மலரின் குறை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 17, 2024
பார்வையிட்டோர்: 634 
 
 

(1941ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

காமதேவன் கொலுவீற்றிருக்கின்றான். திருமகளின் ஸௌந்தர்யம் செல்வம் முதலியவைகளும், திருமாலின் மனமோகன சக்தியும் அவனிடத்தில் ஒருங்கே விளங்கின. அம் மன்மதன் சமீபகாலத்தில் தான் பட்டத்திற்கு வந்திருக்கிறான். அவனுடைய பதவி புதிதாகச் சிருஷ்டிக்கப்பட்டது. அவன் தன்னுடைய ஆணையினால் உலக சிருஷ்டிக்கு உதவும் காரியங்களையும் உயிர்கள் இன்புற்று வாழ்வதற்குரிய ரக்ஷணைகளையும் செய்யப்போகிறான். ஏன்? மகா காலமூர்த்தியாகிய ருத்திரனைப்போல ஸம்ஹாரத் தொழிலுக்குங்கூட அவன் திருவிளையாடல்கள் காரணமாகப் போகின்றன.

இன்னும் அவன் தன்னுடைய அதிகாரத்தைச் செலுத்தத் தொடங்கவில்லை. அதற்கு வேண்டிய முன் அமைப்புக்களைச் செய்வதிலே கவனம் செலுத்தி வருகிறான்.

அழகு , இன்பம் எல்லாம் எந்தப் பொருள்களில் இருக்கின்றனவோ அந்தப் பொருள்களைத் தன்னுடையனவாக ஆக்கிக்கொள்ள வேண்டுமென்பது அவனது தீவிரதர ஆவல்.

பக்கத்தில் வஸந்தன் – அவனது ஆருயிர்த் தோழன் – இருக்கின்றான். தேவமகளிர் சூழ்ந்து கொண்டு ஆடல், பாடல், அழகு ஆகியவற்றால் அவனுடைய மகிழ்ச்சியைத் தூண்டுகிறார்கள்.

மன்மதனுக்கு இதே ஞாபகம் : பஞ்சேந்திரியங்களுக்கும் இனிமையான வஸ்துக்களின் மேல் தன்னுடைய முத்திரையைப் போட்டு விட வேண்டு மென்ற சிந்தனை. கண்ணுக்கு அழகு, ஸ்பரிசத்திற்கு இனிமை, தீஞ்சுவை, நறுமணம், இன்னிசை இவை அமைந்த பொருள்கள் யாவை? அவைகளுட் சிறந்தவை எங்கே உள்ளன? – இந்த ஆராய்ச்சியில் அவன் உள்ளம் தலைப்பட்டது.

அவனது கடைக்கண் நோக்கினால் உத்தரவிடப் பட்ட நங்கை ஒருத்தி முன் வந்து பணிந்து நின்றாள்.

“காமரூபிணி, இன்று நீ பூலோகத்திற்குச் செல்வாயாக. கண்ணுக்கு அழகான பொருள்களில் சிறந்தது எதுவோ அதைத் தேர்ந்து வா.”

“ஸ்வாமி, தேவரீர் சித்தம்.”

தன் பனிச்சிறகை விரித்துப் பூமியில் இறங்கினாள் அவ்வழகி. “அழகு எங்கே? அழகு எங்கே?” என்று அவள் கண்கள் ஆராய்ந்தன. ஒன்றனையொன்று மோதியெழுந்த அலைகளை வீசிய கடலைக் கண்டாள்; அதன் கரையிலே வெள்ளி வெண் சிறகுகளைக் கோதிய நாரைக் கூட்டங்களில் அவள் கண் நுழைந்தது; நீல வானத்திலும் வானை முட்டிய மலைகளிலும் பூமியின் மேற்பரப்பில் கோடு கிழித்துச் செல்லும் நதிகளிலும் அவள் பார்வை சென்றது. எல்லாம் அழகின் திருக் கோயில்களே. ஆனாலும் -? அவள் மனத்திற்குத் திருப்தி உண்டாகவில்லை.

சூரியன் கதிர்கள் புக முடியாதபடி செறிந்த பொழிலொன்றிற் புகுந்தாள். கண்ணை மலரத் திறந்து பார்த்தாள். அங்கே விதவிதமான நிறமுள்ள மலர்களில் அவள் கண்கள் பதிந்தன. அவற்றிலிருந்து கண்களைப் பறிக்க முடியவில்லை. “காமதேவன் வேண்டிய பொருளைக் கண்டு பிடித்து விட்டோம்” என்று அவள் உள்ளத்தே ஒரு கர்வம் உண்டாயிற்று. கண்ணைக் கவரும் நிறத்தைப் பெற்ற ஒரு பெருமலருக் கருகிற் சென்று நின்று ஆர அமரப் பார்த்து மனம் பூரித்தாள் ; “‘மலரே, பூமிதேவியின் இயற்கை யாபரணமே, நீயே அழகின் சிகரம். நீயே எம்முடைய ரதிகாந்தனுக்கு உவந்த பொருள்” என்று கூறி மகிழ்ந்து விண்ணுலகுக்கு ஏக விரைந்தாள்.

‘கண்ணுக்கு இனிய அழகுடைய பொருள்களுள் மலர் சிறந்தது’ என்பதை அன்று காமன் உணர்ந்தான்.

2

அவள் பெயர் லலிதாங்கி; அவள் மேனி மென் மைக்கு இருப்பிடம். அது வேறு, மென்மை வேறென்று சொல்வது கூடப் பிழை. இன்று காமக் கடவுளுடைய அருள் நோக்கம் அவள் பால் சென்றது.

“நேற்று, காட்சிக்கு இனிய பொருளை அறிந் தோம். ஸ்பரிசத்துக்கு இனிய வஸ்துவை இன்று நீ அறிந்து வரவேண்டும்” என்று கட்டளையிட்டான் காமன்.

“உத்தரவு, பிரபோ” என்று கிளம்பினாள் லலிதாங்கி.

தன் மென்றளிர்க் கரங்களால் அவள் பொருள் களின் மென்மையை அளந்தறியத் தொடங்கினாள். மான்கணங்களின் இடையே சென்று அவற்றைத் தடவிக் கொடுத்தாள்; அவற்றின் மெத்தென்ற தேக ஸ்பரிசம் அவளுக்கு இன்பத்தை உண்டாக்கியது. அன்னப் பக்ஷிகளின் அடிவயிற்றைத் தொட்டுப் பார்த்தாள். அங்கே உள்ள தூவியின் மென்மைக்கு ஈடு வேறொன்றும் இல்லையென்றே துணிந்துவிட்டாள். ஆனாலும், பார்ப்போமென்று எண்ணிப் பூம்பொழிலிற் புகுந்தாள். அழகிற் சிறந்த மலர்களை அவளறியாமலே அவள் கரங்கள் தீண்டின. அவள் மேனி சிலிர்த் தது; ‘என்ன மென்மை ! என்ன தண்மை இவையல்லவா நம் சிருங்கார சக்ரவர்த்திக்கு உவப்பைத் தருவன! மற்றவை யெல்லாம் இவைகளுக்கு முன் எம்மாத்திரம்?’ என்று நினைந்து காமனுலகு அடைந்தாள்.

ஸ்பரிச சுகத்தைத் தரும் பொருள்களிற் சிறந்தது மென்மலரே என்ற விஷயம் அன்று சித்தஜனது அரண்மனையில் விளம்பரம் செய்யப்பட்டது.

3

மூன்றாம் நாள். இன்று அமுதவல்லியின் முறை. “நாவுக்கு இனிய பொருள்களில் உயர்ந்தது எதுவோ அதை ஆராய்ந்து அறிந்து வர வேண்டும்” என்ற உத்தரவைப் பெற்றுக்கொண்டு அவள் புறப்பட்டாள். அவளுக்கு ருசி அறிவதில் திறமை அதிகம். காமதேவனது பாகசாலைக்கு அவளே மேலதிகாரி.

கரும்பும் கனியும் அவள் ஆராய்ச்சிக்கு உட்பட் டன. பல வகை மதுரமுள்ள கனிகளை அவள் சுவைத் துப் பார்த்தாள். ‘என்ன தேவலோகம் வேண்டியிருக் கிறது. ஒரு மரம். அதில் ஐந்து ஜாதி. அவைகளில் பொன்னும் மணியும் பழுத்துத் தொங்குகின்றன. அவை யாருக்கு வேண்டும்? தின்று ருசிப்பதற்கு மண் மகளின் பிரஸாதந்தான் ஏற்றது. எத்தனை வகை! எத்தனை ருசி!’ என்று அவள் பிரமித்தாள். “சரி, பழங்களே சுவையுள்ள பொருள்கள்” என்ற தீர்மானத்துக்கு வந்தாள்.

“இந்த இரண்டு நாட்களாக இங்கே வந்த அணங்குகளின் மனத்தைக் கவர்ந்த புஷ்பத்தைப் பார்த்துப் போகலாமே” என்ற ஓர் எண்ணம் அவளுக்கு உண்டாயிற்று. பூங்கானகத்திற் சென்று மலரருகில் நின்றாள். அதன் அழகும் மென்மையும் காமதேவன் திருவுள்ளத்திற்கு உவப்பைத் தருவனவே என்பதை அவள் உணர்ந்தாள். அது என்ன? இதற்குள் ஏதோ துளி இருக்கிறதே!’ என்று தொட்டுப் பார்த்தாள். அதுதான் தேன். அதனைச் சுவைத்துப் பார்த்தாள். “அடடா! என்ன பேதைமை ஏமாந்தல்லவா போய்விட்டோம்! இந்தத் திருட்டுப் புஷ்பங்கள் இந்த வஸ்துவைக்கூட வைத்திருக்கின் றனவே! ஆஹா! என்ன ருசி! என்ன அருமை சக்கையும் வித்தும் கலந்து நிரம்பிய பழங்கள் இதற்கு எவ்வளவோ தூரத்திலல்லவோ நிற்க வேண்டும்? இது தான் சுவை! இதுதான் சுவையின் உச்சி!”

மலருக்கு வந்த அதிருஷ்டம்: அமுதவல்லியின் சுவைப் பரீக்ஷையிலும் அதுவே முன்னால் நின்றது. சுவையில் உயர்ந்த பொருள் மலரிலுள்ள தேனே என்ற மூன்றாவது சிறப்பொன்று அதற்கு அளிக்கப் பட்டது.

4

இன்று ஸுவாஸினி வந்தாள். அவள் வேறு எங்கும் போகவில்லை. வரும் வழியிலேயே தென்ற லிளங்குழவி வந்தது. மெல்லென்ற தண்மையும், கம்மென்ற மணமும் அதன்பால் இருந்தன. ஸுவாஸினிக்கு ஸந்தோஷம் பொறுக்க முடியவில்லை. “தென்றற் குழந்தாய், தேடிப்போன மருந்துக்கொடி காலில் அகப்பட்டது போல உன்னை எதிர்ப்பட்டேன். உன்னுடைய மென்மையையும் தண்மையையும் லலிதாங்கி உணரவில்லையே. புஷ்பங்களையெல்லாம் உயர்த்தி விட்டாள். உன்னுடைய கந்தத்தைக் கண்டு நான் வந்த காரியம் முற்றுப் பெற்றுவிட்டது. உனக்கு வந்தனம்” என்றாள்.

“நீ என்ன சொல்லுகிறாயென்பது எனக்குத் தெளிவாக விளங்கவில்லை. நீ என்னை வருணிப்பதற்கு என்னிடம் இயல்பாக ஒரு குணமும் இல்லை. இந்தத் தண்மை பொதியமலை அருவியிலிருந்து எடுத்துக் கொண்டது. இந்த நறுமணமும் மலரினங்களின் கருணையினால் பெற்றது” என்று மந்தமாருதம் கூறியது.

“என்ன! மீண்டும் அந்தப் புஷ்பந்தானா? அதுதான் வாஸனையை உடையதா?” என்று ஆச்சரியப்பட்டாள் ஸுவாஸினி .

தென்றல் வழி காட்ட அவள் பூம்பொழிலிற் புகுந்தாள். மலரின் நறுமணம் காந்தம் போல அவளை இழுத்துச் சென்றது. அங்கே அவள் மெய்ம்மறந்து அந்த ஸுவாஸனையில் ஒன்றி நின்றாள்.

நறுமணத்திற் சிறந்த பொருள் மலரே என்ற சித்தாந்தம் நான்காவது நாளில் காமன் அவைக் களத்தில் நிறுவப்பட்டது.

5

இந்த விஷயங்களை மலர் அறிந்துகொண்டது. தென்றலிளங் குழவி அதற்கு உண்டாயிருக்கும் உன்னதப் பதவியைக் கூறியது. காமனுடைய லோகத்தில் தன் புகழ் பரவுவதை அறிந்தபோது அதற்குச் சிறிது செருக்கு உண்டாயிற்று; நான் அழகி, மெல்லியல், இன்சுவைத் தேனுடையவள், ஸுவாஸினி’ என்ற எண்ணம் அதன் மனத்தில் திரும்பத் திரும்ப உதித்தது.

அன்று காமதேவன் ஐந்தாவது சோதனைக்கு ஆளனுப்பினான். கானவிலாஸினி அந்தக் கைங்கரி யத்தை ஏற்றுக்கொண்டாள். இன்னிசைக் கீதம் இயற்கையிலே எங்கெங்கே உண்டோ அங்கெல்லாம் தேடத் தலைப்பட்டாள். வெள்ளலைக் கைகளைக் கொட்டி முழங்கும் கடலின் பிரணவ கோஷம் அவள் உள்ளத்தை உருக்கவில்லை. மரத்தின் மூலையிலே அடங்கி யொடுங்கி வஸந்த காலத்தில் மட்டும் கூவும் குயிலின் குரல் அவளுக்கு உவப்பை உண்டாக்கவில்லை. மலையிலிருந்து ஒல்லென ஒலித்து வீழும் அருவியின் இசை அவளுக்கு ரஸிக்கவில்லை.

எல்லோரும் தங்கள் ஆராய்ச்சிக்கு முடிவு கண்ட அந்த மலரழகியைத்தான் பார்ப்போமே’ என்று சென்றாள் ; நின்றாள்; தனக்கு உரிய பொருள் அங்கே கிடைக்கவில்லை; காத்துப் பார்த்தாள்; பயனில்லை.

நான்கு நாட்களும் சிறப்படைந்து தருக்குற்ற மலருக்குத் தன் முன் நின்ற அணங்கு மயங்குவதற் குரிய காரணம் புலப்படவில்லை. அவள் தான் விரும்பி வந்ததை அந்த மலரிலே காண வேண்டு மென்று ஆவல் கொண்டாள். அது பூர்த்தி ஆகவில்லை. அவள் மனம் இரங்கியது; “பூ மகளே! நான் உன்னிடத்தைத் தேடி வந்தேன். நான்கு நாட் களும் உன்னுடைய இயல்புகளால் களித்த தோழி களைப்போல் நானும் களிப்புறலாமென்று நம்பி வந்தேன். நீ மௌனமாக இருக்கிறாய். நான் விரும்பி வந்த இன்னிசை உன்னிடத்திலே இல்லை. எனக்கு மட்டும் புறம்பாகி நிற்கிறாய். நான் எங்கே போவேன்!” என்று அவள் புலம்பினாள். பிறகு, “நாளைக்கு வருகிறேன்” என்று சொல்லிப் போய்விட்டாள்.

மலரின் மனம் உடைந்தது. அது கொண்ட செருக்குச் சிதறியது. “‘ஐயோ, இன்னிசைக்கு நான் எங்கே போவேன்! என்னுடைய குறையை இப்போது தானே உணர்ந்தேன்? யார் இதை நிரப்புவார்கள்?” என்று அழுது கண்ணீர்விட்டது. தென்றல் வந்து தேற்றியது; மாலைக் காலம் வந்து மையல் காட்டியது. ஆனால் குஸ்ம கன்னிகையின் மனம் மட்டும் தேறவில்லை.

அப்பொழுது அங்கே ஒரு சிறிய வண்டு வந்தது. மலர்மகள் முகம் வாடி அழுவதைக் கண்டு, “ஏன் நீ தேம்புகிறாய்?” என்று இரங்கி விசாரித்தது.

“பிருங்க ராஜாவே, நான் என்ன சொல்வேன்! காமதேவனுடைய கட்டளையின்படி இந்த நான்கு நாட்களாக நான்கு தெய்வ கன்னிகைகள் இங்கே வந்தார்கள். அவர்கள் நால்வரும் என் அழகையும், மென்மையையும், சுவையையும், மணத்தையும் கண்டு உவந்து சென்றார்கள். இன்றைக்கு ஒருத்தி வந்தாள். அவள், இன்னிசை என்னிடம் இருக்கிறதோவென்று கேட்டாள். நான் ஊமையாக நின்றேன். அவள் போய்விட்டாள். எனக்கு இசை இல்லையே! யார் தருவார்கள்? நாளைக்கு வந்து பார்க்கும் போது பழைய படியே இருந்தால் என் செய்வது !” என்று கதறிக் கண்ணீர் விட்டது.

“மலர் மங்கையே, இதுதானா பிரமாதம்? உன் வருத்தத்தை இதோ நான் போக்குகிறேன். உன் இதழ்களை அகலத் திற” என்று கூறி அவ்வண்டு அப்பூவிற்குள் புகுந்துகொண்டு ரீங்காரம் செய்யத் தொடங்கியது. பூம்பொழில் முழுவதும் அதன் சுருதியிலே லயித்து நின்றது.

ஆறாம் நாட் காலையில் காமலோகத்திலிருந்து கானத்தைத் தேடும் காரிகை வந்தாள். நெடுந் தூரத்தில் வரும்போதே இந்த அமுத கானம் அவள் என்பை உருக்கியது. நேரே வந்து மலர்முன் நின்றாள்; கானம் அதிலிருந்து உண்டாகியதை உணர்ந்தாள்;

“ஸந்தோஷம்! நீயே போற்றற் குரியவள். நீயே காமதேவனுக்கு உகந்தவள். நீ வாழ்க!” என்று வாழ்த்திவிட்டுச் சென்றாள்.

அன்று பஞ்சேந்திரியங்களுக்கும் இனிமை தரும் பொருள் மலர் என்ற உண்மையைக் காமதேவன் உணர்ந்தான். அதைத் தனதாக்கிக் கொள்ளத் திருவுள்ளம் வைத்தான்.

“இந்திரியங்களை மயக்குவிக்கும் மலர்கள் நம் அஸ்திரங்களாகுக! ஐம்பொறி உணர்ச்சிக்கும் களிப் பூட்டும் அவையே நமக்குரிய படைக்கலம். அவற்றைக் கொண்டு ஸர்வலோகத்தையும் நாம் அடிப்படுத்தி விடுவோம். பஞ்சேந்திரியங்களையும் நம் வசப்படுத்த நமக்கு ஐந்து அம்புகள் வேண்டும். அவை ஐந்தும் மலர்களாகவே ஆகுக!” என்று அவன் திருவாய் மலர்ந்தருளினான். அன்று முதல் காமக் கடவுள் பஞ்ச புஷ்ப பாணன் ஆனான்.

மலர்மகள் வண்டை அணைத்துக் கொண்டாள்; “உன்னால் அல்லவோ இந்த நிலை எனக்கு வந்தது!” என்று மலர் கொஞ்சியது. வண்டும் அதன் காதலை உணர்ந்து முத்தமிட்டது.

“காமதேவனது படைக்கலமாவதென்பது கனவிலும் எண்ண முடியாத காரியம். என்னுடைய குறைவு நிரம்பாமல் இருந்தால் எனக்கு இந்த இணையற்ற பதவி வந்திராது. இந்தக் குறையை நீயே நிறைவேற்றினாய். எல்லாம் நீ தந்த வாழ்வு! யான் என்ன கைம்மாறு செய்யப்போகிறேன் ! என்னிடம் தேன் உளது. இந்தா : அது இன்று முதல் உனக்கே அர்ப்பணம். மற்றவர்களும் உன் மூலமாகவே தேனை அனுபவிக்கட்டும்.”

வண்டு மலரழகியின் மெல்லிதழ்களைக் கிண்டி முத்தமிட்டுத் தேன் குடித்து அந்த வெறியிலே இன்னிசைக் கீதத்தை எழுப்பியது :

வண்ணமுறு நன்னிறத்தாற் கண்களை கவர்ந்தாய்
மணமுனக்கு வாய்த்தது போல் யார் பெற்றார் இங்கே
தண்ணிதழின் மென்மையினால் பரிசசுகந் தந்தாய்
தங்குவண்டின் இன்னிசையால் செவிக்கினிமை பொழிந்தாய்
கிண்ணமெனத் தேனிரம்பி இனியசுவை பெற்றுய்
கீழுலகும் மேலுலகும் புகழும் நிலை உற்ருய்
தண்ணரிய மன்மதனுக் குவந்த படை யானாய்
நாண்மலரே பூமகளே வாழிய நீ வாழி!

– கலைஞன் தியாகம் (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: 1941, கலைமகள் காரியாலயம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *