மறைந்த இலக்கணம், படைத்த இலக்கியம்

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 29, 2019
பார்வையிட்டோர்: 8,757 
 

எதிரில் உட்கார்ந்திருந்த நண்பருடன் வியாபாரம் சம்பந்தமாக பேசி முடித்து அவரை அனுப்பி விட்டு ஆசுவாசமாய் உட்கார்ந்திருந்த போது, பேரன் விடுமுறைக்கு அப்பா வீட்டிற்கு வந்திருந்த என் பெண் அப்பா உன் பீரோவை சுத்தம் பண்ணப்ப இந்த பேப்பர் கட்டு கட்டி இருந்தது. படிச்சு பார்த்தேன் நல்லா இருக்கு ! ஆனா பேப்பர்தான் பழுத்து எழுத்தெல்லாம் சரியா தெரிய மாட்டேங்குது, நீ கவிதை எல்லாம் எழுதுவியா? சொல்லிக்கொண்டே அந்த பேப்பர் கட்டை என் கையில் திணித்தாள். அந்த கட்டை மெதுவாக வாங்கி தடவினேன் நானே என் வாழ்க்கையை பின்னோக்கி பார்ப்பது போல் இருந்தது

நூர்ஜஹான், அழகான பெண் மட்டுமல்ல, கொஞ்சம் புத்திசாலி கூட என்று தெரிந்தபோது எனக்கு வயது பத்து இருக்கலாம். அப்பொழுது ஐந்தாம் வகுப்பு படித்து கொண்டிருந்தேன் என்று நினைக்கிறேன். நாங்கள் எல்லோரும் ஒரே வகுப்பு, அதுவும் பள்ளிக்கு செல்ல இரண்டு கிலோ மீட்டர்,நடக்கும் போது அவளும். அவள் தோழிகளும், மற்றும் என்னுடைய சக தோழர்கள் பத்திருபது பேர் நடந்து செல்வோம். வழியில் இருக்கும் ஒவ்வொரு புளிய மரத்திலும் காய் காய்க்கும் வரை காத்திருக்க எங்களுக்கு பொறுமை இருக்காது. மரமேறி பிஞ்சு காய்களையும்,கொழுந்து இலைகளையும் கிள்ளி போட்டும், பூக்களை உதிர்த்தும் விடுவோம். நூர்ஜஹானும், அவள் தோழிகளும் கீழே கிடக்கும் புளியம் பிஞ்சுகளையும்,பூக்களையும்,தளிர் இலைகளையும்,பொறுக்குவதை நான் மேலே இருந்து பெருமையாய் பார்ப்பேன். நண்பர்களுக்கு ஒரே பொறாமையாக இருக்கும்.

என்ன ஒரு வருத்தமென்றால் எங்கள் ஒருவருக்கு கூட கிழிசல் இல்லாத கால்சட்டை இருந்ததாக ஞாபகம் இல்லை, அதேதான் நூர்ஜஹானுக்கும், அவள் தோழிகளுக்கும், பாவாடை சட்டைகளில், கிழிசல்கள் இருந்தாலும், அவரவர்களின் அம்மாமார்களின் சாமார்த்தியத்தால் அழகாக ஒட்டு போடப்பட்டிருக்கும்..இதை சொல்ல காரணம் கீழே விழும் பூ, பிஞ்சுகளை எடுத்து நாங்களோ,அல்லது பெண்டு பிள்ளைகளோ சட்டையிலோ, பாவாடைக்குள்ளோ போட்டுக்கொள்ள வசதி இல்லை. முடிந்தவரை புத்தகப்பையில்தான் திணித்துக்கொள்வோம்.

அப்பொழுதெல்லாம் கித்தான் கணாக்காய் இருக்கும் பைகள். அதுக்குள் போட்டுக்கொண்டால் வெளியே தெரியாது என நினைத்துக்கொள்வோம்.ஆனால் வகுப்புக்கு போனவுடன், மற்ற ஊர் பையன்கள் எங்களுக்கு “கலாக்காய்” பறித்து வைத்திருப்பார்கள், பண்ட மாற்றிக்கொள்வோம்.

சில நேரங்களில் “மூக்குச்சளி பழம்” என்று சொல்வோம் அதை பறித்து கொண்டு வந்திருப்பார்கள். ருசியாய் இருக்கும்.

அப்பொழுது காமராசர் இருந்தாரா, பக்தவச்சலம் இருந்தாரா சரியாக ஞாபகமில்லை, மதிய உணவு போடுவார்கள், அதுதான் எங்களுக்கு திருப்தியான உணவு. கோதுமை ரவை போல் இருக்கும் “கேர்” என்பார்கள், இல்லையென்றால் மஞ்சள் கலரில் மாவு போல் இருக்கும், அது கிழங்கு மாவு என்று சொல்வோம், இந்த இரண்டில் ஒன்று போடுவார்கள்.தட்டில் சுடசுட விழுந்ததின் மேல் கரும்பு சர்க்கரையை தூவிக்கொண்டே செல்வார்கள். தட்டை வழித்து வழித்து சாப்பிடுவோம்.வீட்டுக்கு வந்தால் ஒருவர் வீட்டிலும் அரிசி சோறு கிடைக்காது. கஞ்சிதான் அதுவும் மக்காச் சோள மாவு, இல்லையென்றால் சோள அரிசி, நன்றாகத்தான் இருக்கும்.ஆனால் தொடர்ந்து சாப்பிட சிரமப்படுவோம்.

உங்களுக்கு நூர்ஜஹானை அறிமுகப்படுத்தி விடுகிறேன். அவளுக்கு கீழே மூன்று. மேலே இரண்டு, அவர்கள் அப்பா, அம்மா, அவர்களின் பாட்டி ஆக மொத்தம் ஒன்பது பேர், எல்லோருக்கும் படி அளக்க அவர் அப்பாதான் பாடு பட வேண்டும். அதை தொட்டாற் போல் நாயர் வீடு, அவரின் வீட்டில் நான்கு குழந்தைகள், அடுத்து மைசூர்கார்ர் வீடு அவர்களுக்கும் வீடு நிறைய குழந்தைகள், அடுத்து எங்கள் வீடு, என்னோடு சேர்த்து வீட்டில் ஏழு பேர், அடுத்து மதுரையிலிருந்த வந்த குடுமபம். இப்படி ஏழு வீடுகள் கொண்ட தொடர் வீடுகளாகத்தன் இருக்கும். அனைத்து வீடுகளுக்கும் நீளமாய் வாசல்கள், கொஞ்சம் அகலமாகத்தான் இருக்கும். ஏழு ஏழு வரிசை தொடர்களாக வீடுகள் படிப்படியாய் அமைக்கப்பட்டிருக்கும். ஒரு மலையின் அடிவாரத்தில் இருந்து பார்த்தால் படிப்படியாய் தெரியும். எல்லா தொடர் வீடுகளுக்கும் செல்ல கீழிலிருந்து ஒரே நேர் கோட்டில் படி அமைக்கப்பட்டிருக்கும். படியேறி அந்தந்த தொடர் வீடுகளுக்கு செல்பவர்கள் பிரிந்து கொள்ளலாம்.

இப்படி ஒவ்வொரு வீட்டு தொடரும் ஒரு பாரத் விலாஸ்தான். நூர்ஜஹான் வீட்டில் ரம்ஜான் அன்று தான் எல்லோருக்கும் துணி எடுக்கப்படும், அதை போட்டுக்கொண்டு வந்து எங்கள் எல்லோருக்கும் ஒரு வாரமாய் காட்டிக்கொண்டிருப்பாள். இப்படி தொடர்ந்து போட்டு மூன்றே மாத்த்தில் அது ஓட்டை போட்டு விடும், அவள் அம்மாவுக்கு அடுத்து அதை அடைத்து கொடுப்பதுதான் வேலை.இதுவேதான் எல்லார் வீடுகளிலும். அதே போல் ஓணம் அன்றுதான்

நாயர் வீட்டில் எல்லாமே புதிதாய் இருக்கும், அடுத்து கிறிஸ்துமஸ், தீபாவளி, பொங்கல், இவைகள் வரும் நாட்கள் மட்டுமே கடனோ உடனோ வாங்கப்பட்டு புதிய துணிகள் வீட்டுக்குள் பிரவேசிக்கும். எது எப்படியோ அந்தந்த பண்டிகை நாட்களில் அந்த வீட்டு தொடர்களில் எத்தனை குழந்தைகள் இருந்தாலும் அவர்களுக்கு கண்டிப்பாய் அந்த பண்டிகை நடத்தும் வீடுகளில் அரிசி சோறு போடப்பட்டு விடும்.இது எங்களுக்கு ஒரு எதிர்ப்பார்ப்பையே உருவாக்கி இருக்கும்.

எங்கள் கூட்டத்தாருடன் ஐந்தாவது வரை வந்து கொண்டிருந்த நூர்ஜஹானை, ஆறாவது படிக்க வைக்க அவர்கள் வீடு விரும்பவில்லை, ஆனால் அவள் அழுது அடம் பிடித்து அவர்கள் அத்தா வேறு வழியில்லாமல் அனுப்பி வைத்தார், முக்கிய காரணம் ஆறாவதில் மதிய உணவு கிடையாது, அதுவே அவர்கள் தடுத்ததின் காரணம். எங்களோடு எட்டாவது வரை படிக்க வந்தவள் ஒரு முறை கூட மதியம் சாப்பிட்டதாய் எனக்கு நினைவு இல்லை. நாங்கள் கொண்டு வந்த சாப்பாடை கொடுத்தாலும் மறுத்து விடுவாள். அந்த ஒரு மணி நேரம் காணாமல் போய் விடுவாள்.எங்களுக்கு ஒரே சந்தேகமாய் இருக்கும் எங்கு செல்கிறாள் இவள் என்று.

ஒரு நாள் அவசர அவசரமாக சாப்பிட்டு விட்டு அவளை கண்காணிக்க அவளை தொடர்ந்தோம். அவள் எங்களை தாண்டி சிறிது தூரம் சென்றவள் அங்கிருந்த தண்ணீர் தொட்டியில் தண்ணீரை கைகளில் பிடித்து வயிறு முட்ட குடித்து விட்டு அப்படியே ஒரு

திண்டு போல இருந்தது, அதில் மெல்ல வயிற்றை பிடித்துக்கொண்டு படுத்து கொண்டாள்.எங்களுக்கு சப்பென்றாகி விட்டது.அவ்வளவுதானா என்று. ஆனால் அவள் பசி தாங்காமல் தான் அப்படி சுருண்டு படுத்து கொண்டிருந்திருக்கிறாள் என்பது நான் பத்தாவது தொடரும்போது தான் உணர்ந்து கொண்டேன்.ஆனால் அப்பொழுது அவள் திருமணம் முடிந்து கணவன் வீட்டிற்கு போயிருந்தாள்..

எங்களுடன் பள்ளிக்கு வந்த இரு வருடங்களில் அவள் பார்வை வித்தியாசப்படுவதை நாங்கள் கண்டு கொண்டோம். எதையுமே வியப்புடன் பார்ப்பாள். ஓணானை அடித்துக்கொண்டு நாங்கள் ஓடுவதை அவள் தடுத்தாள், வேணாண்டா, அது பாட்டுக்கு அது போகட்டும் விடுங்கடா என்று கெஞ்சுவாள்.பட்டாம் பூச்சி பறப்பதை உட்கார்ந்து இரசித்து பார்ப்பாள். அடிக்கடி ஏதாவது முணு முணுத்துக்கொண்டே இருந்தாள். எங்களுக்கு எதுவும் புரியவில்லை.இப்படி எங்களுடன் நடந்து வரும்போது அடிக்கடி எங்காவது நின்று எதையாவது பார்த்துக்கொண்டிருப்பாள். நாங்கள் பேசிக்கொண்டே நடந்து சென்று திடீரென திரும்பி பார்த்தாள் அவள் எதையோ ஆழ்ந்து பார்த்துக்கொண்டிருப்பாள். நாங்கள் அங்கிருந்து “ஏய் .நூர்ஜஹான்” சத்தம் கேட்டு மெல்ல கை காட்டி அழைத்தாள், நாங்கள் நான்கைந்து பேர் ஓடி வந்தோம், என்னவோ எதுவென்று. அங்க பாரு அவள் சுட்டி காட்டிய திசையில் பாம்பு ஒன்று மெல்ல நெளிந்து நெளிந்து சென்று கொண்டிருந்தது. எங்களுக்கு கோபம் வந்து விட்டது, ஸ்கூலுக்கு நேரமாச்சு வா, அவள் கையை பிடித்து இழுத்துக்கொண்டு நடந்தோம்.

ஆனால் தினமும் அவள் கனவுலகத்தில் நடந்து வருவது போலவே வருவாள்.

வகுப்பை பொறுத்தவரை அவளுக்கு படிக்கும் பெண் என்று பெயர் இருந்ததால், அவளின் கனவுலகத்தை ஆசிரியர்களால் கண்டு பிடிக்க முடியாமல் போய் விட்டது. அன்று எங்கள் வகுப்பில் தமிழாசிரியர் புதுக்கவிதையோ, அல்லது மரபுக்கவிதையோ சொன்னதாக ஞாபகம், சார் என்று நூர்ஜஹான் எழுந்தாள், புருவம் உயர தமிழாசிரியர் என்னம்மா என்று கேட்டார். இவள் பட பட வென சில கவிதைகள் சொன்னாள். தமிழாசிரியர் அப்படியே வியந்து இரும்மா இரும்மா..என்று சொன்னவர் மறுபடி சொல்லும்மா என்று கேட்க இவள் நிதானமாய் சொன்னாள். தமிழாசிரியர் மெல்ல, அவள் அருகில் வந்தவர் அவள் தலை மேல் கை வைத்து நல்லா வருவே என்று சொல்லி விட்டு பெருமூச்சுடன், அந்த பெண் என்ன வாசித்தாள் என்று தெரியுமா? அவர் விளக்கி சொன்னது அன்று எங்களுக்கு புரியவே இல்லை. ஆனால் நூர்ஜஹானை பற்றிய மரியாதை மட்டும் எங்களுக்கு வந்து விட்டது.

எட்டாவது வகுப்புக்கு ஓரிரு மாதங்கள்தான் வந்திருப்பாள், அதற்குள் அவளை திருமணம் செய்வித்து விட்டனர். சிறுவர்களாகிய நாங்கள் எங்கள் பள்ளி தோழியின் திருமணத்தை தள்ளி நின்றுதான் வேடிக்கை பார்த்தோம்.மாப்பிள்ளை முகத்தில் சிறிய அரும்பு மீசை அழகாக இருந்ததாக பட்டது.அதற்கு பின் நான் என் இறுதி வகுப்பு முடியும் வரை அவளை பார்க்கவே முடியவில்லை.ஒரு நாள் கூட வீட்டுக்கு வந்ததாக தெரியவில்லை.

அவர்கள் பெற்றோர்கள்தான் ஏதோ ஒரு நாள் சென்று பார்த்து விட்டு வந்து எங்கள் வீடுகளில் பெண் நன்றாக இருப்பதாக சொல்வார்கள்.அதற்கு பின் ஒவ்வொருவராக,பணி நிமித்தம் காரணமாக அந்த இடத்தை விட்டு காலி செய்து விட்டோம்.

மேட்டுப்பாளையத்தில் இருந்து எங்கள் ஏஜன்சி சார்பாக காரமடைக்கு வந்த நான் ஏதேச்சையாக பார்த்தபோது எதிரில் வந்த பெண்ணை எங்கேயோ பார்த்த்து போல் இருந்தது. சட்டென ஞாபகம் வரவில்லை. உற்று பார்த்த பொழுது நூர்ஜஹானை நினைவுக்கு கொண்டு வந்தன.அவள் இடுப்பில் ஒன்றும், கையை பிடித்துக்கொண்டு ஒரு சிறுவனும், வயிற்றில் ஒன்றுமாய் தென்பட்டாள். நூர்ஜஹானா அது? எப்படி இப்படி மாறிப்போனாள்?. உடலில் எலும்பின் மேல் போர்த்தப்பட்ட தோல்தான் இருந்தது.வயிறு மட்டுமே பெரிய அளவில் உப்பி இருந்தது.

நீ..நீங்க நூர்ஜஹான்தானே மெல்ல கேட்டேன். ஆமாம் என்றவள் என் முகத்தை சிறிது நேரம் பார்த்து யோசித்தவள், நீ ராமனாதன் தானே, சொல்லிவிட்டு முக மலர்ச்சியுடன் எப்படி

இருக்கற? அப்பா, அம்மா எப்படி இருக்கறாங்க? உனக்கு கல்யாணம் ஆயிடுச்சா? நான் நல்லா இருக்கறேன், சொன்னவன், கொஞ்சமும் தயங்காமல் அந்த அவள் இடுப்பில் இருந்த குழந்தையை வாங்கிக்கொண்டேன். வா ஏதாவது சாப்பிட்டுட்டே பேசலாம், சொன்னவனை வேண்டாம், எங்க வீட்டுக்காரரு காய்க்கடை போட்டுருக்காரு, அவரை பாத்துட்டு போகலாமுன்னு வந்தேன். அப்படியா அவரை காட்டு என்று நானே முன்னோக்கி நடந்தேன்.அவள் இதை எதிர் பார்க்கவில்லை.மெதுவாக தயங்கி தயங்கி வந்து கொண்டிருந்தாள்.

காய்க்கடையில் கூவி கூவி காய் விற்றுக்கொண்டிருந்தவர் அருகில் சென்றவள் “இவன் என் கூட படிச்சவன், மெதுவாக அறிமுகப்படுத்தினாள். கூவிக்கொண்டிருந்தவர் முன்பு நானே சென்று அவர் கையை பிடித்துக்கொண்டு “வணக்கம் பாய்” என்றேன். சிறிது நேரம்

அப்படியே நின்று கொண்டிருந்தவர், பின் புன் சிரிப்பை மெல்ல காட்டவும், எனக்கு தைரியம் வந்த்து. “பாய் வாங்க பாய் ஏதாவது சாபிடலாம், வற்புறுத்தினேன். தயங்கி வியாபார நேரத்துல என்றவரை ஒரு அஞ்சு நிமிசம் தான், சொல்லிட்டு வாங்க, வற்புறுத்தி கையை பிடித்து அழைத்து சென்றவன் ஆளுக்கு ஒரு “ப்ப்ஸ்” ஆர்டர் செய்தவன் அங்கிருந்த இரண்டு பிஸ்கட்

பாக்கெட்டை எடுத்து குழந்தைகளின் கையில் திணித்தேன். இதெல்லாம் வேண்டாம் என்றவளை முறைத்து பார்த்து ஒரு சகோதரனா கல்யாணத்துக்கு ஒண்ணும் செய்ய முடியல, இப்ப பேசாம இரு.சொன்னவளை கண்ணில் நீர் பள பளக்க பார்த்தாள்.

இப்பொழுது அவள் வீட்டுக்காரர் சகஜமாகி விட்டார். நன்றாக பேசினார். அவர்களிடமிருந்து விடை பெற இரண்டு மணி நேரமாகி விட்டது. இப்பொழுது என் மனம் நிறைவாக இருந்தது போல் இருந்தது. கண்டிப்பாக அவர்கள் சரியாக சாப்பிட கூட வசதி இல்லாமல் இருக்கிறார்கள் என்பது மனசுக்கு புரிந்தது.

அதற்கு பின் ஒரு வருடங்கள் ஓடியிருக்கும், மீண்டும் காரமடையில் நூர்ஜஹானின் கணவரை சந்தையில் பார்க்கும்போது, அன்று பார்த்த்தை விட மிகவும் மெலிந்திருந்தார்.

என்னை பார்த்தவர், ஓடி வந்து என் கையை பிடித்துக்கொண்டார். கண்களில் பொல பொலவென கண்ணீர், நான் அவர் கையை பிடித்து ஏன் அழறீங்க? சொன்னவர் தன் கையை அருகே காண்பித்தார்.

காய்கறிகள் போடப்பட்டு இருந்த சணல் பையின் பக்கத்திலேயே ஒரு கைக்குழந்தை தூங்கிக்கொண்டிருந்தது. அன்று நூர்ஜஹானின் இடுப்பில் இருந்ததும், கையை பிடித்துக்கொண்டிருந்த சிறுவனும் காய்கறிகளின் பக்கத்தில் உட்கார்ந்திருந்தார்கள்.அவள் என்னைய விட்டுட்டு போயிட்டா..சொல்லிவிட்டு குலுங்க குலுங்க அழுதார்.என்னாலதான் அவ போயிட்டா, வரிசையா குழந்தைய பெத்துக்க, அவ உடம்பு தாங்காதுன்னு டாக்டர் சொல்லியிருந்தும், நான் கேக்காம,..தேம்பி தேம்பி அழுதவரை முதுகில் தட்டி ஆறுதல் படுத்தினேன்.சட்டென சாக்கு பையிலிருந்து கட்டி வைத்திருந்த பேப்பர்களை என் கையில் கொடுத்து, அன்னைக்கு உங்களை பார்த்தபிறகு உங்க கிட்ட கொடுக்கணும்னு சொல்லிகிட்டே இருந்துச்சு, என்று கையில் கொடுத்தார். நான் அனிச்சையாய் வாங்கிக்கொண்டேன்.

அதை படித்து பார்த்து என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை, நான் அடிப்படையில் வியாபாரத்தைத்தான் தெரிந்து கொண்டிருந்தேன். அதனால் அதை ஒரு தமிழாசிரியரிடம் கொடுத்து படித்து பார்க்க சொன்னேன்.இரண்டு நாள் கழித்து வந்தவர் அற்புதம், அற்புதம் மரபுக்கவிதைகளும்,கட்டுரைகளும், புதுக்கவிதைகளும்,அற்புதமான இலக்கியம் மிக நன்றாக எழுதி இருக்கிறார்கள்.பாராட்டிக்கொண்டே இருந்தார். நான் மனதுக்குள் நினைத்துக்கொண்டேன் “இந்த இலக்கியத்தை படைத்த இலக்கணம்” மறைந்து விட்டது.

கந்தலாய் காணப்பட்ட அந்த பேப்பர் கட்டை பார்த்தவன், நம்மால் அதை பதிப்பிக்க முடியாவிட்டாலும் புதுப்பிக்க முயற்சிக்க வேண்டும் என்று முடிவு செய்து மகளை அழைத்தேன்.

Print Friendly, PDF & Email

1 thought on “மறைந்த இலக்கணம், படைத்த இலக்கியம்

  1. நல்ல கதை.சிலரின் படிப்புக்கு பின் உள்ள விஷயங்கள் வெளியே தெரிய தாமதம் ஆகும் இது உண்மை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *