கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 10, 2012
பார்வையிட்டோர்: 19,390 
 
 

”அங்க போயி மரம் மாதிரி நிக்காதீங்க… ஒங்க தங்கச்சிகிட்டவும் அம்மாகிட்டவும் பேசுங்க!”

”என்னய போகச் சொல்லுதியே… நீயே போயிட்டு வந்தா என்ன?”

”ஒங்க தலையில என்ன களிமண்ணா இருக்கு? பொம்பள போயிப் பேசதுக்கும் ஆம்பள பேசதுக்கும் வித்தியாசம் இருக்குய்யா. நீங்க ஒங்க தங்கச்சி, அம்மாங்கிற உருத்தோட பேசலாம். நான் அப்பிடிப் பேச முடியுமா? என்ன இருந்தாலும் நான் அடுத்த வீட்டுக்கு வாக்கப்பட்டு வந்தவதான?” என்றாள் சிவகாமி.

பேச்சியப்பனுக்குத் தன் தங்கச்சியிடமும் அம்மாவிடமும் இதைப் போய்ப் பேசுவதற்கு இஷ்டம் இல்லை. மகேஸ் இரண்டு பெண்களை வைத்துக்கொண்டு கஷ்டப்படுகிறாள். அவளுடைய புருஷனுக்கு ஒழுங்கான வேலை கிடையாது. இட்லி சுட்டு, வடை சுட்டு என்று காலத்தை ஓட்டு கிறாள். சிவகாமி நினைப்பதுபோல் கயத்தாறில் அந்த இரண்டு வீடுகளுக்கு என்ன பெரிய வாடகை வந்துவிடும்? அதில் போய், ஒரு வீட்டு வாடகையைப் பங்கு கேள் என்கிறாளே சிவகாமி. அவனுக்கு அந்த யோசனையே சுத்தமாகப் பிடிக்கவில்லை.

”இதுக்கு எதுக்கு நேர்ல போகணுங்கேன்? மகேஸுகிட்டச் செல்லுல பேசுனா போதாதா?”

”வெவரம் புரியாமப் பேசாதீய… வாடகைப் பணத்தக் கேக்க மட்டும் போகல… ஒங்க அம்மய இங்க கூட்டிக்கிட்டு வரணும்லா? ஒங்க அம்மய அவ தன்கூட வச்சுக்கிட்டுதான் ரெண்டு வீட்டு வாடகைப் பணத்தையும் வாங்கி முடிஞ்சுக்கிடுதா!”

”அம்மய இங்க கூட்டிட்டு வந்து என்ன செய்ய? அவகூட சண்டை போடதுக்கா..?”

”ஒங்க அம்மன்னா ஒங்களுக்குப் பொத்துக்கிட்டு வந்துருமே… நான் என்னைக்கு ஒங்க அம்மகூடச் சண்டை போட்டேன்? பல்லு மேல நாக்கைப் போட்டுப் பேசுதேளே? ஒங்க அம்ம போடாத சண்டையா? அவ தான் எடுத்ததுக்கெல்லாம் சண்டை போடுவா, நின்னா குத்தம், நடந்தா குத்தம்னு அவ போடாத சண்டையா?”

”சரி… நீ சொல்லுத மாதிரி அவதான் சண்டைக்காரின்னு வச்சுக்கிடுவோம். இப்பம் அவளக் கூட்டிக்கிட்டு வந்து வச்சுக்கிட்டா மட்டும் சண்டை போட மாட்டாளா?”

”அதை நாமில்லா சமாளிச்சுக்கிடுதேன். ஒங்களுக்கென்ன? ‘எங்க அம்மய வச்சுச் சாப்பாடு போடுதேன், சாப்பாடு போடுதேன்’னு சொல்லிக்கிட்டுத்தான அவ ரெண்டு வீட்டு வாடகையவும் வாங்கி வாங்கி முடிஞ்சுக்கிடுதா? நீங்களும் ஒங்க அம்மக்கிப் பொறந்த புள்ளதான? ஒங்களுக்கும் அந்த வாடகையில பங்கு உண்டுல்ல?”

”அவ புருசனுக்குச் சரியான வேலவெட்டி இல்ல. ரெண்டு பொட்டப் புள்ளைகள வச்சுக்கிட்டுக் கஷ்டப்படுதா. அவ பாவத்துல போயி அடிச்சு விழணும் கிறீயே?”

”ஏன்… நமக்குந்தான் ரெண்டு புள்ளைக இருக்குது. நாம என்ன அரமணையிலயா வாழுதோம்?”

சிவகாமியிடம் பேசி மீள முடியாது. மேலும், அவள் மனதில் ஒன்றை நினைத்து விட்டால் அதைச் செய்துமுடிக்காமல் விட மாட்டாள். சிவகாமி சொல்வது நியாயமே இல்லைதான் என்றாலும், கயத்தாறுக்குப் போகாமல் தீராது. இல்லை என்றால், போய்விட்டு வரும் வரை நச்சரித்துக்கொண்டே இருப்பாள். அவள் மீது வெறுப்பு வந்தது. போயும்போயும் இவளைக் கல்யாணம் செய்துகொண்டோமே. இவ்வளவு காலத்துக்குப் பிறகு அதை நினைத்து என்ன செய்வது?

சிவகாமிக்கும் நாற்பது வயதாகப்போகிறது. சேரன்மாதேவியில் சண்முகத்தக்கா வீட்டுக் கல்யாணத்துக்குப் போயிருந்தபோதுதான், வெகு நாட்களுக்குப் பிறகு சிவகாமியைப் பார்த்தான். அப்போது சிவகாமி மதுரையில் கல்லூரிப் படிப்பை எல்லாம் முடித்திருந்தாள். முறைக்கு அவளும் ஒரு மாமாவுடைய பெண்தான்.

அவனுடைய அப்பாவுக்குத் தன்னுடைய தங்கச்சி மகளைத் திருமணம் செய்துவைக்க வேண்டும் என்று ஆசை. இவன்தான், கல்யாணம் என்றால் சிவகாமியைத்தான் கல்யாணம் செய்துகொள்வேன் என்று பிடிவாதம் பிடித்தான். திருமணமாகி வந்த பிறகுதான் அவள் சரியான வாயாடி என்பது தெரிந்தது. படித்திருப்பதால்தான் இப்படி எல்லோரையும் எடுத்தெறிந்து பேசுகிறாள் என்று அப்பாவும் அம்மாவும் சொன்னார் கள். பெரியவன் சம்பத்துக்கு இரண்டரை வயதாகும்போது அப்பாவுக்கு மாரடைப்பு வந்து இறந்துவிட்டார்.

அப்பா இறந்த பிறகு அம்மாவுக்கு அவனுடன் இருக்கப் பிடிக்கவில்லை. சின்னவள் கோகிலாவுக்கு ஒரு வயதாகி விட்டது. இனி பிள்ளையைப் பார்க்கவும் ஆள் வேண்டியது இல்லை என்று அம்மா நினைத்தாள். மேலும், அவளுக்கும் சிவகாமிக் கும் நாளாக நாளாக சரிவரவில்லை. அதனால் கயத்தாறு மகேஸ் வீட்டுக்குப் போய்விட்டாள். கயத்தாறுதானே அவள் பிறந்த ஊர்; ஏதோ அவளுக்குப் பிடித்த மான இடத்தில் இருந்துவிட்டுப் போகட்டும் என்று நினைத்தான்.

கயத்தாறு வீடுகள் எல்லாம் அம்மாவுடைய அப்பா வழிச் சொத்து. ஒரு வீட்டில் மகேஸ் குடியிருந்துகொண்டு, மற்ற இரண்டு வீடுகளையும் வாடகைக்கு விட்டிருந்தாள். அவை நல்ல முரட்டு வீடுகள். அந்தக் காலத்துக் காரைக் கட்டடம். ஆனால், அந்த ஊரில் வாடகை அதிகமாக வராது. அந்த வீடுகள் டவுனில் இருந்தால் நாலாயிரம், அஞ்சாயிரம் வாடகை வரும்.

நாலு மணிக்கு மேல் கயத்தாறுக்குப் போவோம் என்று நினைத்தான். சிவகாமி காபி போட அடுக்களைக்குப் போய் விட்டாள். அதுவும் நல்லதுதான். இல்லை என்றால் திரும்பத் திரும்ப அதையே பேசிக்கொண்டு இருப்பாள். சம்பத்தும் கோகிலாவும் அவர்களுடைய நண்பர்கள் வீடுகளுக்குச் சென்றிருந்தனர். மகேஸுடன் ஒப்பிடும்போது அவனுக்கு ஒன்றும் வசதிக் குறைச்சல் இல்லை. நிரந்தரமான வருமானம் வரும் வேலை இருக்கிறது. ஆனால், மகேஸ் புருஷனுக்கு அப்படியா?

காபி சாப்பிட்டுவிட்டு ஐங்ஷன் பஸ் ஸ்டாண்டுக்குப் போனான். மகேஸ் வீட்டுக்கு நிறையப் பழங்கள் வாங்கிக்கொண்டான். கயத்தாறுக்கு அரை மணி நேரப் பயணம்தான். மேகமூட்டமாக இருந்தது. கங்கைகொண்டான் பக்கம் போகும்போதே மழை பெய்ய ஆரம்பித்துவிட்டது. சடசட வென்று பஸ்ஸின் கூரையில் மழை தாரை யாகக் கொட்டியது. ஆட்டுக்காரர்கள் மழை யில் கோணியைத் தலைக்குப் போர்த்திக் கொண்டு மந்தையை ஓட்டிக்கொண்டு இருந்தார்கள். கங்கைகொண்டானில் கொண்டான் ஆற்றுப்பாலம் தாண்டிச் சிறிது தூரம் வந்ததுமே மழை, தூறலாக மாறிவிட்டது. கயத்தாறில் பஸ்ஸைவிட்டு இறங்கியபோது மழை வெறித்திருந்தது.

கயத்தாறு இன்னும் டவுனாகவில்லை. அந்தக் காலத்து வீடுகள் ஓட்டுக்கை சார்பு களுடன் நின்றுகொண்டு இருந்தன. ஆர்ச் வைத்துக் கட்டப்பட்ட மாடிகளுடன் கூடிய வீடுகளின் கீழே கடைகள் வந்திருந்தன. அவன் கயத்தாறுக்கு வந்து இரண்டு இரண்டரை வருஷங்கள் இருக்கும். மகேஸுடைய சின்ன மகள் கோமதியின் சடங்குக்கு வந்தது.

மகேஸ் ஆசையோடு ஓடி வந்து அவனை வரவேற்றாள். ”மதினி, பிள்ளைகள்லாம் வரலியா அண்ணே..?” என்று கேட்டாள். அன்றைக்கு வடை வியாபாரம்போல. வீட்டுத் தின்ணைதான் கடை. மகேஸுடைய பெரிய மகள் மீனாதான் எண்ணெய்ச் சட்டிக்கு முன்னால் உட்கார்ந்து வடை சுட்டுக்கொண்டு இருந்தாள். அவனைப் பார்த்ததும் எழுந்து நின்று ”வாங்க மாமா” என்றாள். பேச்சியப்பன் சிரித்துக்கொண்டே அவளிடம் நலம் விசாரித்தான். இரண்டு பெண்கள் வடை வாங்குவதற்காக திண்ணையில் உட்கார்ந்து இருந்தார்கள். வீடு இருட் டாக இருந்தது. மகேஸ் உள்ளே நுழைந்ததும் சுவிட்சைப் போட்டாள். டியூப் லைட் எரியவில்லை. இன்னொரு சுவிட் சைப் போட்டதும் ஒரு பல்பு எரிந்தது.

சுவரோரத்தில் அம்மா கால்களை நீட்டி உட்கார்ந்திருந்தாள். அவ்வளவு நேரமும் அந்த இருட்டுக்குள்ளேயே அவள் உட்கார்ந்து இருந்திருக்கிறாள். தன்னையும் வயசாகிவிட்டால் இப்ப டித்தான் ஓர் ஓரத்தில் போட்டுவிடுவார் களோ என்று நினைத்தான். அம்மா வுக்குக் கண் பார்வை மங்கலாகிவிட்டது. விளக்கு எரிவதுகூடத் தெரியுமா என்று தெரியவில்லை. சிவகாமியுடைய சித்தப்பாவுக்கு அவனுடைய வீட்டில் வைத்துதான் கண் ஆபரேஷன் நடந்தது. அரவிந்தில்தான் காட்டி ஆபரேஷன் செய்துகொண்டு போனார்.

மகேஸ் அம்மாவுக்குப் பக்கத்தில் போய் ”அண்ணன் வந்திருக்கும்மா…” என்றாள்.

”யாரு..? பேச்சியா வந்துருக்கான்..?”

”ஆமாம்மா…”

பழங்கள் இருந்த பாலிதீன் பையை மகேஸிடம் கொடுத்துக்கொண்டே அம்மா வின் அருகே வெறும் தரையில் உட்கார்ந்து கொண்டான்.

”இதெல்லாம் எதுக்கண்ணே..?” என்று பையை வாங்கிக்கொண்டே கேட்டாள் மகேஸ். அவளிடம் இருந்து தோசை மாவு வாசனை வீசியது.

”இருக்கட்டும்… பிள்ளைகளுக்குக் குடு…” என்றான்.

எல்லோரையும் பேச்சியப்பன் விசாரித் தான். அம்மா அவனுடன் சிறிது பேசி விட்டுப் படுத்துக்கொண்டாள். வீட்டுக்குள் கடலை எண்ணெய் வாசனை இருந்து கொண்டே இருந்தது. அவளுடைய புருஷனைப் பற்றிக் கேட்டான்.

”தேவர்கொளத்துல ஒரு கல்யாணம். ஆட்களோட கல்யாண வேலைக்குப் போயிருக்காக…” என்றாள். வடை வாங்க வந்த பெண்கள் போய்விட்டார்கள். வெளியே மீண்டும் தூறல் விழுகிற சத்தம் கேட்டது. வீட்டுக்குள் ஈரமாகிவிடக் கூடாது என்று மகேஸ் அடுப்படியில் இருந்து சாக்குத் துண்டை எடுத்து வந்து வாசல் படியருகே போட்டாள்.

அந்த வீட்டில்தான் அவனும் மகேஸும் பிறந்தார்கள். அவர்களுடைய அம்மாச்சி பாம்படம் போட்டிருப்பாள். மகேஸை ஆச்சி எடுத்துவைத்துக் கொஞ்சும்போது, மகேஸ் ஆச்சியுடைய பாம்படங்களை ஆட்டுவாள்.

”பாம்படத்தை ஆட்டிக் காதை அத்துப்போடாதடி… ஏஞ் சாவுச் செலவுக்கு இந்தப் பாம்படம்தான் இருக்கு. ஆச்சி செத்தா நீங்கள்லாம் நெய்ப் பந்தம் புடிக்கணும்டி… என்ன புடிப்பியா..?” என்று ஆச்சிக்கு மகேஸைக் கொஞ்சி மாளாது. அம்மாச்சிக்கு மகேஸ் என்றால் ரொம்பப் பிரியம்.

அப்போது அங்கே பெரிய வில் வண்டி இருந்தது. அவனும் மகேஸும் லீவில் தாத்தா வீட்டுக்கு வந்தால், லீவு முடிந்து டவுனுக்குப் போகும்போது காய்கறிகள், நவதானியம் இவற்றோடுதான் பேரனையும் பேத்தியையும் வில் வண்டியில் அனுப்பி வைப்பார். நாலாவது வளவில் இருந்த கந்தப்பிள்ளை மாமாதான் வண்டியை ஓட்டுவார்.

ஒரு சிறு பிளாஸ்டிக் தட்டில் மகேஸ் இரண்டு ஆம வடைகளை வைத்து எடுத்து வந்து கொடுத்தாள். சம்பிரதாயத்துக்காக ”எதுக்கு..?”’ என்றான்.

”சாப்பிடுங்க…” என்றாள் மகேஸ்.

மகேஸுடைய சின்ன மகள் கோமதி அடுக்களைக் கதவோரத்தில் நின்றுகொண்டு இருந்தாள்.

”பிள்ளைகள்லாம் என்ன படிக்கிது..?” என்று கேட்டான்.

”பெரியவ பத்தோட நின்னுட்டா. இவ ஒம்பது போறா…” என்றாள் மகேஸ். கோமதியிடம், ”நல்லாப் படி…” என்றான். கோமதி லேசாகச் சிரித்துக்கொண்டே தலையை ஆட்டினாள். வடை மொறுமொறுவென்று ருசியாக இருந்தது.

”வடை நல்லா இருக்கு…” என்றான்.

”காலையிலயும் ராத்திரியும் இட்லி போடுவேன். சாயந்தரம் வடை, இல்லன்னா பஜ்ஜி… ஏதோ இதுலதான் வண்டி ஓடுது…”

ஒரு மணி நேரம் கழிந்திருக்கும். புறப் படலாம்போல் இருந்தது. மகேஸ் ராத்திரி இருந்துவிட்டுப் போகலாம் என்றாள். அவன் ஒரேயடியாக மறுத்துவிட்டுப் புறப்பட்டான். எவ்வளவோ சொல்லியும் கேட்காமல் மகேஸும் கோமதியும் அவனை வழியனுப்ப பஸ் ஸ்டாண்ட் வரை வந்தார்கள். ரோடெல்லாம் ஒரே சகதியாகக்கிடந்தது. மழைக் காலத்தில் இப்படி வெளியூருக்குப் போய் வெகு காலமாகிவிட்டது. கோவில்பட்டியில் இருந்து பஸ் வந்தது. அதில் ஏறிக்கொண்டான்!

– செப்டம்பர் 2011

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *