ராமையா வாசலில் செருப்பைக் கழற்றிவிட்டு வீட்டுக்குள் வந்தார். வீடு நிசப்தமாக இருந்தது. அதைப் பொறுத்துக் கொள்ள முடியாதது போல், சுவரில் இருந்த பழைய கடிகாரம் பதினோரு முறை காறிற்று.
“”இன்னும் பொட்டுண்டு வரலையா?” என்று சமையலறையைப் பார்த்துக் கேட்டார். “”பத்தரைக்கே வந்துடுவானே”
உள்ளேயிருந்து ஒன்றும் பதில் வரவில்லை.
“”ஏய் , உள்ளேதான் இருக்கியா?” என்று ராமையா கத்தினார்.
“”என்ன, ஏய், ஏய்ன்னு,
எப்போ பாத்தாலும்
கூப்டுண்டு, எங்க அம்மா, அப்பா வச்ச பேர் விஜயான்னு எவ்வளவு அழகா இருக்கு. அத விட்டுட்டு, ஏய் ஏய்ன்னு..ஆடு மாடை கூப்பிடறாப்பில” என்று அலுத்துக் கொண்டே அவர் மனைவி பூஜை அறையிலிருந்து வந்தாள்.
“”சுத்த கர்நாடகமா இருக்கேன்னுதான் அப்படி கூப்பிடலே” என்று ராமையா சிரித்தார். “”அதை விடு, குழந்தையும் அம்மாவும் இன்னும் வரலையா?” என்று கேட்டார்.
“”அவ எப்ப சீக்கிரமா வந்திருக்கா? மணி பதினொன்னுதானே ஆறது. பன்னண்டு மணிக்கு படை படைக்கிற வெய்யில்ல வந்தாதானே அவளுக்கு நேர்த்தி கடன முடிச்ச திருப்தி இருக்கும்” என்று விஜயா அலுத்துக் கொண்டாள்.
“”தினமும் சொல்லி சொல்லி எனக்கு வாய்
வலிக்கறது. அவ காதில வாங்கிண்டாதானே?”
“”சரி , சரி, அவளும் என்ன பண்ணுவா கால் சரியில்ல. ரெண்டரை வயசுக் கொழந்தைய பாதி தூரம் நடத்திக் கூட்டிண்டு வரா. பாதி தூரம் தூக்கிண்டு வரா. வெயிலுக்கு மின்னாடி வந்தா ரெண்டு பேருக்கும் úக்ஷமம். ஆனா முடியலையே. என்னப்பா ,ஈஸ்வரா” என்று ஹாலில் கிடந்த ஈசி சேரில் சாய்ந்து கொண்டார்.
கணவனும் மனைவியும் பேசிக் கொண்டது அவர்கள் வீட்டில் வேலை பார்க்கும் தனம்மாவையும் அவள் குழந்தை மனோஜையும் பற்றித்தான். ஒரு வருஷத்துக்கு முன்னால் அவர்கள் இங்கே வந்தார்கள். விஜயாவின் நெருங்கிய தோழியும் அவர்கள் குடும்ப டாக்டர் சிவராமனின் மனைவியுமான அம்புஜம்தான் விஜயாவுக்கு சரியான வேலைக்காரி கிடைக்க வில்லையே என்று தனம்மாவை அனுப்பி வைத்தாள்.
தனம்மாவின் புருஷன் அவளை விட்டு ஓடிப் போய்விட்டான். வேலை வெட்டி என்று எது கிடைத்தாலும் சேர்ந்தாற்போல் ஒரு வாரம் இருக்க மாட்டான். குழந்தை பிறந்து ஒரு வருஷம் கழித்து அவன் தனம்மாவுக்கு கால் சரியில்லை என்று அவளை விட்டு விட்டு அவனுடைய அக்காவின் ஊருக்குப் போய் விட்டான் என்று அம்புஜம் காவேரியிடம் சொல்லி தனம்மாவைக் கொண்டு வந்து விட்டாள்.
“”கட்டால போறவனுக்கு கல்யாணம் பண்ணிக்கறப்போ அவளுக்கு கால் சரியில்லாதது தெரியலையோ?” என்று விஜயா திட்டினாள்.
தனம்மா வேலைகளை விரைவாகச் செய்யாவிட்டாலும், செய்த ஒவ்வொரு வேலையிலும் அப்படி ஒரு சுத்தம் இருந்தது. கறுப்புத் தட்டி வயசாகி விட்டவளைப் போலிருந்த எவர்சில்வர் பாத்திரங்கள், தனம்மாவின் உழைப்பில் இளம் பெண்களைப் போல் தக தகவென்று காட்சி அளிக்க ஆரம்பித்தன. வீடு பெருக்கும்போது, தூசு படர்ந்திருந்த சுவர் மேடு பள்ளங்களிலிருந்து அவற்றை நீக்குவதில் அவள் சிறு விஷயங்களையும் பொறுப்புடன் கவனித்துச் சரி செய்வது தெரிந்தது.
“”அவ வேலைக்கு வந்ததிலிருந்து நீ குண்டாக ஆரம்பிச்சுட்டே” என்று ராமையா மனைவியைக் கேலி செய்தார்.
ஆனால் கணவனும் மனைவியும் தினமும் வெகு ஆவலோடு எதிர்பார்த்தது தனம்மாவை அல்ல, அவளுடைய குழந்தை மனோஜைத்தான். தனம்மா வேலைக்கு வந்த சமயம், குழந்தை என்று அவள் ஒரு பொம்மையைத்தான் தூக்கிக் கொண்டு வந்தாள். அதுவும் சோனிப் பொம்மை.ஆனால் அதன் முகத்தில் அப்படி ஒரு களை. குறு குறு வென்று பேசும் கண்கள். சரியான சாப்பாடு போஷாக்கு இல்லாமல், குழந்தையால் நடக்கக் கூட முடியவில்லை. காலை இழுத்துக் கொண்டு அது தாவித் தாவிச் செல்லுவதைப் பார்க்க மிகவும் கண்றாவியாக இருந்தது. பேச்சும் சரியாக வரவில்லை. “இரண்டு வயது ஆகப் போகிற குழந்தை இந்த மாதிரி இருக்க முடியுமா?’ என்று விஜயா பதறிப் போனாள். டாக்டர் சிவராமனிடம் கேட்ட போது, அவர் ஒழுங்காக வேளைக்கு சாப்பாடும் ஓடி விளையாடும் நடமாட்டமும் இருந்தால் எல்லாம் சரியாகி விடும் என்றார்.
ஆரம்பத்தில் மனோஜ் எது கொடுத்தாலும் எடுத்துக் கொள்ள மறுத்தது. தனம்மா கொடுத்தாலும் சாப்பிட மாட்டேன் என்றது. ராமையாவின் ஒரே பெண் ரம்யாவிடம்தான் குழந்தை சீக்கிரம் ஒட்டிக் கொண்டது. ரம்யா அவள் மேல் படிப்பை முடித்து விட்டு அப்போதுதான் வந்திருந்தாள். ஆறு ஏழு வருடங்களாக அவள் வெளியே ஹாஸ்டல்களிலும் தனி அறைகளிலும் தங்கிப் படித்து வர வேண்டியிருந்ததால், வேலைக்குப் போவதற்கு முன்னால், சில மாதங்கள் பெற்றோர்களுடன் தங்கி இருக்க நிச்சயித்து அவர்கள் கூட இருந்து வந்தாள். தனம்மா வந்த தினத்தன்றே ரம்யா குழந்தையை எடுத்துக் கொஞ்ச ஆரம்பித்து விட்டாள். முன்பின் தெரியாத முகம் என்றாலும், மனோஜ் அவளிடம் ஒட்டிக் கொண்டது.
ஆறு மாதத்தில் குழந்தை சரியாக நடக்க ஆரம்பித்தான். காலையில் தனம்மா இட்லியோ உப்புமாவோ கொடுத்து அழைத்துக் கொண்டு வருவாள். வந்ததும் ரம்யா அவனுடன் பேச்சுக் கொடுத்துக் கொண்டே விளையாடச் சொல்லிக் குடுப்பாள். மத்தியானம் நெய், பருப்பு போட்டு ரசம் சாதமோ, கூட்டு இருந்தால் கூட்டு சாதமோ விஜயா போடுவாள். சாப்பிட்டவுடன் ரம்யா அவனைத் தூங்கப் பண்ணிவிடுவாள். நாலு மணி வாக்கில் பிஸ்கட், ரஸ்க், வாழைப் பழம் என்று தந்து விட்டு பூஸ்ட் அல்லது பால் கொடுப்பாள். தனம்மா வீட்டுக்குப் போகும்போது, அவர்கள் இருவருக்கும் சாப்பிட சாதமோ, பலகாரமோ கொடுப்பாள். டேட் சிரப் கொடுத்தால் உடம்பில் பழச் சத்து ஏறும் என்று, வைட்டமின் கொடுத்தால், வியாதிகளை எதிர்த்துப் போராடும் சக்தி கிடைக்கும் என்று, ஆலிவ் ஆயில் போட்டு கால்களைத் தேய்த்து மசாஜ் பண்ணினால் ,
கால்கள் உறுதியாகும் என்று மொத்த குடும்பமும் இதுமாதிரி என்னென்னமோ செய்து கொண்டிருந்தது.
குழந்தை எப்போதும் ரம்யா கூடவே இருந்ததால் அவள் செய்வதைச் செய்யப் பார்க்கும். அவள் சாப்பிட ஸ்பூன் உபயோகித்தால் தனக்கும் அது வேண்டும் என்று கேட்கும். அவள் காதில் தோடு மாற்றிக் கொள்ளும் போது தனக்கும் வேண்டும் என்று அடம் பிடிக்கும். அவள் மொபைலில் பேசும் போது தானும் பேச வேண்டும் என்று அவளைப் பேச விடாமல் அடிக்கிறது என்று அதன் கையில் ஒரு பழைய மொபைலைக் கொடுக்க வேண்டியிருந்தது.
அதை வைத்துக் கொண்டு, “”ஹலோ. மன்னு….” என்று சத்தம் போடும்.
“”யாருடா மன்னு?” என்று ரம்யா கேட்பாள்.
அது தன்னையே ஒரு முறை பார்த்து விட்டுச் சிரிக்கும்.
“”நீ தானா மன்னு? யார் உன்னை அப்படி கூப்பிடுவா?”
“”தனம்மா” என்பான். என்னவோ அவன்தான் அவளுக்குப் பெயர் வைத்தது போல.
ரம்யா அவளுடைய அப்பாவை அப்பா என்று கூப்பிட்டாலும், அம்மாவை விஜி என்றுதான் கூப்பிட்டாள். அவள் சிறு குழந்தையாக இருந்த போது ராமையாவின் அம்மா, மாட்டுப் பெண்ணை விஜி என்று கூப்பிடுவாள். அதைக் கேட்டுக் கேட்டு ரம்யாவும் தன் அம்மாவை விஜி என்று கூப்பிட்டு அப்படியே பழக்கமாகி விட்டது. இப்போது மனோஜை வைத்துக் கொண்டு அவள் தன் அம்மாவை விஜி என்று கூப்பிடும்போது, குழந்தையும் அவளை விஜி என்றே கூப்பிட ஆரம்பித்து விட்டது. விஜயா முதலில் அது தன்னை முதலில் அஜ்ஜி என்று கூப்பிடுவதாக நினைத்தாள். கன்னடத்தில் அஜ்ஜி என்றால் பாட்டி என்று அர்த்தம். அப்புறம்தான் தெரிந்தது அது ரம்யாவைப் பின்பற்றுகிறது என்று.
ரம்யா ராமையாவை அப்பா என்று கூப்பிட்டதால் குழந்தையும் அவரை அப்பா என்றே கூப்பிட்டது. தனம்மா , விஜயா , அம்புஜம் என்று யார் சொன்னாலும் அது கேட்கவில்லை.
“”நீ தாத்தான்னு கூப்பிட்டா உனக்கு பொம்மை வாங்கித் தரேன்” என்பாள் விஜயா.
“”பொம்மையா?” என்று கேட்கும்.
“”ஆமா” என்று சொல்வாள் விஜயா
“”எனக்கு பொம்மை வேணும்”
ராமையாவைக் காண்பித்து, “”பொம்மை வேணும்னா… தாத்தான்னு கூப்பிடு” என்பாள்.
அது தலையை அசைத்து அப்பா, பொம்மை, பொம்மை என்று காலைக் கையை உதைத்துக் கொள்ளும். ராமையா சிரிப்பார்.
“”அவன் கண்ணுக்கு நான் இன்னும் தாத்தா ஆகலை போலிருக்கு . ஆனா உன்னைப் பார்த்து பாட்டிங்கிறான்” என்று அவளை வம்புக்கு இழுப்பார்.
தனம்மா வருவாள். “”டே, தாத்தாவை ஒளுங்கா கூப்பிடலேன்னா உதை குடுப்பேன்” என்பாள்.
அது ராமையாவைப் பார்த்து அப்பா , அம்மாவை அச்சு… என்று கண்ணை உருட்டி முழிக்கும்.
“”ஏய் தனம், குழந்தையை திட்டினையோ உன்னை அடிச்சு கொன்னு..” என்று குரலை எழுப்புவார். அது அவரது கழுத்தைப் பற்றிக் கொண்டு கன்னத்தில் ஒரு முத்தம் கொடுக்கும். தனத்தின் அக்காவோ ,
தங்கையோ ,ராமையாவின் வீட்டுப் பக்கம் வந்தால் ,
குழந்தையைக் கொஞ்சி விட்டுப் போகலாம் என்று உள்ளே வருவார்கள்.
“”டே மன்னு , யார் வந்திருக்கா பாரு இங்கே?” என்று விஜயா கூப்பிடுவாள்.
அவன் காலை அசைத்து அசைத்து ஓடி வருவான். தனத்தின் அக்காவைப் பார்த்து சீதா என்பான்.
“”ஆமா, அவ உனக்கு தங்கை பாரு, சீதா பெரீம்மான்னு கூப்பிடுடா கழுதை” என்பாள் விஜயா.
கழுதை என்று அவன் அவள் சொன்னதையே திருப்பிச் சொல்லுவான், கொஞ்சம் சிரிப்புடன். பிறகு வந்தவளிடம், “”பெரீம்மா , என்ன வாங்கிண்டு வந்தே?” என்று கேட்பான். அவள் கையில் வைத்திருக்கும் தின்பண்டம் எதையாவது எடுத்துத் தருவாள். அவன் வாங்கிக் கொண்டு அங்கு உட்கார்ந்திருக்கும் ராமையாவிடம் அப்பா, “”இந்தா சாக்கெட்டு” என்று அவரிடம் நீட்டுவான்.
சீதா “”டேய் , தாத்தான்னு கூப்பிடு, இல்லாட்ட மண்டைல ரெண்டு போடுவேன்” என்று நாக்கைத் துருத்துவாள்.
அவன் ராமையாவின் பின்னால் போய் ஒளிந்து கொள்வான்.
பக்கத்து வீட்டில் இருக்கும் ராமையாவின் நண்பர் சம்பந்தம் வருவார். ஆரம்பத்தில் அவர் ராமையாவை, “”டேய்” என்று கூப்பிடுவதைக் கவனித்து மனோஜும் ராமையாவைப் பார்த்து, “”டேய் அப்பா” என்று கூப்பிட , சம்பந்தம் பதறிப் போய் விட்டார். பெரிய எமகாதகனா இருக்கானே என்று அவனை அடிப்பது போல் கையை நீட்டிச் செல்லமாகக் கோபித்தார். அதற்குப் பிறகு ராமையாவை மனோஜ் இருக்கும் போது “”டேய்” என்று கூப்பிடுவதை முழுதாகத் தவிர்த்து விட்டார் .
“”ரம்யா, நீ சொன்னா கேப்பாண்டி . அவனை தாத்தான்னு கூப்பிட பழக்கி விட்டுடு” என்று ஒரு நாள் விஜயா சொன்னாள்.
“”மனோஜ் , இனிமே நீ அப்பாவைத் தாத்தான்னு கூப்பிடணும் சரியா?” என்றாள்.
அவன் தலையை அசைத்தான்.
அவள் ராமையாவைக் காண்பித்து,””அது யாரு?” என்று கேட்டாள்.
“”அப்பா” என்றான் .
“”இல்லே, தாத்தா. நீ தாத்தான்னு கூப்பிடு” என்றாள்.
“”தாத்தா” என்றான்.
“”வெரி குட்” என்றாள் ரம்யா சிரித்தபடி.
“”அப்பா , வெரி குட்” என்று மனோஜ் ராமையாவைப் பார்த்துச் சிரித்தான் .
இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த ராமையாவாலும் சிரிப்பை அடக்க முடியவில்லை. “”ரம்யா, இவன் பிரகலாதன்மா . ஹிரண்ய கசிபு வந்து கேட்டாலும் மாற மாட்டான்”
யார் என்ன பயமுறுத்தினாலும் , கோபித்துக் கொண்டாலும் , கெஞ்சினாலும் , குழந்தை அவரை அப்பா என்று கூப்பிடுவதை நிறுத்தமுடியவில்லை. ஒழிகிறது போகட்டும் என்று எல்லோரும் விட்டு விட்டார்கள்.
சம்பந்தம் வீட்டுக்கு அவர் பெண், மாப்பிள்ளை குழந்தைகள் என்று கூட்டமாக வந்திருந்தார்கள் தில்லியிலிருந்து . கிறிஸ்துமஸ் விடுமுறை என்று. சம்பந்தத்துக்கு ஒரு பேரனும், ஒரு பேத்தியும். பெரியவனுக்கு ஐந்து வயது இருக்கலாம். சின்னவள் மூன்று வயது கூட நிரம்பாதவள். அவர்கள் வந்த அன்றே மனோ அவர்கள் வீட்டுக்கு ஓடிப் போய் விட்டான். குழந்தைகளோடு குழந்தையாக ஒரே ஆட்டமும் பாட்டமும்தான் . இங்கேயிருந்து பொம்மைகளை அங்கே அள்ளிக் கொண்டு ஓடுவதும் , சம்பந்தத்தின் வீட்டுத் தோட்டத்தில் ஓடி விளையாடுவதுமாக ஒரே ஆர்ப்பாட்டமும் ரகளையுமாக குழந்தைகளுக்குப் பொழுது போவதே தெரியவில்லை.
மூன்றாவது நாள் சாயங்காலம் இருக்கும். தனம்மா வேலைகளை முடித்துக் கொண்டு வீட்டுக்குக் கிளம்பத் தயாராயிருந்தாள். ராமையாவும், விஜயாவும் டி.வி. யில் சஞ்சய் சுப்பிரமணியன் பாடுவதைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். ரம்யா ஹாலில் இருந்த சோபாவில் உட்கார்ந்து கொண்டு ஏதோ நாவலில் மூழ்கி இருந்தாள்.
மூன்று குழந்தைகளும், கூச்சலிட்டுக் கொண்டே உள்ளே ஓடி வந்தார்கள்.
“”என்ன கலாட்டா?” என்று ராமையா சிரித்தபடி அவர்களைப் பார்த்தார் .
சம்பந்தத்தின் பேரன் அவர் அருகில் வந்து “”தாத்தா , யார் பாடறா?” என்று கேட்டான்.
“”ஒ , உனக்கு சங்கீதம் பிடிக்குமோ” என்று அவர் அவன் கன்னத்தில் தட்டினார்.
“”தாத்தா, கொலெ வெறிடி போடு” என்றது சம்பந்தத்தின் பேத்தி.
“”அடி சக்கை” என்று சிரித்தபடி ரம்யா எழுந்து வந்து அதனை முத்தமிட்டாள் . மனோஜ் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்தது.
விஜயா உள்ளே சென்று , ஒரு தட்டில் சாக்கலேட்டுகளும், பிஸ்கட்டுகளும் போட்டு கொண்டு வந்து ராமையாவிடம் கொடுத்தாள்.
அவர் குழந்தைகளுக்குப் பகிர்ந்து கொடுத்தார்.
“”தாங்யூ தாத்தா” என்றான் சம்பந்தத்தின் பேரன்.
“”தாங்யூ தாத்தா” என்றது அவனுடைய தங்கை .
“”தாங்யூ தாத்தா” என்றது மனோஜ் .
– ஜனவரி 2012