மறுவாசனை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 25, 2020
பார்வையிட்டோர்: 4,923 
 
 

ஒரு பக்கம் இடிந்த பழமையான வீடு. ஒரு புறம் சரிந்த வரிசை கலைந்த ஓடுகள். நின்றுக் கொண்டியிருந்த பழைய தூண்களே பறைசாற்றியது வெங்குச்செட்டியாரின் இன்றைய வறுமை நிலைமையை.

வெங்குசெட்டியாருக்கு வயது எண்பத்தைந்தாகிறது. மனைவி யோகா ஆச்சிக்கும் எண்பது நெருங்கி இருக்கும். இன்றோ, நாளையோ என உடைந்து ஒட்டிக் கொண்டு இருந்த சாய்வு நாற்காலியில் சாய்ந்திருந்தார்.

என்ன செட்டியாரே… என்ன பலத்த யோசனை? என்றபடி வந்தாள் யோகாச்சி.

தாம்பத்யவாழ்விற்கு ஒன்றும் குறைவில்லை. நல்லா வாழ்ந்து காலம் கழித்து பெற்ற ஆசையாய் வளர்த்த ஒரே மகனும், விபத்து ஒன்றில் அல்பாயுளில் போய்விட, கடன் வாங்கியவர்கள் இவர்களை ஏமாற்றியதிலும், வாடகைக்கு இருந்தவர்கள் கடையை சொந்தம் கொண்டாடியதிலும், மனஉளைச்சளுக்கு ஆளாகி பின் யோகாச்சிதான் அன்பாக, அனுசரணையாக ஒரு குழந்தையை தாய் பார்த்துக் கொள்வது போல் செட்டியாரைப் பார்த்துக்கொள்கிறாள்.

சும்மாத்தான் சாஞ்சியிருக்கேன்.. ஏன்?

ரொம்ப யோசனையா இருந்தீங்களே என்று கேட்டேன் என்றாள் யோகாச்சி.

பழைய கணக்குவழக்குகள் ஞாபகம் வந்தது.

எத்தனை பேருக்கு நாம கடன் கொடுத்து இருக்கோம், திரும்ப வாங்கியிருக்கோம். எத்தனையோ பேர் திருப்பித் தரலையே. அதெல்லாம் நினைவுக்கு வருது. திரும்பிவாராத அந்த பணமெல்லாம் வந்திருந்தால் இந்த நிலைமை நமக்கு வந்திருக்காது .

எப்படி வாழ்ந்த நீ? இப்படி உன்னையும் சேர்த்து கஷ்டப்படுத்துவதை நினைத்துதான் வருந்துகிறேன் என்று சொல்லும்போதே கண்ணீர் விழித்திரையில் இருந்து வெளியே எட்டிப்பார்த்தது.

நம்மிடம் சொத்தை ஏமாற்றிப் பிடுங்கியவர்களும் நல்லா இருக்கட்டும். வட்டிக்கு தானே விட்டீர். வந்தவரைக்கும் போதும் என மனதை தேற்றிக் கொள்ளுங்கள் என்றாள் யோகாச்சி.

நான் என்ன பெரிசா வட்டி வாங்கினேன் ? அசலையே திருப்பாமலும் நிறைய பேர் இருக்காங்க. அவங்க எல்லாம் இப்போ நல்லபடியா முன்னேறி நல்ல நிலைமையிலேதான் இருக்காங்க. ஆனா திருப்பிக்கொடுக்க அவங்களுக்குதான் மனசு வரலை என வருத்தப்பட்டார்.

மேலே ஒருத்தன் எல்லா கணக்குகளையும் பார்த்துகிட்டுத்தான் இருக்கான், விடுங்க நமக்கு இதையெல்லாம் அனுபவிக்கணும் என்று இருக்கு அதை அனுபவிச்சாத்தான் நாம வாழ்க்கையில் இருந்து கரையேற முடியும் எனத் தேற்றினாள்.

நீ் என்ன சொல்லு. நமக்குனு ஒரு வாரிசு இப்பொழுது இருந்திருந்தால் நமக்கு இப்படி ஆகியிருக்காது. நம்மையும் தவிக்க விட்டு, அவனும் அல்பாயுளில் போயிட்டான் என்று சொன்னவர், தமக்கு பிறகு தன் மனைவியின் நிலைப்பற்றி பயந்து கவலைப்பட்டபடி அமர்ந்திருந்தார்.

இங்கேயே வண்டியை நிறுத்துங்கள். என்று ஓட்டுனர் சாமியிடம் கூறினார், இன்று புதியதாக ஊருக்கு வந்து பணியில் சேர இருக்கும் ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட முப்பது வயது இளம் ஆட்சியர் மகேஷ்வர்.

நான் இந்த இடங்களை எல்லாம் ஏற்கனவே பார்த்தது போல் தோன்றுகிறது என்று உதவியாளரிடம் கூறவும், சிறுவயதில் சுற்றுலா வந்து இருப்பீர்கள். அந்த நினைவாக இருக்கும் என அவர் கூற..

இல்லை, இந்த இடங்களில் நான் மிதிவண்டியில் சென்ற ஞாபகங்கள் எனக்கு ஏன் வருகிறது? அருகே ஏதேனும் சிறிய துணிக்கடை இருக்கிறதா பாருங்கள் என்றார்.

சின்னதாக இல்லை பெரியதாக ஒன்று இருக்கிறது. அதோ பாருங்கள் என காட்டினார்.

நான்கு மாடிக் கட்டிடம். குமரன் ரெடிமேட்ஸ் பிரதான சாலையில் கம்பீரமாக நின்றிருந்தது.

அதன் உள்ளே நுழைத்து முதலாளி நாற்காலியில் அமர்ந்திருந்தவரைப் பார்த்து,

நீங்கள் ராமநாதன் தானே? என்றார் ஆட்சியர்.

டவாலி , உதவியாளர் சகிதமாக ஆட்சியாளரைப் பார்த்ததும் பதறியபடி ஆமாம் என்று கல்லாவிலிருந்து எழுந்து வெளியே வந்தார்.

ஆமாம், என்ன விஷயம் சார்?

நீங்க முப்பது வருடத்திற்கு முன் வெங்குச்செட்டியார் என்று ஒருத்தர்கிட்டே கடனா ரூபாய் ஐம்பதாயிரம் வாங்கினீங்களே? அதை திருப்பிட்டீங்களா? என கேட்டு, அதை உடனடியா செட்டில் பண்ணிட்டு அவரிடம் ஒப்புதல் கடிதம் வாங்கி வந்து என்கிட்டே காட்டணும் என உத்திரவு போல் சொல்லிவிட்டு நகர்ந்தார்.

அடுத்து திரையரங்கிற்கு சென்றும், தொடர்ந்து நகைகடைக்கு சென்றும் அனைவரிடமும் கடன் தொகையைக் கேட்டு அதை உடனே செட்டியாரிடம் சென்று தீர்த்து வர வேண்டும் எனச் சொல்லி முடித்தபோது

ஏன் சார்? யாரு வெங்குச்செட்டியார்? கேட்டார் உதவியாளர்.

யார், எவரு என்று எனக்கும் தெரியலை. ஆனால் தொடர்ந்து என் நினைவில் வந்ததை நான் பேசினேன் என்றார் சுந்திர தெலுங்குத் தமிழில்.

நீங்க மறுபிறவியாக இருப்பீங்களோ? என கேட்டார் உதவியாளர்.

நீங்க நம்புவீங்களா? என கேட்ட ஆட்சியர் எனக்கு அதிலெல்லம் நம்பிக்கை இல்லை. ஆனால் இந்த மூவருக்கும் ஏதோ ஒரு தொடர்பு இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. எனக்கும் ஆர்வமாக உள்ளது, பார்ப்போம், என்ன நடக்கிறது என்று கூறியவாறு அலுவலகம் செல்ல உத்திரவிட்டார்.

யாருய்யா இந்த ஆட்சியர்? இவருக்கும் அந்த செட்டியாருக்கும் என்ன சம்பந்தம்? நாம செட்டியாரின் பணத்தைத் திருப்பலை என்பது இவருக்கு எப்படி தெரிந்தது.

இடத்திற்கும் சொத்திற்கும் வாரிசு இல்லாமல் செய்தது, அவரை ஏமாற்றியது எல்லாம் இவருக்கு தெரிந்திருக்குமோ? முப்பது வருடம் முன்னே நடந்தது விபத்து இல்லை, அது கொலை. அதுவும் நாம்தான் செய்தோம் என்பதும் தெரிந்திருக்குமோ? என்ற பயம் முதன்முதலாய் அவர்களுக்கு வந்தது. அதனை வெளியே காட்டிக்கொள்ளாமல், அந்த DSP ஏதாவது பணம் எதிர்பார்த்து நம்மளை மிரட்டுகிறாரோ? என யோசித்தனர்.

அவனும்தானே இதுலே உடந்தையாக இருந்தான். விடுய்யா, அந்த கேஸை ஊத்தி மூடி முப்பது வருஷமாச்சு. இனிதான் வந்து செய்யப்போகிறானுக்கும் என்றார் திரையரங்க உரிமையாளர்.

ஏன் பிரச்சினை பண்ணிக்கிட்டு? நாம இப்போ நல்லாத்தானே இருக்கோம். அப்போது பணப் பிரச்சினை. நாம வளரணும் என்கிற வெறியிலே செய்தோம்,

இன்றைய மதிப்புத்தொகையை அவர் கட்ட சொல்லலையே அதை நினைத்து சந்தோஷப்படுங்கய்யா என்றார் நகைக்கடைக்காரர்.

அதுவும் சரிதான். தொகையை கொடுத்துவிடுவோம்.

அதோட பிரச்சினையை முடிச்சுக்குவோம் என்று அவரவர் கடன்தொகையை எடுத்துக்கொண்டு வெங்குச்செட்டியாரை தேடிப்போய் கொடுப்பது என முடிவெடுத்தனர்.

நான் உன்னை நினைத்துதான் கவலைப்பட்டேன். யோகா,பாரு! ஆண்டவனாப் பார்த்து இந்த மகா புண்ணியவான்களை வந்து அசல்தொகையையாவது கொடுக்க வைத்தானே. இந்த தொகையே போதும். இனி உன் மீதி வாழ்க்கையைப் பற்றிய கவலை எனக்கு இல்லை என்று ஆண்டவனைப் புகழ்ந்து நிம்மதியடைந்தார்.

வாசல் வரைச் சென்றவர்கள் திரும்ப வந்து ஐயா மறந்து விட்டோம் இந்த பேப்பரில் கடன் பாக்கி ஏதும் இல்லை என எழுதி இருக்கோம். அதில் ஒரு கையெழுத்துப் போட்டு கொடுக்கணும் என்றனர்.

அதற்கென்ன வாருங்கள் என அழைத்து அமரவைத்தர். யோகாச்சி காபி கலக்க உள்ளே சென்றபோது ‘தொம்’ என்ற சப்தம் மட்டுமே கேட்டது.

மண், ஓடுகள், மரங்களின் குவியலின் கீழ் மூன்று பேரும் மரணித்து இருந்தனர். காபி கலக்க சென்ற ஆச்சி வந்து பார்த்தபோது வெங்குச்செட்டியாரும் அமர்ந்தநிலையில் அதிர்ச்சியில் இறந்து போயிருந்தார்.

மூவரின் மரணம் குறித்த தீவிர புலண்விசாரனைக்கும், அவர்கள் அங்கு சென்றது ஏன்? அவர்களுக்கான தொடர்புகள் என்ன? என ஆராயுமாறும் உத்தரவிட்ட ஆட்சியருக்கு இரண்டாவதாக ஆண்குழந்தை பிறந்துள்ளது என தொலைபேசியில் செய்தி வந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *