(1943ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
1
எங்கள் வீட்டுக்கு எதிரே ஒரு மாடி வீடு: இரண்டு அடுக்கு மெத்தையுடன் பார்ப்பதற்குக் கம்பீரமாக இருக்கும். நாங்கள், எங்கள் வீட்டுக்கு வந்தபோது அந்த மாடி வீடு காலியாய்த்தான் இருந்தது. நாங்கள் முதலில் வீடு பார்க்க வந்த போது வீட்டின் சொந்தக்காரர், “எதிரே இருக்கிறதே மாடி வீடு, அதுவும் என்னுடையதுதான்; பதினைந்து ரூபாய் வாடகை. இந்த வீட்டில் காற்றே வராது. அங்கே மாடிமேல் படுத்துக் கொண்டால் ஜிலு ஜிலு என்று பிய்த்துக்கொண்டு போகும். வேண்டுமானால் அதையும் பாருங்கள்” என்றார். ‘அவ்வளவு பெரிய வீட்டுக்குப் பதினைந்து ரூபாய் வாடகைதானா!” என்ற ஆச்சரியத்துடன், “ஆகட்டும், பார்ப்போம்” என்று அவரிடம் சொன்னேன். ஆனால், பக்கத்து வீட்டிலிருந்த கிழவியொருத்தி என்னிடம் ரகசியமாய், “சாமி! பத்து ரூபாய்க்கு விட்டாலும் அந்த வீட்டுக்கு வராதே அதிலே இருந்தவங்க யாரும் உருப்படலை. அதான் காலியாய்க் கிடக்கு” என்றாள்.
இது மூன்று வருஷங்களுக்கு முந்திய செய்தி; இந்த மூன்று வருஷ காலமாய் – நடுவில் இரண்டரை மாசம் யாரோ குஜராத்திகள் இருந்த காலம் நீங்கலாக – அந்த வீடு காலியாய்த்தான் கிடந்தது. எனவே, அன்று ஆபீஸிலிருந்து வீட்டுக்கு வந்த போது, அந்த மாடி வீட்டில் விளக்கு வெளிச்சம் தெரிவதைப் பார்த்து அதிசயித்தேன். என் அறையில் ஜன்னலருகில் உட்கார்ந்தால், எதிர் வீட்டு மாடி ஜன்னல் கண்ணெதிரே உயரத்தில் தெரியும். அன்று அந்த ஜன்னல் வழியாகப் ‘பெட்ரோமாக்ஸ்’ விளக்கு வெளிச்சம் பளிச்சென்று தெரிந்தது. சாப்பிடும் பொழுது, “எதிர் வீட்டில் யாராவது வந்திருக்கிறார்களா என்ன? விளக்கேற்றி இருக்கிறதே?” என்று ராஜத்தைக் கேட்டேன்.
“ஆமாம், யாரோ வந்திருக்கிறார்களாம். பால்காரி சொன்னாள். என்னவோ பாவம், இந்தப் பாழடைந்த வீட்டுக்கா வரணும்?” என்றாள் .
“ஆமாம்; வீடும் வாசலும் என்ன செய்யும்?, என்னவோ இதெல்லாம் ஒரு நம்பிக்கை. நம் தலையில் எழுதியிருப்பதை வீடு ஒன்றும் அழித்து எழுதப் போகிறதில்லை” என்றேன்.
2
யார் அந்த வீட்டுக்கு வந்திருப்பது என்று அறிந்து கொள்ள என் மனசில் குறுகுறு என்று ஓர் ஆவல் உறுத்திக்கொண்டிருந்தது. ஆனால் அந்த வீட்டுக்காரர்கள் ஒருவரும் கண்ணிலே படவில்லை. ஒரு நாள் மாலை ஜன்னலருகில் உட்கார்ந்து கொண்டு என்னவோ யோசனையாய் எதிர்வீட்டு ஜன்னலைப் பார்த்துக்கொண்டிருக்கையில், திடீரென்று ஒரு புடைவைத் தலைப்பு அந்த ஜன்னல் வழியாய்த் தெரிந்தது. அடுத்த விநாடி ஒரு பெண்ணின் தலையும் முதுகும் தெரிந்தன. குட்டையான கை வைத்துத் தைத்த வெள்ளை ரவிக்கை; ஆகாச வர்ணப் புடைவை; தலையை நன்றாகப் பின்னிப் பாம்பு போல் வட்டமாகச் சுருட்டி முடிந்து கொண்டு அதன் மேல் கதம்ப மாலையை வளைவாக வைத்துக்கொண்டிருந்தாள். இதெல்லாம் ஸினிமா வந்த பிறகு ஏற்பட்ட ‘பாஷன்’ கள். இருந்தாலும், இளம் பெண்களுக்கு ஒரு புது அழகை அவை கொடுக்கத்தான் செய்கின்றன. ஒரு தடவைக்கு இரண்டு தடவையாக அந்தப் பக்கம் திரும்பிப் பார்க்கும்படி நம்மைத் தூண்டுகின்றன என்பதிலும் சந்தேகமில்லை.
கண் கொட்டாமல் அப்படியே இந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தேன் போலிருக்கிறது. “என்ன அங்கே அவ்வளவு சுவாரஸ்யமான விஷயம்?” என்று கேட்டுக் கொண்டே பின்னால் வந்து நின்ற ராஜம், தானும் நிமிர்ந்து பார்த்தாள். அப்பொழுதுதான் அந்தப் பெண்ணின் உருவம் மறைந்தது.
ராஜம் குறும்புச் சிரிப்புடன் என் பக்கம் திரும்பி, “ஓஹோ! ரொம்ப ஸ்வாரஸ்யமான விஷயந்தான்; என்ன என்று பார்த்தேன். அப்படியே கண்ணினாலேயே விழுங்கி விடுவீர்கள் போல் இருந்தது!” என்றாள்.
“பார்த்தால் என்ன தப்பு?” என்றேன்.
“தப்பொன்றும் இல்லை; ஆனாலும், இப்படித் தானா பொம்மனாட்டிகளை முறைத்துப் பார்ப்பது? யாராவது பார்த்தால் என்ன நினைப்பார்கள்?”
“யாரும் பார்க்கவில்லை – உன்னைத் தவிர, உனக்குத்தான் ஏன் இவ்வளவு பொறாமை? கண்ணுக்கு அழகாயிருந்தால் எதுவானாலும் பார்க்கத்தான் தோன்றுகிறது. மனித சுபாவந்தானே?” என்றேன்.
ராஜம், “ஊம்,” என்று இழுத்துவிட்டு மறுபடியும் அந்த ஜன்னலை நோக்கினாள். ஆனால் இப்போது அங்கே ஒருவரும் இல்லை; “கண்ணுக்கு அழகாய் இருக்கிறதாமே! எது கண்ணுக்கு அழகாய் இருந்தாலும் பார்ப்பாராம் இவர்!” என்று தனக்குத் தானே சொல்லிக்கொண்டாள்.
அன்று மாலையில் ஆபீஸிலிருந்து வந்தபொழுது, என் அறையின் ஜன்னலுக்கு ஒரு திரை போடப்பட்டிருந்தது; மனசுக்குள் சிரித்துக்கொண்டு அதைக் கவனிக்காதது போல் இருக்கையில், “இந்த ஸ்கிரீனைப் பாருங்களேன். கண்ணுக்கு அழகாய் இல்லையா இது?” என்றாள் ராஜம்.
“அழகாய்த்தான் இருக்கிறது. ஆனால் இதையே எத்தனை நேரம் பார்த்துக்கொண்டிருக்க முடியும்? கொஞ்சநேரம் பார்த்துக்கொண்டிருந்தால் அலுத்துப் போய்விடும். அப்போது இதை இப்படி ஒதுக்கி விட்டு வேறு எதையாவது பார்க்கலாம்” என்று சொல்லிக்கொண்டே நிமிர்ந்து பார்த்தேன்.
“உளறாதேங்கோ; யார் காதிலாவது விழப் போகிறது!” என்று ராஜம் என் கையைப் பிடித்து என்னை ஜன்னலெதிரிலிருந்து தூர இழுத்தாள். அவள் குரலும் பார்வையும் ஒரு மாதிரியாக இருந்ததால், “ஓஹோ! இனிமேல் விளையாடக் கூடாது ஆபத்துத்தான்” என்று நினைத்துக் கொண்டேன். ஆனால் ஏற்கனவே நான் விளையாட்டாகப் பேசி விட்ட பேச்சு அவள் மனசில் எவ்வளவு விபரீதமான கிளர்ச்சிகளை உண்டு பண்ணப் போகிறது என்பதை நான் அப்போது உணரவில்லை.
3
இரண்டு மூன்று நாட்களுக்குப் பிறகு காலையில் பத்திரிகை படித்துக்கொண்டு உட்கார்ந்திருக்கையில், எதிர்வீட்டு மாடி ஜன்னற் கதவைத் திறக்கும் சப்தம் கேட்டு நிமிர்ந்து பார்த்தபோது, அந்தப் பெண் அங்கே நின்றுகொண்டிருந்தாள். அவளை நான் பார்த்ததை அவள் கண்டுகொள்ளக் கூடாது என்று மறுபடியும் பத்திரிகையில் கவனத்தைச் செலுத்தினேன். “அவள் அந்த ஜன்னலை விட்டுப் போகிற வரையில் நாம் அந்தப் பக்கம் பார்க்கக்கூடாது. நாம் பார்ப்பதை அவள் அறிந்தால் ஏதாவது நினைத்துக் கொள்வாள். ஆனாலும், இப்படி எதிரும் புதிருமாக ஜன்னல் வைத்து வீடு கட்டக்கூடாது. மடையன்கள்!” என்று மனசுக்குள் சொல்லிக் கொண்டேன். அப்போது யாரோ, “அவள் இன்னும் அங்கேயே நின்று கொண்டுதான் இருக்கிறாள். உன்னையேதான் பார்த்துக்கொண்டிருக்கிறாள்” என்று மனசில் சொல்லுவதுபோல் இருந்தது. எந்தக் காரியம் செய்யக் கூடாது என்று தீர்மானிக்கிறோமோ, அதையே செய்யும்படி இந்தப் பொல்லாத மனம் தூண்டுகிறது. ஆகையால் மறுபடியும் திரும்பிப் பார்த்தேன். நான் நினைத்தபடியே அவள் என்னையேதான் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“என்ன இது? நாம் அவளைப் பார்க்கச் சங்கோசப்படுகிறோம்; அவளோ கொஞ்சமும் பயமில்லாமல் நம்மையே பார்க்கிறாள். ஒரு பெண்ணுக்கு நாம் பயந்துவிடுவதா? நாமுந்தான் பார்ப்போமே; அவள் தான் வேண்டுமென்றால், அந்த இடத்தை விட்டுப் போகட்டுமே!” என்று மனம் தூண்டியது.
இப்படி ஒருவரை யொருவர் பார்த்துக்கொண்டிருக்கையில் ராஜம் வந்துவிட்டாள். “சிலு சிலு என்று இருக்கிறது. இன்றைக்குப் பச்சைத் தண்ணீரில் குளிக்க வேண்டாம். வெந்நீர் போடுகிறேன்” என்று சொல்லிக்கொண்டு வந்தவள், திடீரென்று நின்று ஒரு கணம் என்னை முறைத்துப் பார்த்து விட்டு வெளியே போய்விட்டாள். அப்புறம் அவள் அன்று என்னுடன் சரியாக ஒரு வார்த்தையும் பேசவில்லை. ‘ஏது, இந்தப் பாழடைந்த வீட்டுக்கு இவர்கள் குடி வந்ததில் கஷ்டகாலம் நம்மைப் பிடித்துக்கொள்ளும்போல் இருக்கிறதே!’ என்று தோன்றிற்று. அப்படி வருகிற கஷ்டகாலம் தாம்பத்தியத் தகராறு ரூபமாக வந்தால், ஸினிமாப் பேச்சை எடுத்ததும் ஓடிப் போவதை முன்பு பல தடவை பார்த்திருந்தேன். ஆகையால், ஆபீஸுக்குப் புறப்படுகையில், “இன்று சீக்கிரம் வந்து விடுகிறேன்; ஸினிமாவுக்குப் போகலாம்; ‘ட்ரெஸ்’ பண்ணிக் கொண்டு தயாராய் இரு” என்று சிரித்துக்கொண்டே சொல்லிவிட்டுப் போனேன்.
சொன்னபடி அன்று செய்திருந்தால் அப்புறம் ஒரு ரகளையும் நடந்திராதோ என்னவோ? ஆனால் அன்று ஆபீஸிலிருந்து வீட்டிற்கு வரும்போதே மணி ஏழாகிவிட்டது. ராஜமோ ஸினிமாவைப் பற்றி ஒரு வார்த்தையும் பேசாமல் மௌனம் சாதித்தாள். சண்டை போட்டாலும் தேவலை; பதிலுக்கு ஏதாவது சொல்லிச் சமாதானப்படுத்தலாம். அல்லது, ஆறு வருஷங்களுக்கு முன் அவள் அப்பா எனக்கு வெள்ளித்தட்டு செய்து தருகிறேன் என்று சொல்லி ஏமாற்றி விட்டதையாவது ஞாபக மூட்டலாம். இந்த மௌனமோ சகிக்க முடியவில்லை. ‘இயற்கைக்கு மாறான இந்த அமைதி நீடித்திருக்கக் கூடியதல்ல. சீக்கிரம் புயல் வீசப் போகிறது’ என்று நினைத்துக் கொண்டேன்.
மறுநாள் ஆபீஸிலிருந்து வந்ததுமே வீட்டில் புயலின் அறிகுறிகள் காணப்பட்டன. ராஜத்தைப் பார்த்தால் ஜுரத்தில் அடிபட்டவள் போலிருந்தாள். ஒரு பழைய புடைவையைக் கட்டிக்கொண்டிருந்தாள், முகம் அலம்பிக் கொள்ளவில்லை; தலை வாரிப் பின்னிக் கொள்ளவில்லை.
“ராஜம்!” என்று கூப்பிட்டேன்.
“ஏன்” என்று உள்ளேயிருந்து பதில் வந்தது.
“இந்தா!”
ராஜம் வந்து எதிரில் நின்றாள். என் முகத்தை நேருக்கு நேர் பார்க்கப் பயப்படுகிறவள் போல் தோன்றிற்று. முதலில் காலண்டரைப் பார்த்தாள்; அப்புறம் கடிகாரத்தை – அப்புறம் என்னை – மறுபடியும் காலண்டர்!
மெள்ள அவள் கையை எட்டிப் பிடித்தேன். “நேற்று ஸினிமாவுக்குப் போகலாமென்று சொன்னேனோ இல்லையோ? ஆபீஸில் ரொம்ப நாழிகையாகி விட்டது. இன்றைக்குப் போகலாமா? எங்கே, ‘ட்ரெஸ்’ பண்ணிக்கொண்டு கிளம்பு, பார்ப்போம்” என்றேன்.
அரை நிமிஷம் தயக்கம். அப்புறம் மேஜைமேல் விரலினால் கோடு கிழித்துக்கொண்டே, “நீங்கள் போங்கள். நான் வரவில்லை” என்றாள்.
“ஏன்? உனக்கு என்ன உடம்பு? ஒரு மாதிரி இருக்கிறாயே?” என்றேன்.
சிறிது நேரம் பதில் வரவில்லை. உதடுகள் துடித்தன.
“உடம்பு ஒன்றும் இல்லை.”
“பின் ஏன் வரமாட்டேன் என்கிறாய்?”
நான் எதிர்பார்த்தபடி நேர்ந்து விட்டது. ராஜம் விசித்துக்கொண்டே, “நான் பார்ப்பதற்கு அழகாய் இருக்கிறேனா என்ன?” என்று சொல்லிவிட்டு, சட்டென்று சமையல் கட்டுக்குப் போய்விட்டாள்.
எப்படி அவளைச் சமாதானப்படுத்துவது என்று எனக்குப் புரியவில்லை. எழுந்துபோய், “இதோ பார் ராஜம்; என்ன இப்படி அசடாக இருக்கிறாய்?” என்று கேட்டேன். கீழே உட்கார்ந்து அழுது கொண்டே, “நான் ஒன்றும் அசடு இல்லை. நீங்கள் என்ன பண்ணிக்கொண்டிருக்கிறீர்கள் என்பது தெரிந்துதான் இருக்கிறது” என்றாள்.
“சீ, பைத்தியமே!” என்றேன்.
“அவள் கூடத்தான் சொன்னாள். அந்த வீட்டுக்கு மத்தியான்னம் போயிருந்தேன். ‘அந்த ஜன்னலெதிரில் உட்கார்ந்துகொண்டு ஒருவர் சதா என்னையே பார்க்கிறாரே, அவர் யார்?’ என்று கேட்டாள். எனக்கு அவமானமாயிருந்தது” என்றாள் ராஜம்.
எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. ஆபீஸில் அன்று நண்பரொருவர் சொன்ன செய்தியும் ஞாபகம் வந்தது.
“அந்த வீட்டுக்கு நீ போனாயா என்ன? ஐயையோ! அவள் குடித்தனக்காரி இல்லையாமே?” என்றேன்.
ராஜம் ஒரு கணம் திகைத்தாள்; பிறகு, “அது எனக்கு எப்படித் தெரியும்? நீங்கள் எல்லாம் விசாரித்து வைத்துக்கொண்டிருக்கிறீர்கள்” என்றாள்.
“சீச்சீ! எனக்கும் இன்றுதான் தெரியும். ஆபீஸில் ஒருவர் சொன்னார்” என்றேன்.
“ஆபீஸிலே கூட உங்களுக்கு அவளைப்பற்றித் தானே பேச்சு! எனக்குத் தெரியுமே! நீங்கள் சதா அவள் ஞாபகமாகவே…” – ஒரு பெரிய தேம்பலில் மற்ற வார்த்தைகள் அமுங்கிப் போயின.
மேலே பேசுவதில் பிரயோஜனம் இல்லை என்று மறுபடியும் போய் உட்கார்ந்து கொண்டேன்.மனமோ சமாதானம் அடையவில்லை. எப்போதுமே பெண்களிடம் இரக்கம் அதிகம் எனக்கு. அவர்கள் கண்ணீர் விட்டால் என் மனம் கேட்காது. யாராவது ஸ்திரீகளைக் கோபமாக ஒரு வார்த்தை சொன்னால், “என்ன மிருகத்தனம்?” என்று நினைப்பேன். இப்போது ராஜமே இப்படி அழுகிறது என்றால் சொல்லவேண்டுமா?
4
அன்று குடை வைத்துக்கொண்டிருந்தேனோ பிழைத்தேன். ஆபீஸிலிருந்து கிளம்புவதற்கு ஒரு மணிக்கு முன்னிருந்தே மழை இருட்டிக்கொண்டு வந்து விட்டது. அதனுடன் ஒரே மின்னலும், இடியும். மழை மிகுதியாவதற்குள் வீடுபோய்ச் சேரலாம் என்று அவசரமாக நடந்தேன். ஏற்கனவே, இந்த இருட்டடிப்புக்காகப் பாதி விளக்குகளை அணைத்து விட்டார்களா? இந்தக் காற்றிலும் மழையிலும், மிஞ்சியிருந்த வெளிச்சமும் மறைந்து விட்டது. குடையைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு தட்டுத் தடுமாறி நடந்தேன். அன்றெல்லாம் என் மனம் சரியாக இல்லை. ராஜத்தை எப்படிச் சமாதானப் படுத்துவது என்ற கவலையாகவே இருந்தவனுக்கு இந்த மழை சிறிதும் உத்ஸாகம் உண்டுபண்ணவில்லை. கண் தெரியாமல், ஜலம் தேங்கியிருந்த இடங்களில் சொதக்கென்று காலை வைக்கும்போதெல்லாம் எரிச்சல் பற்றிக்கொண்டு வந்தது.
ஒரு வழியாய் வீடு வந்து சேர்ந்தேன். கதவு மூடப்பட்டு உள்ளே தாழ்ப்பாள் போட்டிருந்தது. குடையை மடக்கிவிட்டுக் கதவை இடித்தால், ஹோ என்ற மழை இரைச்சலில் நான் கதவைத் தட்டினது எனக்கே கேட்கவில்லை. ராஜம் வந்து கதவைத் திறப்பாள் என்று நினைத்துக்கொண்டு வெளித் திண்ணைமேல் உட்கார்ந்து மாடி வீட்டைப் பார்த்தேன்.
அந்த வீட்டெதிரே ஒரு விளக்குக் கம்பம். மூடி போட்டிருந்த அந்த விளக்கின் வெளிச்சம். வீட்டின் எதிரே தரையில் பெரிய வட்டமாக விழுந்திருந்தது. காற்றில் அந்த மூடி ஆடும்போது அந்த வட்டமும் தரையில் ஆடுவதைப் பார்த்துக் கொண்டிருக்கையில் மாடி ஜன்னல் வழியாக மங்கலான விளக்கு வெளிச்சம் தெரிந்து சட்டென்று மறைந்தது. யாரோ ஜன்னல் கதவுகளை மூடினார்கள். அடுத்த நிமிஷம், இன்னொரு கோடியில் இருந்த ஜன்னலில் வெளிச்சம் தெரிந்து உடனே கதவுகளும் மூடப்பட்டன. உட்கார்ந்து கொண்டிருந்தவன் திடீரென்று எழுந்து நின்றேன். மறுபடியும் கதவை இடிக்கவேண்டும் என்று தோன்றவில்லை. எதற்காக உள்ளே போக வேண்டும்? சிரித்த முகத்துடன் என்னை வரவேற்க உள்ளே யார் காத்துக்கொண்டு இருக்கிறார்கள்? எண்ணெய் வழியும் முகத்துடன், அழுக்குப் புடைவை கட்டிக்கொண்டு ராஜம் கோபத்துடன் உட்கார்ந்திருக்கப் போகிறாள்…
அந்த மாடி வீட்டுப் பெண்ணின் உருவம், அன்று ஜன்னல் எதிரில் வந்து நின்ற கோலத்தில் என் மனக்கண் முன் தோன்றிற்று.
என்ன காரியம் செய்கிறோம் என்றே எனக்குப் புரியவில்லை. என்னவென்று விளங்காத ஒரு சக்தி அந்த மாடி வீட்டை நோக்கி என்னை இழுப்பது போன் றிருந்தது.
மடித்த குடையைப் பிரிக்காமலே அந்த மழையில் விடு விடென்று எதிர் வீட்டை நோக்கி நடந்தேன். படிகளின் மேல் காலை வைத்து ஏறின வேகத்தில், வீட்டுக்குள்ளிருந்து கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்த ஓர் உருவத்தின் மேல் மோதிக்கொண்டேன். புகைந்துகொண்டிருந்த ஹரிக்கேன் விளக்குடன் வெளியே வந்த அந்த மனிதர், கதவை இழுத்துப் பூட்டிக் கொண்டே, “என்ன ஸ்வாமி, சௌக்கியமா?” என்றார்.
மாடி வீட்டின் சொந்தக்காரர்தான் அவர் என்று தெரிந்ததும் எனக்குத் திடுக்கிட்டது.
“என்ன ரெட்டியாரே, மறுபடியும் வீட்டைச் சாத்திப் பூட்டுகிறீர்?”
“ஆமாம் ஸ்வாமி, ஒரு குடித்தனம் வந்தது என்று வைத்தேன். அவர்கள் ஒரு மாச வாடகையுடன் அட்வான்ஸும் கொடுத்து விட்டு, திடீரென்று வீட்டைக் காலி பண்ணிக்கொண்டு போய்விட்டார்கள்! எதிர் வீட்டில் ஒரு தடியன் உட்கார்ந்து கொண்டு சதா முறைத்துப் பார்க்கிறான் என்று காரணம் சொன்னார்கள். என்னவோ என்று பார்க்தேனே ஐயா உம்மை! பலே பேர்வழியாயிருக்கிறீரே?” என்றார்.
அந்தக் காற்றிலும் மழையிலும் எனக்குக் குபீரென்று உடல் வியர்த்துவிட்டது. மறுபடியும் என் வீட்டுக்கு வந்து ஓங்கிக் கதவை இடித்தேன். “யார்? நீங்களா?” என்று கேட்டுக்கொண்டே, கையில் விளக்குடன் வந்து கதவைத் திறந்த ராஜம், என்னைப் பார்த்ததும், “ஐயையோ! என்ன இப்படித் தெப்பமாய் நனைந்து விட்டீர்கள்! தலையைத் துடைத்துக் கொள்ளுங்கள். சாம்பிராணி கொண்டு வரட்டுமா? என் அதிருஷ்டத்தைப் பாருங்கள். இன்றைக்கு நீங்கள் சீக்கிரம் வந்தால் ஸினிமாவுக்குப் போகலாம் என்று நினைத்தேன்; மூன்று மணியே பிடித்து ட்ரெஸ் பண்ணிண்டேன். இப்படி மழை பிடித்துக் கொண்டது-” என்று பேசிக்கொண்டே போனாள்.
“சாம்பிராணியும் வேண்டாம், ஒன்றும் வேண்டாம்! இந்தா!” என்று அவள் முகத்தைப் பிடித்து நிமிர்த்தினேன்.
ராஜம் என் பிடியிலிருந்து திமிறிக்கொண்டு, “எதிர் வீட்டிலே அவள் காலி பண்ணிக்கொண்டு போய் விட்டாள்!” என்றாள் குறும்புச் சிரிப்புடன்.
வெளியில் மழை பெய்தால் என்ன, புயல் தான் அடித்தால் என்ன? அன்று என் வீட்டில் அமைதி நிலவியது.
– காளியின் கண்கள் (சிறு கதைகள்), முதற் பதிப்பு: செப்டெம்பர் 1943, கலைமகள் காரியாலயம், சென்னை.