மலருக்கு மது ஊட்டிய வண்டு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 3, 2023
பார்வையிட்டோர்: 2,621 
 
 

(1992ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

வாசலை நோக்கியுள்ள தன்னுடைய மாடி அறையில் ஜன்னல் ஓரமாகப் போடப்பட்டிருந்த கட்டிலில் இருக் கையும் கிடைக்கையும் அற்றதொரு நிலையில், தலை மாட்டில் அடுக்கி வைத்திருக்கும் தலையணையில் சாய்ந்தபடி படுத்துக் கொண்டிருந்த பாகவதர், திரை நீக்கப்பட்டிருந்த ஜன்னல் வழியே வெளியுலகைப் பார்த்துக் கொண்டிருந்தார். 

நீரில் கரைகிற உப்பைப் போல, பார்த்துக் கொண் டிருக்கும்போதே படிப் படியாகப் பொழுது புலர்வது கண்ணுக்குத் தெரிந்தது. 

அறையின் கதவு திறக்கப்படுகிற சப்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்தார் பாகவதர். கையில் ஆவி பறக்கிற காப்பியை ஏந்தியபடி சோபியா உள்ளே நுழைந்தாள். 

இவ்வளவு கருக்கலில், அதற்குள் குளித்துப் புத்தாடை கட்டிக் கொண்டிருந்த அவளது தோற்றத்தை பாகவதர் வியப்போடு பார்த்தார். 

தலை ஈரத்தை உறிஞ்சுவதற்காக முடிச்சில் துவட்டிய துண்டை முடிந்து கொண்டிருந்தாள். 

‘இந்தப் பாங்கெல்லாம்கூட இவளுக்கு எப்படி வந்தது?’ 

கையிலிருந்த காப்பியை கட்டிலின் அருகிலிருந்த டீப்பாயில் வைத்துவிட்டு அவள் திரும்புகையில், “இன்னிக்கி என்ன விசேஷம் சோபா?” என்று பாகவதர் அன்பான குரலில் வினவினார். 

“இன்று கார்த்திகைப் பண்டிகை ஐயா” சோபியா பளிச்சென்று கூறினாள். 

ஜலதரங்கக் கிண்ணத்தில் குச்சியால் தட்டியதுபோல் சொற்கள் மணி மணியாக ஒலித்தன. அந்த ஒலி இன்பத்தை செவிமடுத்தபடி காப்பியை ரசித்துக் குடித்துக் கொண்டே கேட்டார்: 

“தலையில் இப்படி பந்துபோல் துணியைச் சுற்றிக் கொள்ள உனக்கு எப்படித் தெரிந்தது?” 

“அம்மாதான் ஐயா. கட்டி விட்டாங்க.” 

இந்த வார்த்தையைக் கூறும்போது, அவளுள் ஏதோ தாழ்மையுணர்ச்சி தோன்றியிருக்க வேண்டும் என்று பாகவதருக்குப் பட்டது. இல்லாவிட்டால், சாதாரணமாகத் தான் கேட்ட கேள்விக்கு உடனே இத்தனை அவசரமாக, ‘இப்போ எனக்கு நன்றாக புரிஞ்சு போச்சு ஐயா; இனிமே நானே கூடத் தனியாகக் கட்டிக்குவேன்’- என்று பட படப்புடன் கூறுவானேன்? 

பாகவதர் காலி பண்ணி வைத்த காலி டபரா டம்ளர் களைக் கையில் எடுத்துக்கொண்டவள், ‘ஹாட் வாட்டர்… இல்லே… இல்லே… வெந்நீர் ரெடியானதும்-‘த்சு…’ தயாரானதும் நான் வந்து கூப்பிடுகிறேன் ஐயா…” என்றாள். 

“பரவாயில்லை!  ‘ஹாட் வாட்டரையும்’, ‘ரெடி’  யையும் தமிழ்ப் படுத்தல்லேனாலும் எனக்குப் புரியும் சோபா!” என்று அவர் வேடிக்கையாகக் கூறியபோது, சோபியா தன்னையும் மீறிச் சிரித்து விட்டாள். 

பட்டுப் புடவை சரசரக்க அவள் கீழிறங்கிச் செல்லும் போது, பொற் பதுமையொன்று உயிர் பெற்று மெல்ல நடந்து செல்வது போலிருந்தது. 

பாகவதர் மெல்ல மனத்திற்குள்ளேயே சிரித்துக் கொண்டார். குழந்தையின் மழலையைப் போல், கொஞ்சிக் கொஞ்சிப் பேசும் சோபியாவின் தமிழைக் கேட்டு மட்டுமல்ல; வெள்ளைக்காரப் பெண்ணுக்கு இந்த இந்தியப் புடவையும், குங்குமப் பொட்டும் என்ன மாய்த்தான் மெருகூட்டுகிறது என்பதை நினைத்து மட்டு மல்ல. தன்னிடம் வித்தை கற்றுக் கொண்டு குறுகிய காலத்திற்குள் நாடே வியக்கும் வண்ணம், பேரும் புகழும் பெற்று விட்டாளே; ஆயினும் துளிக்கூடக் கர்வம் இல்லையே என்பதையும் எண்ணித்தான் அவர் வியந்து கொண்டிருந்தார். 

சோபியா சென்று வெகு நேரமான பின்பும் பாகவதர் அந்தத் திசையிலிருந்து தன் பார்வையைத் திருப்பவே இல்லை. எத்தனையோ சிஷ்யர்களை உலகுக்கு அளிந்த பாகவதருக்கு, சோபியாவை சிஷ்யையாகப் பெற்றதே பாக்கியம் போல் இருந்தது. எண்ணங்கள் அவரை எங்கேயோ இழுத்துச் சென்றன. 


“கொஞ்சம் கீழே வற்றேளா?” மாடிப்படியின் கீழே யிருந்து கல்யாணி அம்மாள் குரல் கொடுத்தாள். 

“என்ன விசேஷம்?” 

“புதுசா யாரோ வந்திருக்கா; அன்னிக்கி புரொபசர் சடகோபன் யாரையோ அனுப்பரதாச் சொல்லிட்டுப் போனாரே, அவா போலேருக்கு.” 

பாகவதருக்கு சட்டென்று ஞாபகம் வந்துவிட்டது. 

சடகோபனிடம் வந்து, முறையாகத் தமிழ் கற்றுக் கொண்டு போன இரண்டு அமெரிக்கர்களும் இந்தத் தடவை கர்நாடக சங்கீதம் சொல்லிக் கொள்ள வேண்டும். என்கிற ஆவலோடு வந்திருக்கிறார்கள். சடகோபனும் பாகவதரும் நெருங்கிய நண்பர்கள்; அத்தோடு, அவர்களுக்குப் பாட்டுச் சொல்லிக் கொடுக்கத் தகுந்தவர் பாகவதர்தான் என்பது சடகோபனின் எண்ணம். 

முதலில் பாகவதர் சடகோபனிடம் இந்த ஏற்பாட்டிற்கு ஒப்புக் கொள்ளவில்லை. ‘இனம், நாடு, மொழி இவற்றால் வேறுபட்ட மேல்’ நாட்டாருக்கு, நம்முடைய கர்நாடக இசை சுட்டுப் போட்டாலும் வராது என்பது பாகவதரின் எண்ணம். ஆனால் சடகோபன் விடவில்லை. 

‘நீங்கள் வித்தையை ஆரம்பித்துப் பாருங்களேன்; வந்தால் தொடரட்டும்; இல்லாவிட்டால் அவர்களாகவே நின்று விடுகிறார்கள். நரன்கூட இப்படித்தான் இவர்களைப் பற்றி அலட்சியமாக ஆரம்பத்தில் நினைத்தேன்” என்று சடகோபன் கூறவே, பாகவதரும் தன் பிடிவாதத்தைத் தளர்த்தினார். 

“என்னை என்ன செய்யச் சொல்லறேள்; காத்துண்டு இருக்காளே; அவாளை மேலே அனுப்பவா?” 

‘இப்படிக் கீழேயிருந்தே எல்லாவற்றையும் கேட்க வேண்டியிருக்கிறதே; அவர்கள் என்ன நினைப்பார்கள்? என்று கல்யாணி அம்மாளுக்குக் கூச்சமாக இருந்தது என்றாலும், ரத்த அழுத்த வியாதி காரணமாகத் தன்னை மாடிப்படி ஏறக் கூடாது’- என்று உத்தரவு போட்டு விட்ட டாக்டருடைய வார்த்தைகளைப் புறக்கணிக்கவும் அவளுக்குப் பயமாக இருந்தது. 

‘மேலே இவர், இன்னும் என்னதான் பண்ணிக், கொண்டிருக்கிறார்…?’ என்று திரும்பியபோது பாகவதர் கீழே இறங்கி வந்து கொண்டிருந்தார். 

“எங்கே அவர்கள்?” என்று கணவர் கேட்கு முன்பு “முன் ரூம்லே உட்கார்த்தி வச்சிருக்கேன்” என்று கூறி விட்டு அடுக்களைக்குச் சென்று விட்டாள் கல்யாணி அம்மாள். 

பாடம் சொல்லிக் கொள்ள வந்திருப்பவர்கள் ஒரு வெள்ளைக்காரப் பெண்ணும், ஓர் ஆணும். அவர்களை ‘பெல்பாட்டமும்’ ‘டைட்ஸ்ஸுமாக எதிர்பார்த்த பாகவதர், அறைக்குள் நுழைந்ததும் பிரமித்துப் போனார்! 

அழகே உருவான அந்த இளம்பெண், கைத்தறிப் புடவையைக் கட்டிக் கொண்டு, தலையைப் பின்னிப் பூ வைத்துக் கொண்டிருந்தாள். அந்த வாலிபன், தூய வெண்ணிற ஜிப்பாவும், கதர் வேஷ்டியுமாகக் காட்சியளித்தான். அவர்களது இந்த முதல் தோற்றமே பாகவதரது உள்ளத்தில் ஒருவித நம்பிக்கை ஒளியை ஊட்டுவிப்பதாக இருந்தது. 

பாகவதரைக் கண்டதும் இருவரும் ஏக காலத்தில் தங்களது ஆசனத்தினின்றும் எழுந்து நின்று; கைகளைக் குவித்த வண்ணம், “வணக்கம் ஐயா” என்று ஏகோபித்த குரலில் கூறினர். பாகவதரது கரமும் அவரையுமறியாமல் உயர்ந்து விட்டது. அவர்களை ஆசனத்தில் அமரும்படி பணித்தார். 

“கச்சேரிகளுக்கு வெளியூர் போய்விட்டு இன்னிக்கு காலமே ஆறு மணிக்குத்தான் வந்தேன். பத்து நாளைக்கு முன்னே சடகோபன் வந்தப்போ பஞ்சாங்கத்தைப் பார்த்ததிலே இன்னிக்கு விட்டா இந்த மாசத்திலே நல்ல நாளே இல்லேன்னுதான் உங்களை வரச்சொல்லியிருந்தேன். ஆனால் அலைச்சல்லே எப்படியோ மறந்துட்டேன்…” என்று பாகவதர் கூறிக்கொண்டு வரும்போதே, “பரவாயில்லை ஐயா; நாங்கள் வேண்டுமானால் இப்போது போய் விட்டு சாயங்காலம் வருகிறோம். நீங்கள் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக் கொள்ளுங்கள்” என்று விநயமாகக் கூறினான். 

“ரெஸ்ட்டா…? பாடறதும், பாடம் சொல்லிக் கொடுக்கறதும்தான் எனக்கு ரெஸ்ட்டை விடச் சிறந்த டானிக். வாங்கோ மாடிக்குப் போவோம்.” 

பாகவதர் மாடியேறிப் போன பிறகும். அந்த மாணவர்கள் இருவரும் கீழேயே தயங்கி நிற்பதைக் கண்டதும். “என்ன வேணும்…?” என்று கேட்டுக்கொண்டு கல்யாணி அம்மாள் வந்தாள். 

“கால் கழுவ வேண்டும்” என்று பாதத்தைக் காட்டி அவர்கள் கூறியதைக் கேட்டதும் கல்யாணி அம்மாளுக்கு ஒரு கணம் வியப்பை அடக்க முடியவில்லை! கொல்லைப் புறம் அழைத்துச் சென்றாள். 

‘பாடம் நடக்கிற இடம் கோவில் மாதிரி; அங்கு கைகால் அலம்பி விட்டுத்தான் போக வேண்டும் என்று, வித்தைக்கு மதிப்புக் கொடுக்கிற அளவு தெரிந்து வைத்துக் கொண்டிருக்கிறார்களே! இவர்கள் என் கணவரிடம் பெயர் எடுக்கக் கூடியவர்கள் தான்’ என்று அப்போதே கல்யாணி அம்மாள் ஒரு புள்ளி போட்டுவிட்டாள். 

கிணற்றங்கரைக்கு அழைத்துச் சென்றதற்காக அந்தப் பெண் நன்றி கூறத் தலைப்பட்டபோது,  “அதெல்லாம் இருக்கட்டும், சீக்கிரமா மேலே போங்கோ, அவா காத் துண்டு இருப்பா” என்று அவர்களைத் துரிதப்படுத்தி மேலே அனுப்பி வைத்த பின்பும், அந்தப் பெண் மட்டும் கீழேயே தன் மனத்திற்குள்ளேயே தங்கி விட்டாற் போன்றதொரு உணர்ச்சி கல்யாணிஅம்மாளைப் பற்றிக் கொண்டது. 

விஸ்தாரமான ஹாலில் விரிக்கப்பட்டிருந்த ரத்தினக் கம்பளத்தின் மீது சுருதிப் பெட்டியும் தம்பூராவும் இருந்தன. 

ஆரம்பப் பாடத்திற்கான சம்பிரதாயச் சடங்குகள் எல்லாம் முடிந்த பின்னர், பாகவதர் தம்புராவை மடியில் எடுத்து வைத்துக் கொண்டு உட்கார்ந்தார். அவர்கள் இருவரும் குருவின் பாதங்களில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி எழுந்தனர். 

பாகவதர் அவர்களை வாயாற, மனமாற வாழ்த்தி விட்டு அமரச் சொன்னார். பையில் அவர்கள் கொண்டு வந்திருந்த, புஷ்பம், பழங்களையும், அட்சதைத் தட்டையும் எடுத்துக்கொண்டு “இதோ ஒரு நிமிஷத்தில் வந்து விடுகிறோம் ஐயா” என்று கனவேகமாக இருவரும் கீழிறங்கிச் செல்லவுமே, அவர்களது நோக்கத்தைப் புரிந்துகொண்ட பாகவதர் மெய்சிலிர்த்துப் போனார். 

‘இறைவா. என்னிடத்தில் உன் திருவிளையாடலை ஆரம்பித்திருக்கிறாயா?’ என உள்ளத்திடம் கேட்டுக் கொண்டபோது, அவரையும் அறியாமல் அவரது விழி களின் கடையிலே கண்ணீர் பூத்து நின்றது. 

அவர்கள் படியேறி வருகிற சப்தம் கேட்டது. பாகவதர் பவுண்டன் பேனாவைத் திறந்து வைத்துக் கொண்டார். 

“நோட்டுப் புத்தகம் கொண்டு வந்திருக்கிறீர்களா?”

“இதோ.” 

இருவரும் ஏககாலத்தில் இரண்டு கனத்த புத்தகங்களை நீட்டினர். அதன் முதற்பக்கத்தில் நான்கு மூலைகளிலும் குங்குமத்தைக் குழைத்துத் தடவி, பிள்ளையார் சுழி போட்டார். அதன்கீழ் ‘குருவே துணை’ என்று எழுதியபடி, ‘உங்கள் பேர் என்ன?” என்று கேட்டார். 

என் பெயர் டேவிட் ஜான். ஒகியோ (Ohio) மாநிலத்திலுள்ள ‘யெல்லோ ஸ்பிரிங்’ (Yellow Spring) என்னுடைய ஊர். என் தந்தை; டேடன் (Dayton)  நகரத்தில் ஒரு மோட்டார் தொழிற்சாலை வைத்திருக்கிறார். இவள் பெயர் சோபியா (Sophia), சிறு வயதிலேயே அப்பா, அம்மாவை இழந்துவிட்டாள். அம்மாவைப் பெற்ற பாட்டியோடுதான் ‘கிளாவ்லாண்டில்* (Glavlands) இருக்கிறாள். இரண்டு பேரும் ஒரே கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்றோம். நாங்கள் தூரத்து உறவினர்கள்” என்று பாகவதர் கேட்ட ஒரு கேள்விக்கு, டேவிட் சுருக்கமாகத் தங்களுடைய வாழ்க்கைக் குறிப்பையே கூறிவிட்டான். 

“ரொம்ப சரி” என்று கேட்டுக்கொண்ட பாகவதர் இருவருடைய நோட்டிலும் சரளி வரிசைகளை எழுதிக் கொடுத்து, “இதுதான் கர்நாடக சங்கீதத்திற்கு ஆரம்பப் பாடம். இது, மாயா மாளவ கெளள ராகத்தில் அமைஞ்சிருக்கு. முதல்லே, சுருதியோடேயே சேர்ந்து குரலை நிறுத்திப் பழகறதுக்கு, ஷட்ஜமம், பஞ்சமம், மேல் ஷட்ஜமம்’ என்கிற மூணு ஸ்தாயிக்கும், ஸ – ப -ஸ-ன்னு பாடிப் பழகணும். 

அதாவது, உங்க சங்கீதத்திலே ‘சுப்ரானோ’ (Suprano) ஆல்டா’ (Alto)  டெனர்’ (Tenar) பேஸ்’ (Base) ன்னு ‘வாய்ஸ் ரேஞ்ச்’ (Voice range) இருக்காப்பிலே; பாடற அவரவர்களுக்கு சாரீரம் இடம் கொடுக்கற மாதிரி, வசதியான ஒரு சுருதியைத் தேர்ந்து எடுத்துடுண்டு, இந்த ‘ஸ-ப-ஸ’ வைப் பாடணும். இப்போ நான் பாடறேன். பிறகு நீங்கள் தனித்தனியே பாடலாம்” என்று கூறியபடி, மடியிலிருந்த தம்பூராவின் தந்திகளை மீட்டினார். அதன் இனிய நாதம் அறை எங்கும் பரவியது. 

தாம் சொல்லிக் கொடுப்பதை சுருதியோடு சேர்ந்து டேவிட்டையும், சோபியாவையும் தனித் தனியே திரும்பத் திரும்பப் பாடிச் சொல்லிக் கேட்டபோது, பாகவதருடைய மனத்தில் எல்லை மீறிய மகிழ்ச்சியும், நம்பிக்கையும் பிறந்தன. 

பாடங்கள் பெருகிக் கொண்டிருந்தபோது, ‘இவர்கள் என்றாவது ஒருநாள் பயிற்சி முடிந்து அமெரிக்கா செல்ல வேண்டியவர்கள் தாமே?’ என்று பாகவதர் எண்ணிப் பார்த்தபோது, அவருக்கு உள்ளத்தை என்னவோ செய்தது. 

பாகவதரை விடப் பன்மடங்கு சோபியாவைநினைத்து கல்யாணி அம்மாள்தான் கலங்கினாள். ஆனலே இந்தக் கலாசாரத்தின் அடிப்படை!- 

கல்யாணி அம்மாளுக்கு பாபு ஒரே பிள்ளை. அவனுக்குப் பிறகு ஒரு பெண் பிறந்தது. அதன் மீது உயிரையே வைத்திருந்தார் பாகவதர். தம்பதியரை ஏமாற்றி விட்டுக் குழந்தை இறந்து விட்டது. அதன் பிறகு அவர்களுக்குக் குழந்தையே பிறக்கவில்லை. 

இப்போது அந்தக் குறையைத் தீர்ப்பது போல் சோபியாவின் வருகையும், அவளுடைய செய்கையும் இருந்தன. அளவிற்கு மீறிய பாசத்துடன் சோபியா ஒட்டிப் பழகி வரவே, கல்யாணி அம்மாளுக்கு சோபியாவை ஒரு நாள் பார்க்காவிட்டால் கூட என்னவோ போல் இருக்கும். 

எந்த விசேஷமோ, பண்டிகையோ வந்தாலும் டேவிட்டையும், சோபியாவையும் தங்கள் வீட்டில்தான் சாப்பிட வேண்டுமென்று கூறிவிடுவாள். 

மேஜை மீது பீங்கான் தட்டுக்களில் கத்தியினாலும், ஸ்பூனினாலும், ஃபோர்க்காலும் சாப்பிட்டுப் பழக்க முடைய அவர்கள், மனையில் சம்மணமிட்டு அமரிக்கை யாய் உட்கார்ந்திருக்கிற அழகையும், சாப்பிடுகிறபோது இலையில் ஓடுகிற ரசத்தையும் பாயசத்தைவும் கையால் பிடிக்கிறபோது படுகிற அவதியையும் கண்டு பாகவதர் தம்பதியர் மிகவும் ரசித்தனர். ஆனால், விரைவிலேயே இலையில் சாப்பிடுகிற கலையிலும் அவர்கள் தேறி விட்டனர். 

இப்படி எல்லா விஷயங்களையும் கிரகித்துக் கொள்ள இருக்கிற துடிப்பைப் போலவே, இசைப் பயிற்சியிலும் அவர்கள் அடைந்துவரும் முன்னேற்றத்தைப் பற்றி பாகவதர் மனைவியிடம் அடிக்கடி கூறுவார். “டேவிட்டும், சோபியாவும் விரைவிலேயே கர்நாடக. இசையில் மிகப் பிரபல பாடகர்களாகச் சோபிக்கப் போகிறார்கள்” என்று அவர் கூறும்போது, அந்தச் சொற்களைக் கடந்து தன் கணவருடைய உள்ளத்தின் அடித்தளத்தில் புண்ணாகிக் கிடக்கும் ஏமாற்றத்தின் எதிரொலியை – வேதனையை – கல்யாணி அம்மாளாலும் கண்டு கொள்ள முடிந்தது. ஆனால், அதைப் புரிந்து கொள்ள வேண்டியவன் தன்னுடைய மகனேயல்லவா! 

தன் பிள்ளை பாபுவைப்பற்றி பாகவதர் ஆரம்பத்தில் பெரிய கனவெல்லாம் கண்டு கொண்டிருந்தார். அவனுக்குப் பாட்டுச் சொல்லிக் கொடுத்து அவன் பெரிய வித்துவானாகப் பிரகாசிப்பதைக் காண வேண்டுமென்று அவருக்கு அளவு கடந்த ஆசை. ஆனால் அந்த ஆசையெல்லாம் அரும்பிலேயே கருகி விட்டது. 

ஒரு வித்தை பரிணமிக்க வேண்டுமானால், அதைக் கற்றுக்கொள்கிறவனுக்கு அந்த வித்தையின் மீது அளவு கடந்த ஆர்வமும், ஆழ்ந்த பற்றும், தணியாத தாகமும் இருக்க க வேண்டும். உள்ளத்திலிருந்து பீறிட்டு வரக் குமுறிக் கொண்டிருக்கும் அந்த ஊற்றை, அல்லது எழுச்சியைச் சிறந்த வழிமுறைகளால் சோபிக்கச் செய்யத் தூண்டி விடுகிற ஒன்றுதான் குருவின் பணியே அன்றி; சீடனைத் தேடிச்சென்று, வித்தையின் மீது அவனுக்கு ஆவலையும் புகட்டுவது அல்ல ஆசானின் வேலை என்பது அவர் கருத்து. 

‘எங்கோ காட்டிலிருக்கும் வண்டு, தேடி வந்து தாமரையிலுள்ள தேனைச் சுவைத்துவிட்டுச் செல்கிறது. ஆனால், அதே தடாகத்தில் தாமரை இலை மேலேயே அமர்ந்திருக்கும் தவளைக்கு, அருகிலிருக்கும் பூவின் அருமையோ, தேனின் சுவையோ புரிவதில்லை என்றால் அது மலரின் குற்றமா?’ பாகவதர் இப்படி தன்னைச் சமாதானம் செய்து கொண்டார். 


நாடாவில் பதிவாகியிருந்த கிடார் வாத்திய இசை ‘லைக் ஸம் ஒன் இன் லவ்’ என்கிற ‘கோனி பிரான்சிஸின்’ பாடலை மென்மையாக ஒலிபரப்பிக் கொண்டிருந்தது. அதை ரசித்துக் கொண்டிருந்த பாபு, வாசலில் கார் வந்து நிற்கிற ஓசையைக் கேட்டுக் கைக் கடிகாரத்தைப் பார்த்த படி சட்டென்று எழுந்து வேகமாக வெளியே வந்தான். 

டாக்ஸியிலிருந்து இறங்கிய டேவிட்டையும் சோபியாவையும் பாபு வரவேற்றான். 

சிரித்தபடியே அவர்கள் பாபுவின் அறைக்குள் நுழைந்தனர். டேப் ரிகார்டர் ஒலித்துக் கொண்டிருந்தது. ஒரு பெரிய கம்பெனியின் உயர் அதிகாரி. 

“உங்களுக்கு கிடார் ரொம்பப் பிடிக்குமோ?” என்றான் டேவிட் 

“நான் கிடாருக்காகப் போடல்லே; பிடிச்ச ஒரு ‘ஹிட் ஸாங்கை’ இன்ஸ்ட்ரூமெண்டல்லே கேக்கறது ஒரு டேஸ்ட் இல்லையா? எனக்கு ‘கோனி பிரான்ஸி’னுடைய பாட்டு ரொம்பப் பிடிக்கும்.” 

”அப்படியா? சோபியா கூட ‘கோனி’யோட விசிறி தான்; ஒரு ‘கான்செர்ட்’டையும் விடமாட்டாள்” என்று சோபியாவைப் பார்த்துக் கண்களைச் சிமிட்டியபடி கூறினான் டேவிட். 

“இஸ்…இட்…?” என்று ஆச்சரியத்துடன் கேட்டான் பாபு. 

“ஆமாம்; சோபியா சில குறிப்பிட்ட பாட்டுக்களைப் பாடினால், நிச்சயம் உங்கள் மனக்கண் முன் ‘ஜாக்ஸனும்’ ‘கோனி’யும் அப்படியே வந்து நிற்பார்கள்!” 

பாபு மகிழ்ச்சியில் மூழ்கிப் போனான். 

“அப்படியானால் நான் அதிர்ஷ்டசாலிதான். இன்று சோபியாவை நான் லேசில் விடப்போவதில்லை!” என்று பாபு கூறிக்கொண்டிருக்கும்போதே, டேவிட் கைக் கடியாரத்தைப்பார்த்துவிட்டு, “புதன்கிழமை, சார் ஊரிலிருந்து வந்து விடுவார். டவுனுக்குப் போய்க் கொஞ்சம் தம்பூரா தந்தி வாங்க வேண்டிய வேலை இருக்கிறது. நீங்கள் பேசிக் கொண்டிருங்கள்; நான் சீக்கிரம் வந்து விடுகிறேன்” என்று எழுந்தான். 

உடனே பாபு, “பேச்சாவது… மூச்! நான் சோபியாவைப் பாடச் சொல்லி ‘ரிகார்ட்’ பண்ணப் போகிறேன். நீங்களும் சீக்கிரமாக வந்து விடுங்கள்” என்றான். 

டேவிட்டை வாசல்வரைச் சென்று அனுப்பிவிட்டு பாபு உள்ளே வந்ததும் கல்யாணி அம்மாள், “டேவிட் எங்கே பாபு?” என்று கேட்டாள். 

“அப்பாவுக்குத் தம்புரா தந்தி வாங்க டவுனுக்குப் போயிருக்கிறான்,” என்றான். 

“அப்படியா” என்ற கல்யாணி அம்மாள் சோபியா வின் அருகே உட்கார்ந்து ஆசை தீர, மனம் விட்டுப்பேசிக் கொண்டிருந்தாள். இறந்து போன தன்மகள் உயிரோடு இருந்தால் – இந்த சோபியா வயதுதான் இருக்கும். பொங்கி வந்த கண்ணீரை மறைத்தபடி உள்ளே போய் காப்பி போட்டுக் கொண்டு வந்தாள். மறுக்காமல் சோபியா, இரண்டு கையாலும் வாங்கிக் குடிக்கிற அழகைப் பார்த்து ரசித்தபடி அவள் அருகில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்துவிட்டு உள்ளே புறப்பட்டாள். 

அப்போது பாபு சட்டென்று, “அம்மா,அப்படியே கொஞ்சம் அந்தச் சேர்லே உட்காரும்மா…” என்று ஓர் உத்தரவு போல் கூறிவிட்டு, டேப்பை, ரிகார்டரில் நூறு அடி பின்னால் தள்ளி ஓடவிட்டான். அம்மாவுக்கு தூக்கி வாரிப் போட்டது. 

“இதென்னடா கூத்து! நாங்க பேசிண்டதை எல்லாம் டுத்து வெச்சிருக்கே!” 

“சும்மா ஒரு டெஸ்ட் அம்மா. ஏன் சோபா? அம்மா வோடு வாய்ஸ் மைக்குக்கு ரொம்ப ஸ்யூட்டா இருக்கு இல்லே…?” 

“போடா, நீயும் உன் போக்கிரித்தனமும்!’ என்று அம்மா உள்ளே போய்விட்டாள். 

“நீங்க அந்தப் போர்ஷனை ‘எர்ரேஸ்’ பண்ணப் போறீங்களா?” என்று கேட்ட சோபியாவை பாபு ஆச்சர்யத்துடன் பார்த்தான். 

“ஏன்? அம்மா பேச்சு உனக்கு வேணுமா?’ 

“ஆமாம். நான் அதை ஊருக்கு எடுத்துக் கொண்டு போகிறேன். ஒரு மெமொரி.” 

பாபு கடகடவென்று சிரித்தான் 

“கவலைப்படாதே. உனக்கு ‘போர்’ அடிக்கற வரை அம்மாவைப் பேசச் சொல்லி, ஒரு முழு டேப்லே ரிக்கார்ட் பண்ணித் தரேன். இப்போ… ப்ளீஸ்…நீ பாடு.” 

“என்ன பாட? ஜாக்ஸனோட ஒரு ஹிட் ஸாங் பாடவா?”

“முதல்லே கோனியோட ஒரு பாட்டுப் பாடு. ‘வேர் கேன் ஐ கோ வித் அவுட் யு’ -தெரியுமா?” 

“நல்லாத்தான் ஸெலக்ட் பண்ணி வெச்சிருக்கீங்க முதல்லே, ‘யு காண்ட் டேக் இட் ஃப்ரம் மீ’ங்கற பாட்டுப் பாடறேன். ரொம்பப் பிரமாதமாயிருக்கும்!” 

“ப்ரொஸீட்.” 

அவன் ரிகார்டிங் பண்ணுவதில் முனைந்தான். சோபியாவின் நீலநிற விழிகள் ‘மைக்’கை மொய்த்துக் கொண்டிருந்தன. அவள் தன்னையே மறந்து இசையிலே ஒன்றிப் பாடிக் கொண்டிருந்தாள். அந்த அறை முழுவதும் அவள்குரலால் மணத்தது. எங்கோ ஒரு பெரிய வெஸ்டர்ன் கான்ஸர்ட் ஹாலின் நடுவே இருப்பது போலவே பாபு வுக்குப் பிரமை தட்டியது. அவனது விரல்களிலே ‘ட்ரம்பெட்’டின் வேகம் துடித்துக் கொண்டிருந்தது. 

பாட்டை முடித்துவிட்டு, அவள் தன் விழிகளை அவன் பக்கம் திருப்பியபோது பாபு தன்னையும் மீறி, “மார்வலெஸ்… மார்வலெஸ்” என்று கை தட்டினான், ஸ்விட்சை ‘ஆஃப்’ செய்வதையும் மறந்து. ஆனால் – 

சோபியா பிரமை பிடித்தாற்போல் தன்னையே வெறிக்கப் பார்த்துப் கொண்டிருக்கவும்; “ஏன் சோபா இப்படிப் பார்க்கறே?” என்று கேட்டான் பாபு, ஒன்றும் புரியாமல். 

அவள் கூறினாள்: “உங்களைப் பற்றி நினைத்துப் பார்க்கிறேன்.” 

“என்னைப் பற்றியா?” என்றான் பாபு ஆச்சரியத்துடன். 

“ஆமாம்; இந்த மேற்கத்திய இசையிலே பட்டம் பெற்ற நானும் டேவிட்டும், உங்கள் கர்நாடக இசையா கவரப்பட்டு இங்கு வந்து அதைக் கற்றுக் கொள்கிறோம். இங்கே இருக்கிற உங்களுக்கு எங்கள் இசை மீது மோகமா யிருக்கிறது! இவ்வளவுக்கும் நீங்கள் ஒரு மகா வித்துவானுடைய பிள்ளை. நல்ல ‘காண்ட்ரரி’ய்யா இல்லே!” 

சோபியாவினுடைய இந்தப் பேச்சு பாபுவிற்குப் பொறி தட்டினாற் போல் இருந்திருக்க வேண்டும். சற்று சூடாகவே அவனும் பதில் கூறினான்: 

“என்னுடைய ஆசைகளையும் விருப்பத்தையும் – ஒரு சராசரி மனிதனுக்குரிய உரிமையோடுதான் நான் அனுபவித்து வருகிறேன். அதற்குத் தடையாக எந்த வர்ணமும் நான் பூசிக் கொள்ளவில்லை. என்னை ஒரு மகா வித்துவானுடைய மகன் என்று நீயோ, மற்றவர்களோ பெருமையாகக் கூறுவதை நான் ஆட்சேபிக்க முடியாது என்றாலும்; நான் என்னைப் பற்றி அப்படி ஒருபோதும் பெருமையாகக் எண்ணிக் கொண்டதில்லை. காரணம், இந்தக் கர்நாடக சங்கீதத்தின் மீது எனக்குப் பிரமிப்போ, பிடிப்போ இல்லாதபோது அதிலே அப்பா, மகா வித்துவானாக இருந்தால் என்ன? சாதாரண வித்வானாக இருந்தாலென்ன?” 

”ஊரிலுள்ளவர்கள் எல்லாம் தன்னிடமுள்ள வித்தையின் சிறப்பைக் கண்டு, தேடி வந்து கற்றுக்கொண்டு போய் சோபிக்கிற வேளையில்; தன் மகன் அப்படிப் பிரகாசிக்கவில்லையே என்றெண்ணுகிற ஒரு தந்தையின் ஏக்கத்தையாவது முயன்றால் நீங்கள் போக்கியிருக்க முடியுமல்லவா?” 

“ஒருவருடைய ஏக்கத்திற்காகவும், துக்கத்திற்காகவும் எல்லாம், ஒரு தொழிலை ஏற்றுக் கொள்ள முடியுமா? அவருடைய புகழ் பரப்ப உங்களைப் போல் அவருக்குப் பலர் இருக்கிறார்களே? போகட்டும், எனக்கென்னவோ பாப் மியூசிக்லே இருக்கிற பிரமையிலே பாதிகூட இந்தக் கர்நாடக இசையிலே ஏற்படலேயே?” 

“அது உங்கள் தலைவிதி!” 

“அதற்கு நான் என்ன செய்ய முடியும், சோபியா?” 

“நீங்கள் ஒன்றும் செய்ய வேண்டாம்! கண்ணை மூடிக்கொண்டு, முதலில் கழுத்தில் தொங்குகிற பிளாஸ் டிக் மாலையைக் கழற்றி எறிந்துவிட்டு, தலையை கிராப் பண்ணிக் கொண்டு வாருங்கள். ‘ஐ ஹேட் யுவர் ஹிப்பி ஐ ஸ்டைல்’, இப்படிக் கூற எனக்கு என்ன உரிமை இருக்கிறது என்று கேட்பீர்களானால், நீங்கள் என்னை மன்னித்து விடுங்கள்; நான் என் பேச்சை வாபஸ் வாங்கிக் கொள்கிறேன். ‘வால்ட் லிட்மனையும்’, நோபல் பரிசு பெற்ற கவிஞர் ‘எலியட்’டையும் போன்ற எத்தனையோ மேலை மேதைகளை இந்தியக் கலாசாரம் கவர்ந்திருக்கிறது. மேற்கு கிழக்கை நோக்கி வந்து கொண்டிருக்கும் காலம் இது. சூட்டும், கோட்டும் அல்ல; பாண்ட்டும், ஸ்லாக்குமே பிடிக்காமல், ஜிப்பாவும், வேட்டியுமாகக் காட்சியளிக்கும் டேவிட், கிராப்பைத் துறந்து குடுமி வைத்துக் கொள்வதைப் பற்றி யோசித்துச் கொண்டிருக்கும்போது, நீங்கள் ரிப்பன் வைத்துப் பின்னலாம் போல் முடி வளர்க்கிறீர்களே?” 

சோபியாவின் வேகம் நிறைந்த, நீண்ட பேச்சைக் கேட்டு, ஒரேயடியாகக் குழம்பிப் போய், ஏதோ பலத்த சிந்தனை வயப்பட்டு உட்கார்ந்திருந்த பாபு, சிறிது நேரம் வரை பேசவேயில்லை. அவன் மனம் ஒரேயடியாக குழம்பிப் போயிருந்தது. அதுவரை கண்ணுக்குப் புலப்படாதிருந்த ஏதோ ஒன்று புலப்படுவது போலிருந்தது. 

“புறப்படலாமா சோபியா?” என்று கேட்டுக் கொண்டே சற்றைக் கெல்லாம் உள்ளே நுழைந்த டேவிட் பாபு இருக்கிற நிலையைப் பார்த்து, “என்ன, சோபியா வோடு ‘கோனி’ பாட்டைக் கேட்ட மயக்கம் இன்னும் தெளியவில்லையா? இந்த ‘பாப் மியூசிக்’ என்ன, சில பேவரிட் ‘பாஃக் ஸாங்ஸ்’ ‘கோப்ஸெல்’ஸையும் கேக்கணும். ‘ப்ளூஸ்’ஸோட, ‘யூ ஸ்டெப்டு அவுட் ஆஃப் எ ட்ரீம்’ என்கிற ஒரு பிரமாதமான பாட்டிலே, சோபியாவோட சில அபாரப்பிடிகளைக் கேட்டால் அசந்து போய் விடுவீர்கள் பாபு” என்று கூறி முதுகில் தட்டிக் குஷிப் படுத்தினான் டேவிட். 

ஆனால் பாபு இழந்த உற்சாகத்தை மீண்டும் பெறவேயில்லை. ‘யூ ஸ்டெப்டு அவுட் ஆஃப் எ ட்ரீம்’ என்று லேசாக அவனது உதடுகள் முணுமுணுப்பதைக் கண்டு சிரித்துக்கொண்டே, டேவிட் விடைபெற்றபடி காரில் ஏறிக் கொண்டான். சோபியா இயந்திரம் போல் அவன் பின்னே சென்றாள். 

பாகவதர் ஊரிலிருந்து வந்ததும் பாடத்திற்கு வந்திருந்த டேவிட்டிற்கும், சோபியாவிற்கும் மிகப் பெரிய ஆச்சரியம் காத்திருந்தது! 

கழுத்து மாலையைக் கழட்டி எறிந்துவிட்டு ‘டீ’க் காகக் கிராப் செய்து கொண்டிருந்த பாபு, வேட்டி, சட்டையுடன் கம்பெனிக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தான். பாபுவினுடைய இந்த மாறுதல் சோபியாவினுடைய உள்ளத்தில் ‘சுரீர்’ என்று தைப்பது போலிருந்தாலும், அந்த வலி அவளுக்கு இதமாகவே இருந்தது. ‘தன்னுடைய வார்த்தைக்கு பாபு இவ்வளவு மதிப்பு வைத்திருக்கிறானா?’ என்று எண்ணிப் பார்த்தபோது அவளுக்குக் கண்ணில் நீரே வந்து விட்டது. ஆனால் அந்தக் கண்ணீரின் கடையிலே ஒரு துளி நம்பிக்கைக் கீற்றும் ஒளி விடுவது போல் சோபியா உணர்ந்தாள். 

அன்று பாடம் முடிந்து அவர்கள் ரூமிற்குச் சென்ற போது ‘கேபிள்’ ஒன்று காத்திருத்தது. டேவிட்டையும், ஸோபியாவையும் உடனே புறப்பட்டு வரும்படி. சோபியா, அப்போது புறப்பட விரும்பவில்லை. ஆனால் டேவிட் எல்லோரிடமும் விடை பெற்றுக்கொண்டு புறப்பட்டான். 


கல்யாணி அம்மாளுக்கு அன்று சமையலில் யுத்தியே லயிக்கவில்லை. எப்படியும் இன்று சோபியாவையும் பாபுவையும் பற்றி தன் மத்திலுள்ளதைக் கணவரிடம் கேட்டுவிட வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருக்கும் போது கணவரே அடுக்களைக்கு வந்ததும் கல்யாணி அம்மாளுக்குக் கையும் காலும் ஓடவில்லை! சாதாரணமாக அங்கு அவர் வரக்கூடியவரல்ல. 

‘என்ன வேண்டும்?’ என்று கேட்கக் கூடத் தோன்றாமல் அவள் தவித்துக் கொண்டிருந்தபோது பாகவதரே பேச்சை ஆரம்பித்தார். “உன் கிட்டே தனியா ஒரு முக்கியமான விஷயத்தைப் பற்றி அபிப்பிராயம் கேக்க ணும்னு யோசிச்சிண்டே இருக்கேன். இன்னிக்குத்தான் அதுக்குச் சமயம் வாய்த்தது.” 

“சொல்லுங்கோ!” 

“எப்படிச் சொல்றதுன்னுதான் புரியலே. நான் சொல்றது உனக்குப் புரியலேன்னா-அதாவது- பிடிக்கல்லேன்னா, ஒரேயடியா மறுத்திடுவியோ?” 

கல்யாணி அம்மாளுக்குப் புரிந்துவிட்டது. அவரும் தன்னைப் போலவே ஒன்றை மனத்தில் வைத்துக்கொண்டு தான் சுற்றி வளைக்கிறார் என்று. ஆனாலும் அது அவ வாயாலேயே வரட்டுமே என்றுதான் காத்திருந்தான். 

“டேவிட் போயிட்டான்; இனி சோபியாவும் ஊருக்குப் போயிட்டா, என்னாலே அந்தப் பிரிவைத் தாங்கவே முடியாது போலிருக்கு.” 

“அதுக்கு, நாம என்ன செய்ய முடியும்? வித்தை கத்துக்க வந்தவா எத்தனை நாளைக்குத்தான் சொந்த ஊரை, மனுஷாளை விட்டுட்டு நம்மோட இருக்க முடியும்?” கல்யாணி அம்மாள் அமைதியாகவே கூறினாள். பாகவதருக்குக் கோபமே வந்து விட்டது. 

“உனக்குக் கொஞ்சம்கூட ஞானமே இல்லேடி. சோபியாவைப் பார்க்கற போதெல்லாம் நம்ப ராஜி ஞாபகம் வர்றதுன்னு எங்கிட்டே வந்து அழுவையே?” 

“இப்போ ட்டும் இல்லியா?” 

“இருந்தா, அவள் ஊரை விட்டுப் போயிட்டா என்ன பண்ணறதுன்னு கவலைப்படாம் இப்படிப் பேசுவியா?” 

“நான் கவலைப்பட்டு என்ன பண்ணறது? அவளை பாபுவுக்குப் பண்ணி வெச்சு பெற்ற பெண்ணாட்டமா, பக்கத்திலேயே இருத்திக்கணும்னு தான் ஆசை.” 

“அதைத்தான் கேட்கறேன். இதைச் எனக்கும் சொல்ல இவ்வளவு நேரமாடி? இப்ப நான் உன் இஷ்டப்படி அதுக்கு ஒரு வழி பண்ணப் போறேன்.” 

“என்ன பண்ணப் போறேள்?” 

“எனக்கு ஒரு வரம் தரணும்னு கேட்பேன்.”

“வரமா…?” 

“ஆமாம். நான் அவளுடைய வித்தைக்குத்தான் குருவே தவிர, அவளோட சொந்த வாழ்க்கையைப் பத்தி அதிகாரம் பண்ண என்ன உரிமை இருக்கு? ஒரு வேண்டு கோள் தான் செய்யலாம்.” 

“செய்தேளா…?” 

“அதுக்குத்தான், முதல்லே இப்போ உன்கிட்ட வந்திருக்கேன்.” 

“எதுக்கு? வரம் கேக்கவா…?” கல்யாணி அம்மாள் கலகலவென்று சிரித்தாள். 

“குறும்பு உன்னைவிட்டு எங்கேடீ போகும்?” அத்தனை வயசுக்கப்புறமும் பாகவதர் மனைவியின் தலையில் செல்லமாக ஒரு குட்டுக் குட்டினார். 


“ஐயா…” சிந்தனை கலைந்த பாகவதர் தலை நிமிர்ந்தார். எதிரே சோபியா உதயசந்திரன் போல் நின்று கொண்டிருந்தாள். தலையின் ஈரத்தை உறுஞ்சக் கட்டிக் கொண்டிருந்த மலையாளத்து ஈரிழைத் துண்டு இப்போது இல்லை. அழகாக வாரிக்கொண்டு தலையில் மல்லிகைப்பூ வைத்துக் கொண்டிருந்தாள். அது அறையெல்லாம் மணத்தது. 

அருகிலிருந்த சோபிபாவிடம், “இந்தத் திருக்கார்த்திகையின் போது அகல்விளக்கு ஏத்தறாளே? அப்போ உனக்குப் புதிசா ஏதாவது தோணறதா? நீயும்தான் பார்த்திருப்பியே?” என்று கேட்டார். 

“ஆமாம், குழந்தை அவள், அவளைப் போய் பெரிய பெரிய கேள்வியெல்லாம் கேளுங்கோ; எனக்கே புரியலே…” என்று கல்யாணி அம்மாள் வக்காலத்து வாங்கினபோது பாகவதர் சட்டென்று குறுக்கிட்டுக் கூறினார்: 

“உனக்குப் புரியலேன்னா, ஒருத்தருக்கும் புரியாதுங்கறது உன் நினைப்புப் போலிருக்கு! நான் என்ன புராணக் கதையா கேக்கறேன்? கண்ணாலே பார்க்கிற போதே ஞானோதயமாகிற மாதிரி ஒரு பெரிய தத்துவம் புலப்படலியோ?” 

“சொல்லுங்கோ ஐயா, தெரிஞ்சுக்கறேன்.” சோபியாவின் இந்த பதில் கல்யாணி அம்மாளுக்குத் திருப்தியாக இருந்தது. பாகவதர் விளக்கினார்: 

“அதாவது, முதல்லே நாம் ஏத்திண்ட ஓர் அகல் விளக்கைக் கையிலே எடுத்துண்டு, வரிசையா இருக்கற விளக்குக்கெல்லாம், ஒண்ணிலேருந்து இன்னொண்ணு, அதிலேயிருந்து இன்னொண்ணு, இப்படிப் பத்து நூறு ஆயிரம், லட்சம்னு ஏத்திண்டே போக; எங்கும் ஜெகத் ஜோதியாய், ஒளி வெள்ளமாய்த் திகழ்கிறபோது; கையிலே இருந்ததைக் கீழே வெச்சுட்டா, அந்த ஆதி முதல் விளக்கு, எங்கே தோட கலந்து போச்சுன்னு யாருக்காவது புரியுமோ; இல்லே, பிரிச்சுக் கண்டுபிடிக்கத் தான் முடியுமோ? 

“எப்படி ஓர் அகல் விளக்குக்குள்ளே லட்சம், பத்து லட்சம், கோடி அகல் விளக்குகள் அடங்கியிருந்ததோ ; அப்படி அந்த லட்சமும், கோடியும், புதிதாய் பிறந்தஅந்த ஓர் அகல் விளக்குக்குள்ளேயும் அடக்கமில்லையா? இப்படித் தான் கலைகளின் வளர்ச்சியும். ஒண்ணிலேருந்து, ஒருத்தரிலேயிருந்து கோடானு கோடி”. 

பாகவதர் கூறியதை அவர்கள் சிரத்தையோடு கேட்டுக் கொண்டிருக்கும்போது, “சார். போஸ்ட்” என்கிற தபால்காரரின் குரல் கேட்டு சோபியா வேகமாகத் திண்ணைக்குச் சென்று கடிதத்தையும், ஒரு பாக்கெட்டையும் கையெழுத்திட்டு வாங்கி வந்தாள். 

“எங்கேயிருந்து வந்திருக்கு?” 

“அமெரிக்காவிலிருந்து.” 

“யார், பாபு எழுதியிருக்கானா…?” கல்யாணி அம்மாள் ஆர்வம் பொங்கக் கேட்டாள். 

“கொஞ்சம் பொறு. அவள் கவரை உடைக்கட்டும்”.’ 

“உங்கள் சிஷ்யர் டேவிட் எழுதியிருக்கிறார் ஐயா.” சோபியா கூறினாள் 

“என்ன எழுதியிருக்கான்?” 

“உங்க ஆசியினாலே ‘வெஸ்லயன்’ பல்கலைக்கழகத்திலே கர்னாடிக் மியூசிக் லெக்சரர் உத்தியோகம் கெடச்சிருக்காம்.” 

“பேஷ்…பேஷ்…அப்புறம் என்ன எழுதியிருக்கான்?” பாகவதருடைய குரலில் ஆர்வமும், மகிழ்ச்சியும் உச்ச நிலையில் ஆட்சி செலுத்திக் கொண்டிருந்தன. 

“நான் அடுத்த மாசம் அமெரிக்கா புறப்பட்டு வர்றதா எழுதியிருந்த கடிதம் கிடைத்ததாம். இது ஒன்றுதான்…” என்று சோபியா கூறிக் கொண்டிருக்கும் போதே, “அதிருக்கட்டும், நாங்கள் உன்னை இங்கிருந்து அனுப்பினான்னா நீ அமெரிக்காப் போகணும்?” என்று சிரித்தபடி அவளிடம் கூறிய கல்யாணி அம்மாள், “நிறைய எழுதியிருக்கே…டேவிட் வேறே யாரைப்பத்தி இன்னும் எழுதியிருக்கான்?” என்றாள். 

“உங்கள் பிள்ளையைப் பத்தித்தான்!” சோபியா சமாளித்தாள். 

“ஏன், பாபு தன் கைப்பட ஒண்ணும் எழுதல்லியா?” அம்மாவுக்குத் தன் பிள்ளையின் கையெழுத்தைப் பார்க்க வேண்டும்போல் இருந்ததோ என்னவோ? அந்தத் தாயின் அளவு கடந்த ஆவலை ரசித்தபடியே, “நிறைய எழுதியிருக்கிறார்!” என்றாள் சோபியா.

“என்ன எழுதியிருக்கான்?’ 

“உங்க பிள்ளை இப்போது அமெரிக்காவிலே நிறைய எடங்களிலே கர்நாடக சங்கீதக் கச்சேரி பண்ணறாறாம்.” 

சோபியா இந்த வார்த்தைகளைக் கூறி முடிக்கு முன்னர், “என்ன? சரியாப் பாத்துப் படி” என்று பரபரப்புடன் கூறினார் பாகவதர். கடிதத்தில் ஏதோ தவறு நேர்ந்துவிட்டது என்பது அவர் எண்ணம். 

“கடிதத்தில் அப்படித்தான் எழுதியிருக்கிறது, ‘மிடில் டவுன்’, ‘மான்சென்டர்’, ‘கன்னெக்டிக்ட்’, ‘சிகாகோ’ இங்கே எல்லாம் அவர் பாடின கச்சேரியைப் புகழ்ந்து பத்திரிகைகளில் வந்திருக்கிறதாம். அந்த பேப்பர் கட்டிங்கையெல்லாம் டேவிட் அனுப்பியிருக்கிறார்.” 

ஆச்சரிய மிகுதியால் பாகவதர் பிரமித்துப் போய் உட்கார்ந்துவிட்டார் சாப்பிட எடுத்த கவளம் அப்படியே கையில் இருந்தது. ‘பாபுவாவது கச்சேரி பண்ணுவதாவது? இங்கிலீஷ் பாட்டுக்குத் தாளம் போட்டுக் கொண்டிருந்தவன் யார்கிட்டே, எப்போது இந்த சங்கீதத்தைக் கற்றுக் கொண்டான்’

“ஏன் சோபா, பாபு ஏதோ வியாபார சம்பந்தமான ரெண்டு வருஷ படிப்புக்குன்னா அமெரிக்கா போறதாச் சொல்லிட்டுப் போனான்?” என்று கேட்டாள் கல்யாணி அம்மாள், 

“வியாபாரத்துக்காகவும் தான் போனார். ஆனால் அங்கே டேவிட், தன்னோட செல்வாக்கினாலே பாபுவுக்கு நிறையக் கச்சேரிகள் ஏற்பாடு செய்திருக்கிறார்.” 

“ஏற்பாடுகள் செய்யறது இருக்கட்டும். கச்சேரி பண்றதுக்கு இவனுக்கு என்ன தெரியும்?” 

“கொஞ்சம் முன்னே நீங்கள் அகல் விளக்கு தத்துவம் சொல்லவில்லையோ, அதுதான் உங்கள் பிள்ளையின் வாழ்க்கையிலேயும் நடந்திருக்கிறது. உங்களுடைய அந்த வாரிசு வரிசையிலே வந்திருக்கிறவர்தான் ஐயா பாபுவும்.” 

சோபியாவினுடைய இந்த பதில் பாகவதருக்குப் புரிவது போலவும்; புரியாதது போலவும் இருந்தது. 

‘“கொஞ்சம் விவரமாகச் சொல்லேன் சோபா” என்றார் பாகவதர். 

“தயவு செய்து என்னை மன்னியுங்கள் ஐயா. உங்களிடம் சொல்லக் கூடாது என்கிற எண்ணமில்லை. ஆனால், அதற்கான துணிவு வராத காரணத்தோடு, சொல்லி ஆகவேண்டிய சந்தர்ப்பமும் இப்போதுதான் நேர்ந்தது. இன்று பாபு கச்சேரி செய்கிறார் என்றால், அது அவருக்கு யாரும் கற்றுக் கொடுத்து மாத்திரம் வந்து விட்டதல்ல என்பது என் கருத்து. காரணம், அவர் மகா மேதையான தங்களுடைய மகன். உங்களுடைய இசையும், ஞானமும், விரும்பியோ விரும்பாமலோ இயற்கையாகவே அவரது இதயத்தின் அடித்தளத்தில் முழங்கிக் கொண்டிருந்திருக்கிறது. அந்த வாயிலைத் திறந்து விடும் பணியை தூண்டிவிடும்; ஒரு கைங்கரியத்தைத் தான் நான் செய்தேனேயன்றி அவருக்கு நான் ஆசானல்ல; நீங்களே அவரது குரு” 

பாகவதருக்கு மெய் சிலிர்த்தது. சோபியா கூறிக் கொண்டிருந்தாள்: 

“உங்களிடம் அவருக்கு ஏற்பட்ட வறட்டு கர்வமும், மேலை இசை மீது உள்ள மோகமும் அவரது கண்களை மறைத்திருந்தன. பாசியை விலக்கித் தெளிந்த நீரைக் காட்டியதும், அதை அவர் உணர்ந்து பற்றிக் கொண்டது தான் இறைவன் அருள். அந்தப் பற்றுதலும், அருளும் அவர் மீது எனக்கு ஒரு நம்பிக்கை ஒளியை ஊட்டியது. ஆனால்…காலம் வரும்வரை, அமெரிக்காவில் டேவிட்டிடம், தான் சங்கீதம் கற்றுக் கொள்ளுவது யாருக்கும் தெரிய வேண்டாம் கொஞ்சகாலம் ரகசியமாகவே இருக்கட்டும் என்ற பாபுவின் ஆரம்ப வேண்டுகோளை என்னால் மறுக்க முடியவில்லை. எப்படியாவது அவரை இசைக் கலையில் சோபிக்கச் செய்யவேண்டும்; அதன் மூலம் உங்கள் மனப்புண் ஆறவேண்டும்; இதயம் குளிர வேண்டும்-என்கிற ஆவல்தான் என்னை பாபுவின் கோரிக்கைக்கு இணங்கச் செய்துவிட்டது.” இதைக்கூறும் போது சோபியாவின் விழிகளிலிருந்து வழிந்தோடிய கண்ணீர், குருவினிடம் மன்னிப்பை இறைஞ்சுவது போலிருந்தது. 

பாகவதர் ஒரு தந்தைக்கு மேலான பாசத்துடன் அவளது முதுகைத் தட்டி ஆறுதல் கூறினார். 

“நீ கூறாவிட்டாலும் பாபுவின் நடை, உடை பாவனைகளில் கண்ட மாறுதலுக்கு நீதான் காரணம் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிந்திருந்தது சோபியா. குருடனுக்கு வேண்டியது பார்வை தானே யொழிய; அது யார் மூலமா கிடைச்சா எனன? இதுக்காக சந்தோஷப் படுவதைவிட்டு யாராவது வருத்தப் படுவாளா? சரி, கையிலே, அது என்ன பாக்கெட்?” 

“அமெரிக்காவில் பாபு செய்த கச்சேரிகள் சிலவற்றை டேவிட் ‘டேப்’ எடுத்து அனுப்பியிருக்கிறார். இதோ போடுகிறேன்” என்று சோபியா உள்ளே சென்றாள். கல்யாணி வியப்போடு அவளையே பார்த்துக் கொண்டிருந்தாள். 

சற்றைக்கெல்லாம் டேப் ரிகார்டரிலிருந்து பிறந்த இசையைக் கேட்டு பாகவதர் ஒரேயடியாக உணர்ச்சி வசப்பட்டு பரவசமாகி போனார். 

அந்தக் குரலில் அதே இனிமை, அனாயாசமான பிடிகள், ஸ்வரக்கோர்வைகள். இளமை முறுக்கேறிய தன்னுடைய வாலைப் பருவத்தில் கொடிகட்டிப் பறந்த போது தான்பாடிய பாட்டை; மீண்டும் தானே இப்போது கேட்பது போலிருந்தது! 

கல்யாணி அம்மாளுக்குத் தன் செவிகளையே நம்ப முடியவில்லை! உள்ளத்தினுள்ளே மகிழ்ச்சிப் பெருக் கெடுத்தோடிக் கொண்டிருந்தது. எதிரே நிற்கும் சோபியாவை சாதாரண ஒரு மானுடப் பெண்ணாகவே அவளுக்கு எண்ணத் தோன்றவில்லை. 

பாகவதர் என்னும் பெருஞ்சோதியிலிருந்து ஏற்றப்பட்ட எத்தனையோ இசை விளக்குகள் நாடு எங்கும் ஒளி வீசிக் கொண்டிருக்கின்றன. ஆனால், அவர் சமீபத்தில் ஏற்றிய விளக்கான இந்த அமெரிக்கச் செல்வங்கள் செய்த கைம்மாறு –

அணையா விளக்காகப் பிரகாசிக்க; அதாவது குருவி வினுடைய காலத்திற்குப் பின்பும் அந்த வீட்டில் இசை மணத்து கொண்டிருக்க, ஒரு வாரிசையே அல்லவா காணிக்கையாகச் சிருஷ்டித்து விட்டார்கள். 

– தினமணி கதிர், மலருக்கு மது ஊட்டிய வண்டு, முதற் பதிப்பு: டிசம்பர் 1992, காயத்திரி பப்ளிகேஷன், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *