மாக்காளை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 21, 2024
பார்வையிட்டோர்: 954 
 
 

மந்தையம்மன் கோவில் வாசலில் கிடந்த சோனைசேர்வையின் உடலைச் சுற்றி ஈக்கள் மொய்த்தபோதுதான், ‘அவர் இறந்துவிட்டார்’ என்ற செய்தி அவரின் மகளுக்குத் தெரியவந்தது. 

சோனையை இங்குக் கிடத்தி வருஷம் பத்தாகிவிட்டது. இடுப்புக்குக் கீழ்ச் செயல்படாத உடலைத் தன்னிரு வலுவான கரங்களால் உந்தி உந்தி இழுத்து இழுத்து ஊர்ந்து ஊர்ந்து பத்து மீட்டர் சுற்றளவில் இடம்பெயர்ந்து கொண்டிருந்தார் சோனை. 

கடந்த இரண்டு ஆண்டுகளாகக் கண் பார்வை மங்கத் தொடங்கி, கடந்த மாதத்திலிருந்து பார்வை முழுவதுமாகப் போய்விட்டது. கோவில் வாசலில் கழிக்கக்கூடாது என்பதற்காகவே தட்டுத் தடுமாறி வலது புறமாகவே மெல்ல மெல்ல ஊர்ந்து ஊர்ந்து சென்று இடது புறமாகத் திரும்பி கோவிலின் பின்புறம் உள்ள முட்புதரில் கழித்து விட்டு வருவார். குளிப்பதே இல்லை. மழை பொழியும்போது நனைவதோடு சரி. 

15 ஆண்டுகளுக்கு முன்பு மகன்கள் இருவரும் சொத்தைப் பிரித்துக் கொடுக்கும்படி சண்டையிட்டு வலுக்கட்டாயமாக இவரிடமிருந்து சொத்தைப் பறித்துக் கொண்டனர். ஊரார் பேசி பஞ்சாயத்து செய்தபின்னர் ஆளுக்கு ஒருமாதம் சோனையைப் பராமரிப்பதாக ஒப்புக்கொண்டனர். ஆறு மாதங்கூட அது நீடிக்கவில்லை. ‘போதுமடா சாமி!’ என்றாகிவிட்டது சோனைக்கு. பிறகென்ன, தன் மகள் வீட்டு வாசலில் வந்து கையேந்தி நின்றார். மருமகனின் தயவால் திண்ணையில் இடம் கிடைத்தது. ஐந்தாண்டுகள் இருவேளை சோறு, திண்ணையில் தூக்கமெனக் கழிந்தன சோனைக்கு. 

ஒரு கோடை மதியத்தில் திண்ணையில் தூங்கிக் கொண்டிருந்த சோனையைத் தெருவழியாகச் சென்ற காரிக்காளை பதம் பார்த்து விட்டது. அது கொம்பலசியபோது அதில் சோனையின் வேஷ்டி சிக்கிக்கொண்டது. ஓர் இழுப்பில் சோனை சரிந்து தெருவில் விழுந்தார். அவர் சுதாரிப்பதற்குள் இடுப்பில் மதித்து விட்டுச் சென்றது காளை. துடித்துப் போனார் சோனை. 

 வண்டி கட்டி அவரை துளாவூர் நுட வைத்திய சாலைக்குக் கொண்டு போனபோது தலைமை வைத்தியர், “ வயசு எண்பதாயிடுச்சுல்ல. எலும்பு சேருமா? அதுவும் இடுப்பெலும்பு! அப்படியே வச்சுக்கிட்டு இனியிருக்குற கொஞ்சக் காலத்தையும் ஓட்ட வேண்டியதுதான்” என்று கூறி கைவிரித்து விட்டார். பிறகென்ன, ‘சோனையைத் திண்ணையில் படுக்க வைத்தால் அவரால் கழிக்க, குளிக்க முடியாதே!’ என்று நினைத்து கோவில் வாசலில் கிடத்திவிட்டார்கள். 

சோனையின் கைகள் உலகைகள் போல இருக்கும். பத்து வயதிலேயே ஜல்லிக்கட்டுலிருந்து திரும்பி வரும் மாடுகளின் கொம்புகளைப் பிடிக்க அலைந்த கைகள் அவை. வளர வளர ‘முரட்டுப் பையன்’ என்ற பெயரெடுத்தவர் சோனை. இளந்தாரியாக வளர்ந்த பின்னர் ‘முரடன்’ என்ற பெயர் வந்தது அவருக்கு. நண்பர் வட்டாரத்தில் ‘முரட்டுச் சோனை’ என்றுதான் அவருக்குப் பெயர். 15 வயதில் மாடு பிடிக்கத் தொடங்கி 72 வயது வரை களத்தில் இருந்தார் சோனை. ‘சுற்றுவட்டாரத்தில் ஏறத்தாழ மூன்று தலைமுறைகளாக அவரின் கைகள் கொம்பில் படாத காளைகளே இல்லை’ என்ற நிலைதான் இருந்தது. 

படுக்கப் பாயும் போர்த்திக்கொள்ள போர்வையும் மருமகன் வாங்கித் தந்தான். சோறைச் சட்டியில் போட்டு, நாளும் இரண்டு வேளைகள் மகள் கொடுத்தாள்.  அவரின் நண்பர்களின் மகன்களுள் சிலர் அவருக்கு அவ்வப்போது சிறுதொகையோ அல்லது தின்பண்டங்களோ கொடுத்து வந்தனர். சோனை தன் வலுவான கைகளை மட்டுமே நம்பிக்கொண்டு தன் இறுதிக் காலத்தைத் தன் உடலோடு சேர்த்து இழுத்து நகர்த்தி வந்தார். 

இளமையில் சோனை தன் பூர்வீக வீட்டில்தான் குடியிருந்தார். ‘வேலை’ என்று அவர் எங்கும் சென்று யாரிடமும் கைநீட்டி நின்று ஊதியம் பெற்றதில்லை. அவரைத் தேடி வேலை வந்தது. பழத்தட்டில் வைத்துதான் அவருக்குரிய கூலிகளைக் காணிக்கையாக தந்தார்கள். ஜல்லிக்கட்டு மாடுகளைப் பழக்குவதுதான் சோனைக்குப் பிடித்த வேலை. எல்லா ஊர் ஜல்லிக்கட்டுலும் சோனியின் தலைமையில் வாலிபர் குழு களமிறங்கும். அந்தக் குழுவினர் காளைகளை அடக்கி அள்ளி வரும் பரிசுகளில் மூன்றில் ஒரு பங்கு சோனைக்குத்தான் என்பது எழுதப்படாத சட்டமாக இருந்தது. அவரின் வாழ்வாதாரத்திற்கு இதுவே போதுமானதாக இருந்தது. 

அவ்வப்போது ஏதாவது அடிதடி, ஊர்க் கலவரம் அல்லது கட்டப்பஞ்சாயத்து எனக்குக் கூறி சோனையைச் சிலர் அழைத்துச் செல்வதும் உண்டு. தன் உலக்கை கையால் பிறரின் எலும்புகளை உடைத்தும் முறித்தும் சமரசம் செய்து வருவார் சோனை. இதற்கெல்லாம் பணம் தர மாட்டார்கள். சீமை சாராயமும் பரத்தையர் கூட்டும்தான். ஒவ்வொரு முறையும் இது போன்றவற்றுக்கு இவரை அழைத்துச் செல்வோர் வேலை முடிந்ததும் ஒரு வாரம் தங்க வைத்து உபசரித்துத்தான் அனுப்பி வைப்பார்கள். இப்படியே குடித்து, களித்துத் திரிந்த சோனைக்குச் சொந்தத்தில் பெண் கிடைக்கவில்லை. வயது ஏறிக்கொண்டே இருந்தது. 

பாலமேடு ஜல்லிக்கட்டுக்குத் தன் மாக்காளையோடு வந்திருந்தார் பாண்டிசேர்வை. ‘தன்னுடைய மாக்காளையை யாரும் தொட்டுவிடக் கூடாது’ என்றும் ‘ ‘பிடிபடாத மாடு’ என்ற பெருமையோடு ஒவ்வொரு ஜல்லிக்கட்டுக்கும் சென்று திரும்ப வேண்டும்’ என்று நினைத்தார் பாண்டிசேர்வை. அவருக்குச் சோனையைப் பற்றியும் அவரின் குழுவினரைப் பற்றியும் நன்றாகவே தெரியும். யானையையே அடக்கிவிடும் படையினர் இவர்கள் என்பதால், இவர்களிடம் அவர் ரகசியமாக ஒப்பந்தம் செய்துகொண்டார். அதனால் அன்று மட்டுமல்ல அதன் பின்னர் சில ஆண்டுகள் வரை பாண்டிசேர்வையின் மாக்காளையைச் சோனையும் சோனையும் நண்பர்களும் அடக்க முன்வரவில்லை.  

 “அஞ்சு ஏக்கர் நிலமும் என் தங்கச்சியையும் தாரேன்” என்றார் பாண்டிசேர்வை. ஒப்புக்கொண்டார் சோனை. தன்னுடைய பத்து தோழர்களுக்கும் தலா அரை ஏக்கரா நிலத்தைப் பிரித்துக் கொடுத்துவிட்டு, பாண்டிசேர்வையின் தங்கையைக் கட்டிக்கொண்டார் சோனை. மூன்று பிள்ளைகளைப் பெற்றுக்கொண்டார்.  

ஒருமுறை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பாண்டிசேர்வையின் மாக்காளை களமிறங்கியபோது, சோனை வாக்குத் தவறிவிட்டார். மாக்காளை அவரின் உலக்கை போன்ற கைகளுக்குள் அகப்பட்டு, நுரை தள்ளி மண்ணில் சரிந்தது. களத்திலேயே பாண்டிச்சேர்வைக்கும் சோனைக் குழுவினருக்கும் கைகலப்பு ஏற்பட்டு, விஷயம் காவல் நிலையம் வரை சென்றது. 

உறவை முற்றாக முறித்துக் கொண்டு பாண்டிசேர்வை தன் தங்கையையும்  மூன்று பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு சென்றுவிட்டதால் சினமேறி, சாராயம் குடித்து பித்தேறி, பிதற்றித் திரிந்த சோனைக் குழுவினர் பத்தேக்கரா நிலத்திலும் எருக்கஞ்செடியை வளர்த்து நிலத்தை பாழாக்கினர். பின்னர் பலமுறை பஞ்சாயத்து பேசியும் சோனையின் குடும்பம் ஒன்றுசேரவில்லை. சோனை தனிமரமானார்.  

அவரின் பிள்ளைகள் வளர்ந்து, பாடுபட்டு உழைத்து, முன்னேறி திருமணம் செய்து பிள்ளைகளைப் பெற்ற பின்னர் தம் தாயின் இறப்புத்தான் சோனைக்குத் தகவல் தெரிவித்தனர். சோனை சென்றார். தன் மகளுக்கு மட்டும் ஆறுதல் கூறினார். தன் உலக்கையால் கொள்ளிபோட்டு விட்டு வந்தார். 

வருஷம் திரும்புவதற்குள் சொத்துத்தகராறு தொடங்கியது. அது ஆண்டுக் கணக்கில் நீண்டது. ‘சிவில்’ வழக்கு என்பதால் அதனை முடிந்த அளவுக்கு இழுத்தடித்தார் சோனை. சோனையின் கைத்தளர்ந்து அவருக்கு வருமானம் முடங்கியபோது மீண்டும் பிள்ளைகள் சொத்து பற்றிப் பேச்சை எழுப்பினர். இந்த முறை அவர்கள் நீதிமன்றத்தை நம்பவில்லை. கட்டப்பஞ்சாயத்து வைத்து பறித்துக் கொண்டனர். தங்க இடமின்றிச் சோற்றுக்கு வழியின்றித் தனிமரமாக நின்றார் சோனை.  

சோனையின் மரணம் அவரின் மகள் வழியாக ஊருக்குள் பரவியபோது சோனைக் குழுவினருள் சிலர் மட்டுமே வந்து கூடினர். எருக்கஞ்செடி வளர்ந்து கரட்டுக் காடாகிப்போன பத்தேக்கரா நிலத்தின் மத்தியில் மற்றுமொரு எருக்கஞ்செடியாகச் சோனையின் உடலை நட்டுவிட்டுத் திரும்பினர் சோனைக் குழுவினர். 

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *