட்டு நிக்கிறது உங்களுக்கு வெக்கமாயில்லையா? போங்க… போயி ஆக வேண்டியதப் பாருங்க” என்று சொன்னதும் ஆடிப் போய்விட்டார் சுப்பையா.

“”என்ன சம்பந்தி இப்ப… சொன்னத எல்லாம் மறந்துட்டுப் பேசுறீங்க. எதப்பத்தியும் கவலைப்பட வேண்டாம். எல்லாத்தையும் நாங்க பாத்துக்குறோம். நீங்க பொண்ணை மட்டும் கொடுங்கன்னுதானே சத்தியம் பண்ணாத குறையாச் சொல்லி வற்புறுத்திக் கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க? ஒரு வகையிலே சொந்தம்கிறதாலே படிச்சுக்கிட்டு இருந்த படிப்பையும் பாதியிலேயே நிறுத்திப்புட்டு கல்யாணத்தை தெய்வானை விருப்பத்துக்கு எதிராகவே பண்ணி வச்சோம். இப்ப எல்லாம் மாத்திப் பேசுறீங்க? பேறு காலம்னு சொன்ன போதுகூட ஒண்ணும் கவலைப்படாதீங்க… ஏதாவது பிரசவ நேரம்ன்னா ஒடனே நல்ல ஆஸ்பத்திரியாச் சேத்துப்புட்டு எனக்குத் தகவல் சொல்லியனுப்புங்கன்னு சொன்னதும் நீங்கதானே… இப்ப வெறும் பயல்னு தெரிஞ்சும்… ஆபரேஷன்னா…ஏன் இங்கு வந்தீங்க? தலைப் பிரசவம் பொண்ணு வீட்லதானே பார்க்கணும்னு என்னைக் கேவலப்படுத்துறீங்க? இது சரியா சம்பந்தி?” அழாத குறையாகக் கேட்டார் சுப்பையா.

“”ஆமா இவரு அரிச்சந்திர மகாராஜா சொன்னதையும் செய்வாரு, சொல்லாததையும் செய்வாரு. வெட்கமில்லாம மகளுக்குப் பிரசவ பிச்சை கேட்டு மாப்புள வீட்டுல வந்து நிக்குறீகளே இதை விட மானங்கெட்ட பிழைப்பு வேறென்ன இருக்கு? காசு கொடுத்து வைத்தியம் பார்க்க முடியலைன்னா தரும ஆஸ்பத்திரியில் கொண்டு போட வேண்டியதுதானே? இங்கே வந்தது எதுக்குங்குறேன்?” என்று வீட்டுக்குள்ளிருந்து வந்த முனியம்மாள் கேட்டாள்.

சுப்பையாவின் கன்னங்களில் கண்ணீர் வழிந்தோடியது. “இப்படியெல்லாம் பேச்சு வாங்கவா தெய்வானை கல்யாணம் வேணாம்னு மறுத்தும் இனிக்கப் பேசுன இவுக பேச்சை முழுசா நம்பி பொண்ணைக் கொடுத்தேன். ஏன் இப்ப மாறிப் போனாங்கன்னு தெரியலையே? இனியும் இங்கே நின்றால் என்னென்ன பேசுவாங்களோ?’ என்று தனக்குள் புலம்பியவர், “”ஒங்ககிட்ட நான் கடைசியா ஒண்ணு கேக்குறேன். எனக்கு இனி நீங்க பணம் கொடுத்தாலும் வேணாம். எதுக்கு நீங்க கல்யாணத்துக்கு முன்னாடி நாடகமாடினீங்க… அதுக்குக் காரணம் எனக்குத் தெரியணும்” என்று கோபமாகக் கேட்டார்.

அதற்கு முனியம்மாள், “”இங்கெல்லாம் பொண்ணு இல்லாமலா? இருந்துச்சு… இங்கிருந்த பொண்ணுகள் சரியா படிக்கலை. நம்ம சொந்தத்துல இருக்காளே தெய்வானை, பத்தாவது படிச்சிருக்கா, அதுவும் கொஞ்சம் அழகா இருக்கான்னு நெனைச்சுத்தான் குவைத்துல வேல பாக்குற எம் மவனுக்கு தெய்வானையைப் பேசி முடிக்க வந்தோம். அவ வரும்போதே கூடவே உங்க வீட்டுல உள்ள தரித்திரத்தையும் கொண்டு வருவான்னு யாரு கண்டா? முழுசா மூணு மாசம் இருந்துட்டு அவன் குவைத் போனான். போனவனுக்கு இவ தரித்திரத்தாலே வேலையில்லாமப் போச்சு. ஆறு மாசமா அவங்கிட்ட இருந்து எந்தத் தகவலும் இல்லே. நாங்களே சோழி உருட்டிப் பார்த்தோம். கோடாங்கிகிட்ட குறிகேட்டோம், மலையாளிட்ட ஜோசியமும் பார்த்தோம். உசிருக்குப் பாதகமில்லே… வேறெதுவும் சொல்ல முடியாதுன்னு எல்லாருமே ஒண்ணு போல சொல்லிப்புட்டானுக. இப்ப கடைசியா கெடச்ச சேதி… அவன் குவைத் சிறையில இருக்கான்னு… வருவானா… இல்லையா? எதுவுமே சரியா தெரியலை, இந்த நிலையிலே எம்புள்ளயே எங்களுக்கு நிச்சயமா கிடைப்பானான்னு தெரியாதபோது, இவ புள்ளைக்கு நாங்க ஏன் மருத்துவம் பார்க்கணும்? எல்லாமே தெய்வானையின் தரித்திரம். பிறகு அவ பெத்த தரித்திரமும் எங்க வீடு வந்தா இன்னும் என்னென்ன தரித்திரம் வந்து சேருமோ? நீங்களே மகளுக்கு வைத்தியமும் பார்த்து மகள் புள்ளையையும் ஒங்க வீட்டுக்குள்ளேயே வெச்சுக்கங்க. இனி அவ எங்களுக்கு வேணாம்”

சுப்பையா எதுவும் பேசாமல் அந்த வீட்டை விட்டு வெளியில் வந்தார்.

அப்போது எதிரே வந்த சோமசுந்தரத்தின் தம்பி ராமையா, சுப்பையாவிடம் என்ன? ஏது? என்று விசாரித்தார். சுப்பையா அழுகையுடன் சொன்னார்.

காலை ஒன்பது மணிக்குப் போன சுப்பையா, மதியம் மூன்று மணியளவில் அந்த ஆஸ்பத்திரிக்கு வந்தார். பெட்டில் கிடக்கும் தெய்வானையைப் பார்த்தார். குளுக்கோஸ் நாளம் வழியாக ஓடிக் கொண்டிருந்தது. பக்கத்துத் தொட்டிலில் ஆண் குழந்தையொன்று கால்களை ஆட்டியவாறு விழித்துக் கொண்டிருந்தது. “”கடவுளே நன்றி” என்றார் தன்னை மறந்து சுப்பையா.

“”இல்லை… டாக்டரம்மாவுக்குத்தான் நன்றி சொல்லணும்” என்றாள் தனலெட்சுமி.

“”எப்படி?” என்று நம்ப முடியாதவராகக் கேட்டார் சுப்பையா.

“”இன்னிக்கு ஆபரேஷன் கேசு நாலு. நம்ம தெய்வானை நாலாவது கேசாம். மூணு பேரும் ஆபிரேசன் முடிஞ்சு போய்ட்டாங்க. பணம் கட்டாததாலே நம்ம தெய்வானே மட்டும் போகலே. தெய்வானை வலி தாங்க முடியாமல் கத்தின கத்தில பக்கத்து பெட்டுல உள்ளவங்க எல்லாரும் ஓடி வந்து பார்த்தாங்க. டாக்டரம்மாவும் வந்தாங்க. நான் டாக்டரம்மா கால்ல விழுந்து கெஞ்சுனேன். நீங்க பணம் புரட்டப் போனதைப் பத்திச் சொல்லி அழுதேன். டாக்டரம்மா என்ன நெனைச்சாங்களோ தெரியலை. உடனே ஆபரேஷனுக்குத் தெய்வானையைக் கூட்டிட்டுப் போயிட்டாங்க. அவளுக்கு நல்லபடியா ஆம்பளைப் பையன் பிறந்திருக்கான்”

சிறிது நேரம் கழித்து, சுப்பையா தன்னிடமிருந்த பணத்தை ஆஸ்பத்திரியில் கட்டினார்.

“”ஏதுங்க பணம்? சம்பந்தி வீட்டுல கொடுத்தாங்களா?” என்று கேட்டாள் தனலெட்சுமி.

சுப்பையா பதில் ஏதும் பேசவில்லை. சம்பந்தி சோமசுந்தரத்தின் தம்பி கிட்னி புரோக்கர் ராமையாவைச் சந்தித்ததைப் பற்றி அவர் சொல்லவே இல்லை. இன்னும் சிறிதுநாட்களில், தான் கிட்னி ஆபரேசனுக்குத் தயார் ஆக வேண்டும் என்பதையும் சொல்லவே இல்லை.

– கே.ஜாபர் (ஆகஸ்ட் 2012)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *