மலைப் பாம்புகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 22, 2016
பார்வையிட்டோர்: 6,486 
 
 

ராகவன் பூங்காவில் காலை நடைப் பயிற்சியை முடித்து விட்டு வீட்டிற்குக் கிளம்பும் போது,” அண்ணே, நல்ல இடம் ஒன்னு வந்திருக்கு. பொண்ணு கிளியா இருக்கா.திவாகருக்கு ரொம்பவே பிடிக்கும். சாயங்காலமா குரு ஓரையில கொண்டு வரறேன்” என்றபடி எதிரே வந்தார் தரகர் அய்யாச்சாமி. “சரி. கொண்டு வாங்க” என்றபடி வீட்டை நோக்கி நடந்தார் ராகவன்.

சாயங்காலம் அய்யாச்சாமி காட்டிய அந்த வரனை, அவர் சொன்னபடியே திவாகருக்குப் பிடித்துவிட்டது.

“பொண்ணோட அப்பா ரிட்டயர்ட் டெபுடி செகரட்டரியாக்கும். பல டிபார்ட்மெண்ட்களில் பழம் தின்னு கொட்டை போட்டவர். நல்ல மனுஷாள், ஓரே பொண்ணு, நாகப்பட்டனத்தில் நூறு வேலி காடு கரை இருந்தது. இப்போ எல்லாம் எண்ணைய் எடுக்க ஓ.என்.ஜி. சி யாமே அதுக்குக் கொடுத்தாச்சு. பொண்ணு எம். ஏ. எதிராஜில படிச்சிருக்கா. ஆனா படிச்சிருக்கோம் என்ற கர்வம் துளியும் கிடையாது. இப்போல்லாம் இது மாதிரி மனுஷா சம்பந்தம் கிடைகிறது தெய்வ சங்கல்பம்” என்றவரை, “அப்ப ஜாதகம் பார்த்து சீக்கரம் சொல்லறேன்” என்றார் ராகவன்.

“பாருடா திவாகர், இந்த மனுஷனை, இந்த பூஞ்ச உடம்ப வச்சிண்டு அலையறேன், திரியறேன் எங்கறார். அண்ணனுக்கு கஷ்டம் இருக்கக் கூடாதுன்னு தானே நானே நம்ம வடக்கங்கரை ரங்கநாதனிடம் காட்டி பொருத்தம் பார்த்து கொண்டு வந்திருக்கேன். பத்துக்கு ஒம்பது பொருத்தம், பாபம் சமபலம், தசா சந்திப்பு இல்லை. எல்லாம் நம்ம திவாகருக்கு இவதான் என்கிற மாதிரி அப்படி செட்டாயிருக்கு”.என்ற அய்யாச்சாமிக்கு ஆதரவு குரல் முதலில் திவாகரிடமிருந்து தான் வந்தது.

”அப்பா, அய்யாச்சாமி மாமா என்ன பொய்யா சொல்லப் போறாரு. நீங்க பார்க்கற அந்த வடக்கங்கரை ரங்க நாத ஜோசியரிடம் தான் காட்டியிருக்காரு. அம்மா நீ என்ன சொல்லறே”. என்றதும்,

”ஆமாம் திவா சொல்லறதும் சரிதான் நீங்க நல்ல நாள் பார்த்து பொண் பார்க்க வரோமின்னு தகவல் கொடுத்து ஏற்பாட்டை செய்யுங்க”

என்றதும் ராகவனுக்கு தலையசைப்பதைத் தவிர எதுவும் பேச இருக்கவில்லை.

“நான் சொல்லக் கூடாது. அம்மா, நீங்களும், திவாகரும் கற்பூர புத்தி, சொன்னவுடன் டக் குனு புரிஞ்சிக்கறீங்க.. அண்ணா ரிட்டயர்ட் தாலுகா ஆபிஸ் சூப்ரண்டெண்ட்தானே. என்ன இருந்தாலும் அவங்க சம்பந்தம் குபேர சம்பத்து மாதிரி. அப்போ நான் உத்தரவு வாங்கிக்கிறேன், அடுத்து நல்ல தகவலோடு வரேன்”, என்று கிளம்பினார்.

அடுத்த வாரமே திவாகர் பெண் பார்த்தான். சம்பந்தி ஏக தடபுடலாக வரவேற்றார். திவாகருக்கு மட்டும் தனிக் கவனிப்பு. பெண்ணை பார்த்து அங்கேயே சம்மதம் சொன்னதும் கடகட என்று கண்மூடித்திறப்பதற்குள் ஆறு மாதங்கள் ஓடி கல்யாணம் வந்து விட்டது. இரண்டு பெட்ரூம் ஃப்ளாட் காணாது என்று திவாகரிடம் மாமனார் அடிக்கடி சொல்லி மூன்று பெட்ரூம் ஃப்ளாட்டுக்கு மாறியாச்சு. பழைய ஃப்ளாட்டை விற்றது போக தேவைப்பட்ட இருபது லட்சத்தை திவாகருக்கு கொடுத்தாகி விட்டது. மாமனார் வீடு வாங்க காட்டிய ஆர்வத்தை துண்டு விழும் பணத்திற்கு அல்லாடிய போது, “ சம்பந்தி நீங்க உங்களுக்கப்பறம் யாருக்கு தரப்போறீங்க. அவங்களுக்குத்தானே. அதை இப்போ கொடுத்தால் வட்டிக்கு வாங்க வேண்டாமே”, என்று சந்தர்ப்பம் வாய்க்கும் போதெல்லாம் சொல்லிச் சொல்லியும், மருமகள் காவ்யா, “திவா அப்பா சொல்லறது சரிதானே” என்று வேப்பிலை அடித்தும், பணத்தை எடுத்துத்தருவது தவிர வேறு வழியில்லை என்ற நிலை. மனைவி யசோதாவிற்கு ஒன்றும் தெரியாது. கணவன், அடுப்படி, பிள்ளை இப்படியே அவள் வாழ்க்கையை கிட்டத்தட்ட முக்கால் பகுதி கழித்தாயிற்று. ரிட்டயர் ஆன போது கிடைத்த கிராஜூட்டி, பிராவிடண்ட் பண்ட் எல்லாமா சேர்ந்து முப்பது லகரம் வந்தது. அதில் பத்தை அவள் பெயரிலும் மீதியை தன் பெயரிலும் வைப்பு நிதியாக வங்கியில் வத்திருந்தார். பென்ஷன் மாதம் பதினைந்தாயிரம் வருகிறது. அதனால் அதிகம் யோசிக்காமல் எடுத்துக் கொடுத்தார். புது வீட்டில் சின்னஞ்சிறிசுகள் ஒரு படுக்கை அறையிலும், மற்றது இவர்களுக்குமாக ஆனது. ஆரம்பத்தில் வாரம் வெள்ளிக் கிழமை மதியம் சம்பந்தி ராஜசேகர் தம்பதி சமேதராக பெண்ணைப் பார்க்க வருவர். இரவு சாப்பிட்ட ஹோட்டலுக்கு மாப்பிள்ளையையும், பெண்ணையும் கூட்டிக்கொண்டு போய்விட்டு திரும்புவர். ராகவனையோ, யசோதாவைவோ யாரும் கூப்பிடுவது இல்லை. அவர்களும் இது பற்றி பெருசாக எடுத்துக் கொள்ளவில்லை. அந்த இரு நாட்களும் அவர்கள் அந்த மூன்றாவது படுக்கை அறையை தங்கள் அறையாக மாற்றிக் கொண்டு தங்கி விடுவது வாடிக்கை ஆயிற்று.

ஒரு நாள் திவாகரிடம் ஜாடையாக கேட்டபோது

“ அவங்களுக்கும் யார் அப்பா இருக்காங்க? அதுவும் என் கடமைதானே” என்ற பின் ராகவன் அந்த தலைப்பைத் தொடுவதே இல்லை. மருமகள் காலை எட்டு மணிக்குத்தான் எழுந்திருப்பாள். திவாவுக்கு ஏழு மணிக்கு கிளம்ப அலுவலக கார் வந்திருக்கும். அதற்குள் அவனுக்கு டிபன் செய்து, மதியம் சாப்பிட சமைத்து அனுப்புவது எப்போதும் போல யசோதா அம்மாவின் வேலை ஆயிற்று. ராகவன் அவளிடம் கேட்டால், “பாவம் சின்னஞ்சிறிசுங்க, நாளைக்கு அவதானே பார்த்துக்கப் போறா, நா இருக்கற வரைக்கும் நான் செய்யறேன்”. என்பதே பதிலாக வரும்.

அன்று திவாகர் சீக்கிரமே அலுவலகம் வந்துவிட்டான். எச்.ஆர் ரில் கூப்பிடுவதாக தகவல் வந்தது. கதவை தட்டி உள்ளே நுழைந்தவனை “கங்கிராட்ஸ் திவா. நீங்க பலநாளா ஆசையோடு எதிர்பார்த்த அமெரிக்கா செல்லும் வாய்ப்பு நம்ம சி.எம்.டி உங்களுக்கு அளித்திருக்கிறார். மொத்தம் மூன்று வருடம் காண்டிராக்ட். அப்புறம் நீங்க விரும்பினால் மேலும் ஐந்து வருடம் அல்லது அதற்கு மேலோ இருக்கலாம். நான் இன்னும் இரண்டு மாதம் அவகாசம் தருகிறேன். அதற்குள் இப்ப பாக்கி இருக்கிற வேலை எல்லாம் செட்டில் பண்ணிட்டால் போதும். பை தி பை நீங்க குடும்பத்துடன் போகலாம், ஆனா உங்களுக்கும் உங்க மனைவிக்கும் மட்டும் கம்பெனி விமான கட்டணம் தரும். மற்ற எல்லாருக்கும் நீங்க தான் டிக்கெட் எடுக்க வேண்டும். பாஸ்போர்ட், விசா இதெல்லாம் கம்பெனி பார்த்துக் கொள்ளும். நீங்க அழைச்சுக்கிட்டுப் போறவங்க விவரம், அவங்களுக்கான டிக்கெட் பணம் மூன்று லட்சம் இதை இன்னும் இருபது நாளில் கொடுத்துவிடுங்க. மற்றத நாங்க பார்த்துக்கிறோம். ஆல் தி பெஸ்ட்” என்றார் எச்.ஆர் மேலாளர்.

திவாகருக்கு ஒரே சந்தோஷம். உடனே காவ்யாவிற்கு செய்தியை சொன்னான். அவள் உடனே ‘எங்க அப்பாகிட்ட சொல்லுங்க’ என்றாள்.

‘சரி. நீ, எங்க அப்பா, அம்மாவிடம் சொல்லிவிடு’ என்றதற்கு “சரிங்க’ என்று போனை வைத்தாள்.

மாலையில் வீட்டிற்கு வந்த போது அப்பா இல்லை. அம்மா சமையல் அறையில் இருந்தாள். தன் அறைக்கு வந்து காவ்யாவை பார்த்தவனுக்கு அதிர்ச்சி. படுக்கையில் படுத்திருந்தவளை என்னாச்சு காவ்யா என்றான். தெரியலீங்க. காலையிலிருந்தே ஒரே தலை சுற்றல் வாந்தி என்றாள். உடனே அம்மாவிடம் காவ்யாவுக்கு உடம்பு சரியில்லை. டாக்டரிடம் போய்விட்டு வருகிறேன் என்று சொல்லிவிட்டு கால் டாக்ஸியில் டாக்டர் கிளினிக் போனான். டாக்டர் அவளைப் பரிசோதித்துவிட்டு, அவள் தாய்மை அடைந்திருப்பதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். திவாவுக்கு இரட்டை சந்தோஷம். வீட்டிற்கு வந்ததும் அப்பா,அம்மாவிடம் சொன்னதும் அவர்கள் இருவருக்கும் அப்படி ஒரு சந்தோஷம். அப்படியே அமெரிக்க காண்டிராக்ட் பற்றி சொல்ல ஆனந்தம் பொங்கியது.

விமான கட்டணம் பற்றி பேச்சு வந்ததும் அம்மா உடனே என் பேருல அப்பா போட்ட பணத்தில தரச் சொல்லிடறேன் என்றதும் அவனுக்கு அப்பவே அமெரிக்கா போன மாதிரி இருந்தது. மகள் கருவுற்ற செய்தி கேட்டு சம்பந்தியும், சம்பந்தியம்மாவும் வந்தனர். அம்மா தன்னுடன் இருந்து கவனிக்க காவ்யா விரும்பியதால் அமெரிக்கா கிளம்பும் வரை சம்பந்தி தம்பதி அங்கேயே தங்க முடிவாயிற்று.

சம்பந்தி சுறுசுறுப்பாக முக்கியமான எல்லா பொருட்களையும் மறுநாளே லாரியில் கொண்டு வந்து விட்டார். அவரும் ராகவனும் வாக்கிங் போனாலும் தனித்தனியாகத்தான் போவார்கள். சம்பந்தி ராஜ சேகர் வந்த பின் வரவேற்பறையிலிருந்து தொலைக்காட்சி அவர்கள் அறைக்கு குடிபெயர்ந்தது.

யசோதா அம்மா தான் எல்லாருக்கும் சேர்த்து சமையல். சாப்பாடு, காபி, டிபன் என்று எல்லாம் சம்பந்தி குடும்பத்திற்கும் சேர்த்தே செய்வது எழுதப்படாத சட்டம் என்றானது. அம்மா பாவம் தனியா சமையல் வீட்டு வேலை செய்து கஷ்டப்படுவது திவாகருக்கோ, காவ்யாவிற்கோ, சம்பந்தி அம்மாவுக்கோ கவனத்தில் வராமலே இருந்தது ஆச்சரியம்தான்.

அப்படியும், இப்படியுமாக ஒரு வாரம் ஓடிவிட்டது.

காலையில் நடைபயிற்சி முடித்து வந்தவர் யசோதா எனக்கு நெஞ்சு வலிக்கிறது என்றார். அருகில் உள்ள பெரிய தனியார் ஆஸ்பத்திரியில் அவரை தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்த்தாயிற்று.

வெளியே அம்மா கண்ணைமூடி பிளாஸ்டிக் சேரில் கவலையாக இருந்தாள். திவாகரை, “மாப்பிள்ளை இப்படி சித்த வாங்கோ” என்று கூப்பிட்ட ராஜ சேகர் “இத பாருங்கோ மாப்பிள்ளை, அப்பாவுக்கு வயசாயாச்சு, தீ ன்னு சொன்னா நாக்கு வெந்திடாது. எதுவும் ஆகலாம் அதனால அப்பாவை பார்த்துக்கணும் அப்படின்னு அமெரிக்க காண்டிராக்ட வேண்டாம் என்று சொல்லிடாதீங்கோ. எங்க ஸ்டேட்ட்ஸுக்கு உங்க குடும்பம் சமதை இல்லனாலும் ஒங்களுக்கு காவ்யாவை கட்டித்தந்ததே உங்க கெரியர் பார்த்துத்தான். முதலில் அவர் எதாவது சேர்த்து வச்சிருக்காரா? அப்படி ஒன்னும் இருக்கற மாதிரி தெரியல. உங்களுக்கு இப்போ ஆயிரம் செலவிருக்கு. கொஞ்சம் தேவலை ஆனதும் வீட்டிற்கு கொண்டு போயிடலாம். இவங்க பணம் பிடுங்குவார்கள். அப்பாவை அமெரிக்கா கூட்டிண்டு போகறதுல தப்பொன்னும் இல்லதான், ஆனா அங்க வைத்தியச் செலவுகள் தாக்குபிடிக்க முடியாது. இங்க நல்ல முதியோர் இல்லம் பார்த்து சேர்த்திடலாம். அவரோட பென்ஷன் தொகைய அங்க கட்டினாலே போதும். கூட ஐந்து, பத்து ஆனாக்கூட நாம கட்டிடலாம். இப்ப காவ்யாவையும் அப்புறம் குழந்தையையும் பார்த்துக்க மாமியும் நானும் உங்களோட வந்திருக்கோம். இங்க எல்லா மனுஷாளையும் விட்டு அமெரிக்கா வர பிடிக்கலைதான், ஆனா உங்களுக்காக அதெல்லாம் விட்டுக் கொடுக்கறோம். என்ன காவ்யா நாஞ்சொல்லறது”, என்றவரிடம் ‘ஆமாங்க, நல்லா யோசித்து பாருங்க. அப்பா சொல்லறதுதான் சரிங்க” என்றாள் காவ்யா. “சரி, இப்ப போய் இதுவரை ஆன தொகை மத்த விவரங்களை தெரிஞ்சிக்கிட்டு வாங்க” என்றவரிடம் பேசவே பிடிக்கவில்லை திவாகருக்கு. ஆனாலும் தன் அமெரிக்க வாழ்வு போய்விடுமோ என்ற பயமும் இருந்தது.

எதுவானாலும் சரி. அப்பா,அம்மாவை கூட்டிப்போக முடியாது. முதலில் அவரது உடல் நிலை விமானத்தில் முப்பத்தாறு மணி நேர பயணத்தை தாங்க முடியுமா என்பது சந்தேகமே, நல்ல முதியோர் இல்லத்தில் செர்த்து விடலாம். மாமா சொல்வதில் தவறு ஒன்றும் இல்லை. இங்க வைத்து பராமரிக்க செலவாகும். பார்க்கலாம் என்ற நினைப்பில் நடந்தவனை டாக்டர் கூப்பிட்டு, “ நாங்க அதிகம் முயற்சி செய்தோம் ஆனாலும் உங்க அப்பாவை கடவுள் அழைத்துக்கொண்டு விட்டார். ஐ யம் சாரி,” என்றதும் அழுகை பீறிட்டது. அம்மாவிடம் எப்படி சொல்வது என்று அருகில் சென்று, “அம்மா” என்று லேசாக உலுக்கினான். வழக்கம் போல் மகனுக்கு எந்த கஷ்டத்தையும் கொடுக்க விரும்பாத அம்மா அவன் மடியில் தன் உயிரற்ற உடலை விட்டு விட்டு சிரித்தபடி கணவருடன் கை கோர்த்து பறந்து வானில் மறைந்தாள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *